குடிபெயரும் கதைகள்

‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ – சிறுகதைத் தொகுப்பு

மொழிபெயர்ப்பாளர்: நரேன்

மனித வரலாறென்பது குடிபெயர்தலின் கதைதான், ஒருவகையில். 

மனிதக் குடிகள் உருவாகியபோது அனைத்தையும் பகுக்கவும் வகுக்கவும் முறைகள் உருவாகின, உறவுகள் துவங்கி நில எல்லைகள் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டன. இவ்வரையறைகளின்மீது அமைப்புக்கள் உருவாகி வந்தன.  ஆழ்ஞானம் மதமாகியது புறஞானம் அறிவாகியது இடைப்பட்டது தத்துவமாக எஞ்சியது. கலைகள் இவற்றிலிருந்து உருவாகின. மொழி மனதின் வேகத்தில் விரிவடைந்தது. இவை அனைத்துமே எரிகுளம்புகள் வெளிவந்து உறைந்து பாறையாவதைப்போன்ற ஒரு சுழற்சியில் நிகழ்ந்தன, தொகுக்கப்பட்டு பண்பாடாகின. தனிமனிதன் குடும்பத்தில் இணைந்தான் குடும்பம் கிராமமாக, கிராமம் குடியாக, குடி அரசாகப் பேரரசாக விரிவடைந்தன. பேரரசுக்கள் உறைந்துபோன பண்பாடுகளை உட்கொண்டும் ஆட்கொண்டும்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அவை பொங்கியெழுந்து மீண்டும் உறைந்தன. குடிபெயர்தல் என்பது இடம்பெயர்தல் மட்டுமல்லவே. குடிபெயராத சமூகங்கள் இடம்பெயரும் நீராதாரங்களால் கைவிடப்படும் குட்டைகளைப்போல தேங்கிப்போகின்றன. வளர்ச்சிக்கு அடிப்படை என்றாலும் குடிபெயர்தல் பெரும் பதட்டத்தைத் தரக்கூடிய ஒரு மானுட அனுபவமே.

நரேன் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ள ‘இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்’ தொகுப்பு இத்தகைய பதட்டமும் குழப்பமும் வெளிப்படும் குடிபெயர்ந்தோரின் கதைகளாலானதாகும்.  மேலைப் பண்பாடு கொண்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்தோரின் கதைகள் இவை எனச் சொல்லலாம். குறிப்பாக அமெரிக்கா இங்கிலாந்து நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்களின் கதைகளை நரேன் தேர்ந்தெடுத்திருக்கிறார். இக்கதைகள் வழியே நாம் உலகை மேற்கு கிழக்கு என இரண்டாகப் பிரித்துவிட முடியும். ஒரு கதையைத் தவிர மற்றவை அனைத்துமே குடும்பங்களை, உறவுகளை மையமாகக் கொண்டவை. இது அவரது தேர்வில் இருக்கும் பொதுத்தன்மையா அல்லது குடிபெயர்ந்தவர்களின் ஆதாரப் பிரச்சனை குடும்பங்கள் அல்லது உறவுகள்தானா என்பது எஞ்ச்சும் கேள்வி. 

