பிரதி ஜெராக்ஸ்

“கடவுளே எங்க கடைக்கு நேர்ல வந்து ஒரு வரம் கொடுத்திருக்காரு!” என ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை சொல்துபோல அவனிடம் அவள்மேல் ஆணையாக யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிவிட்டு கண்களை அகல விரித்துக்கொண்டு ஆச்சரியமாக அதை சொன்னாள்.

கடைக்கு நேர் எதிரில் இருந்த திண்டுக்கல் பேருந்து நிலைய இலவச ஆண்கள் சிறுநீர் கழிப்பிடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெதுவாகவும் அதே சமயம் இரைச்சலோடும் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியையும் மேல்நோக்கி பார்த்துவிட்டு கழிப்பிடத்தின் பாக்கியத்தால் இந்த கடைக்குள் எப்பொழுதும் நிரந்தரமாக தங்கிவிட்ட துர்நாற்றத்தால் மூக்கைப் பிடித்துக்கொண்டு முகத்தை அருவருப்பாக வைத்துக்கொண்டு “இந்த கடைக்கா!” என ரூபன் கிண்டலாகக் கேட்டான்.

அவள் அதை பொருட்படுத்தாமல் ஒரு அதிசயத்தைப் பற்றிக் கூறுவது போல ‘ஆமா’ என ஆர்வத்துடன் சொல்லத் துவங்கிய பொழுது கலைந்திருந்த தலையோடு வழிந்துகொண்டிருந்த வியர்வையை கர்சீப்பால் துடைத்துக்கொண்டே அந்த கஸ்டமர் வந்து நின்றார். இரண்டு காப்பி என பேங்க் பாஸ்புக்கை காட்டி இந்த இந்த பக்கம் என சொல்லி அவளிடம் கொடுத்துவிட்டு கர்சீப்பால் மூக்கை மூடிக்கொண்டார்.

அவள் அதை வாங்கி ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கும்பொழுது அவரைப் பார்த்தான். அவருடைய கலைந்த தலை நடுவழுக்கையை தெள்ளத்தெளிவாகக் காட்டியது. அவருக்கு நடுமண்டையில் சுத்தமாக முடியே இல்லை. இடது பக்கம் அதிகமாக வளர்த்து அதை அப்படியே வலது பக்கம் காது வரை சீவி வழுக்கையை மறைத்து வைத்திருக்கிறார். தன் கர்சீப்பை கடை டேபிளில் வைத்துவிட்டு பேன்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து இடது பக்கமிருந்த முடியை நன்றாக வலது பக்கம் வரை வாரிக்கொண்டார். தற்பொழுது வழுக்கை அவ்வளவாகத் தெரியவில்லை. கடையில் மாட்டப்பட்டிருந்த கிறுக்குசூசையின் புகைப்படத்தையும் அதில் மாட்டப்பட்டிருக்கும் வாடிய பூவையும் பார்த்துவிட்டு உள்ளே ஒட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பேப்பர் கட்டிங்குகளை கண்ணாடியை அணிந்து படிக்க முயற்சிசெய்து பார்த்தார். அப்படியும் தெரியாததால் அந்த முயற்சியைக் கைவிட்டு ,அவ்வளவு நேரம் கடைக்குள் அமர்ந்துகொண்டே

அவரைப் பார்த்துக்கொண்டிருப்பவனை உணர்ந்து, அவனைப் பார்த்தார். அவர் ரூபனைப் பார்த்ததும் தன் பார்வையை அவருக்குப் பின்னாலிருந்த கழிவறைப் பக்கம் திருப்பிக்கொண்டான். ஐந்து சிறுநீர் கழிவறைக் கொண்ட அதில் மூன்று பேர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். மூவரும் ஒவ்வொருவருக்கு இடையிலும் ஒரு கழிவறை காலியாக விட்டிருந்தனர். அவர்களின் கண்கள் மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அது மெல்லத் திறந்தது பட அமலாவை ஏனோ அவனுக்கு நினைவூட்டியது. சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த மூவரும் வேறு வேறு உயரங்களில் இருந்தாலும் அவர்களது கண்கள் மட்டும் எப்படி சரியாக அந்த இடைவெளியில் தெரிகிறது என யோசித்தான்.

