
வெயில் நிலம் பிளக்கும் அந்த கோடைக்கால பகல் நாளொன்றின் ஆரம்பத்தில் , சிறு சிறு குன்றுகளாக விரிந்த நிலத்தில் மணற் குவைகள் மென் முலைகளென பொருமியிருந்தன. அங்கிருந்த மணல் தழுவும் பொன்னிறப் பாறையொன்றின் இடுக்கில் பொன்னியும் பொன்னனும் உடல் குறுக்கி பெரும் காற்றடிக்கும் திசைக்கு முதுகு காட்டி படுத்திருந்தனர். கருத்த முதுகில் பொன்னிற மணற்துகள்கள் நட்சத்திரமென மின்னின. உட்சுவரிலிருந்த செதுக்கு ஓவியத்தில் தெரிந்த யானைக்கூட்டத்தின் வடிவத்தை பார்த்த பொன்னன் கண் மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தான்.
“எய்யா , பிள்ளைய காப்பாத்து பத்துரமா. வந்து சேருகோம்” எனும் போது இறுக்க மூடிய கண்களின் ஓரம் உப்பு நிறைந்த நீர் பெருந்துளியாக வடிந்து காதுகளில் குளிர்ந்து பின் சூழ்நில வெம்மைக்கு ஆவியானது.
ஒங்காரமாக ஊளையிடும் கொடுங்காற்றுக்கு பறந்த சுற்றுத்துணியை இறுக்க பிடித்தபடி பொன்னி வயிற்றில் தலை படும்படி தீச்சுட்ட புழுவென வளைந்திருந்தாள்.
காற்றின் வேகம் குறைய ஆரம்பித்திருந்ததும் எழுந்தமர்ந்து இன்னும் போக வேண்டிய தூரத்தை எண்ணியவாறு அமைதியாக அமர்ந்திருந்தனர். உடல் தளர்ந்து மனம் அதனை ஊக்கி முனைய விரைந்தது. அவர்கள் இருவரும் கபாடபுரத்தின் பனையூரிலிருந்து கிளம்பி இருபது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உடல் ஒடுங்கி வற்றி தலை முடி மணலால் சிக்குபிடித்து சடையாகியிருந்தது. கண்களின் இடுக்குகளில் , கரிய கழுத்தில் கைகளில் மணல் படிந்திருந்தது. ஆரம்பத்தில் அவற்றை துடைத்து வழித்துவிட்டது போல இப்போது செய்ய மனம் வராமல் இருவரும் கரிய பாறைத்துண்டுகளென முன்னால் விரிந்து நெளிந்து கிடந்த நிலத்தை வெறித்து பார்த்திருந்தனர்.
“மோன் சுகமாயிருக்கும், இல்லையா?” எனும் போது பொன்னியின் குரல் ரகசியம் போல ஒலித்தது.
“சுகமாயிருக்கும் , ஒறப்பா தெரியும் எனக்கு. மோன் சுகமாயிருக்கும்,” என்றவன் கண்களை மூடி அவன் மகன் பனம்பாயில் உடலின் இடப்பக்கம் கண்காணா கயிற்றால் இழுத்துக்கட்டப்பட்டது போல துருத்தி நின்ற காட்சியை கண்டு , இத்தருணத்தில் அதனை மறக்க முயன்று மண்டையில் இருமுறை அடித்துக்கொண்டான்.
