சூரியக் குடும்பத்தில் புவிக்கோளை ஒத்த கோள்கள் எதுவும் கிடையாது. நீங்கள் எங்கள் விண்மீன் மண்டல விளிம்பிற்கு வந்துள்ள வேற்றுலக ஆய்வுப் பயணியாக (alien explorer) இருப்பின், நான்கு மாபெரும் வாயு ஜாம்பவான்கள், வெற்றுப் பாறைகளைத் தவிர வேறேதுமில்லாத ஏராளமான சிறு பாறைத் தொகுப்புகள், மெல்லிய பனி படர்ந்த ஒரு சில பெரும் பாறைப் பொருட்கள், நியாயமான அளவில் வளிமண்டலங்களைக் கொண்ட நான்கு பாறைப் பொருட்கள் (கோள்/நிலவுகள்) ஆகியவற்றை உள்ளடக்கிய சூரிய அமைப்பைக் காண்பீர்கள்..
மேல் பத்தியில் கடைசியாகச் சொல்லப் பட்டுள்ள நான்கு வான் பொருட்களின் மேற்பரப்பை மேலோட்டமாக ஸ்கேன் செய்தால். அவற்றில் இரண்டு (வெள்ளி மற்றும் செவ்வாய் ) முற்றிலுமாக எரிமலைப் பாறைகளால் (basalt) மூடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இரும்பு மற்றும் மக்னீசியக் கனிமங்கள் நிறைந்த எரிமலைக் குழம்பால் உருவானது பஸல்ட் . எங்கும் உங்களுக்குப் புலப்படுவது இந்த வஸ்துவே தான். மூன்றாவது வான் பொருள் உண்மையில் வேறொரு கோளின் நிலவு (சனிக் கோளின் நிலவான டைடன் ); அது எரிமலைப்பாறைகள்,பனிக்கட்டிகள் மற்றும் சிறிதளவு திரவநிலை மீத்தேன் ஆகியவற்றால் உருவாகி இருக்கலாம் எனத் தோன்றுகிறது. வளிமண்டலம் கொண்ட நான்கு வான் பொருட்களில் கடைசியாக நீங்கள் ஸ்கேன் செய்யும் வான் பொருளின் பெரும்பகுதியை நீர் மூடி இருந்தாலும், நீரில் மூழ்கி இருப்பவை மற்றும் எஞ்சிய நிலப்பரப்பில் காணப்படுபவை அனைத்துமே

கற்பாறைகள்
அவை வெறும் எரிமலைப் பாறைக் குவியல்கள் அல்ல. உங்கள் ஸ்கேனர்கள் எல்லாத் திசைகளிலும் அமிழ்ந்தும் முங்கியும் கோளின் மேற்பரப்பில் எத்தனை வகை வேறுபாடுகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. (அத்துடன் இக்கோள் உயிரையும் அரவணைத்துக் கொண்டு இருப்பது அற்புதமே.). கோளின் சில பகுதிகள் வெறும் எரிமலைப் பாறைகள்; ஆனால் பெரும்பாலான திறந்தவெளி நிலப் பரப்புகள் பெருமளவில் வேறுபட்டிருக்கின்றன. சோடியம் மற்றும் சிலிக்கான் மிகுந்துள்ள நிலப் பரப்புகள் உள்ளன. முழுதும் கால்சியம் கார்போனேட் கொண்டவை சில பரப்புகள். பிற பரப்புகள் பல்வகை மணமும் சுவையும் கொண்ட உப்புக்களால் ஆனவை போல் தெரிகின்றன. ஏறக்குறைய பரிசுத்தமான சிலிக்கா பெரு வயல்களும் உண்டு- அனைத்தும் படிகக் கற்களாகவே இருக்கக் கூடும்
நடந்து கொண்டிருப்பது எதுவாயினும், இந்த நிலப் பரப்பு கலவையில் மட்டும் வேறுபடவில்லை; வயதிலும் வேறுபட்டிருக்கிறது . இங்கு நீங்கள் காணும் பெருவாரியான பாறைப் பொருட்கள் மிகப் புராதனமானவை; அவற்றின் வயது பல பில்லியன்கள் ஆண்டுகளாக இருக்கும் ( அண்மையில் எரிமலைப் பாறைகள் படிந்த சில சிறு பரப்புகளைத் தவிர).. முழுதும் பனிப்பாறைகள் மூடிய உலகங்கள் இருக்கின்றன. முழுதும் எரிமலைப் பாறைகளால் ஆனதாகத் தோற்றமளிக்கும் ஒரு கோளின் வயது சில நூறுகள் மில்லியன்கள் ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். (வெள்ளிக் கோள் இவ்வகை இளம் கோள்)..இருப்பினும் மேல் பரப்புப் பாறைகளின் வயதுகள் விரிவளவு (span ) சில ஆண்டுகள் முதற்கொண்டு பல பில்லியன்கள் ஆண்டுகள் வயதுள்ள பாறைகளைக் கொண்ட ஒரே கோள் இக்கோள் (புவி) .
இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. எல்லா கற்பாறைக் கோள்களிலும் olivine, ஃபெல்ஸ்பார் (feldspar), pyroxene மற்றும் அயக்காந்தக்கல் (magnetite) போன்ற கனிமங்கள் உள்ளன. ஆனால் இந்த நீலப் பச்சை கோளில் (blue-green planet ) மட்டுமே ஏராளமான hornblende, கறுப்பு அப்ரகம் (biotite), காக்கைப் பொன் வகையைச் சேர்ந்த கனிமம் (muscovite) மற்றும் விதவிதமான களிமண்கள் (உள் கட்டமைப்பில் நீர் மூலகங்கள் கொண்டுள்ள அனைத்து கனிமங்களும் என்றும் குறிப்பிடலாம் ) காணப்படுகின்றன.
இவை மட்டுமல்ல. இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம்) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். ஆனால் இங்கே இத்தனைப் பெரிய அளவில் கால்சைட் உருவாக உயிரினங்களே காரணமாக இருக்க முடியும். இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.
மேலும் நிலவியல் ரீதியாக இக்கோள் இன்றும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது என்பதும் தெளிவாகிறது. ஒரு டஜன் எரிமலைகள் கோளின் குறுக்குவாட்டில் ஊக்கமாக வெளிப்படுவதையும் நீங்கள் கண்டறியலாம். நில அதிர்ச்சி சம்பந்தப்பட்ட (seismic ) அலைகளும் உள்ளிருந்து இரைச்சலிடுவது மேற்பரப்பு நகர்கிறது என்று நினைக்க வைக்கிறது. இத்தகைய செயல்திறனும் அளவற்ற நீரும் (பெருங்கடல் மற்றும் மழைநீர்) ஒருங்கிணைவதால் கட்டாயம் பாறைகளில் மாற்றங்கள் ஏற்படும். பாறைகள் புதைவுற்றும் உயர் அழுத்தம் மற்றும் மிகு வெப்ப தாக்குதல்களுக்கு உட்பட்டும் வெகுவாக மாறக் கூடும். நிலப்பரப்பிலும் பெரும் பாறைகள் சிதைவுக்கு உள்ளாகி இருக்கலாம்.
இவ்விரு நிகழ்வுகளின் மூலமாக இக்கோள் தன் பாறைகளை, உருமாற்றியும் பண்படுத்தியும் வருகிறது எனலாம். இது போன்ற மாற்றங்கள் வேறு எந்த வான் பொருளிலும் நிகழக் கூடிய சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. (சனிக்கோளின் தொல்லை தரும் (pesky) நிலவைத் தவிர, அது குறித்து ஒரு தகவலும் இல்லை). எதுவாயினும் இக்கோள் (புவி) தனித்தன்மை வாய்ந்தது. நீங்கள் மற்றெங்கும் எளிதில் அடையாளம் காணுகின்ற சில டஜன் கனிமங்களுக்கு பதிலாக இக்கோள் ஆயிரக்கணக்கில் கனிமங்கள் பெற்றிருப்பதற்கான ஆதாரம் உங்களுக்குக் கிடைக்கிறது. நீர் மற்றும் செயலூக்கம் கொண்ட புவியியல் சார் (geologic ) நடைமுறைகள் போன்ற சிறப்புக் கூறுகள் காரணமாக இக்கோள் தோன்றிய நாளில் இருந்து தற்போது வரைக்குமான பல பில்லியன்கள் ஆண்டுகளில் வெகுவாக மாற்றம் அடைந்து கொண்டு வந்திருக்கிறது என்று தெளிவாகப் புரிந்து கொள்கிறீர்கள். இது ஒரு அரிதிலும் அரிதான வான் பொருள்.

