பண்டைச் சீன இலக்கியம் (Pre -Qin காலம்)

மூலம்: Prof.Li Xiaoxiang / இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு: Yang Liping 

தமிழாக்கம்: கோரா  

சீன இலக்கியத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதன் பழமையை  ஆராய்ந்தால் பதிவு அடையாளங்கள்  வரலாற்றுக்கு முந்திய காலம் வரை நீளக் கூடியது  பழங்காலத்தில், ஆதார உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி முறைகளையும் பயன்படுத்திய பாமர மக்கள், கடினமான வேலைகளைச்  செய்யும்போது, மூச்சு விடுவதையொட்டி யோ-கோ,யோ-கோ போன்ற சந்த இசைவுள்ள ஓசைகளை  எழுப்பினார்கள். இத்தகைய சந்த இசைவுள்ள “தொழிற்பாடல்கள்” மூலம், அவர்களால் மூச்செழுப்பலையும்  உடல் அசைவுகளையும்  ஒருங்கிணைத்துக் கொள்ள முடிந்ததோடு களைப்பை அகற்றி உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முடிந்தது. நாளடைவில் தொழிற்பாடல்களின் உள்ளடக்கம் மேலும்  செறிவுற்று யாப்பும் கருத்தாழமும் கொண்ட  பாடல்களாயின. பின்னர் அவர்கள்  நடனமாடும் போதும்,  கடவுளுக்கோ அல்லது மூதாதையர்க்கோ பலி கொடுக்கும் போதும் இப்பாடல்களை விரும்பிப் பாடினார்கள். வரலாற்றுக்கு முந்திய காலத்தில் எழுத்துமொழி உருவாகாததால், இக்கவிதைகள் வாய்மொழி வழியாக மட்டுமே  அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டி இருந்தது. இல்வாய்ப்பாக இக் கவிதைகள் பெரும்பாலும்  காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறைந்தன. கீழ்க்காணும் கவிதை, பழம்பெரும் பேரரசர்களான யாவ் (Yao ) மற்றும் ஷுன் (Shun ) காலத்திலிருந்து (23வது நூற்றாண்டு (B.C,E ) வாய் மொழி வழியாகவே பயணித்து வந்துள்ள புகழ்பெற்ற ஒரு நாட்டுப் பாடல்.

நாம்  புலர்காலை உழைக்கிறோம்,

நாம்  அந்திநேரம் ஓய்வெடுக்கிறோம் .

நீர் அருந்த கிணறு வெட்டுகிறோம்,

உணவுக்காக நிலத்தை உழுகிறோம்.

பேரரசர்களால்  எமக்கு  என்ன பயன்?

Pre-Qin இலக்கியம் 

கின் வம்சத்துக்கு (221-207 B.C E ) முந்திய காலத்து இலக்கியமே சீன இலக்கிய வரலாற்றின் முதல் அதிகாரம் என்று சொல்லப் படுகிறது. கதைப் பாடல்கள் மற்றும் தொன்மங்களைத் தவிர, கவிதைகள் மற்றும்  உரைநடைகளும்,  இக்கால இலக்கியத்தை அடையாளம் காட்டுகின்றன. பண்டைய சீனக் கவிதை வரலாற்றின்  நினைவுச் சின்னங்களாக இருப்பவை: The Book of Songs மற்றும் Songs of  the South என்னும் இரு நூல்கள்.  அதே சமயம் Warring States காலத்தின்  வரலாற்றுச் சார்பானதும்  பிறவுமான உரைநடைக் குறிப்புகள் பொதுவாக பழமை வாய்ந்த  உரைநடையின்  மாதிரிகளாகக் கருதப்படுகின்றன.

பழமையான தொன்மங்கள் (myths) 

இயல்பான மற்றும் பண்பாட்டுக்குரிய அற்புதங்களை  விவரிப்பதற்காக பழங்கால மக்கள் தொன்மங்களை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக, வானமும் புவியும் எப்போது நிலைத்திருக்க ஆரம்பித்தன? மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சூரியன், நிலவு, விண்மீன்கள், காற்று, மழை  இடி மற்றும் மின்னல் ஆகிய அனைத்தும் யாவை? அறிவியல் அறிவு பற்றாக்குறையின் காரணமாக,  பழங்கால மக்கள் தங்கள் வளமான கற்பனையைப் பயன்படுத்தி பற்பல வினோதமான மிகைக் கற்பனைக்  கதைகளையும் புனைவுகளையும் உருவாக்கினார்கள். 

