மீண்டும் சீனா

Artist R.D. Roy

ராம் பிரசாத் போன சில நாட்களிலேயே,  தற்செயலாக,  சீனா  திரும்பி வந்தாள். கருவுற்றிருந்தாள். நிஷா,  சீனா இருவருமே பயந்தாற்போல காணப்பட்டார்கள். வந்ததுமே அழ ஆரம்பித்து விட்டாள். நான் என்ன விஷயம் எனக் கேட்டேன். கணவன் குடித்துவிட்டு அடி உதையில் ஈடுபடுவதாகவும்,  நிஷா உறங்குவதற்கு முன்பாகவே,  அவளைத் தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவதாகவும்,  அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் கூறினாள். அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே,   நிஷா,  பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகிறாள்,  அவளை சமாதானப்படுத்தி,  அவளது பயத்தைப் போக்க வேண்டி இருக்கிறது,  போதாததற்கு வயிற்றில் வேறு ஒரு தொல்லை வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு திருமணம் செய்து கொண்டிராவிட்டால்,  இந்த துயரங்களையெல்லாம் சந்திக்க வேண்டி இருந்திருக்காது. எனக்கு உங்களை விட்டால்  வேறேதும் கதி இல்லை. அதனால் தான்  பொழுது புலர்வதற்கு முன்பாகவே,  கொஞ்சம் துணிமணிகளை எடுத்துக்கொண்டு நிஷாவுடன் இங்கு வந்துவிட்டேன். எனக்கு நீங்கள் தான் புகலிடம் தரவேண்டும் என்று அழுது அரற்றினாள்.

விவாகரத்துச் செய்வதில்,  பெரிதாக நஷ்டம் எதுவும் இல்லை. பார்க்கப்போனால்,  பெண்களுக்கு லாபம் தான.  தன் கையால் உழைத்து சாப்பிட வழி இருக்கும்போது,  எதற்காக அவமானத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும்? கூடுதலாக,  குழந்தையும் தானே இலவசமாகக் கிடைக்கிறது என இஸ்மத் சுக்தாய் ஆப்பா (புகழ்பெற்ற எழுத்தாளர்) கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. அப்போது ஆப்பாவிடம் (மூத்த சகோதரி) என்ன இருந்தாலும், குழந்தையைத் தனியாக வளர்ப்பது கஷ்டம் இல்லையா  என்று கேட்டேன். அதற்கு ஆப்பா சிரித்தவாறே ‘அடி பைத்தியக்காரி! குழந்தையை ஆணா வளர்க்கிறான்? அவனால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது. என்றார். யோசித்துப் பார்க்கையில்,  குழந்தையை தாய் தான் வளர்கிறாள் என்று எனக்கும் தோன்றியது.

சீனா வந்த உடனேயே வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அதோடு நிற்காமல்,  தன்னை டாக்டரிடம் கூட்டி செல்லும்படி வற்புறுத்தினாள். இந்த குழந்தை எனக்கு வேண்டாம்,  கருக்கலைப்பு செய்து விடுகிறேன்,  நிஷாவை வளர்த்து ஆளாக்கினால் அதுவே போதும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே யிருந்தாள். என் தோழி ஒருத்தி மகப்பேறு மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் சீனாவை அழைத்துச் சென்றேன். சீனாவை பரிசோதித்த பிறகு,  ‘ஐந்தாவது மாதம் ஆரம்பித்து விட்டது. இப்போது கருக்கலைப்பு செய்வது,  இரண்டு உயிர்களுக்குமே ஆபத்தாக  முடியும். எனவே கருக்கலைப்பைப் பற்றி மறந்துவிடு’ என்று அறிவுறுத்தினார்.

