
கால்களால் நடப்பது போதவில்லை மனிதனுக்கு. இயற்கையில் காணப் பெற்ற வடிவங்கள், உருவங்கள், விலங்குகள், பறவைகள் அவனுக்கு, சக்கரங்களை, காளை பூட்டிய ஏர்களை, குதிரை பூட்டிய தேர்களை, வானூர்திகளை அமைக்க உதவின. அடிப்படையான தத்துவத்தைக் கண்டறிந்து அதை மேம்படுத்தி முன்னேறியது மனித இனம். துடிப்பும், விரைவும் மிக்க இப்பயணத்தில், ஒன்றை எப்போதும் அவன் நினைவில் கொள்ள வேண்டும்- மனிதன் சிறுத்தையையோ, மானையோ தேரில் பூட்டவில்லை. வேகத்தை, விரைவை, சில அடி தூரங்கள் தரையில் கால் பாவாமல் காற்றில் மிதக்கும் அவைகளை அவன் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தான். பயணத்திற்குகந்தது குதிரையெனக் கண்டு கொண்டான். வேகமும் விவேகமும் கை கோர்த்தன.
முழுதும் தானியங்கியான மின் மகிழுந்துகளை (Electric Cars) உற்பத்தி செய்யும் ‘டெஸ்லா’ (Tesla) நிறுவனம் தன் கனவுகள் பொய்க்காதவை என திடமாக நம்பியதில் தவறேதுமில்லை; ஆனால், பாதுகாப்பு அம்சங்களில், அது தகுந்த கவனம் செலுத்தவில்லை. அதன் ‘முழுதும் தானியங்கும் ஓட்டுனர் சேவை’ (Full Self Driving Package) 12 விபத்துக்களை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனிஃபர் ஹோமென்டி (Jennifer Homendy), டெஸ்லா தன் கார்களை அறிமுகம் செய்யும் மொழி அதீதமானது, மக்களை அவ்வாறே நம்ப வைப்பது என்று சொல்கிறார். நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள், காவல் துறையின் ஊர்திகள், அவசரகால ஊர்திகளில் இந்தத் தானியங்கி வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார், 17 பேர் காயமடைந்திருக்கின்றனர். மொத்தத்தில், விபத்துக்கள் ஏற்படுவதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், ‘தானியங்கி ஓட்டுனர்’ மற்றும் அதன் உடன் பிறப்புச் சேவையான ‘முழுவதும் தானே ஓட்டும்’ என்று சொல்லி உண்மைக்குப் புறம்பாக விற்றக் காரணங்களுக்காக வாடிக்கையாளர்களும் டெஸ்லாவின் மேல் வழக்குகள் போட்டிருக்கின்றனர்.
‘எதிர்காலத்தில் வண்டிகள் இவ்வாறே ஓட்டப்படும்’ என்பதையே தன் முக்கியச் செய்தியாகச் சொன்ன இலான் மஸ்க், (Elon Musk) சுற்றுப்புறங்களைப் படம்பிடித்து உடனுக்குடன் செயலிகளின் மூலம் தானியங்கி வாகனங்களைச் செலுத்துவதற்கு கேமராக்களே போதும் என்று தீர்மானித்தார். தானியங்கி ஊர்திகளை உருவாக்கும் தொழில் நுட்பச் சாத்தியக்கூறுகளை ஆராயும் ஸ்கைலர் கல்லன் (Schuyler Cullen) இதன் போதாமைகளை அருமையாகச் சொல்கிறார் : “படப்பிடிப்புக் கருவிகள் கண்களாது; விழித்திரை ஊடாக காட்சிப் புறணியில் பதியும் விஷயங்களுக்காக இயங்கும் நரம்புப் பின்னல்கள், படத் துணுக்குகளைவிட பலகோடி மேம்பட்டவை.”
தானே ஓட்டுனராகச் செயல்படும் ஊர்திகளை டெஸ்லா சுமார் ஏழு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தத் தொடங்கியது. ‘மேம்பட்ட ஓட்டுனர் உதவியாளர்’ என்று தொடக்கத்தில் பெயரிடப்பட்ட இதை ‘தானியங்கி ஓட்டுனர்’ (Autopilot) என்று மஸ்க் அறிவித்த போதே எதிர்ப்பு வந்தது. ‘இணை ஓட்டுனர்’ (Copilot) என்ற பெயர் சரியாக இருக்கும் என்பதை அவர் நிராகரித்தார்.
