
மழை பிடிக்காதா என்று கேட்டால், பிடிக்கும் என்று தான் சொல்வேன் ஆனால் வெயில் பிடித்த அளவுக்கு இல்லை.
மழையில் நனைவது சுகம் தான் ஆனால் மழை வந்தவுடன் மொட்டைமாடியில் போய் ஆட்டம் போடுவது, நனைத்தபடியே ஐஸ்கிரீம் சாப்பிடுவது, துப்பட்டாவை மாலையாக கொண்டு நடனம் ஆடுவது என்பதெல்லாம் என் எல்லைக்கு அப்பாற்பட்டது. அவற்றையெல்லாம் மற்றவர்கள் செய்வதை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வேன். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களை பார்த்தால், என்ன பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுவதும் உண்டு. அது சரி, எனக்கு அவ்வளவு உவப்பில்லாத ஒன்றை மற்றவர்கள் செய்து அதில் மகிழ்வும் எய்தும்போது இப்படி தானே எனக்கு தோன்றவேண்டும். அவர்களின் மகிழ்ச்சி எனக்கு தொற்றுவதில்லை.
வெயிலில் இருக்கும் சுகம் எனக்கு மழையில் கிட்டவில்லை. அதை சுகம் என்று சொல்வதா, இல்லையில்லை ஒரு மன சமாதானம் என்பது தான் சரியாக இருக்கும்.
எனக்கு வெயில் உவப்பானது என்பது என் பத்தாம் வகுப்பு தேர்வு விடுமுறைக்கு என் அம்மச்சி ஊருக்கு போயிருந்த போது தான் நான் கண்டுகொண்டேன்.
என் அம்மச்சியின் வீடு இருந்தது ஒரு சிறிய ஊர். வீடு என்னவோ பெங்களூரு செல்லும் பெருவழி சாலையில் தான் என்றாலும், முன் பக்கம் இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டிருந்ததால், கடைகளை ஒட்டியிருக்கும் சின்ன நடைசாந்தில் நுழைந்தே வீட்டிற்கு செல்ல முடியும். அதனால் வீட்டு படி வாசலில் இருந்து சாலையை பார்க்க முடியாது.
பெரிய வீடெல்லாம் இல்லை, ஒரு கம்பிபோட்ட ரேழி, இரண்டு உள்ளறைகள், ஒரு சமயற்கட்டு, குளிக்கும் பகுதி.
இந்த கம்பி ரேழியை கம்பி திண்ணை என்றே சொல்வோம்.
முப்பது நாற்பது குடும்பங்கள் மட்டுமே கொண்ட சின்ன ஊர் என்பதால், நாள் முழுவதுமே எவ்வித பரபரப்பும் இருக்காது. டவுன் பக்கம் போல காலையில் குழந்தைகள் பள்ளிக்கும், பெரியவர்கள் பணிக்கும் சென்ற பிறகு தெருவே வெறிச்சோடிவிடுவது போல் அல்லாமல் எப்போதுமே ஒருவித அமைதியாக தான் ஊர் இருக்கும். காலையில் என் அம்மச்சி தரும் காபியை குடித்தபின்னர் முன்பக்க கடை வாசலில் கிடக்கும் பேப்பருடன் உட்கார்ந்து சாலையை வேடிக்கை பார்த்தபடி பேப்பரை புரட்டுவேன்,
ரோட்டின் எதிர்பக்கம் இருக்கும் தோட்டத்திலிருந்து பொன்னம்மா அக்கா தலையில் கழனி தண்ணி பானையை வைத்தபடி சாவதானமாக ரோட்டை தாண்டி வருவார். சுமார் ஆறு ஏக்கர் தோட்டத்துக்கு சொந்தக்காரர் ஆனால் காலையில் கழனி பானையை சுமந்தபடி ஊரில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று தன் கட்டுத்தரை எருமைகளுக்கு கழனி தண்ணி சேகரிப்பார். அவர் ரோட்டை தாண்டும் போது வெயில் மெல்ல மேலே எழ துவங்கியிருக்கும்.
என் தாத்தா அவர் வேலைசெய்யும் ரோல்லிங்மில்லுக்கு செல்லும் வரை பேப்பரை புரட்டுவதும், அவர் கிளம்புவதை வேடிக்கை பார்ப்பதுவுமாக இருப்பேன்.
