கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்

[பேய் அரசு செய்தால்… தொடர்: பகுதி ஒன்பது ]

எங்கும் நிறைவது பலரது கனவாக இருக்கலாம். அதிலும், வணிக நிறுவனங்கள் தங்கள் கொடிகளை என்றென்றும் தாழப் பறக்க அனுமதிக்கப் போவதில்லை. பல்வகையான உத்திகளைப் பயன்படுத்தி தன் வணிக அரசை நிறுவிய மார்க் ஜுக்கர்பெர்க், தன் குழுமத்தின் விரும்பத்தகாத செயல்பாடுகளைப் பற்றி வெளியான செய்திகளிலிருந்து கவனத்தைத் திருப்ப, முகநூலிற்கு ‘மெடா’ (Meta) என்ற புதுப் பெயரை வைத்தார். மெடாவர்ஸ் இணையத்தின் வளர்ச்சியை மிஞ்சக்கூடிய ஒன்று என்று இந்தத் துறையில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். மேலும், இதைச் செய்து கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் அல்லது முயன்று கொண்டிருக்கும் பலப் பெரிய தொழில் நுட்பக் குழுமங்கள் இந்தக் களத்தில் ஏற்கெனவே உள்ளன. ஆயினும் ‘மார்க்’ எனும் கோழி சிலம்பியது. அதன் பண வலிமையும், பயனர் எண்ணிக்கையும் ஒரு புறமிருக்க குருகுகளின் குரலையும் செவிமடுப்போமே?.

‘ஸ்னேப்’ (Snap) என்ற இளைஞர்களைக் கவரும் நிறுவனம் ‘மார்க்’கிற்கு பொறாமையைத் தருகிறது.  ‘ஸ்னேப்’, ஒரு ‘அதிகரித்த நிஜத்தின்’ (Augumented Reality) முகவரி என்றே சொல்லலாம். அவர்கள் கொண்டு வந்த எ ஆர் வடிகட்டிகள், (AR Filters) இணைக்கப்பட்டுள்ள லென்சஸ், (Connected Lenses) முப்பரிமாண பிட்மோஜிஸ் (3D Bitmojis) வாலிபர்களின் விருப்பமாக இருக்கிறது. அவர்களுக்கும் ‘டிக்டாக்’ சவால் விடுகிறது.

மெடாவர்ஸ் என்பது ஒரு நிகழ் நிலை வெளி. அதில் நீங்கள் உருவாக்குபவராகவும், உங்களின் பௌதீக இருப்பிடத்தில் இல்லாத மற்றோருடனும் இணைந்து ஒரே நேரத்தில் பங்கு பெறுபவராகவும் இருக்க முடியும். இந்த மாற்றத்தில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் முழு மூச்சாக இறங்குவதற்கான சாத்தியங்கள் இந்த ‘மெடா’ வினால் அதிகரிக்கலாம். ஆப்பிள் நிறுவனம் ‘அதிகரித்த உண்மை நிலை’ என்று ‘எ ஆர் இகொ சிஸ்டம்சை’ (AR Ecosystems) கட்டமைத்து வருகிறது. சாம்சங் நிறுவனம் ‘நிகழ் நிலை உண்மையில்’(Virtual Reality) வலுவாக உள்ளது. அமெசானோ, இணைய வணிகத்துறையில் மூச்சுத் திணற வைக்கும் ஆளுமையோடு நிறுத்திக் கொள்ளவில்லை!(டிசம்பர் 17-ல் இந்திய காம்பெடிஷன் கமிஷன்-CCI அமெசான் குழுமத்திற்கு, அது ஃப்யூசர் நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள வழக்கில், முழுமையான செய்திகளைக் காட்டாமலும், மறைத்தும் செயல்பட்டதிற்காக ரூ 202 கோடி அபராதம் விதித்துள்ளது) நிகழ்நிலை விளையாடல்களுக்கான ஒரு அமைப்பையும் வைத்துள்ளது.

