(1)
தனக்குத் தானே
செதுக்கிய சிற்பம்-
தனக்குத் தானே
நிச்சலனமாகிய நிச்சலனம்-
தனக்குத் தானே
நிசப்தமாகிய நிசப்தம்-
தனக்குத் தானே
தனிமையாகிய தனிமை-
இடிந்த
சுவரின் மேல்
உறைந்திருக்கும்
சும்மா
யார் பூனையுமில்லாத
பூனை.
(2)
தொலைந்து போன
தன்
பூனையைத்
தேடி வந்தவரிடம்
தோட்டத்தில் இறந்து கிடந்தது கண்டு
புதைத்த பூனையைச் சொன்னேன்.
அது
அவருக்கு ஆறுதலாயமைய
அவர் ஆசைப்பட்டது போல் தெரிந்தது.
அது
இறந்த பூனை
தன் பூனையல்ல என்ற
அறிதலாலல்ல என்றும் தெரிந்தது.
தொலைந்தது
கிடைக்கும் வரை
தேடும் அவசத்திலிருந்து
தன்னை விடுவித்துக் கொள்ள
இறந்த பூனை
தன் பூனையென்று
தேர்ந்து கொள்ளல் அவருக்கு
தேவையாயிருப்பது போல் தெரிந்தது.
அதை முடிவாகவும் தெரிவிக்க
முடியவில்லை அவரால்.
மண்ணில் நான் புதைத்த பூனையை
மனதில் தான் திரும்பப் புதைத்த
தன் பூனையாய்த்
தேடி வந்தவர்
திரும்பிப் போன போது
முடிவு தெரியாது
அது புதையாததாய்
அவரைத் துரத்துவது
அவரின் வெகுவேக நடையில்
தெரிந்தது.

(3)
கற்ப காலமாய்
கற்சிலைக்குள்
உறைந்து
உள்
இறுகிய
ஈசன்-
தான்
உறையும்
கருவறையின்
சுற்றுப் பிரகாரத்தில்
ஓடி
ஓடி
குழந்தை மகிழும்
மாயமென்ன
மாயமென்பதை
அறியும் ஆவலில்
அறிதலில்லை அதுவென்ற
அறிதல் மயங்கி
உறைதலின் நீங்கி
விழித்து நோக்க-
நிதம் நிதம்
தன் முன்னால்
திரியக் கண்டு
தான் சலித்த
அதே
குட்டிப் பூனையைத்
துரத்தி
அது
தப்பித் தப்பி ஓட
சலிக்காது
அதன் பின்னால்
ஓடி ஓடிப் போகும்
குழந்தை-
அதைப் பிடிக்க மட்டும் அல்ல
அதன் ’மியாவ் மியாவை’யும் பிடிக்க.
(4)
சாமர்த்தியமாய்ப்
பதுங்குவதிலும்,
சட்டென்று
பாய்வதிலும்
சன்னமாய் உள்
ஒலிப்பதிலும்,
சுற்றி வளைய வளைய
வருவதிலும்
நினைவுகள்
பூனையிடமிருந்து
வித்தியாசமானவையல்ல-
ஒரு முக்கியமான வித்தியாசம்-
சுடும் பாலை வைத்து
பூனையை
விரட்ட முடிவது போல்,
சூடு வைத்து
நினைவுகளை
விரட்டி விட முடியாது.
நினைவுகளின்
கூர் நகங்கள்
பூனையின்
கூர் நகங்கள்
போலத் தாம்.
நினைவுகளின்
இரைக்கு
எலி
நான்.
(5)
பொதுவான ஒரு பூனையைப் பற்றிய
அனைத்துத் தகவல்களையும்
துண்டுத் தாள்களில் எழுதி
ஒரு பெட்டிக்குள் போட்டு
இறுக்க மூடி வைத்து
தகவல்கள் தம்முள் கலந்து சேர்ந்து புதிதாய்
ஒரு வேளை பூனையாய் உயிர் பெற்றால்
எப்படி இருக்குமோ என்று யோசித்தேன்.
யோசிக்க
வெள்ளையாய், கறுப்பாய், பழுப்பாய்
வண்ணங்கள் பல சேர்ந்த கலவையாய்
விதவிதமான பூனைகளாய்
ஒரு பூனை உலகமே விரிந்தது என்
விழிகள் முன்னே.
பெட்டியைத் திறந்து அவதானித்தால்
திட்டவட்டமாகி விடும்
ஒரு பூனையென்று மேலும் யோசிக்க
ஓர் ஐயம்-
அவதானிப்பவரும் அவதானிக்கப்படுவதாக
அது என்னை அவதானிப்பதில் அதற்கு
திட்டவட்டமாகும் நான்
அதை அவதானிப்பதற்கு முன்பு
யார்?
குறிப்பு:
ஷிரோடிங்கர் பூனை( Schrodinger Cat) பூனை என்ற இயற்பியல் கோட்பாட்டின் தாக்கத்தில் எழுதப்பட்டது.