“பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மட்டும் மரியாதெ செய்யுது?”

This entry is part 4 of 10 in the series கி.ரா. - அ.ரா.

26.

பாண்டிச்சேரிக்குக் கி.ரா. வந்தததால் எழுத்தில் மட்டுமே வாசித்திருந்த பல எழுத்தாளர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டுக்காரர்கள் என்றில்லாமல் அயல்நாட்டிலிருந்து வந்தவர்களைக் கூட அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்படி 

அறிமுகமான எழுத்தாளர்களில் இளையோரும் உண்டு. நடுத்தர வயதினரும் உண்டு. ஒரு சில முதியவர்களும் உண்டு. நான், பாண்டிச்சேரிக்குப் போனபோது எனது வயது 30. அதனால் இளையோர்களில் ஒருவன் எனக் கருதியிருந்தேன். நாற்பதிலிருந்து அறுபது தாண்டியவர்களை நடுத்தர வயதினராகவும் அறுபதுக்கும் மேல் கடந்தவர்களை முதிய எழுத்தாளராகவும் நினைத்துக்கொள்வேன். அவரைப் பார்க்க வருபவர்களில் நடுத்தரவயது மற்றும் மூத்தோர்கள்தான் அதிகம்.

ஒருநாள் அதுவரை நான் கேள்வியே படாத ஒரு எழுத்தாளரை எனக்கு அறிமுகம் செய்தார் கி.ரா. அது ஒரு இன்பகரமான நினைவு. அந்த எழுத்தாளரின் பெயர் பா. விசாலம். அவரது “மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய்” என்ற நாவலோடுதான் அறிமுகம் ஆனார். அறிமுகமான இடம் கி.ரா.வின் வீடு. நான் போனபோது கி.ரா.வின் சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த சின்ன மேசையில் மெல்லக் கனவாய்ப் பழங்கதைகள் நாவலின் சில பிரதிகள் இருந்தன. அவருக்கு முன்னால் இரண்டுபேர் அமர்ந்திருந்தார்கள். 

அவர்களோடு பேசிக்கொண்டிருந்த கி.ரா. பேச்சை நிறுத்திவிட்டு, அந்த நாவலின் ஒரு பிரதியைக் கையிலெடுத்துக் கொண்டு, ‘இவரைத் தெரியுமா? என்று கேட்டார். அந்தக் கேள்வி எனக்கா? அவருக்கா? என்று புரியாமல் இருவரும் தலையை அசைத்தோம். பிறகு அவரே இருவரையும் இருவருக்கும் மாற்றிமாற்றி அறிமுகம் செய்தார். அவர் பெயர் பா.விசாலம்; அறுபது வயதை நெருங்கும்போது தனது முதல் நாவலோடு தமிழ் இலக்கியத்திற்குள் வந்திருக்கிறார். இவர் அவரது கணவர் ராஜு. பாண்டிச்சேரி தொழிற்பேட்டையில் குறுந்தொழில்கூடம் வைத்திருக்கும் தொழில் அதிபர் என்றார். சுந்தரராமசாமிக்கு நண்பர்கள் என்று சொல்லிவிட்டு ‘ நாகர்கோயில்காரங்க;நாவலைப் படிச்சுப் பாருங்கய்யா?’ என்ற சொன்னபோது பா.விசாலம் தன்கைப்பட அன்புடன் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். 

விசாலத்தின் கணவர் ராஜுவைச் சிலதடவை பார்த்ததாகத்தோன்றியது. அவரையும் மதியழகன் தான் அறிமுகம் செய்திருந்தார். நான் பல்கலைக்கழகம் போவதற்கு நிற்கும் குறிஞ்சி நகர் பேருந்து நிறுத்தத்தில் அவரைச் சந்தித்தது ஞாபகம் வந்தது. அதற்குப் பின்பக்கம் இருக்கும் தாகூர் நகரில் அவரது வீடு என்றும் சொல்லியிருந்தார். புதுவை இலாசுப்பேட்டைப் பகுதி ஒரு தொகுதி. அத்தொகுதிக்குள் இருக்கும் நகர்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக ஆளுமைகளின் பெயர்களாக – ராஜாஜி, தாகூர், லெனின், இந்திரா என இருக்கும். பண்டைத்தமிழ் இலக்கியத்திலிருந்து திணைப்பெயர்கள் கொண்ட -குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நகர்களும் உண்டு. ஔவை, பாரதியார், குமரகுருபர் எனப் புலவர்களின் பெயர்களையும் பார்க்காலம். நகர் என்று இருந்தாலும் அதற்குள் இரண்டிலிருந்து ஐந்து தெருக்களே இருக்க வாய்ப்புண்டு.