மைக்ரோசாப்ட்

இது ‘நிறுவன மெடவர்ஸ்’ (Enterprise Metaverse) என்ற கருத்தைத் தழுவிக்கொண்டுள்ளது. அதை அமைப்பதற்கான இடு பொருட்கள் அதனிடம் ஏராளமாக உள்ளன. மேகக் கணக்கீடுகள் (அஸ்யூர்-ஐஒடி Azure IOT), இலக்க இரட்டையர்கள் (அஸ்யூர் டிஜிடல் டுவின்ஸ்- Azure Digital Twins), வரைபடங்கள் (அஸ்யூர் மேப்ஸ்-Azure Maps) பகுத்தாய்வு (அஸ்யூர் ஒத்திசைந்த பகுத்தாய்வுகள்-Azure Synapse Analytics), உண்மைத் தோற்றக் காட்சிகள், போன்றவற்றோடு விளையாடல்களுக்கான மைன்க்ராப்ட்(Mine craft) எக்ஸ்பாக்ஸ் (Xbox) உள்ளிட்டவை அதன் வசத்தில் உள்ளன. நிகழ் நிலையில் எதையும் வழங்கும் வண்ணம் இது ஆழமாக வேரூன்றி இருக்கிறது.  ஆனாலும், நிகழ் நிலை குழுமக் கூட்டங்கள் நகைப்பிற்குரியனவாக இருக்கின்றன.

இத்துறையில் நம் கவனத்தைக் கவரும் வேறு சில நிறுவனங்கள்- டிக்டாக் (Tiktok) உரிமையாளரான பைட் டான்ஸ்,(Byte Dance) வி சேட்(We chat) உரிமையாளரான டென்சென்ட்,(Tencent) இணைய வணிகக் குழுமமான அலிபாபா. 

பெருங்கதையாடலான மெடாவர்ஸ் எப்படியிருக்கும் என்பதை நிகழ் நிலை விளையாட்டுக்கள் உணர்த்தி வருகின்றன. ‘யூனிடி டெக்னாலஜிஸ்சின்’ (Unity Technologies) யூனிடி என்ற ‘விளையாட்டை வளர்க்கும் செயலி’ (Game Development Engine) அதில் பங்கு பெறுவோர், முப்பரிமாண சூழல்களை உண்டாக்கி வெவ்வேறு தளங்களில் அதைக் காட்சிப்படுத்த உதவுகிறது. உதாரணமாக தாய விளையாட்டிலிருந்து சொக்கட்டான் விளையாட்டிற்குத் தன் மற்ற முப்பரிமாண சொத்துக்களைப் பற்றிய கவலை இல்லாமல் செல்ல முடிவது அதன் பலம். இந்தச் செயலி மெடாவர்சிற்கு மிகத் தேவையான ஒன்று. ஆனாலும், வரைகலை மேம்பாடு கொண்ட ‘எபிக் கேம்ஸ்’ (Epic Games)சின் ‘நம்பிக்கைக்கு அப்பாலான இயந்திரம்’ (Unreal Engine) அளிக்கும் கட்டுமானங்கள் தனிச் சிறப்பு கொண்டவை. 

மெடாவர்ஸ் அதன் அத்தனை அம்சங்களாலும் தொழில் தொடங்கு நிறுவனங்களை ஈர்த்திருக்கிறது. மார்க் இந்தியாவின் இத்தகைய நிறுவனங்களைப் பற்றிச் சொல்லும் போது இவைகளில் சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், உருவாக்கும் திறன் கொண்டவர்கள், துடிப்புடன் இயங்கும் தொழில் தொடங்குவோர், அமைந்திருப்பது அற்புதமாகும் என்கிறார். இந்தியா இத் துறையில் சிறப்பாகப் பணியாற்றும்.

‘இம்ப்ராபபில்’(Improbable) என்ற நிறுவனமும் கணினி மேகக் கட்டமைப்பில் விளையாடல்களைக் கொண்டு வந்து இப்போது பல்துறைக்களுக்குப் பயனாகும் வகையில் செயலாற்றுகிறது. பலர் பங்கெடுக்கும் விளையாட்டுக்களில் உண்மையான ஒத்திசைவை கொண்டு வருவது தொழில் நுட்ப சவால். அப்படியிருக்கையில் 10,000 நபர்கள் வரை இணைந்து விளையாடும் வகையில் இந்த நிறுவனம், ‘மார்பியஸ் திட்டம்’ (Morpheus Project) என்ற பெயரில் செயலித் தீர்வுகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. $2 பில்லியன் மதிப்புடன் சாப்ட்பேங்கும்,(Soft Bank) அன்ட்ரீசென் ஹோரோவிட்சும் ( Andreessen Horowitz) இதைத் தாங்குகிறார்கள்.