அழுதவாறே வீடு திரும்பிய சீனா,  நாள் முழுவதும் மௌனமாக இருந்தாள்.  பிறகு,  இரவு தூங்கப்போகும் முன்பு, ” பீ ஜி,  நான் இந்தக் குழந்தையை வைத்துக்கொள்ள மாட்டேன். இதை யாருக்காவது கொடுத்து விட ஏற்பாடு செய்யுங்கள். இன்னும் ஐந்து மாதங்களை எப்படியோ பொறுத்துக்கொண்டு கடத்தி விடுகிறேன்.ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தையை வீட்டுக்கு கொண்டு வராமல்,  அங்கிருந்தே எவருக்கேனும் கொடுத்து விடலாம். ஒரு துஷ்டனிடமிருந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்திருக்கிறேன். இன்னொரு கஷ்டத்தை வாழ்நாள் முழுவதும் வலியச் சுமக்க எனக்கு விருப்பமில்லை” என்று தீர்மானமாக கூறினாள்.

குழந்தையை சுமந்தவாறே,  சீனா முன்பு போலவே எல்லா வேலைகளையும் செய்தாள். நான் வலுக்கட்டாயமாக பகலில் அவளை ஓய்வெடுக்கச் சொல்வேன். அவளுக்கு ஊட்டமான உணவுகளையும் பழங்களையும் வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகளையும் கொடுத்து வந்தேன்.

சீனா திரும்பத்திரும்ப குழந்தையை யாருக்கேனும் கொடுத்து விடும்படி வற்புறுத்தியது எனக்கு புதியதொரு தலைவலியை உருவாக்கிவிட்டது. குழந்தையை யாருக்குக் கொடுப்பது? சரியான நபரை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது?

இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் என் தோழி ஒருத்தியிடம்,  இந்த பிரச்சனை குறித்து விவாதித்தேன். ‘என் மகள் கல்லூரி மாணவி. நானும் வேலைக்குப் போகிறேன். எனக்கு குழந்தை தேவை இல்லை” என்று கூறிவிட்டு உரக்கச் சிரிக்க ஆரம்பித்தார். சிரிப்பு அடங்கியதும்,  “மேலிருந்து ஆட்டுவிப்பவனின் கிருபையில்,  என்னிடம் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு உள்ளது. எங்கள் டிரைவருக்கு திருமணமாகி பதினோறு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவனுடைய பெற்றோர் அவனை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதில் அவனுக்கு துளியும் இஷ்டமில்லை. சீனாவுக்கு சம்மதம் என்றால்,  பெண்ணே, ஆணோ,  எந்த குழந்தையாக இருப்பினும் சரி,  அதை நான் என் டிரைவருக்கு கொடுத்து விட ஏற்பாடு செய்து விடுவேன்” என்றார். சீனாவிடம் இதைப்பற்றி சொன்னபோது,  “நான் குழந்தையின் முகத்தைகா கூட பார்க்க மாட்டேன். பிறந்ததுமே எடுத்துக்கொண்டு செல்லட்டும்” என்றாள்.

இப்படியாக,  எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு வழியாக தீர்வு தெரிவது போல இருந்தது. புது உயிர் ஒன்று வரப்போகிறது எனகிற மகிழ்ச்சியில், என் தோழியின் டிரைவர்,  தன் வீட்டை வெள்ளையடித்து தயாராக வைத்திருந்தான். அவனுடைய மனைவியோ ஸ்வெட்டர் பின்னுவதும்,  குழந்தைக்கு பழைய /புதிய துணிகளால் அரையாடைகள் தைப்பதுமாக நாட்களை கழித்துக்கொண்டிருந்தாள்.  உதவிக்காக,  கிராமத்திலிருந்து தன் தங்கையையும் வரவழைத்துக்கொண்டிருந்தாள்.தினமும்,  மாலையில், குழந்தையின் வரவை ஒட்டிய செய்திகள்,  மிகுந்த உற்சாகத்துடன் இருதரப்பிலிருந்தும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. எல்லோரும் குழந்தையின் வரவை  ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம்.

நிஷா,  பயமெல்லாம் விலகி,  ஒரு புள்ளிமானைப் போல துள்ளிக் கொண்டு, வீடு முழுவதையும்  தன் பேச்சாலும் சிரிப்பாலும் நிரைத்துக் கொண்டிருந்தாள். என் கணவரின் மடியில் அமர்ந்து கதை கேட்பாள். கதைகள் சொல்வாள். ‘எய் குள்ளச்சி” என்று போலியாக மிரட்டினால்,  “யாரை பார்த்து குள்ளச் சி என்று சொல்கிறாய்?” என்று இடுப்பில் கை வைத்தபடி,  விழிகளை உருட்டி உருட்டி கேட்பாள். அவளுக்கு நான் பலகை,  பென்சில்,  புத்தகம்,  நோட்டு எல்லாம் வாங்கித் தந்திருந்தேன். நான்கைந்து வயதாகிவிட்டதால்,  விரைவிலேயே சனாதன தர்மத்தினர் நடத்தும் பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என  நினைத்திருந்தேன்.