விசாலத்தின் மெல்லக்கனவாய்ப் பழங்கதையாய் ஒருவித லட்சியத்தன்மை கொண்ட ஒரு பெண்ணின் கதை. நாகர்கோவில் பின்னணியில் எழுதப்பெற்ற நாவல். ஆனால் வட்டார மொழியைக் கைவிட்டுவிட்டு இடப்பின்னணியில் பாத்திரங்களை உலாவ விட்டிருந்தார். இளமையின் வேகமும் லட்சியமும் கொண்ட பெண்ணின் பிடிவாதமான காதலும், இடதுசாரி இயக்கத்தலைவர்களோடு பழகிய பழக்கமும் நிகழ்வுகளாக விரியும் அந்த நாவலை ஒருவிதத் தன்வரலாற்று நாவல் என்று வகைப்படுத்தலாம். 

நாவலை வாசித்துவிட்டு அவர்களது தாகூர் நகர் வீட்டுக்குப் போய் மாலைநேரக் காபியோடு விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஊடகம் இதழில் எழுத நினைத்தேன். ஆனால் அது நாவல் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாத இதழ். அப்போது அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால் நான் எழுதி அனுப்பிய விமரிசனம் வரவில்லை. விசாலத்தின் கணவர் ராஜூ இலக்கியம், சமூக இயக்கம் என இயங்கும் பலருக்கும் நெருக்கமானவர். கேட்காமலே நன்கொடைகள் வழங்கி ஆதரவு தருவார். மெல்லக்கனவாய்.. நாவலின் லட்சிய இடதுசாரி அவரே என்று தோன்றியது.

27.

மதுரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் ஒருங்கிணைத்த மதுரை சந்திப்பு நிகழ்வுகளில் சுந்தர ராமசாமியைப் பார்த்ததுண்டு. தனியாக அவரோடு பேசியதில்லை. இடையில் அவரது பல்லக்குத்தூக்கிகளை நாடகமாக்கியதால் நெருக்கம் கூடியிருந்தது. கடிதங்கள் மூலம் பேசிக்கொண்டோம். அதன் பிறகு அவரை நேரடியாகச் சந்தித்தது பாண்டிச்சேரியில் தான். விசாலம் – ராஜு இல்லத் திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பாண்டிச்சேரி வந்திருந்தார். என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் அனுப்பியிருந்தார். கி.ரா.வுக்கும் அப்படியொரு தகவல் போயிருக்கும் என்று நினைக்கிறேன். 