இன்னும் சில குருகுகள்: மேஜிக் லீப்,(Magic Leap) ஓபன் சீ(Open sea)

க்ரிப்டோவும், மெடாவர்ஸும்

ஒரு காலத்தில் க்ரிப்டோ சிலரின் மத்தியில் மட்டுமே உலாவி வந்தது; இப்போதோ அதை அனைவரும் அறியவும், முடிந்தால் பெறவும் விருப்பப்படுகிறார்கள். இன்றைய இணையக் கட்டமைப்புகள் மாறி, பணப் பரிவர்த்தனை முறை மாறி, அதிசய அற்புதமான மெடாவர்ஸ் வளர்ச்சியுறுவது அனைத்தும் க்ரிப்டோவினால் சாத்தியமாகும் என்று க்ரிப்டோவின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

தொடரேட்டுத் தொழில் நுட்பத்தின் ஆரம்பக் காலக் கட்டங்களில் நூதனத் தொழில் புரட்சி என்று அது அழைக்கப்பட்டது; உண்மையில் அது சிறந்த தொழில் நுட்பம் தான். ஆனாலும், கொந்தர்கள், வலை பெயர்த்தர்களின் நிழல் நடவடிக்கைகளில் தொடரேட்டுத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவான இலக்க இணைய நாணயங்கள் பெரும் பங்கு வகித்தன. அந்த நாணயங்களின் மதிப்பும் அதிக ஏற்றத் தாழ்வுகளுக்கு உள்ளானது.

2020-ல் மிக வளர்ச்சியுற்ற ‘பரவலாக்கப்பட்ட நிதி’ (Decentralized Finance)யின் மூலம், ‘களங்கமில்லா இலச்சினைகளின்’(Non fungible Tokens-NFT) வழியாக இலக்க நாணய சந்தை மறு வாழ்வு பெற்றது. கலைப் பொருட்கள் என் எஃப் டிகளாக உருமாற, இந்தச் சந்தையின் மதிப்பு $10.6 பில்லியன்களாக எகிறியது.

க்ரிப்டோ, அரசின் நிதி மேலாண்மைக்கும், அரசின் நாணயத்திற்கும் விடப்பட்டுள்ள சவால்தான். ஆனால். இத்தகைய க்ரிப்டோ நாணயங்களுக்கு அடிப்படை மதிப்பு கொண்ட இணைச் சொத்துக்கள் கிடையாது. மேலும், முகமறியா வணிகத்தில் அரசு இழக்கும் வரி அதிகம்; முக்கியமான அரசுத் துறைகள் கொந்தர்களுக்குப் பலியாகி சந்திக்கும் இழப்புகளும் அதிகம். இதை முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது, இதனால் ஏற்படும் சூழலியல் நட்டங்களை எவ்விதம் ஈடுகட்டுவது என்பவை சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்.

சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்:

 • 25-10-2021 நிலவரப்படி ஒரு நாளில் எதீரியம் பணப் பரிமாற்றம் $1.3 மில்லியன்
 • அன்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் க்ரிப்டோ நிதி $2.2 பில்லியன்
 • 2791 கணினிகள் எதீரியம் வலையில் இயங்குகின்றன.
 • விலையுயர்ந்த க்ரிப்டோ என் எஃப் டி$7.56 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 • தனிப்பட்ட செயல்பாடுகளுடனுள்ள பணப்பைகள் $1.54 மில்லியன்.
 • 2021 மூன்றாம் காலாண்டில் களங்கமில்லா இலச்சினைகளின் வர்த்தகம் $10.7 பில்லியன்

டி வி எல்(TVL) என்பது  ‘டெலிவிஷன் லைன்ஸ்- அதன் தொடர்முறை (Analog) படப்பிடிப்புக் கருவிகள் கிடைமட்டத் தோற்றத்திலிருந்து கண்டறிந்து சொன்னது இது: அக்டோபர் 2020-ல் ‘பரவலாக்கப்பட்ட சந்தையில்’ $20 பில்லியனாக இருந்த பணப்புழக்கம், அக்டோபர் 2021-ல் $106 பில்லியனைத் தாண்டியுள்ளது. மனிதர்களின் பேரார்வமும், பேராசையும் தென்படுகிறது இதில்.