இதற்கிடையில் சீனாவின் கணவனின் தொலைபேசி அழைப்புகள் எங்கள் வீட்டுக்கு வர தொடங்கின. அவனுடைய குரல் எனக்கு பரிச்சயமானதால்,  நான் எடுத்த உடனேயே அழைப்பைத் துண்டித்து விடுவேன். ஒருநாள்,  பாவம்,  என் கணவர் மாட்டிக்கொண்டார். மறுமுனையில் சீனாவின் கணவன், அவரை வாய்க்கு வந்தபடி ஏசி கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அழைப்பை துண்டித்த பிறகு,  அவர் சற்று நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, ‘நீ செய்கிற இந்த பயனற்ற காரியங்களால் நான் என்னவெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது தெரியுமா? என வேதனையுடன் கூறினார். என்னால் அவரது வருத்தத்தை புரிந்துகொள்ள முடிந்த போதிலும்,  இந்த நிலையில் நான் சீனாவையும் நிஷாவையும் எப்படி புறக்கணிக்க முடியும்?  ஒரு நாள்,  நான் சீனாவின் கணவன் அழைத்தபோது தொலைபேசியை எடுத்தேன். ‘என் மனைவியை வலுக்கட்டாயமாக  ஏன் உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்கள்? என் மனைவியை அனுப்பி விடுங்கள்’ என்றான். ‘திருமணமாகி குடியும் குடித்தனமுமாக வாழ ஆசை இருந்தால்,  மனைவியையும்  குழந்தைகளையும் பராமரிக்கவும் தெரியவேண்டும். பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வா,  பிறகு உன் மனைவியை அனுப்புகிறேன்’ என்று சத்தமிட்டேன். அவனும் சளைக்கவில்லை. காதால் கேட்கக் கூசும் வார்த்தைகளால் என்னை ஏசத் தொடங்கவே,  நானும் விடாமல்,  எல்லா விதமான வசவுச் சொற்களாலும் அவனை  ஏசினேன்.

மனைவியை கவனித்துக்கொள்ள முடியாதவனுக்கு கல்யாணம் எதற்கு,  குடும்பம், குழந்தை, குட்டி எதற்கு என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி,  நான்கு கேள்விகள் நன்றாகக் கேட்டேன். பிரசவத்திற்காக, நான் இரவின் ஆஸ்பத்திரியில் சீனாவின் பெயரை பதிந்திருந்தேன். அவளை மாதாமாதம் பரிசோதனைக்கும் அழைத்துச் சென்று வந்தேன். பேறு காலம் நெருங்கியதும்,  நான் சீனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். குழந்தை பிறந்ததும் அணிவிக்கத் தேவையான சட்டைகள்,  சீனாவுக்கு  சாப்பிட உலர் பழங்களும் கோந்தும் சேர்த்து செய்த லட்டுகள் ஆகியவற்றையும் கொடுத்துவிட்டு வந்தேன்.பிரசவத்திற்குப் பிறகு உடல் பலம் திரும்ப, சுத்தமான நெய்யில் தயாரிக்கப்பட்ட இவ்வகை லட்டுக்கள் தருவது வழக்கம். இவற்றையெல்லாம் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

