- புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்
- பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
- புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3
- பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
- புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5
- மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
- விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்
- புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8
- புவிச் சூடேற்றம்- பகுதி 9
- விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10
- மறுசுழற்சி விவசாயம்
- புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்
- புவி சூடேற்றம் பாகம்-13
- புவி சூடேற்றம் பாகம்-14
- பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்
- அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?
- நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?
- உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?
- புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19
- புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20
- புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21
- புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22
- விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை
(பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்)
விஞ்ஞான திரித்தல் – பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – புவி சூடேற்றம் –விஞ்ஞான கேள்விகள்– பகுதி 8

இதுவரை, பருவநிலை மாற்றம் பற்றிய கட்டுரைகளில், விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையில் பிரச்சினை என்னவென்று பார்த்தோம். விவாதங்களுக்கு எப்பொழுதும் விஞ்ஞானத்தில் இடமுண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது தவறிருக்குமோ? முற்றிலும், மனித நடவடிக்கைகள் மட்டுமே இந்த துரித புவி சூடேற்றத்திற்குக் காரணமா? கரியமில வாயு என்று விஞ்ஞானிகள், தொல்லெச்ச எரிபொருள் தொழிலை ஒட்டுமொத்தமாக மூட, சதி செய்கிறார்களா? இதுவரை நடக்காத விஷயத்தையா, திடீரென்று மனிதன், 150 வருடத்தில் செய்து விட்டான்? பூமியின் அளவை ஒப்பிட்டால், மனிதன், மிகச் சிறிய உயிரினம். இயற்கையால் செய்ய முடியாததை, இந்தச் சிறிய மனிதனால், எப்படிச் செய்ய முடியும்? இது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுவது இயற்கை. இந்தப் பகுதி, பல பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான கேள்வி பதில் பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரியன் அதிக வெப்பமாகியதால், பூமி ஏன் வெப்பமடைந்திருக்கக்கூடாது?
சூரியன், பூமியின் வெப்பத்தைத் தீர்மனிக்கும் சக்தியுடைய, நம் அருகாமையில் உள்ள நட்சத்திரம். சூரியனின் வெப்பத்தில் ஒரு 11 வருட சக்கரம் உண்டு. ஆனால், இந்த சக்கரத்தால், உண்டாகும் வெப்ப மாற்றங்கள், பூமியில் மிகக் குறைவு. 1950 முதல், இந்த சூரிய வெப்பத்தில் மிகச் சின்ன மாற்றங்களே நிகழ்ந்துள்ளது. ஆனால், புமியின் வெப்பம், இதே காலகட்டத்தில், மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால், சூரியனால் பூமி அதிக வெப்பமடைந்து விட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. செயற்கை கோள்கள் மூலம் சூரியன் பூமிக்கு அனுப்பும் வெப்பத்தை 1978 முதல் அளந்து வருகின்றன. இதில், பெரிதான மாற்றம் ஏதுமில்லை. இரண்டாவது, சூரியன், இந்த வெப்பமதிகரித்தலுக்கு காரணமானால், காற்று மண்டலத்தின் எல்லா பகுதிகளும் முன்பை விட அதிகமாக சூடேறி இருக்க வேண்டும். ஆனால், பூமியின் தரையருகே அதிக சூடாகவும், காற்று மண்டலத்தின் மேற்பகுதிகள், மேலும் குளிரடைந்து வருகிறது..இந்த பதிலில் காட்டியுள்ள படத்தில் உள்ள மஞ்சள் கோடு, solar irradiance என்னும் அளவைக் குறிக்கிறது. அதாவது, இது சூரியனின் சக்தியைக் குறிப்பிடும் ஒரு விஞ்ஞான அளவு. அட, இந்த அளவுபடி, பூமி 2000 முதல் 2008 வரை குளிர்ந்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நிகழவில்லை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதே காலத்தில், பூமியின் சராசரி வெப்பம் எப்படிக் கூடி வந்துள்ளது என்பதைச் சிகப்புக் கோடு காட்டுகிறது. இதிலிருந்து தெளிவாவது: இந்த வெப்பம் பூமியில் உருவாகிறது. அது விண்வெளிக்குச் செல்லாமல் இங்கேயே இருப்பதால், பூமி சூடாகிறது.