அவன் மகன் ஒரு நாள் , பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த செந்நிற நாகமென ஊர்ந்த கலங்கல் நதியின் கரையோரமாய் ஆற்று மணலில் புதர்ச்செடியின் அடியை பிடித்தவாறு வாயில் பதை தள்ள மயங்கி கிடந்தான். அவன் நண்பர்கள் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் கிடத்தினர். அன்று இழுத்துக்கொண்ட உடல் அவ்வப்போது அதிர்வதைத்தவிர அசைவின்றி மண்ணால் சுவர் எழுப்பி பனையோலை கூரையால் கட்டப்பட்ட ஒற்றையறை வீட்டின் நடுவில் பாயில் கிடந்து பொன்னன் வந்து பார்க்கும் போது அங்கு அவன் பார்க்க வளர்ந்த குழந்தையில்லை. “அதுவோர் பேய் , கண்கள் வெளித்தள்ளி கோழை வழியும் வாயுடன் உடல் நெளிந்து கிடக்கும் பேய்,” என்றவன் மனம் அறைந்தது. பயந்து போய் சுவரை அண்டி சப்பணமிட்டு அமர்ந்தான். பொன்னி அழுதாள் நிறுத்த நினைத்தும் முடியாமல் அழுதாள். மூச்சு நின்றுவிடும் பொழுதில் அவன் அவளை அறைந்து பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டியிருந்தது.
இருபது வீடுகள் மட்டுமேயிருந்த பனை சூழ்ந்த பனையூரின் தெற்கே கடைசியாய் இருந்தது குறிகிழவியின் வீடு. ஒற்றை முலைக்கச்சை கல்முலைக்காம்பு மறைக்க , நிமிர்ந்த முதுகுடைய அவளின் தோல் சுருக்கங்கள் இல்லையெனில் அவளை கிழவியென்று சொல்ல வேறு காரணங்கள் இல்லை. அவள் வந்து பார்த்தும் பொன்னனின் கண்களை உற்றுப்பார்த்து புன்னகைத்தாள் பின் “தீரா நோயி…தீக்க ஒரு வழியுண்டு…மேக்க வெம்பாலை கரிக்கோயிலுக்கு செல்லணும். சென்னா எல்லாம் தீரும். மோன் நடக்கும். ரெண்டு பேரும் செல்லணும்”
“நாங்க செய்யல்ல ஒண்ணும். எதுக்கு நமக்கு இது வருது”
“யாருக்கு என்ன வருதுண்ணு யாருக்கு எப்ப தெரியும் ?”
“யம்மா, அது தூரம். ரொம்ப தூரம்” என்றாள் பொன்னி.
“மோன் வேணுமா ?…போ…போ…” என்று பொன்னனை பார்த்து அழுத்தமான குரலில் கூர் பற்கள் காட்டும் குரங்கென உறுமினாள். பழுப்பில் நிறைந்த கருவிழியை நேருக்கு நேர் பார்க்க பயந்தவனாய் தலை தாழ்த்து நடுங்கித்துடிக்கும் மகனின் கால்களை பார்க்க ஆரம்பித்தான். மடங்கியிருந்த வலது கால் சுண்டு விரலால் மகனுக்கு வலி உண்டாகியிருக்க வேண்டும் அவன் உடல் அதிர ஊமையின் குரலில் அழுதான்.
அன்றிரவு மகன் உறங்கிப்பொய் ஆந்தைகள் அலறும் இரவில் விழித்திருந்த பொன்னன் பொன்னியின் கைகளை பிடித்து அழுத்தி “நம்ம சத்தியமா போகுணுமா பொண்ணே. வேற பிள்ள பொறக்காதா? சமாதானம் வேணும் முடிவெடுக்க,” என்று அவளைக் கட்டிக்கொண்டான்.
அவள் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தவள் திடீரென அவனை கீழே தள்ளி எழுந்து நின்று வெறிகொண்டு தலைவிரித்து விழுதுசூழ் ஆலென “நீ சாவு , இல்ல உன்ன கொண்ணுட்டு போவேன். ஆனா மோன் வேணும். எனக்கு வேணும்” என்று அழ ஆரம்பித்தாள். அவன் தோளில் சாய்ந்து நெஞ்சு நனைய அழுதவளை சமாதானம் செய்து நாளையே கிளம்பலாமென ஆறுதல் சொன்னான். ஓர் அணில் குஞ்செனத் தலையாட்டி அமைதியானாள். அவள் தூங்கியபோது சூரியன் எழுந்திருந்தது.
