விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்

This entry is part 7 of 23 in the series புவிச் சூடேற்றம்

சென்ற பகுதியில், மனித நடவடிக்கைகளால், பூமி வழக்கத்திற்கு அதிகமாக, சூடேறி வருவதற்கான சில விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். இந்தப் பகுதியில், மேலும் சில குற்றச்சாட்டுகளை முன்வைப்போம்.

குற்றச்சாட்டு 5: கடல் மட்டத்தின் அளவு கடந்த 25 ஆண்டுகளாக உயர்ந்த வண்ணம் உள்ளது. 1995 -ஆம் ஆண்டில், இது 11 மி.மீ. அளவு உயர்ந்தது என்ற நிலையிலிருந்து, இன்று, (2019), 96 மி.மீ. அளவு வரை உயர்ந்துள்ளது. 1850 –ல் இருந்த, சராசரி கடல் மட்டத்தைவிட, இன்று, ஏறக்குறைய 25 செ.மீ. (250 மி.மீ. ) அதிகம். இதற்குப் பெரிய காரணம், துருவப் பனிப்பாறைகளின் மறைவு. மேலும், கடல் உள்வாங்கும் அதிக பட்ச கரியமில வாயுவினால் வரும் வினை இது. அதிக கரியமில வாயுவிற்கு, மனித நடவடிக்கைகளே காரணம்

சாட்சிகள்

 1. பொதுவாக, 96 மி.மீ. என்பது மிகச் சிறிய அளவு – அதாவது நான்கு அங்குலத்தைவிடக் குறைவு. இதென்ன பெரிய விஷயம் என்று நாம் சும்மா இருக்க முடியாது. உலகின் 97% தண்ணீர், 4 அங்குலம் உயருகிறது என்பது மிகவும் அபாயமான விஷயம்!
 2. கனடாவின் நோவா ஸ்கோஷியா என்ற மாநிலம், அட்லாண்டிக் கடலில் பெரும்பாலும் உள்ள ஒரு பகுதி (இதைத் தீவு என்று சொல்ல முடியாது – ஒரு பகுதி, கனடாவுடன் இணைந்துள்ளது). அதன் கிழக்குப் பகுதியில் உள்ள லிவர்பூல் (Liverpool, NS), சற்று உயரம் குறைந்த நிலப்பகுதியில் உள்ளது. ஆகஸ்ட் 2020 –ல், சில கடலோரப் பகுதிகளில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது. இதற்கு காரணம், உயரும் கடல் நீர் மட்ட அளவு.

  https://www.youtube.com/watch?v=Hr9OS5xomjg
 3. உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று ஃப்ளோரிடாவில் உள்ள மயாமி நகரம். இங்கு, இந்தக் கடற்கரையைக் கண்டு ரசிக்கவே பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் வருடம் தோறும் செல்கின்றனர். அத்துடன், சொகுசுக் கப்பல் துறையின் (cruise shipping capital of the world) உலகத் தலைநகரம் மயாமி. இன்று, உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கடற்கரை நகரங்களில் ஒன்று, மயாமி என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து காற்று மண்டலத்தில், தொல்லெச்ச எரிபொருட்களை எரித்து, கரியமில வாயுவைக் கலந்து வந்தால், மயாமி, இன்னும் 20 ஆண்டுகளில் காணாமல் போய்விடும். மயாமி, ஃப்ளோரிடாவின் அடையாள கடற்கரை நகரம். இதைப்போல, பல்வேறு கடற்கரை நகரங்கள் இவ்வாறு பாதிக்கப்படும். இதன் அடிப்படை, நாம் சொன்ன 4 அங்குல வளர்ச்சி, 2040 –ல், 8 முதல் 12 அங்குலமாக அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, இன்னும் நான்கு அங்குலம், ஃப்ளோரிடாவின் பொருளாதார ஆணிவேரையே அறுத்துவிடும் சாத்தியக்கூறு 20 ஆண்டுகளில் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

  https://www.scientificamerican.com/article/miami-is-the-most-vulnerable-coastal-city-worldwide/

குற்றச்சாட்டு 6: அடிக்கடி உருவாகும் திடீர் வெள்ளம், நீண்ட வறட்சி காலம், மற்றும் நிலச்சரிவுகளுக்கு மனித நடவடிக்கைகளே காரணம். பூமியில் அதிகமாகும் வெப்பத்தினால் தூண்டப்படும் நிகழ்வுகளே இவை.

