வ. அதியமான் கவிதைகள்

பின்னந்திப் பொழுதின் பணிகள்

மரணித்து விட்ட ஒரு மனிதர்
வெறுமனே சும்மா ஒன்றும் படுத்திருப்பதில்லை
அவர் ஜோலி அவருக்கு உண்டு
நனைந்திருக்கும் ஒவ்வொரு தொண்டையையும்
நன்கு உலர வைத்து
பதம் பார்த்து எடுத்து வைக்கிறார்
விழிநீரின் சிற்றனல் கொண்டு
தொண்டைத் திரிகளை
சரியாக பற்ற வைக்கிறார்
மெல்ல தீ பற்றிக் கொண்ட தொண்டைகள்
ஒவ்வொன்றாக வெடிக்கத் தொடங்குகின்றன
குரல்களின் வெடியோசையில்
இந்த சின்னஞ்சிறிய உலகை
ஒருமுறை அதிரச் செய்துவிட்டு
ஏதுமறியா கள்ளச் சிறுவனாய்
ஓடிச் சென்று அசையாமல் படுத்துக் கொண்டு
இமை திறவாது
வெடியோசைகளை
ஒவ்வொன்றாய்
எண்ணிக் கொண்டிருக்கிறார்

மலைகள் என்றொரு சிறு நடனம்

உச்சிக்கு தாவி ஏறும்
பாதங்களுக்கு
ஒன்று
தரைக்கு தவழ்ந்திறங்கும்
பாதங்களுக்கு
இன்னொன்று
சிறகு முளைத்துவிட்ட பட்டாம் பூச்சிக்கோ
முற்றிலும் வேறு ஒன்று
ஒவ்வொரு கணமும்
உருகி உருகி
உருமாறிக் கொண்டிருக்கிறது
இந்த நெடுமலை

மீட்டப்படாத ஸ்வரங்களை தின்று விடுங்கள்

குளிர்ந்த வெண்சிறகு விரித்து
தரையிறங்கும்
அருவியின் வேரடியில்
மடியமர்ந்து
கட்டுச் சோற்றுப் பொட்டலங்களை
முடிச்சவிழ்க்கிறோம் நாங்கள்

அவசர அவசரமாய் அரைபடும்
பருக்கைகளில் இருந்து
விழித்தெழுந்து வெளியே குதித்த ஒருவன்
சதா துள்ளியபடி
எங்கள் எல்லோரையும்
அருவியாட கூவி அழைக்கிறான்

இன்னும் கொஞ்சம் தாமதித்தால்
தன் பழைய வீட்டினை
சரியாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடும்
அவன்

வேறு வழியில்லை
துள்ளும் அவனை எட்டிப் பிடித்து
சில கணங்களுக்குள்
முழுதாய் பிய்த்து
தின்று முடித்துவிட்டோம்
நாங்கள்

சேதி

மதிய நேரத்து உச்சி வெய்யிலில்
சொல்லிக் கொள்ளாமல்
திடீரென்று பொத்துக்கொண்டு வரும்
இந்த அடைமழை
உங்களுக்கும் எனக்கும்
சொல்ல வரும் சேதி என்ன?

உயிர் நோக செய்து கொண்டிருக்கும்
உங்கள் அத்தனை வேலைகளையும்
அப்படியே அப்படியே
தரையில் போட்டுவிட்டு
அறைக் கதவை தாழிடுங்கள்
சடுதியில்
விளக்கை ஊதி அணையுங்கள்

காடுகரை ஊர் உலகமெல்லாம்
சுற்றி வந்த மழை
உங்கள் கைகளில் கொண்டு தந்த
இந்த பொன்குளிரை
இப்போதே பொட்டலம் பிரியுங்கள்

அதனுள்ளே சுடச்சுட
ஒரு தொட்டில் ஒளிர்ந்து கொண்டிருப்பதை
நான்கு விழிகளுக்கு மட்டும்
இக்கணமே திறந்து காட்டுங்கள்
அவ்வளவே

சொக்க வைக்கும் நிழல் நான்

விதையுறையைக் கீறி
வேர் விட்டதிலிருந்து
நாளிது வரை
இந்த கிழட்டு மரம்
எத்தனைக் கோடி காதம் நடந்திருக்குமோ
அத்தனை தூரம்
நானும் நடக்கிறேன்
என் அடிவயிற்றில் இளைப்பாறும்
ஆயிரமாயிரம் பறவைகளும்
என் கூடவே நடந்து வருகிறது

***

4 Replies to “வ. அதியமான் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.