டென்னிசனின் லோடஸ் ஈடர்ஸ்

மூலக் கவிதை: ஆல்ஃப்ரெட் டென்னிஸன்

தமிழாக்கம் :கோரா  

லோட்டஸ் உண்போர் (lotos-eaters) என்னும் கவிதையை எழுதிய  ஆல்ஃப்ரெட் டென்னிசன் விக்டோரியன் காலத்திய அரசவைக் கவிஞராக இருந்தவர். இவர் எழுதிய கவிதைகள் இரு தொகுப்புகளாக 1842-ல் பதிப்பிக்கப்பட்டன  இவருடைய நெருங்கிய நண்பர் ஆர்தர் ஹல்லாம் துணையுடன் ஸ்பெயின் நாட்டு இயற்கை எழில் கொஞ்சும்  பிரனீஸ் (Pyrenees ) மலைகளுக்கு பயணம் செய்த போது அவருக்குக்  கிடைத்த உத்வேகத்தால்  லோட்டஸ் தின்போர் (Lotos Eaters ) என்னும்  இக் கவிதை பிறந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய கிரேக்க இதிகாசக் கவிஞரான ஹோமரின் இரு பெருங்கதைகளில் இரண்டாவதான Odyssey-யின் (முதல் கதை Iliad ) 9-ஆம் பாகத்தில் காணப்படும் ஒரு சிறு நிகழ்வின் அடிப்படையில் டென்னிசன் படைத்த கவிதைப் புனைவு இது. ஹோமரின் காப்பியம், Troy வீழ்ச்சிக்குப் பிறகு ஒடிஸ்ஸஸ் (Odysseus) என்னும் கிரேக்க வீரன்(Ithaka  தீவுக்கு  அரசன்), நாடு திரும்புவதற்காக மேற்கொண்ட சாகசங்கள் நிறைந்த கடல் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. 10 ஆண்டுகள் நீடித்த இந்த கடல் பயணத்தின் இடையில் எப்போதோ ஏற்பட்ட கடல் சீற்றத்துக்கு ஆளாகி மாலுமிகளுடன் அவன் ஒரு வினோதமான தீவில் கரையேற நேரிடுகிறது. (இது 1200-1180 BCE-ல் நடந்திருக்கலாம் என்று வரலாற்றுக் கதை சொல்லிகள் கூறுகிறார்கள்.அது  தொன்மங்களும் கட்டுக்கதைகளும் அரக்கர்களும் சூனியக்காரிகளும் நிறைந்திருந்த காலம்.) வினோத தீவின்  மக்கள் லோட்டஸ்  மலரின் சுவையான பகுதிகளைத் தின்று தன்னிலை மறந்து திரிபவர்கள். லோட்டஸ் மலர்களைத் தின்ற மாலுமிகள் வீடு திரும்பும் பயணத்தைத் தொடரும் ஆசையை முற்றிலும் இழந்தனர். ஒடிஸியஸ் அவர்களை அடித்து உதைத்து துடுப்புகளில் கட்டிவைத்துப் பயணத்தைத் தொடர்ந்ததாக ஹோமர் எழுதுகிறார்.இது  ஓடிசி கதையின் மிகச் சிறிய நிகழ்ச்சி. இதில், மாலுமிகள் வினோதத் தீவின் இயற்கை அழகில் மயங்கியதையும் பின்னர் லோட்டஸ் உண்டு கிறங்கிப் போனதையும், போதை மயக்கத்தில் அனைவரும் அங்கேயே தங்கி விட ஒரு மனதாக முடிவு செய்வதையும் மட்டும் எடுத்து நீள் புனை கவிதையாக எழுதி  உலகுக்கு அளித்திருக்கிறார் டென்னிசன். இக்கவிதையில் ஒடிஸியஸ்-ஐ  அவனது ரோமன் பெயரில் அதாவது யுலிஸஸ் ( ulysses) என்று குறிப்பிடுகிறார். அவர் ஸ்பெயின்-ல் பார்த்திருந்த பைரனீஸ் மலைகள் தாக்கமும் இவர் கவிதையில் தெரிகிறது.