வீட்டில் நிஷா சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தாள்.குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்த டிரைவரின்  ஃபோன்,  ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று தெரிந்து கொள்கிற ஆர்வத்தில், தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. தங்கள் வசதிக்கேற்றவாறு, அவர்களும் குழந்தைக்கு துணிமணிகளை வாங்கி சேர்த்திருந்தார்கள் இவற்றையெல்லாம்,  நான் அவ்வப்போது சீனாவுக்கு தெரிவித்து வந்திருந்தேன். சீனாவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. மூன்றாம் நாள்,  நான் நிஷாவுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது வார்டில் இருந்த செவிலியர்களும் துப்புரவு தொழிலாளிகளும் என்னைக் கண்டதும்,  வாழ்த்து தெரிவித்தவாறு ஓடோடிவந்தார்கள்.சீனாவுக்கு மகன் பிறந்திருந்தான். நான் வார்டுக்கு சென்றபோது,  சீனா குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள்.  என்னைக் கண்டதும்,  ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். புதிதாக பிறந்த கன்றுக்குட்டி பால் அருந்துவது போல, குழந்தை வேகவேகமாக பால் குடித்துக் கொண்டிருந்தான். நான் சீனாவிடம்,  “சீனா,  நான் அவர்களுக்கு இந்த செய்தியை சொல்லிவிடவா,  அல்லது ஓரிரு நாட்கள் கழித்து சொல்லலாமா?’ என்று கேட்டேன். சீனா,  குனிந்த தலை நிமிராமல்,  ‘குழந்தையின் வாயில் பொரிப்பொரியாக வெடித்த்திருப்பதாக டாக்டரம்மா சொன்னார். குழந்தையின் உடல்நிலை சரியானதும் சொல்லலாம்’ என்றாள்.

சீனாவின் மாறிவிட்ட மனநிலையை என்னால் கணிக்க முடிந்த போதிலும்,  எங்கோ ஒரு துளி நம்பிக்கை இன்னமும் மிச்சமிருந்தது. நான் புறப்பட முற்படுகையில்,  “பீஜி,  உங்களிடம் பேச வேண்டும்” என்றாள் சீனா. “என்ன விஷயம்?” என்று கேட்டேன். “நேற்று, எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு நபரை இங்கு பார்த்தேன். அவர் என் கணவரிடம் எனக்கு மகன் பிறந்திருக்கிற விஷயத்தை சொல்லி விட வாய்ப்பிருக்கிறது.என் கணவர்  என்னைத் தேடிக்கொண்டு இங்கே வந்து விட போகிறாரோ என்று எனக்கு பயமாக இருக்கிறது” என்றாள்.

“உன் கணவர் உன்னை தேடிக் கொண்டு வந்தாலும்,  உன் விருப்பத்திற்கு மாறாக,  உன்னை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு போக முடியாது. உனக்கு உன் கணவரோடு போகிற எண்ணம் இருந்தால் இப்போதே சொல்லிவிடு. உன் மனம் மாறி,   நீ குழந்தையை கொடுக்க மறுத்தால், நான் ஏற்கனவே உன் சார்பாக வாக்கு கொடுத்தவர்களின் முன் தலை குனிய  வேண்டி வரும். உன் வற்புறுத்தலின் பேரில்தான்,  நான் அவர்களை குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும்படி வேண்டினேன். இது உனக்கு நினைவிருக்கிறதல்லவா?” என்று சற்றே பதட்டத்துடன் கேட்டேன்.

சீனா,  பலவீனமான குரலில்,  “முதலில் குழந்தை நலம் பெறட்டும். நாளை மறுநாள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று தோன்றுகிறது. வீட்டுக்கு வந்த பிறகு நாம் பேசிக்கொள்ளலாம். குழந்தைக்கு முழுவதுமாக உடல் நலம் சீரான பிறகு நாம் அவர்களிடம் கொடுத்து விடலாம். நான் குழந்தையை வைத்துக் கொள்ள விரும்பவில்லை” என்றாள்.

சீனாவின் பலவீனமான,  உடைந்த குரலைக் கேட்டதும், ” சீனா,  உனக்கு என்ன தோன்றுகிறதோ,  நீ என்ன முடிவெடுக்கிறாயோ,  அதை என்னிடம் வெளிப்படையாக பயப்படாமல் சொல்” என்றேன்.சீனா, சுரத்தற்ற குரலில்,  “முதலில் குழந்தையின் உடல் நிலை சரி யாகட்டும். பிறகு கொடுக்கலாம்” என்றாள்.