அவர் சென்றபின்னர் நானும் அம்மச்சியும் மட்டும் தான். காலையிலேயே சாப்பாடு தான், இட்லி தோசை எல்லாம் தினமும் கிடையாது. வாரத்தில் ஒருநாள் இட்லி, அன்று மட்டும் தாத்தா சென்ற பின்னர் நானும் அம்மச்சியும் மீதம் இருக்கும் இட்லிகளை போணியில் போட்டு சர்க்கரை, பழம் சேர்த்து பிசைந்து சாப்பிடுவோம், சாப்பிடுவோம் என்றால் அம்மச்சி பிசைந்து எனக்கு ஒரு வாய் அவர் ஒரு வாய் என்று சாப்பிடுவோம்.
அன்றும் அப்படி தான் சாப்பிட்டு முடித்தோம். அம்மச்சி இனி எருமை கட்டுத்தரைக்கு போனார் என்றால் ரெண்டு மணி ஆகும் வர.
அப்படி அன்று அம்மச்சி கட்டுத்தரைக்கு சென்ற பின்னர் நான் வந்து கம்பி திண்ணையில் உட்காரும்போது வெயில் நன்றாக மேலெழுந்து கொண்டிருந்தது.
ராகி அரைக்கும் ஆரியக்கல்லுக்கு பக்கத்தில் உட்கார்ந்து வெயில் விழும் படிக்கட்டை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அது ஒரு ஏகாந்தம்.
வெயில் மட்டும் காரணமில்லை.
வீட்டின் அமைதி, தெருவில் சந்தடி இல்லாதது, அடுத்து செய்யவேண்டிய காரியம் பற்றிய பரபரப்பு ஏதுமின்மை, முக்கியமாக காரை தரை, கம்பி திண்ணை கடைசியில் இருக்கும் கொடியில் தொங்கும் அமைச்சின் நெகமம் புடவைகளின் அடர்ந்த அம்மச்சியின் வியர்வை கலந்த வாசனை, இவற்றுடன் கூடி அந்த வெயில் தரும் ஒரு சுகந்த மனநிலை.
அன்று பற்றியது தான் வெயிலை அனுபவித்தல் என்னும் இந்த பித்து.
வெயிலை வேடிக்கை பார்ப்பது என்று இல்லை, வெயில் என் மேல் பட வேண்டும், வெயிலை கண்களால் பருகி உள்ளே நிரப்பிக்கொள்ளவேண்டும்.
கொஞ்சம் வினோதமாக இருக்கிறதா, அவ்வளவு எல்லாம் வினோதம் இல்லை, காலை எழுந்தவுடன் அந்த நாளைய சாயா பருகும் போது நமக்கு ஏற்படும் ஒரு பரவசம் தான். இத்தனைக்கும் தினமும் குடிக்கும் சாயா தான் அது.
ஆனால் யாரிடமாவது அப்போது வெயிலில் நனைவேன் என்று சொல்லி இருந்தால் என்னை ஏற இறங்க பார்த்திருப்பார்கள்.
எனக்கு இந்த அதிகாலை வெயிலோ, இளம் வெயிலோ, மாலை நேரத்து மங்கும் வெயிலோ பிடிப்பதில்லை.
பத்து, பதினோரு மணிக்கு மேல் துவங்கும் வெயில் தான் இதம்.
பொதுவாகவே நிறைய பேர் அவர்கள் ஊர் வெயில் பற்றி கூறும்போது, பத்து மணிக்கு மேல ஒரு வெயில் அடிக்கும் பாருங்க, அப்பப்பா என்றோ, வருஷம் முழுக்க வெயில் தான் காய்ச்சும் என்றோ சொல்லும் போது நான் வெயில் உலகத்துக்குள் பயணம் புறப்பட்டு நல்ல சீமை ஓடு வேய்ந்த திண்ணையில். வலது கையால் வெற்றிலை சுண்ணாம்பு துடைக்கப்பட்ட விரல் தடம் அங்கங்கு பதிந்த முழுவதுமே நல்ல அழுக்கு படிந்த மர தூணை அணைத்தவாறு, உட்கார்ந்து கொண்டு வெயிலுக்குள் ஆழ்ந்து போய் அரைமணி நேரம் ஆகி இருக்கும்.
எனக்கு அந்த ஊரில் உள்ள ஏதோ ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து வெயில் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை வரும்.
என்னை பொறுத்தவரை உலகத்திலேயே அதிர்ஷடசாலி நாலு கட்டு வீடு வாய்க்க பெற்றவன் தான்.
