பெருக்கு

        நீர்  வடிந்த  உடலில்  செழுமை  குறையவில்லை. முகத்தின்  பொலிவில்  ரம்யாவே  ஆச்சரியப்பட்டுப்போனாள். கைக்கண்ணாடியில்  அடிக்கடி  பார்த்துப்  பொட்டு  வைத்துக்கொண்டாள். 

” புள்ள  பெத்தவ  எதுக்கு  கண்ணாடி  பாக்குற….நம்ம  கண்ணே  ஆவாதுடி….கண்ணாடிய  கீழ  வையி…”

அம்மா  அதட்டினாள். குழந்தை  அசைவு  காட்டாது  உறங்கிக்  கொண்டிருந்தவரை  முகத்தில்  பொலிவு  தூக்கலாயிருந்தது. 

” பெரட்டிப்  போட்டாலும்  முழிக்க  மாட்டேங்குதேம்மா. வயிறு  பசிக்கவே  பசிக்காதா….?”

கவலையோடு  அம்மாவைக்  கேட்டாள். கைகளை  இருபக்கமும்   விரித்து  கால்களைக்  கணிதக்  குறியீடுகள்  போல  வளைத்து  வயிறு  மேலேறி இறங்க,  உறங்கிக்  கொண்டிருக்கும்  குழந்தையைப்  பார்க்கும்போது  பதறிப்போகும். விறுவிறுக்கத்  தொடங்கும்  மார்பின்  வேதனை  பொறுக்கமாட்டாது  குழந்தையை அள்ளி  காம்பை  வாயில்  திணிக்க  முயல்வாள். அது  உதடுகளை  இறுக  மூடிக்கொள்ளும். பால்  கட்டி  வலி  தெறிக்கும். 

” பீய்ச்சி  விடு  தங்கம்.  இப்படி  அழுதா  ஆச்சா…”

கண்கள்  கலங்க  அமர்ந்திருப்பவளைப்  பாட்டி  தலை  கோதிவிடுவாள்.

” கை  வைக்க  முடியல  பாட்டி. ரொம்ப  வலிக்குது.”

” என்னைய  மாதிரி  ஒடம்புவாகு  அவளுக்கு. ஒருபக்கம்  புள்ள  குடிக்கிறப்ப  இன்னொருபக்கம்  ஊத்தும். ஒக்காரப்பவே  கனமான  துண்ட  மடிச்சு  அந்தப்பக்கம்  அணை  கட்டிக்குவேன்.”

அத்தை  அலைபேசியில்  சொன்னது  சன்னமாக  காதில்  விழுந்தது. 

” கொழந்தைக்குப்  பசியெடுத்தா  அழுவும். அப்ப  தூக்கி  பால்  குடுத்தாப்  போதும். தூங்குற  கொழந்தையப்  பசிக்குமோன்னு  நெனச்சு  எழுப்பிக்  குடுக்காதீங்க.” டாக்டர்  சொன்னார். குழந்தையைப்  பார்க்க  வருகிறவர்கள்  ரம்யாவைப்  பார்த்து  கண்  மலர்த்தினார்கள். 

” வெளக்கி  வச்ச  குத்துவெளக்காட்டம்  இருக்காளே,……”

எல்லோரும்  அப்படித்தான்  பின்னால்  பேசுவார்களாம். அம்மா  கவலையோடு  தினமும்  திருஷ்டி  கழித்தாள்.

” துப்பு…திஷ்டியெல்லாம்  போவட்டும்.”

இருகைகளையும்  குழித்துக்  காட்டினாள். உப்புக்கல்லும், சிவப்பு  மிளகாயும்  கண்ணைப்  பறிக்கும்  நிறத்தில்  மின்னின. அப்பா  குமுட்டியடுப்பைப்  பற்றவைத்து  விசிறிக்கொண்டிருந்தார். முற்றத்து  மாடத்தில்  சீந்துவாரின்றி  கிடந்த  அடுப்புக்கு  வாழ்க்கை  வந்து  விட்டிருந்தது.