போய் திரும்பும் நிச்சயமில்லா பாலைப் பயணம் தொடங்குகையில் அவர்கள் குறிகிழவியிடம் கரிக்கோவிலின் கதை கேட்கும் சடங்கிற்காக சென்றனர். அவள் வீட்டின் முன் குழுமியிருந்த மக்கள் இவர்கள் இருவரையும் ஒருவித இரக்க பாவத்துடன் பார்த்தனர். அவர்கள் யாருமே இதுவரை அந்த கோவிலுக்குச் சென்றதில்லை , செல்லும் எண்ணமும் இருக்கவில்லை.
மக்கள் வழிவிட அவர்கள் இருவரும் அவளின் தாழ் வாசல் விட்டினுள் நுளைந்தனர். ஒளியில்லாமல் கருமை நிறைந்த அறை கரிய மாபெரும் களிரொன்றை ஞாபகப்படுத்தவும் இருவரும் பயந்து பின்னகர்ந்தனர். வெடிப்பின் ஒலியுடன் கற்களின் இடையில் பற்றிய நெருப்பு பஞ்சில் பற்றி சிறிய பனங்கம்பில் கட்டிய பந்தம் எரிய ஆரம்பித்தது. அதன் பின் சப்பணமிட்டு அமர்ந்திருந்த குறிகிழவி அவர்கள் இருவரையும் கைகாட்டி படலை சாத்திவிட்டு எதிரில் வந்தமருமாறு சொன்னாள்.
பந்த ஒளியில் அவள் முகம் செந்சாந்து குழைத்து பூசியதைப்போல் இருந்தது. மூவரும் ஒருவர் கையை மற்றவர் கைமேல் வைத்து முக்கோண வடிவமொன்றை உருவாக்ககினர். அவர்கள் கண்களை மூடி அமர்ந்திருக்கையில் பாதங்களில் ஆரம்பித்த அதிர்வு உடல்வழி பெருகி கண்களில் நிலைக்கவும் காட்சியொன்று விரிந்து வந்தது.
*
இடுங்கிய சிறிய கண்களும், சுருக்கம் விழுந்து புழுதி படிந்த கடுந்தோல் உடம்பும், பெருங்கழுகின் விரிந்த சிறகென காதுகளும், நீண்ட மண்ணுரசி மடிந்த துதிக்கையும் கொண்ட முதிர்ந்த பிடி முன்னகர கூட்டமாய் பின்னால வந்தன மற்ற பிடிகள். புழுதிக் காற்றுக்குத் தலை சாய்த்து அவை மெல்ல அடிவைத்து வெம்பாலையில் நகர்ந்தன. வெயில் படர்ந்த நிலத்தில் மென் அடிக்கால்கள் பதித்து நீர் தேடித்திரிந்தது அக்கூட்டம். வெளியில் பரவிய கானல் நீர் அலையில் அவையும் சேர்ந்து அலைந்தன. சிலவற்றின் வயிறு உள்நோக்கி சுருக்கி விலா எலும்புகள் புடைக்க ஆரம்பித்திருந்து. இல்லாத மூங்கிலை அவை சவைத்தபடி மனமயக்கில் கண் சொருகி நடந்தன. முள்மரங்களை தொட்டுத்தடவி சலித்துப்போன முள்குத்திய துதிக்கைகள் ஓய்ந்து தொங்கின. இயற்கையின் அழைப்பின் திசை நோக்கி அவற்றின் செவிகள் பசியில் தாகத்தில் கூர்ந்தன.