எரிமலைகள், ஏன் பூமியை வெப்பமடையச் செய்திருக்காது? கடலினடியே பல எரிமலைகள் இரூக்கின்றனவே.
எரிமலைகள், கரியமில வாயுவை உமிழ்வது உண்மை. ஆனால், பூமியில் உற்பத்தியாகும் கரியமில வாயுவில், எரிமலைகளின் பங்கு, வெறும் 2% மட்டுமே. 20 வருடங்களுக்கு ஒரு முறை, பூமியின் மிகப் பெரிய எரிமலைகள், ஏராளமான சாம்பலையும், கரியமில வாயுவையும் காற்று மண்டலத்தில் உமிழ்கின்றன. எல்லா பெரிய எரிமலைகளும் ஒரே நேரத்தில் வெடிக்கும் சாத்தியம் மிகச் சிறிது. ஆனால், இந்த வாயுக்கள், இரண்டு வருடங்களில், காற்று மண்டலத்தை விட்டு நீங்கி விடுகின்றன. எரிமலைகள் தான் காரணம் என்றால், மிச்சம் 18 ஆண்டுகள், காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயு குறையவேண்டும் அல்லவா? புவியியல் அறிஞர்களின் ஆய்வுப்படி,, சராசரி, ஒரு ஆண்டின் எரிமலை சார்ந்த கரியமில வாயு உமிழின் அளவு, ஏறக்குறைய 319 மில்லியன் டன்கள் (குறைந்த பட்சம் 65 மில்லியன் டன்கள்). மனித நடவடிக்கையால் உருவாகும் கரியமில வாயுவின் அள்வு 40 பில்லியன் டன்கள்! அதிக பட்க கணக்கையே எடுத்துக்கொண்டால், மனித உமிழ், எரிமலையைவிட 125 மடங்கு!
காட்டுத்தீக்கும் புவி சூடேற்றத்திற்கும் என்ன சம்பந்தம்?
காட்டுத்தீ என்பது காடுகள், பூமியில் தோன்றிய காலத்திலிருந்து நடக்கும் விஷயம். காட்டுத்தீ உருவாக, மிகவும் காய்ந்த நிலம் மற்றும் சருகுகள் தேவை. காட்டுத்தீ என்பது, காடு, தன்னையே குளிர்வித்துக்கொள்ளும் ஒரு முறை என்பதும் உண்மை. ஆனால், காட்டுத்தீக்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாக அதிகரித்துவந்துள்ளன. அத்துடன், பூமியில் காடுகளும், விவசாயத்திற்காக, இதே ஐம்பது ஆண்டுகளில், குறைந்து வந்துள்ளது. காடுகள் குறைந்தால், காட்டுத்தீயும் குறைய வேண்டும் அல்லவா? மாறாக, ஏன் அதிகரித்து வருகிறது? புவிச் சூடேற்றத்தால், நிலம் வறண்டு, தாவரங்கள் காய்ந்து, தீ பரவ அதிக சூழல் தோன்றுகிறது. முன்னர், நதிகள் பகுதியில் பார்த்ததை மீண்டும் நினைவில் கொள்ளவேண்டும். முன்னமே வந்த வசந்த காலம், முன்னமே முடிந்து, நீண்ட கோடையில், நதிகள் நீரின்றி, காடுகளை வறண்ட நிலமாக்கி விடுகிறது. வறண்ட காடுகள், தீ பரவத் தோதானதாக மாறிவிடுகின்றன. உதாரணத்திற்கு, கலிஃபோர்னியாவில், 2018 –ல் பயங்கரக் காட்டுதீக்கள், பல கோடி டாலர் நஷ்டத்தை உருவாக்கின. கனடாவின் பிரிடிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்டாவின் நிலையும் இதேதான். 2014 முதல், 2018 வரையிலான காலம், கலிஃபோர்னியாவின் மிகவும் வறண்ட காலமாக இன்று அறியப்படுகிறது. நான்கு ஆண்டுகளின் வறட்சி, இப்படி ஓர் இயற்கை நஷ்டத்தை ஏற்படுத்துவது, புவிச் சூடேற்றம் என்றால், அதற்குத் தகுந்த ஆதாரங்கள் உண்டு.
பருவநிலை மாற்ற அளவீடுகள் எவ்வளவு நம்பத் தகுந்தவை?