கவிதை வகை

நீண்ட இக்கவிதை இரு பாகங்களைக் கொண்டுள்ளது. பெயரிடப்படாத முதல் பகுதியில் ஒழுங்கான 9 வரிகளைக் கொண்ட 5 பத்திகள்  (stanza) உள்ளன. இவ்வகைப்  பத்திகள்  ஸ்பென்ஸரியன் பத்திகள்  என்றழைக்கப்படுகின்றன.  8 பத்திகளைக் கொண்ட இரண்டாம் பகுதி Choric Song எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வரிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நீளம், எதுகை திட்டங்கள் ஆகியவற்றில் மிக அதிகத் தளர்வுகள் கொண்ட கவிதை அமைப்பைக் கொண்டுள்ளது.

கவிதை உள்ளடக்கச் சுருக்கம்

பகுதி 1

சிறு நிகழ்வை வருணிக்கும் எடுத்துரைப்பைக்  (narrative ) கொண்ட பெயரிடப்படாத  இப்பகுதி 5 பத்திகளைக் கொண்டது. யுலிஸஸ் மற்றும் அவனுடைய மாலுமிகள் குழு தற்செயலாகக்  கரையேறிய வினோதமான தீவுக்குள் வருகிறார்கள். அருவிகளும், மலைகளும் நீர்வீழ்ச்சிகளும் மிகுந்து காணப்படும் மந்தமான, மிதவெப்ப நிலப் பரப்பை கண்டு களிக்கிறார்கள். வெகு விரைவில், லோட்டஸ் தின்போர் என்றழைக்கப் படும் உள்ளூர் மக்களைச் சந்திக்கின்றனர். அவர்கள் கருத்த முகம் கொண்ட புதிரான  மக்கள். சோகமும் அமைதியும் கொண்டவர்களாகக் காணப் பட்டார்கள். முக்கியமாக  அனைவரும் அவர்களுக்குப் பிடித்தமான உணவான லோட்டஸ் எனப்படும் போதை தரும் செடிகளை கைநிறைய வைத்து சுவைத்துக் கொண்டிருந்தனர். சில மாலுமிகளும்  சுவைத்துப் பார்த்து, அது தங்களுக்கு  விபரீத விளைவுகள் ஏற்படுத்துவதைக் கண்டார்கள். நம்பமுடியாத அளவுக்கு  தூங்கவும் சோம்பியிருக்கவும் விருப்பம் வந்து கொண்டே இருந்தது. அப்படியே சரிந்து கைகால்களை இயக்கவும் விருப்பமின்றி படுத்துக் கிடந்தார்கள். இனி உழைக்க மாட்டோம்; இந்த இடத்திலேயே சோர்ந்து விழுந்து கிடக்கப் போகிறோம் என்று அடம் பிடித்தார்கள்.

பகுதி 2. கோரஸ் பாட்டு (Choric Song)

லோட்டஸ் உண்ட மாலுமிகள் அனைவரும் இணைந்து பாடும் கூட்டிசை. அவர்கள் ஏன் வீடு திரும்ப வில்லை என்பதற்கான காரணங்களை கோரஸ் பாட்டின் மூலம் தெரிவிக்கிறார்கள். இப்பகுதி எட்டு பத்திகளைக்   (stanzas ) கொண்டது . பத்தி வாரியான பொழிப்புரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

முதல் பத்தியில் லோட்டஸ் பூமியில் கேட்கும் இனிய உறங்கவைக்கும் இன்னிசையின் தன்மையைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

இரண்டாவது பத்தியில், மனிதன் மட்டும் உழைத்தே தீர வேண்டிய ஒரே உயிரினமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். இயற்கையின் பிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுக்கவும் சும்மா இருக்கவும் முடிகிறது; ஆனால் மனிதன் மட்டும் எப்போதும் ஒரு விசனத்தில் இருந்து மற்றொன்றுக்கு சுண்டி எறியப் படுவது ஏன் என்று வாதிடுகிறார்கள்.  அமைதியும் சாந்தமுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை என்று மனிதனின் அந்தராத்மா கூறினாலும், மனிதன் வாழ்நாள் முழுவதும் உழைக்கவும்  அலையவும் , விதிக்கப் பட்டுள்ளான்.

