உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச

ஒரு காட்டில் ஒரு நரிக் குடும்பம் வசித்து வந்தது. குட்டிக் குள்ள நரி ஒன்று ஊரைச் சுத்திப் பார்த்து உண்மை அறிந்து வருவேன் எனப் புறப்பட்டது.  ஊரை நெருங்குகையில் அழகான சிவப்பு வண்ணக் குளத்தைப் பார்த்து மயங்கியது. அதில் மூழ்கி எழுகையில் அதன் உடலில் ஒட்டிய சாயம் போகவில்லை. அந்தப் பெருமிதத்துடன் வீடு திரும்பிய அதை அதன் குடும்பத்தாரேலேயே அடையாளம் காண முடியவில்லை. அந்தக் காட்டின் அதிபதியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருந்த கிழச் சிங்கம், சிவப்பு நரியை வைத்து தன் ஊரின் பெருமைகளைப் பறை சாற்றத் தொடங்கியது. சில நரிகள், சில பரிகள் அக்குளத்தில் மூழ்கி முடிந்த வரை மீனையும், புற்களையும் உண்டன. சிங்கம் சிரித்துக் கொண்டது.

இந்தப் பழங்கதையின் பல வடிவுகளை நாம் கேட்டிருப்போம். இதன் குறியீட்டுத் தன்மை நமக்குப் புரிந்தாலும், நிஜ உலகில் இதன் பலவடிவுகளைக் காண்பதில் நாம் அத்தனை சாமர்த்தியம் உள்ளவர்களா என்பது ஐயப்படத் தக்கது.

சுமார் இருபது வருடங்களுக்குமுன் வெளிவந்து 21ஆம் நூற்றாண்டுக்கு முன்னோடியாகக் காட்சி தந்த ‘மாட்ரிக்ஸ்’ என்னும் இங்கிலிஷ் அதிபுனைவுப் படம் உலகின் பல நாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்ற படம். அது பின்னாளில் முப்படக் கோவையாக உருவெடுத்தது. சமீபத்தில் நான்காவது படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த வரிசையின் முதல் திரைப்படத்தில் ஒரு பாத்திரம், சைஃபர், உலகையும் மானுடரையும் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருக்கும் அறிவு மேம்பட்ட எந்திரங்களிடம், அவற்றின் கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் பல வருடங்களாகப் போராடி வரும் தன் சகாக்களைக் காட்டிக் கொடுத்துப் பலரைக் கொல்லவும் செய்கிறான்.

அவன் எந்திரங்களின் பிரதிநிதியிடம், தான் காட்டிக்கொடுப்பவனாக மாறுவதற்குப் பேரம் பேசுகையில் சொல்லும் வாக்கியங்கள் பொருள் பொதிந்தவை.[1]

அவற்றின் சாரம் இது: ”இந்த மாமிசத் துண்டு நிஜமானதல்ல என்று எனக்குத் தெரியும். இதை வாயில் இடும்போது, இது ரசமானது, ருசியானது என்று என் புத்திக்கு ‘மாட்ரிக்ஸ்’ சொல்லிக் கொடுக்கிறது என்றும் எனக்குத் தெரியும். ஆனால், நான் என்ன புரிந்துகொண்டேன் தெரியுமா?… [மாமிசத் துண்டை வாயிலிடுகிறான்] அறியாமை சொர்க்க போகம்தான்.”

சைஃபரின் விஷயத்தில் அந்த அறியாமையை அவன் வேண்டி விரும்பித் தன்மீது சுமத்திக்கொள்கிறான். அந்தக் கவசம் அவனுக்குத் தேவையாகிறது. எதார்த்தத்தின் பட்டொளியை அவனது கண்களோ, அறிவோ பார்க்கவும், தாங்கிக் கொள்ளவும் ஏலாதனவாகின்றன. அதை அவனே சொல்லிக் கொண்டு தேர்வைச் செய்வதுதான் அந்தப் படத்தின் செய்தி.