சாட்சிகள்

 1. விஞ்ஞானிகள், நிலத்தில், பனியற்ற தொடக்க நாட்களை, விதை விதைப்பதற்காகக் குறித்து வந்துள்ளனர். இந்த நிலப் பகுதிகள், ஒவ்வொரு வருடமும், புவி சூடேற்றத்தால், வடக்கே நோக்கி போய்க்கொண்டே இருக்கிறது. வட அமெரிக்காவில், பெரும்பாலும், அமெரிக்காவின் வடக்கே உள்ள மாநிலங்களில், மார்ச் மாதம் வரை தரையில் பனி உண்டு. இன்று, மிகச் சில மாநிலங்களைத் தவிர, மற்றவற்றில், தரையில் பனியில்லை. அதாவது, வசந்த காலம் முன்னமே வந்துவிடுகிறது. அதேபோல, ஏப்ரல் மாதத்தில், கனடாவில் பெரும் பகுதிகளில், தரையில் பனியுண்டு. ஏப்ரல் 2020 –ல், சில கனேடிய மாநிலங்களிலும் (முழு மாநிலமும் அல்ல, அமெரிக்காவைத் தொட்ட பகுதிகள்), தரையில் பனி இருப்பதில்லை. அதே போல, வட ஆசியாவிலும் நிலத்தில் பனியற்ற ஏப்ரல் நிலங்கள் அதிகரித்து வருகின்றன.
 2. மழை, சில இடங்களில் வழக்கத்திற்கு அதிகமாகவும், பல இடங்களில், வழக்கத்திற்குக் குறைவாகவும் புவிச் சூடேற்றத்தால் மாறிக்கொண்டே வருகிறது. பயிர் விளையும் காலமும், மழையும் மாறுவதால், விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியை சமாளிப்பது புவிச் சூடேற்றத்தால், கடினமாகிக்கொண்டே வருகிறது
 3. அமெரிக்கத் தென் மேற்குப் பகுதிகள், கடந்த 20 ஆண்டுகளாக, கோடை காலத்தில் வறட்சியைச் சந்தித்து வருகின்றன. நான், சமீபத்தில், (மார்ச் 2020), அரிஸோனா சென்றிருந்தபொழுது, கொலராடோ நதியில் (தென் மேற்கு மாநிலங்களின் முக்கிய நதி) அதிகம் தண்ணீர் இல்லை கோடை வந்தால், வறண்டுவிடும் அபாயம் நிச்சயம். தென் மேற்கு பகுதிகள் 21 ஆம் நூற்றாண்டில், கடந்த 1,000 வருடங்கள் சந்திக்காத வறட்சியைச் சந்திக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். வறட்சி என்ற சொல்லே சரியில்லை, நீண்ட நீரில்லா வருடங்கள், (முப்பது முதல் ஐம்பது வருட வறட்சி) இப்பகுதியை புவி சூடேற்றத்தால், ஆக்கிரமிக்கப் போகிறது. தொடர்ந்து கரியமில வாயுவை இதே வேகத்தில் காற்றில் கலக்கவிட்டால், இது மெதுவாக, மற்ற தென் கிழக்கு மாநிலங்கள், மெக்ஸிகோ என்று அமெரிக்காவின் விவசாயத்தையே சவாலாக்கிவிடும். இதை நாசா மெகா வறட்சி (mega drought) என்று சொல்கிறது
 4. செயற்கைகோள் தரவுகள் மூலம், இந்தியா, சைனா, தென்கிழக்கு ஆஸ்ட்ரேலியா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில், பசுமை நிலங்கள் அதிகரித்துள்ளன. இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? இந்த நாடுகளில், காடுகள், விவசாயத்திற்காக அழிக்கப்படுகின்றன. அதேபோல, செயற்கைகோள் தரவுகள் மூலம், வடக்கு ஐரோப்பா, ஆசியா, தென் மேற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் காங்கோ நதி டெல்டா பகுதி, இவை யாவும் பாலைவனமாகி வருகிறது. பசுமைப் பகுதிகள், காடுகளை அழிப்பதால் அதிகமாவதால், இன்றைய தரவு சரியாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், 1970 –க்குமுன், அமெரிக்க தென் மேற்குப் பகுதிகள் பசுமையாக இருந்தவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

குற்றச்சாட்டு 7: ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதியில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகிக்கொண்டு வருவதும் மனித நடவடிக்கைகளால். 1993 முதல் 2016 வரை ஆர்டிக் பகுதியில் 286 பில்லியன் டன்கள் மற்றும் அண்டார்டிகாவில் 127 பில்லியன் டன்கள் எடையுள்ள பனிப்பாறைகள் இன்று மறைந்துவிட்டன.