புதுவையில் அப்பொழுது இரட்டைத் திரை அரங்காக இருந்த ஆனந்தா, பால ஆனந்தா திரையரங்கத்திற்குப் பக்கத்தில் இருந்த ஆனந்த திருமண மஹாலில் திருமணம். அங்கேயே தங்கும் அறைகளும் உண்டு.  அதன் உரிமையாளர் கோவிந்தசாமி முதலியார் கலை, இலக்கியப்புரவலரும்கூட. எப்போதும் மஞ்சள் பட்டுவேட்டியோடு பட்டுத்துண்டும் அவரது அடையாளங்கள். ஒருவிதக் கதர்பட்டு ஆடைகள். நான் மண்ட பத்திற்குள் நுழையும்போது அவர் அங்கிருந்தார். கம்பன் விழாவில் பிரபஞ்சனின் அகல்யா நாடகம் மேடையேற்றம் மூலம் மரபைப் பேணும் முதியவர்கள் பலருக்கும் நான் எதிர்மறையாக அறிமுகமாகியிருந்தான். ஆனாலும் அதற்காக எதிரியாகப் பார்க்காத மனம் அவர்களிடம் உண்டு. என்னைப் பார்த்தவுடன் கி.ரா. இப்போதுதான் போறார். நீங்களும் பின்னாலேயே வறீங்க என்று சிரித்தபடியே சொல்லி அனுப்பி வைத்தார்.   நாங்கள் மாலையில் போனோம். அநேகமாக அது திருமணத்திற்கு முந்திய வரவேற்பு நிகழ்வு என்று நினைக்கிறேன். மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் சு.ரா., ராஜு, கி.ரா. ஆகியோர் இருந்தனர். இன்னும் சிலர் இருந்தனர். அவர்களை எனக்குத் தெரியாது. கி.ரா.வும் சு.ரா.வும் கொஞ்ச நேரம் பழைய நினைவுகளைப் பேசினார்கள். சுந்தர ராமசாமிக்குக் கி.ரா., பாண்டிச்சேரி வாசியாகவே மாறிவிட்ட து ஆச்சரியமாக இருந்த து. ஒரு கரிசல் காட்டு விவசாயியால் புதுச்சேரி போன்ற நகரத்தில் தன்னை ஐக்கியமாக்கிக் கொள்ளமுடியும் என்பதை நம்பமுடியாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்.  ‘அதென்ன பெரிய காரியம்; இடைசெவல்லெ என்னைப் பார்க்க வர்றவங்கள விட அதிகமான இலக்கியவாதிகள் இங்கெ என்னைப் பார்க்க வர்றாங்க. நல்ல காத்து கெடைக்குது; நல்ல தண்ணி; நல்லா மீன். அரிசியெக் குறைச்சுட்டு மீனெ அதிகமாச் சாப்பிடுறேன். சர்க்கரை வியாதிக்கு இது நல்ல உணவுன்னு சொல்றாங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பஞ்சாங்கம் வந்தார். கி.ரா. அவர் பக்கம் திரும்பியதும், சுந்தர ராமசாமி என் பக்கம் திரும்பினார்.  

குடுங்கோ என்று நான் கையில் வைத்திருந்த நூலை வாங்கிப் பார்த்தார். அவருக்குத் தருவதற்காக எனது “ நாடகங்கள் விவாதங்கள்” என்ற முதல் நூலைக் கொண்டுபோயிருந்தேன். அதில் முதல் நாடகமாக சு.ரா.வின் பல்லக்குத்தூக்கிகள் இருந்தது. வாங்கிப் பார்த்துவிட்டு மதுரை நண்பர்கள் நாடக நிகழ்வைப் பாராட்டிச் சொன்னதை நினைவுபடுத்திப் பேசினார். அத்தோடு இந்தப் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை எனக்கு நாகர்கோவிலுக்கு அனுப்பித்தரணும். அப்புறம் பத்துப் புத்தகங்களை சிங்கப்பூருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும் என்றார்.   எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

ஒரு தேதியைக் குறிப்பிட்டுச் சிங்கப்பூர் அரசாங்கம்  சிறுகதைப் போட்டி நட த்தியிருக்கிறது. அதில் நல்ல சிறுகதையைத் தெரிவுசெய்யும் வேலைக்காக என்னை அழைத்திருக்கிறது. நான் போகிறேன். நீங்கள் அந்தத் தேதிக்கு முன்னால் க்ரியா முகவரியில் இதன் பத்துப் பிரதிகளைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லி அதன் முகவரியைக் கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சிங்கப்பூரில் இளங்கோவன் என்றொரு நாடகக்காரர் இருக்கிறார். அவர் இந்தப் பிரதியை மேடையேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை மேடையேற்றும்போது உங்களையும் அழைக்கப்போவதாகச் சொன்னார். 

தபாலில் அனுப்பாமல் எனது நூலின் 25 பிரதிகளை எடுத்துக்கொண்டு க்ரியாவிற்கு நேரில் சென்று தனியாகப் பத்து நூல்களை ஒரு கட்டாகவும் 15 பிரதிகளைக் க்ரியாவில் விற்பதற்காகவும் தந்துவிட்டு வந்தேன். 

28. 

பா.விசாலம் போலவே அதுவரை நான் கேள்விப்படாதவராக இருந்து கி.ரா. வீட்டில் அறிமுகமாகிப் பின்னர் நெருங்கிய நண்பராக ஆனவர் பா.இராமமூர்த்தி. சங்கமித்திரை என்னும் புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். பெரியாரியச் சிந்தனைகள் நிரம்பியவர். திராவிட இயக்க இதழ்களில் அவரது எழுத்துகள் அச்சாகிக் கொண்டிருந்தன.  மார்க்சியமும் நவீனத்துவ எழுத்தும் பிடித்திருந்த அளவுக்குப் பெரியாரியம் சார்ந்த எழுத்துகள் மீது பிடிமானம் அப்போது இல்லை.  

