புகைவண்டி நிலையத்தை படம் பிடித்தாற் போன்ற சித்திரமாக கோபுலு வரைந்திருப்பார். போர்ட்டர், கம்பங்கள், பெஞ்சுகள், விளம்பரப் பதாகைகள், தலை அல்லது கைச் சுமையாய் தின்பண்டங்களும், பழங்களும், காஃபி, தேநீர் விற்பவர்களும், குடும்பத்தோடும், நண்பர்களோடும் மனிதர்கள், நாய்க்குட்டி, இத்தனையையும் அந்தச் சித்திரத்தில் அடக்கிய அவர் ‘ஹோல்டாலையும்’ அற்புதமாகப் போட்டிருப்பார். ஆம், முகநூலின் புது அவதாரமான ‘மெடாவெர்ஸ்’ (Metaverse – MV) ஒரு ஹோல்டால் தான். பெருங்கதையாடல் எனச் சொல்லலாமா?

MV என்பது என்ன?
உலகின் எந்த மூலையிலும் இருக்கும் ஒருவர், மெய்நிகர் வெளியில்),Virtual Space) மற்றோரிடத்திலிருக்கும் ஒருவருடன் நிகழ் நிலையில் இணைந்து ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம். இருக்கும் இடத்திலிருந்துகொண்டே சென்னையிலிருக்கும் ஒருவர், சிட்னியில் நடக்கும் ஆப்ரா (Opera) நிகழ்ச்சியை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் தன் நண்பருடன் இணைந்து நிகழ்நிலை நிகழ்ச்சியாகப் பார்க்கலாம், அதைப்பற்றிய தன் கருத்தை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். நாம் அங்கே இருக்கிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இது இணையத்தை விட இந்தத் தன்மையினால்தான் மாறுபடுகிறது. ஆனால், பல்வேறு மின்னணுக் கருவிகளிடையே இணைப்பு ஒழுங்கு தேவைப்படும். தற்சம்யம் சட்டகங்களின் வழி காணக் கிடைப்பதை நீங்கள் உங்கள் இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறீர்கள். MV உங்களை அந்த இடத்திற்கே அழைத்துப் போய் விடும். இராக பேதம், ஸ்வர பேதம், நடை மாற்றம், இவற்றைப் பற்றி ரஞ்சனி, காயத்ரி சென்னை ம்யுசிக் அகெதமியில் நிகழ்த்தும் உரையில், நிகழ் நிலையில், லலிதாராம் பெங்களூருவிலிருந்தும், நம்பிகிருஷ்ணனும், கிரிதரனும் அயல் நாடுகளிலிருந்தும் நேரடியாகக் கேள்வி கேட்கலாம், தம் வசம் இருக்கும் சிறு இசைப் பதிவினை அப்போதே பகிர்ந்து அதன் சிறப்பு மற்றும் தாக்கங்களைக் குறித்தும் கேட்கலாம். ஜூமில்(Zoom), கூகுள் மீட்டில் இது ஏற்கெனவே இருக்கிறதே என்ற கேள்வி வருகிறது இல்லையா?. ஆம், அனைத்தும் முன்னரே உள்ளவைதான். அதனால்தான், சில வல்லுனர்கள் இது ஒரு பேரார்வத்தைக் குறிப்பதே தவிர சில குணாம்சங்களை மட்டுமல்ல என்று சொல்கின்றனர். எதிர்கால இலக்க உலகில், நிகழ்நிலையுடனான நம் அனுபவ உண்மைகளை மேம்படுத்தும் ஒன்றாக மெடாவர்ஸ் அமையக்கூடும் என அவர்கள் சொல்கிறார்கள்.
‘செகண்ட் லைஃப் (Second Life), ஃபோர்ட்னைட் (Fortnite) இவைகளும் MVக்களே. ஃபோர்ட்னைட்டில் விளையாட்டு மற்றும் அதைச் சாராதவற்றை இணைத்து முப்பரிமாணத்தில் நிகழ்நிலை அனுபவம் கிடைக்குமாறு செய்கிறார்கள்.