இங்கிலிஷ் மூலக் கட்டுரை பற்றிய குறிப்பு :
Sep 5, 2019 Discover magazine-ல் What Makes Earth So Unique? It’s the Minerals என்ற தலைப்பில் வெளிவந்த இங்கிலீஷ் கட்டுரையின் தமிழாக்கம்
சொல்லடைவு
Alien : அமெரிக்க பொதுப் பயன்பாட்டில் இது மனிதரைப் போல் தோற்றமளிக்கும் ஆன்டென்னா வைத்த வேற்றுலக வாசி.
Basalt ( எரிமலைப் பாறை): நிலஞ்சார் கோள்கள் மற்றும் நிலவுகளின் நிலப் பரப்பிலும் அல்லது அதற்கு வெகு அருகிலும் காணப்படும் கருங்கல் பாறைகள். அவை இரும்பு மற்றும் மெக்னீசியம் உலோகச் செறிவும் குறைந்த பாகுத் தன்மையும் கொண்ட எரிமலைக் குழம்பு, விரைவான குளிர்வித்தல் காரணமாக உருவாகின்றன.
வாயு ஜாம்பவான்கள்: வியாழன், சனி,யுரேனஸ்,நெப்டியூன் ஆகிய கோள்கள். Gas giants (வாயு ஜாம்பவான்கள் ) என்று அழைக்கப் படுகின்றன
நிலஞ்சார் கோள்கள்(terrestrial planets ): மெர்குரி,வெள்ளி, பூமி, செவ்வாய் .ஆகிய 4 கோள்கள். இவை பாறைக் கோள்கள் (Rocky planets ) என்றும் அழைக்கப் படுகின்றன. மெர்குரி தவிர பிற கோள்கள் நியாயமான அளவு வளிமண்டலங்களைக் கொண்டிருக்கின்றன.
டைடன் (Titan ):இது மற்றொரு கோளின் நிலவு எனக் கட்டுரையில் குறிப்பிடப் படுகிறது.இது சனிக் கோளின் நிலவுகளில் மிகப் பெரியது.
பாறை வகைகள்: எரிமலைப் பாறைகள் (igneous rocks),உருமாறிய பாறைகள் (metamorphic rocks),வண்டல் பாறைகள் (Sedimentary rocks) என்னும் மூன்று வகை பாறைகளும் பூமிக் கோளில் காணப் படுகின்றன. இவை அனைத்தும் கருங்கல் என்ற பொதுப் பெயரில் அறியப் படுகின்றன.
கால்சியம் கார்போனேட் : இதன் ரசாயனக் குறியீடு CaCO3. இது கால்சைட் (calcite) என்னும் கனிமமாக அறியப் படுகிறது. எல்லா கருங்கல் வகைகளிலும் கலந்தும் காணப்படுகிறது. சுண்ணாம்புக் கல் மற்றும் சலவைக் கல் ஆகிய பொருட்களின் முதன்மை மூலக் கூறு கால்சைட் கனிமம்.
கால்சைட் உருவாக்கம் : இது இரு வழிகளில் உருவாகிறது.
- CaCO3 -யின் வீழ்படிவாக (precipitation)
- கிளிஞ்சல், சிப்பி ,சோழி , கழிவுகள்,பாசி படர்வுகள் ஆகியவற்றின் சிதைவுக் கூளங்கள் கால்சைட் கனிமங்களாக உருமாற்றம் அடைகின்றன.
சுட்டி: https://www.discovermagazine.com/planet-earth/what-makes-earth-so-unique-its-the-minerals
****