புவிச் சூடேற்றம்- பகுதி 9

This entry is part 9 of 23 in the series புவிச் சூடேற்றம்

மேலும், சில பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞானக் கேள்விகளுக்கு, இங்கு பதிலளிப்போம்.

சமீபத்திய மனித நடவடிக்கைகள் இன்றைய புவிச் சூடேற்றத்திற்குக் காரணமா?

இது, பொதுவெளியில் உள்ள பருவநிலை மாற்றம் பற்றிய ஒரு தவறான புரிதல். பூமி ஒன்றும் விசையைத் தட்டி வேலை செய்யும் வீட்டு ஏ.ஸி. அல்ல. புவி சூடேற்றத்திற்கு ஒரு நினைவுசக்தி உண்டு.  இன்று நாம் சந்திக்கும் வறட்சி, பயங்கரப் புயல்கள், அதிகமான காட்டுத்தீ, மற்றும் கடலளவு உயர்வு (பனிப்பாறைகள் உருகுதல் இதில் அடங்கும்), எல்லாம், 1970/80 -களில் நாம் செய்த திருவிளையாடல்களுக்கு பூமியில் காணும் மறுவிளைவு! இத்தனைக்கும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில், 1970/80 கால கட்டங்களில், அதிக தொல்லெச்ச எரிபொருளைப் பயன்படுத்தும் கார்கள் கிடையாது. அத்துடன், இந்த இரு நாடுகளும், அதிக தொழில்மயமாகவும் இல்லை. 

1970/80 –களில், உள் வாங்கிய வெப்பத்தை, கடல் (முன்னமே சொன்னது போல, வெப்பத்தில் 90% கடல் உள்வாங்குகிறது), இன்று வெளியேற்றுவதன் விளைவுதான், நாம் பார்க்கும் வெப்ப அதிகரிப்பு, வறட்சி, திடீர் பெருமழை, புயல், கடல்மட்ட உயர்வு போன்ற விளைவுகள். சற்று யோசித்துப் பாருங்கள். கடந்த ஐம்பது வருடங்களாக, எத்தனை கார்கள், தொழிற்சாலைகள், மற்றும் மின்சார உற்பத்தி மையங்களை நாம் உருவாக்கியுள்ளோம். எத்தனை கரியமில வாயுவை, காற்று மண்டலத்தில் கலக்க விட்டிருக்கிறோம். இதன் பின் விளைவுகள், அடுத்த ஐம்பது ஆண்டுகளில், எதிர்கால சந்ததியினர், இன்னும் அதிக வெப்பம், வறட்சி, வெள்ளம், புயல், கடலளவு உயர்வு என்று அல்லல் படப் போவது நிச்சயம். நம்முடைய எஞ்சியிருக்கும் வாழ்நாளும் இன்றைய நிலையை விட மோசமாகவே இருக்கும். ஐந்தாண்டுகள் முன்பு நட்ட மரங்கள் இன்னும் பயனளிக்கவில்லையே என்று ஏங்குவோருக்கு, இயற்கையின் இந்த நீண்ட கால நினைவுசக்தி என்பதை அறிவது ஒரு புரிதலை அளிக்கும்.

இது தான் புவி சூடேற்றத்தின் நினைவுக் கொடுமை.

எல்லா தொல்லெச்சப் பயன்பாட்டையும் நாம் நிறுத்திவிட்டால், பூமி உடனே குளிர்ந்து விடுமா?

முதலில், முந்தைய கேள்வியின் பதிலைப் படித்து விடுங்கள். 

நிச்சயமாக, உடனே குளிராது.

கடலில், நம் முந்தைய அட்டூழியங்களின் தாக்கங்கள் யாவும் வெப்பமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தேக்கி வைத்த வெப்பம், முதலில் வெளி வந்தால்தான் குளிர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கும். 

கடந்த 50 ஆண்டு கால தொல்லெச்ச பொருட்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டால், 2100 ஆம் ஆண்டு வரை, குளிர்வதற்கான வாய்ப்பே இல்லை. பூமி, நாம் தொல்லெச்ச பயன்பாடு எல்லாவற்றையும் நிறுத்தினாலும், தொடர்ந்து 2100 –ஆம் ஆண்டு வரை வெப்பமாகிக் கொண்டே போகும். அடுத்த 80 ஆண்டுகள் பொறுப்பாக நாம் இருந்தால், 2100 –க்குப் பிறகு, பூமி குளிர வாய்ப்பு இருக்கிறது. 