குழந்தை  ஒரு  மாதத்துக்குப்  பிறகு  கொட்ட, கொட்ட  விழித்தே  கிடந்தது. விழித்திருக்கும்  நேரங்களில்  பால்  குடிப்பதையும், சிறுநீர்  கழித்துவிட்டு  மீண்டும்  பாலுக்கு  அழுவதையும்  பொழுதுபோக்காக  வைத்துக்கொண்டது. 

” மார்கழி  குளிர்ல  நமக்கே  அடிக்கடி  வயத்த  முட்டுது. பாவம்  அது  பச்சமண்ணு….  என்னாத்த  கண்டுது. குடிச்ச  பாலையெல்லாம்  வெளியேத்திப்புட்டு  பசியில  துடிக்குது. சலிக்காம  தூக்கி  பாலக்   குடு  தங்கம்.”

பாட்டி  போர்வைக்குள்ளிருந்து  முனகினாள். பால்கட்டு  வேதனை  பரவாயில்லை  என்றாகிப்போனது. குழந்தை  வாயெடுக்காது  உறிஞ்சிக்கொண்டேயிருந்ததில் வேதனையாயிருந்தது. பனிக்கு  காம்புகள்  வறண்டு  வெடித்தன. குழந்தை  வாய்  வைத்தவுடன்  நெருப்புப்  பட்டதுபோல்  எரிச்சல்  கண்டது. 

” கடுக்காய  சந்தனமா  எழச்சி  காம்புல  தடவி  வுடுங்க.  வெடிப்பு  ஆறிடும்.”

பங்கஜம்  மாமி  சொன்னாள்.

அம்மா  முற்றக்குறட்டின்  சொரசொரப்பில்  கடுக்காயை  நீர்விட்டு  இழைத்து  எடுத்துக்கொள்ள  சொன்னாள். ஆரம்பத்தில்  கொஞ்சம்  ஆர்வமிருந்தது. போகப்போக  நீர்த்துப்போனது.

” எடுத்து  தடவிக்கடி….”

” தடவுன  அரை  நிமிஷத்துல  அழுவுது. ஒடனே  கழுவ  வேண்டியிருக்கு. அடப்போம்மா….” ரம்யா  முகத்தை  சுருக்கி  உத்திரத்தை  வெறித்தாள். குழந்தை  இப்படியும், அப்படியுமாக  நெளிந்து  அழ  ஆயத்தமானது. ஆழ்ந்த  மௌனத்தைக்  குத்தகை   எடுக்கும்  இரவுகளில்  விடி  விளக்கின்  வெளிச்சம்  நிரம்பி  வழியும்  அறைக்குள்  குழந்தையின்  சத்தம்  விட்டுவிட்டு  ஒலித்துக்  கொண்டேயிருந்தது. 

” ரம்யா  எந்திரிச்சி  புள்ளைய  தூக்குடி.” அம்மா  தூக்க  கலக்கத்தில்  இமைகளைப்  பிரிக்க  முடியாது  உழற்றினாள். பகல்  முழுக்க  அவளுக்கு  வேலைகள். பிள்ளை  பிறந்த  வீட்டில்  வேலைகளுக்குப்  பஞ்சமேயில்லை. பிள்ளைத்துணி  கசக்கவே  தனி  பலம்  வேண்டும். மற்ற  துணிகளோடு  கசக்காது  தனியே  ஊறவைத்து  அலசி  டெட்டாலில் நனைத்துப்  பிழிந்து  காயப்போட  வேண்டும். துணிக்கூடை  நிரம்பி  வழிந்தது. ரம்யாவுக்குப்  பத்திய  சாப்பாடு, அதற்கான  தயாரிப்பு  ஒருபக்கம், குழந்தைப்பேறு  விசாரிக்க  வருகிற  உறவுக்காரர்களுக்கு  பாயசத்தோடு  சாப்பாடு  ஒருபக்கம்  என்று  வேலைகள்  வளர்ந்து  கொண்டேயிருந்தன. 