தொடக்கத்தில் கேமராக்கள், ராடார், ஒலி அலை உணரிகள் போன்றவை இந்தக் கார்களில் இடம் பெற்றன. குழுமத்தில் இருந்த வல்லுனர்கள் மேம்பட்ட ராடார் மற்றும் அதிகத் திறனுள்ள ‘லிடார்’ (LIDAR- Light Deduction and Ranging) ஆகியவற்றைப் பயன் படுத்துவது உசிதம் எனச் சொல்கையில் அவர் கண்களும், படம் பிடிக்கும் கருவிகளுமே போதும் என்று சொல்லிவிட்டார். (கூகுள் லிடாரைப் பயன்படுத்துகிறது- ஆனால் காரின் தலையில் வாளியை வைத்தது போல இருக்கிறது!) சிலப் பொறியியலாளர்கள், ‘லிடார்’ செலவு அதிகம் பிடிக்கும் ஒன்று; ராடாரின் தரவுகள் துல்லியமாக இருப்பதில்லை; படக்கருவிகளின் பதிவுகளும், ராடாரின் பதிவுகளும் ஒன்றாக இருப்பதில்லை’ என்று சொன்னார்கள். அழகான மின் வாகனத்தின் முன்பகுதியில் ராடார் திறந்த ஒரு குழியில் உட்கார்ந்ததால், மஸ்க், அதை அழகிற்காகத் துறக்க முடிவு செய்தார். மறுப்பு எழவே அதை ரப்பர் உறை கொண்டு மூடப் பார்த்தார்; பனிக்காலத்தில் அந்த உறையில் பனி படர்ந்து பார்வையை மறைத்தது.
ராடார் செலவு பிடிக்கும் ஒன்று, அழகைக் கெடுக்கிறது என்று முடிவு எடுக்கப்பட்டது. தானியங்கி வாகனத் துறையில் பெயர் பெற்றவரான ஹால் ஓக்கர்ஸ்,(Hal Ockerse) ‘தானியங்கி ஓட்டுனரின்’ பௌதீகப் பொருட்களைக் கண்காணிப்பதற்காகவும், தவறுகளைச் சரி செய்து கொள்வதற்காகவும் கணினி வன்பொருள், மற்றும் கணினிச் சில்லுகள் (Computer Chips) தேவை என வாதிட்டு, இறுதியில் ராஜினாமா செய்தார். 2015-ல் தரப்பட்ட இந்தக் கருத்து புறந்தள்ளப்பட்டது.
மே 2016-ல், ராடாரும், கேமராவும் பொருத்தப்பட்ட டெஸ்லாவின் ‘எஸ்’ மின் வண்டியை ஓட்டிய ஜாஷுவா ப்ரவுன்,(Joshua Brown) ஃப்ளோரிடாவில், தனக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்த ட்ராக்டர்- ட்ரெய்லரில் மோதி உயிரிழந்தார். அந்த ட்ராக்டர்-ட்ரெய்லர் ‘தானியங்கி ஓட்டுனர்க்கு’ புலப்படாமல் போனதுதான் காரணம். அதன் கேமராக்களுக்கு வெள்ளை வாகனத்திற்கும், பளீரென்ற வானத்திற்கும் வித்தியாசப்படுத்த முடியவில்லையாம். இந்தத் தானியங்கி மோகத்தில் ஒரு பயணர், ஒட்டுனர் இருக்கையைத் துறந்து பின் இருக்கையில் பயணித்து காவல் துறையால் கைது செய்யப்பட்டார். விளம்பர மொழியின் தாக்கம் பெரிதுதான்!
ராடாரைத் தானே தயாரிப்பது உற்பத்தியை விரைவாக்கும், செலவைக் குறைக்கும் என்று நம்பிய மஸ்க், டூவாவூ (Dua Vu) என்ற வல்லுனரை நியமித்து, அவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து போனார். ஆராய்சிக்காகத்தான் ராடார் துறையைக் கொண்டு வந்தோம்; எங்கள் மின் கார்களுக்காக அல்ல என்று பின்னர் சொன்னார்கள் இவர்கள்.