மேலே போடப்பட்ட கம்பியின் நிழல் விழ. தொட்டிக்கட்டின் ஓரத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் லேசாக படர்ந்திருக்கும் பாசியின் வாசம் மெல்லிசாக வீச, பகல் வெயிலில் கால்மடக்கி அமர்திருக்கும் சுகத்தை என்னவென்று சொல்வது.
நான் கல்லூரி படிக்கும் போது தான் புதிதாக வீடு கட்டிக்கொண்டு தங்கம் நகருக்கு சென்றோம். நாலு கட்டு வீடெல்லாம் இல்லை, இப்போ கட்டப்படும் நவீன டப்பா டப்பா போன்ற கட்டம் கட்டமாக இருக்கும் வீடுதான்.
நாங்கள் குடிபெயர்ந்தது கார்த்திகை தீபத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும் போது. தீபம் முடிந்து மார்கழி குளிர் துவங்கியது, எனக்கு இருப்பு கொள்ளவில்லை. புது வீட்டிற்கே உண்டான குளிர்ச்சி, வழவழப்பான தரை இது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
இந்த வீட்டில் வலது பக்கம் நிறைய காலி இடம் விட்டிருந்தோம், அங்குதான் துணி துவைப்பதற்கான கல் பாவிய காரை தளம், அருகில் அடுத்து அடுத்து மரங்களும் நட்டிருந்தோம்.
வீட்டிலிருந்து துணி துவைக்கும் இடத்திற்கு இறங்குவதற்கு இடையில் இரண்டு கருங்கல் படி.
அந்த படிக்கற்களில் அமர்ந்து துவைக்கும் கல் பாவிய காரையில் விழும் வெயில், தரையில் பட்டு என்மேல் தெறிக்க, அது ஒரு சிலிர்ப்பை தரும் . என் புதிய வெயில் ஊற்றை கண்டுபிடித்தேன்.
அதன் பின்னர் பொங்கலன்று கண்டெடுத்த இன்னோர் ஊற்று, மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் நிழல் விழ துவங்கும் இடத்தில் அமர்ந்து மொட்டை மாடியின் சுவர் ஓரமாக விழும் வெயில். அதை பார்த்து கொண்டிருப்பதற்காகவே மொட்டை மாடிக்கு செல்வேன்.
இப்படி என் வெயில் பித்து நீண்டுகொண்டே சென்றது.
அப்படி என்ன அதில் பார்க்க, அனுபவிக்க இருக்கிறது என்று குறிப்பாக சொல்ல தெரியவில்லை.
மழையை ஏன் ரசிக்கிறாய் என்று கேட்டால் என்ன சொல்வது. அப்படி தான்.
தினம் தினம் பார்த்தாலும் அது அதே வெயில் தான், மாற்றம் ஒன்றும் இல்லை, ஆனால் எனக்கு அந்த வெயில் தினமும் ஏதோ ஒரு ஆறுதலை மிக பொறுமையாக தந்துகொண்டே இருப்பது போல உள்ளது.
என் வீட்டிலும் யாரும் பெரிதாக வித்தியாசமாக பார்க்கவில்லை. ரொம்ப நேரம் வெயில்ல இருந்தால் தலை வலிக்கும் என்று மட்டும் அடிக்கடி என் அம்மா சொல்வார்.
என் அம்மாவின் எண்ணத்தில் நானே ஒரு நாள் மண்ணை வாரி போட்டேன்.
அந்த வருடம் மற்றைய எல்லா வருடமும் சொல்வது போல, ” இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி” என்று என் அம்மா சொல்ல , “கொஞ்சம் வெம்மை நல்லா தான இருக்கு ” என்று வாய் விட்டது தான் தவறாக போனது.
அன்றிலிருந்து நான் எப்போவெல்லாம் பின் வாசலில் வெயிலில் அமர்கிறேன் எவ்வளவு நேரம் இருக்கிறேன் என்று கவனிக்க துவங்கினாள் என் அக்கா.
அவள் ஆராய்ச்சியின் முடிவாக ,”உனக்கு தோலில் கொழுப்பு சத்து கம்மியா இருக்கு, அதுனால தான் எந்நேரமும் வெயில் படணும்னு உனக்கு தோணுது” என்ற என் அக்காவின் கூற்று சரியானதாக கூட இருக்கலாம்.
எப்போதும் வீட்டிற்குள் இருக்கும் ஒரு வித குளிர்ச்சி என்னை உந்தி வெளியே தள்ளியது.