மேற்குலகம் குடும்ப அமைப்புக்கு முற்றிலும் எதிரானதும் அல்ல. அங்கே ஆழ்ந்த உறவுகள் இல்லை என்பதுவும் ஒரு மேலோட்டமான பார்வையே. நாம் நம்ப விரும்புவதைவிட மேற்கத்திய கலாச்சாரத்தில் ஆழமான, உண்மையான உறவுகளும், குடும்பத்தின் மாண்பினைப் போற்றும் மத, கலாச்சார அமைப்புக்களும் அரசியல் இயக்கங்களும் தீவிரமாகவே உள்ளன. தன் மணவாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொள்ளாத ஒருவர் அரசியலில் வெற்றி கொள்வது அங்கே மிகக் கடினம். ஆனால் கிழக்கில் அது ஒரு பொருட்டல்ல. அதே நேரம் மேற்குலகில் தனிமனித உரிமைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குடும்ப அமைப்புக்கு சவால்களை உருவாக்குகின்றன. இவை இரண்டுமே அதனதன் சாதக பாதகங்களைக் கொண்டவை. குடும்பம் அதன் மிக பாதகமான நிலையில் கொடூரமான அடக்குமுறையும் வன்முறையும் நிறைந்த அமைப்பாகிவிடுகிறது, தனி மனிதச் சுதந்திரம் அதன் மோசமான எல்லையில் அரசின்மைக்கும் ஒழுக்கமின்மைக்கும் சுய அழிப்பிற்குமே இட்டுச்செல்லலாம் . குடும்பம் அதன் சாதகமான எல்லையில்  ஒரு குழந்தை வளர்வதற்கான ஆகச் சரியான அமைப்பாக விளங்குகிறது. சீரான குடும்பங்கள் சீரான சமூகங்களையும் உருவாக்குகின்றன. தனிமனித விடுதலையின் சாதகமான எல்லையில் தனி மனிதன் எந்தக் கட்டுக்களும் இன்றி தன் முழுத்திறனையும் கொண்டு புதிய உச்சத்தை அடைய முடியும். குடும்பம் தனிமனிதன் எனும் இவ்விரு புள்ளிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருந்தாலும் அவற்றிற்கிடையே பெருந்தூரங்கள் எளிதில் உருவாகிவிட முடியும் என்பதை இக்கதைகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

இவற்றில் கிழக்கு மேற்கு என்ற பண்பாட்டுப் பிரிவை நாம் உருவாக்க முடியும் என்றாலும் திருப்பும்தோறும் வண்ணம் மாறும் ஒரு கலைடாஸ்கோப்பின் சுவாரஸ்யமும் இவற்றில் உள்ளன. முதல்கதையிலேயே இதைக் காணலாம். அமெரிக்காவில் குடியேறிய ஒரு சீனப் பெண்ணின் தந்தை ஒரு பெர்ஷியப் பெண்ணுடன் உரையாடுவதில் இக்கதை துவங்குகிறது. உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் உரையாடிக்கொள்கின்றனர். கதையில் சீனத் தந்தையின் திருமணத்திற்கு வெளியேயான நட்பு அல்லது காதல் அதற்காக அவர் செய்த தியாகம் அது அவரது குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒருபக்கமும் அவரது குடிபெயர்ந்த மகள் தன் முதல் திருமணத்தை முறித்துக்கொண்டு இரண்டாவது ஆண் நண்பரிடம் உறவாடிக்கொண்டிருக்கிறாள். அவள் முதல் திருமணத்தை முறித்துக்கொண்டதற்கான காரணம் அவளுக்குச் சீன மொழி சரியாகத் தெரியாது என்பது. ‘மொழி’ இத்தொகுப்பின் பல கதைகளிலும் தலையாய பிரச்சனையாக வருகிறது குறிப்பிடத்தக்கது. தாய்மொழி சரியாகத் தெரியாமல் போவது தாய்ப்பண்பாட்டிலிருந்து ஒருவரை அறுபடச் செய்துவிடுகிறதை இக்கதையும் குறிப்பிடுகிறது. (ஆயிரமாண்டு பிரார்த்தனைகள் – A Thousand Years of Good Prayers – by Yiyun Li– சீன- அமெரிக்கர்?)

