
(1) தாவோவின் ஆலயத்திற்கு எப்படி செல்வது? (டி.ஆர்.நாகராஜுக்கு)
கதவைப் பூட்டாதே.
உதயத்தின் பள்ளத்தாக்கில்
இளந்தென்றலில் இலை போல் இலேசாகச் செல்.
நீ மிகவும் நிறமாக இருப்பின்
சாம்பலால் உன்னை மூடிக் கொள்.
நீ மிகவும் புத்திசாலியானால்
அரைத்தூக்கத்தில் செல்.
எது வேகமாய் இருக்கிறதோ அது வேகமாய்க் களைப்புறும்:
மெல்லச் செல், மெல்ல நிச்சலனம் போல்.
தண்ணீர் போல் உருவற்றிரு.
தாழ்ந்திரு, மேலெழ முயற்சி கூடச் செய்யாதே.
தெய்வத்தை வலம் வராதே:
சூன்யத்திற்கு திசைகளில்லை.
முன்னுமில்லை; பின்னுமில்லை.
அதைப் பெயரிட்டு அழைக்காதே;
அதன் பெயருக்குப் பெயரில்லை.
நிவேதனங்கள் தேவையில்லை: காலி உண்டியல்கள்
நிறைந்த உண்டியல்களைக் காட்டிலும்
தூக்கிச் செல்ல எளிதானவை.
வழிபாடுகள் கூட வேண்டாம்:
வேட்கைகளுக்கு இடமில்லை இங்கு
நீ பேச வேண்டியது அவசியமென்றால், நிசப்தமாகப் பேசு:
பாறை மரங்களுடனும்
இலைகள் பூக்களுடனும் பேசுவது போல்.
குரல்களில் இனிமை மிக்கது மெளனம்.
வண்ணங்களிலே நிறம் மிக்கது ஒன்றும் இல்லாதது.
நீ வருவதையும், செல்வதையும் யாரும் கவனிக்க வேண்டாம்.
குளிர்காலத்தில் ஒரு நதியைக் கடப்பது போல்
குறுகிய நுழைவாயிலைக் கடந்து போ.
உருகும் பனி போல் உனக்கு
ஒரு நிமிடம் மட்டுமே இருக்கிறது இங்கு.
அகந்தை வேண்டாம்: நீ உருக்கொள்ளக் கூட இல்லை.
சினம் வேண்டாம்: தூசி கூட உன் கட்டளைக்குக் கீழில்லை.
துக்கம் வேண்டாம்: எதையும் அது மாற்றுவதில்லை.
மேன்மையைத் துற:
மேன்மையுடன் இருக்க வேறு வழியில்லை.
இனி எப்போதும் கைகளைப் பயன்படுத்தாதே:
அவை வன்முறையையன்றி
அன்பை அவதானிப்பதில்லை.
மீன் தண்ணீரிலும்
கனி கிளை மேலும் இருக்கட்டும்.
பற்களிடை நா தப்பிப் பிழைத்திருப்பது போல்
மென்மையானது வன்மையானதிடை தப்பிப் பிழைத்திருக்கட்டும்.
ஒன்றுமே செய்யாத ஒருவன் மட்டுமே
யாவற்றையும் செய்ய முடியும்.
செல், வடிவமைக்கப்படாத கற்சிலை
உனக்காகக் காத்திருக்கிறது.
*Tao Temple,Chu-fu
(2) நோவா திரும்பி நோக்குகிறான்*
முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு;
இன்னும், நேற்று போல் இருக்கிறது.
அவர்கள் என்னைப் பைத்தியமென்று அழைத்தனர்;
அறுநூறு குளிர்காலங்களைக் கண்ணுற்ற என்னை.
தெருக்களில் குடித்தும், முயங்கியும்
பாவமிழைக்கின்ற அந்த கேளிக்கைக்காரர்களை
குகைகளுக்குள் காற்று போல் இக்
காதுகளுக்குள் கடவுளின் குரல் எதிரொலித்ததை,
வானம் போல் அவ் விழிகள்
என்னை முழுக்க மூடிக் கொண்டதை
எப்படி நான் நம்ப வைக்க முடியும்?
பிறகு நாற்பது பகல்களும் இரவுகளும்
சிங்கங்களின் கர்ஜனைக்கும்,
பசுக்களின் உக்காரத்திற்கும் இடையில்
கடும் மழையின் ஓயாத சப்தம் மட்டுமே
எங்களைத் தொடர்ந்தது.
மழை ஓயும் வரை
மேகங்களில் வானவில் தெரியும் வரை
கடவுள் கூட மவுனமாகவே இருந்தார்.
இப்போது நான் மரணப்படுக்கையில் இருக்கிறேன்.
செல்வாக்குடன் உள்ளேன் சந்ததி பெருகி;
என் விலங்குகளும் பெருகி.
அவை தம்மையே பரிகசித்துக் கொண்டும்
ஒன்றையொன்று பரிகசித்துக் கொண்டுமுள்ளன.
வெள்ளப் பெருக்காய் உள்ளது மண்ணில்
அல்லவர்கள் குருதி;
நல்லவர்களின் குருதியும்.
இன்று நான் அதிசயிக்கிறேன்:
அத் தீரச் செயல் எதற்காக? நான்
கேட்ட குரல் உண்மையிலே கடவுளுடையதா?
என்னைப் பரிகசித்தவர்களின் நகைப்பு
நான் நிராகரித்த ஓர் உண்மை போல்
துரத்துகிறது என்னை.
யார் சரி, புகார்களில்லாமல் மாளுமவர் ஊழிற்கு
இணங்கிய அவர்களா அல்லது
பாவிகளின் தலைமுறைகளை விளைவித்த நானா?
யாருடையது உண்மையான அர்ப்பணிப்பு,
உண்மையான அடக்கம்?
இந்த ஐயத்துடனே இறந்து போவேன் நான்;
இதுவே நான் உமக்கு அளிக்க வேண்டியதெல்லாம்.
மனிதகுலத்தை விசுவாசிகள் காப்பாற்றியிருக்கவில்லை.
ஐயப்படுபவர்களே காப்பாற்றியிருக்கின்றனர்.
*குறிப்பு : நோவாவின் கதை பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் (Genesis, Chapters 6,7,8,9) உள்ளது
Translated from Malayalam by the Poet
-K.Satchidanandan
குறிப்பு: கே. சச்சிதானந்தன்: புகழ் பெற்ற மலையாளக் கவிஞர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், இதழாசிரியர். இவரின் கவிதைத் தொகுப்புகள் முப்பதுக்கும் மேற்பட்டவை. மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகள் பதினைந்துக்கும் மேற்பட்டவை. சாகித்திய அகாதெமி விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மலையாளத்திலிருந்து கவிஞராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளிலிருந்து இவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Source: The Tree of Tongues, An Anthology of Modern Indian Poetry Edited by E.V.Ramakrishnan, Indian Institute of Advanced Study, Rashtrapatinivas, Shimla 1999
மிக சரளமான மொழி பெயர்ப்பு. சச்சிதானந்தனின் மூலக் கவிதையை படித்த நிறைவு ஏற்பட்டது. நன்றி.