என் சந்தேகம் வலுத்தது. முதலில் சீனா தான் இந்த குழந்தையை கொடுத்துவிட முற்றிலும் தயாராக இருந்தாள். இப்போது அவள் மனம் மாறி விட்டதுபோலத் தெரிந்தது. ஒருவேளை,  சீனா குழந்தையை தர மறுத்துவிட்டால்,  நான் என்ன செய்வது,  இப்படி பல எண்ணங்கள் என் மனதில் வந்து மோதின. கண்டிப்பாக எனக்கு தலை குனிவு ஏற்படும் தான். இந்த குழந்தையின் வருகையை ஒட்டி,  பலவிதமான கனவுகளையும் கற்பனைகளையும் சேமித்து வைத்திருக்கும் குழந்தை பேறற்ற அந்த தம்பதிகள்,  இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்று எண்ணியபோது சற்றே கலக்கம் ஏற்பட்டது. ஆனால்,  சீனாவும் ஒரு பெண் தானே! ஒரு தாய் தானே! ஒருவேளை, இந்த குழந்தை ஆண் குழந்தையாக பிறந்ததினால்,   அவள் தனக்கான நிரந்தரமான ஒரு வீட்டை அடைய முடியும் என நம்புகிறாளோ என்னவோ! கனத்த இதயத்துடன்  வீடு திரும்பினேன். அடுத்தநாள்,  குறிப்பிட்ட நேரத்தில் நான் நிஷாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அம்மாவை பார்த்ததில் நிஷா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

வார்டில் பணியில் இருந்த எல்லோருக்கும் நான் தலா பத்து ரூபாய் கொடுத்தேன். சீனாவையும்,  குழந்தைகளையும்,  கொண்டு போயிருந்த சாமான்களையும்,  வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டேன். அப்போது நாங்கள் புதுதில்லியில் பெங்காலி மார்க்கெட் அருகே இருந்த தோடர்மல் சாலையில் வசித்து வந்தோம். மண்டி ஹவுஸை அடுத்த நாற்சந்தியில் வண்டி  திரும்பியதும்,  குழப்பத்துடன் அமர்ந்திருந்த சீனா, ” பீஜி,  வண்டியை இங்கேயே நிறுத்துங்கள். நான் வசந்த் குன்ஜிலிருக்கும் என் சகோதரி வீட்டிற்கு போய் விடுகிறேன்” என்றாள். என்னுடைய பதிலுக்குக் கூட காத்திராமல்,  தன்னுடைய சாமான்களைத் தெருவில் இறக்கி வைத்துவிட்டு,  தன் இரு குழந்தைகளுடன்,  ஆட்டோ ரிக்ஷா ஒன்றை கைகாட்டி நிறுத்தி,  சடாரென ஏறி அமர்ந்துகொண்டாள். என்னை பார்த்து,  “வருகிறேன் பீஜி” என்று தலையசைத்து விட்டு சென்று விட்டாள.  நான் வெளிறிப்போன முகத்துடன் தெருவில் நின்றுகொண்டிருந்தேன். ஆட்டோ ரிக்ஷா வசந்த் குன்ஜ் இருக்கும் திசையில் செல்லாமல், பஹாட்கன்ஜ் பக்கம் திரும்புவதைப் பார்த்தேன். அவளுடைய வீடு அங்குதான் இருந்தது.

“சபாஷ் பெண்ணே! ஒரு வீட்டைக் கைப்பற்ற நீ ஆடும் நாடகங்கள் தான் எத்தனை அபாரம்! என நினைத்துக் கொண்டே,  தொங்கிப் போன முகத்துடன் வீடு திரும்பினேன்.