பிட்காயின், எதீரியம், மற்றைய இலக்க நாணயங்கள், தொடரேடு என்னதான் வேறுபாடு?

பரவலாக்கப்பட்ட தொடரேடுகள் தன்னார்வலர்களால் நடத்தப்படுகின்றன. இவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பதிவேட்டின் நகலும், தொடரேட்டில் நடைபெற்ற பரிமாற்றத்தை சரிபார்க்கும் செயலியும் உண்டு. உட்பொதியப்பட்ட கிரிப்டோ நாணயங்கள் சிலவற்றில் உண்டு. ஒரு பரிமாற்றத்தை உறுதி செய்வோருக்கு அவை கொடுக்கப்படுகின்றன. இதை முதலடுக்கு தொடரேடு எனச் சொல்கின்றனர். சோலானா,(Solana) அவலாஞ்சி(Avalanche) போன்றவையும் இவ்வகைகளே. சோலானாவில் க்ரிப்டோ விண்ணப்பங்களை மிக விரைவாக ஏற்ற முடிகிறது. இப்போது இருக்கும் வலைத்தளங்களின் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டு, மேலே செல்ல பயனர்களுக்குச் சுலபமாக உதவுகிறது. அவலாஞ்சியில் கால விரையம் ஏற்படுவதில்லை. இரண்டுமே எதீரியத்தைக் காட்டிலும் மேம்பட்ட ஏடுகள்.

பிட்காயினும், எதீரியமும் அவ்வவற்றிகான நாணயங்கள் உள்ளவை. (பிட் காயின், ஈதர்) பிட்காயின் என்பது ஒருவருக்கொருவர் என்பதாக, அதாவது, பணம் கொடுப்பதும், பெறுவதும் இருவரிடையேயான ஒரு வணிகமாகச் செயல்படுகிறது. பிட் காயின் என்பதை ‘இலக்கத் தங்கம்’ என்று சொல்கிறார்கள். எதீரியம் பரவலாக்கப்பட்ட கணினியாகும். ஆனால், எதீரியம், சிக்காலனவற்றையும் கையாளும் திறமை படைத்தது. கட்டளைகளும், தர்க்கமும்  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதை நடைமுறைப் படுத்தும் சாத்தியங்களுள்ளது இது. ‘என்னைப் புகழ்ந்து பாடினால், அதுவும் இதுவரை எவரையும் புகழாத வகையில் பாடினால் மட்டுமே இந்தப் பொற்கிழியை தருமிக்குத் தாரும் அமைச்சரே’ என்ற கட்டளையை நிறைவேற்றும் இது!

பத்தொன்பது வயதில், வண்ணக் கனவுகளுடன் பல யுவன், யுவதிகள் இருக்கும் கால கட்டத்தில், விடாலிக் புட்டரீன் (Vitalik Buterin) என்ற ருஷ்ய- கனடியர் எதீரியத்தின் இணை- அமைப்பாளர் ஆனார். 2011 ல் பிட்காயின் பிறந்து இரு வருடங்கள் ஆகியிருந்தன. முதல் முறை அவரது தந்தையின் மூலம் அதைப் பற்றி அறிந்த அவர் அது வெற்றி பெறப்போவதில்லை என நினைத்தார். ‘வேர்ல்ட் ஆஃப் வார் க்ராஃப்டில்’ (World of War Crafts)  ப்ளிஸ்ஸர்ட் மகிழ்வூட்டும் தளத்தில்(Blizzard Entertainment ) ஒரு பாத்திரம் கணினியாக மாறியது. அதிலிருந்து பரவலாக்கப்பட்ட கணினி என்ற கருத்தாக்கம், இவரைக் கவர்ந்தது.