இரண்டாவதுகதை உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச்செல்லும் ஒருவரின் கதை. நாட்டின் உட்பகுதியிலிருந்து துறைமுகத்தை நோக்கி தப்பியோடி வரும் ஒருவன் திக்கற்ற நிலையில் ஒரு அறிமுகமற்றவரின் (ஆப்ராஹீம்) உதவியைப் பெறுகிறான். கப்பலில் ஏற்றப்படும் பெட்டிகள் ஒன்றில் சுருண்டு அமர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். எல்லாவற்றிற்கும் அந்த அறிமுகமற்றவர் துணைபுரிகிறார். ஒரு அகதியின் அடிப்படைத் தேவை உயிர்வாழ்ந்திருத்தல்தான் பிற மதிப்பீடுகள் அவனுக்குப் பெரும் சுமைகள் என்று இக்கதையின் முடிவை எடுத்துக்கொள்ளலாம். இது சொல்லப்பட்டிருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது, அதிலும் ஒரு கதை அல்லது கரு உள்ளது. அகதியாய் வந்த தன் தந்தையின் கதையை ஆசிரியையாயிருக்கும் மகள் கல்லூரியில் சொல்கிறாள். அதன் மூலம் அவள் பெயர் பெறுகிறாள். (ஒரு நேர்மையான வெளியேற்றம் – An Honest Exit – By Dinaw Mengestu – எத்தியோப்பியா)

மூன்றாவது கதை இத்தொகுப்பின் தலைப்புக் கதையாக வந்திருக்கவேண்டிய கதை என்று சொல்லலாம். மிக நேர்த்தியாக எழுதப்பட்ட கதை. மாய யதார்த்தக் கூறுமுறை மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டது சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்தது. மகனுக்கும் தாய்க்கும் இருக்கும் பண்பாட்டு இடைவெளி இதன் சாராம்சம். மொழி வேறுபாடு ஒரு சீனப் பெருஞ்சுவற்றை இவர்களிடையே கட்டிவிடுகிறது. தன் பண்பாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கலையான ஆரிகமி மூலம் அவள் செய்யும் காகித விலங்குகள் அப்பெருஞ்சுவற்றைத் தாண்டிச் சென்றனவா என்பதை இக்கதை பேசுகிறது எனலாம். அந்தத் தாயின் பின்புலக் கதையும் அச்சிறுவனின் பண்பாட்டுக் குழப்பமும் நான் முன்பு சொன்ன கிழக்கு மேற்கின் பாதகமான அம்சங்களைத் தொட்டுச் சென்றிருக்கின்றன. வடிவ நேர்த்தியிலும், ஆழத்திலும் அழுத்தத்திலும் இது சிறந்த கதையாக வந்துள்ளது. (காகித மிருக சாலை – The Paper Menagerie – Ken Liu – சீனா)

நெமேஷியாவை ஒரு மனவியல் கதையாக வகைப்படுத்தலாம். தன் வீட்டை விட்டு உறவினர் வீட்டில் சென்று வளரும் ஒரு இளம்பெண்ணின் கதை. குடியேற்றத்தின் குறியீடாகவும் இதை எடுத்துக்கொள்ள முடியும், ஆனாலும் இதை வளர்பருவ மனவியல் கதையாக மட்டுமேகூட வாசிக்க முடியும். கதையில் வரும் பொம்மை மெக்சிக்க கத்தோலிக்கச் சடங்குகள் அவர்கள் குடும்பங்களை ஒருவர் ஒருவர் தாங்கும் தன்மைகள் என கதையில் பல சுவாரஸ்யமான சரடுகள் உள்ளன எனினும் ஒரு சைக்கோ திரில்லருக்கான தன்மையுடனும்  இது எழுதப்பட்டுள்ளது.

(நெமேஷியா Nemecia – KIRSTIN VALDEZ QUADE – மெக்சிக்கோ)

இத்தொகுப்பின் தலைப்புக்கதையான இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் ஆப்ரிக்கப் பகடித்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு உறவுச்சிக்கலின் கதைதான். இக்கதையைப் படிக்கையில் ஆப்ரிக்க பண்பாட்டிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் ஒரு நெருக்கம் இருப்பதை உணர முடிகிறது. துக்க வீட்டில் நியாயம் பேசும் பெண்களின் ஆர்ப்பரிப்புக்கள் நினைவில் நிற்கின்றன, கூடவே ஏமாந்துபோன மனைவியின் ஏகாந்தமும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. (இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம் – Let’s Tell This Story Properly – Jennifer Nansubuga Makumbi – உகாண்டா)