நான் தனியாக வீடு திரும்புவதை பார்த்தவுடனேயே என் கணவர் புரிந்து கொண்டுவிட்டார். விரலைச் சொடுக்கி,  “அவள் தன் கணவன் வீட்டிற்கு திரும்பிவிட்டாள் இல்லையா? இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? கணவனின் மடியில் பிள்ளையை கிடத்தினால், அதற்குப்பிறகு,  அவன் அவளை மறுபடியும் வேறு எங்காவது போக விடுவானா என்ன?” என்று கேட்டார். நான் களைத்து படுக்கையில் விழுந்தேன். “சபாஷ் சீனா! அந்த ராட்சசனுக்கு மகனை பரிசாக அளித்து,  வீட்டைக் கைப்பற்ற நீ ஆடிய நாடகம் தான் எவ்வளவு வினோதம்! அதற்காகத்தான் என்னிடம் சகோதரி வீட்டிற்கு போவதாகச் சொல்லி,  பாதி வழியிலேயே இறங்கிக்கொண்டாய் இல்லையா? நீ செய்தது முற்றிலும் சரிதான்! நான்தான் முழு முட்டாள்!

என் மனம் முழுவதுமாக உடைந்து விட்டிருந்தது. பெண்ணின் பல பரிமாணங்களை நான் கண்டிருக்கிறேன். அவளுக்கு  தன் வீடு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகத் தெரிகிறது. எந்த விலை கொடுத்தேனும்,  பெண்,  எப்போதும் தன் வீட்டை காப்பாற்றிக் கொள்ளவே நினைக்கிறாள். வீட்டைச்  சிதற விடாமல் பிடித்து வைத்துக் கொள்ள படுகிற பாட்டில், அவள் எத்தனை எத்தனை முறை உடைந்து போகிறாள்! வெட்கமோ, மானமோ,  குற்ற உணர்வோ,எதுவுமே அவளது இம்முயற்சியின் ஊடே,   நுழைய முடிவதில்லை! அவளது தேவை ஒரு வீடு: தலையை மறைத்துக் கொள்ள ஒரு கூரை!

வீட்டை கட்டமைத்து உருவாக்குவது பெண் தான் என்ற போதிலும்,  அவளுக்கு அது ஒரு போதும் சொந்தமாகி விடுவதில்லை. தன் குடிசையில் சீனா இப்போது எவ்வளவு பாதுகாப்பாக உணர்வாள் என நான் நினைத்துப் பார்த்தேன். நான் சீனாவை அந்தக்கணமே மன்னித்து விட்டேன். கணவரிடம் முழுக் கதையையும் சொல்வதற்காக,  நிஜ உலகிற்கு திரும்பினேன். கணவர், “ஆண் குழந்தை பிறந்ததுமே,  நிகழப்போவது என்ன என்பதை நான் முன்கூட்டியே அனுமானித்திருந்தேன்  நீதான்,   வீணாக, அவள் கதையில் சிக்கிக் கொண்டாய். நல்ல வேளை,  அவள் கணவனின் வசைச் சொற்களை இனி எனக்கு கேட்க வேண்டி யிராது. வீட்டை விட்டு வெளியே வந்த சீனாவுக்கு,  தங்க ஒரு இடம் தேவைப்பட்டது.  உன்  தயாள குணம் தெரிந்துதான் சீனா இங்கே வந்திருக்கிறாள். உனக்கு வேண்டுமானால்  மீண்டும் மீண்டும்  இம்மாதிரியான நாடக சிக்கல்களிலெ ல்லாம் சிக்கி உழல்வது பிடித்தி ருக்கலாம். ஆனால்,  எலி தான் என்னெய்க்கு காய வேண்டும்,  எலிப்புழுக்கை எதற்காக காய வேண்டும் என்கிற மாதிரி,  உன்னோடு சேர்ந்து சில சமயம் நானும்  இப்படியெல்வாம் அவஸ்தை பட வேண்டியிருக்கிறது” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டே எழுந்து சென்றார்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,  நான் என் படுக்கைக்குத் திரும்பினேன். என் இமாசலப் பிரதேசத் தோழி,  திருமதி கபூரிடம்,  உடைந்த மனதைக் கையில் ஏந்திக்கொண்டு,  நடந்ததை  தெரிவித்தேன். என் தோழியின் காதைப் பிளக்கிற மாதிரியான சிரிப்பு என்னை இன்னும் அதைர்யப்ப்படுத்தியது. அவர் ,  “சகோதரி,  மகன் என்பது வாழ்வின் பெருஞ்செல்வம். வரப்பிரசாதம். என்ன நடந்ததோ அது கடவுளின் விருப்பம் என நினைத்து நீங்கள் அதை மறந்து விடுங்கள்” என எனக்கு ஆறுதல் கூறினார். உங்கள் டிரைவர் ஏமாந்து விடுவானே என்றதற்கு அவர் மறுபடியும் வெடிச் சிரிப்பு சிரித்தவாறே,  “கடவுள் அவனை ஏமாற்றவில்லை. குழந்தையை பார்த்துக்கொள்ள வந்த மைத்துனி கர்ப்பமாக இருக்கிறாள். அவனுக்கு அவனுடைய சொந்த ரத்தத்திலேயே குழந்தை கிடைக்க விருக்கையில் ஏமாற்றம் எதுவும் இருக்காது. வீட்டு பொருள் வீட்டிலேயே இருக்கும் இல்லையா. இந்த தகவலை நான் வேண்டுமென்றே தான் இதுவரை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இது இப்படித்தான் நடக்கும் என என்னால் முன்னமேயே கணிக்க முடிந்தது. யார் தான் அவ்வளவு சுலபமாக தன் ஆண் குழந்தையை தானமாக கொடுத்து விடுவார்கள். அதனால் நீங்கள் இந்த விஷயத்தைக் குறித்து, இனிமேலும் தேவையற்ற மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கூறினார். ஆக,  இது இப்படித்தான் முடியும் என்பது உலகம் முழுவதற்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது,  என் ஒருத்தியைத் தவிர. நான் எப்பேர்பட்ட வடிகட்டின முட்டாள்! தோழியின் கூரை வெடித்துச் சிதறுகிற சிரிப்பில் என் குழப்பங்கள் எல்லாம் கரைந்தன. இருந்த போதும்,  என்னால் வாய் விட்டு சிரிக்க முடியவில்லை. நல்லது செய்யப புறப்பட்டதற்கு,  இந்த ஏமாற்றம் தான் பரிசா?

