மனிதர்களின் தரிசனம்

அவசர அவசரமாக பேருந்தை விட்டு இறங்கி நடக்கையில், வெயில் சாய்வாக விழுந்து கொண்டிருந்தது. அம்மாவின் முழங்கையில் இளம் வெயில் விழுந்த இடம் மட்டும் கூடுதல் பளபளப்பாக இருந்தது. ‘ஏழரை மணி தாண்டிட்டே, வடம் இழுத்திருப்பாங்களோ என்னமோ’ அம்மா என்னிடம் சொல்வது போலவும் இருந்தது. தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போலவும் இருந்தது. அம்மா நிறைய நேரங்களில் அப்படி தான் பேசுவாள். முகத்தை பார்க்கமாட்டாள். பொதுவாக முன்வெளியை பார்த்தபடி பேசுவாள். ஒரு வரியை வெளியே சொல்லிவிட்டு, தொடர்ச்சி வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொள்வாள்.

‘நினைக்கிறதெல்லாம் மனசு விட்டு பேசிவிட்டால், பாதி பிரச்சனை குறைந்திடுமோ.’ ஒருதடவை அவளுக்கே அவளே கேட்டாள்.

‘கூடவும் வாய்ப்பிருக்கில்லையா’ அவளே அவளுக்கு கேள்வி போன்றதொரு பதிலை சொல்லிக் கொண்டாள் . பல நேரங்களில் கேள்விகள் பதில்கள் போலவும், பதில்கள் கேள்விகள் போலவும் மாறி மாறி இடம் பிடித்து கொள்கின்றன.

‘புரோகிராம் கிடைச்சா நல்லா இருக்கும்.எத்தரை மணிக்கு வடம் இழுக்கா, என்னா ஏதுனு பார்க்கலாம்’ சுசீந்திரத்தில் கொடி ஏறிய பின் இரண்டாம் நாள் இப்படி சொல்லிக்கொண்டே அப்பா தட்டில் உதிரி உதிரியான சாதத்தை தட்டினாள்.

‘எங்கனையா கிடைக்கா பார்க்கலாம். இல்ல யாருகிட்டயாவது கேட்டுக்கிடலாம்’ அப்பா பாதி சோற்றில் கோடு போட்டு குழம்பு ஊற்றிக் கொள்வதற்காக தட்டின் வலதுபக்கம் ஒதுக்கினார்.

‘கடைசி நேரம் வரையிலும் புரோகிராம் பேப்பர் கிடைக்காமலேயே போய்ட்டு பாரு’ அம்மா தினசரியை புரட்டிக் கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்திருந்த நானும் எட்டி அம்மா மடியில் இருந்த தினசரியை பார்த்தேன். ராகுகாலம், நல்லநேரம், குளிகை என்று வரிசையாக எழுதியிருந்த எழுத்துகளின் மீது வலமும் இடமுமாக அம்மா ஆள்காட்டி விரலை நகர்த்தி முணுமுணுத்துபடி படித்துக் கொண்டாள்.

‘அப்ப நாளைக்கு காலையில் ஏழரைக்கு மிந்தி அங்க போய் சேர்ந்து விடுகிற மாதிரி இங்க இருந்து புறப்பட்டு விடணும். காலையில் எழுப்பும் போது உருண்டுகிட்டு கிடக்காத’ அம்மா தினசரியை அணியில் மாட்டினாள்.

‘அவ்வளவு சீக்கிரம் வடம் இழுக்க மாட்டாங்கம்மா. ஏழரை மணிக்கு நல்ல நேரம் போனாலும் இராவுகாலம் ஒன்பது மணிக்கு தான வருது. அதனால் ஒன்பது மணிக்குள்ள முன்னபின்ன தான் இழுப்பாங்க.’

‘உனக்கு காலையில் சீக்கிரம் எந்திரிக்கணும்னு மடிச்சுக்கிட்டு அடிச்சு விடாத,’ சொல்லிக்கொண்டே வாசலில் வந்து கூப்பிட்டு கொண்டிருந்த பக்கத்து வீட்டு அத்தைக்கு ‘இந்தா வாரேன்’ என்று குரல்கொடுத்தபடியே வாசலுக்கு போனாள்.

நுழைவு கோபுரத்தில் இருந்தே கடைகள் ஆரம்பம் ஆகியிருந்தன. தெருவின் இரண்டு பக்கமும் முதல் இரண்டு கடைகள் காலிபிளவர் கடையாகவே இருந்தன. அடுத்து வந்த தேன்குழல் கடையில் தேன்குழல் கோபுரமாக அடுக்கியிருந்தது. பக்கத்தில் பெரிய கருப்பு இரும்பு சட்டியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. அட்டை அட்டையாக ஜிமிக்கிகள் தொங்கிக் கொண்டிருந்த ஸ்டாண்டின் பக்கத்தில் கட்டம் போட்ட சட்டையோடு ஒரு கையை லேசாக ஸ்டாண்டில் வைத்துக்கொண்டு சாய்ந்த வாக்கில் நின்றுக் கொண்டு கடந்து போகிற ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த ஸ்டாண்ட் தான் அவரது கடை. எல்லோருக்கும் எல்லாமும் ஒரே ரூபத்தில் அமைந்து விடுவதில்லையே. அப்படி அமையாமல் இருப்பதனால் தானே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அழகு வாய்த்து விடுகிறது.