நம் இன்றைய உலகில் பல நூறு கோடி மக்களுக்கு இந்த வகை அறியாமை அவர்களின் தேர்வில்லாமல் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. நாம் எல்லாரும் ஓரளவு சைஃபர் போன்றவர்களே. புரிந்தவற்றைப் புரியாதவையாக ஆக்கிக் கொள்வதில் நாம் சமர்த்தர்கள். புரியாதவற்றைப் புரிந்தனவாகக் கருதி நம்முள் போர் நடத்துவதால் நாம் ஏமாளிகள். இந்த அறியாமையின் வலையைப் பின்னுபவர்கள் தாம் சமர்த்தர்கள் என்று நம்பலாம். ஆனால் உலக மாந்தரை அழித்துத் தாம் சுகப்படும் முனைப்பைக் கொண்டவர்களும் வலையில் சிக்கிய ஈக்கள்தாம். இங்கு சிலந்தி ஏதும் இல்லை, ஈக்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளப் பற்பல வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன.

சிலந்தியாகத் தம்மை எண்ணிக் கொண்டு, ஈக்கள் பின்னும் இந்த வலைகளில் ஒன்று பற்றி மேலே பார்ப்போம்.

பல இலட்சக்கணக்கில் பார்வையாளர்கள் உள்ள ஒரு வலைஒளி நிகழ்த்தல், (You Tube) லீ (Lee)யும், அவரது தந்தை ஒலி பேரெட்டும் (Oli Barrett) இணைந்து வழங்கும், சீனாவின் மனித நேயத்தைப் போற்றும் நிகழ்ச்சியாகும். இந்த இருவரும் கவர்ச்சிகரமாக இருக்கும் விடுதிகளுக்குச் செல்கிறார்கள், சிற்றூர்களுக்குச் செல்கிறார்கள், பரபரப்பான இடங்களில் உணவை ருசிக்கிறார்கள், பாரம்பரிய முறையில் காதுகளை சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள் (அதனால் தானோ என்னவோ சீன அரசு சொல்வதை மட்டும் காதில் போட்டுக் கொள்கிறார்கள்!) அந்த அரசின் செயல்பாடுகளான, பழங்குடியினரைப் பழக்குவது(?), பெருந்தொற்று விஷயத்தில் அவர்களது அடக்குமுறையான நடவடிக்கைகள், மைய அதிகார வரம்பு மீறல்கள் போன்றவற்றைப் பற்றி குறை சொல்பவர்களை இவர்கள் மறுதலிக்கிறார்கள். இந்தக் காணொலிகள் மிக இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்தாலும், அதன் பின்னே பொம்மலாட்ட சூத்ரதாரியாக அரசுத் துறை, அதன் கட்டுப்பாட்டில் உள்ள செய்தித் துறை, அரசின் நல் அம்சங்களைச் சொல்லவும், அது செய்வது அனைத்துமே நல்லனவென்றும் சொல்லும் ஒலிபெருக்கிக் குரல்கள் ஆகியவை இருக்கின்றன. ‘மனிதத்தன்மை கொண்ட அரசு’ என்ற பிம்பத்தைக் கட்டமைப்பது சீனாவின் நோக்கம்.

பெய்ஜிங் அரசு, தன் புகழ் பாடும் இத்தகைய செல்வாக்கு உள்ளவர்களுக்கு, நிதி மற்றும் பயண வசதி செய்து தருவதாக அரசின் ஆவணங்களும், வலைஒளி அமைப்பாளர்களும் சொல்கின்றனர். அரசுச் செய்தி நிறுவனங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் இந்த வலைஒளிகளை முகநூல், சிறுகுருவித் தளம் போன்றவற்றில் பகிர்ந்து இவர்களுக்குச் செழிப்புள்ள எண்ணிக்கையில் வருகையாளர்களைக் கொணர்கிறார்கள். வருகை அதிகரித்தால் விளம்பர வருமானத்திலிருந்து வலைஒளியாளர்களுக்கும் வருமானம் வரும். அயல் நாடுகளைச் சேர்ந்த இதழியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் இடங்களுக்குக் கூட இவர்கள் செல்ல முடிவது அரசு ஊடகத்தின் அரவணைப்பால் தான்.