மூன்றாவது பத்தியில், இயற்கை ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் ஒதுக்கீடு செய்துள்ளது, அதற்குள் மலர்ந்து வாடி உதிர்ந்து முடிக்க வேண்டும், என்ற கருத்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப் படுகிறது.

நான்காவது பத்தியில் மாலுமிகள் உழைப்பை ஒட்டிய உயிர் வாழ்க்கையின் நோக்கம் என்ன கேள்வியை எழுப்புகிறார்கள் .எமது  சாதனைகள் ஒன்று சேர்த்துக் கூட்டப் படுவதில்லை; எமது சாதனைகள் எங்களை எங்கேயும் கொண்டு சேர்ப்பதில்லை. எதுவும் நிலைப்பதில்லை. வாழ்க்கையில் அனைத்தும் துரிதமாக ஓடி மறைகின்றன, எனவே பயனற்றவை என்கிறார்கள். நீண்ட ஓய்வு அல்லது மரணம் வேண்டும் எனக்  கோருகிறார்கள் ஏனெனில் அதன் மூலமே  இடையறாத உழைப்பில் இருந்து விடுபட முடியும் என்கிறார்கள்.

ஐந்தாவது பத்தியில் மாலுமிகள் சொகுசான தன்விருப்ப இன்பநுகர்வுக்காக (self-indulgence) குரல் கொடுக்கிறார்கள். உறங்குதல், கனவு காணுதல், லோட்டஸ் தின்றல் மற்றும் கடற்கரையில் அலைகளை ரசித்தல் தவிர வேறு எந்த வேலையும் மறுக்கும் வாழ்க்கை அது. அதன் மூலம்  ஒரு காலத்தில் தாம் அறிந்திருந்த, இன்று மறைந்து மண்ணுக்குள் போயிருக்கக் கூடியவர்களை நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆறாவது பத்தியில், தங்கள் குடும்பங்கள் அழிந்து போன அல்லது

சிதைவுற்றுவிட்ட நிலையில், மாலுமிகள் போனது போகட்டும் என்று நினைத்துக் கொண்டு இங்கேயே இருந்து விட்டால் நல்லது; வீடு திரும்பல் கொடுக்கப் போகும் குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற எண்ணத்தை வெளியிடுகிறார்கள

ஏழாவது பத்தியில் முன்புபோலவே மாலுமிகள் தீவின் மகிழ்வு தரும் காட்சிகளையும் ஓசைகளையும் நினைவு கூர்ந்து இனிய அனுபவம் பெறுகிறார்கள்.

எட்டாவது (கடைசி) பத்தியில் மாலுமிகள் தம் வாழ்வின் எஞ்சிய பகுதியை இந்த மழுங்கிய(hollow) லோட்டஸ் தீவில் சரிந்து படுத்து ஓய்வெடுத்துக் கழிப்போம் என்று உறுதி மொழி எடுப்பது கூறப்படுகிறது.  லோட்டஸ் தீவில் பொறுப்பற்ற வாழ்வது கடவுளரின் கவலை இல்லா வாழ்க்கைக்கு நிகரானது என்கிறார்கள். மனித இனத்தை வருத்தும்  பஞ்சங்கள், நோய்கள், நில அதிர்ச்சிகள் மற்றும் இயற்கை நாசங்கள் பற்றிக் கடவுளர்கள் கொஞ்சம் கூட கவலைப் பட  மாட்டார்கள் என்பது அவர்கள் கருத்து. சாகும் வரை மண்ணைப் பிசைந்து பயிர்களை விளைவித்து, மடிந்தபின் நரகத்தில் துன்பப் படவோ அல்லது சொர்க்கத்தின் எலிசியன் பள்ளதாக்குகளில் வசிக்கப் போகும் மனிதர்களைப் பார்த்து கடவுளர்  வெறுமனே புன்னகை செய்கிறார்கள். பாதிக் கண்கள்  மூடிய இலேசான தூக்கமே கடும் உழைப்பை விட மிகச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விட்ட மாலுமிகள், இனி கடல்களில் திரிவதை நிறுத்தி விட்டு லோட்டஸ் தின்போர் தீவிலேயே எஞ்சிய ஆயுளைக் கழிப்போம் என்று தீர்மானிக்கிறார்கள். 