அந்த இடைவெளியில் தான் முதன்முதலில் பிரிஸில்லாவைப் பார்த்தான். ராஜேந்திரா தியேட்டரில் யாயா படம் பார்த்து பிடிக்காமல் இடைவேளையிலே வீட்டிற்கு செல்லலாம் என பேருந்து நிலையத்திற்கு ஓடி வந்திருந்தபொழுது முதன்முதலாகப் பார்த்தான். அப்போது பிரிஸில்லா கிறுக்கு சூசை பேசுவதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள். அவளை இன்னும் நெருங்கிப் பார்ப்பதற்காகவே அந்த கடைக்கு வந்தான். ஜெராக்ஸ் எடுக்க தன் டிரைவிங் லைசன்ஸைக் கிறுக்கு சூசையிடம் கொடுத்துவிட்டு அவளையே பார்த்தான். அன்று மாலை மீண்டும் அந்த கடைக்கு வந்தபொழுது அவளும் அவனை மறக்காமல் புன்னகை செய்தாள். அவன் வருகையை அன்று முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்ததாய் பின்னொரு நாளில் குமரன் பூங்காவில் அவன் தோளில் சாய்ந்திருக்கும் பொழுது கூறியிருந்தாள். ஒருவேளை யாயா படம் நன்றாகயிருந்திருந்தால்!…..

அந்த இடைவெளியில் ஒருவேளை அன்று அவளைப் பார்க்காமல் போயிருந்தால்…

இதோ இப்படி இவளே கதி என்று இந்தக் கடையில் இப்பொழுது அமர்ந்திருந்திருக்கமாட்டான்.

வந்திருந்த கஸ்டமர் நன்றாக தலைசீவி வியர்வையைத் துடைத்துவிட்டு கர்சீப்பையும் சீப்பையும் பாக்கெட்டில் வைத்துவிட்டு அப்படியே அதற்கான சில்லறையை தேடிக்கொண்டே, ‘எவ்வளவு மா’ எனக் கேட்க, ‘ நாலு ரூபா சார்,’ என ஒரிஜினலையும் ஜெராக்ஸையும் கொடுத்துவிட்டு கூறினாள். ஒரு ஐந்து ரூபாய் காசை அவர் கொடுக்க அதை வாங்கிக்கொண்டு ஒரு ரூபாயைத் தேடினாள். எல்லாமே இரண்டு ரூபாயாக இருக்க, ‘ஒரு ரூபா இல்லை சார்,’ எனச் சொல்லி ஒரு ரூபாய் இருந்தா கொடுங்க சார் ரெண்டு ரூபாயாத் தரேன் என கேட்க அவர் தேடிப்பார்த்து இல்லையென சொல்ல ‘உங்கிட்ட ஒரு ரூபாய் இருக்கா ரூபன்!’ என கேட்க நினைவிற்கு வந்தவன் தன் பாக்கெட்டில் கைவிட்டு தேடி, ‘ரெண்டு ரூபாயா தான் இருக்கு,’ எனச் சொல்ல, பிரிஸில்லா சாதாரணமாக, ’அடுத்த தடவை வரும்போது வாங்கிங்க சார்,’ எனச் சொல்ல ‘ஏம்மா, இந்த ஒரு ரூபாய்க்காக நான் எரியோட்டலருந்து உங்கடைக்கு வரணுமா! போம்மா,’ என எரிச்சலாக சொல்லிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார். அவனிடமும் கிறுக்குசூசை இப்படியேதான் சொன்னார். ஆனால் போனவரைப் போல் எரிச்சல்படாமல் அங்கேயே காத்திருந்து மீண்டும் ஜெராக்ஸ் எடுக்க வந்தான். மீண்டும் மீண்டும் வந்தான். வந்துகொண்டேயிருக்கிறான்.