“இந்தக் கார்களை ‘தானே முழுதாக இயங்கும் ஒன்று; என்றும், ‘தானியங்கி ஓட்டுனர்’ என்றும் சொல்லக்கூடாது. ஏனெனில், அது மக்களை அவ்வாறே நம்ப வைக்கும். உண்மையில், இவைகள் மனிதர்களின் சக ஓட்டுனர்களே.” என்று சொன்னார் இன்றைய அரோரா (Aurora) கம்பெனியின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் டெஸ்லா பொறியியல் தொழில் நுட்ப வல்லுனருமான ஸ்டெர்லிங் ஆண்டர்சன்.(Sterling Anderson)
2017-ல் போக்கு வரத்து விளக்குகளுக்கேற்ப செயல்படுவது, பாதை மாற்றம் போன்ற முக்கிய முன்னேற்றங்கள் ‘முழுதும் தானியங்கி’ யில் உள்ளது என்று, $10000 விலைக்கு டெஸ்லா இந்தச் சேவையை விற்றது. இந்த நவம்பரில் 12,000 கார்களை திரும்பப் பெற்ற அந்த நிறுவனம், மென் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள புதிய கட்டளையால், கார்களின் அவசரத் தடுப்பான்கள் திடீரென்று செயல்பட்டு விபத்துக்கள் நேரிடக்கூடும் என்பதால் கார்களைத் திரும்பப் பெற்றதாகச் சொன்னது.
“செயற்கரிய யாவுள நட்பின்? அது போல்
வினைக்கரிய யாவுள காப்பு?” அன்றே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். காப்பற்ற செயல் யாரையும் காப்பாற்றாதே.
இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் 12 பேர் பயணித்த எம் ஐ 17 வி5 என்ற அதி நவீன இராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் விபத்திற்கு உள்ளாகி 13 பேரும் இறந்தனர். விமான ஓட்டி 80% காயங்களுடன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் கவனம் செலுத்த வேண்டிய சில செய்திகள் உண்டு. வானிலை அறிக்கை, ‘அதிக ஈரப்பதம், இலேசான மழை மற்றும் தாழ்வான மேகங்கள்’ என்று சொல்லியிருக்கிறது. பார்வைத் தெளிவிற்காக வாகனம் தாழப் பறந்திருக்கிறது. நிலப் பகுதியில் ஒரு பார்வையைப் பதித்துக் கொண்டே, மேகங்களின் கீழே செல்ல வேண்டிய தேவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் கடுமையான ஒன்று. இத்தனைக்கும் அதன் இயந்திரம் முழு மின் இலக்கக் கட்டுப்பாடில் உள்ள ஆற்றல் மிக்க ஒன்று. ஒரு கேள்வியும் எழுகிறது- இரு விமானிகளில் வெளிச் சூழலை இருவருமே பார்த்துக் கொண்டிருந்தார்களா அல்லது ஒருவர் திரையில் தோன்றும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாரா? (மஸ்க் தொடர்ந்து சொல்லி வருவதும் ஒன்றுண்டு- ஓட்டுனர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; ‘தானியங்கி’ பழுதானால் அவர் ஊர்தியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்) மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி மரக்கிளையில் மோதி வெடித்து சிதறியிருக்கிறது.
வானிலைகளை அனுமானித்து அதற்கேற்ப செயல்படும் நுட்பம் இன்னமும் வளர வேண்டிய தேவை இருக்கிறது.
போர்க்களத்தில், அர்ச்சுனனுக்கு கீதை சொல்லிக் கொண்டே புன்னகையுடன் இருக்கும் கண்ணன், கைகளில் பிடித்திருந்த கயிற்றை விட்டுவிடவில்லை. இயந்திரங்களுடன், தன்னையும் தன் ஆற்றலையும் நம்ப மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும்.
உசாவிகள்:
விபின் ராவத்- த ஹிந்து 09-12-2021
Inside Tesla as Elon Musk Pushed an Unflinching Vision for Self-Driving Cars
By Cade Metz and Neal E. Boudette
- Published Dec. 6, 2021Updated Dec. 7, 2021, 7:14 a.m. ET
உத்ரா.