கோரஸ் பாட்டின் தமிழாக்கம் (வரி வரியாக )

1. 

இங்கு இனிய இசை காதில் விழுகிறது மிக மிக மென்மையாக 

மலர்ந்த ரோஜா இதழ்கள் புற்களின் மீது   உதிரும் ஓசையினும் மெலிதாய்,  

அல்லது ஒளிரும் கணவாயின் மங்கிய மலைச் சுவர்களின் இடையே 

உறங்கும் நீரில் விழும் இரவுப் பனித்துளி எழுப்பும் ஓசையினும் மெலிதாய்; 

சோர்ந்த  இமைகள் களைத்த கண்களின் மீது கிடப்பதை விடவும்,

மிருதுவாய் எங்கள் ஆன்மாவில்  அமரும் இசை;

பேரானந்த வானுலகில் இருந்து இனிய உறக்கம் கொண்டுவரும்  இசை.

இங்கு  குளிர்ந்த பாசிகள் வெகு ஆழம் வரை செல்கின்றன,

பாசிகளின் ஊடே ஐவிக்கள் ஓசையின்றி நகர்கின்றன,

ஓடையில் நீண்ட இலைகளைக் கொண்ட மலர்கள்  அழுகின்றன.

செங்குத்துப் பாறைகளின் விளிம்பில் தொங்கி பாப்பிகள் உறங்குகின்றன

2.

நாம் ஏன் சஞ்சலத்தால் அழுத்தப்படுகிறோம்,

மற்றும் கடும் துயரத்தால்  முழுவதும் விழுங்கப்படுகிறோம் ,

அதே சமயம் பிற உயிர்கள் அனைத்தும் களைப்பு நீக்கும் ஓய்வை அனுபவிக்கையில்?

எல்லா உயிர்களும்  ஓய்வை அனுபவிக்கின்றன : நாம் ஏன் பாடுபட வேண்டும்  தனியாக 

நாம் மட்டுந்தான் உழைக்கிறோம், உயிர்களில்  முதன்மையாக இருக்கும்  நாம்,

மேலும் ஓயாது புலம்புகிறோம் ,

இருப்பினும் ஒரு துயரத்தில் இருந்து மற்றதுக்கு வீசப்படுகிறோம்:

எப்போதும் எமது விரிந்த  சிறகுகளை மடக்காமல்,

மற்றும் அலைச்சல்களில் இருந்து விடுபடாமல்,

அல்லது தூங்கவைக்கும் தெய்வீக தைலம்  புருவங்களை  நனைக்காமல்;

அல்லது அந்தராத்மா என்ன பாடுகிறது என்று உற்றுக் கேட்காமல்,

அமைதி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை 

அனைத்து உயிரினங்களின்  சிகரமும் மகுடமுமான, நாம் மட்டும் ஏன் உழைக்க வேண்டும்?

3.

