இவர்கள் இல்லையேல்

அத்தியாயம்- 9

ஃபூலோ

புதுதில்லி பெங்காலி மார்க்கெட் பகுதியில் உள்ள இமாச்சல் பவனுக்கு அருகே மிகப் பெரிய பங்களாக்கள் இருந்தன. இவற்றில் ஒரு பெரிய பங்களாவின் பின்புறம் கார் கராஜில் ஃபூலோவின் கணவனுக்கு,  தங்க இடம் கிடைத்திருந்தது. அவனுடைய பெற்றோரும் அவனுடனேயே வசித்து வந்தனர். ஃபூலோவின் கணவன்,  துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்தான். அவனுடைய முதல் மனைவி இறந்து விட்டாள். ஃபூலோவுக்கு திருமணம் ஆகும்போது அவளுக்கு வயது பதின்மூன்று தான்.  அவள் கணவனுக்கு அப்போது கிட்டத்தட்ட முப்பது வயது ஆகியிருந்தது. இவையெல்லாம் எனக்கு ஃபூலோ சொல்லித்தான் தெரியும். 1984க்கு பிறகு தான் எனக்கு ஃபூலோவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அப்போதுதான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தோம். சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை வரலாறு அறியும். அந்த துயர நினைவுகளை நான் நினைத்துப் பார்த்து, காயங்களை புதிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்நாட்களில் ஃபூலோ எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். “வேலைக்காரர்களிடம் சொல்லி,  வீட்டு வாசலில் மாட்டியிருக்கும்ஸாஹிபின் பெயர் பலகையை கழற்றி விடுங்கள் பீஜி. சர்தார்களுக்கு இப்போது நேரம் சரியில்லை” என்பாள்.

நாங்கள் ஒன்றாகத் தேநீர் அருந்தியவாறே வம்பளப்போம். ஃபூலோ தன் கடந்த காலத்தை பற்றி கூறுவாள். “உங்களுக்கு தெரியுமா பீஜி,  உங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கிற இந்த பூங்காவில் தான் நான் சிறுமியாக இருக்கையில் விளையாடுவேன். ஒரு நாள் என் அம்மா,  இப்படி ஆட்டுக்குட்டியைப் போல துள்ளிக் கொண்டு இருக்காதே. உனக்கு விரைவிலேயே திருமணம் ஆகப்போகிறது என்றாள். நான் எதையோ கேட்க முற்பட்டபோது,  கூடக் கூட பேசிக் கொண்டே இருக்காதே என என்னை கடிந்து கொண்டாள். ஆனால்,  திருமணத்தின் போது மணமகனை நேரில் பார்த்ததும்,  அம்மா,  திருமணத்திற்குப் பிறகு, எல்லாரையும் போல,  முறையாக, என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பவே இல்லை.

“பீஜி,  என் மாமியார் என்னை அழைத்துச் செல்ல,  பல முறை எங்கள் வீட்டிற்கு வந்தார். ஒவ்வொரு முறையும் அம்மா ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என்னை அனுப்ப மறுப்பாள். எனக்காக மாப்பிள்ளை பார்க்க சென்ற என் அப்பா,  உறவு முறையில் எனக்கு மைத்துனர் முறையிலான  வேறொரு, லட்சணமான சிறு வயது வாலிபர் ஒருவரை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். விதியை யார் தான் வெல்ல முடியும்? முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் முகம் யாருடையது என்று திருமணம் முடிந்த பிறகுதானே தெரிகிறது! என் கணவரை பார்த்ததும் என் அப்பா,  பூப்போன்ற என் சின்னஞ்சிறு மகளை நான் கண்டிப்பாக அந்த வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் என்று கூறிவிட்டார்.

பாவம் என் அப்பா! அவர் என்ன செய்வார்! இரு பக்கத்து உறவுகளும் ஒன்றுக்குள் ஒன்றாக நன்கு தெரிந்தவர்கள் தான். அம்மா என்னை ஒரு வருடம் வரை புகுந்த வீட்டிற்கு அனுப்ப வில்லை. நான் இதைப் பற்றிய கவலைகள் ஏதுமின்றி உல்லாசப் பறவையாக திரிந்து கொண்டிருந்தேன்.

இடையிடையே என் மாமியார் என்னை பார்க்க வருவார். அம்மாவிடம் காரசாரமாக விவாதம் செய்வார். சண்டை போடுவார். ஒருமுறை அம்மா இல்லாத சமயம் வந்தபோது, என் மாமியார் எனக்கு “ஜல் ஜல்” என ஒலிக்கிற பட்டை கொலுசு ஒன்றை தந்து விட்டு போனார். நான் அதை அணிந்து கொண்டு இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவுக்கு விஷயம் தெரிந்து,  அம்மா அதைக் கழற்றி வைக்கச்சொல்லியும் நான் கேட்கவில்லை. இரவில் தூங்கும் போது, அம்மாஅதைக் கழற்றி  பெட்டியில் வைத்து விட்டாள். இந்த அம்மாக்களே இப்படித்தான் போலும்! பிறகென்ன,  வெகு சீக்கிரம் என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டாள். இல்லாவிட்டால் நானாகவே போய் விடுவேன் என பயந்தாளோ என்னவோ!” இதைச் சொல்லிவிட்டு ஃபூலோ மிக அழகாக,  வெட்கத்துடன் சிரித்தாள்.

