குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்

இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும்- அத்தியாயம் -17

ஆசிரியரின் முன்குறிப்பு:

முன்னணியிலுள்ள ஒரு சிந்தனையாளர், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.)மிக்க செல்வாக்கு பெற்றவரும் அதனாலேயே தற்போது ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதா கட்சியின் மதிப்பிற்குரியவருமான, குரு கோல்வால்கர் எழுத்துகளை கூர்ந்து ஆய்வு செய்வதற்காக நேரம் ஒதுக்க முற்பட்டது அறிதிறன் உலகில் அதிசயமானதும் ஆரோக்கியமானதும் ஆகும். ஆனால். அவ்வாய்வில் உள்ள விரிசல்களை நிவர்த்தி செய்ய இவ்விளக்கம் தேவைப்படுகிறது.

பாகம் 1

ராமச்சந்திர குஹா அவரது பத்தியில்,” மூலத்தைப் பற்றி ஒரு கேள்வி: ஆர்.எஸ்.எஸ்ஸின் புனிதமற்ற புனித புத்தகம்” (A question of sources: The unholy holy book of the RSS)என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை (The Telegraph 17 September 2016) ஹிந்து தேசியத்தின் கருத்தியல் அறிக்கையாகக் கருதப்படும் குரு மாதவ் சதாஷிவ் கோல்வால்கரின் எண்ணக்குவியல்(எ .கு.) (Bunch of Thoughts) என்ற புத்தகத்தின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி எழுதப்பட்டதாகும். ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர் கேஷவ் பாலிராம் ஹெட்ஜ்வார் 1925ல் இறந்த பின் காசி ஹிந்து பல்கலை கழகத்தில் உயிரியலாளராகத் தேர்ச்சி பெற்ற கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸின் தலைமை வழிகாட்டியாக 1973ல் இறக்கும் வரை பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ். இந்து சமூகத்தில் விரிவடைவதற்காக அனைத்திந்து சமயப் பணித்தளம், தொழிற்சங்கம், மாணவ மன்றம், பழங்குடியினரின் நலத்திற்கான வலையமைப்பு, அரசியல் கட்சி ஆகிய தனித்திறனுடைய பகுதிகளை ஆர்.எஸ்.எஸ்ஸில் உருவாக்கினார். பாரதீய ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பிப்பதில் கோல்வால்கருக்கு விருப்பமே இல்லை. ஆனால், இந்து மகா சபா, காந்தியின் மரணத்திற்கு பின் மீண்டும் எழ முடியாதபடி படுத்துவிட்டதால் வேறு வழியின்று ஏற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது. இதை நியாயப்படுத்த “வீடு என்றாலே கழிவறையும் தேவைப்படுகிறது” என்று கூறினாராம். 1951ல் ஆரம்பித்த இக்கட்சி 1977ல் பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஜனதா கட்சியாக மாறியது. 1980ல் தற்போது ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதா கட்சியாக மாறியது. இப்புத்தகத்தின் தலைப்பிற்கு காரணம் நேரு அவர்களின் புத்தகமான பழைய கடிதக் குவியல் (A Bunch of Old Letters) என்பதாகும்.

ஹிந்து தேசீயத்தில் புத்தகங்களின் இடம்

குஹா ஆர்.எஸ்.எஸ்ஸில், புத்தகங்களிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என தவறாகப் புரிந்து கொண்டுள்ளதால், அவருடைய கணிப்பும் தவறாக அமைந்து விட்டது. . கோல்வால்கரின் புத்தகம்தான் பா.ஜ .க. வின் அரசியல் கொள்கைகளை நிர்ணயிக்கிறது எனும் ஊகம் சமயசார்பற்றவர்களின் கற்பனை. பா.ஜ.க. ஆர்.எஸ்.ஸின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்து பல காலமாகி விட்டது. பா.ஜ .க. வின் அங்கத்தினர்கள் ஆர். எஸ்.எஸ் காரர்களல்ல. பா.ஜ.க. வில் உள்ள ஒரு சில ஆர்.எஸ்.ஸினரும் கோல்வால்கரின் புத்தகத்தைப் படித்தவர்களல்ல. ஹிந்துக்களின் கவனிப்பு நேரம் குறைவாக உள்ளதால் (ஹிந்து அறிவாளிகளே வருத்தப்படும் விவரம்) எ .கு. போன்ற கனமான புத்தகங்களின் மேலுள்ள ஆர்வமும் குறைவானதே. சீனர்கள், வடக்கு ஐரோப்பியர்கள், யூதர்கள் மட்டுமே இத்தகைய புத்தகங்களை ஆழ்ந்து படிப்பதில் ஆர்வர் காட்டுகின்றனர். அங்கும் இவர்கள் சிறுபான்மையினரே. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஒருவரிடம் ஒரு புத்தகத்தை நீட்டினால், இதிலுள்ள விவரங்களை சிறுகுறிப்பெடுத்து தர முடியுமா என்ற கேள்விதான் வரும். இந்நிலையில், ஹிந்துக்களின் தற்போதைய உணர்வெழுச்சிக்கு ட்விட்டர், இணையதள கருத்தரங்குகள்(Webinar) போன்ற நவீன செய்தித் தொடர்புகள் பக்கபலமாக உள்ளன என்பது வரவேற்புக்குரியது.