பார்! இந்த நடுக்காட்டில்,

மடித்த இலையை துளிரில் இருந்து கவர்ந்து இழுத்துக் கொண்டது  

மரக்கிளைகளின் மீது வீசும் காற்று, மற்றும் அங்கேயே 

அகலமாக பச்சையாக வளர்கிறது கவலை இல்லாமல்,

நண்பகல் சூரிய வெயில் நனைக்க,  நிலவு ஒவ்வொரு இரவிலும் 

பனித்துளி ஊட்ட ;  மேலும் பழுப்பாக நிறம் மாறி 

உதிர்ந்து, காற்றில் மிதந்து கொண்டே  தரைக்குப்  பயணிக்கிறது.

பார்! கோடை ஒளியால் இனிப்படையம், 

சாறு நிறைந்த ஆப்பிள், பெரிதாகிப் பழுத்துக்  கனிந்து, 

அமைதியான இலையுதிர் கால இரவில் தரையில் விழுகிறது 

ஒதுக்கப் பட்ட நாட்கள் அனைத்தும் முடிகிற வரை 

மலர் பக்குவ நிலை அடைகிறது இருந்த இடத்திலேயே,

கனிவது, மங்கி மறைவது, விழுவது எதிலும் கடும் உழைப்பு இல்லை,

வளம் மிக்க மண்ணில் திடமாக வேரூன்றியுள்ளது.

4.

கருநீலக் கடலின் மீது வளைவுக் கூரையாய் அமைந்த   

கருநீல வானம் தீவிர வெறுப்புணர்வைத் தூண்டுகிறது. 

மரணம் வாழ்வின் முடிவு; எனில், ஏன் 

வாழ்க்கை முழுதும் கடும் உழைப்பு?

எங்களைத் தனியே விடுங்கள். காலம் முன்னோக்கி விரட்டுகிறது 

இன்னும் சற்று நேரத்தில் எங்கள் உதடுகள் செயலிழக்கும்.

எங்களைத் தனியே விடுங்கள். நிலைக்கப் போவது எது? 

எங்களிடமிருந்து அனைத்தும் உறிஞ்சப் பட்டுவிட்டன, அவை 

பயங்கரமான கடந்த காலத்தின் பகுதியும் பொதியுமாக  ஆகிவிட்டன.

எங்களைத் தனியே விடுங்கள்.  கொடுமையை எதிர்த்து போராடுவதில் 

எங்களுக்கு என்ன மகிழ்ச்சி கிட்டும் ? ஏறும் அலையின் மீதே எப்போதும்   

ஏறுவதில் ஏதாவது அமைதி உண்டா ?

எல்லா ஜந்துக்களும் ஓய்வெடுக்கின்றன, கல்லறை நோக்கிக் கனிகின்றன 

மௌனமாக;  முதுமை, வீழ்ச்சி மற்றும் முடிவுறுதல் : 

எங்களுக்குக்  கொடுங்கள் நீண்ட ஒய்வு அல்லது மரணம், கரிய  மரணம், அல்லது கனவுகள் நிறைந்த  நல்வாழ்வு.

5.

எவ்வளவு இனிமை கொண்டிருந்தது அது, ஓடையின் கீழ்முக புழக்கம் கேட்டது,    

பாதி மூடிக் கனவு காணும்  கண்கள்  எந்த நொடியிலும்  

பாதிக் கனவில் தூக்கம்  தழுவக் கூடும் போல் தோன்றியது  !

தொடர்ந்து கனவுலகில் இருந்தது, அங்கே அம்பெர்(சூரிய ) ஒளி,

உச்சி மர்( myrrh) புதரை விட்டு விலகாது இருப்பதைப் போல்; 

ஒருவர்க்கொருவர் காதோடுகாதாய்ப்  பேசும் ரகசியம் கேட்டது;

நாள் தோறும் லோட்டஸ் உண்டது,

கடற்கரையில் சுருண்டோடும் சிற்றலைகள்,   

மற்றும் நுரைத்த தெறிப்பின் மெல்லிய வளை கோடுகளைக்  காணல்;

எங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முழுதாக இரவல் கொடுத்தல்

மிதமான மனக் கவலையின் ஆதிக்கத்துக்கு ; 

எங்கள் மழலைப் பருவம் கண்டிருந்த பழைய முகங்கள் இன்று,

இரு கைப்பிடி சாம்பலாகிப் பித்தளை கலசத்தில் மூடிப்    

புதைத்த இடம் குவிந்த  புல் மேடாய் போய்விட்ட நிலையில்,

நாங்கள் தியானித்து அவர் நினைவில் ஆழ்ந்து மறுபடியும் வாழ்ந்திருத்தல்!