இந்த வலைஒளியோர் பல காலமாக சீனாவில் இருப்பவர்கள். தங்களது குறிக்கோள், மேலை நாடுகள் ஆதாரமில்லாது சீனாவை எதிர்மறையாக விமர்சிப்பதை எதிர்ப்பதுதான் என்றும், தங்கள் படைப்புகளில் தாங்கள் தங்கள் எண்ணங்களைத் தான் சொல்வதாகவும், கம்யூனிஸ்ட் கட்சி அதைத் தீர்மானிப்பது இல்லையென்றும் சொல்கிறார்கள். தாங்கள் அரசின் நல்லெண்ணத் தூதுவர் என்று இவர்கள் நினைக்காவிட்டாலும், சீன அரசின் அயலகத் தூதர்கள், தாங்கள் பங்கு பெறும் கூட்டங்களில் இவற்றை ஒளிபரப்பி ‘இதை விட என்ன சாட்சி வேண்டும்?’ என்று கேட்காமல் கேட்கிறார்கள். செல்வாக்கு மிக்க இந்த வலைஒளியாளர்கள் ஆறு பேருக்கும் 130 மில்லியன்களைத் தாண்டிய பார்வையாளர்களும், 1.1 மில்லியன் ஆதரவாளர்களும் உள்ளனர்.

உலகம் சீன அரசாளர்களை தம் மக்களை அடக்கியாள்வோராகப் பார்ப்பதை மாற்றுவதற்கு சீனா செய்யும் முயற்சிகள் இந்த வலைஒளிகள். இது அயலகத்தில் இருப்போரை சீனாவின் செயல்பாடுகளில் இரக்கமும், ஆமோதிப்பும் கொண்டவர்களாக மாற்றும் ஒரு பெரிய திட்டம் என்றே சொல்லலாம். பல நிழல் கணக்குகள் மூலமாக இத்தகைய வலைஒளி நிகழ்ச்சிகளைப் பெருக்கிக் காட்டுமாறு தன் தூதர்களுக்கும், அரசின் செய்தித் துறையினருக்கும் சீன அரசு கட்டளையிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், உள் நாட்டில் அனுமதிக்காத சிறுகுருவி, வலைஒளித் தளங்களை தன் விளம்பர ஒளி- ஒலி பெருக்கிகளாக அயல் நாட்டில் அது பயன்படுத்துவதுதான்!

‘உலகச் சமூக ஊடகத்தில் வந்திருக்கக்கூடிய புதிய மிக மோசமான நபர்’ என்று முன்னாள் சீனாவின் செய்தித் தரவாளரான எரிக் ல்யு(Eric Liu) சொல்கிறார். ‘வெற்றி அல்ல அரசின் குறிக்கோள். உண்மை வெளியாகாத வண்ணம் குழப்புவதும், சந்தேகத்தை ஏற்படுத்துவதும் தான் நோக்கம்.’

ராஸ் கால்- ஓர் (Raz Gal-Or) என்ற இஸ்ரேலியர், மாணவராக இருந்த போது நகைச்சுவை மிக்கக் காணொலிகள் வெளியிட்டவர், இப்போது, ஷிஞ்ஜாங் (சின்சியாங்) வட்டாரத்தில் அங்கே பணிபுரிவோருடன் பேசிக்கொண்டே, மாமிச உருளைகளைச் சுவைத்துக்கொண்டே, ‘அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், தங்கள் பணிகளைச் செய்கிறார்கள், தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்’ என்று வலைஒளி செய்து இலட்சக் கணக்கில் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறார். மறுகல்வி முகாம்களில் (கிட்டத்தட்ட சிறைச்சாலைகளில்) இருக்கும் பல்லாயிரக்கணக்கான உய்குர் இஸ்லாமியரைப் பற்றிய அந்தரங்க அரசு ஆவணங்களையோ, நேரடி வாக்குமூலங்களையோ, இதழியலாளர்கள் சென்று பார்த்துப் பதிவுசெய்துள்ள அராஜகங்களைப் பற்றியோ இவர் எதுவும் சொல்வதில்லை; தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் அரசுடன் இருக்கும் வணிகத்தைப் பற்றியும்கூட ஏதும் சொல்வதில்லை.