புத்தகங்களைப் படிப்பதில் விருப்பமில்லாதவர்களில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸினர். இதற்கு வரலாற்றுக் காரணமும் உணர்வுபூர்வ காரணமும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர் ஹெட்ஜ்வார், சுதந்திர போராட்ட சமயத்தில் , வங்காள புரட்சிப் படையில் இருந்ததால் அங்கிருந்த ரகசிய முறைகளை கையோடு கொண்டு வந்து விட்டார். புரட்சிக்காரர்கள் போலவே ஆர்.எஸ்.எஸ்ஸினரும், தங்கள் ரகசிய திட்டங்களை எழுத்து மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் அது போலீசார் கையில் அகப்பட வழியுண்டு என்ற பயத்தால், நேரடியாக சொல்வதற்காக அடிக்கடி பயணத்தை மேற்கொள்வர். ஓரிடம் விட்டு மற்றோரிடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர் ஒருவரின் மனைவி, இதை அவர்கள் பெருமிதமான காரியமாக எண்ணுகின்றனர் என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் எ.கு.லில் உள்ள சில நல்ல பகுதிகளை அவர்களுடைய மேலதிகாரிகளின் உரைகளைக் கேட்டே தெரிந்து கொண்டவர்கள். குஹாவின் முடிவுகளுக்கு காரணமாயுள்ள கடினமான பகுதிகள் இப்புத்தகத்திலுள்ளவை என்பதை அறியாதவர்கள். இது கத்தோலிக்க விவிலியம் போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாத பகுதிகள் குழுவின் காதையே எட்டாது. ஞாயிறு உரைகள் பக்தர்களின் மனதிற்கு உவந்ததாகவே இருக்கும்.

தற்போதைய பா.ஜ. க. புத்தகங்கள் 30 வருடங்களுக்கு முன்னிருந்தவையிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஹிந்துத்வம் குறைவாகவும் மதசார்பற்ற பகுதிகள் அதிகமாகவும் உள்ளவை. பா.ஜ.க. வின் பிரசங்கங்களில் கோல்வால்கருக்கு பிரியமான “ஹிந்து ராஜ்ஜியம்”. என்ற சொற்றொடரை கேட்க முடியாது. காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற தேசியத்திலிருந்து இந்தியாவை பிளக்கும் சக்திகளோடு இணைத்துக் கொண்டு விட்டது. பா.ஜ.க. வோ ஹிந்து தேசியத்திலிருந்து மதச்சார்பற்ற தேசியத்திற்கு மாறி விட்டது. ஆர்.எஸ்.எஸ். அந்த அளவிற்கு மாறவில்லை. கோல்வால்கர் அருகில்தான் உள்ளது. ஆனால் கோல்வால்கரின் வழிபாட்டிற்கு அவரது எ. கு. புத்தகம் நிச்சயமாக காரணமல்ல. ஆர்.எஸ்.எஸ், கோல்வால்கரை மதிக்கும் அளவிற்கு அவரது எண்ணங்களையும் கருத்துக்களையும் மதிப்பதில்லை. . குஹாவை போன்ற மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் இதை அர்த்தமற்றதாக நினைக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

“நாம் அல்லது நமது நாடு “ (We, or Our Nationhood Defined)

குஹாவின் கட்டுரை, கோல்வால்கரைத் தாக்கி எழுதப்பட்ட மோசமான கட்டுரைகளில் ஒன்றல்ல. அத்தகைய கட்டுரைகளில், எ .கு.(1966) இடம் பெறாது.அவர் 1939ல் முதன் முதலாக எழுதிய சிறிய புத்தகம் ’நாம் அல்லது நமது நாடு’ என்பதுதான் இடம் பெற்றிருக்கும். இந்துக்கள் எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சவால்களை பற்றிய அவரது கருத்தியல் சிந்தனை. அதிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் இரன்டு பகுதிகள் தான் இப்புத்தகத்திற்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்தன. ஒரு பகுதி கோல்வால்கர் நாஜி ஜெர்மனியை ஆதரித்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாக உபயோகிக்கப்படுகிறது.