இணையம் இன்றைய நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதைவிட நெருக்கமாகவும், வெகு விரைவாகவும் MV நம்மை ஆட்கொள்ளப் போகிறது. அறிவியல் புனைவு எழுத்தாளர் நீயல் (நீல்) ஸ்டீஃபன்சன் (Neal Stephenson) 1992-ல் வெளியான ‘ஸ்னோ க்ரேஷ்’ (Snow Crash) என்ற புகழ் பெற்ற நாவலில் இந்த MV என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அந்தக் கருத்து இப்போது உண்மையாகி நீங்கள் அதில் முதலீடு செய்யும் வகையில் வளர்ந்திருக்கிறது. ‘ரெடி ப்ளேயர் ஒன்’ என்ற நாவலில் (ஆசிரியர் ஏர்னெஸ்ட் க்ளைன்: 2011 ஆம் வருடத்துப் புதினம். இது ஒரு திரைப்படமாகவும் ஸ்டீவன் ஸ்பியல்பெர்க்கின் இயக்கத்தில் 2018 இல் வெளி வந்தது.) ‘ஒயாசிஸ்’(Oasis) என்பது மேம்பட்ட நிகழ்நிலை உண்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இயன் எம் பேங்கஸ் (Ian Banks) எனும் பெயர் பெற்ற அறிவியல் புனைவெழுத்தாளரைப் போல எண்ணற்ற அறிவியல் எழுத்தாளர்கள் இத்தகையக் கருத்துகளை எடுத்தாண்டிருக்கிறார்கள்.
சென்ற செப்டம்பர் மாதத்தில், MVயில் தன் ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), முக நூலின் தலைமை நிர்வாக இயக்குனர் (CEO), அது பற்றிய தன் எதிர்கால நோக்கை, வணிகக் கனவை இவ்வாறு வெளியிட்டார் : ‘உருவாக்குபவர்கள், இணைய வணிகங்கள், சமுதாயக்குழுக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அதன் மூலம் MVயின் முழுப் பயனையும் மனித சமூகம் பெற வேண்டும்.’ நமக்கு மார்க்கைத் தெரியும். மிகச் சமீபத்தில், ஃப்ரான்செஸ் ஹௌகென்(Frances Haugen) என்ற தகவல் பொறியாளர்(Data Engineer), அறிவியலாளர், முகநூலின் உள் ஆவணங்களை, அதன் அறமற்ற செயல் முறைகளை வெளிக்கொண்டு வந்தார். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாற்போல, ஹௌகென் அமெரிக்க அரசுடைய பாராளுமன்ற விசாரணையில் முகநூலின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய சிலதினங்களிலேயே, மார்க் ஜுக்கர்பெர்க முகநூலின் பெயரை ‘மெடா’ என்று மாற்றினார்! அந்த நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் இந்தப் பெயர் மாற்றம் பல மாதங்களுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்ததாக விளக்கினர்.
உலகப் பெரும் பணக்காரர்களாகத் தெரிய வந்துள்ள, உலகளாவிய பொறிநுட்ப நிறுவனங்களின் மேலாளர்களான ஜெஃப் பேஸோஸ் (Jeff Bezos) ஈலான் மஸ்க் (ElonMusk) மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோரைப் பற்றி ஒரு பேச்சு உண்டு- அவர்கள் பூமியிலிருந்து வெளியேற விரும்புகிறார்கள், அல்லது பூமியில் வேற்றுக் கிரகத்தை உண்டாக்க விரும்புகிறார்கள்!

MV எவ்வளவு பெரிதாக வளரும்?
இந்தத் துறையில் ரோப்லாக்ஸ்(Roblox), ஃபோர்ட்னைட் போன்றவர்கள் பயனர்களிடையே பிரபலம். முழுமையான நிகழ்நிலை உலகம் இது- பயனர்கள் ‘அவதாரம்’ எடுத்து மகிழ்கிறார்கள்; முன்னவர்கள் கல்லா கட்டி மகிழ்கிறார்கள் டிசென்ட்ராலேன்ட்(Decentraland), அப்லேன்ட்(Upland), சேன்ட்பாக்ஸ்(Sandbox), மற்றும் விரைவில் வர இருக்கும் விக்டோரியா வி ஆர் (Victoria VR) அனைத்துமே முப்பரிமாண நிகழ்நிலையில் பயனர்களை ஆழ்த்துபவைதான்.