இவருடைய கம்பெனியான ‘ஒய் சீனா’(YChina) வின் தலைவர் இவரது தந்தை அமிர் கால்-ஓர் (Amir Gal-Or). அவர் அரசின் வங்கியான ‘சீன வளர்ச்சி வங்கியின்’ (China Development Bank) முதலீட்டாளர். இது அந்த வங்கியின் வலைத்தளம் சொல்லும் தகவல். சீன அரசின் இரு செய்தி அமைப்புகள் ‘ஒய் சீனா’வின் வாடிக்கையாளர்கள். இது ‘இன்னோனேஷன்’ (Innonation) என்ற  வலைத்தளத்தில் அமிர் சொல்லியுள்ள செய்தி. அது அலுவலகத்தை ‘ஒய் சீனா’வுடன் பெய்ஜிங்கில் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், ராஸ் கால்-ஓர்,  ந்யூயார்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில்  ‘இன்னோனேஷன்’ தளச் செய்தி சரியானதல்ல, தன் கம்பெனிக்கும் அரசு செய்தி நிறுவனங்களுக்கும் இடையே வணிக ஒப்பந்தங்களில்லை, ஷிஞ்சாங்கில் எந்த அரசு முறை வழிகாட்டுதலோ, பணமோ தான் பெறவில்லை என்று சொல்லியிருக்கிறார். ‘என் வலைஒளியில் அரசியலைப் பார்ப்பவர்கள் வேறு திட்டத்துடன் இருக்கிறார்கள்’ என்று மேலும் சொல்கிறார்.

க்வைலோ 60 (Gweilo 60) என்ற வலைஒளியை நடத்தும் கெர்க் ஏப்ஸ்லேன்ட் (Kirk Apesland) என்ற  சீன வாழ் கனடியர் ‘பயண ஊக்குவிப்பாளர் மற்றும் ஆர்வலராக நான் செயல்படுகிறேன்; எனக்கு உள்ளாட்சி அமைப்புகள் பணம் தருகின்றன. நானே நேரில் பார்த்தேன்; சிறுபான்மையினர் அரசின் கடுமையான கட்டுப்பாட்டிலெல்லாம் இல்லை. அரசோ, அதன் சார்பில் மற்றத் துறையினரோ நான் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்வதில்லை.’ என்று ஒரு பேட்டியில் சொல்கிறார்.