இப்பகுதியை, ஆசிரியர் இப்புத்தகம் எழுதப்பட்ட காலம் போன்ற பல கோணங்களிலிருந்து அலசியதில் (One chapter each in the Saffron Swasthika 2001 and Return of Swasthika 2006 or online at https://www.academia.edu /14793753/Disowning Golwalkars_We), இந்துத்துவத்தை சாடும் புத்தகங்களில் காணப்படும் இக்குற்றச்சாட்டு மிகப் பலவீனமானது என்பது தெரியவருகிறது என்கிறார். யூத எதிர்ப்புதான் நாஜி கட்சியின் முக்கிய கொள்கை. ஆனால் கோல்வால்கர் யூதர்களைதான் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமான முன்மாதிரியாக இப்புத்தகத்தில் விவரித்துள்ளார். நாஜியினரின் ராணுவத்தன்மையை பற்றிக் கூறும்போது, ஜெர்மானியர்கள் மெச்சி பேசும் வீரத்திறனோடு ஒப்பிடும்போது ஹிந்துக்களின் முன்னோடியான முனிவர்களின் அமைதியான கம்பீரம் மேலானது என்று எழுதியுள்ளார். தற்கால விவாதங்களுக்கு இவ்விளக்கம் அனாவசியம் என்றாலும் பொய் பேசும் மதச்சார்பற்றவர்களும் இந்தியாவை கண்காணிக்கும் மேலை நாட்டினரும் எந்த அளவு கீழிறங்குகிறார்கள் என்பதற்கு இது உதாரணம்.

இப்புத்தகத்தின் மற்றொரு பகுதி தற்கால அரசியலோடு சம்பந்தப்பட்டது. முஸ்லீம்களும் கிருத்துவர்களும் இந்துக்கள் அல்ல; இந்நாட்டின் விருந்தினர்கள் மட்டுமே. தகுந்த பாதுகாப்பும் நேர்மையாக வாழ்வதற்கும் உறுதி அளிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மறுபடியும் ஹிந்துக்களுடன் ஒருங்கிணைய வேண்டும் அல்லது வெளிநாட்டினராகத்தான் வாழ வேண்டும். எவ்வித குடியுரிமையும் எதிர்பார்க்கக் கூடாது என்று எழுதியுள்ளார். 1948லேயே இப்புத்தகத்தின் வியாபாரம் நிறுத்தப்பட்டு விட்டது. கோல்வால்கர் இப்புத்தகம் பக்குவம் இல்லாத ஒன்று எனக் கூறி இதன் மறுபதிப்புக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். பெரும்பான்மையான ஆர்.எஸ்.எஸ். குழுவினர் இப்புத்த்தகத்தில் ஒரு வரியை கூட படித்திருக்க மாட்டார்கள். இப்புத்தகத்தில் உள்ளவற்றிற்கும் ஆர்.எஸ்.ஸிற்குமே ஒரு சம்பந்தமும் இல்லை. அவ்வாறிருக்க, பா.ஜ.க.வை இதிலிழுக்க வேண்டிய தேவையேயில்லை.

பின் ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல் இந்த புத்தகத்திற்காக ஏன் பழி சுமத்துகிறார்கள்? இதன் காரணம் 2006ல், கிட்டத்தட்ட்ட 50 வருடங்களுக்கு முன்னரே மறைந்து போன இந்த புத்தகத்திற்கும் ஆர்.எஸ்.எஸிற்கும் இனி சம்பந்தம் இல்லை என்ற அவர்களது அறிக்கைதான். அதோடு நில்லாமல், இப்புத்தகத்தின் ஆசிரியர் கோல்வால்கர் அல்ல; அவரது எண்ணங்களையும் இப்புத்தகம் பிரதிபலிக்கவில்லை என்ற தவறான செய்திகளை சேர்த்து அறிவித்ததே மதச்சார்பற்றவர்களுக்கு தீவனமாக அமைந்து விட்டது.

எண்ணக்குவியல் (Bunch of Thoughts)

இப்புத்தகம்தான் பெரும்பான்மையான ஆர்.எஸ்.ஸினரின் கருத்து உருவாக்கத்திற்கு அடிப்படை. இதோடு போட்டியிடக்கூடிய ஒரே புத்தகம், தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் “ஒருங்கிணைந்த மனிதநேயம்”(Integral Humanism) என்ற ஜன் சங், பா.ஜ.க. வினரின் அதிகாரபூர்வ சித்தாந்த புத்தகம். உண்மையாக சொல்லப் போனால், பா.ஜ.க.வை விமரிசிப்பவர்கள் இந்த புத்தகத்தைதான் கையில் எடுக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க.வைப் பற்றிய எந்த பதிவுகளிலும் உபாத்யாவின் புத்தகத்தை குறிப்பிடுவதே இல்லை. எ .கு., பா.ஜ.க.வின் பழங் காவலர்களின் வேதநூல். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் வளர்ந்தவர்கள். பெரும்பான்மையான பா.ஜ .க. அங்கத்தினர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர்களல்ல என இங்கு முன்பே குறிப்பிடப்பட்டது.