‘அவருக்கு ரெண்டு ரூபா தான் கொடுத்துவுட்ருக்கலாம்ல.இந்த ஒரு ரூபாய்லயா உன் கடை மூழ்கிடப் போகுது! இப்படி பண்ணுனா அப்பறம் எப்படி திரும்ப உன் கடைக்கு வருவாங்க!’ என ரூபன் கேட்க அவனருகில் ஸ்டூலைப் போட்டு அமர்ந்து கண்சிமிட்டியபடியே “அதெல்லாம் வருவாங்க!” என்றாள்.

‘எப்படிதான் வருவாரோ!’ என ரூபன் சொல்ல, ’அதைத்தான் சொல்ல வந்தேன் அதுக்குள்ள அந்தாளு வந்துட்டாரு,’ என மீண்டும் அதிசியத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

மேலே அவள் தாத்தாவின் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, எங்க தாத்தா இருக்காருல.. என சிரித்துக்கொண்டே சொல்ல வர,

‘கிறுக்கு சூசைதான…’

‘டேய்! எங்க தாத்தாவ அப்படி சொல்லாதனு எத்தனை தடவ சொல்லிருக்கேன்,’ என அவன் தோளில் இரண்டு அடி அடித்துவிட்டு சொன்னாள்.

‘சரி சரி இனிமே சொல்லமாட்டேன் ஸாரி. நீ சொல்லு,’ என அடித்த அவள் கைகளைப் பற்றித் தடவிக்கொடுத்துக் கொண்டே ரூபன் சொன்னான்.

மெதுவாக கையை விடுவித்தவள், ‘எங்க தாத்தா ஒன்னும் இவங்க சொல்லுற மாறி கிறுக்கு கிடையாது. எங்க தாத்தாவுக்கு கடவுளே நேர்ல வந்து வரம் கொடுத்துருக்காரு. ஒரே காகிதம் எப்படி ஜெராக்ஸாக அப்படியே ரிட்டர்ன் வருதோ அதேமாறி எங்க ஜெராக்ஸ் கடைக்கு வரவங்களும் அப்படியே திரும்பி வருவாங்க. அது கடவுள் தாத்தாவுக்கு கொடுத்த வரம்,’ எனச் சொல்ல அவன் சிரித்துவிட்டான்.

அதை ஆர்வமாக சொல்லும்பொழுது விரிந்திருந்த அவள் கண்கள் அவன் சிரிக்கவும் சுருங்கியது. ’ச்சீப்பே இனி நான் உங்கிட்ட இதைப்பத்தி சொல்லமாட்டேன்.’

ஒரு இரண்டு வினாடிகள் கழித்து மீண்டும் அவன் பக்கம் திரும்பியவள் “இதைப் பத்தினு இல்லை. இனிமே எதைப் பத்தியும் சொல்லமாட்டேன்,” என லேசாக வாடிய முகத்தோடு சொல்லிவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டாள்.

“ஹேய் ப்ரிஸில்லா ஸாரில! ப்ராமிஸா இனி சிரிக்கமாட்டேன். சொல்லேன் ப்ளீஸ்!” எனக் கெஞ்சினான்.

’போ’ என அவள் சொல்லிவிட்டு டேபிளுக்கு அடியில் வைத்திருந்த ஹேன்ட்பேக்கிலிருந்து மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். ’ஹேய் ஸாரி’ என மொபைலிலே குறுஞ்செய்தி அனுப்ப அதைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு அந்த மெசேஜிற்கு ரிப்ளே செய்யாமல் கேம் ஓப்பன் செய்தாள்.