ரம்யா  சுவரில்  தலையணையை  சரித்து  அதில்  சாய்ந்தமர்ந்தபடியே  குழந்தையை  மடியில்  கிடத்திப்  பால்  புகட்டினாள். இரவுகள்  பயத்தை  தருவித்தன. மாலை  நெருங்க, நெருங்க  இரவுக்கான  அச்சம்  மனதைக்  குடைந்தது. குழந்தை  வைத்த  வாயை  எடுக்காது  மடியிலேயே  உறங்கிற்று. மெல்ல  தூக்க  முற்பட்டபோது  வீறிட்டு அலறியது . 

“எப்பப்  பாத்தாலும்  கார்க்க  சொருவுனாப்ல  வாயில  வச்சிக்கிட்டேயிருக்கணும். சத்தம்  வராம  பாந்தமா  தூக்கிப்  படுக்க  வச்சா  மறுநிமிஷமே  முழிச்சிக்கிட்டு  தொண்டை  கிழிய  கத்த  வேண்டியது. என்னால  முடியலப்பா. பேசாம  ரெண்டு  மாரையும்  கழட்டி  பக்கத்துக்கொண்ணா  போட்டுடலாமான்னு  இருக்கு. ” அலைபேசியில்   மோகனிடம்  புலம்பினாள். அவனோ,

” கொஞ்சம்  பொறுமையா  இருப்பா. பெத்தாச்சு, இப்ப  பால்  குடுக்க  அலுத்துக்கிட்டா  ஆச்சா….எங்கம்மா  மூணு  பெத்தாங்க. ஒங்கம்மா  ரெண்டு. நீ  மொதப்  புள்ளைக்கே  இந்தப்பாடு  படுத்துற. “

அவன்  டிவியில்  சேனலை  மாற்றியபடியே  சொல்லி  வைத்தான். 

” பால்கட்டு  தொந்தரவு  இப்ப  கொறைஞ்சிருச்சு  இல்ல….?” பாட்டி  பெருமிதமாக  சிரித்தாள். 

” வாயெடுக்காம  உறிஞ்சிக்கிட்டேயிருந்தா  தொந்தரவு  கொறையாம  என்ன  பண்ணும். “

” ச்சீ  வாய  மூடு. மொதல்ல  ஒன்  காலடி  மண்ண  எடுத்து  புள்ளைக்கி  சுத்தணும்டி. இல்லாட்டி  வயித்துக்கோளாறு  வந்துடும்.”

அம்மா  பச்சைத்தைலத்தை  கால்களில்  தேய்த்து  விட்டுக்கொண்டே  வைதாள். ஐந்து  மணிக்கு  எழுந்து  கொள்பவள்  குழந்தையை  அரைமணி  நேரம்  தன்னருகில்  போட்டுக்கொண்டு  கொஞ்சுவாள். பிறகு  எழுந்து  கொண்டாளானால்  இரவு  பத்து  மணிவரை  வேலைகள்  நீளும். 

பதினோரு  மணிவாக்கில்  வெயில்  முற்றத்தில்  இறங்கிக்கிடக்கும்போது  கைபொறுக்கும்  சூட்டில் வெந்நீர்  விளாவி  வைத்திருப்பாள். மார்கழியின்  உறுத்தாத  மஞ்சள்  வெயில்  இடுப்பில், கைகளில்  ஊறும்போது  உணக்கையாக  இருக்கும். குழந்தையைக்  கொண்டு  வரும்வரை  அதை  அனுபவித்தபடி  கால்நீட்டி  அமர்ந்திருப்பாள். குழந்தை  சின்னஞ்சிறு  சோழி  போல  காலில்  கிடந்து  உடலை  முறுக்கிக்  கொள்ளும். கால்  கட்டை  விரல்களை  இணைத்து  கீழே   நழுவி  விடாதபடி  அணைப்பு  கொடுத்து  சோப்பு  தேய்த்து  விடுவாள். பாட்டி  தாழ்வார  வெயிலில்  மடியில்  துண்டோடு  காத்திருப்பாள். குளிப்பாட்டியதும்  துவட்டிவிடுவது  அவள்  வேலை. பாட்டியின்  கதகதப்பான  சேலையில்  குழந்தை  கண்கள்  சொருகக்  கிடக்கும். உடம்பில்  சுடுநீர்  பட்டதும்  அதற்கு  அப்படித்தான்  கண்கள்  இழுத்து  கொக்கி  போடும். அரைமணி  நேரம்  ரம்யாவுக்கு  விடுதலை. அலுங்காது  பாயில்  பழைய  காட்டன்  புடவையை   விரித்து  படுக்க  வைத்து  இவளும்  அருகில்  சுருண்டு  கொள்வாள். 