பா.ஜ .க. வின் நிர்வாகக் கொள்கைகளை எடை போட எ .கு. உதவாவிட்டாலும், வரலாற்றுத் தொடர்பு இருப்பதால், ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய புத்தகம். இப்புத்தகத்திலுள்ள தவறுகளை பா.ஜ . க.வின் மேல் சுமத்தும் மதச்சார்பற்றவர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு மயங்காமல், குஹா கண்டு பிடித்துள்ள ஹிந்துத்துவ முத்துக்களை மட்டும் பார்க்கலாம்.

கோல்வால்கர்தான் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த தலைவராக விளங்குகிறார். தாடியுடன் கூடிய அவரது முகப் படம்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காணப்படுகிறது. தொன்மைமிகு ஆர்.எஸ்.எஸ்.வாதி ,பிரதமர்.நரேந்திர மோடி, கோல்வால்கரை வெகுவாகப் போற்றுபவர் என்பதும் உண்மையாக இருக்கக் கூடும். அதனாலேயே குரான் இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு எ .கு. பா.ஜ.க.விற்கு முக்கியம் என்பது இவ்வாதத்தை அளவுக்கு மீறி நீட்டுவதாகும்.

முதலாவதாக, ஆர்.எஸ்.எஸின் செல்வாக்கு பா.ஜ.க.வில் அதிகமில்லை. நாளுக்கு நாள் மங்கி கொண்டே வருகிறது. இரண்டாவதாக, இஸ்லாம் குரானின் மதம். குரான் வழிகூறும் மதம். குரானின் சொற்களுக்கு மண்டியிடும் மதம். ஹிந்து மதம் குரானைப் போன்று ஒரு புத்தகத்தை சார்ந்ததல்ல. பல நூல்களை உள்ளடக்கிய மதம். ஹிந்துத்துவாவை சேர்ந்தவர்களுக்கு இது இன்னுமே பொருந்தும். கோல்வால்கர் புத்தகமும் கையுமாக இருந்தவரல்ல. அதை எதிர்த்தவர். தொண்டர்கள் யாராவது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் உடனே அதை கண்டிப்பவர். மற்றெல்லாரையும் விட, கோல்வால்கர்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அறிவுசார்வு எதிர்ப்பிற்கு முக்கிய காரணம். அதன் விளைவுகள் என்ன? பொது விவாதங்களில் இவர்களைப் பார்க்கவே இயலாது. நம்ப முடியாத விவரங்களுக்கு முட்டாள்தனமாக சொந்தம் கொண்டாடுவார்கள். உதாரணமாக ஹிந்து முன்னோர்கள் விமானத்தில் பறந்தார்கள் என்பது போன்ற வாதங்களை முன்வைப்பார்கள். . நேருவியர்களும் மார்க்சிஸ்டுகளும் கலாச்சாரத்துறையையும் கல்வித்துறையையும் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் வரை பார்த்துக் கொண்டு வாளாவிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, கோல்வால்கரின் புத்தகங்களுக்காகவோ கொள்கைகளுக்காகவோ நம்பத்தகுந்த வகையில் வாதமிடும் திறனற்றவர்களாக நிற்கின்றனர்.

தேசியம்

கோல்வால்கர் ஒரு தேசியவாதி. இன்றுவரை அவர் முன் நடத்தி சென்ற மார்க்கம்தான் ஹிந்து தேசியம் என்று அழைக்கப்படுகிறது. ஹிந்து மதச்சார்பற்றவர்கள் திரித்துக் கூறுவது போலல்லாமல், ஆர்.எஸ்.எஸ். சுதந்திர போராட்டத்தின் ஒரு வேராக இருந்தது.. 1925ல், காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவாகும். இக்குழுவின் பெரிய சகோதரியான ஹிந்து மஹா சபா(1922) காங்கிரஸ் கட்சிக்கு திசை காட்டுமளவிற்கு அதன் முக்கிய பகுதியாக இருந்தது.