பா. இராமமூர்த்தி மாதமொருமுறையாவது பாண்டிச்சேரிக்கு வந்து கி.ரா.வைப் பார்த்துவிட்டு நீண்ட நேரம் இருந்து பேசிவிட்டுச் செல்லக்கூடியவர். அப்போது அவரது பணியிடம் நெய்வேலியா? கடலூரா? என்பது நினைவில்லை. பாண்டிச்சேரிக்கு வரும்போது  இரு சில நேரங்களில் குடும்ப உறுப்பினரோடு வருவார். கணவதி அம்மாவுக்கும் அவர்கள் அறிமுகம் என்பது தெரிந்த து,  அவருக்கும் கி.ராவுக்குமான நட்பு நீண்ட கால நட்பு. கோவில்பட்டியில் அவர் வங்கி அதிகாரியாக இருந்த காலத்திலேயே இடைசெவலுக்கு அடிக்கடி சென்று சந்தித்திருக்கிறார். இளம் வயதில் காலை நடைக்குப் பதிலாக மெல்லோட்டமாக நீண்ட தூரம் ஓடுவாராம். கோவில்பட்டியிலிருந்து இடைசெவல் வரை ஓடிவிட்டுத் திரும்பி வருவாராம். இடைசெவலில் பேச்சுத் தொடர்ச்சியில் நேரம் போவது தெரியாமல் இருந்துவிட்டு, ஓடிவந்து திருநெல்வேலி – கோவில்பட்டி இடையே ஓடும் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி வீடு திரும்புவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.  அவரைப் பார்க்க பாரத் ஸ்டேட் வங்கிச் சென்றபோது , அங்கு வரும் விவசாயிகளையும் அவர்களை எதிர்கொள்ளும் வங்கி ஊழியர்களையும் பார்த்துச் சில கதைகள் எழுதியிருப்பதாகக் கி.ரா. சொல்லியிருக்கிறார். 

பா.இராமமூர்த்தி கோவில்பட்டியிலிருந்த காலத்தில் தான் அங்கே மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்திருக்கிறார் கி.வேங்கடசுப்பிரமணியம். பின்னர் மாநில அளவில் கல்வி அதிகாரியாக மாறியிருக்கிறார். அவருக்கு முன்னோடி நெ.து. சுந்தரவடிவேல். அவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த செ. அரங்கநாயகத்தின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் எனக் கேள்விப்பட்டிருக்கிறார். அந்தப் பின்னணியோடு மைய அரசில் அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமனின் அறிமுகத்தோடு முதல் துணைவேந்தரானவர் முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன். அந்த நன்றிக்காகவே பல்கலைக்கழக வளாகத்திற்கு ஆர். வெங்கட்ராமன் நகர் எனப்பெயரிட்டார் என பா. இராம மூர்த்தி ஒரு விளக்கம் தந்தார். பலரும் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். 

நான் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தபின் அவ்வப்போது புதுச்சேரிக்குப் போவேன். பல்கலைக்கழக வேலையாகப் போகும் ஒவ்வொரு முறையும் அவர் வீட்டுக்குப் போவதில்லை. என்றாலும் ஆண்டுக்கு இரண்டு தடவையாவது அவரைப் பார்த்து விடுவேன். வீட்டில் சென்று பார்த்தால் , அவரது புதிய நூல்களையும் அவருக்கு வந்து சேரும் நூல்களையும் என்னிடம் தருவார். அப்படியொரு தடவை போன “கி.ரா. இணைநலம்” என்று சிறிய நூலொன்றைத் தந்தார். அதில் முழுக்கவும் கணவதி அம்மாவின் பண்புகளும் கி.ரா. என்னும் எழுத்தாளுமையை அவர் கவனித்துக் கொள்ளும் விதங்களும் எழுதப்பெற்றிருந்தன. அதனை எழுதியவராக ஒரு பெண்ணின் பெயர் – எஸ்.பி, சாந்தி(2012) இருந்தது.  அவர் பா.இராம மூர்த்தியின் புதல்விகளில் ஒருவர் என்பதைக் கணவதி அம்மா சொன்னார்.  

29. 