பருவநிலை அளவீடுகள், பல மூலங்களிலிருந்தும் விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்படுகின்றன. உலகின் பல்வேறு வானிலை மையங்கள், வானிலை அறிக்கைகளுடன், வரலாற்றுத் தரவுகளைச் சேமிக்கின்றன. செயற்கை கோள்கள், தொடர்ந்து வானிலையைப் பதிவு செய்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்களது வானிலைத் தரவுகளை உலக வானிலைக் கழகத்திற்கு மேலேற்றிவிடுகின்றன. வானிலை பலூன்கள் மற்றும் கடலில் பயணம் செய்யும் கப்பல்களும் தொடர்ந்து வானிலையை அளந்து, இவற்றை உலக வானிலைக் கழகத்திற்கு மேலேற்றிவிடுகின்றன. இவை யாவும் அடிப்படை அளவுகள், பூமியின், பல பகுதிகளில் அளக்க வசதிகள் இல்லை. இதனால், இந்த அளவுகளைக்கொண்டு, விஞ்ஞானிகள், கணினிகள் மூலம், ஒரு பகுதியின் சராசரி செப்பநிலையைக் கணிக்கிறார்கள். அளவுகளில் குறையிருக்க வாய்ப்புண்டு. இவற்றைக் கவனமாக, விஞ்ஞானிகள், அப்புறப்படுத்தவும் செய்கிறார்கள். இந்த அளவுகள், ஒரு பன்னாட்டு முயற்சி. எந்த ஒரு நாடும் இந்த அளவுகளை மாற்ற இயலாது. ஆகையால், பருவநிலை அளவீடுகள் விஞ்ஞானரீதியில், மிகவும் நம்பத்தகுந்தவை.
உண்மையிலேயே, கரியமில வாயுதான் காரணம் என்றால் செவ்வாய்க் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அதிகமாகக் கரியமில வாயு இருந்தும் ஏன் அங்கு -81 டிகிரி குளிராக இருக்கிறது?
அருமையான கேள்வி. செவ்வாய்க் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அதிகமாகக் கரியமில வாயு இருப்பது உண்மை. அங்கு மிகவும் குளிர் என்பதும் உண்மை. இது ஏன் என்று பார்ப்போம். முதலாவது, செவ்வாய்க் கிரகம், 142 மில்லியன் மைல்கள் சூரியனிலிருந்து தள்ளி இருக்கிறது. பூமி, 93 மில்லியன் மைல்கள் தள்ளியுள்ளது. இரண்டாவது, செவ்வாய் கிரகத்தின் விட்டம், பூமியைவிட அரை மடங்குதான். மூன்றாவது, செவ்வாயின் ஒரு வரும், 687 பூமி நாள்கள். நான்காவது, பூமியைவிடச் செவ்வாய் கிரகத்திற்குப் பத்தில் ஒரு பங்குதான் திணிவு (mass). ஐந்தாவது, பூமியைவிட 62.5% ஈர்ப்பு சக்திதான் செவ்வாயில் உண்டு. ஆறாவது, நம் காற்று மண்டலம், செவ்வாய்க் கிரகத்தைவிட 100 மடங்கு அடர்த்தியானது.
https://mars.nasa.gov/all-about-mars/facts/
மிகவும் தள்ளியிருப்பதால், குறைந்த ஈர்ப்பு சக்தி இருப்பதால், செவ்வாய்க் கிரகத்தில் கரியமில வாயு அதிகம் இருந்தாலும், அதைத் தரையளவில் வைத்துக்கொள்ள செவ்வாய்க் கிரகத்தில் இயலாது. இதனால், அதன் வாயு மண்டலம் சன்னமாக இருப்பதோடு, மிகவும் குளிராக இருக்கிறது. சூரியனிலிருந்து, அதன் தொலைவு. பல இடங்களில், கரியமில வாயு அங்கு உறைந்தும் காணப்படுகிறது (உறைநிலை -109 டிகிரி). ஆக, வாயு ஒன்றுதான். ஆனால், பூமியில், அதன் பங்கு வெப்பமேற்றுவது, செவ்வாயில் குளிர்விப்பது.
பருவநிலை விஞ்ஞானிகள், மனிதனால் புவிச் சூடேற்றம் துரிதப்படுத்தப்படுகிறது என்ற கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்கிறார்களா?