‘ஹோ’ என்ற சத்தம் கேட்டு வலதுபுறம் திரும்பி பார்த்தபோது மைதானம் முழுவதும் விதவித ராட்டினங்கள் சுழன்று கொண்டிருந்தன. கப்பல் ராட்டினத்தில் மேல்வாக்கில் பறந்து கொண்டிருந்த பக்கம் உட்கார்ந்திருந்தவர்களில் சிலர் கண்கள் மூடியும், வாய்கள் குவிந்தும் இருந்தன. உயிரில்லாத ஒரு ராட்டினம் எவ்வளவு சந்தோசத்தை மனித முகங்களில் வாரிப் பூசி விடுகிறது. ஆனால், சந்தோசத்தை கொண்டு தர உயிரென்ன வேண்டிய கிடக்கிறது.

இடது முக்கு திரும்பி ரதவீதி ஆரம்பமாகிற இடத்தில் இருந்த கடையில் கண்ணாடி பெட்டியில் பஜ்ஜி நிரப்பப்பட்டிருந்தது. கண்ணாடி டம்ளரில் காப்பியும், பஜ்ஜியும் கையில் ஏந்தி நான்கைந்து பேர் சிதறலாக கடைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு சாதாரணமாக நின்று கொண்டிருந்த விதம் அவர் உள்ளூர்காரர் என்று காட்டியது. வெளியூரில் இருந்து தேர்சாமி பார்க்க வந்த யாரும் அப்படி கைலியோடு வந்திருக்க வாய்ப்பில்லைதானே.

அம்மா இதை எதையும் கவனித்தது மாதிரி தெரியவில்லை. கீ கொடுத்த பொம்மை மாதிரி நேராக நடந்து கொண்டிருந்தாள். ‘தேர் இங்க தான் நிக்குது. இன்னும் இழுக்க ஆரம்பிக்கல.’ பெருமூச்சு விட்டபடி, கோயில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து கும்பிட்டாள். வெயிலுக்கு கண்கள் லேசாக சுருங்கியது.

‘நான் சொன்னது தான் கரெக்டா இருக்கு பாரு,’ கோபுரத்தை பார்த்தபடி கையை நாடியிலும் நெஞ்சுக் குழியிலும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டேன்.

தேரின் முன்பக்கமாக கூட்டத்தோடு போய் நின்றுக் கொண்டோம். தேரின் இரும்பு சக்கரத்தில் சிவப்பு மஞ்சள் நிறங்களில் பட்டை வரையப்பட்டிருந்தது. உச்சியில் இருந்த கொடி கையசைத்து வரவேற்றது. நீளமாக எடுத்து போட்டிருந்த வடத்தின் இரண்டு பக்கமுமாக வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.

‘வடம் பக்கம் போய் நிற்கலாம்.’

‘போலாம் போலாம்,’ அம்மாவின் இமைகள் தேரை பார்த்தபடி படபடத்துக் கொண்டிருந்தன.மல்லிகை பூ வாசம் காற்றில் நிறைந்து நின்றது. புதுசாக கல்யாணம் முடிந்தவர்கள் என்று பார்த்தவுடனே பளிச்சென்று தெரிகிறபடியாக கையோடு கை கோர்த்தபடி ஒரு ஜோடி எங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். அம்மா என்னைத் திரும்பி பார்த்து பெருமூச்சு விட்டாள். இரண்டு வருடமாக எங்கெங்கோ வரன் தேடியும் சரியாக எனக்கு வரன் அமையவில்லை என்பதில் அம்மாவுக்கு நிறைய வருத்தம். சமீபத்தில் அம்மாவை பார்த்தவர்கள் ‘சுகர் எதும் இருக்கா. ஏன் இப்படி மெலிஞ்சு போயிட்டீங்க,’ என்று கேட்கும்படியாக அம்மா உடல் விட்டு போயிருந்தது. மனம் விட்டே போன பிறகு உடலுக்கு தனியாக நிற்க தெரியாமல் போய்விடுகிறது. அம்மாவின் கண்கள் நிரம்பி பளபளத்தன. நான் கண்டுகொள்ளாதமல் தேரை அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தேன். தேர் சாமியை பார்த்து விட்டால் அம்மா சமாதானமாகி விடுவாள் என்று தோன்றியது. அம்மா மீண்டும் தேர்பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இடது பக்கம் இரண்டு வீடுகளுக்கு நடுவில் பிரிகிற முடுக்கின் துவக்கத்தில், தாழ்ந்த மரப்பெட்டியில், பழைய செய்திதாளை விரித்து, ரோஸ் நிற ஜவ்வு மிட்டாய், காக்கி நிற ஜவ்வு மிட்டாய், மஞ்சள் நிற குச்சி மிட்டாய் என்று தனித்தனியாக குவித்து வைத்தபடி அதன் முன்னால் முழங்காலை கட்டிக்கொண்டு ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த நிறங்கள்தான் அவர் வாழ்க்கையின் நிறங்கள். அவற்றை ஈ அழித்து விடாதபடி மடித்த செய்தித்தாள் துண்டை இடையிடையே வீசிக்கொண்டார்.