“ கொழந்த  பொறந்தப்ப  தெளிஞ்ச  நீராட்டம்  இருந்த. இப்ப  பேயறைஞ்ச  மாதிரி  ஓன்னு  இருக்க,” வந்திறங்கியவுடனே  மோகன்  கேட்டான்.

” ராத்தூக்கம்  போச்சு. உங்கப்புள்ள  கையவிட்டு  எறங்கறதில்ல. பொழுதனிக்கும்  பால்  குடிச்சிக்கிட்டே  இருக்கணும். ஒடம்பு  நொந்து  போவுது. “

” பொறந்தப்ப  பால்  குடிக்கவே  மாட்டேன்னுச்சு. கட்டிக்கிட்டு  வலி  உயிர்  போவுதுன்னு  அழுத. இப்ப  இப்படி….” மோகன்  குழந்தையருகில்  படுத்துக்கொண்டான்.  கன்னத்திலும், நெற்றியிலும்  பெரும், பெரும்  பொட்டுக்களுடன்  ரோஜா  இதழ்  போல  அது  உறங்கிக்கொண்டிருந்தது. பெரிய  செர்ரி  பழமொன்று  அதன்  நெஞ்சில்  ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.      

தோளின்  பட்டர்பிளை  முடிச்சுகள்  காற்றில்  சிலுசிலுத்தன. தேன்  நிற  முடிக்கற்றைகள்  மயிற்பீலி  போல  கலைந்து  அலைந்தன. கடைவாயோரம்  ததும்பிய  சொட்டுப்பால்  எந்நேரமும்  வழிந்துவிடத்  தயாராயிருந்தது. கடற்பஞ்சு  துண்டாட்டம்  இளஞ்சிவப்பு  நிற  பாதங்கள்  ஒளிர்ந்தன. மோகனுக்கு  தொட்டுக்  கொஞ்சவேணும்  போல  ஆசையாயிருந்தது. 

” மேல  படாம  படுங்க,” ரம்யா  படுக்கும்போதே எச்சரித்துவிட்டாள். தலைக்கு  நீர்விடும்  நாட்களில்  அரைமணிநேரம்  அதிகப்படி  அவளுக்கு  ஓய்வு  கிடைத்தது. பகலில்  குழந்தை  தூங்கும்  நேரத்தில்  வீடும்  தூங்கியது. அப்பா  நியூஸ்  பார்க்க  அம்மா   அனுமதிக்கவில்லை. அறையை  தாழிட்டுக்கொண்டாலும்  தடுப்புச்  சுவரின்  இடுக்கு  வழியாக  ஒலி  கசிந்து  விடக்கூடுமென்று  அம்மா  பயந்தாள்.

” கொழந்த  தூங்குறச்ச  ஒரு  எடமா  ஒக்காந்துக்குங்க. பாதத்த  தேய்ச்சி, தேய்ச்சி  நடந்து  எழுப்பி  வுட்றாதீங்க.”கெஞ்சுவதுபோல்   வேண்டிக்கொண்டாள்.  குழந்தையின்  மெல்லொலி  கேட்டால்  ரம்யா  பரபரத்து  ஜாக்கெட்  ஹூக்கைக்  கழற்றி  வைத்துக்கொண்டு  தயாராயிருப்பாள். கணநேரம்  தாமதித்தாலும்  முறுக்கிக்கொண்டு  அழும்  குழந்தையைப்  பால்  குடிக்க  வைப்பதற்குள்  போதும், போதுமென்றாகிவிடும். 