’சரி சொல்லு, உங்க கடைக்கு கடவுளே வந்து வரம் கொடுத்துருக்காரு! எதுக்கு,’ என அடுத்த செய்தியை அனுப்ப அதைப் படித்துவிட்டு அவனை நோக்கி திரும்பியவளைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு, ‘ப்ளீஸ் சொல்லேன்,’ எனக் கேட்க,

“சரி சொல்றேன். ஆனா நான் சொல்லி முடிக்கற வரை குறுக்க பேசக்கூடாது!” என அவள் சொல்ல, வாயில் விரல் வைத்து கதையைக் கேட்க ஆர்வமாய் இருப்பது போல தலையை முன்னால் நீட்டினான்.

செல்லமாக அவன் தலையைக் கோதிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தாள். ‘ஒரு நாள் கடவுளே கடைக்கு வந்து ஒரு பேப்பர் ஜெராக்ஸ் எடுத்தாராம். அப்போ கடவுள்கிட்ட காசு கேட்பதற்கு பதிலா ஒரு வரம் கேட்டிருக்காரு எங்க தாத்தா.’

‘இந்த கடைக்கு வரவங்க ஒரு தடவை வரதோட போயிடக்கூடாது.திரும்ப கண்டிப்பாக வரணும், அப்படின்றது தான் அந்த வரம்.

‘இந்த வரத்தை சாதாரணமாக நினைக்கலாம். ஆனால் இந்த வரத்தின் பின்னாடி இருக்க சூட்சமம் பஸ்ஸ்டான்டை ஒட்டி மெய்ன் ஏரியால இருக்க கடையில வரவங்க ஒரு தடவையோட போயிடுவாங்க. அவங்கள அப்படியே போக விட்டுடக்கூடாதுனு தான்.

‘வெளியூருக்கு போறவங்களோ இல்லை வெளியூரிலிருந்து இங்கு வந்து ஜெராக்ஸ் எடுக்குறவங்களோ ஒரே தடவையில போக முடியாது. எதாவது ஒரு ஜெராக்ஸ் மறந்துருவாங்க. இல்லைனா தொலைச்சிருவாங்க. திரும்ப இங்க வந்துதான் எடுத்துட்டு போவாங்க.

‘நிறைய பேர் ரெண்டாவது தடவை ஜெராக்ஸ் எடுத்தப்பறம் நல்லா பார்த்தா முதல் முறை எடுத்த பேப்பர் அவங்க கையிலேதான் இருக்கும். சிரிச்சிட்டே இங்க வச்சிகிட்டே தேடிருக்கேன் பாரேன். நான் ஒரு குருட்டுப்பய என்பார்கள் .

‘அவசரத்துல தேடுனா அப்டிதாங்க இருக்கும். பதட்டப்படாம தேடுனா கிடைக்கும்,’னு என் தாத்தா சொல்லுவார்.

‘ஆனால் உண்மையில் அது கடவுளின் வரம்னு என் தாத்தாவுக்கு மட்டுந்தான் தெரியும்.’

“ஏன் உங்க தாத்தா கடைக்கு வந்து வரம் கொடுத்தாரு!” தொடையில் கையை ஊன்றிக்கொண்டே வாயிலிருந்த தன் விரலை எடுக்காமலே கேட்டான்.