ரொம்ப பசியோடு காத்திருக்கும் பண்டிகை நாட்களில் இழை போட்டவுடன் கொஞ்சமும், உணவு பரிமாறப்பட்டவுடன் மீதமுமாக நம் பசி காணாமல் போவது போல அது என்ன வகை அலுப்பும், மனசோர்வாகவும், பணியிடத்து எரிச்சலாகவும் இருக்கட்டும் சிறிது நேரம் வெயிலை பார்த்து கொண்டிருந்தால் எனக்கு காணாமல் போகிறது.
கோவிலுக்கு போனால் கிட்டும் மன அமைதி, நல்ல இசை கேட்டால் வரும் ஆசுவாசம் போல அல்ல, இது வேறு ஒரு வகை.
இது எல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
இப்போது என் பணி மேசையை வீட்டு கூடத்தின் பெரிய ஜன்னலை ஒட்டி தான் போட்டிருக்கிறேன். வலது பக்கம் திரும்பினாலே துவைக்கும் கல் தெரியும்படி.
வெயில் போன பின்னாடி சாயங்காலம் என்ன செய்வீங்க என்றால், தீர தீர என்றைக்கு திறந்தாலும் கடைசிக்கு நாலு அதிரசமாவது மிச்சம் இருக்கும் என்று எப்போதும் நான் எண்ணிக்கொண்டே ஒவ்வொரு முறையும் திறக்கும் அதிரச சம்படத்தை போல நாளைக்கு வெயில் இருக்க தான போகுது என்ற எண்ணமே எனக்கு போதுமானது.
மழை பெய்யும் நாட்களில் அதே ஜன்னல் ஓரம் உட்கார்ந்து துவைக்கும் கல் மீது விழும் மழையை பார்த்தாலும், வெகு நேரம் ரசிக்க முடியவில்லை.
கண்ணை மூடி மழை விழும் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பேன்.
எனக்கு பிடிக்காத சில வகை வெயில் உண்டு. மூன்று மணிக்கு மேல் அடிக்கும் எதிர் வெயில், பகல் நேரத்தில் மழை பெய்து முடிந்தவுடன் அடிக்கும் சுளீர் வெயில், பொழுது சாயும் நேரத்து வெயில்.
அது என்னவோ எதிர் வெயிலில் ஒரு குரூரம் இருக்கிறது. நடு ரோட்டில் வைத்து வாங்குன காச திருப்பி குடு என்று கேட்கும் சலவை வேட்டிக்காரர் முகத்தில் வெளிப்படும் குரூரம் இந்த மூன்று மணி இறங்கு வெயிலில் உண்டு.
மழை நின்ற பின் அடிக்கும் பளீர் வெயில் இந்தா உன் பணம் என்று விட்டெரியும் ரோஷக்காரன் முகத்தில் தெரியும் ஒரு வெறி. தணிய வெகு நேரம் ஆகும் அந்த சுளீர் உணர்வு.
ரெண்டும் நமக்கு ஆகாது.
அந்தி வெயில் பிடிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் வெறுக்கும் ஒரு காரணம், அம்மச்சி இறந்த அன்று, அம்மச்சியை குளிப்பாட்டி, கையில் கடைசியாக வெற்றிலை பாக்கு கொடுத்து, எடுத்துக்கொண்டு சென்றபோது, மாலை வெயில் லேசாக கண்கூசும் படி அடித்ததே. மாலையில் பொழுது சாயும் போது அடிக்கும் அந்த கடைசி கண் கூசும் வெயிலை பார்த்தாலே அம்மச்சி பாடையுடன் சென்றது தெளிவாக படமாக ஓடும். அந்த வெயில் ஒரு தவிப்பையே இன்று வரை தருகிறது.
கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே அம்மச்சி இறந்து விட்டதால், அதன் பின் அம்மாவிற்கும், மாமாவிற்கும் நடக்கும் வழக்கால் அம்மச்சி வீடு பூட்டப்பட்டது.
அம்மச்சியை பற்றிய பேச்சு வரும்போது எல்லாம், வழக்கு முடிந்து வீடு யார் கைக்கு வேண்டுமானாலும் கிடைக்கட்டும், எப்படியாவது அந்த ஆரியக்கல்லை இங்கு எடுத்து வர வேண்டும் என்று அம்மாவிடம் சொல்வதுண்டு. அந்த கல்லில் அம்மச்சி நினைவு ஒன்றும் இல்லை, அந்த ஆரியக்கல்லை தடவிக்கொண்டே அதன் சொரசொரப்பு உள்ளங்கையில் நெருட வெயில் என் மேலே விழ உட்கார்ந்து கொண்டுஇருந்தால் அந்த ஏகாந்தத்தை மீட்டு விடலாம் என்று ஒரு நம்பிக்கை.