IPCC என்ற ஒரு பன்னாட்டு விஞ்ஞான அமைப்பை, 1988 -ல், ஐக்கிய நாடுகள் உருவாக்கியது. இதில் எல்லா நாடுகளின் பருவநிலை விஞ்ஞானிகளும் அங்கத்தினர். இந்த அமைப்பு, புவிச் சூடேற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றி ஆராய்ச்சியாளர்களின் மையம். நான்கு வருடத்திற்கு ஒரு முறை, அனைத்து நாடுகளுக்கும் புவிச் சூடேற்றம் மற்றிய அறிக்கையை இதன் விஞ்ஞானிகள் வெளியிடுகிறார்கள். அவ்வப்பொழுது, இடைக்கால அறிக்கைகளும் உண்டு. இந்தக் கட்டுரைத் தொடருக்காக, ஏறக்குறைய 1988 –லிருந்து அத்தனை அறிக்கைகளையும் படித்துத்தான், இந்தப் பாகத்தின் விஞ்ஞானக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். நாசாவின் சில அறிக்கைகளும் இதில் அடக்கம். நம் மனதில் தோன்றும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இந்த அமைப்பு பதில் சொல்லியிருப்பது, அதன் விவரமான ஆராய்ச்சியைக் காட்டுகிறது. இந்த சர்வதேச அமைப்பில் உள்ள 97% விஞ்ஞானிகள், மனித நடவடிக்கை புவிச் சூடேற்றத்திற்கு காரணம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். 1988, 1992, 1996, 2000 அறிக்கைகளைப் படித்தால், இந்த விஷயத்தில் வேறுபாடு இருந்தது. 2010 –க்குப் பிறகு, ஏராளமான சாட்சியங்கள் அடிப்படையில் விஞ்ஞானிகள், பெருவாரியாக இதை ஒப்புக்கொள்ளத் தொடங்கினர். 97% ஒப்புதல் என்பது விஞ்ஞான உலகில் மிகவும் அரிது. ஐன்ஸ்டீனின் ஒப்புமைக் கொள்கை, டார்வினின் இயற்கை தேர்வுக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாத விஞ்ஞானிகள் இன்றும் இருக்கின்றனர்!
எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக இருக்கும் பூமியில், இது போன்ற பருவநிலை மாற்றங்கள் நடந்த வண்ணம் இருப்பது நமக்குத் தெரியும். இது ஏன், அது போன்ற ஒரு மாற்றமாக இருக்கக்கூடாது?
பருவநிலை என்பது எப்போதும் மாறும் தன்மை கொண்டது. கேள்வியில் சொன்னதுபோல, பல மில்லியன் ஆண்டுகளாகப் பூமி, குளிர்ந்தும், வெப்பமடைந்துகொண்டும் இருப்பதும் உண்மை. இயற்கைக்கு என்று ஒரு மாறும் வேகம் இருக்கிறது. உதாரணத்திற்கு, மே மாதம் 20 ஆம் தேதி, இந்தியாவில் வெய்யில் சுட்டெரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்னதான் ஆசைப்பட்டாலும், மே 21 குளிர்காலமாகி 18 டிகிரிக்கு மாறுமா? இயற்கையின் மாற்ற வேகத்தில், அதற்கு நீங்கள் ஆறு முதல் ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும். மனிதனைப்போல, இயற்கை ஒன்றும் அவசரப்படுவதில்லை – அதனுடைய பல பில்லியன் ஆண்டு கதியில் இயங்குகிறது. இந்த இயற்கையின் இயக்க வேகத்திற்கு ஒப்ப, பயிர்கள் விளையவேண்டும், மிருகங்கள் / பூச்சிகளுக்கு, இரை கிடைக்கவேண்டும். படிப்படியாகத்தான் வெப்பம் குறைந்து குளிர் உண்டாக வேண்டும். அதற்கு, சூரியனைச் சுற்றிவரும் பாதையும், பூமியின் சுழற்சியும் இந்த மாற்றத்திற்கு உதவுகிறது. இயற்கையில், பூமி பனியுறை யுகத்திற்குச் செல்வதும் மீள்வதும், பல மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் நிகழும் விஷயம். மே 20 -லிருந்து, மே 21 –க்குள், கோடையிலிருந்து குளிர்காலம் உண்டாகிறது என்று வைத்துக்கொள்வோம். நம்மால் அந்த மாற்றத்தைத் தாக்குபிடிக்க முடியுமா? ஆனால், இயற்கையிடம் நாம் அவ்வாறு மாற்றத்தை உருவாக்கி நமக்கு வேண்டியதுபோல மாற எதிர்பார்ப்பது எவ்வளவு பொறுப்பற்ற செயல்? இதைத்தான், நாம் கடந்த 150 ஆண்டுகளில் செய்துள்ளோம். பிரச்சினை மாற்றத்தினால் அன்று, மாற்றத்தின் வேகத்தில்தான்.
