இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும்

உலகின் செல்வாக்கான நாடு என்று தன்னை முன்னிறுத்தும் அமெரிக்கா, மற்ற நாடுகளைவிட மருத்துவ வசதிகளில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் மருத்துவக் காப்பீடு உள்ளவர்கள் மட்டுமே மருந்துகளையும் மருத்துவ வசதிகளையும் பெறமுடியும் என்பது மட்டும் எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. கனடா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல அதிகளவில் அரசு மருத்துவமனைகளோ, இலவச மருத்துவச் சேவைகளோ இங்கு கிடையாது. அதனால் பிறந்த நாள் முதல் 26 வயது வரை குழந்தைகள் பெற்றோர்களின் மருத்துவ காப்பீட்டின் பயனாளர்களாக இருக்க வேண்டிய கட்டாயம். அதுவும் “ஒபாமாகேர்” திட்டத்தால் மட்டுமே 26 வயது வரை சாத்தியமாயிற்று. இத்திட்டத்திற்கு முன்பு முழு நேர மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் 22 வயது வரையிலும், இல்லையென்றால் 19 வயது வரை மட்டுமே பெற்றோரின் உடல்நலக் காப்பீட்டில் குழந்தைகள் பயனாளராக இருக்க முடியும். அவரவர் வேலை, வருமானம், பணிபுரியும் நிறுவனங்களைப் பொறுத்தே மருத்துவ காப்பீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். படிக்காதவர்கள் ஏதாவதொரு பணியில் சேர்ந்து தங்களுடைய மருத்துவ காப்பீட்டிற்கான வழியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். காப்பீடு இல்லாதவர்கள் மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில்தான் தாறுமாறாக ஏறி வரும் இன்சுலின் மருந்தின் விலையைக் குறைக்க அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். “அண்டை நாடான கனடாவை விட அமெரிக்காவில் மட்டும் இன்சுலின் விலை ஏன் பத்து மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது?” என்ற அவருடைய சமீபத்திய ட்வீட் மீண்டும் மருந்தின் விலையேற்றம் பற்றின விவாதத்தைத் தொடங்கி அரசின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இதைப் பற்றி 2016ல் இருந்தே அவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை தான் கிடைத்தபாடில்லை.

ஈலை லில்லி, சுனோஃபி, நோவோ நோர்டிஸ்க் போன்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்சுலின் மருந்துகளின் விலையை 2002லிருந்து 2013க்குள் $231லிருந்து $736 ஆக அதிகரித்துள்ளது. இன்சுலின் தேவைப்படுவோருக்கான ஒரு வருடத்திய செலவு மும்மடங்காக அதிகரிக்க, மருந்தின் விலையைக் குறைக்கவும் மருந்தைப் பயன்படுத்துபவர்கள் எளிதாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் பெர்னி.

இன்சுலின் என்பது உடலின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் உள்ள கணையம் இன்சுலினை உருவாக்கி இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இன்சுலின் உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கு உண்ணும் உணவிலிருந்து சர்க்கரையைத் திசுக்கள் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. தேவைக்கு அதிகமுள்ள சர்க்கரையை கல்லீரலில் சேமிக்கவும், இரத்த சர்க்கரை அளவு குறையும் பொழுது சேமித்து வைத்த சர்க்கரையை வெளியிடவும் உதவி செய்கிறது. கொழுப்பை உருவாக்குவதிலும் இன்சுலின் பங்கு வகிக்கிறது.

உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யா விட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உயர் ரத்த சர்க்கரை ( ஹைப்பர்கிளைசீமியா) ஏற்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகள் அவசியமாகிறது. டைப் 1 நீரிழிவு நோயாளிகள் உட்பட, நீரிழிவு நோயுடன் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்சுலின் மருந்து உண்மையில் வாழ்க்கை மற்றும் இறப்பு விஷயமாகும். சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் இன்சுலின் விலை அதிகரிப்புக்கான காரணங்கள் முற்றிலும் தெளிவாக இல்லை. கடந்த பத்து வருடங்களில் பிரபலமான நான்கு இன்சுலின் மருந்துகளின் விலை பல மடங்கு உயர்ந்து பலரும் தங்கள் கையிருப்பில் இருந்து செலவழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். நான்கில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க அரசு விலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு வைத்திருந்தாலும் ஒரு மாதத்திற்கு இன்சுலின் மருந்து வாங்க $350 வரை தங்கள் கைப்பணத்தைச் செலவிடுவதாகவும் காப்பீடு இல்லாதவர்கள் $1400 வரை செலவிட வேண்டியுள்ளதால் பலரும் மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் எடுத்துக் கொள்ள முடியாமல் தத்தளிப்பதாகவும், அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நீரிழிவு இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘மெடிகேர்’ என்பது 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் நலன்களைப் பெறும் இளைஞர்களுக்கான தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் மூன்று வித காப்பீடுகள் உள்ளடக்கம். பார்ட் A , மருத்துவமனைக் காப்பீடு, பார்ட் B மருத்துவ காப்பீடு, பார்ட் D மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கான காப்பீடு.

மெடிகேர் சுகாதாரச் செலவுகளுக்கு உதவினாலும் அனைத்து மருத்துவச் செலவுகள் அல்லது பெரும்பாலான நீண்ட கால பராமரிப்புச் செலவுகளை முற்றிலும் ஈடுசெய்யாது. பயனாளிகள் அதற்கென தனியாக பார்ட் A, B, D காப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கு தான் பலருக்கும் பிரச்னையே! மெடிகேர் மருத்துவப் பயனாளிகளில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. 3.3 மில்லியனுக்கும் அதிகமான மெடிகேர் மருத்துவப் பயனாளிகள் இன்சுலினைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவர் பரிந்துரைத்த அளவில் இன்சுலின் மருந்துகளை உட்கொள்ள முடியாதவர்களுக்குப் பார்வை, சிறுநீரக செயலிழப்பு, கால் புண்கள், மாரடைப்பு என நீண்ட கால சிக்கல்கள் உருவாகி அரசிற்கு வருடத்திற்கு $327 பில்லியன்கள் செலவாகிறது. அதுவும் மக்களின் வரிப்பணத்தில்! சில பொருட்களின் மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு, இன்சுலின் விஷயத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக மக்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இவற்றைக் கருத்தில் கொண்டு அதிபர் ட்ரம்ப் July 24, 2020 அன்று இன்சுலின் விலையைக் குறைக்கும் நிர்வாக உத்தரவு ஒன்றை வெளியிட்டார். மெடிகேர் பார்ட் D மூலம் மருந்துகள் வாங்குவோர் அதிகபட்சமாக $35 செலுத்தி தங்களுடைய மாதாந்திர இன்சுலின் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு உதவும் விதமாக இருந்த நிர்வாக உத்தரவு நல்ல வரவேற்பைப் பெற்றது.

அவரவர் உடல் தேவைக்கேற்ப பல விதமான இன்சுலின் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. சில நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கி இரண்டு மணிநேரம் நீடிக்கும் வேகமாக செயல்படும் இன்சுலின், வேலை செய்ய 30 நிமிடங்கள் எடுத்து கொண்டு 3 முதல் 6 மணிநேரம் வரை நீடிக்கும் குறுகிய நேர இன்சுலின், இடைநிலை இன்சுலின் முழுமையாக வேலை செய்ய 2 முதல் 4 மணிநேரம் ஆகும். அதன் விளைவு 18 மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நாள் முழுவதும் வேலை செய்யக்கூடிய நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின், கலப்பு இன்சுலின் என ஐந்து வகையான இன்சுலின் மருந்துகள் சந்தையில் கிடைக்கிறது. அதன் விலைகளும் மருந்து நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.

