வருடம் 1968, டிசம்பர் 24. இன்றைக்கிருந்து 45 ஆண்டுகளுக்குமுன் இந்த நாளில் அப்பல்லோ 8 எனும் விண்கலம், சந்திரனைச் சுற்றிக்கொண்டிருந்தது.
நான்காம் சுற்றின்போது, விண்கலத்திலிருந்த வீரர்கள், விண்கலத்தை மெல்லச் சுழலச்செய்தனர். அப்போது அம்மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவர், விண்கலத்தின் ஜன்னலின் வழியாக நிலவின் தொடுவானத்திலிருந்து பூமி மெல்ல எழுவதைத் தற்செயலாகக் கண்டார்.
உடனே சகவீரரை விரட்டி கலர் ரோலைக் கொண்டுவரச் செய்வதற்குள் அவரது ஜன்னலில் பூமி மறைந்துவிட்டது… ஆனால், சற்று நேரத்தில் பூமி அடுத்த ஜன்னலில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. வில்லியம் ஆண்டர்ஸ் என்ற அந்த வீரர் அந்தக் காட்சியைக் க்ளிக் செய்த தருணம், இருபதாம் நூற்றாண்டின் ஒரு மிக முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.
உண்மையில் பூமி நிலவின் எந்த இடத்திலிருந்தும் ‘உதயமாகவோ”, “மறையவோ” செய்யாது. விண்கலம் தனது நிலவின் சுற்றுப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, விண்கலம் சுழன்றதால் நிலவின் தொடுவானத்திலிருந்து பூமி மெல்ல “உதயமாவதை” போன்ற தோற்றமளித்தது.
What Unites Us என்ற புத்தக ஆசிரியர் டான் ரேதர், இந்தப் புகழ் பெற்ற புகைப்படத்தை, தருணத்தைக் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“இந்தச் சித்திரம் மிகவும் அமைதியானது, அதே சமயத்தில் மூச்சை இழுத்துப்பிடிக்க வைப்பது. ஒரு கொந்தளிப்பான ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. அது ஒரு கிறிஸ்மஸ் ஈவ் நாள், ஆனால் அங்கிருந்து (நிலவில், அத்தனை தொலைவிலிருந்து) வியட்நாமில் ஒரு கோரமான போர் நடந்துகொண்டிருக்கிறது அல்லது ஐரோப்பாவைப் பனிப்போர் பிளவுபடுத்துகிறது என்பதை நீங்கள் ஒருபோதும் அறியமாட்டீர்கள். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அல்லது பாபி கென்னடியின் படுகொலைகளை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.
அந்தத் தொலைவிலிருந்து, மானுடர்கள் கண்களுக்குப் புலப்படாதவர்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் தேசிய எல்லைகளும்கூட. இன, கலாசார, அரசியல், ஆன்மீக ரீதிகளாக நம்மைப் பிரிக்கும் எதுவும் இச்சித்திரத்தில் இல்லை. இதில் நாம் காண்பது, ஒரு குழைவான கிரகம் பிரபஞ்சத்தின் தனிமையில் இருப்பதை மட்டுமே.
“
இச்சித்திரத்திற்கு 45 வருடங்கள் பூர்த்தியானதை ஒட்டி நாஸா ஒரு வீடியோ படம் வெளியிட்டுள்ளது. விண்வெளியில் அன்றைக்கு அப்பல்லோ 8-இன் நிலை மற்றும் விண்வெளி வீரர்கள் விண்கலத்தின் ஜன்னல்கள் வழியாகப் பார்த்தவை மீண்டும் காட்சி உருவகப்படுத்தி, வீரர்கள் அந்த தருணத்தில் பேசிய ஆடியோவுடன் பொருத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.