அப்படியும், இப்படியுமாக  தலையை  சிலுப்பி  முலைக்காம்பு  வாய்க்கு  தட்டுப்படுவதற்குள்  அது  அலமலந்து  போய்விடும். அனேகநேரம்  இந்தப்பக்கம்  கொடுப்பதற்குள்  அந்தப்பக்கம்  வழிந்துவிடும், அத்தை  சொல்வது  போல். அறையெங்கும்  பால்  வீச்சம். குழந்தை  மேனியெங்கும்  மணக்கும்  பால்வாசம். மெரூன்  நிறத்திலும், அடர்பச்சை  நிறத்திலும்  இரண்டு  காட்டன்  புடவைகளில்  மெலிந்த  உடல்  வாகோடு  கனிந்த  மார்பகங்களை  ரம்யா  சிரமப்பட்டு  தாங்கி  நின்றாள். 

” தினப்படி  சுத்திப்போடுங்கண்ணி. இல்லாட்டி  கட்டி  செரங்கு  வந்து  தொலைச்சிடும்,” அத்தை  சொன்னாள்.

” மணி  ஆறாச்சின்னா  வெளக்கேத்தறனோ  இல்லையோ  சுத்திப்  போட்டுடுறேன். நீ  கஷ்டப்பட்டததான்  பாத்திருக்கேனே….யம்மாடி. யாரால  இருக்கு,” அம்மாவுக்குப்  பதைபதைப்பாயிருந்தது. 

” மாராப்ப  நல்லா  இழுத்து  வுட்டுக்கிட்டு  பாலக்குடு. இப்படி  தொறந்து  போட்டா  பாக்குறவங்களுக்கு  பக்குன்னு  இருக்கும்,” ரம்யாவை  அதட்டிக்  கொண்டேயிருந்தாள். பால்  சுரக்கும்  மார்பகங்கள்  கையில்  கரண்டியோடு  நிற்கும்  அன்னபூரணிகள். அதிலும்  இவளது  அமுதசுரபி. சுரந்து  கொண்டேயிருந்தது. சாமியறையில்   ஒரு  சிறு  பித்தளைத் தாம்பாளத்தில்  அம்மா அன்னபூரணியை  அமர்த்தியிருந்தாள். பித்தளை  அன்னபூரணி. தீபச்சுடருக்கு  தங்கம்  போல  ஜொலித்து  கையில்  கரண்டியோடு  புன்னகைத்தபடி  அமர்ந்திருக்கும்  அன்னபூரணி. 

எதிரே  ஒரு  சின்னஞ்சிறு  வெள்ளிப்படியில்  அரிசி. அமுதிடுவதே  அவள்  வேலை. சாமி  விளக்கேற்றும்போது  நிறைந்து  கிடக்கும்

பேத்தியின்  தாய்மை  பாட்டிக்கு  நினைவு  வரும். அன்னபூரணிக்கு  அதிகநேரம்  தீபாராதனை  நடக்கும். 

” எப்பவும்  நெறஞ்சே  இருக்கணும். வெள்ளமா  பெருகணும். புள்ளையோட  வயித்துப்  பசிக்கு  மருந்திடணும்  தாயே……” என்று  குரல்  நடுங்க கும்பிட்டு  நிற்பாள். 

இரவில்  வீடு  சலங்கை  கட்டிக்கொண்டது. சிலசமயம்  மெல்லொலியாகவும், பலநேரம்  வீறிட்ட  அலறலாகவும்  அது  சிணுங்கிக்  கொண்டேயிருந்தது. அப்பாவின்  குறட்டை  பாட்டியை  பாதித்ததில்லை. அவளுக்கு  அது  தாலாட்டு   போலிருந்ததில்  அணுக்கமான  இசைபோல  பாவித்து  அவள்  உறங்கிக்கொண்டிருந்தாள். கழுத்தை  நெரித்த  பகல்நேர  வேலைகளில்  அம்மா  முறிந்த   கிளேரியா  கிளையாட்டம்  துவண்டு  கிடந்தாள். ரம்யா  வாழைப்பூ  விரல்களின்  கிரீட  நகங்கள்  ஒருபக்கம்  கீற   இன்னொரு பக்கத்தை  குழந்தைக்கு  உண்ணக்  கொடுத்தபடி  விழித்தே  கிடந்தாள். 