2016-ல் இவர் ‘வொயர்ட்’(Wired) இதழிற்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் “அதிகாரமென்பது பூஜ்யங்களின் தொகுப்பு விளையாட்டு. ஏதுமில்லாதோருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று  எவ்வளவோ அழகான வார்த்தைகளைக் கோர்த்து நீங்கள் சொல்வதன் உட்பொருள் பெரும் முதலைகளின் ஆக்கிரமிப்பைக் குறையுங்கள் என்பதே. தனிப்பட்ட முறையில், அவர்களை நன்றாகத் திருகுங்கள் என நான் சொல்கிறேன். அவர்களிடம் இல்லாத பணமா?”

2013-ல் அவர் எதீரியம் பற்றி வெளியிட்ட வெள்ளை அறிக்கை க்ரிப்டோ ஆர்வலர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. 2015-ல் உலா வரத் தொடங்கிய எதீரியம் மிகப் பிரபலமாகி சந்தையில் பயன்படுத்தப்படுகிறது. தன்னார்வலக் குழுவினர் இதை நடத்துகிறார்கள். தன் 27-வது வயதில் அவர் இதன் மேம்பாட்டிற்கானத் தீர்வுகள் கொணர்வதில் ஈடுபட்டுள்ளார்.

க்ரிப்டோவின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 • ‘தடம் விளங்கா பணப் பரிமாற்றத்திற்கான குருட்டுக் கையெழுத்துகள்’(Blind Signatures for Untraceable Payments) என்ற தன் கட்டுரையில் சங்கேதமொழிச் செய்தியாளராகிய டேவிட் சாம் (David Chaum) இலக்க நாணயம் என்ற கருத்தாக்கத்தைப் பற்றிச் சொன்னார். மின்னணு நாணய அமைப்பினை 1983-ல் இவர் முன்மொழிய, அவரது டிஜிகேஷ் (Digicash) என்ற  குறு பரிமாற்ற முறை,(Micro Payments System) , ஒரு அமெரிக்க வங்கியில் 95-98 வரை செயல்பட்டது.
 • 1997-ல் ஆடம் பேக்(Adam Back) என்பவர் ஹேஷ்கேஷ் (Hashcash) என்று அறிமுகப்படுத்திய ஒன்றுதான் பிட்காயின் சுரங்கச் செயல்பாடுகளுக்கான ஆதாரமாக அமைந்தது. ஹேஷ்கேஷ், இமெயில்களில் ‘ஸ்பேம்’(Spam) மெயில்களை வடிகட்டிப் பிரிக்க உதவும் செயலிகளின் குறியீட்டு மொழியாகும். இவர் ப்ளாக்ஸ்ட்ரீம்(Block stream) என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர்.
 • 2008- நிதி நெருக்கடிக்குப் பிறகு சடோஷி நகமோடோ (Satoshi Nakamoto) பிட்காயின் கருத்தினை வெளிப்படுத்தினார்.
 • 2009 பிட்காயின் ஒரு திறந்த வெளிச் செயலியாக(Open Source) அங்கீகாரம் பெற்றது.
 • 2013-ல் எதீரியத்தைப் பற்றிய வெள்ளை அறிக்கையை விடாலிக் புட்டரீன் வெளியிட்டார்.
 • 2014-ல் எதீரியத்தின் இணை அமைப்பாளரான கேவின் வுட்(Gavin Wood) எதீரியத் தொடரேட்டின் தொழில் நுட்பக் கட்டமைப்பை ஒரு  கட்டுரையில் விளக்கினார். சங்கேத மொழியில் வல்லவரான இவர் புட்டரீனின் கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுத்து முழுதும் செயல்படும் தொடரேட்டினை அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். இவர் ‘போல்கடாட்’ (Polkadot)டை நிறுவியவரும் கூட.
 • 2015-ல் எதீரியத்தின் கட்டமைப்புடன் ஃப்ரான்டியர்(Frontier) செயல்பாட்டிற்கு வந்தது.
 • 2016 பரவலாக்கப்பட்ட தானியங்கி நிறுவனம் கொந்தப்பட்டதால், எதீரியம் இரண்டாக, எதீரியம், மற்றும் எதீரியம் கிளாசிக் என்று பிரிந்தது.
 • 2020- பீகன் செயின்,(Beacon Chain) இ டி ஹெச் டு கோணம்(ETH2) என்ற மேம்பட்ட, நிரூபணத்திறக்கான செயலியை நிறுவியது.
 • ஜூன் 2021 எல் சால்வடோர் (El Salvador) பிட்காயினை சட்ட பூர்வமாகச் செல்லுபடியாகும் நாணயம் என்று அறிவித்தது.
 • செப்டம்பர் 2021 சீனா க்ரிப்டோ வணிகங்களுக்குத் தடை விதித்தது.