இன்சுலின் மருந்துகளின் விலையைக் குறைக்க பிராண்ட் பெயர் அல்லது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை இல்லாத நுகர்வோர் தயாரிப்பு மருந்துகளுக்கு அரசு ஒப்புதல் அளித்ததால் 2019லிருந்து விலையில் சிறிது மாற்றங்கள் தெரிந்தாலும் மற்ற நாடுகளை விட இன்னும் அதிக விலையில் தான் இருக்கிறது. வர்த்தக முத்திரை கொண்ட Humalog KwikPen $140ஐ ஒப்பிடும்போது ​​ பிராண்ட் பெயர் அல்லாத பொதுவான இன்சுலின் lispro KwikPen $60ன் விலை குறைவாக இருந்தாலும் சாமானியர்களால் வாங்க முடியாத நிலைமையே தொடருகிறது. கனடாவில் ஒரு யூனிட் இன்சுலின் சராசரிப் பட்டியல் விலை $12. அதுவே அமெரிக்காவில் $98.70. நீரிழிவு நோயாளிகளின் உடல் தேவைக்கேற்ப ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 4 இன்சுலின் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஏழு மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தின் விலை மற்ற உலக நாடுகளை விட அமெரிக்காவில் மட்டும் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஏறுவதால் அரசும் மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இன்றைய விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

இதற்கெல்லாம் முதன்மைக் காரணமாக PBMகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. PBM எனப்படும் ‘Pharmacy Benefit Managers’கள் மருந்து நிறுவனங்கள் மற்றும் உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகள் ஒரு மருந்துக்கு என்ன விலை செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் இவர்களே. முதியோருக்கான அரசு நிதியுதவி வழங்கும் மருத்துவ காப்பீட்டு திட்டமானது இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் தலையீடு முற்றிலும் இல்லாத சூழ்நிலையில் மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய வகையில் வெளிப்படைத்தன்மையற்ற தீர்மானங்களைக் கொண்டு வருவதால் தான் இந்த விலையேற்றம் என்பது தெரிந்தும் தடுக்க முடியாமல் தவிக்கிறது முதலாளித்துவ அமெரிக்க அரசாங்கம். அரசே நினைத்தாலும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மனது வைத்தால் மட்டுமே விலையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதே தற்போதைய நிதர்சனமான உண்மை..

ஆனால் மருத்துவ ஆராய்ச்சி, மருந்துகளின் உற்பத்திச் செலவு, விளம்பரங்கள், மருந்து நிறுவனங்கள் தரும் தள்ளுபடி கூப்பன்கள், நிர்வாக கட்டணங்களைக் காரணம் காட்டி PBMகள் விலையை அதிகரித்துக் கொண்டே வருவது தான் வேதனை.

1923ல் ஃபிரடெரிக் பேண்டிங் என்பவரால் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மக்களின் உயிரைக் காக்கும் மருந்திற்குத் தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று மறுத்திருக்கிறார். உயிர் காக்கும் இந்த மருந்து அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் யூனிவர்சிட்டி ஆஃப் டொரோண்டோவிற்கு $1க்கு அதன்
காப்புரிமையை விற்றிருக்கிறார். மற்ற தொழில்மயமான நாடுகளைப் போலவே கனடாவும் குறைவான விலையில் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மருந்துகளின் மீதான விலைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே அங்கு குறைந்த விலையில் இன்சுலின் கிடைப்பதற்கு காரணம்.

கனடாவைப்போல் மருந்தின் விலையை அரசு நிர்ணயம் செய்யாததும், லாப நோக்குடன் செயல்படும் மருந்து உற்பத்தி, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் அராஜக போக்குகளே அமெரிக்காவில் இன்சுலின் விலை ஏற்றத்திற்கு காரணம். அதிகரித்து வரும் இன்சுலின் செலவுகளைப் புரிந்து கொள்ள விநியோகச் சங்கிலி (சப்ளை செயின்) விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது, எதிர்கால பட்டியல் விலை உயர்வுகளை பணவீக்க விகிதத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது, மருந்து விலையைத் தீர்மானிப்பதில் அரசின் பரிசீலனையைக் கருத்தில் கொள்வது, சந்தையில் போட்டியை உருவாக்க இன்சுலின் பயோசிமிலர்களின் ஒப்புதலை விரைவுபடுத்துவதன் மூலம் விலைகுறைப்பு சாத்தியம் என எண்டோகிரைன் சொசைட்டி நம்புகிறது.