சீனாவை முதன்முதலாக என் வீட்டிற்கு கூட்டி வந்த காய்கறி வண்டிக்கார லாலி,  ஒரு நாள் வீட்டுக்கு வந்தாள்.  “பீஜி,  சீனா இப்போது தன் வீட்டில் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாள். நான் பீஜியிடம் பொய் சொல்லிவிட்டு இங்கு வந்துவிட்டேன்.இனி நான் எந்த முகத்தோடு அவரை சந்திக்க முடியும் என்று சீனா வருத்தப்பட்ட தாக லாலி சொன்னாள்.
ஒருநாள்  இமாச்சல பிரதேசத்திலி ருந்து  தொலைபேசிஅழைப்பு வந்தது என் தோழி திருமதி கபூர்,  “இந்த முறை வாழ்த்து தெரிவிப்பது என் முறை. நான் பாட்டி ஆகி விட்டேன். நீங்களும் தான் என தன் வழக்கமான இடிச்சிரிப்புடன் கூறினார். டிரைவரின் மைத்துனிக்கு மகன் பிறந்திருக்கிறானாம். கிராமத்தில் விஷயம் தெரியாமலிருக்க, காதும் காதும் வைத்தாற்போல இருபதாயிரம் ரூபாயை மைத்துனியின் திருமண செலவுகளுக்காக கொடுத்து பிரச்சனையை முடித்து விட்டான் என் ட்ரைவர்” என்றார். நானும்,  “மகன் கிடைப்பது அவ்வளவு சுலபமா என்ன? எது எப்படியோ நாம் இருவரும் பாட்டிகளாகிவிட்டோம்” என்றேன். அதற்கு பிறகு நாங்கள் வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்.

இதெல்லாம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் சீனாவின் நடத்தைக்காக இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டேன். நான் முழுமனதோடு சீனாவை மன்னித்துவிட்டேன்.  அவளுக்காக ஆத்மார்த்தமாக மகிழ்ச்சி அடைந்தேன். பெரியவனான பிறகு சீனாவின் மகன் அவளை வைத்து காப்பாற்ற போகிறானா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அம்மாக்கள் ஒருபோதும் நம்பிக்கை இழப்பதில்லை.

Series Navigation<< ராம் பிரசாதின் உலகம்இவர்கள் இல்லையேல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.