தூங்கும்  அம்மாவின்  மீது  பெருஞ்சினமாயிருந்தது. ஒருமுறை  கைக்கெட்டும்  தூரத்திலிருந்த  தண்ணீர்  சொம்பை  லாவகமாக  நகர்ந்து  கைப்பற்றி  வாயில்  சரித்துக்கொண்டு  வேகமாக  ஸ்டூலில்  வைத்தாள். எழும்பிய  சத்தத்தில்  அம்மா  திடுக்கிட்டு  விழித்து,

” என்னடி  ஆச்சு…..புள்ளைக்குப்  பால்  குடுக்குறியா….குடு, குடு….”

என்றபோது  ஒரு  பெருமூச்சு  எழுந்து  அடங்கியது. சுடர்  விட்ட  தீபத்தைப்  பூவால்  பொத்தி  கையமர்த்தியதுபோல்  எழுந்தது  தணிந்தது. அம்மாவின்  நொடி  நேர  கேள்விக்குப்  பிறகான  சுருளலில்  ஒரு  மென்கனிவு  உள்ளே  படர்ந்தது. பத்தியக்குழம்பிலிருக்கும்   பூண்டை  அரித்தெடுத்து  தட்டில்  கொட்டும்  அம்மாவின்  பரிவை  நினைவுக்குக்  கொண்டு வருதல்  அவசியமாகிப்போனது. உதிரம்  நனைத்த  நாப்கின்களைத்  தாளில்  சுற்றி  கொல்லைக்கடைசியில்  எறிந்துவிட்டு  வரும்போது  இயல்பான  பார்வையில்  பாகற்கொடியையும், மிளகாய்ச்செடிகளையும்  அலசிவிட்டு  வருபவளின்  உருவம்  நிழல்போல்  மனதிலாட,  அப்படியான  சம்பவங்களில்  ஒன்றை  நினைவடுக்குகளிலிருந்து  உருவியெடுத்து  எண்ணிப்பார்க்க  வேண்டியதாயிருந்தது. 

” வயித்துல  வச்சிக்கிட்டு  இருந்துடலாம்.  கையில  வச்சிக்கிட்டிருக்கறது  சாமான்யமில்லடி,” வளைகாப்பின்போது  அம்மா  சொல்லி  சிரித்தாள். அப்போது  பெருத்த  வயிறு  புரண்டு  படுக்க  இடைஞ்சலாயிருந்தது. 

பிரசவ  வயிற்றின்  அரிப்பு  தணிந்து  விட்டதாவென  பாட்டி  கேட்டாள்.

” முன்னைக்கு  இப்பப்  பரவாயில்ல  பாட்டி…” ரம்யாவுக்கு  ஆரம்பத்தில்  கைகள்  பரபரத்தன. அம்மா  விடவில்லை.

“ரத்தம்  ஊற  அரிக்கும். பரக்குப்பரக்குன்னு  சொறிஞ்சு  வுட்றாத. புள்ள  பெத்த  வயிறு  எலவம்பஞ்சு  மாதிரி. புண்ணாயித்  தொலஞ்சிரும்.”

கையை  வயிற்றுக்கருகில்  கொண்டு  சென்றாலே  பாய்ந்து  தடுத்தாள். அப்படியும்  அம்மா  தலைகாட்டாத  சமயங்களில்  புடவையை  இறக்கி  அடிவயிற்றை  சொரிந்து  கொள்ள  அவ்வளவு  இதமாயிருந்தது. 

தொப்புள்  வழி  காற்று  புகுந்து  வயிறு  பெருக்காமலிருக்க   அம்மா  ஒரு  கனமான  துண்டை  மூன்று  மடிப்புகள்  மடித்து  வயிற்றை  சுற்றி  இறுக்கிக்  கட்டிவிட்டிருந்தாள். ஆஸ்பத்திரியிலிருந்த  மெடிக்கல்  ஸ்டோரில்  பெல்ட்  விற்றார்கள். 