வறுமையை ஒழிப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளதாகப் பரவலாகச் சொல்வதற்கு ஏதுவாக ‘வலை உலகத்தில் புகழ் வாய்ந்த அயல் நாட்டினரைக் கூப்பிட்டு ‘சீனாவுடன் ஒரு நாள்’ (A Day in China) என்ற தலைப்பில், சீனாவின் வலைவெளி நெறியாள்கை நிறுவனம் (Internet Regulator) $30,000 செலவு செய்ததாக எ எஸ் பி ஐ (ASPI) சொல்லியுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் நிதியைக் கொண்டு இயங்குகிறது. சீனாவின் வன்முறைகளை அது வெளிக்கொண்டு வந்துள்ளது. சீனா ரேடியோ இன்டர்னேஷனல் (China Radio International) மிகச் சமீபத்தில் தான், லீ மற்றும் மெக்ஸிகோவைச் சேர்ந்த மேட் கலாட் (Matt Galat) மற்றும் சிலர் பங்கு பெற்ற நேரடியான நிகழ்வில் அவர்கள்  தாங்கள் ஷியானுக்கு (Xi’an) மேற்கொண்ட பயணச் சிறப்புகளை ஒலிபரப்பியது. தான் பார்க்காத இடத்தைப் பற்றி அமைப்பாளர்கள் பேசச் சொன்ன போது மறுத்துவிட்டதாகவும், புனித மலைக்கு செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டதில் ஏமாற்றம் என்றும் கலாட் சொன்னார். அவர் தற்சமயம் அமெரிக்காவில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். சீனாவைப் பற்றிய தன் காணொலிகள் தனக்கு எந்த மனக்கசப்பையும் அளிக்கவில்லை என்று சொல்கிறார். பெருந்தொற்று உண்டான நேரத்தில் சீனாவைப் பற்றிய மேலை ஊடகச் செய்திகள் தம்மை பாதித்ததாகக் கூறும் இவர், பெருந்தொற்று பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு சீனாவின் சமூக மற்றும் அரசு சார்பில் சீனாவில் மீண்டும் பயணிக்குமாறு தனக்கு அழைப்பு வந்ததாகச் சொல்கிறார். அவரது தளம் அரசியல் கலந்து வருகிறது. ‘ஒருக்கால் தொற்று தோன்றியது அமெரிக்காவிலோ?’ என்றும் சொல்கிறது. ‘மனிதர்கள் பரபரப்பான செய்திகளை விரும்புகிறார்கள்’ என்று சொல்லும் அவர் ஒரு நிகழ் நிலை கூட்டத்தை நடத்தி அதில் சீனாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனமான (ஹு)வாவேியிற்கு (Huawei) எதிரான மேலை உலகின் எண்ணங்களை விமர்சித்தார். அவரது தளத்திற்கு 1,00,0000 க்கும் மேலே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். சீன ஊடக ஆதரவினால் தான் வளர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்புச் சுரண்டல் என்று சீனாவின் நடவடிக்கைகளை வெளிப்படையாகச் சொன்ன ‘நைக்கி’,(Nike) ஹெச் அன்ட் எம்’ (H &M) போன்ற வியாபாரக் குழுமங்களை சீன அரசு வெளியேற்றிய சில நாட்களிலேயே கால்-ஓர் தன் வலைஒளியை வெளியிட்டு ‘எல்லாம் நலமே’ என்றார். இந்தக் காணொலி உடனடியாக இடாலியத் துணைமொழியோடு சீன இடாலிய தூதரகத்தின் முகநூலில் (1,80,000 பின் தொடர்வோர்) இடப்பட்டது. மேலும்  கால்-ஓரின் துணுக்குகள்,  செய்திகள் முகநூலிலும், டிவிட்டரிலும் இடம் பிடித்து 400 மில்லியன் பின்தொடர்வோரைப் பெற்றிருக்கிறது. இது அதிகரிக்க அதிகரிக்க வருமானம் வலைஒளியாளருக்கு அதிகரிக்கும்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வலைஒளிகளை கூகுள் செயலி மிக விரும்புகிறது. வலைஒளியின் பரிந்துரை இயந்திரத்தை வடிவமைக்க உதவிய கியூம் சேஸ்லாட் (Guillaume Chaslot) ‘யதேச்சதிகார அரசுகளுக்கு இதன் பயன் நன்றாகத் தெரியும்; அதை அவர்கள் அனைத்து வகையிலும் பயன்படுத்துவார்கள்’ என்று சொல்கிறார்[2]. க்ளெம்சன் (Clemson) பல்கலையில், ‘சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்’ என்னும் துறையில் படிக்கும் டேரன் லின்வில், (Darren Linvill) இத்தகையப் பல பகிர்வுகளைச் செய்வதாகச் சொல்லப்படும் நபர்கள் எண்ம வெளியிலேயே இல்லை, இது ஒருங்கிணைக்கப்பட்ட பிரசார உத்தி’ என்று சொல்கிறார். ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையான காலாண்டில் மறுஒலிபரப்பு அல்லது மறுப் பகிர்வு செய்த 534 கணக்குகளில், ஐந்தில் இரண்டு பங்கு கணக்குகளுக்கு 10-ம் அதற்குக் குறைவான பின்தொடர்பவர்களும், ஒன்பதில் ஒன்று பங்கு கணக்குகளை பின்தொடர்வோர் எவருமில்லை என்றும் அவர் சொல்கிறார். யேல் பல்கலையில்  ஆய்வுப் படிப்பு மேற்கொண்டிருக்கும் ஜாஷுவா லேம் (Joshua Lam) மற்றும் லிப்பி லேங் (Libby Lange) 2,90,000 சிறுகுருவிச் செய்திகளை ஆராய்ந்து, செல்வாக்கு மிக்க வலைஒளியாளர்களின் பெய்ஜிங் சார்பு செய்திகள் பத்தில் ஆறு என்ற விகிதத்தில் பகிரப்பட்டன எனத் தெரிவிக்கிறார்கள். 