‘சொல்றேம்ப்பா. எங்க தாத்தா ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். ஒரு பிரபலமான பத்திரிக்கையில (இப்ப அந்தப் பத்திரிகை கடுமையான நெருக்கடி காரணமாக மூடிட்டுது ) அவரோட துண்டு காமெடிலாம் வந்திருக்கு,’ என அங்கே ஒட்டியிருந்த பல துண்டுக்காகிதங்களில் தேடி ஒன்றைக் காண்பித்து இதுதான் என காட்டியவள், ‘ உனக்கே தெரியும் இது எல்லாமே எங்க தாத்தா எழுதி பிரசுரமான ஜோக்,கவிதை, பஞ்ச். அவருக்கு ஒரு கதை எழுதணும்னு ஆசை. அதுவும் இதுவரை யாரும் எழுதாத ஒரு கதையை எழுதணும்னு. அதுக்காக ராப்பாகலாக இதுவரை எதைப்பத்தியெல்லாம் எழுதியிருக்காங்கனு யோசிச்சு அதுல எதைஎதையெல்லாம் எழுதாம விட்ருக்காங்கனு தகவல் திரட்டினார்.அப்பலருந்து தான் தாத்தாவுக்கு “கிறுக்குசூசை” ன்ற பேர் வந்தது.

‘எழுதாததைப் பற்றி எழுத எழுதினதை பற்றியெல்லாம் தகவல் எடுத்துட்டுருந்தார். இப்படி எதெது எழுதாததுனு அவர் தேடிட்டிருந்தா சத்தியமா அவரால எழுதாதப் பத்தி எழுதவே முடியாதுனு நினைச்ச கடவுளே மனமிறங்கி உலகத்துல இதுவரை எழுதாததப் பற்றிய குறிப்புத்தாளோடே எங்க கடைக்கு வந்திருக்காரு.

‘அந்த பேப்பர்ல இருந்ததைப் பத்தி அதுவரை யாரும் எழுதலை. நீ அதுல இருக்குறத எழுதினா நீதான் எழுதாததை எழுதினவன் ஆவ. இதை ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு அதை என்கிட்ட கொடுத்துருனு கடவுள் சொல்லிருக்காரு.’

தாத்தாவும் அதை வாங்கி ஆர்வமாக ஒரு காப்பி எடுத்தார்.அப்பதான் தாத்தாவுக்கு ஒரு உண்மை தெரிஞ்சது. இதைப் பற்றி நான் எழுதிட்டா இதுவரை எழுதாதது எழுதப்பட்டதாகி விடுமே. அப்படி எழுதிட்டா அதுக்கு மதிப்பில்லையே.. அதுனால எனக்கிது வேண்டாம்னு கடவுள்கிட்டயே நீட்டினார். ஜெராக்ஸ் உனக்காக கொண்டுவந்தது. நீயே வைச்சுக்கனு அவர் சொல்ல, ‘இல்லை இது உங்களோடதுனு’ கடவுள்கிட்ட கொடுத்துட்டார். என்கிட்ட ஜெராக்ஸ்க்கு கொடுக்க காசில்லை. அதுக்கு பதிலா எதாவது வரம் கேள் தரேன்னு சொல்ல கடவுள் வரம் தந்துவிட்டு போனா திரும்ப வரவேமாட்டார்ன்றதால எங்க கடைக்கு வரவங்க திரும்ப திரும்ப வரணும்னு வரம் கேட்டார். இப்படிதான் அந்த வரம் கிடைச்சது,’ என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் முன்பு சொன்னதையும் மீறி குறுக்கிட்டு,

“பிரிஸல்லா, இடையில பேசுனதுக்கு ஸாரி. நிஜமாவே இதை நீ நம்புறியா என்ன!” என கேட்டான்.

அவள் சிரித்துவிட்டு அவன் கன்னத்தை ஆசையாகக் கிள்ளி, ‘ நீ மட்டும் அன்னைக்கு திரும்பி வந்திருக்காட்டி நான் சத்தியமா நம்பிருக்கமாட்டேன்,’ என்றாள்.

கன்னத்திலிருந்து அவளுடைய கையை எடுத்துவிட்டு “என்ன உளறற!” என்றான்.