விலங்குகள் மற்றும் பூச்சிகள் இந்தப் பருவநிலை மாற்றங்களைச் சமாளிக்கும். சும்மா ஏன் பதட்டப்பட வேண்டும்?
நம்மைப்போல, மிருகங்கள் மற்றும் பூச்சிகள் சூழலுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கின்றன. ஆனால், சூழல், ஓரளவிற்கு மேல் மாறினால், மிருகங்கள், மீன்கள் மற்றும் பூச்சிகளுக்கு இரை ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. தொடர்ந்து இரையே கிடைக்காத உயிரினங்கள் மடிகின்றன. அஸ்ஸாமில் இருக்கும் காசிரங்கா பூங்காவில், வேலி போட்டுக் காண்டாமிருகத்தைப் பாதுகாப்பதுபோல, எல்லா விலங்குகளையும் காப்பாற்ற முடியாது. அத்துடன், கடலிலும் பனிப்பாறைகளிலும் எப்படி வேலியிடுவது? மனித நடவடிக்கைகளால் சூடாகும் பூமி, பருவநிலை மாற்றங்களாகப் பூமி சமாளிக்கிறது. இந்த பூமியின் சமாளிப்பை, ஓரளவிற்கு மேல், விலங்குகள், மீன்கள் மற்றும் பூச்சிகளால், சமாளிக்க முடிவதில்லை. முந்தைய பகுதியில், எப்படித் துருவக் கரடிகள் இன்னும் 80 ஆண்டுகளில் மடிந்துவிடும் என்று பார்த்தோம். அது ஓர் உதாரணம்தான்.
1,800 முதல், மக்கட்தொகை ஆறு மடங்காகியுள்ளது. உலகின் பொருளாதாரம், ஐம்பது மடங்காகியுள்ளது. இதனால், ஏராளமான நிலம், தண்ணீர் போன்ற வளங்கள் மனித நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது, 1800 –க்கு முன்பு, மற்ற உயிரினங்களுடன் நாம் பங்கு போட்டுக்கொண்ட வளம் என்பதை மறந்துவிடக்கூடாது.
2005 –ல் IPCC விஞ்ஞானிகள், தங்களது அறிக்கையில் உலகின் 60% சூழலமைப்புகள் (ecosystems) 100 முதல், 1,000 மடங்கு வரை இயற்கையின் வேகத்தைவிட மோசமடைந்துள்ளது என்றனர். 2003 –ல், ஓர் ஆய்வில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள உயிரினங்களில் 42%, 2,100 –க்குள் மடிந்து விடும் என்று சொன்னது. மேல்வாரியாக இதைப் படித்தால், இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். ‘அமில மழைப்’ பகுதியில் பார்த்ததுபோல, இயற்கையின் சூழலமைப்புகளுக்கு அர்த்தம் உண்டு. பெரும்பாலும், காடுகளில், இது ஓர் உணவுச் சங்கிலியைச் சார்ந்தது. ஆரோக்கியமான உணவுச் சங்கிலிக்குப் பல உயிரினங்கள் தேவை. ஒரு பேச்சுக்கு, தேனீக்கள் மறைந்துவிட்டன என்று வைத்துக் கொள்வோம். நாம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள் என்று எதுவுமே நமக்கு கிடைக்காது. ஏனென்றால், நமது உணவுச் சங்கிலியில் தேனீ மிக முக்கியமானது.
உலகின் சராசரி வெப்பம் ஒரு டிகிரி அதிகமாகியதால் வந்த வினை, இவ்வகைப் பேரிழப்பு. இதை சரி செய்வது மிகவும் கடினம். அடுத்த பகுதியில் இன்னும் சில விஞ்ஞான கேள்விகளையும், அதன் பதில்களையும் முன்வைப்போம்.