இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10

(டோக்ரி மொழி நாவலின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

கால் தரையில் பாவ விடாது,  வாழ்க்கை விரட்டிய விரட்டலில்,  காலைகள் மாலைகளாகவும்,  மாலைகள் இரவுகளாகவும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தன.

இந்த வீட்டில் சுமார் நூறு பேர் வசதியாக அமரும் வகையில்,  பெரிய ஹால் ஒன்று இருந்தது. இதில் பல சிறு இலக்கியக் கூட்டங்கள நடைபெற்றன. மும்பையிலிருந்து டாக்டர் தரம்வீர் பாரதி அண்ணாவும்,  அவரது மனைவி புஷ்பா அண்ணியும் கூட, இக் கூட்டங்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை அண்ணாவும் அண்ணியும் இந்த ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், அழைப்பு மணி ஒலிக்கும் சத்தமும்,  அதையடுத்து யாரோ படிகளில் ஏறியவாறே உரக்கச் சிரிக்கும் சத்தமும் கேட்டது. கதவை திறந்தால்,  அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும் விஷ்ணு காந்த் சாஸ்திரி அவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அண்ணா வந்திறங்கியதுமே,  என் வீடு சரஸ்வதி தேவியின் சிறு கோவிலாகவே மாறிவிடும்.

தில்லியின் பெங்காலி மார்க்கெட் பகுதியிலிருந்து, தெற்கு தில்லியில் இருக்கும் சித்தரஞ்சன் பார்க் என்கிற பகுதிக்கு  நாங்கள் குடி பெயர்ந்த போது, என் கணவர்,  மாடியில்,  வேலைக்காரர்களுக்கு இரு வசதியான அறைகளும் ஒரு பெரிய ஹாலும் கட்டலாம் என திட்டமிட்டிருந்தார். மாடியில் ஏழெட்டு நாற்காலிகளைப் போட்டு வைத்தால்,  அண்ணா வரும்போது அவரது நண்பர்களுடன் பேசிக் களிக்கையில் எழும் ஒலியில் வானம் புன்முறுவல் பூக்கும் என்றெல்லாம் நான் கற்பனை செய்துவைத்திருந்தேன்.  ஆனால்,  என் மனோரதம் நிறைவேறவே இல்லை. அதற்கு முன்பாகவே,  அண்ணா இந்த உலகைவிட்டு புறப்பட்டுவிட்டார். 

சித்தரஞ்சன் பார்க்குக்கு வந்த பிறகு, எங்கள் வீட்டில் வேலை செய்ய வந்தவன் வினோத். பீஹாரைச் சேர்ந்தவன். ருசியாக சமைப்பான். என் கணவர்,  வழக்கம் போல வினோதையும் வண்டி ஓட்ட கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தி,  தானாகவே பயிற்சி கொடுத்து,  லைசென்ஸும் வாங்கிக் கொடுத்து விட்டார். என் கணவரும் மகளும் தாமாகவே வண்டி ஓட்டிக் கொள்வார்கள். எனக்குத்தான் டிரைவர் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வண்டியில் அமர்வேன். நாளாக நாளாக,  வினோத் நன்றாக  ஓட்ட பழகிக் கொண்டான். ஆனால்,  சமையல் மற்றும் வீட்டு வேலைகளிலிருந்து அறவே ஒதுங்கிக்கொண்டான். எப்போதாவது என் மகள்  அவன் ருசியாக செய்கிற இட்லி சாம்பார் செய்து தரும்படி வற்புறுத்தினால் முணுமுணுத்துக்கொண்டே வேண்டாவெறுப்பாக அரைமனதோடு செய்வான். கேட்டால் என் கௌரவம் என்னாவது,  எனக்கென ஒரு மதிப்பு இருக்கிறதல்லவா என்பான்.

“மேம் சாப்,  வண்டி ஓட்டுவது எவ்வளவு கஷ்டமான காரியம் தெரியுமா? மேலே ஏறிய மூச்சு கீழே இறங்குவதற்குள்,  உயிர் போய் உயிர் வரும்’ என்பான். நான் ஒருமுறை,  தாங்கமுடியாமல்,  என் லைசன்ஸை எடுத்துக் காட்டினேன். அதற்குப் பிறகு,  அவன் என்னை,  என் கணவரின் இரண்டாம் மனைவியையோ அல்லது ஆசை நாயகியையோ பார்ப்பதைப் போல வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தான். மிக விரைவில் தன் கௌரவத்தை தலையில் சுமந்து கொண்டு, வேறு வேலைக்குச் சென்றுவிட்டான்.