இந்த காலகட்டத்தில், குறிப்பாக 1920 களில் தேசியவாதம் என்பது மனதிற்கும் அறிவிற்கும் பிடித்தமானதாக இருந்தது. காலனிய ஆதிக்கத்தின் கீழ் படும் அல்லல்களும் முதல் உலகப்போருக்கு பின் உலகளாவிய தேசியப் பற்றும் இந்தியர்களையும் தொற்றிக் கொண்டதில் அதிசயமில்லை. அது மதிப்பிற்குரியதும் கட்டாயமானதாகவும் இருந்தது. விளையாட்டு வீரர்களும் பாடகர்களும் கூட ராணுவப் படையினரை போலவே உடையணிந்து மைதானத்திலோ மேடையிலோ அணிவகுப்பாக நுழைவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ்.குழுவினரும் இதைத்தான் செய்தார்கள். உணர்ச்சிகரமான விஷயங்களில் தேசியவாதம் வேலை செய்கிறது என்பது உண்மை. நாடாளுமன்றத் தேர்தல்களில், தேச பிரச்சினைகள் எதிரே பிரிவினையை உண்டுபண்ணும் ஜாதி, இன, பிராந்திய பிரச்சினைகள் போன்றவை மக்களால் பின்தள்ளப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் தேசிய வாதமும் தோல்வியடைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டுகள் கழிந்த பின் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. ஆனால் நாட்டின் சுதந்திரம் அவற்றில் ஒன்றல்ல. ஆசிரியர் மற்றொரு இடத்தில் கூறியுள்ளது போல் தேசியம் ஹிந்து பிரச்சினையல்ல.

எனவே, இஸ்லாமிய மன்னர்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததால்தான் ஹிந்துக் கோயில்களை இடித்தார்கள் போன்ற ஆர்.எஸ்.எஸ். துண்டுப் பிரசுரங்கள் சொல்வது தவறு. அவர்கள் முஸ்லீம்கள் அதனால்தான் கோவில்களை இடித்துத் தள்ளிய பின் மசூதிகளை அங்கே எழுப்பினார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம் என்ற சொல்லை இப்பொழுதெல்லாம் உபயோகிக்கிப்பதில்லை. அதே போல் கர் வாபஸி (வீடு திரும்புதல்) சம்பந்தப்பட்ட விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து மதத்திற்கு திரும்புமாறு கிருத்துவர்களை அழைப்பதற்கு கூறும் நியாயம் கிருத்துவம் மேற்கத்திய வழிக்கு இட்டு செல்கிறது என்பதாகும். மேற்கத்திய வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் கிருத்துவர்களாக தொடரலாம் என்று அர்த்தமா? இதுவா பிரச்சினை? ஹிந்துக்களே மிக வேகமாக மேற்கத்திய நாகரிகத்திற்கு தாவிக் கொண்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் இதனாலேயே ஹிந்துக்களில்லையா? ஆர்.எஸ்.எஸ்ஸின் சொல்லிற்குப் பதிலாக, கிருத்துவ மத போதகர்கள் மேற்கத்தியம் கலக்காத கிருத்துவ மாற்றத்தை தொடங்கியுள்ளனர். இந்திய கிருத்துவர்கள் வேட்டியுடுத்தி இந்துக் கடவுள் சிலைகளை உடைப்பது ஆர்.எஸ்.எஸுக்கு ஒப்புதலாக இருக்குமா? ஹிந்து மதப் பரிமாணம் இல்லாத தேசியம் குருட்டுத்தனமானது என்பதை ஆர்.எஸ்.எஸ். ஏன் புரிந்து கொள்ளவில்லை?

ஹிந்து ராஜ்யம் (Hindu Rashtra)

சுதந்திரத்திற்கு முன் இருந்த ஹிந்து ராஜ்ஜியம் எப்போது இந்தியாவாக மாறியது? கோல்வால்கர் பகுப்பாய்வு ஹிந்துக்கள் மட்டுமே இந்தியர்கள். மற்றவர்கள் எல்லோருமே இந்தியாவில் விருந்தினர்கள்தான் என்கிறது. ஆர்.எஸ்.எஸ்., ஜனசங், இவற்றின் பழைய ஆவணங்கள் இந்து ராஜ்ஜியம் என்றே குறிப்பிடுகின்றன.இதற்கு ஆதாரம், கோல்வால்கரின்,”நாம்” புத்தகத்திலிருந்து அடிக்கடி சுட்டிக் காட்டப்படும் மேற்கோளான “சிறுபான்மையினருக்கு எவ்வித குடியுரிமைகளும் கிடையாது “ என்பதே ஆதாரம். ஆனால், பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இரண்டுமே ஹிந்து என்ற வார்த்தையை முழுவதுமாக தவிர்த்து விட்டு பாரதீய(இந்திய),ராஷ்ட்ரிய(தேசிய) போன்ற சொற்களை உபயோகிக்க ஆரம்பித்து விட்டன. இதன்மூலம், “அடையாள அரசியலிலிருந்து மதச்சார்பற்ற அல்லது அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் தேசியவாதிகளாக மாறிவிட்டோம்” என்பதை அறிவிக்கும் தளத்தை உருவாக்கி விட்டன.