வாய்ச் சொற்களை மட்டுமே நம்பி வணிகங்கள் நடை பெற்றது அன்று. இன்றும் கடத்தல்களும், இன்ன பிற நிழல் செய்கைகளும் வாய்மொழியின் உண்மையில் தான் நடக்கின்றன.

இன்னாரென்று அறியாத வலைச் சூழ்கை, நம் அன்றாடத்தின் சலிப்பைப் போக்கலாம். மெடாவர்ஸ் போன்ற அனைத்தையும் உள்ளடக்கும் தளங்களில் நாம் நம் நண்பரை, நம்முடன் பழகியவரை, நம் விருப்பங்களில் ஆர்வமுள்ள நாம் சந்தித்தறியாத மனிதர்களை, நிஜமும், விளையாட்டும் இணைந்து மயக்கும் கனவு பூமியைக் கண்டு மகிழலாம். 

தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் இன்னமும் பாதுகாப்பான, இன்னமும் சவாலான விஷயங்களுக்கான தீர்வினைக் கொண்டு வரலாம்.

இலக்க நாணயங்கள், அவை இயங்கும் முறை, அவற்றின் வளர்ச்சி, வீழ்ச்சி, அவற்றை சுரங்கராக நாம் பெற முடிவது போன்றவைகளைத் தெரிந்து கொள்ளலாம். 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என்று சொல்கிறாரே வள்ளுவப் பெருந்தகை.

அவர் மற்றொன்றையும் சொல்கிறார்.

பொருள் கருவி காலம் வினை இடனோடு ஐந்தும் இருள் தீர எண்ணிச் செயல்.

ஒமிக்ரான் (Omicron) தாக்கத்தினால், 20-12-2021 அன்று இந்திய பங்கு வர்த்தகம் $130 பில்லியன் இழப்பினைச் சந்தித்ததாகவும், உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. இவைகளில் முதலீடு செய்துள்ளவர்கள் இலக்க நாணயச் சந்தையின் பக்கம் தங்கள் பார்வையை சற்று அதிகமாகத் திருப்பினால், உலகம் மற்றுமொரு நிதி நெருக்கடிச் சிக்கலைச் சந்திக்க நேரிடலாம். இரு தினங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமரின் சிறு குருவிச் செய்தியாக ‘பிட்காயின் அங்கீகரிக்கப்படுகிறது’ என்ற தகவல் காட்டுத்தீயெனப் பரவியது. பின்னர் அது அரசுச் செய்தியல்ல என்றும், அவரது தளத்தை விஷமிகள் பயன்படுத்தியதாகவும் செய்தி வந்தது.

மீண்டும் வள்ளுவர் தான்

‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு’.

References:

https://qz.com/2082336/the-companies-competing-with-facebook-to-build-the-metaverse/?utm_source=email&utm_medium=membership-promotion&utm_content=568306c2-59c7-11ec-8c97-cefcb23da914&utm_campaign=1221-2021Work-free&code=QZFLASHSALE#site-content

https://qz.com/guide/crypto-mainstream/?utm_source=email&utm_medium=membership-promotion&utm_content=f20c60dd-43ef-11ec-858d-763278a4e081&utm_campaign=1121-membersweek1-free&code=MEMBERSWEEK21#site-content

The Hindu dt 16/12/2021. Mark has further stated that the second phase of partnership with CBSE to provide a curriculum on digital safety, online well being and AR for more than 10 mn students and I mn educators are in the cards. This second phase will be implemented in 3 years.

பானுமதி ந / டிசம்பர் 2021

Series Navigation<< மெடாவெர்ஸ் எனும் ‘ஹோல்டால்’வெப் -3 (Web-3) >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.