1990-களின் இறுதிகளில் டாட் காம் (Dot Com) எத்தகையதொரு வளர்ச்சியைப் பெற்றதோ, அதைப் போலவே இந்த MV நிகழ்நிலைத் துறையில் செய்யும் முதலீடுகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வரும். (ஆனாலும், இதை முதலீட்டுப் பரிந்துரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது) இன்றைய வலை உலகை ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று சொல்லி MV ஆட்சி புரிய வருகிறது.

புதுத் துறை, புது விதிகள்: MVஐ சார்பற்று கட்டமைப்பது எப்படி?
பெரும் இணையத் தொழிலகங்களான கூகுள், ஆமெசான், முகநூல் போன்றவற்றுடன் சமமாக ஃபோர்ட்னைட் போன்ற சில நிகழ்நிலை செயல்பாட்டாளர்கள் இந்தத் துறையில் செல்வச் செழிப்புடன் இயங்கி வருகிறார்கள். ‘எபிக் கேம்ஸ்’ (Epic Games) என்ற ஃபோர்ட்னைட் உரிமையாளர்கள் சமீபத்தில் $1 பில்லியன் நிதி பெற்றிருக்கிறார்கள். சோனி (Sony) நிறுவனம் $200 மில்லியன் இதில் கொடுத்திருக்கிறது. ‘ஹொரைசன்’ (Horizon) என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்நிலைத் தளத்தின் வி ஆர் (VR) செயல்- மாதிரி (proto- metaverses) வடிவத்தை அமைக்க முகநூல் முதலீடுகளைச் செய்துள்ளது. இதற்கெனப் புதிதாக அலுவலகம் திறக்கிறார்கள்; கிட்டத்தட்ட 10,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுவார்கள் என்று சொல்கிறார்கள்.
பெயர் பெற்ற நிறுவனங்கள் இந்த வி ஆரில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். சில நிறுவனங்கள் ‘அவதாரங்களுக்கு’ (D2A-direct to avatar) நேரடி விற்பனை செய்கிறார்கள். கூச்சி (Gucci) நிஜமான பையைக் காட்டிலும் அதிக விலைக்கு நிகழ் நிலையில் அதே பையை விற்றிருக்கிறது. ‘நைகி’ (Nike) மைக்கல் ஜார்டனை (Michael Jordon) நிகழ் நிலையில் விற்கிறது! நிகழ் நிலை அணிகலன்களை (Virtual wearable) கோக கோலா ‘டிசென்ட்ராலேன்ட்டில்’ விற்கத் தொடங்கியுள்ளது.
MV சந்தை $800 பில்லியன் என்று ப்ளும்பர்க் ஊடக நிறுவனம் அனுமானித்துள்ளது. MV இப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தாலும், சூட்டிகையான தொழில் நுட்ப நபர்கள் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், நன்கு வளர்ச்சிபெறக் கூடிய தொழில் தொடங்கு நிறுவனக் குறியீட்டு நாணயங்களில் (Digital tokens of High growth start-ups) வர்த்தகம் செய்பவர்களாகவும் செயல்படுவார்கள். எனவே இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று இவர்கள் பந்தயம் கட்டுகிறார்கள். பெரும்பான்மையான சமூக வலைத்தளங்களின் இடத்தை, வரும் ஐந்து ஆண்டுகளில் MV நுட்பம் பிடித்துவிடும் எனவும் சொல்கிறார்கள்.

MVயில் எப்படி முதலீடு செய்வது?
நிகழ்நிலை பொருள் வணிகர்கள், அசையா நிலச் சொத்து வணிகர்கள் உட்பட வி ஆர் தளங்களில் இலக்க நாணயங்களை- க்ரிப்டோ கரன்சிகளை ஏற்றுக் கொள்கின்றனர். டிசென்ட்ராலேன்ட், சேன்ட்பாக்ஸ் போன்ற வி ஆர் இடங்களில் விளையாடும் நபர்கள் சூதாட்டங்களையோ, கருத்துப் பூங்காக்களையோ உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். க்ரிப்டோ முதலீட்டாளர்கள் இந்தச் சந்தையின் போக்குகளை அனுமானித்துள்ளது நன்றாகத் தெரிகிறது. ஜென்விட் டெக்னாலஜியின்(Genvid Technology) முதன்மை நிர்வாக இயக்குனரான ஜேக்கப் நவோக்குடன் (Jacob Navok) இணைந்து, ரௌன்ட் ஹில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்(Round Hill Investments) நிறுவனத்தை உருவாக்கியவரான மேத்யூ பால் (Matthew Ball), மெடாவர்ஸ் ஈ டி எஃபை (Metaverse Exchange Traded Fund- MV ETF) சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.