சாட்சிகள்

 1. வட துருவத்தில், செப்டம்பர் மாதம், அதிக பனியுருகும் காலம். வட துருவத்தில், கோடைக் காலத்தில், இருள் என்பதே ஒன்று அல்லது இரண்டு மணி நேரமோதான். மேலே உள்ள படம், 1979 முதல் 2019 வரை, மூன்று மில்லியன் சதுரக் கி.மீ. பரப்பளவு பனிப்பாறைகள் உருகியுள்ளதைக் காட்டுகிறது. இது, ஏறக்குறைய இந்தியாவின் 75% பரப்பளவு!
 2. பத்தாண்டுகளுக்கு, 12.85% பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால், உயரும் கடல் மட்டம், கடலோர நகரங்களுக்கு எப்படிப் பாதிப்பை உண்டு பண்ணும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்
 3. ஆர்க்டிக் கடலில் கலந்துள்ள கரியமில வாயுவின் அளவும், இதே கால கட்டத்தில் உயர்ந்துள்ளது. இது, மனித நடவடிக்கைகளின் தூண்டுதலால் நிகழும் மாற்றம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது
 4. க்ரீன்லேண்ட் மற்றும் ஐஸ்லேண்டில் வருடத்திற்கு, 294 பில்லியன் டன்கள் பனிப்பாறைகளை இழந்து வருகிறோம்
 5. அண்டார்டிகாவில், வருடத்திற்கு, 127 பில்லியன் டன்கள் பனிப்பாறைகளை இழந்து வருகிறோம்
 6. உலகெங்கும், 1994 முதல், நாம் பனியுறை நதிகளில் (glaciers) 400 பில்லியன் டன்கள் பனியை இழந்துள்ளோம். வட/தென் அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா யாவும் இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றும், நாம் ஜீவ நதிகள் என்று சொல்லும் நதிகளின் ஜீவனுக்கு சவால்கள்
Bearing Witness to Svalbard’s Fragile Splendor: Norwegian archipelago, is full of ethereal waterfalls: Strong summer sun melts the top layer of ice on Austfonna, Svalbard’s largest ice cap, Europe’s 3rd-largest glacier, creating myriad gushing waterfalls

பூமியின் சராசரி வெப்பநிலை

மனிதர்களின் சராசரி வெப்பநிலையைக் கணிப்பது மிகவும் எளிது. ஒரு வெப்பமானியை நாக்கிற்குக் கீழே அல்லது கக்கத்தில் சில நிமிடங்கள் வைப்பது, அல்லது இன்றைய டிஜிட்டல் வெப்பமானியை ஒருவரின் நெற்றியில் அருகிலிருந்து குறி பார்த்ததும், சராசரி வெப்பநிலை தெரிந்துவிடும். பூமிக்கு இவ்வகை அங்கம் எதுவும் கிடையாது. எப்படி அதன் சராசரி வெப்பநிலையை விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்?

இதைச் சுருக்கமாகச் சொல்வதானால், பல தரவுத் தொகுப்புகளின் (multiple data sets) சராசரியே பூமியின் சராசரி வெப்பநிலை. சற்று விரிவாகப் பார்ப்போம்.