‘உனக்கு நியாபகமிருக்கா நீ முதல்முதல்ல இங்க கடைக்கு வந்தது. நீ வரதுக்கு முன்னாடிதான் எங்க தாத்தா இந்த ரகசியத்தை எங்கிட்ட சொல்லிட்டிருந்தார். அந்த வரம் அவர் கேட்ட மாதிரியே வேலை செஞ்சிருச்சுன்னும் யார் கடைக்கு வந்தாலும் கண்டிப்பா அடுத்த தடவை வராம போகமாட்டாங்கன்னும் அதனால முதல் தடவை வரவங்ககிட்ட சில்லறை கொடுக்கிற மாதிரியிருந்தா நம்பி கொடு. இல்லைனா அடுத்த தடவை வாங்கிக்கனு சொல்லு. அவங்க கண்டிப்பா வந்துதான் ஆவாங்கன்னும் சொன்னாரு. இந்த மனுஷங்க எல்லாம் திரும்ப வராங்க. ஆனா வரம் கொடுத்த கடவுள் தான் வரவேயில்ல. அந்த வரமே அவரை ரெண்டாவது தடவ வரவைக்க தான் வாங்குனது. அது மட்டும் இன்னும் நடக்கலனு வருத்தப்பட்டு சொன்னாரு. அவர் வந்தா எப்படி கண்டுபிடிக்கறதுனு கேட்டப்ப தனக்கே அது தெரியலனு சொன்னாரு. அவரோட உருவத்த கூட அவர் மறந்துட்டதாவும் சொன்னாரு. எந்தளவுக்குனா வந்தது ஆணா பொண்ணானே தெரியாதளவு. அப்ப நீங்க எப்படி கண்டுபிடிப்பிங்கனு கேட்டதுக்கு யார் ஒருத்தர் போயிட்டு திரும்ப வராம போறாங்களோ அவர்தான் கடவுள்னு சொன்னாரு. திரும்ப வந்தா மனுஷன்னு சொன்னாரு. அவர் சொல்லிட்டிருந்தப்ப தான் நீ வந்த. என்ன வேணும்னு தாத்தா கேட்டப்ப உனக்கு என்ன ஜெராக்ஸ் எடுக்கணும்னே தெரியல. பர்ஸ்ல தேடி டிரைவிங் லைசன்ஸோ ஆதார் கார்டோ கொடுத்த. நான் உன்னைப் பாத்துட்டு மனசுல நினைச்சுட்டு இருந்தேன். நீ வருவியா மாட்டியா.. நீ மனுஷனா! இல்லை கடவுளானு!…

‘நீ மட்டும் வராம போயிருந்தா நான் நம்பியிருக்கவே மாட்டேன். ஆனா நீ வந்த. நீ வந்தப்ப எனக்கு அவ்வளவு ஆச்சரியம். உன்னைய ஏதோ ரொம்ப தெரிஞ்சவன ரொம்ப வருசம் கழிச்சு பார்த்ததுமாதிரி ரெண்டாவது தடவ நீ வந்தப்ப சிரிச்சேன். சந்தோசப்பட்டேன். நீ என்னை சந்தோசப்படுத்த திரும்பத் திரும்ப வந்த. ஒருதடவை வெறும் ஏ4 சீட்ட ஜெராக்ஸ் எடுக்க சொல்லி கேட்டு வந்த,’ என மீண்டும் ரூபனின் கன்னத்தைக் கிள்ளி சிரித்தாள். ‘ஆனா, நீ மட்டுமில்ல ஜெராக்ஸ் எடுக்க வந்த எல்லாரும் திரும்ப வந்தாங்க.’