மெடாவர்ஸ் பரவலாக்கப்பட்ட சொர்க்கமா அல்லது மையமாக உள்ள பயங்கரமா?
மெடாவர்ஸ் ஈ டி எஃப் என்பதும் பங்கு/கடன் பத்திரப் பரிமாற்ற வர்த்தக சந்தையைப் போல ஒன்றே. வேறுபாடு, க்ரிப்டோ நாணயங்களில் முதலீடு பெற்றுள்ள MV குழுமங்களின் பங்கு வர்த்தகம் மட்டுமே இந்த மெடாவர்ஸ் ஈ டி எஃப்பில் நடை பெற முடியும். MVசந்தையின் பரந்து பட்டக் கூறுகளை முதலீட்டாளர்கள் அறிந்து முதலீடு செய்யும் வண்ணம், ‘இன்டெக்ஸ்’ (Index) என்ற பெயரில் பல MV குழுமங்களின் ‘இணைந்த கூடைப்’ பங்குகள் இதில் கிடைக்கும்.
எட்டு நாடுகளில் 41 குழுமங்களில் (இருப்புக் கம்பெனிகளில்- Holdings) செய்யப்பட்டுள்ள மெடாவர்ஸ் ஈ டி எஃப் முதலீடுகள் $74 பில்லியன்களாம். கட்டமைப்புக் கம்பெனிகளான க்ளவுட்ஃப்ளேர் (Cloudflare), என்விடியா(Nvidia), இணைய விளையாட்டுக் கட்டமைப்புகளான ‘யூனிடி’, ‘ரோப்லாக்ஸ்’, எம்வி உள்ளடகத்தின் முன்னோடிகளான ‘டென்சென்ட்’(Tencent) ‘சீ’ மற்றும் ‘ஸ்நேப்’ (Sea and Snap) ஆகியவை இந்த முதலீடுகளைப் பெற்றுள்ளன.
ந்யூயார்க் பங்குப் பரிமாற்றச் சபை மூலம் இது விற்கப்படுவதால், பொதுக் கம்பெனிகளின் பங்குகள் மட்டுமே கிடைக்கும். தனியார் குழுமங்களின் பங்குகளை இந்தப் பங்குப் பரிமாற்றச் சபையில் வாங்க முடியாது. அப்படியென்றால், க்ரிப்டோ முதலீட்டாளர்கள் மற்றும் ஏனையோர் தொடக்க நிலையிலேயே இதில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இத்தகையோர் ‘க்ரிப்டோ வெளியில்’ (Crypto Space) தொடங்குவது நலம் பயக்கும்.

எப்படி அது சாத்தியம்?
இணையவெளி விளையாட்டு, வன்பொருள், உள்ளடக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கம்பெனிகள் ‘தொடக்க நாணய வழங்கு திட்டம்’ (Initial Coin Offerings-ICO) மற்றும் பரவலாக்கப்பட்ட பரிமாற்றத் திட்டம்(DEX –Decentralised Exchange offerings-IDO) போன்றவற்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளன. இந்த ஐசிஒ மற்றும் ஐடிஒ இலச்சினைகளின் (ICO &IDO Tokens) மூலம், இதை வைத்துள்ளவர்கள், ஒரு குழுமம் பொதுப் பங்குக் கம்பெனியாவதற்கு முன்னரே, அதன் பங்குதாரர்களாகிவிடுவார்கள். அரசு தடுக்கில் நுழைந்தால், மனிதர்கள் கோலத்தில் நுழைந்து விடுவார்கள்!
இதெல்லாம் அறிவியல் புனைவா அல்லது தொடரேட்டுத் தொழில் நுட்ப (Block chain Technology) உண்மையா?
‘ரெடி ப்ளேயர் ஒன்னின்’ பாலைச் சோலையைக் கட்ட முடியுமா?