 1. உலகின் பல்லாயிரம் வெப்பமானிகள் காற்று மண்டலத்தின் வெப்பத்தை அளக்கின்றன. இந்த வெப்பமானிகள் தரையிலிருந்து குறைந்தபட்சம் 1.5 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த வெப்ப அளவுகள் தரவுத் தொகுப்புகளாக சேர்க்கப்படுகின்றன
 2. கடலின் வெப்பம் வேறு விதமாக அளக்கப்படுகிறது. முதலில், துறைமுகங்களில் மட்டுமே அளக்கப்பட்ட (அதுவும், 1 முதல் 20 மீட்டர் ஆழத்தில்) வெப்பம், இன்று கப்பல்களால் அளக்கப்பட்ட வண்ணம் உள்ளது
 3. உலகின் நிலப்பகுதியில், ஜனத்தொகையைப் பொறுத்து, பல்வேறு வழிகளில் அளக்கப்படுகின்றன. பொதுவாக, வானொலி/டிவி மூலம் நாம் தெரிந்துகொள்வது காற்று மண்டல வெப்ப அளவுகள்
 4. உலக காலநிலைக் கழகம், (WMO) ஒவ்வொரு தளத்திலும் (குறிப்பாக, நிலப் பகுதிகள்), 24 மணி நேர அதிகபட்ச, மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை போன்ற அளவுகளை ஒரு தரவுத் தொகுப்பாக சேமிக்கிறது
 5. இந்த விஷயத்தில் உள்ள விந்தை என்னவென்றால், உலகில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மாறுபட்டாலும், சில ஆயிரம் கி,மீ. தூரங்களுக்குப் பெரிதாக 24 மணி நேரத்தில் அதிக மாற்றம் இருப்பதில்லை – இதை ஒரு மாத மற்றும் வருட அளவில் பார்த்தால், தெளிவாகும்
 6. சில தளங்களில் பின்பற்றப்படும் முறைகள் வேறுபடுவதால், நிலம் மற்றும் கடல் வெப்பநிலை அளவுகள் சற்று சரிபார்க்கப்படுகின்றன
 7. பூமியின் சராசரி வெப்பநிலையைக் கணிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. பூமத்திய ரேகை அருகே உள்ள பகுதிகளில், ஒரு டிகிரி அட்சரேகைக்குள் உள்ள நிலப்பரப்பு, பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் வேறுபடும். அதுவும் துருவங்கள் அருகே ஒரு டிகிரிக்கான நிலப்பரப்பு மிகவும் குறைவு. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்
 8. இத்துடன், பல்வேறு செயற்கைக் கோள்கள், பூமியின் காற்று மண்டல மற்றும் நிலம்/கடல் இவற்றின் வெப்பநிலையை அளந்து கணித்த வண்ணம் தரவுகளை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன
 9. இவற்றை எல்லாம் ஒன்றிணைத்துக் கணிக்கப்பட்ட வெப்பமே பூமியின் சராசரி வெப்பம்
 10. பொதுவாக, விஞ்ஞானிகள் வெப்பநிலையைப் பற்றிச் சொல்லுகையில், நிலத்தின் வெப்பநிலை மற்றும் காற்று மண்டல வெப்பநிலை என்று பிரித்தே சொல்லுகிறார்கள். மேலும், இதைப் பற்றி தெரிந்துகொள்ள:

  https://granthaminstitute.com/2015/10/16/taking-the-planets-temperature-how-are-global-temperatures-calculated/

அட, பூமிக்கு நாக்கிருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்?

மனித நடவடிக்கைகளால் அதிகரிக்கும் கரியமில வாயு, புவிச் சூடேற்றத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏழு பிரிவுகளாக நாம் இங்கு முன்வைத்தோம். பருவநிலை விஞ்ஞானம், வானவியல் விஞ்ஞானம் போன்றது. நம்மிடம் இருப்பது ஒரு பூமி. இதோ, நிரூபிக்கிறேன் என்று சோதிக்க, இன்னொரு பூமி இல்லை நம்மிடம். அத்துடன், மனித நடவடிக்கைகள், சிக்கலான, காற்று மண்டலம், கடல், பனிப்பாறைகள் என்று பூமியின் பல்வேறு அங்கங்களை மறைமுகமாகப் பாதிக்கிறது. இந்த பாதிப்பை இயற்கை சமாளிக்கிறது. ஆனால், இயற்கையின் வேகமும், மனித நடவடிக்கைகளின் வேகமும் வெவ்வேறு. இயற்கையின் சமாளிப்பையே நாம் இங்கு சாட்சியங்களாக வைத்துள்ளோம். அடுத்த பகுதியில், சில நியாயமான பருவநிலை விஞ்ஞானக் கேள்விகளுக்கு பதிலளிப்போம்.

****

Series Navigation<< மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.