இதை பா.ஜ .க. வெளிப்படையாகவும், ஆர்.எஸ்.எஸ். சூசகமாகவும் தெரிவிப்பது போல் , இந்திய முஸ்லீம்களை எல்.கே. அத்வானி அவர்கள், 1990 களில் அயோத்தி பிரச்சினை சமயம், திரும்பத்திரும்பக் கூறியது போல் “முகம்மதிய ஹிந்துக்கள்” என்றே அழைக்கிறது. இந்திய முஸ்லீம்களை இவர்கள் கேட்கவும் இல்லை; அவர்கள் இதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. இதன் காரண விளக்கம், கோல்வால்கருக்கு பின்,” இந்தியர்கள் ,ஹிந்துக்கள் என்ற இரண்டுமே ஆர்,எஸ்,எஸ்ஸை பொறுத்தவரை ஒரு பொருட்சொற்கள்தான் என்ற புதிய கோட்பாடேயாகும்.

ஒரு காலத்தில் ஹிந்து என்ற சொல் இந்திய ஹிந்துக்களை இந்தியர்கள் என்ற வகையிலிருந்து தனிப்படுத்துவதாக இருந்தது. ஆனால் சில பத்தாண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ். அகராதியில் ஹிந்து என்ற தனிச்சொல் இந்தியர் என்ற சொல்லாக சுருங்கி விட்டது. நிலப்பரப்பை குறிக்கும் ஒரு சொல்லை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சுட்டிக் காட்டும் சொல்லாக திரிக்கும் எண்ணத்திற்கான விதையை , 1500 வருடங்களுக்கு முன்பு பாரசீகர்கள் இந்து என்ற சொல்லை உபயோகப்படுத்திய முறைதான் விதைத்தது. ஆனால், முகம்மதியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தவுடன், இச்சொல்லை இந்தியாவிலுள்ள உருவ வழிபட்டினரான இந்துக்களை அடையாளப்படுத்துவதற்காக உபயோகிக்க ஆரம்பித்தனர். யூதர்கள், கிருத்துவர்கள்,முஸ்லிம்கள் போல் ஹிந்து என்ற சொல் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே சுட்டிக்காண்பிக்கும் ஒரு சொல்லாக மாறியது. வரலாற்று அடிப்படையில் உருவான இந்த அர்த்தத்தை மாற்றி வேறு புதிய அர்த்தத்தை கொடுக்க முற்படுவர்கள் அதற்கான நியாயத்தை முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ்., பல பத்து வருடங்களாக கிருத்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் ஹிந்துக்கள்தான் என்று கூறும் அபத்தத்தை எவ்வாறு நியாயப்படுத்தும்?

குஹா அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள நிபுணர்கள் ஏன் இந்த முக்கியமான சொல்லில் ஏற்பட்டுள்ள மாற்று அர்த்தத்தை கவனிக்கவில்லை? பள்ளி திட்ட உரிமையை ஹிந்து சமூகத்திற்கு மட்டும் மறுக்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் ஹிந்துக்களிடம் மோடி அரசாங்கம் பாராமுகமாக இருப்பதற்கு இதுதானோ காரணம்?. பா.ஜ.க., ஜனசங் கட்சியைப் போல் ஒரு ஹிந்து கட்சியாக இருந்திருந்தால், இந்துக்களுக்கு நிராகரிக்கப்படும் உரிமைகளுக்காக களத்தில் என்றோ இறங்கி இருக்கும். ஆனால், இப்போதிருக்கும் மனநிலையில் இது சாத்தியமில்லை. ஏனென்றால் ஹிந்துக்களுக்கு எதிரானது என்றால் இந்தியர்கள் அனைவருக்குமே எதிரானது என்ற மாறுபட்ட கருத்து கட்சியினரிடம் ஊறி விட்டது.

ஒரு அரசாங்க ஆலோசகர், வாஜ்பாயியின் அரசாங்கம் ஹிந்து பிரச்சினைகளை கவனியாது சூடு போட்டுக் கண்டதை பார்த்து பாடம் கற்றுக் கொண்ட மோடி அரசாங்கம் பானை எப்போதும் கொதி நிலையில் வைத்திருப்பதில் கவனம் காட்டுகிறது என்று கூறினார். அவ்வப்போது, கொதி வந்த சில பதார்த்தங்களை தனது வாக்காளர்கள் முன் எறிகிறது.

