மேலெழும் கோள வடிவ வானம்

மனம் பித்தின் நிறைகுடத்தில் விழுந்து கிடந்து அமிழ்ந்து ஜீவிக்கிறது
சுவரில் மோதி மேலெழும் கூடற்ற கோளம் அது
ஊசிகளும் மருந்துகளும் நிறைந்து மீண்டும் மூழ்குகிறது
உடைந்த நாற்காலியின் கனவுகள்
அதை சீண்டி மீண்டும் மேலெழுப்புகின்றன
அவ்வபோது வரும்
பாக்கெட் குழப்பங்கள்
பேனாவரை நீண்டு
பேப்பரில் நெளியத் துவங்கும் போதே
துண்டு வெளிச்சங்கள்
குளத்து நீரில் குதியாட்டம் போட்டபடி
கை நீட்டி அழைக்கின்றன
“வா”
என் வெம்மையின் இரத்தம் பூசி
ஆட்டத்தை துவக்கு என்று
கெஞ்சல்கள்
எல்லா நாட்களின் மீதும் சாம்பல் மழைப்பொழிகின்றன
இரவெங்கும்
யானையானவன்
எதிர்ப்படும் ஒரு சிறு இடைவெளி
பயண யானைகள்
குழம்பி நிற்கின்றன
காடு
வெறுமனே கட்டாந்தரை மேல் தொட்டி செடியாக
மாறி வெகுகாலம் ஆகிவிட்டதை
அவை அறியாது
மின்னும் அங்குசங்களோ எங்கெங்கும் முளைத்து நிற்கின்றன
உனக்கும் எனக்கும்
சிறு தோட்டமும்
சில வகை பூச்செடிகளும்
போதும்.