வினோத்துக்கு பிறகு வந்தவன் கிரண். நேபாளி. இவனும் என் கணவரால் தயார் செய்யப்பட்டவன்தான். மிகவும் சுறுசுறுப்பானவன். இனிமையான சுபாவம். அதிக சம்பளத்தில்,  தொப்பியும் சீருடையும் அணிந்துவேலை செய்யும் வகையில்,  பெரிய கம்பெனிகளில் வேலை கிடைத்தபோதும், எங்களைவிட்டு போகத் தயங்கினான். நான் தான் அவனை தைரியப்படுத்தி,  ‘நீ வேறு இடத்தில் வேலைக்கு செல்வதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபணையும்  இல்லை. ஆனால்,  உனக்கு பதிலாக தகுதியான வேறு ஒருவரை மட்டும் ஏற்பாடு செய்து விட்டுப் போ’ என்றேன். நான் சொன்னதற் கேற்ப, கிரண், தனக்குத் தெரிந்த இன்னொரு நேபாளி இளைஞனை அழைத்து வந்தான். புதியவனும்  மிகவும் கவனமாகவே வண்டி ஓட்டினான். எங்களுக்கும் மகிழ்ச்சி. மேற்கொண்டு நான் சொல்ல போகும் கதை,  மிகவும் சுவாரசியமானது.

ஒருநாள் இரவு,  சுமார் எட்டு மணி வாக்கில், எங்கள் பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனிலி ருந்து, ஃ போன் வந்தது. நான் குழப்பத்துடன்,  எனக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லையே  என்று நினைத்தவாறே பேசத் தொடங்கினேன். “உங்கள் டிரைவர் சுரேஷ் ஷர்மா இப்போது எங்களிடம் இருக்கிறான். அவன் அதிகமாக குடித்திருக்கிறான். உங்கள் பெயரை அவன் உபயோகித்த காரணத்தினால் தான் உங்களை அழைத்தோம் என போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஹவல்தார் ஒருவர் கூறினார். நான் “என் டிரைவர் காபி கூட குடிக்க மாட்டானே,  இவன் வேறு யாரோ,’ என்றேன். மறுமுனையில் இருந்த நபர்,  “உங்கள் பெயரை அடிக்கடிச் சொல்லி,  நீங்கள் எங்களுடைய சீருடையை கழற்ற வைத்து விடுவீர்கள்,  அதாவது வீட்டுக்கு அனுப்பி விடுவீர்கள்,  என்று இவன் பயமுறுத்துகிறான்” என எரிச்சலுடன் கூறினார். “தெருவில் சத்தம் போட்டு கலாட்டா செய்து கொண்டிருந்ததால்தான் இவனை இங்கு கொண்டு வந்தோம். இங்கு வந்த பிறகும்,  இவனது கூச்சல்அடங்கவில்லை”என்றார்.

‘தயவு செய்து என்னை அவனிடம் பேச வையுங்கள்’ என்றேன். அவனேதான்.

போதை இன்னமும் இறங்கி இருக்கவில்லை.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு தான் எனக்கு  பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. அதற்கப்புறம் வாழ்த்துக் கடிதங்களும் பூங்கொத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை பார்த்ததில், என் டிரைவர், என் மூலமாகவோ அல்லது என் பெயரை உபயோகித்தோ எதையும் செய்து கொண்டுவிட முடியும் என நினைத்து விட்டான் போலும். ஒருவேளை நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிவிட்டேன் என நினைத்துவிட்டானனோ?  நான் அந்த ஹவல்தாரிடம், “பத்மஸ்ரீ விருது கிடைத்ததெ ன்னவோ உண்மைதான். ஆனால் நான் இன்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவில்லை. பாவம்,  அவனுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவன் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அவனை விட்டுவிடுங்கள்  அவன் உண்மையிலேயே நல்ல பையன் தான். யாரோ தவறுதலாக அவனுக்கு குடிக்க கொடுத்திருக்கிறார்கள்” என்றேன். எதற்கும் இருக்கட்டும் என்று,  எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததைப் பற்றியும்,  நான் ஒரு எழுத்தாளரும் பத்திரிகையாளரும் கூட என்றும் தெரிவித்தேன். எதிர்முனையில் இருந்த ஹவல்தார்,  அதை நம்பி ஏற்றுக் கொண்டது போலத்தான் தோன்றியது.