“புகுந்த வீட்டுக்கு போன புதிதில் நான் என் மாமியாரோடு தான் படுத்துக் கொள்வேன். ஒருநாள்,  மாமியார் என்னை என் கணவருடன் ரீகல் சினிமாவில் படம் பார்க்க அனுப்பினார். இடைவேளையின் போது,  என் கணவர் எனக்கு குளிர்பானம் வாங்கி தந்தார். இப்படித்தான் எங்கள் நட்பு மலர்ந்தது. பிறகென்ன,  வருடாவருடம் பிள்ளை பெற்றுக்கொண்டிருந்தேன். கடைசி மகளுக்கு திருமணம் முடித்து விட்டால் போதும்,  எல்லாப்  பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டு விடுவேன்,” என்றாள்.

“உன் கணவர் எப்படி இறந்தார் ஃபூலோ?”

“என்ன சொல்ல பீஜி!  குடித்து குடித்தே சீரழிந்தார். நான் குழந்தைகளை பெறுவதிலும் அவர்களை வளர்ப்பதிலுமேயே காலத்தைக் கழித்து விட்டேன். இப்போது அவர்களின் திருமணம் குறித்த கவலையில் பொழுது கழிகிறது. எல்லாம் என் தலைவிதி!

“என் மகன்கள் நான் சொல்வதை காது கொடுத்து கேட்பதேயில்லை. இப்போது பங்களா முதலாளிகள்,  இடத்தை காலி செய்யச் சொல்கிறார்கள். நான் லட்ச ரூபாய் தந்தால்தான் நகர்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறேன். என் மூத்தமகன்,  பணத்தில் பங்கு கேட்டு கோர்ட்டில் வழக்குப் போடப் போகிறானாம். எல்லாப் பணத்தையும் அவனிடம் தூக்கி கொடுத்து விட்டால், மீதி இருக்கும் இரண்டு பெண்களை எப்படி திருமணம் செய்து கொடுப்பதாம்! எல்லாம் அவன் பொண்டாட்டி அவனுக்கு கற்றுத் தருகிற பாடம்” என்றாள்.

தோடர்மல் ரோடிலிருந்து நாங்கள் வேறு இடத்திற்கு மாறி போன பிறகும்,  நான் அந்தப் பகுதிக்கு அடிக்கடி செல்வது வழக்கம். சிலசமயம் ஃபூலோ கண்ணில் தென்படுவது உண்டு. நத்து ஸ்வீட் கடை வாசலைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருப்பாள்.  காலில் செருப்பு கூட இருக்காது. வயதாகிவிட்டது அவளுக்கு. இன்னும் ஏன் இப்படி உழைத்து ஓடாகத் தேய்கிறாய் என்று கேட்பேன். அதற்கும் சிரிப்புதான் அவளது பதில்.

“என்ன செய்யட்டும் பீஜி! நீங்கள் இருக்கும்போது நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்க கூட ஆள் இல்லை. காலில் செருப்பு இல்லை என்பதை கவனிக்கக்கூட யாரும் இல்லை. நீங்கள் இருந்த வரையில் அதையெல்லாம் பார்த்து கவனித்து செய்தீர்கள்,” என்றாள்.

“இப்போது மட்டும் என்ன,  உனக்கு நான் ஒன்றுக்கு இரண்டாக  செருப்பு வாங்கித் தருகிறேன்.

 ஆனால் உன் பேரன் பேத்திகள் விட மாட்டார்களே,” என்றேன். 

“அது என்னவோ உண்மைதான் பீஜி,  இந்த நத்து மிட்டாய் கடையிலிருந்து தினமும் அரை மூட்டை தின்பண்டங்கள் வீட்டுக்கு கொண்டு போகிறேன். அந்த பஞ்சத்தில் அடிபட்ட பகாசுரன்கள்,  அரை மூட்டையையும் பத்து நிமிடத்தில் காலி செய்து விடுகிறார்கள். அதற்காகத் தான் இந்த வயதிலும் இங்கு வேலை செய்து வருகிறேன். என்னதான் சொல்லுங்கள் பீஜி,  குழந்தைகள் ஆசையாக சாப்பிட்டு மகிழ்வதை பார்க்கும்போது நெஞ்சம் குளிர்ந்து போகிறது. சாப்பாட்டு இடைவேளையில்,  கடையிலிருந்து கொண்டு வரும் உணவுப்பொருட்களையும் இங்கிருக்கிற துப்புரவுத் தொழிலாளிகளோடு பகிர்ந்து கொண்டு விடுகிறேன்.”

“பசித்த வயிறுக்கு உணவிடுவது போன்ற புண்ணியம் வேறு எதுவும் இல்லை ஃபூலோ. உன்னையும் உன் தலைமுறைகளையும் அது காக்கும்,” என்று நான் அவளை வாழ்த்தினேன். ஃபூலோ சொல்வது உண்மைதான். சாப்பாட்டு வேளையில் கடையை விரித்து,  அந்த தெருவில வேலை செய்கிற துப்புரவு தொழிலாளர்களை  அவள் அன்போடு கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பதை நான் எவ்வளவோ முறை பார்த்திருக்கிறேன். ஃபூலோவைப் போன்ற மனம்  படைத்திருப்பதற்கு,  பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இம்மாதிரியான ஆட்களால் தான் மழை பெய்கிறது என்று நினைத்துக்கொள்வேன்.

[டோக்ரி மொழி மூல நாவலாசிரியர்: பத்மா ஸச்தேவ்/ தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி]

***

Series Navigation<< மீண்டும் சீனாஇவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.