அமைதிப்பிரதேசத்தின் முயல் மாய யதார்த்தத்தின் சாயலுடன் எழுதப்பட்ட கதை. ஒரு தீவிரவாதத்திட்டத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதை முட்டையிடும் முயல் பாத்திரம் அக்கதைக்கு மாய யதார்த்தத் தன்மையைத் தருகிறது. அரசியல் குழப்பச் சூழல்களின் சித்திரத்தையும் அதில் அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்பது கதையின் மையம் (அமைதிப்பிரதேசத்தின் முயல் – The Green Zone Rabbit –  Hassan Blasim – ஈராக்)

இஸ்லாமிலிருந்து கிறீத்துவத்திற்கு மதம் மாறி ஈரானிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பெண் சலிப்புற்று தாய்லாந்துக்குச் செல்கிறாள். இன்னொரு ஒரு கெலைடஸ்கோப் கதை. பண்பாட்டு வேறுபாடுகளின் வழியே உறவைத் தொலைப்பதும் பெறுவதும் எனக் கதை செல்கிறது. (பிராவோவிலிருந்து ஒரு சவாரி – A Ride Out of Phrao – Dina Nayeri – ஈரான்)

டேனியேல் அலக்ரானின் ‘அரசன் எப்போதும் மக்களுக்கு மேல் நிற்பவன்’ என்கிற கதை கிராமத்த்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் ஒருவனின் கதை. தென்னமெரிக்க நாடுகளில் நிலவும் அரசியல் நிலையின்மை, குற்றச் சூழலைக் குறித்த கதை என்று கொள்ளலாம். கதை எழுதப்பட்டிருந்த விதம் சுவைகூட்டியது. நிகழ்வுகளை அடுக்கடுக்காக விவரிக்கும் கதை என்றாலும் ஒரு நிகழ்வின் விளைவை அடுத்த நிகழ்வாகச் சொல்லிச் செல்வது ஒரு சுவாரஸ்யமான பாணியாக இருந்தது.

(அரசன் எப்போதும் மக்களுக்கு மேல் நிற்பவன்- Daniel Alarcon – The king is always above the people – பெரு)

‘தந்தையர் நிலம்’ இத்தொகுப்பில் முக்கிய கதைகளில் இன்னொன்று. குடிபெயர்ந்தவர்களுக்கும் தாய்நாட்டிலிருப்பவர்களுக்குமிடையேயான உறவு அல்லது உறவின்மை குறித்த கதை இது. இவ்வுறவுகளில் இருக்கும் எதிர்பார்ப்புகள், பொய்மைகளை இக்கதை பேசுகிறது. குடும்பம், உறவுச்சிக்கல்கள், பண்பாட்டுச் சிக்கல்கள் என உடைந்த வண்ணக்கண்ணாடிச் சில்லுகளைக் கொண்ட இன்னொரு கலைடஸ்கோப், கூடவே வியட்னாம் அமெரிக்க வரலாற்றுப் பின்னணியும்.

(தந்தையர் நிலம் – Viet Than Nguyen – வியட்நாம்)

தொகுப்பின் கடைசிக் கதை மீண்டும் ஒரு மாய யதார்த்தக் கதை. பிரிவின் சோகத்தை ஒரு பெண் எதிர்கொள்ளும் கதை இது. அதை அவர் ஒரு அறிவியல் புனைவைப்போல சொல்ல முயலும் விதம் மெல்ல மெல்ல வாசகரையும் அத்தனிமையின் ஆழத்தை உணரச் செய்கிறது. 