இந்த முறை ரூபன் சிரித்துவிட்டான். ‘லூசு, நான் வந்தது உனக்காகடி! கடவுள்னாலயோ இல்ல வரத்துனாலயோ இல்லை. அப்படி ஒருவேளை வரம் உண்மைனா கல்யாணத்துக்கப்பறம் “பிரதி ஜெராக்ஸ் கடை”ய இடிச்சுட்டு “பிரதி தியேட்டர்” ஆக்கிரலாம். நம்மூர் பஸ்ஸ்டான்ட் பக்கத்த்துல தியேட்டரே இல்லை. நிறைய பேர் வருவாங்க. அதுவும் திரும்ப திரும்ப. ரொம்ப முக்கியமான விஷயம். பாத்ரூம் கட்டணும்னு அவசியமில்லை. இதோ எதிர்லேயே இருக்கு,’ என சொல்லி சிரித்தான். அவள் ஒருபுறமாக வாயைக் கோணி லேசாக சிரித்தாள். அவள் அப்படி சிரித்தால் அவள் பயங்கர சோகமாக இருக்கிறாள், அழப்போகிறாள் என அர்த்தம்.

ஒருமுறை கிறுக்குசூசை தாத்தாவும் “ரூபா, (அவர் அப்படிதான் கூப்பிடுவார்) எல்லாரும் அவங்க வீட்டுபொண்ணுங்க முகத்துல சிரிப்பை மட்டுந்தான் பாக்கணும்னு விரும்புவாங்க. ஆனா நான் எப்பவும் அவ அந்த கோனசிரிப்பை சிரிச்சுருவே கூடாதுனு நினைக்கிறேன். அவளை அப்படி சிரிக்காம பாத்துக்க,’ என கூறியிருந்தார்.

அது நினைவிற்கு வந்ததும் அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கில் பேச்சை ஆரம்பித்தான்.

“பிரிஸில்லாம்மா, மனுஷன்னு இல்லை கடவுளாவே இருந்தாலும் உன்னை பாக்கறதுக்காகவே கடைக்கு ரெண்டாவது தடவ வந்துருவாங்க. எனக்குத் தெரிஞ்சு கடவுளும் கடைக்கு ரெண்டாவது தடவ வந்துருப்பாரு. உன்னைப் பாத்து மயங்கி திரும்ப வந்ததுனால நீ கடவுள்னே அவரை மறந்துருப்ப!” என சொல்ல அவள் முகத்தில் அந்த கோனச்சிரிப்பு மறைந்து உண்மையாகவே சிரிப்பு வந்தது.

“நான் வந்ததுனாலதான நீ கடவுளே நம்புறன்னு சொன்ன. நீ நம்புனது மாறியே கடவுள்னாலயே நான் வந்ததாவே இருக்கட்டும். ஆனா இதை மட்டும் தெரிஞ்சுக்கோ. ஒருவேளை கடவுள் வந்து வரம் கொடுக்காமயிருந்திருந்தாலும் நான் திரும்ப வந்திருப்பேன். உன்னைப் பாக்குறதுக்காக,’ என அவளை அணைத்துக்கொண்டு, “ஏன்னா லவ்வோட ஜெராக்ஸ்தான் நம்ம!” என்றான்.

அவள் அவனை விலக்க முயற்சிக்கவில்லை. எதிரேயிருந்த கழிவறையிலிருந்து சில சோடிக் கண்கள் இதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

அப்போது அதற்கு முன்னால் வந்திருந்த அந்த வழுக்கைத் தலை கஸ்டமர் ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்ததும் இருவரும் வேகமாக விலகினர். ‘ஒரு காப்பி’ என அவர் கொடுத்துவிட்டு, ’கொஞ்சநேரம் முன்னதாம்மா வந்தேன் ஒரு ரூபா நீ தரணும் அதுல கழிச்சுட்டு எவ்வளவுனு சொல்லு,’ எனச் சொன்னபோது, ’நியாபகமிருக்கு சார், காசு தரவேண்டாம் சரியாபோச்சு,’ என சொல்லிவிட்டு அதை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டே ரூபனைப் பார்த்துப் பெருமையாக சிரித்தாள்.

ரூபன் மேலேயிருந்த அவள் தாத்தாவின் படத்தைப் பார்த்துச் சிரித்துவிட்டு “கிறுக்குசூசை” என முனகினான்.

******

3 Replies to “பிரதி ஜெராக்ஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.