‘வீட்டுக்கு போகும்பொழுது வாங்கி தரேன். கொஞ்ச நேரம் அமைதியாக நில்லு,’ வாத்து பொம்மைகளைக் குவித்து கட்டியிருந்த குச்சோடு நின்றுகொண்டிருந்தவரை கைதூண்டியபடி அழுது கொண்டிருந்த மகனை, பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு நின்றார் எங்கள் அருகில் நின்றிருந்த ஒரு அம்மா.

வலது பக்கம் இருந்த மூன்று மாடி வீட்டில் இரண்டாவது அடுக்கு பால்கனியில் இரண்டு பிள்ளைகள் நின்று தேரை கைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். முதல் தடவையாக சேலை கட்டியிருப்பது அப்பட்டமாக நடையிலேயே தெரியும்படியாக பச்சை நிற புடவை உடுத்தியிருந்த வயதுப் பெண் ஒருத்தி அந்த வீட்டின் வாசலுக்கு வந்து காம்பவுண்ட் தூணை பிடித்துக் கொண்டு நின்றாள்‌. ரதவீதியில் இருந்த அனேக வீட்டு மொட்டை மாடிகளில் மனித தலைகளாக அசைந்து கொண்டிருந்தன. வளையல்கள் உரசிக் கொள்ளும் சத்தமும், கொலுசு சிணுங்கும் சத்தமும், மைதானத்து ராட்டினங்களில் சுற்றுவோரின் குதூகல சத்தமும் என்று எல்லாம் கலந்த காற்று சிரிப்பது போல இருந்தது.

பூனூல் அணிந்திருந்த வெற்று மேல் உடம்பும் , வேட்டியுமாக வந்த இரண்டு சிறுவர்கள், பலகையை இழுத்து மண்டபத்து சுவருக்கும் தேருக்கும் இடையே பாலம் போட்டு தேரின் முன்பகுதியில் நின்றுகொண்டார்கள். முதல் ரதவீதி திரும்புகிற இடத்திலிருந்து டப்டப்பென்று சத்தம் வர நானும் அம்மாவும் ஒரே நேரத்தில் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தோம்.

‘இந்தா இத போய் அவர்கிட்ட போட்டுகிட்டு வா,’ அம்மா கையில் பத்து ரூபா நோட்டை திணித்தாள். சாட்டையை சுழற்றி சுழற்றி தனது முதுகில் அடித்துக் கொண்டிருந்தவரின் முகத்தில் வெறுமை நிரம்பியிருந்தது. அவர் முன்னால் விரிக்கப்பட்டிருந்த பச்சை வெள்ளை கட்டம் போட்ட அழுக்கு துண்டில் சில்லறைகள் சிதறி கிடந்தன. அம்மா தந்த ரூபா நோட்டை அதில் போட்டுவிட்டு திரும்புகையில் அம்மாவின் கையைப் பிடித்தபடி ஒரு பாட்டி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அம்மா தன் கையை அவர்கள் கைக்குள் வைத்திருந்த விதம் தன்னையே அவர்களிடம் ஒப்புகொடுத்து விட்ட மாதிரி இருந்தது. நான் அம்மாவின் அருகில் சென்று நின்று கொண்டேன்.

‘நான்தான் உனக்கு சின்ன பிள்ளையில மருந்து சங்குல போட்டிவிட வருவேன்.’

‘அவளுக்கென்ன ராசா மாதிரி மாப்பிள்ளை வருவான்,’ என் கன்னத்தைத் தட்டிக்கொண்டு அம்மாவை பார்த்து சொன்னார்கள். அம்மா சிரித்தபடியே என்னை திரும்பி பார்த்தபோது நீர்த் துளிகள் கோர்த்திருந்த அம்மாவின் இமைகள் படபடக்காமல் அமைதியாக இருந்தன. அம்மாவின் முகத்தில் சதை பிடித்துவிட்டிருந்த மாதிரி எனக்கு தோன்றியது.

தேருக்குள் அமர்ந்திருந்த சிறுவர்களில் ஒருவன் சிரித்தபடியே ரதவீதியில் நின்றிருந்த கூட்டத்தை பார்த்து கைகூப்பிக் கும்பிட்டுவிட்டு விளையாட்டாக சிரித்தான்.

‘உங்களைத்தான் பாட்டி அந்த பையன் கும்பிடுகிறான்,’ என்று அவர்களிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. மனதில் நினைப்பதை எல்லாம் சொல்லி விட முடிந்தால் சில நேரம் நன்றாகத்தான் இருக்கும்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.