6. 

எங்கள் மண வாழ்வுகளின் நினைவு அருமை, 

அருமை எங்கள் மனைவியரின் கடைசித்  தழுவல்  

மற்றுமவர் இளவெப்பக் கண்ணீர்த்  துளிகள் : ஆனால் எல்லாமே மாறியிருக்கும்: 

ஆதலால் நிச்சயமாக இப்போது எங்கள் வீட்டு அடுப்புகளில் கணப்பு இருக்காது,

மகன்கள் வாரிசு உரிமை பெற்றிருப்பார்கள்: எங்கள் தோற்றம் பரிச்சயமற்றதாக மாறி  இருக்கும்: 

மகிழ்ச்சியைக் கெடுக்க வந்த  பிசாசுகள் போல்  இருப்போம்.

இல்லையெனில் தீவின் திமிர் பிடித்த இளவரசர்கள் 

எங்கள் சொத்தைக் கைப்பற்றி இருப்பார்கள், மேலும் இசைவாணன் 

அவர்கள் முன்னிலையில் பாட்டிசைப்பான்  பத்தாண்டு டிராய் போர்,   

மற்றும் பாதி மறந்து போன, எங்கள் தீரச் செயல்களைப் பற்றி.

சிறு தீவில் குழப்பம் நிலவுகிறதா?

உடைந்தது அப்படியே இருந்து போகட்டும்.

கடவுள்களுக்கிடையே சண்டை என்றால் சமரசம் கடினம்: 

திரும்பவும் ஒழுங்கைக் கொண்டுவருவது கடினம்.

சாவை விட மோசமான குழப்பம் நிலவுகிறது, 

இன்னல் மேல் இன்னல், வலியின் மேல் வலி, 

நாள் முழுதும் கடும் உழைப்பு மூச்சு முட்டும் வரை, 

கடுமையான வேலை போர்களால் களைத்த இதயங்களுக்கு மற்றும்  

வழிகாட்டி விண்மீன்களை உற்று நோக்கியே மங்கலாகிப் போன கண்களுக்கு.

7.

ஆனால்,  கற்பக மலர் மற்றும் மந்திர மூலிகைப் படுக்கையில் சாய்ந்து, 

எவ்வளவு இனிமை (இளவெப்பக் காற்று மெதுவாக வீசி எம்மைத்  தூங்கவைக்க) 

பாதி மூடிய கண்ணிமைகள் நிலைத்திருக்க, 

இருண்ட தெய்வீக வானின் கீழ், 

ஊதா நிறக் குன்றில் இருந்து  நீரை  மெதுவாக உறிஞ்சும் ஆறு

நெடிய ஒளிமய நடை  பயில்வதைக்  காண்பதும்- 

தடித்த முறுக்குக் கொடிகள் வழியே குகைக்கு குகை  

பனியில் நனைந்த எதிரொலிகள் ஒலிக்கக்  கேட்பதும்- 

மரகதப் பச்சை நீர் பற்பல தெய்வீக அகன்தஸ் 

பின்னல்கள் வழியே விழுவதைக் காண்பதும்!

தூரத்தில் பளிச்சிடும் உப்புக் கடலை பார்ப்பது கேட்பது மட்டுமே  என்றாலும் , 

பைன் மரத்தின் கீழ் நீட்டிப் படுத்து கேட்பது மட்டுமே என்றாலும்  இன்பமே தந்தன .

8.