கடந்த வாரங்களில் அதிபர் பைடன் தன்னுடைய “Build Back Better ” மசோதா மூலமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலையைக் குறைக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

முதலில் இன்சுலினுக்கான மாதாந்திர செலவை $35 வரம்புக்குள் கொண்டு வருதல். இது அரசு மற்றும் தனியார் சுகாதார காப்பீடுகள் வைத்துள்ள அனைவருக்கும் பொருந்தும். எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இரண்டாவதாக, மருத்துவ காப்பீடு இல்லாதவர்களுக்கு அரசாங்கமே காப்பீடு வழங்க வகை செய்தல். Healthcare.govல் மேற்படி தகவல்கள் கிடைக்கிறது என்று வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் $10 மட்டுமே செலுத்தி பரிந்துரைக்கப்பட்ட இன்சுலின், மற்ற மருந்துகள், மருத்துவமனை அனுமதி, மருத்துவர் ஆலோசனை பெரும் வசதிகளும் இதில் பெற முடியும் என்பது எப்படி என்று தான் தெரியவில்லை! மசோதாவின் மீதான விவாதத்தில் இதன் தொடர்பான தகவல்களும் சாத்தியங்களும் தெரிய வரும்

மெடிகேர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை மருத்துவர் ஆலோசனை, மருத்துவமனைச் செலவுகள் போன்றவற்றில் பேச்சுவார்த்தை நடத்தி விலையைக் குறைக்க முடிவதைப் போல பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்தும் அனுமதி வழங்கப்படும் என்பது மிகப்பெரிய மாற்றம். கண்டிப்பாக இந்த மசோதாவிற்கு செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மூன்றாவதாக, மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் லாபத்தைப் பெற்று எந்தக் கண்காணிப்பும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் விலையை உயர்த்தும் நாட்களை முடிவுக்குக் கொண்டு வருதல். அது அத்தனை எளிதான விஷயமா? அவர்களுடைய லாபி எத்தகையது என்று நாடே அறியுமே! அரசியல்வாதிகள் பலரும் இந்த லாபிக்கு கட்டுப்பட்ட நிலையில் இத்தகைய மாற்றங்களை இரு கட்சிகளும் இணைந்து செயல்படுத்துமா என ஆர்வத்துடன் மக்களும் காத்திருக்கிறார்கள்.

“இந்த நாட்டில் சுகாதாரம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டுமே ஒழிய சலுகையாக இருக்க கூடாது. பலருக்கும் ஒரு மருந்தின் விலை என்பது நம்பிக்கைக்கும் பயத்திற்கும், வாழ்வுக்கும் மரணத்திற்கும், கண்ணியத்திற்கும் சார்புக்கும் இடையேயான பெரும் வித்தியாசம்.”
இந்த அத்தியாவசிய மாற்றங்கள் மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகள் மற்றும் காப்பீடு இல்லாதவர்களுக்குத் தேவையான மருந்துச் செலவுகளைக் குறைத்து சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யப் போகிறது. அதனால் தன்னுடைய “Build Back Better” மசோதாவிற்கு செனட் பிரதிநிதிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார் அதிபர் பைடன்.

ஆனால் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், அதிகபட்ச விலையினால் கிடைக்கும் லாபத்தில் தான் இந்நிறுவனங்கள் அதிக ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது. கான்சர், எய்ட்ஸ் முதல் இன்றைய கொரோனாவிற்கான பல அரிய மருந்துகளை உலகிற்கு அளிக்க முடிகிறது. விலையைக் குறைப்பதன் மூலம் மேற்கொண்டு ஆய்வுகள் நடத்த முடியாத சூழலில் எதிர்காலத்தில் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதில் தடைகள் உருவாகும் நிலை ஏற்படும். விலையேற்றம் சரியே. மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பன்கள், சலுகைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாதிடுவதால் பைடனின் அனைவருக்குமான இன்சுலின் விலைகுறைப்புத் திட்டம் சவாலாகவே இருக்கும்.

வெளிப்படைத்தன்மையற்ற அமெரிக்க சுகாதார அமைப்பில் மாற்றத்தினைக் கொண்டு வரும் நேரம் இது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மனது வைக்க வேண்டும். இதில் அரசியலைத் தாண்டி இரு பெரும் கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பு.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

One Reply to “இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும்”

  1. மிகத் தெளிவாக மற்றும் வாசக சிநேகத்துடன் எழுதப்பட்டிருக்கிறது லதா குப்பா அவர்களின்
    இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும் கட்டுரை. வாழ்த்துக்கள்.

    லாவண்யா சத்யநாதன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.