உதாரணமாக, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரங்களை தாக்கியதன் மூலம் கட்சி விசுவாசிகளை தங்களிடம் தக்க வைத்துக் கொண்டதை கூறலாம். ஆனால் ஹிந்துக்களின் முக்கியமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகின்றது. பா.ஜ .க. அரசாங்கத்திற்குப் பிரியமான சம உரிமை சட்டம் கூட மிக முக்கியமானதல்ல. ஹிந்துக்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது, அனைவருக்கும் இணக்கமானதும், மதச்சார்பற்றதும், ஹிந்துக்களை மட்டும் பாரபட்சப்படுத்தும் சட்டங்களையும் அரசியல் அமைப்புச்சட்டத்தில் உள்ள தடைகளையும் முழுவதுமாக நீக்கும் கோரிக்கைதான். ஆசிரியர் சுட்டிக்காட்டுவதை தவறென்று அரசாங்கம் நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவரை கண்டனம் செய்வது அர்த்தமற்றது.

மேலும், ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க. இரண்டுமே இந்த மாற்றத்தைச் செய்ததனால், கோல்வால்கரின் மையக் கருத்தான ஹிந்து ராஜ்ஜியம் என்பதை அடியோடு அகற்றி விட்டன. காலம் காலமாக, குப்த, சோழ சாம்ராஜ்யங்களிலும் அதற்கு முன்பும் கூட, மன்னர்களின் முடிசூட்டு விழாவில் இந்து சடங்குகள்தான் இடம் பெற்றன. வேத, புராண பாரம்பரியங்களை கடைபிடிப்பது சுலபமாக இருந்தது. அதனால், ஹிந்து ராஜ்யம் என்ற கருத்தே தேவையற்றதாக இருந்தது. மேலும், ஹிந்து சமுதாயம் மன்னர்களின் சமுதாயத்தைதான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் பன்முகத்தன்மை கொண்டதாகவே இருந்து வந்தது. இந்த பரந்த மனப்பான்மையைதான் மதச்சார்பற்ற தன்மை (Secular) என மாற்றி விட்டனர். இதன் மூலப் பொருள், அரசாங்கமும் மதங்களும் தனித்தே வேலை செய்ய வேண்டும் தலையீடு கூடாது என்பதுதான். மூலப் பொருளை தவிர்த்து புதிய பொருளைதான் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஏற்றுக் கொண்டு விட்டது. 1990லியே ’ஹிந்து இந்தியா, மதச்சார்பற்ற இந்தியா’ என விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டது. எனவே, கோல்வால்கர் பின் வந்த ஆர்.எஸ்.எஸ். பிரகாரம், ஹிந்து ராஜ்யம் என்பதும் மத சார்பற்ற ராஜ்யம் என்பதும் ஒன்றுதான். பின், ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து ராஜ்யம் என்பது தொலைவிலுள்ள இலக்கு என்று ஏன் கூறுகிறது? கோல்வால்கரின் ஹிந்து ராஜ்யத்திற்கும் தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஹிந்து ராஜ்யத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஆர்.எஸ்.எஸ், கட்சிக்குள்ளேயே தீவிரமாக விவாதித்து அதன் முடிவுகளை கட்சியின் அதிகார பூர்வமான தெளிவான வெளியீட்டாக கொண்டு வருமா? அதற்கான சாமர்த்தியம் கட்சியில் உள்ளதா?

இந்தியாவின் ஒருமைப்பாடு (India’s Unity)

கோல்வால்கர், ஜவஹர்லால் நேருவைப் போல், இந்தியாவை உருவாகிக்கொண்டிருக்கும் நாடாகக் கருதவில்லை. இந்தியாவை ஹிந்துக்களின் பாரம்பரிய சொத்தாகவே பாவித்தார். ‘ மேற்கத்தியர்கள் இறைச்சியை சமைத்து உண்ண ஆரம்பிக்கும் முன்னரே நாம் ஒரே நாடாகத்தான் இருந்தோம். ஒரு தாய் மக்களாகத்தான் இருந்தோம் ’ எனக் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய பல பதிப்புகளில் வேதம் கூறும் மாத்ருபூமி (தாய்நாடு) இந்திய துணை கண்டத்தைத்தான் குறிக்கிறது என்கின்றன.

இது உண்மையல்ல என்றாலும் ஒரு நீண்டகால நம்பிக்கை. வேதத்தை கூர்ந்து படித்தால் மாத்ருபூமி பிரயாகையிலிருந்துஆப்கானிஸ்தான் எல்லை வரை பரந்திருந்ததாக தெரிகிறது. வேத முனிவர்களில், அகஸ்தியர் மட்டுமே விந்திய மலைக்கு அப்பால் சென்றதாக தெரிகிறது. அதுவும் அவருடைய அரிய சாகசச் செயலே தவிர அது அவரது தாய்நாடல்ல. மகாபாரதமும் (கி.மு.1400) இந்த எல்லைக்குள்தான் நடந்தாகத் தெரிகிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் காலத்தில், இந்தியாவின் எல்லை ஓரங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்கள், மஹாபாரதத்தில் தங்கள் பெயரையும் இணைத்துக் கொண்டனர். இதன் காரணம் , மிக வேகமாக விரிவடைந்து கொண்டிருந்த வேத நாகரீகத்தைசேர்ந்தவர்களாக தங்களை காட்டிக் கொள்ள விரும்பியதுதான். இதற்காகவே, பல பிராம்மண குடும்பங்களுக்கு தங்கள் ராஜ்யத்தில் நிலத்தை தானமாக அளித்து அவர்கள் மூலம் தங்கள் வம்சத்திற்கு வேத பாரம்பரிய உரிமையை பெற்றனர்.