நம்முடைய பழைய பொறுப்பின்மை, அடுத்த சில பத்தாண்டுகளுக்கு நம்மை ஆட்டுவிப்பது நிச்சயம். பனிப்பாறைகளை பெரிய அளவில் இழப்போம் – ஒரு உலகப் போர் கூட அத்தனை நிலப்பரப்பை பாதிக்காது. குடி தண்ணீருக்காக சண்டை போடுவோம். வறட்சையுடன் போராடுவோம். பல கடலோரச் சிறு தீவுகள் மறைந்து விடக் கூடிய வாய்ப்பு உள்ளது. பெரிய கடலோர நகரங்கள் – நியு யார்க், மயாமி, லாஸ் ஏஞ்சலஸ், ரியோ, வான்கூவர், மும்பய், துபாய், சிட்னி போன்ற நகரங்கள், சரியான தடுப்பு முயற்சியில் ஈடுபடாவிட்டால், நிச்சயமாக, நகரின் இன்றைய பல பகுதிகளை இழக்க நேரிடும்.

உணவுப் பாதுகாப்பு என்பது தண்ணீருடன் உலகெங்கும் தலைவிரித்தாடும் பிரச்சினையாக வாய்ப்புள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி பெரும் பிரச்சனைகள் நேர வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள் எச்சரித்தும், அரசியல் தலைவர்கள் பொறுப்பில்லாமல் இயங்குவதால், விபரீத விளைவுகள் மேலும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. 

நமது காற்று மண்டலத்தில் உள்ள மிகச் சிறு அளவிலான கரியமில வாயுவின் அதிகரிப்பு, எப்படி இத்தனை பாதிப்பை ஏற்படுத்தும்?

காற்று மண்டலத்தில் கரியமில வாயு 0.04% அளவுதான். இத்தனை குறைவான அளவுள்ள ஒரு வாயுவிற்கு எப்படி, நம் பூமியின் தலையெழுத்தை மாற்றும் சக்தி உள்ளது? சில விஷயங்கள், குறைவாக இருந்தாலும், அவ்ற்றின் அளவில் சிறு அதிகரிப்பும் மிகப் பெரிய பாதகத்தை உண்டு பண்ணும் சக்தி படைத்ததாக இருக்கும். இயற்கையில், இதற்கான பல உதாரணங்கள் உள்ளன.

கரியமில வாயு மில்லியன் அணுக்களில் இத்தனை என்று அளவிடப்படுகிறது. குறைந்த அளவே இருந்தாலும், இதன் வெப்பத் தாக்கம் அதிகம். தொழிற்புரட்சிக்கு முன், கரியமில வாயுவின் அளவு, மில்லியனில் 280 பங்கு இருந்தது. இன்று, அது மில்லியனில் 400 –ஐத் தொட்டுவிட்டது. 280 என்ற அளவை ஒரு போர்வை என்று கொண்டால், 400 என்பது இரு மிகவும் தடிமனான போர்வை. இப்படித்தான், கரியமில வாயு, நம் பூமியில் சூட்டை தக்க வைத்துக் கொண்டு, வெப்பமாக்குகிறது. அளவு குறைவு என்று தள்ளி வைக்கக் கூடாது. இதன் வெப்பத் தாக்கம் மிகப் பெரியது.

https://www.youtube.com/watch?time_continue=279&v=81FHVrXgzuA&feature=emb_logo

ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். 

குடிபோதையில் கார் ஓட்டும் நபரை, போலீஸ் ஊதச் சொல்லி, சுவாசத்தில் எத்தனை மது கலந்திருக்கிறது என்று ஒரு கருவி கொண்டு ஆராய்கிறார்கள் (breath analyzer). மில்லியனில் 800 பங்குக்கு மேல் மது கலந்திருந்தால், உங்கள் ஓட்டுனர் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். அபராதமும், காப்பீடும் ஏராளமாக உயரும்! என்ன அக்கிரமம் இது? மில்லியன் அணுக்களில், வெறும் 800 பங்குக்கு அபராதமா என்று நாம் குதிப்பதில்லை! கரியமில வாயுவும் அப்படித்தான்.

புயல்களுக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்? 

மேல்வாரியாக, இவை சம்பந்தம் இல்லாதவை போலத் தோன்றலாம். எப்பொழுதும், பூமியின் ஏதாவது ஒரு பகுதியில், புயல்கள் இருப்பது, ஒன்றும் புதிதல்ல. புயல்கள் எப்படி உருவாகின்றன? எங்கு உருவாகின்றன? பெரும்பாலும், கடலில், மிகவும் வெப்பமான பகுதிகள், மிக அதிகமாக நீராவியை உருவாக்குகின்றன. 