இருபது பிடிகளின் கூட்டத்தில் கடைசியாக கூட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டு வந்தது ஓர் போதகம். அதன் அன்னை தன்னை நோக்கி முட்டி முட்டி வந்த போதகத்தை துதிக்கையால் தூக்கி மறுபக்கமாக எறிந்தது. இளம் மூங்கில் குருத்தின் துதிக்கை நெளித்து முன்னால் செல்லும் அன்னையை , கூட்டத்தினை அழைத்தபடி புழுதியால் கண்திறக்க முடியாமல் பாதங்களை தேய்த்து தேய்த்து அது நடந்தது. ஒரு நொடி நின்று வானைப்பார்த்தது “ஏன்” என்றது. மேகங்களற்ற வானம் கையறுநிலையில் எதிர் நோக்க, காலம் சீக்கிரம் நகராதா என்ற ஏக்கத்தில் அதன் இதயம் படபடத்தது. கண்களில் தெரிந்த நிலம் வெறும் புழுதியாக ஆரம்பித்திருந்தது. தனித்த கைவிடப்பட்ட, பசித்த குழந்தையின் அழுகையென அது பிளிற ஆரம்பித்தது. முன்சென்ற கூட்டம் ஒரு கணம் நின்று பேசும் சத்தம் கேட்டது. வழிநடத்திச் சென்ற முதிய பிடி அதட்டலென உறுமியதும் கூட்டம் சத்தமின்றி நகர ஆரம்பித்தது. அதன் அன்னை திரும்பிப் பார்க்கவேயில்லை.
கண்களில் அப்பிய புழுதி நெகிழும் வண்ணம் போதகத்தின் கண்கள் வழி நீர் வழிந்தது. வெந்துகொண்டிருக்க காட்டுத்தீயின் நடுவில் நிற்கும் வெம்மையை அது உணர்ந்தது. நிற்க முடியாமல் பின்னங்கால்கள் மண்டியிட அழுதது அழைத்தது ஓலமிட்டது. அதனுடன் வந்த கூட்டம் திசை தெரியாமல் மறைந்து போன பின்பு சுழன்றடடித்த காற்றில் பறந்த மணல் துகள்கள் அதனை மூட ஆரம்பித்தன. அதன் கைக்குள் சுடுமணல் புகுந்து நிறைந்து அதன் நெஞ்சில் வெம்மை தீப்பிழம்பென கொழுந்துவிட்டெரிந்தது. விழிநீர் நிற்காமல் வழிந்தது. உப்பால் நிறைந்த நீர் பெருகி அது தங்கிய குழிக்குள் நிறைய ஆரம்பித்து ஓர் தடாகம் போல் ஆகியது. வானிலிருந்து பார்க்க, அதுவோர் வெம்மை நிறைந்த வன்மம் நிறைந்த சிவந்த தடாகம் ஓர் கோபம் கொண்ட விஷம் நிரம்பிய கண் போலொருந்தது.
பறந்து வந்த பருந்தொன்று சிவந்த தடாகத்தில் நீரருந்தி தீப்பிடித்து எரிந்து கரிந்து வீழ்ந்தது. செந்நாய் அதனை நெருங்காமல் கால்களுக்கிடையில் வால் சொருக முனகி ஓடியது.
சில நாட்களில் அந்த பிடிக்கூட்டம் பாலையைக் கடந்து மெலிந்த பாம்பென ஓடிய நதியின் ஓரமாய் நீரருந்தி அங்கிருந்து ஆரம்பித்த சோலைக்குள் சென்று கரும் பச்சைக்குள் மறைந்து போயின. முன்னறிவிப்பின்றி குருதியென சிவந்த வானிலிருந்து நெருப்புச் சூட்டுகோல் ஒன்று சோலையில் இறங்கியது. பற்றிக்கொண்ட சோலையில் கூட்டாக நரிகள் , கருவிரல் செம்முக மந்திகள் , நீள் முக வெண்மூக்கு கரடிகள் , செந்நா வேங்கைகள் அனைத்தும் பொருளில்லா சொல்லில் எரிந்து கருகின. கருகிய பிடிகளின் அலறும் பிளிறுகள் அடங்கியதும். வானம் தெளிந்தது ஆனால் நிலத்தில் அந்த நெருப்பு நீறுபூத்து என்றென்றைக்குமாகக் கிடந்தது.
