கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31

This entry is part 6 of 10 in the series கி.ரா. - அ.ரா.

எனக்கு எதையும் நேரடியாகச் சொல்லியே பழக்கம். இலக்கியம் மற்றும் கருத்தியல் சார்ந்த விவாதங்களை நேரடியாகச் சொல்லிவிடுவேன். அப்படிச் சொல்லிவிடுவது திறனாய்வாளனின் அடிப்படையான குணம் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் உண்டு. இந்தப் பழக்கத்தைக் கவனித்த கி.ரா., ஒருநாள், ‘ராம்சாமி.. நீங்க எதையும் பட்பட்டென்று போட்டு ஒடைக்கிறீங்க.. அப்படி ஒடைக்கிறதெ ஒங்க விமரிசனக்கட்டுரையிலெ வச்சிக்கோங்க.. நட்பு, பழக்கம், பக்கத்து வீட்டுக்காரங்க கூடப் பேசிப்பழகுறது போன்ற அன்றாட வாழ்க்கையிலெ அப்படியெல்லாம் பேசுறதெ விட்டுடுங்க” என்று ஒருமுறை உணர்த்தினார் கி.ரா.

இந்த யோசனையைச் சொன்னார் என்று நான் எழுதவில்லை. உணர்த்தினார் என்றே எழுதுகிறேன். ஏனென்றால் அவர் எதையும் நேரடியாகச் சொல்பவரில்லை. எனக்கு என்றில்லை; யார் ஒருவருக்கும் எந்தவிதமான யோசனையாக இருந்தாலும், ஆலோசனை சொல்வதாக இருந்தாலும் அதை நேரடியாகச் சொல்லமாட்டார். ஒருத்தர் சொல்லும் கருத்தில் உடன்பாடில்லை என்றால் கூட மறுப்பை உடனடியாகச் சொல்லி நான் பார்த்ததில்லை.    எதற்கும் ஒரு கதை அல்லது சொலவடை அல்லது குறைந்த பட்சம் ஒரு சிரிப்பு என்பதாகவே ஆரம்பித்துப் பேசுவார். எதையும் ஆரம்பிப்பதற்குப் போடும் பீடிகையில்  அவருக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்கள் அவரோடு இணைந்துகொள்வார்கள்; உடனே முரண்பட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.  அவர் சொல்வதன் மேல் சிந்தித்துப் பதில் சொல்வார்கள்.  அப்படிச் சிந்தித்து நான் எனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, 

‘நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்குன்னு ஒரு சொலவடை இருக்கு தெரியுமோ? ’ என்று தான் அன்று ஆரம்பித்தார்.

“ஆமா.. கேள்விப்பட்டிருக்கேன்” என்றேன்.  ‘கேள்விப்பட்டீங்க சரி; அதெ பயன்படுத்தனும்ல’ என்றார்.  எதற்கு இப்படிச் சொல்ல வருகிறார் என்பது முதலில் புரியவில்லை. அமைதியாக இருந்தேன்.  நான் அமைதியாக இருப்பதைப் பார்த்துப் பேசத்தொடங்கினார்.

‘பாண்டிச்சேரிக்காரங்க எம் ஜி ஆர் சினிமாவெல்லாம் எப்டி பார்த்தாங்கன்னு நமக்குத்தெரியாது. அந்தக் காலத்தில நாம இங்கெ இருக்கல்லெ. ஆனா அவரெ   அரசியல்வாதியாப் பேசுற காலத்திலெ நாமெ இங்கெ வந்துட்டோம். நான் பார்த்த வரைக்கும் இங்கெ இருக்கிற ஒருத்தருக்கும் அரசியல்வாதி எம் ஜி ஆரைப் பிடிக்கவே இல்லெ. அதனாலெ அவரோட தனிமனித குணத்தெக் கூட இங்கெ இருக்கிறவங்க வெறுக்கவே செய்றாங்க. ’

“ஆமா.. திரும்பத்திரும்ப ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு ஓட்டுப்போடுது. ஆனா.. பாண்டிச்சேரிக்காரங்க.. மறந்தும் எம். ஜி. ஆர். கட்சிக்கு ஓட்டுப்போடத் தயங்குறதெ பாத்திருக்கேன்…

‘எப்படிப் போடுவாங்க.. எம்.ஜி.ஆர். பாண்டிச்சேரிக்காரங்க அடிமடியிலெயே கைவச்சாருல்ல; அதெ எப்படி மறப்பாங்க..’