ஐந்து நிமிடம் கழித்து,  மறுபடியும் மணி அடித்தது. “மேம் ஸாப்,  நாங்கள் அவனை விடுவித்து விட்டோம். இருந்தாலும் அவன் போக மறுத்து அமர்க்களம் செய்கிறான். எங்கள் சீருடையை கழற்றிவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் என ஒற்றைக்காலில் நிற்கிறான். நாங்கள் என்ன செய்வது? என ஹவல்தார் கேட்டார். நான்,  தழுதழுத்த குரலில்,  மிகவும் பணிவோடு,  “நீங்கள் இதுவரைக்கும் என்னிடம் மிகுந்த மரியாதையோடு பேசினீர்கள். இப்போது நீங்கள் அவனை என்ன செய்ய நினைத்தாலும் அதில் நான் தலையிட மாட்டேன்,” என்றேன். கூச்சத்தினால்,  சுரேஷ் ஷர்மா மறுபடி வேலைக்கு வரவேயில்லை. அவனுடைய சம்பளப் பணத்தைக் கூட,  அவனை அழைத்து வந்த கிரணிடமே கொடுத்தனுப்பி விட்டேன்.

டிரைவர்களை பற்றிய பேச்சு எழுகையில் நான் எப்படி ரவேல் சிங்கைப் பற்றி குறிப்பிட மறந்தேன்? ரவேல் சிங் தோடர்மல் ரோட்டில் நாங்கள் வசிக்கையில், எங்களிடம் பணிபுரிந்தவன். இன்னமும் என் கணவரின் நண்பர்கள் கூடிப் பேசுகையில், கட்டாயம் ரவேல் சிங்கை நினைவு கூராமல் இருக்க மாட்டார்கள். ரவேல் சிங் ஹரியானாவை சேர்ந்த ஜாட் . என் மகள் மீத்தாவின் பெயரை எப்போதும் தவறாக உச்சரிப்பான். அவள் அதற்காக அவனிடம் சண்டை போடுவாள். வீட்டு வேலைகள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. குழாயில் வாஷர் மாற்ற வேண்டுமா,  தையல் மிஷினை ரிப்பேர் செய்ய வேண்டுமா,  சந்தைக்குச் சென்று,  சகாய விலையில் பேரம் பேசி காய்கறி பழங்கள் வாங்க வேண்டுமா, கூப்பிடு ரவேல் சிங்கை. எவருக்கேனும் ஏதேனும் செய்தி சொல்லி அனுப்ப வேண்டியிருந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில், சிட்டாகப் பறந்து,  வேலையை முடித்து விட்டு வருவான்.

அந்நாட்களில்,  என் கணவரின் அலுவலக உயர் அதிகாரி கரேவால் சாஹப்,  எங்கள் வீட்டிற்கு எதிரில் குடியிருந்தார். என் மகள் மீத்தா அவரை “பெரியப்பா” என்று தான் அழைப்பாள். ரவேல் சிங்கும் அவரை பெரியப்பா என்றே அழைப்பான். எங்கள் வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரையும் குறித்த வரலாற்று- பூகோள விவரங்கள் ரவேல் சிங்கின் விரல் நுனியில் இருக்கும். எங்கள் நண்பர்களும் அவனிடம் மிகவும் அன்பாக இருப்பார்கள். இன்றும் கூட, நாங்கள் ரவேல் சிங்கை,  மிகவும் மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொள்வோம்.

 ரவேல் சிங் எங்கள் வீட்டை மட்டுமல்ல,  அதிலிருந்த பொருட்களையும் தன்னுடையதாகவே கருதினான். எங்கள் வீட்டில் என் மாமியாரின் நூறு ஆண்டுகள் பழைய சிங்கர் தையல் மிஷின் ஒன்று இருந்தது. ஒரு நாள், நான் அந்த மெஷினில் மெத்தை உறை தைத்துக் கொண்டிருக்கையில், ரவேல் சிங்,  என் கணவரிடம் சென்று, ” ஸாஹிப், அந்த இற்றுப்போன தையல் மிஷினில் மேம் சாப் எதையோ தைத்துக் கொண்டிருக்கிறார். அதை எனக்குத் தந்து விடுங்கள் என்றால் கேட்பதில்லை. இதை என் மாமியாரின் ஞாபகார்த்தமாக நான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். நீங்கள் கொஞ்சம் மேம் ஸாபிடம் சொல்லுங்கள்” என்றான். என் கணவர் சிரித்துவிட்டு,  “அது,  அவருடைய மாமியார் அவருக்குத் தந்தது. அதை உன்னிடம் கொடுத்து விடும்படி நான் எப்படி சொல்ல முடியும்?” என்றார்.