(மறைந்துகொண்டிருக்கிறாய், நீ – Alexandra Kleeman – You, Disappearing– அமெரிக்கன்)

சரியான கதைகளை தேர்ந்தெடுத்த நரேனுக்குப் பாராட்டுக்கள். இதற்காக அவர் கிட்டத்தட்ட இருநூறு கதைகளைப் வாசித்திருப்பதாக அறிந்தேன். மொழிபெயர்க்கத் துவங்க்கும் எவருக்கும் இரு கவலைகள் இருக்கும். ஒன்று மூலப் பிரதியை சிதைத்துவிடக்கூடாதெனும் கவனம், மற்றொன்று தமிழுக்குத் துரோகம் செய்துவிடக்கூடாதெனும் பதட்டம். குறிப்பாகப் புனைவுகளை மொழிபெயர்க்கும்போது இவற்றின் அழுத்தம் அதிகம். எனவே சில இடங்களில் வாசிப்பதற்குச் சற்றுக் கடினமாகவே உள்ளது. மொழிபெயர்ப்பவர்க்கு மூலப்பிரதியும், கதையும் பரிச்சயமாயிருக்கும் என்பதால் அதை வேறொருவர் வாசித்து திருத்தங்கள் செய்வதே சிறப்பானதாயிருக்கும் என்பார் ஜெயமோகன். பல இடங்களில் நேரடியாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்ததைப்போலவும் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்களை எழுதுவது ஒரு தனித்திறனாகவும் கலையம்சம் கூடியதாகவும் கருதப்படுகிறது. தமிழில் அப்படிச் சொல்லிவிட முடியாது. கூடவே ஒருமைப் பன்மை வேறுபாடின்மை பல இடங்களில் உள்ளது. ‘அல்லது’ எனும் வார்த்தை ‘அல்ல’ என அச்சடிக்கப்பட்டுள்ளது. இவை அடுத்த பதிப்பில் மாற்றப்பட்டால் இன்னும் சிறப்பான மொழிபெயர்ப்பாக இருக்கும். ஆனால் கதைகளைப் புரிந்துகொள்ள, நுட்பங்களை உணர இவை பெரிய தடைகள் இல்லை என்றே சொல்வேன். 

இக்கதைகளில் ஒன்றிரண்டு தமிழ்ச்சூழலில் எழுதப்பட்டிருக்கும் கதைகளை ஒத்தவை என்று சொல்ல முடியும். தலைப்புக்கதையும், தந்தையர் நிலமும் அப்படி சொல்லத்தக்கவை. எல்லா கதைகளுமே நம் பண்பாட்டிலும், நாட்டிலும் காணக்கிடைக்கூடிய அனுபவங்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளே. மானுட அனுபவம் என்பது ஒன்றுக்கொன்று மிக வேறுபாடானதில்லை என்று இக்கதைகளை படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். பன்னிரண்டு சுரங்களைக்கொண்டு உருவாக்கப்படும் எண்ணற்ற இசைத் துண்டுகளைப்போல மனித அனுபவங்கள் வெகு சில அடிப்படைகள் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நான் முதற்பகுதியில் கிழக்கு மேற்கு எனப் பிரித்தாலும் ஒரு இசைத்துணுக்கில் சில சுரங்கள் முக்கியத்துவம் பெறுவதைப்போல வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்று கொள்ளலாம். எனவே கிழக்குக்கும் மேற்கிற்கும் அத்தனை தூரமில்லை, பூமியின் எந்தப் புள்ளியும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் நடுவேதான் உள்ளது. 

புதிய களங்களில் புதிய வடிவங்களில் கதை சொல்ல விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதைகள் இவை. கிரேக்க உரோமைப் பாரம்பரியத்தின் வழியே மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மேலை இலக்கியத்தில் இன்று பிற பண்பாடுகளின் கதைகள் குடிபெயர்ந்தவர்களால் சொல்லப்படுவதென்பது மிகப் புரட்சிகரமான ஒன்றேயாகும். அதுவும் இவ்வெழுத்தாளர்கள் அனைவரும் மதிக்கத்தக்க விருதுகளையும் கவனிப்பையும் பெற்றவர்கள், எனவே இவை தற்கால உலக இலக்கியத்தின் சிறந்த கதைகளில் பத்து எனக் கொள்ளலாம். தமிழ் வாசகர்கள் நரேனுக்கு நன்றிக்குரியவர்கள். அவர்கள் சார்பில் நரேனுக்கு நன்றி.

***

One Reply to “குடிபெயரும் கதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.