நினைவில் இருந்து இனிமையான தருணங்கள் என்று மீட்டி எடுத்தால் ஏதேதோ நல்ல விஷயங்கள் நடந்த தருணங்களை இடித்து தள்ளிக்கொண்டு மேவி வருபவை எல்லாம் வெயில் அளித்த ஏகாந்த தருணங்கள் தான்..
கொள்கையாகவெல்லாம் எதுவும் இல்லை ஆனால் வெயிலை பார்த்துக்கொண்டே சாப்பிடுவதோ, அலைபேசியில் பேசுவதோ, குடும்பத்தாரோடு வீட்டின் உள்ளே எப்போதும் நிகழ்த்தும் அந்த அவசியமே இல்லாத உரையாடல்களோ ஒரு போதும் நிகழ்ந்ததில்லை.
ஆனால் வாசிப்பு உண்டு. எலுமிச்சை சாப்பாட்டுக்கு உருளைக்கிழங்கு வறுவல் போல நல்ல பதினோரு மணி வெயிலை ஒரு மணி நேரம் உள்வாங்கி விட்டு, ஒரு புத்தகத்தை வாசிக்க துவங்கினால் வாசிப்பு கூடுதல் சுகம். நடுவில் என்னை கொஞ்சம் வருட மாட்டாயா என்று வெயிலிடம் மறுபடி ஒரு சரணாகதி.
வெயிலுக்கு ஒரு வாசனை கூட உண்டு, அதன் வெம்மை படர்ந்து காற்று வீசும் போது முருகலான ஒரு வாசம் வீசுவதாக எனக்கு தோன்றும். தோன்றும் என்று ஏன் சொல்கிறேன் என்றால், இது நான் கற்பனையாக கொண்ட வாசமாக கூட இருக்கலாம்.
ஆனால் அந்த வாசம் ஒரு தடித்த சுருட்டின் புகை, பிடித்துக்கொண்டிருப்பவரை தாண்டி செல்லும் போது அந்த ஒன்று ரெண்டு வினாடி படீர் என்று நம் மூச்சில் அடிக்கும் சுருட்டு வாசனையின் அடர்த்தியை கொண்டதாகவும், சீமென்ட் பாலால் மேல் பூச்சு பூசாத சொரசொரப்பான காரையை தடவும்போது நாம் உணரும் ஒரு கெட்டி தன்மையாகவும் எனக்கு வெயில் வாசம் இருக்கும்.
எல்லா பித்துக்களும் ஏதோ ஒரு நாளில் தெளியும் என்று சொல்வார்களே அது போல, என் வெயில் பித்தும் ஒரு நாள் தெளிந்தது.
தெளிந்தது என்றால் விட்டு ஒழிந்தது என்று அர்த்தம் அல்ல, பித்துக்கான காரணம் தெரிந்தது.
இவ்வளவு வருடங்களாக ஒவ்வொரு இடமாக நான் தேடியது வெறும் வெயிலை மட்டுமல்ல, அன்று ஒரு நாள் என் அம்மச்சி வீட்டில் நான் அனுபவித்த அந்த வெயிலோடு கிட்டிய ஏகாந்தத்தையே.
அது பகுதி பகுதியாக என் வீட்டில் சில இடங்களில் கிட்டியது என்றாலும் என் மனதின் ஆழத்தில் அந்த ஆரியக்கல்லுக்கு பக்கத்தில் அமர்ந்து கம்பி ரேழி வழியாக என் மீது படிந்த வெயிலின் இதம் அப்படியே தான் இருக்கிறது. அந்த இதம் அப்படியே இனி எப்போதும் கிட்டாது. அது ஒரு மனநிலை. இதை ஒருவாறு உணர்ந்தபின் கிடைக்கிற வெயிலிலெல்லாம் அந்த ஏகாந்தத்தை துழாவி எடுத்து இணைத்துக்கொள்கிறேன்..
***
பள்ளிபிராயத்தில் டைபாயிடு காய்ச்சல் வந்து வீட்டில் தனியாக இருந்த தருணங்களில் வெயிலின் துணை கொண்டு வெயிலோடு விளையாடிய நினைவுகளை விஜயலக்ஷ்மியின் வெயில் கிளர்த்தியது.பாராட்டுகள்