மும்பையிலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டு மேஜையையும் நாற்காலிகளையும் நாங்கள் மாற்ற நினைத்து,  புதிய சாப்பாட்டு மேஜை மற்றும் நாற்காலிகளை வாங்க ஏற்பாடு செய்திருந்தோம். இந்த விஷயம் ரவேல் சிங்குக்கு எப்படி தெரிந்தது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எந்த வண்டியில் புதிய சாப்பாட்டு மேஜையும் நாற்காலிகளும் வந்து இறங்கினவோ, அதே வண்டியில் எங்களது பழைய மேஜையையும் நாற்காலிகளையும், தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்படி, ரவேல் சிங்,  வந்திருந்த வேலையாட்களிடம் கூறிவிட்டான். எங்களது புதிய மேஜையில் வெவ்வேறு பதார்த்தங்களை,  நடுவில் வட்ட வடிவ,  சக்கரத்தை சுழற்றி அவரவர் தன் பக்கம் வர வைத்துக் கொள்ளும்படி செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப,  நாற்காலிகளும் சுழல்வனவாக இருந்தன. ” இதுதான் சரி. சாப்பாட்டிற்கு நடுவில் எழுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள யார்தான் விரும்புவார்கள்? இந்த சுழல் நாற்காலிகளும் மிகவும் வசதியாக இருக்கின்றன” என்று ரவேல் சிங் தன் சிறப்புக் கருத்தை பதிவு செய்தான். புதிய மேஜை வந்த மகிழ்ச்சியில்,  நானும் பழைய மேஜையையும் நாற்காலிகளையும் முற்றிலும் மறந்து விட்டேன்.

மாலையில்,  என் கணவர், ” ரவேல் சிங், அந்த பழைய மேஜையும் நாற்காலிகளும் என்னவாயின?” என்று கேட்டார். நொடியும் தாமதிக்காமல்,  ரவேல் சிங்,  அதுவா ஸாஹிப்,  அதை நான் வந்த வண்டியிலேயே என் வீட்டுக்கு அனுப்பி விட்டேன் இந்நேரம் போய் சேர்ந்திருக்கும். எதிர்வீட்டில் போன் செய்து என் மனைவியிடம் விசாரித்து சொல்கிறேன் என்றானே பார்க்கலாம்!

“பழைய மேஜை நாற்காலிகளை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதுதான் புதிய மேஜை நாற்காலிகள் வந்தாயிற்றே! நான் சனி ஞாயிறு விடுமுறையில் அவற்றுக்கு வர்ணம் பூசி புதியதாக்கி விடுவேன்” என்றான். என் கணவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. “நல்லது. நீ செய்தது மிகச் சரி,” என்று தலையசைத்து கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

துபாயில் வேலை கிடைத்துப் போகும் வரை,  ரவேல் சிங் எங்களுடன்தான் இருந்தான். துபாய் சென்ற பிறகும்,  ரேடியோவிலோ,  தொலைக்காட்சியிலோ,  என் கணவரின் நிகழ்ச்சி நடைபெறும் போதெல்லாம் உடனே போன் செய்து பேசுவான். அவனது மகளின் திருமணத்திற்கு நாங்கள் சென்றபோது,  அவனுக்கு தலை கால் புரியவில்லை. மாப்பிள்ளை வீட்டினரை உபசரிப்பதை விட்டுவிட்டு,  “சிங் பந்து வந்திருக்கிறார்” என்று குதூகலமாக தனது உறவினர் அனைவருக்கும் என் கணவரை அறிமுகப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தான். அப்பழுக்கற்ற சுத்தமான குழந்தை மனம் கொண்டவன் ரவேல் சிங்.

***

Series Navigation<< இவர்கள் இல்லையேல்இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.