கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30

This entry is part 5 of 10 in the series கி.ரா. - அ.ரா.

ஒரு இடத்தை அதன் பூர்வகத்தோடும் மனிதர்களின் நிகழ்கால இருப்போடும்  சேர்த்துவைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் கி.ரா. அவரோட புனைகதைகளில்  இந்தக்கூறு தூக்கலாவே இருக்கும்.   ‘என்னோட கதைகள் இட த்தெ எழுதிக்காட்டுதா? இடத்திலெ இருக்கிறெ மனுசங்களெ எழுதிக்காட்டுதான்னு உறுதியாச் சொல்ல முடியாது’ என்று ஒருமுறை சொன்னார். பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு அந்த ஊரைப் பற்றிப் பலரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தைப் பின்னர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் காட்டினார். 

பிரபஞ்சனின் வீடு புதுச்சேரி ரயில்வே ஸ்டேசன் பக்கம் இருக்கு என்று சொன்னபோது, ‘அது ஸ்வெல்தாக்களோட ஏரியா’ன்னு சொல்றாங்களே? என்றார். சொல்லிவிட்டு. ‘ பிரபஞ்சனோட அப்பா காங்கிரஸ்காரர்; கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டத்தில தன்னோட தென்னந்தோப்பெ அப்படியே வெட்டிச் சாய்ச்ச தீவிரவாதியின்னு கேள்விப்பட்டிருக்கேன்; அதனாலெ அவரு ஸ்வொல்தாவா இருக்க வாய்ப்பில்லை.  ஆனா அவங்கெ சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க…’ என்றார் கி.ரா.  

பாண்டிச்சேரியின் பழைய நகர எல்லைக்குள் மூன்றுவகையான வீடுகள் உண்டு. கடற்கரைச்சாலை தென் -வடல் சாலை. ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குத் தென்வடலாகப் போகும் அந்தப் பெரிய சாலைக்கிணையாக நான்கு சாலைகள் தென்வடலாகவே போகும். பெரும்பாலும் பிரெஞ்சுப்பெயர்களைக் கொண்ட அந்தச் சாலைகளில் இருக்கும் கட்டடங்கள் பிரெஞ்சுப் பாணிக்கட்டடங்கள். உயரம் கூடிய விதானங்களும் சாளரங்களும் மென்மஞ்சளும் வெண்மையுமான வண்ணங்களும் அதன் அடையாளங்கள். பிரான்சில் இருக்கும் உணர்வைத் தரக்கூடிய கட்டடங்களோடு சாலைகளும் மனிதர்களும்… அந்தப் பகுதிக்குள் கூடுதல் சத்தமும் இரைச்சலும் இருக்கும் ஒரே பகுதி பாரதியார் பூங்காவும் அதனைச் சுற்றி இருக்கும் சட்டசபை, கவர்னர் மாளிகை, வணிக அவை, காந்தி திடல் பகுதிகள் தான். மற்ற பகுதிகளில் பிரெஞ்சு கல்விநிலையங்கள், தூதரக அலுவலகங்கள், பிரெஞ்சுக்கார்கள் இப்போதும் வந்து தங்கிச்செல்லும் வில்லாக்கள் என அமைதி தவழும் இடங்கள்.  வெள்ளைநகரம் என அழைக்கப்படும் அந்தப் பகுதியைப் பிரிப்பதுபோல ஒரு கால்வாய் ஒன்று தென்வடலாக ஓடும்.  

கால்வாய்க்கு மேற்கே இருக்கும் சாலைகள் பூர்வீகப் பாண்டிச்சேரிக்காரர்கள் வாழும் தெருக்களைக் கொண்டது. எல்லாச்சாலைகளும் கடற்கரையை நோக்கிச் செல்லும் விதமாக கிழக்கு மேற்காக நீளும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சாலையும் ஒருவழிப்பாதையாக அமைக்கப்பட்ட நகரம். நகரத்திற்குள் பேருந்து,லாரி போன்ற கனரக வாகனங்கள் நுழைந்துவிட முடியாது. சந்தைக்கும் கடைகளுக்கும் தேவையான காய்கறிகள், மீன்கள், சரக்குகளை இறக்கும் கனரக வாகனங்கள் இரவுநேரத்தில் வந்து இறக்கிவிட்டுச் செல்லும் விதமாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் உண்டு. கீழ்மேலாக இருக்கும் சாலைகளுக்கு இணையாக ரயிலடியில் தொடங்கி ஒரு சதுரத்தில் சின்னச்சின்னத் தெருக்களில் இரட்டைக்குடியுரிமை கொண்ட ஸ்வொல்தாக்களின் வீடுகள் உண்டு. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இன்னும் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்கள். அவர்களின் முன்னோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி அங்கேயே தங்கியிருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தங்களைப் பிரெஞ்சுக் குடிகளாகக் கருதிக்கொள்வதில் பெருமைகொள்பவர்கள். அந்த குடும்பத்தில் பெண்ணெடுத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஒருவர் இப்போதும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று பிரான்ஸுக்குப் போய்விடலாம். அந்த வசதியைப் பெற்றவர்களேயே ஸ்வொல்தாக்கள் என்று அழைப்பார்கள்.