கடல் மட்டத்திலிருந்து உயரும் நீராவி, அங்கு ஒரு குறைந்த அழுத்த நிலையை, காற்று மண்டலத்தில் உருவாக்குகிறது. குறைந்த அழுத்த மையத்திற்கு விரையும் சுற்றியுள்ள காற்று, படிப்படியாக, மேலும் புயல்மையத்திற்கு, வலுவூட்டுகிறது. 

தொடர்ந்து, சூடாகும் கடல் நீர், மேலும், இந்த மையத்தை வலுவூட்டும்போது, அது மெதுவாகக் கரையை நோக்கி நகரத் தொடங்குகிறது. (எல்லா புயல்களும் கரையை நோக்கி நகருவதில்லை. நாம், கரையில் வாழ்வதால், கரையை நோக்கி நகரும் புயல்களையே அதிகமாகக் கவனிக்கிறோம்). கரையை நோக்கி நகரும் புயலுக்கு, கடல்நீர், இன்னும் வலிமையூட்டிக் கொண்டே போகிறது. சில புயல்கள் சூறாவளிக் காற்றாக ஆகி, கடற்கரைப் பகுதிகளை பாதித்து, ஏராளமான சேதத்தை ஏற்படுத்துகின்றன.

அடுத்த படம், வடக்கு அட்லாண்டிக் கடலில், ஒரு நூறாண்டில் புயல்களின் எண்ணிக்கை எப்படி உயர்ந்துள்ளது என்று காட்டுகிறது.

 https://skepticalscience.com/pics/NATS_frequency.gif

1950 வரையிலான புயல்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், இன்று, கடும் புயல்கள் வட அட்லாண்டிக் கடலில், 40% அதிகரித்துள்ளன.  வழக்கமாக, ஃப்ளோரிடா, மற்றும் தென் அமெரிக்க மாநிலங்கள், மற்றும் கரீபியக் கடலில் உள்ள தீவுகள், வழக்கத்திற்கு அதிகமாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. கியூபா தீவு, தொடர்ந்து 2018, 2019 –ல், மிக பயங்கரபுயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.  

2019 –ல் அமெரிக்காவிற்கு தெற்கேயுள்ள பஹாமாஸ் தீவு முழுவதும் பாதிக்கப்பட்டு இன்றும் நிமிர முடியாமல் அல்லாடுகிறது, இங்குள்ள தீவுகள், சுற்றுலாவை நம்பி வாழும் நாடுகள். 2018 –ல், மைகேல் என்ற புயலால், ஃப்ளோரிடா மாநிலம் பெரிதும் பாதிக்கப்படட்து. ஃப்ளோரிடா மாநில அரசு, இழப்பு 158 மில்லியன் டாலர்கள் என்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட போர்டோ ரீக்கோ எனும் ஒரு அமெரிக்க தீவு. கரீபியன் கடலில் உள்ளது. மரீயா என்ற 2017 ஆம் ஆண்டுப் புயலில் தன் மாநிலத்தின் கட்டமைப்பை ஏறக்குறைய முழுவதும் இழந்தது. இன்னும் சகஜ நிலைக்கு வரத் தவித்துக் கொண்டிருக்கிறது. இதன் இழப்பு, 90 பில்லியன் டாலர்கள் என்கிறது அமெரிக்க அரசு. அதே ஆண்டில், அமெரிக்க டெக்ஸாஸை தாக்கிய ஹார்வி என்ற புயல், பெரும்பாலும் பாலைவனமான அந்த மாநிலத்தில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது. ஹூஸ்டன் நகர், சில வாரங்கள் நீரில் மூழ்கியது. இதன் இழப்பு, 125 பில்லியன் டாலர்கள் என்கிறது அமெரிக்க அரசு. 2005 –ல் லூயிஸியானாவைத் தாக்கிய கட்ரீனா, இன்னொரு பயங்கரப் புயல். இதன் இழப்பு, 107 பில்லியன் டாலர்கள் என்கிறது அமெரிக்க அரசு. இன்னும் இந்த புயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 2012 –ல் ஸாண்டி, 2017 –ல் இர்மா, 2018 –ல், ஃப்ளாரன்ஸ் என்று வருடா வருடம், மிகவும் சக்தி வாய்ந்த புயல்கள் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து உலகைத் தாக்கி வருகின்றன. இவற்றின், சக்தி பெருகி வருவதும், இவற்றின் நிகழ்வும் அடிக்கடியாக அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

புயல்களின் அதிகரிப்புக்கு, கடல் மட்டத்தில் உள்ள வெப்ப அதிகரிப்பு மட்டும் காரணமல்ல. வெப்ப மண்டலத்தில், கடல் மட்ட நீர் வெப்பமடைவது கடல் தோன்றிய காலத்திலிருந்து நடக்கும் விஷயம். கடல் மட்டத்திலிருந்து, பல அடிகள் கீழ்வரை அதிக வெப்பமாவது, சமீப கால நிகழ்வு. இந்த ஆழ்நிலைச் சூடேற்றம், உருவாகும் புயலின் சுழற்சி அதிகமாக உதவுகிறது. இந்த அதிக பலம், புயல்காற்றுடைய தொலை தூரப் பயணத்திற்கும் தோதாக உள்ளது. 