உருவாக்கும் திறம் கொண்டவர்களின் ஆற்றல் மிக்க பங்களிப்பும், வன்பொருள், இணைய வணிகம், விளம்பரம் ஆகியத் துறைகளின் முன்னேற்றங்களும், இந்த எம்வி சந்தையின் வளர்ச்சி சாத்தியக்கூறுகளும் இணைந்து பிரமிக்க வைக்கும் $1 ட்ரில்லியன் வணிகமாக மாற வாய்ப்புகள் உள்ளன. இணையம் இன்று எவ்வளவு அத்தியாவசியமாக இருக்கிறதோ அதைப் போல, ஆனால் அதைவிட விரைவாக எம்வி வரும். நீங்கள் திறமையுடன் தரமானதைத் தேர்ந்தெடுத்து ஐசிஒ மற்றும் ஐடிஒ இலச்சினைகளை வைத்திருந்தால், வருங்காலத்தில் அதனால் பெறப்போகும் பயன்மதிப்பு உங்கள் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். திருவள்ளுவர் சொல்கிறார்:
“பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.”
துடிப்பான ஒன்றைப் பார்த்துக் கொண்டும், பங்கேற்றுக்கொண்டும் இருக்கிறோம். நிகழ்நிலை உண்மைகளும், விரைவுபடுத்தப்பட்ட எம்வியும் நம் இணைய அனுபவங்களைக் காட்டிலும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும்.
பூமிக்கு வெகு அருகில் செவ்வாய் கிரகத்தில் மனை வேண்டுமா?
ப்ளே டு ஏர்ன்னுக்கு (Play to Earn-P2E) வாருங்கள். செவ்வாயின் நிலப் பரப்பை, இதுவரை சேகரித்தத் தகவல்களின் அடிப்படையில் மார்ஸ்4 என்ற மெடாவர்ஸ் அமைப்பு முப்பரிமாண வரைபடமாக்கியுள்ளது. செவ்வாயின் 99,888 அரிய நிலபரப்புகளை இந்தத் தளம் களங்கமில்லா இலக்க இலச்சினைகளாகக் (NFT) காட்டுகிறது. ஒவ்வொன்றும் ரோவர் (Rover) இறங்கிய இடங்கள், மற்றும் செவ்வாயின் விசேஷ நிலத் தன்மையைச் சுட்டும் விதமானவை. நிலத்தொகுப்பு 559 சதுர மைல்கள். அதன் மதிப்பு அதில் நீங்கள் பயிர் செய்வதைப் பொறுத்து ஏறும்! சுவாரஸ்யமான ஆடுகளம் உள்ளது- நீங்கள் உங்களின் சொத்து (!) மதிப்பை சான்றிதழ்களாக, அவதாரமாக, உங்களின் முத்திரை பதிந்த சிறப்பியல்புகளாகச் சேர்க்கலாம். மார்ஸ்4 மெடாவர்ஸ்சில் இணைவதன் மூலம் விளையாடிக்கொண்டே செல்வம் சேர்க்கலாம். இருப்பிலுள்ள மார்ஸ் பூமி என் எஃப்டி (Mars Land NFT) இலச்சினைகளில் 50%க்கும் மேற்பட்டவை விற்பனை ஆகிவிட்டன. பிட்ரெக்ஸ் (Bittrex) மற்றும் சுஷிஸ்வாப் (Sushiswap) பரிமாற்றக் கேந்திரங்களில் இந்த இலச்சினைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எட்டில் செவ்வாய் இன்று எட்டும் செவ்வாயாகிக் கொண்டிருக்கிறது
வானை அளப்போம், கடல் மீனை அளப்போம். சந்திர மண்டலத்தியல், வானியல், கண்டு தெளிவோம். இது சாமானியர்களான நம் கனவு.
ஆனால் அனைத்தையும் எப்படியாவது வியாபாரப் பொருளாகவே ஆக்குவோம் என்பது பேஸோஸ், மஸ்க் மற்றும் ஜுக்கர்பெர்குகளின் முனைப்பு.
உசாவிகள்:
Blockchain metaverse startups: Unparalleled investment potential
https://www.matthewball.vc/the-metaverse-primer
https://www.matthewball.vc/all/themetaverse
https://www.matthewball.vc/all/cloudmiles
https://www.matthewball.vc/all/epicprimer1
பானுமதி ந