 “எம்.ஜி.ஆர். பாண்டிச்சேரியெ தமிழ்நாட்டோட சேர்த்துடலாம்னு மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினதெச் சொல்றீங்களா..? அப்படி கடிதம் எழுதினது எனக்கு உடன்பாடுதான். பாண்டிச்சேரியெ யூனியன் பிரதேசமா வச்சிருக்கிறதுல இருக்கிற நடைமுறைச் சிக்கலச் சரியாப் புரிஞ்சவர் எம்ஜிஆர் தான்.  பாண்டிச்சேரியோட ஒரு பகுதி ஆந்திராவுக்குள்ள இருக்கு. ஏனாம் ஒரு முனிசிபாலிட்டி அளவுகூடக் கிடையாது.  கேரளாவுக்குள்ள இருக்கிற மாஹே ஒரு ஊராட்சி அளவுக்குக் கூட இருக்காது. அதே மாதிரி காரைக்கால் பகுதி தனியா கெடக்கு. பாண்டிச்சேரிக்கும் காரைக்காலுக்கும் இடையிலேயே 4 மணி நேர ஓட்டம். ஏனத்துக்கும் மாஹேக்கும் ஒருநாள் ஓட்டம். இப்படியெல்லாம் வச்சிக்கிட்டு நிர்வாகம் எப்படி நட த்துறது. இதெச் சரியாப் புரிஞ்சதுனால தான் எம்.ஜி.ஆர். இந்த நாலு பகுதிகளையும் அந்தந்த மாநிலங்களோட சேர்த்துடலாம்னு சொன்னார்” என்று எம்.ஜி.ஆரின் நின்று போன திட்டத்தெப் பாராட்டிச் சொன்னேன். 

 ‘ ஏன்கிட்டெ சொல்ற இதெ சங்கதியெ பாண்டிச்சேரிக்காரங்க இருக்கிற கூட்ட த்திலயும் நீங்க சொன்னீங்க. அதெ நான் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்பவே அது நிறுத்துங்கன்னு சொல்ல நினைச்சேன். ஆனா சொல்ல ல. ஏன்னா ஒருத்தரோட பேச்சு இடையிலெ மறிச்சு நிறுத்துறது என்னோட வழக்கமில்லை. ஆனா இந்தப் பழமொழியெ அப்பவே உங்கெகிட்ட சொன்னேன். என்றார். தொடர்ந்து,  ‘எம் ஜி ஆர் சொன்ன திட்டம் நல்ல திட்டம்தான். எனக்கும் கூட அது சரின்னுதான் தோணுது. செலவுக் குறைப்பு,மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையேயுள்ள தூரம் குறைவு, நிர்வாகம் இப்படியெல்லாம் யோசிச்சா பாண்டிச்சேரியெ  ஒரு தனிமாவட்டமாவும், காரைக்காலெ நாகப்பட்டினம் மாவட்ட த்தில ஒரு தாலுகாவாகவும் ஆக்கிடலாம். மாஹேயெ கேரளாவிலயும் ஏனத்தெ ஆந்திராவுலயும் சேர்த்துடலாம். ஆனா. நான் இப்போ அதெ சரின்னு எடுத்து வச்சிப் பேச மாட்டேன். ஏன்னா. அந்த த்திட்த்தெக் கடுமையா பாண்டிச்சேரிக்காரங்க எதிர்த்தாங்க; தெருவில இறங்கிப் போராடுனாங்க. அது அவங்களுக்கு பிரெஞ்சுக்காரங்க கொடுத்த உரிமை; அதெ விட்டுத்தரமுடியாதுன்னு சொன்னாங்க. அன்னிக்கு மட்டுமில்ல; இப்பவும் அப்படித்தான் நினைக்கிறாங்க. அது கூட்டத்தோட செண்டிமெண்ட். அதெப் புரிஞ்சிக்கிடணும்.அதுக்குப் பின்னாடி இங்கெ இருக்கிறவங்களுக்குக் கிடைக்கிற வரிச்சலுகை, வியாபார வாய்ப்பு, அரசாங்க உதவிகள்னு நிறைய இருக்கு என்று விளக்கிப் பேசினார்.

பிரெஞ்சுக்காரங்க குடுத்த உரிமையினால தமிழ்நாட்டுக்காரங்களெவிட ஒரு படி உசத்தின்னு பாண்டிச்சேரிக்காரங்க நெனக்கிறாங்க. அதெக் கேள்விக்குட்படுத்துற ஒருத்தரையும் இவங்களுக்குப் பிடிக்காது. அவங்களெ வெளியூர்க்காரன் என்று திட்டுவாங்க; முடிஞ்சா வெளியேறுன்னு சொல்வாங்க. அதனால தான் எதையும் எடம்பொருள் ஏவல் பார்த்துப் பேசணும்னு சொல்றேன். அந்த த்திட்டம் நடக்காமப் போயி 20 வருஷம் ஓடிப்போச்சு. அப்போ காட்டின கோபத்தெ இன்னும் குறைச்சிக்கல பாண்டிச்சேரிக்காரங்க. அவங்க கிட்டப் போயி எம்ஜிஆரு நல்லவரு;வல்லவரு; பாண்டிச்சேரியெத் தமிழ்நாட்டோட இணைக்க நெனச்சது நல்ல நிர்வாகியோட யோசனையின்னு சொன்னா உங்களெ எப்படா இங்கிருந்து விரெட்டலாம்னுதான் பாப்பாங்க என்று விளக்கினார்.

அந்த விளக்கத்துக்குப் பின்னர் தான் எனக்கு ‘ நண்டு தின்னும் ஊரில் நடுப்பங்கு எனக்குன்னு சொல்லணும்’ என்ற சொலவடை புரிய ஆரம்பித்தது. 

Series Navigation<< கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33 >>

One Reply to “கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.