2000 –க்கு முன், அட்லாண்டிக் கடலில் உருவாகும் பல புயல்கள், நிலப்பகுதியை பாதிக்கும் சக்தியற்றவையாக இருந்தன. கடலில் தோன்றி மறையும் புயல்கள் பல அன்றும் இன்றும் இருக்கின்றது. புவி சூடேற்றத்தால், கடல் மட்டத்திலிருந்து பல அடிகள் சூடேற்றத்தால், கடந்த 20 ஆண்டுகளாக, மிகவும் வலிமையான புயல்கள் நிலத்தைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. அதுவும், கோடை காலம் முடிந்து, இலையுதிர் கால ஆரம்பத்தில், இவற்றின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நீராவி, கரியமில வாயுவைவிட வெப்பமேற்றும் வாயுவாக இருந்தாலும், ஏன் வீணாகப் பருவநிலை விஞ்ஞானிகள், கரியமில வாயுதான் காரணம் என்று சொல்லி வருகிறார்கள்?

நீராவி, மிக முக்கியமான வெப்பமேற்றும் வாயு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்துடன், வெப்பமேற்றும் வாயுக்களில், 95% நீராவி. நீராவிக்கும், கரியமில வாயுவிற்கும் பல முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. லிப்யா போன்ற ஒரு வெப்பமான நாட்டில், பகலில் 53 டிகிரி செல்சியஸ். இரவில், 5 டிகிரி, ஏன்? நீராவி இல்லையேல் இப்படித்தான் உலகெங்கும் மிக அதிக வெப்பமும், குளிர்ச்சியும் இருக்கும் – நிலவில், செவ்வாயில், இப்படிப்பட்ட பயங்கர வேறுபாடுகள் இருக்கின்றன. மனிதர்கள்/ விலங்குகள் உயிர் வாழ, நீராவி நிச்சயம் தேவை.

இதை மேலும் புரிந்து கொள்ள, நீராவி புவி அளவில் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூரியனின் வெப்பத்தினால், பூமியில் உள்ள நீர்நிலைகள் கொதித்து, நீராவியாகின்றன. நீராவி, பூமியை சூரியன் இல்லாத இரவுகளிலும், மற்றும், (குளிர்காலத்தில்) தூரத்தில் இருக்கும் சூரியனிலிருந்தும் பூமியின் வெப்பத்தைத் தணிக்க, நிலையைச் சீராக்க உதவுகிறது. 

மேலும் முக்கியமாக, நீராவி பூமியின் பெரும் பகுதிகளில் காற்றுமண்டலத்தில் உயர்ந்து, குளிர்ந்து, மழையாக, பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. நம் நதிகள், ஏரிகள் நீர் வளமுள்ளதாக இருக்கவும், அவற்றைச் சார்ந்துள்ள நாம் வாழ்வதற்கும் மழை முக்கியம். பூமியின் வட மற்றும் தென் பகுதிகளில், இதே நீராவி, பனிப்பொழிவாக மாறி, பூமியில் நெடு நாட்கள், உறைந்தும் இருக்கிறது. இந்தப் பனி, கோடையில் உருகி, நதிகள், ஏரிகளை நிரப்பி, வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. 

சுருக்கமாக, நீராவி இல்லையேல், உயிரினங்கள் பூமியில் வாழ முடியாது.

கரியமில வாயு, பூமியில் நிலவும் வெப்பத்தில், வாயுவிலிருந்து திரவமாகவோ, அல்லது திடப்பொருளாகவோ மாறுவதில்லை. அத்துடன், நீராவியின் சூடேற்றத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. ஒரு உதாரணத்துடன், இந்த வெப்ப மிகையைப் புரிந்து கொள்வோம். ஒரு டிகிரி செல்சியஸ் உயர்வு கரியமில வாயுவால் வந்துள்ளது என்று பார்த்தோம். ஒரு டிகிரி உயர்வுக்கு, நீராவியின் வெப்ப உயர்வு இரண்டு மடங்கு. அதாவது, மொத்தத்தில், இது, மூன்று டிகிரி உயர்வுக்குச் சமம். இதனால்தான், விஞ்ஞானம் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துமாறு கதறி வருகிறது.

அடுத்த பகுதியில், விஞ்ஞானம், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறது என்று பார்ப்போம்.

***

Series Navigation<< புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.