” கொஞ்சநாள்  கட்டியிருந்துட்டு  தூக்கிப்  போடறதுக்கு  அம்மாம்   காசு  குடுத்து  அதை  வாங்குவானேன். நாங்கெல்லாம் வீட்டுல  இருக்க  பழைய  துணியத்தான்  கட்டிக்குவோம். இறுக்கமா  இருக்கா  சொல்லு….?”

அம்மா  பலம்  கொண்ட  மட்டும்  இறுக்கினாள். தினமும்  குளித்து  முடித்ததும்  ரம்யா  குரல்  கொடுப்பாள். அம்மா கைவேலையைப்  போட்டுவிட்டு  ஓடிவருவாள். கொடியில்  கிடக்கும்  துணியை  மடித்தபடியே  சாமான்கள்  காலில்  படாதவாறு  ஓர  ஒதுங்க  செய்துவிட்டு  முற்றத்திலிறங்கி  ஓரத்திலிருக்கும்  பாத்ரூமுக்கு  விரைவாள். மகளின்  பொங்கி  வழியும்  மார்பகங்களை  நோக்காது  பார்வையைத்  தழைத்தபடி  துணியைச்சுற்றி  இறுக்குவாள். 

‘ அம்மா  கண்ணு  பிள்ளைக்கு  எமன்’  என்று   அவள்  அம்மா  அடிக்கடி  சொல்வது  அப்போது  ஞாபகத்துக்கு  வரும். 

ஆஸ்பத்திரி  நாற்காலிகள்  நிரம்பி  வழிந்தன. நாற்காலிகளில்  மடிகள்  நிறைந்திருந்தன. அயர்ந்து  உறங்கியபடியும், வாயில்  விரலையிட்டு  சுவைத்தபடியும்  இடைவிடாது  அலறியபடியும், கருமம்  போல  முலையை  சுவைத்தபடியும்   அத்தனை  புத்துயிர்கள். சின்னஞ்சிறு  உருவங்களால்  அந்த  இடத்தில்  செழுமை  பூரித்துக்  கிடந்தது. லேசான  முனகலும், அழுகையும், விசும்பலும்  அங்கு  ரீங்காரமாய்  ஒலித்துக் கொண்டிருந்தது. 

அம்மா  இடதுகையின்  L வளைவுக்குள்  குழந்தையைப்  பொதிந்து  வைத்திருந்தாள். குழந்தை  இமைகள்  நலுங்காது  உறங்கிக் கொண்டிருந்தது. இடையே  திடீரென  பொக்கென்று  சிரித்து  வைத்தது. உதட்டோரங்கள்  துடிக்க  கனவுலகின்  எல்லைக்குள்  ஆழப்புகுந்து  கொண்டுவிட்டதை  சிரிக்க  வைக்க  தெய்வங்கள்  வேஷங்கட்டி  வருமென்று  ரம்யா  எண்ணிக்கொள்வாள். 

திடீரென்று  கீழுதடு  பிதுங்க  செருமி, செருமித்  தணியும்போது, நரி  மிரட்டுமென்று  அம்மா  சொல்வாள். டவுனிலிருக்கும்  ஆஸ்பத்திரிக்கு  வர  அரைமணிநேரம்  பிடிக்கும். ஆட்டோவின்  லேசான  குலுங்கலில்  குழந்தை  இமை  பிரிக்கமுடியாது  தூங்கி  வழிந்தது. 

” தொட்டில்ல  போட்டுத்  தாலாட்டறாப்ல  நீ  வண்டி  ஓட்டுனதுல  கொழந்த  கெறங்கிப்  போயிக்கெடக்கு. போன தடவையும்  இதேமாதிரிதான் ரெண்டு  மணிநேரம்  அசையாம  கெடந்துச்சு.”