*
பாறையிடுக்கிலிருந்து வெளிவந்ததும் பொன்னன் தன் உடம்பிலிருந்த மணலை தட்டிவிட்டான். முள் தேக பேரோந்தி அவர்களை பார்த்தவுடன் மண்ணிற்குள் மறைந்து கண்களை மட்டும் வெளிக்காட்டி எதற்காகவோ ஒளிந்திருந்தது. அவர்களிருவரின் கால்களும் பொத்துப்போய் உணர்ச்சியற்றிருந்தன. காற்றை குடித்து இருவரும் நடந்துகொண்டிருந்தனர். பாம்பின் நெளிவு பதிந்த மணலில் ஓர்மையுடன் கால்வைத்தனர். வெயில் தகித்தது. வியர்வைக்குக்கூட உடலில் நீரில்லாமல் தலை தாழ்த்தி ஒருவரை ஒருவர் தாங்கி கரிக்கோவில் திசை நோக்கி சென்றனர்.
தூரமாய் பருந்துகள் தாழ்ந்து வட்டமிடும் காட்சி தெரிந்தது. அந்த திசையில் மங்கலான மென் ஒலிகள் கேட்கவும் பொன்னி அவன் கைகளை தொட்டு பித்து பிடித்தவள் போல சிரித்தாள்.
“அங்கருக்கு. போவோம். துரிதா போவோம்,” என்று மணலில் புதைந்த காலை விக்கி விக்கி எடுத்து ஓடினாள்.
அவளை நிறுத்த முடியாமல் பொன்னனும் “நிக்கனும் நிக்கனும். நாகமிருக்கும்,” என்று கத்தியபடி ஓடினான்.
“வந்துட்டு. மோன் பொளச்சிப்போடும்….துரிதா வா…” என்று பலமாக மூச்சை இழுத்தபடி பொன்னி ஓடினாள்.
பருந்துகளின் பறத்தலுக்கு கீழே இருந்தது சிவந்த கடினமான நீராலான தடாகம். திறந்த கண்களை மூடாமல் பொன்னி அந்த தடகாத்தின் கரையில் மண்டியிட்டு அழுதாள் “எனக்க மோனே….மோனே…”. மணலள்ளி நெஞ்சிலறைந்தாள். அழுது ஓய்ந்தவள் கரையில் சாய்ந்து விழுந்து பெருமூச்சொன்றை கடைசியாக விட்டாள். இதை பார்த்த படி ஒதுங்கி நின்ற பொன்னன் , அவளிடம் சென்று உடலை உலுக்கிப்பார்த்தான். இறந்த உடல் நெருப்பாய் கொதித்தது. பாதத்தில் இரு குருதிப்புள்ளிகள் மட்டும் தெரிந்தது.
குறிகிழவி சொன்னபடி தடாகத்திலிருந்து சிறிதளவு நீரள்ளி அவன் கொண்டுவந்திருந்த பனங்குடுவையில் அடைத்து வைத்தான். அதற்குள் அவளுடல் மணலால் பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. அதனை திரும்பிப்பார்க்காமல் அவன் நடக்க ஆரம்பித்தான்.
இருபதாவது நாள் அவன் பனையூர் வந்து சேர்ந்ததை மக்கள் நம்பவில்லை. செத்த பிணம் போலிருந்தவனை சிலர் விரட்ட முயன்றனர். அவன் நலிந்த குரலில் “மோன்” என்றதும் அவர்கள் அவனை தாங்கிப்பிடித்து அவன் வீட்டிற்கு ,அழைத்துச்சென்றனர்.
குறிகிழவி சக்கையாக கிடந்த பொன்னனை அணுகி காதில் “எங்க வெஷம்” என்றதும் அவன் இடுப்பில் தட்டிக்காட்டினான்.
அவள் அந்த குடுவையை திறந்து பாயில் கிடந்த அவன் மகனின் வாயில் சொட்டுச்சொட்டாக ஊற்றினாள். உள்ளிறங்கிய திரவம் குருதியில் கலக்கவும் அவன் தூங்கிப்போனான். அவள் மீண்டும் பொன்னனின் காதுகளில் “மோன் செரியாகும். இப்பொ நீ ஒறங்கணும்” என்று அங்கிருந்து சென்றாள்.
பொன்னி புதைந்து போன மணல் திட்டை நினைத்தபடி கண்மூடி உறங்க ஆரம்பித்தான்.
***