லோட்டஸ் வறண்ட மலை உச்சியின்  கீழ் மலர்கிறது:

லோட்டஸ் ஒவ்வொரு வளைகுடாவிலும்  மலர்கிறது:

நாள் முழுதும் காற்று  மென்மையான தொனியில் சன்னமாக வீசுகிறது :

ஒவ்வொரு காலியான குகை வழியாகவும்  தனிமையான  சந்து வழியாகவும்  

வாசனை வீசும் மலைகளைச்  சுற்றிலும் மஞ்சள் லோட்டஸ்  தூசி பறக்கிறது.

நாங்கள் போதிய அளவு பணிச்சுமை அனுபவித்து விட்டோம், இயக்கமும் கூட, 

வலப்புறம் உருண்டோம், இடப்புறம் உருண்டோம், கடலில் பேரலைகள் சுயேச்சையாய் குமுறி எழும்போதும், 

கடலில் உருளும் ராட்சத திமிங்கலம்  நுரைத்த நீரைப்  பீச்சி அடிக்கும் போதும்.

நாம் உறுதிமொழி எடுப்போம், மேலும் அதை  ஒரு மனதாகக் காப்போம்,

இந்த வெற்று லோட்டோஸ் நிலத்தில் வாழ, மலைப் பகுதியில் சாய்ந்து படுத்திருக்க   சேர்ந்தாற்போல்  கடவுளர் போல், மனித குலம் பற்றிய அக்கறை இன்றி. 

அமுதம் அருகில் வைத்து படுத்திருக்கின்றனர், அவ்வப்போது  இடிமின்னல்களை  விசையுடன் எறிந்து கொண்டு  

கீழே வெகு தொலைவில் உள்ள பள்ளத்தாக்கின் மீது,  முகில்கள் லேசாக வளைந்து உள்ளன

அவர்களின் பொன்னிற  மாளிகைகளைச் சுற்றிலும்  ஒரு பளிச்சிடும்  உலகாய்ச்    சூழ்ந்து இருப்பதற்காக : 

அங்கே அவர்களை  ரகசியமாக புன்னகைக்க வைப்பவை, அவர்களின் அவசர அக்கறையற்ற பார்வையில்  படும்  தரிசு நிலங்கள் 

நாசம் மற்றும் பஞ்சம், கொள்ளை நோய் மற்றும் நிலநடுக்கம், கத்தும் பெருங்கடல்கள் மற்றும்  எரிக்கும் சுடுமணல்கள், 

தடிக்குரல்  சண்டைகள், மற்றும் எரியும் நகரங்கள், மூழ்கும் கப்பல்கள்,மற்றும்  இறைஞ்சும் கைகள். 

ஆனால் அவர்கள் புன்னகை செய்கிறார்கள், கொதித்து எழும் சோகமான பாட்டில் பொதிந்த நல்லிசை கண்டறிகிறார்கள்,

ஒரு புலம்பல் மற்றுமொரு தீங்கு குறித்த புராதனப் பாடலில் கடுஞ்சொற்கள் வரினும் அது அவர்களுக்கு அர்த்தம் விளங்காத கதைதான் ; 

அவை மண்ணை வெட்டும் பயனற்ற மனித இனத்தின் வெற்று மந்திர ஓதல்கள்,  

விதை விதைத்தல், விளைச்சலை அறுவடை செய்ய நீடித்த உழைப்பைத் தருதல்,  

தேவைக்கேற்ப சிறிதளவு கோதுமை, மதுபானம், எண்ணெய், வருடா வருடம் சேமித்து வைத்தல் ; 

இப்படி சாகும் வரை அவர்கள் அவதிப் படுகிறார்கள் -சிலர், என்கிறது  ஒரு ரகசியக் குரல் –  கீழே இருக்கும் நரகத்திலும் கூட அவர்கள்  

கடும் வேதனை அனுபவிக்கிறார்கள, பிறர் எலிசியன் பள்ளத்தாக்கில் 

குடியேறி,  

முடிவாகத்  தம் களைத்த உடலை ஆஸ்ஃபோடேல்  படுக்கையில் கிடத்தி 

ஓய்வெடுப்பார்கள். 