எழுத்து மொழி வருவதற்கு முந்திய காலத்தில்  இத்தொன்மங்கள் வாய்மொழியாகவே  அடுத்த தலைமுறைக்குக்  கடத்தப் பட்டன. பின்னர் அவற்றில் சில கின் வம்சத்துக்கு முந்திய நூல்களிலும் ஆவணங்களிலும் பதிவேற்றப் பட்டன. கின்வம்சத்துக்கு முந்திய  நூல்களில், Classic of Mountains and Seas தான் கிட்டத்தட்ட  நூறு பழமையான தொன்மங்களின் விவரங்களைக் கொண்ட  மிகு வளமான மூலநூல். கீழ்காணும் நான்கு  மிகவும் பரிச்சயமான கதைகளையும்  அது உள்ளடக்கி இருக்கிறது. அவையாவன:

1.Nu Wa Patches the Sky

2.Pan Gu Separates Heaven from Earth

3.The Mythical Bird Jingwei Fills up the Sea

4.:Kuafu Chases the Sun

இந்த அழகிய கட்டுக் கதைகள் அளித்த  வளமான உள்ளூக்கம், பிற்கால இலக்கியம் மீது நீண்ட கால தாக்கம் கொண்டிருந்தது. 

பாட்டுப் புத்தகம் (The Book of  Songs )

The Book of Songs  என்னும் 305 கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுப்பு,  சீன வரலாற்றில் அனைத்திற்கும் முந்தியதும் . இன்றுமுள்ளதுமான  நூல். ஆதி (early ) மேற்கு zhou வம்சம் (11-ஆம் நூற்றாண்டு B.C .E ) முதல் இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின்(6-வது நூற்றாண்டு B C .E ) பாதி வரைக்குமான 5 நூற்றாண்டுக் கவிதைகளை  உள்ளடக்கிய நூல் .

ஆதியில் இதில் 3000க்கும் மேற்பட்ட கவிதைகள் இருந்தன என்றும் ஆனால் அவற்றை   கன்பூசியஸ் (Confucias) கவனமாக ஆய்வு  செய்து தற்போதைய எண்ணிக்கைக்கு  (305)  குறைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. இக்கவிதைகள் முன்பு சடங்குகளிலும் விழாக்களிலும் மேலும் கேளிக்கைகளிலும் கூட இன்னிசையோடு பாடப்பட்டு வந்தன. பின்னர் ஐம்பெரும் (5) கன்பூசிய  செவ்விலக்கியங்களில் (Wu Jung )  இதுவும் ஒன்றாக ஆகிவிட்டது.

இந்நூல் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை:Feng (நாட்டுப் பாடல்),Ya (அரசவைப் பாடல் ) மற்றும் Song (தெய்வீகப் பாடல் ): Feng பகுதியில்  15 மண்டலங்களில் சேகரித்த நாட்டுப் பாடல்கள் உள்ளன. நூலின் பெரும்பகுதியான இது 160 நாட்டுப் பாடல்களை அடக்கி இருக்கிறது.பெரும்பாலும் இவை மக்களின் வாழ்வையும் அனுபவங்களையும் பிரதிபலிப்பவை.

Zhou வம்ச சாம்ராஜ்ய பேரவையில் பாடப்படும் பாடல்களை  Ya பகுதி அடக்கி இருக்கிறது,  மூதாதையினர் கோயில் உயிர்ப்பலி செயல்பாடுகளின் போது ஓதப்படும் படும் பாடல்களை Song பகுதி அடக்கியுள்ளது.மிகவும் நயமான சில பாடல் வரிகளை  காதல் பாடல்களில்  காண முடியும்.

பாட்டு நூலின் சில புகழ் பெற்ற பாடல் வரிகள்:

collar: உன் காலர் ப்ளூ மற்றும் ப்ளூ / திரும்பத் திரும்ப உன்னை நினைக்கிறேன் 

Rush leaves: பனை இலைகள் கரும் பச்சையாய் வளர்கின்றன ;/ வெண்பனித் துளிகள் உறைபனியாகின்றன../ நான் காதலிக்கும் பெண்,/ எதிர் கரையில் இருக்கிறாள்.

In the Garden Is  a Peach Tree: என் இதயம் வருத்தம் தோய்ந்துள்ளது,/யார் புரிந்து கொள்ள முடியும் ?/யார் புரிந்து கொள்ள முடியும்?

Millet Plump: என்னை அறிந்தவர்கள் என் இதயம் சோகத்தில் ஆழ்ந்திருப்பதை அறிவார்கள்,/அதே சமயம் என்னை அறிந்திராதவர்கள் நான் எதைத் தேடிக் கொண்டிருந்தேன் என்று வியப்புற்றனர்.

Drumbeat: நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன், /உன்னுடனே முதிர்வடைவேன்.

பாடல் சேகரிப்பாளர்கள்:

Zhou அரசாங்கம் நாட்டுப் பாடல்களை சேகரிப்பதற்காக ஒரு சிறப்பு அதிகார பூர்வமான அரசு வேலை ஒன்றை  உருவாக்கியது. நியமிக்கப்பட்ட  பணியாளர்கள் மரத்தால் ஆன மணியை ஒலித்துக்கொண்டு பற்பல சமூகங்களைப் பார்த்து அவர்களின் இசைப் பாடல்களைப் பதிவு செய்து கொண்டனர்.பாடல்  சேகரிப்போர் தாம் சேகரித்த பாடல்களை அரசவை இசைக்கலைஞரிடம் கொடுத்தனர். அவற்றை வகைப்படுத்தி மெருகூட்டிய பின், இப்பாடல்கள் பேரரசரிடம் சமர்ப்பிக்கப் படும். பொதுமக்களின் உணர்வுகளையும்,சமூகத்தின் நிலைமை யையும் பேரரசர் அறிந்துகொள்ள இப்பாடல்கள் உதவி இருக்கக்  கூடும். 