அம்மா,  டிரைவர்  மணியிடம்  சொல்லிவிட்டே  ஆட்டோவிலிருந்து  இறங்கினாள். தடுப்பூசி  வரிசை  நீண்டிருந்தது. குழந்தையைப்  பெற்ற  பெண்களும், பெண்களைப்  பெற்ற  அம்மாக்களும்  சின்னஞ்சிறு  உயிர்களுக்குத்  தங்களை   ஒப்புக்கொடுத்து  தேமேயென்று  அமர்ந்திருந்தனர். தாய்மை  இழையோடிய  தேகங்களில்  பொன்  ஒளிக்கீற்றொன்றை  கிள்ளி  எறிந்ததுபோல  முகங்கள்  விகசித்தன. வேப்பிலைக்கொத்து  செருகிய  தலைகளால்  அவ்விடம்  நிறைந்திருந்தது. குழந்தை  கதகதப்பில்  அசந்து  கிடந்தது. 

ரம்யாவுக்கு  அயர்ச்சியாயிருந்தது. நாற்காலியில்  சரிந்து  அமர்ந்தாள். மார்புகள்  விறுவிறுக்க  தொடங்கின. இருபெரும்  இளநீர்க்காய்களை  நெஞ்சோடு  வைத்து  கட்டிக்கொண்டதுபோல  அவ்வளவு  பாரம். முதல்  முயற்சி  தோல்வியில்  முடிந்திருந்தது. இரண்டாவது  தடவையாக   முயன்றபோதும் குழந்தை  வாயைத்  திறக்காமல்  கிடந்தது. கன்னத்தில்  தட்டியும், உதடுகளைக்  குவிக்க  செய்தும்  பிரயோஜனமில்லை. 

” கெளம்பினப்ப  வீட்டுல  குடிச்சது. இப்ப  கொஞ்சம்  குடிச்சா தேவலாம்.”

ரம்யா  முனகினாள். அம்மா  அவளைத்  திரைமறைவுக்கு  அழைத்து  வந்தாள்.

” பதினஞ்சாம்  நம்பர  கூப்புட்டா  சொல்லுங்க…” பக்கத்தில்  அமர்ந்திருந்தவளிடம்  சொல்லி  வைத்துவிட்டு  வந்திருந்தாலும்  ஏனோ  பதைபதைப்பாயிருந்தது. இதோடு  இரண்டுமுறை  எழுந்து  வந்தாயிற்று. 

” நல்லா  அணைச்சாப்ல  வச்சிக்கிட்டு  குடுத்துப்பாரு….” ரம்யாவின்  முகம்  வலியில்  சுருங்கிற்று. 

” கருமாரி, புள்ளைய  பால்  குடிக்க  வையி….” அம்மா  இயல்பாக  இருப்பதுபோல் நின்றிருந்தாள். வழிந்த   புடவை  முந்தானையை  இழுத்து  செருகி  பையில்  எதையோ  தேடுவதுபோல்  குனிந்தாள். ரம்யா  ஜாக்கெட்டின்  ஹூக்கை  விடுவித்து  முலைக்காம்பை  குழந்தையின்  உதட்டில்  உரசச்செய்தாள்.

 இரண்டு  நிமிட  இடைவிடாத  உரசலுக்குப்பின்  குழந்தை  திடுக்கிட்டு  கைகளை  புத்தா  சிலைபோல்  உயர, உயர  தூக்கிற்று. உதடுளைக்  குருவிவாய்  போல  குவித்து  செருமி, செருமி  அழத்  துவங்கியது. அழுகை  பேரோசையாய்  மாறும்  முன்  ரம்யா  வாகாய்  அணைத்துக்கொள்ள  சட்டென  கை, கால்களைப்  பரபரத்து ஆட்டியபடி  உறிஞ்சத்  தொடங்கியது.  அம்மா  நெஞ்சில்  கைவைத்துக்கொண்டாள். 

” கொழம்புல  இருக்க  பூண்டையெல்லாம்  இனிமே  என்  தட்டுல  போடு  சொல்றேன்.” ரம்யா,  அம்மாவைப்  பார்த்து  கோபத்தோடு  முனகினாள்.

*** 

3 Replies to “பெருக்கு”

  1. தாய்மை வாழ்க்கையை பால்மணம் கமழ இனிப்பாக சொல்லியிருக்கிறார்.. நமக்கே பால் கட்டுவது போலவும்..இதமாக இறங்கியது போலவும் உணர்வை ஏற்படுத்தியது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.