நிச்சயமாக, நிச்சயமாக, இலேசான தூக்கம் மிகவும்  இனியது  உழைப்பை விட,   கடலோரம், ஆழமான நடுக் கடல், காற்று, அலை மற்றும் துடுப்பு போடுதல் சார்ந்த  அனைத்து உழைப்புகளையும் விட ; 

ஓய்வெடுங்கள் தோழர்களே, கப்பலோட்டும் சகோதரர்களே, இனி எப்போதும்  நாம் அலைந்து திரிய மாட்டோம். 

சொல்லடைவு

லோட்டஸ் (lotos}:கிரேக்க தொன்மவியலின்படி  (mythology ), இது ஒரு போதை தரும் பழம். இதை உண்பவர் கடும் மறதிக்கும்  தெளிவற்ற மனச் சோர்வுக்கும் ஆளாவார்.

பைரனீஸ்; பைரனீஸ் பிரான்ஸ்-க்கும் ஸ்பெயின்-க்கும் இடையிலுள்ள  மலைத்தொடர். இங்கே டென்னிசன் தன் நண்பருடன் நீண்ட நடைப் பயணம் சென்றிருந்தார். இதன் தாக்கம் அவருடைய லோட்டஸ் தின்போர் புனைவின் வினோத தீவுக்கான கற்பனையை

வளப்படுத்தியது.

Homer: பண்டைய கிரேக்க இதிகாசக் கவிஞர்.  பெருங்காப்பியங்களான இலியட் , ஒடிசி ஆகியவற்றை இயற்றியவர் 

ட்ரோஜன் போர்: ஹோமர் எழுதிய இரு காப்பியங்களின் பின்புலம்.. இலியட் ஒரு தசாப்தம் நடந்த ட்ரோஜன் போரின் இறுதி ஆண்டின் 50 நாட்களின் சம்பவங்களை விவரிக்கிறது.   ஒடிசி, கிரேக்கப் போரில் பங்கேற்ற ஒடிஸியஸ்  என்னும் அரசன், நாடு திரும்புகையில் வழி தவறி மீண்ட ஒரு கடல் பயணக் கதையை விவரிக்கிறது.

BCE : Before Common Era (கி.மு )

தொன்மம் : Myth 

ஐவிக்கள் :  Ivy, ஒரு விதப்  படர் கொடி

பாப்பிகள்: Poppies-கசகசா செடி ï

தெய்வீக தைலம்:   steep our brows in slumber’s holy balm என்ற வரியில் கவிஞர் குறிப்பது தூக்கத்தை. தெய்வீக தைலம் விண்ணில் இருந்து இறங்கி புருவத்தை நனைத்து நம்மை தூங்க வைக்கிறது என்று மாலுமிகள் கருதுகிறார்கள்.

கற்பக மலர்: Amaranth, ஒருபோதும் வாடாத கற்பக மலர்

மந்திர மூலிகை: மோலி (moly) என்னும் மந்திர மூலிகை ஹோமர்-ன் ஒடிசி, 10-வது நூலில் கூறப்பட்டுள்ளது

கொடிகள்: vines .

அகாண்டஸ் பின்னல்கள்:ஒரு முள் வகை. கிரேக்க சிற்பத்தில் பாரம்பரிய முழுவடிவம்.

அமுதம்: nectar, இது மரணமற்றவர் ஆக இருக்க கடவுளர் அருந்தும் உணவும் பானமும்.

தரிசு நிலம்: wasted lands

மரகதம்: Emerald 

வளைகுடா : winding creek

எலிசியன் பள்ளத்தாக்கு : Elysian valley, மனிதர்களின் சுவர்க்கம் இருக்கும் இடம். இங்கே அவர்கள் Asfotel மலர்ப் படுக்கைகளில் ஓய்வெடுப்பார்கள்.

மூலக் கவிதையை இங்கே பெறலாம்: 

https://www.poetryfoundation.org › Poems

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.