பெய்ஜிங் சார்பாளர்கள் ஒருங்கிணைந்து இதைச் செய்வதாகக் கருத ஆதாரங்கள் இல்லை என்று யு ட்யூப் சொல்கிறது. ஆனாலும், தங்களுக்கு வணிக உறவுகள் அல்லது ஆதரவாளர்கள் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும் என்று அதன் விதிமுறை சொல்கிறது. அரசு நிதி பெற்று இயங்கும் செய்தித் தளங்களை அது அடையாளப் படுத்துகிறது. ஆனால், அதன் அலுவலகர்களின் தனிப்பட்ட காணொலிப் பதிவுகளை அவ்வாறு அடையாளமிடுவதில்லை.

லீ ஜிங்ஜிங் (Li Jingjing) தென் சீனாக் கடலின் பவளப் பாறைகளைத் தன் வலைஒளியில் ஏற்றி, மேலை நாடுகள் சீனாவைக் கட்டுப்படுத்த முயல்வதாகச் சொல்கிறார் [3]. ஆனால், சீனா உலக தொலைக்காட்சி தளத்தில் (China Global Television Network) தான் பணி புரிவதை அவர் சொல்வதில்லை. ஸ்டுவர்ட் விக்கின், (Stuart Wiggin) ‘சீனப் பயணியாளர்’ என்ற ஒரு வலைஒளி வைத்துள்ளார். அவர் ‘பீபிள்’ஸ் டெய்லி’ (People’s Daily)க்காகப் பணி புரிவதை சொல்லவில்லை. இவர் பிரித்தானியர் என்ற ஹோதாவில் முன்னர் நாம் பார்த்த ‘சீனாவுடன் ஒரு நாள்’ என்ற அறிவுஜீவிகள் உலாவில் பங்கெடுத்தவர். இவரும் சீனாவின் மறு சீரமைப்பு முகாம்களைப் பற்றிப் பேசுவதில்லை.

‘தேச பக்தர்கள் மட்டுமே’ என்று சமீபத்தில் தேர்தல் என்ற பெயரில் ஹாங்காங்கில் நடந்துள்ளது என்ன? ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த பலரும் ஒன்று சிறையில் இருக்கிறார்கள் அல்லது விலகி விட்டார்கள்.

ஜூன் 1989-ல் சீனா, தியனான்மென் சதுக்கத்தில் தன் இளைய சமுதாயத்தின் மீது ஏவிய வன்முறையின் நினைவாக ஹாங்காங் பல்கலையில் நிறுவப்பட்ட பிணைக்கப்பட்ட உடல்களும், வெறித்த கண்களும், பிளவுபட்ட வாய்களும் கொண்ட சிற்பம் இரவோடிரவாக நொறுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஒரே தேசம், இரு அமைப்பு’ என்ற வாக்கும் பொய்யாகிப்போனது.

அடிக்குறிப்பு:

[1] Cypher You know, I know this steak doesn’t exist. I know that when I put it in my mouth, the Matrix is telling my brain that it is juicy and delicious. After nine years, you know what I realize?[Takes a bite of steak] Cypher Ignorance is bliss.

[2] https://www.theguardian.com/technology/2018/feb/02/youtube-algorithm-election-clinton-trump-guillaume-chaslot

[3] https://www.youtube.com/channel/UCPvWHbIwTHbXX9Jo_Vephdg இந்தக் காணொளியை இந்திய தேசியத்தை இழிவு செய்வதையே தம் முதல்கண் செயல் நோக்காகக் கொண்டு இயங்கும் எண்ணற்ற ‘வலைத் தள’ முகவர்களின் செயல்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் பரிதாப நிலை புரிய வரும். ஜனநாயக நாடுகளை அழிக்க எத்தனை கைக்கூலிகள் உள்நாட்டிலேயே இயங்குகிறார்கள் என்பதும், அதே நபர்களால், முழு அடக்கு முறையைக் கைக்கொள்ளும் அரசுகளில் தலையாயதான சீனாவுக்கு எத்தனை பரிவு காட்டப்படுகிறது என்பதும் புரியலாம்.

உசாவல் குறிப்புகள்:

1. How Beijing Influences the Influencers

By Paul MozurRaymond ZhongAaron KrolikAliza Aufrichtig and Nailah MorganDec. 13, 2021

2. The Hindu dt 23rd and 24 th Dec 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.