கி.ரா.வருவதற்கு முன்பே நான் புதுச்சேரிக்குப் போயிருந்தாலும் இந்த விவரங்களையெல்லாம் அவர் வாயிலாகவே நான் அறிந்தேன். அவரைச் சந்திக்க வருபவர்களிடம் கேட்டுக்கொண்ட தகவல்களைப் பார்த்துத் தெரிந்துகொண்ட ஆர்வத்தில் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் என்னை அழைத்துக் கொண்டு அவ்வப்போது போவார்.  

தொடக்கத்தில் நானும் கி.ரா.வும் தங்கியிருந்த முத்தியால் பேட்டை கடலோரம் இருக்கும் பகுதி.   நேராகக்கடல் நோக்கி நடந்தால் வைத்திக்குப்பம் என்ற மீனவர் குடியிருப்புகள் வழியாகக் கடலுக்குப் போகலாம். ஆனால் அங்கே நடக்க முடியாது. நல்ல காற்றும் கிடைக்காது.  கடல்கரையைத் திறந்தவெளிக் கழிப்பறையாகப் பயன்படுத்துவார்கள் மீனவர்கள் . அத்தோடு புதுச்சேரி டிஸ்டில்லரிஸின் சாராயக்கழிவும் கடலில் கலந்து நாற்றம் மூக்கைத் துளைக்கும். அதனைத் தாண்டி மக்கள் நடப்பதற்காகப் பெரும்பெரும் கற்களைக் கொட்டித் தடுப்புகளை உண்டாக்கிக் கடலைத் தடுத்திருப்பார்கள். 

புதுவைத் தலைமைச்செயலகம் தொடங்கி பிரெஞ்சுக் குவர்னர் ட்யூப்ளே சிலை இருக்கும் சிறிய பூங்கா வரை ஒருகிலோ மீட்டர் நீளத்திற்குத் தளக்கற்கள் பதித்திருக்கும். இடையில் ஆஜானுபாகுவாக மகாத்மா சிலையாக நிற்பார். முத்தியால் பேட்டையிலிருந்து கடற்கரைக்கு நடந்தே போய்விடுவோம். நான் தினசரி காலை வேக நடைக்காகப் போவேன். சில நாட்கள் கி.ரா.வும் வருவார்.அவர் வந்தால் வேகநடை கிடையாது. மென்னடைதான். நடை பாதை தொடங்கும் தலைமைச்செயலகப்பகுதியில் இருக்கும் பூங்காவில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். புதுச்சேரிக்கு வரும் ஐரோப்பியர்கள் கடற்கரைக்கு வருவதும் காலையில் தான்.   அலைவந்து மோதும் பாறைகளின் மீது அமர்ந்து யோகா செய்யும் ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் காலையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.யோக நிலையிலிருப்பவர்களில் பெரும்பாலோர் தவம்செய்ய வந்த சந்நியாசிகள் போலத் தான் இருப்பார்கள். கடலுக்குள்ளிருந்து சூரியன் செக்கச்சிவந்த பந்தாய் மிதந்து வருவதற்கு முன்பே வந்து அமர்ந்துவிடுவார்கள். 

கடற்கரைச் சாலையிலிருந்து மேற்கு நோக்கிப் போகும் ஒரு சாலையில் மூன்று நிமிடம் நடந்தால் அரவிந்தர் ஆசிரமம் போய்விடலாம். அதற்கு நேரே இருக்கும் வீதியில் தான் மணக்குள விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பகுதியில் தானே பாரதியும் வ.வே.சு. அய்யரும் சுற்றித்திரிந்திருப்பார்கள் என்று ஆரம்பித்துக் கடந்த காலத்திற்குள் அழைத்துப் போய்த் திரும்பக்கொண்டுவருவார் கி.ரா.

***

Series Navigation<< “பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மட்டும் மரியாதெ செய்யுது?”கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.