The Book of Songs-ல் இருந்து ஒரு கவிதை:

உலர்ந்து போகாத புல் உண்டா ?

உலர்ந்து  போகாத புல் உண்டா?

நான் அணிவகுப்பில் இல்லாத நேரம் எது ?

இங்கே இருந்து அங்கே போ என 

விரட்டப் படாத மனிதன் உண்டா ?

கருகாத புல் உண்டா?

துணையின்றி ஒற்றையாய் இல்லாதவர் யார்?

ஒரு ஏழைப் படை வீரன் நான்,

என்னை ஒரு மனிதனைப் போல் நடத்தாதது ஏன்?

நான் ஒரு புலியோ காளையோ அல்ல,

வனாந்திரத்தில்  ஓடிப் போய்விட .

ஒரு ஏழைப் படைவீரன் நான்,

விடியல் முதல் அந்தி வரை ஓயாது உழைக்கிறேன்.

பாடலின் பின்புலம்:

இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களிலும் (771-476 B.C.E ),  சண்டையிடும் நாடுகள் (475-221 B.C.E ) காலங்களிலும்  அடிக்கடி போர்கள்  மூண்டன . சாமான்ய மக்கள் தம் குடும்பங்கள் பிளவடைந்து   வீடு மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து பரிதவித்து  நிற்பதைக் கண்டார்கள்.  பல இளைஞர்கள் போரில் சண்டையிடுவதற்கும்  கட்டாயமாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  படைவீரர்கள் எவ்வாறு  ஓய்வின்றி இங்கும் அங்கும் விரைந்து  போகுமாறு வற்புறுத்தப்பட்டு  வன விலங்குகளைப் போல் வாழ்ந்தார்கள் என்று இப்பாடல் கூறுகிறது.

மொழி பெயர்ப்பு நூல் விவரம் :

Gateway To Chinese Classical Literature (Pre-Qin to Qing Dynasty)-Compiled by ASIAPAC Editorial’

இந்நூலின் முகவுரை மற்றும் முதல் அத்தியாயம் (Pre-Qin Literature ) மட்டும் இங்கே  தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது 

சொல்லடைவு: 

Emperors Yao and Shun:

Emperor Yao- பழம் பெரும் சீனப் பேரரசர்-ஆட்சிக் காலம் (2333-2234 BCE). 

Emperor Shun -பழம் பெரும் சீனப் பேரரசர் -ஆட்சிக் காலம் (2291-2184) 

Zhou dynasty (1045-221): Zhou வம்சத்தின்  800 ஆண்டுகால ஆட்சி மூன்று பாகங்களாக பிரிக்கப் பட்டுள்ளது . Western Zhou காலம்  (1045-770 BCE ); இளவேனில் மற்றும் இலையுதிர்காலம் (770-476 BCE ); Warring States காலம் (475-221BCE )   

 Western Zhou Period  (1045-771 B.C.E ): பண்டைய சீன Zhou வம்ச ஆட்சியின் முதல் பாதி காலம். பேரரசர் Wu (of Zhou ) Shan வம்ச ஆட்சியை வீழ்த்தி தன் வம்ச ஆட்சியை நிறுவினார். 771BCE -ல் அவர் Quanrong நாடோடிகளால் கொல்லப் பட்டார். 

Spring and autumn Period (770-476 B.C.E) :ஈஸ்டர்ன் Zhou காலத்தின் முதல் சகாப்தம் இளவேனில் மற்றும் இலையுதிர் எனப்படுகிறது. இது சிறு சீன முடியரசுகள் வெவ்வேறு ஆளுகைக் கருத்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட சகாப்தம்.

Warring States Period (475-221 BCE ); பண்டைய சீன வரலாற்றில் இடைவிடாத போர்கள், ஆட்சி அதிகாரம் மற்றும் ராணுவ சீரமைப்புகள்  ஆகிய சிறப்பு இயல்புகளைக்  கொண்ட ஒரு சகாப்தம்.  ஏழு அல்லது  மேற்பட்ட  பகையாளி  சீன முடியாட்சி  நாடுகள் ஆக்ரமிப்பதற்காகவும்  அல்லது ஆதிக்கத்தை வலியுறுத்திக் கொள்வதற்காகவும்  300 ஆண்டுகள் தமக்குள் கடும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்  இந்த சகாப்தம் இளவேனில் மற்றும் இலையுதிர் சகாப்தத்தை அடுத்து வந்தது. Qin வெற்றிப் போர்கள் இதை முடிவுக்குக் கொண்டு வந்தன. 

Confucius (கன்ஃஃப்யூசியஸ் ):இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்து   சீன தத்துவ ஞானி, கவிஞர் மற்றும் அரசியல் வல்லுநர். காலங்காலமாக இவர் நிகரற்ற சீன அறிஞராகக் கருதப்பட்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.