எனவே, ஆதிகாலத்திலிருந்தே இல்லாவிட்டாலும், 2000 வருடங்களுக்கு மேல் இந்திய துணைக்கண்டம் ஒற்றுமைத்தன்மை உடையதாக இருந்து வந்துள்ளது. எந்த ஒரு நாடும் இதற்கிணையில்லை. ஆகவே அரசியல் ரீதியிலும் இதை ஒருமைப்பாடுள்ள நாடாகத்தான் நியாயப்படுத்தவேண்டும். யாத்திரை போக்கு, பட்டிதொட்டிகளிலெல்லாம் ஒரே மாதிரியான காவிய புராண கதைகள், சுயக்கட்டுப்பாடுள்ள பிராம்மண குடும்பங்கள், இந்து மடங்களின் இருப்பு இவையெல்லாமே கலாச்சார ஒற்றுமையுணர்வை மக்களிடையே ஏற்படுத்தியது. இது அரசியலில் முழு ஒற்றுமையை உண்டுபண்ணவில்லை என்றாலும், மேல்மட்டத்தினர்தான் அதில் அக்கறை காட்டினர். அரசியல் எல்லை மாற்றங்கள் பொதுமக்களை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. ஒன்றிய அரசு ஒரு லட்சியமாகவே எப்போதும் விளங்கியது.

கோல்வால்கர், மக்களிடையே பொதுவாக நிலவிய உணர்விற்குத்தான் எழுத்து வடிவு கொடுத்தார். முற்காலம் எவ்வாறிருந்தாலும், இந்தியர்கள் தற்போது தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளனர். இது தேசியவாதம் அல்ல. தேசிய நேயம் எனலாம். நேருவிய பண்டிதர்கள், இந்தியா ஒரு தனி நாடல்ல; பல சமுதாயங்களின் கூட்டு என்ற வாதத்தை நிறுவ ஆயிரக்கணக்கான காரணங்களை கூறலாம். ஆனால் நெருக்கடி காலங்களில், இந்த சமுதாயங்கள் ஓற்றுமையாகவே வேலை செய்துள்ளன. 1962 சீனப் போருக்கு முன் தனித்த தமிழ்நாடு கோரிய திராவிட சமூகம் போர் சமயம் அதை கைவிட்டு மற்ற இந்தியர்களுடன் இணைத்துக் கொண்டது. இந்திய பாகிஸ்தான் சண்டையில் இந்தியாவின் வெற்றி, காங்கிரஸ் கட்சியை பதவியில் தக்க வைத்தது என்பது வரலாற்று உண்மை. இந்தியர்களின் சொந்த ஊர் பற்றுக்கும், சமூகப் பற்றுக்கும் சளைத்ததல்ல அவர்களது தேசப்பற்று.

‘ இந்து சமூகம் பல நிலைகள், வடிவங்கள் கூடியதும், பார்ப்பவர்களை கலக்க வைக்கும் அளவிற்கும் விரிவாக வளர்ச்சியடைந்த ஒன்றாகும். பலவிதமான வெளிப்பாடுகள் இருந்தாலும், இந்த சமூகம் நூலிழை போல் கோர்வையாகத்தான் இருந்து வருகிறது’ எனும் கோல்வால்கரின் நோக்கீடு அப்பழுக்கற்றதாகும். ஆனால் இது தேசியத்திற்கும் அப்பாற்பட்ட கலாச்சார அடையாளம் என ஆசிரியர் கூறுகிறார். ஆனால், குஹா இந்த நூலிழை என்னவென்று கோல்வால்கர் கூறவில்லை என்கிறார். அந்த நூலிழையின் பெயர் ஹிந்துத்துவம். இது தெளிவற்றதாகவும் அகண்டதாகவும் தெரிந்தாலும் இந்தியர்களின் அடையாள உணர்வை விளக்குவதற்கு போதுமானதாக உள்ளது..

(இரண்டாம் பாகம் பின் வரும் இதழில் தொடரும்)

Series Navigation<< அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்புகுஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.