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைக்குக் க.நா.சுப்பிரமண்யம், கி.ராஜநாராயணன் போன்றோரை வருகைதரு பேராசிரியராக அழைத்தது போல சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியிலும் ஒருவரை அழைக்கலாம் என்ற பேச்சு வந்தது. அப்போது உடனடியாக நினைவில் வந்த பெயர் பிரபஞ்சன். நாடக இலக்கியம் என்றொரு தாள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. செவ்வியல் நாடகங்கள் வரிசையில் இந்திய நாடகங்கள், ஐரோப்பிய நாடகங்கள், நவீன இந்திய நாடகங்கள் என அத்தாள்களுக்குப் பெயர். இந்த த்தாள்களில் ஒன்றிரண்டைப் பாடம் சொல்வதற்காக அவரை அழைக்கலாம் என்று பேசினோம். தமிழ்நாட்டில் நடந்த பாதல் சர்க்கார் நாடகப்பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் அவர். அந்த உத்வேகத்தில் அவர் எழுதிய முட்டை, அகல்யா என்ற இரண்டு நாடகப்பிரதிகளும் கவனிக்கத்தக்க நாடகங்கள் தான் என்று சொன்னேன். பாதல் சர்க்கார் பட்டறையில் கலந்துகொண்ட முனைவர் கே.ஏ.குணசேகரன், பிரபஞ்சன் செய்முறைப் பயிற்சியில் அதிகம் ஈடுபாடு காட்டியவர் அல்ல; ஆனால் நாடகப்பிரதிகள் சார்ந்து நல்ல வாசிப்புடையவர் என்று சொன்னார். அவரை அழைப்பது என்று முடிவான பின், பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கேட்டுக் கோப்பு அனுப்பவேண்டும். அதனை ஏற்று ஒப்புதல் தரவேண்டியது துணைவேந்தர். அவரிடம் போவதற்கு முன்பே குறிப்பு எழுதும்  பிரிவு அலுவலர், துணைப்பதிவாளர், இணைப்பதிவாளர், பதிவாளர் போன்றவர்கள், “ நாடகத்துறையில் இருக்கும் ஆசிரியர்கள்: மாணாக்கர் விகித அடிப்படையில் இப்போது இருக்கும் ஆசிரியர்களே போதும்” என்று குறிப்பு எழுதிவிட்டால், அதை மாற்றும் அதிகாரம் இருந்தாலும் துணைவேந்தர்கள் அப்படிச் செய்வதற்கு யோசிப்பார்கள். அதனால் கோப்பைத் தயாரிப்பதற்கு முன்பே துணைவேந்தரோடு பேசிவிட்டால், வேலை எளிதாகிவிடும். துணைவேந்தரோடு கலந்துரையாடியதின் அடிப்படையில் இந்தக் குறிப்பு அனுப்பப்படுகிறது என்று தொடங்கிவிடலாம். அதன் பிறகு ஒருவரும் எந்தக் குறிப்பும் எழுத மாட்டார்கள்; தடைபோட மாட்டார்கள். அப்படிச் செய்யும் வல்லமை எல்லாத் துறைத்தலைவர்களுக்கும் இருப்பதில்லை. சில தலைவர்கள் ‘நான் ஏன் அவரைப் பார்க்கவேண்டும்; கோப்பைப் பார்த்து அனுமதிக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமை’ என அனுப்பிவைப்பார்கள்.இந்திரா பார்த்தசாரதியும் சில நேரங்களில் அப்படிச் செய்வார். செய்துவிட்டுத் தகவலைத் தொலைபேசி வழியாகச் சொல்லிவிடுவார். பிரபஞ்சனை அழைப்பதற்கான கோப்பைத் தயாரிப்பதற்கு முன்பே துணைவேந்தரோடு பேசுவதோடு, அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுப் பிரபஞ்சன் வருவாரா? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னேன்.  “ஆமாம்; அதுவும் முக்கியம் தான். அனுமதி வாங்கியபின் அவர் வரமறுத்துவிட்டால் சிக்கலாகிவிடும். நீங்களே பிரபஞ்சனைப் பார்த்துப் பேசிவிட்டு வந்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார் இ.பா. 

பிரபஞ்சனிடம் பேசும்போது எல்லா நாளும் துறைக்கு வரவேண்டியதில்லை. வருகைப்பதிவேட்டில் ஒப்பம் இடவேண்டியதில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் வந்து பாடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்ற கட்டுப்பாடற்ற விதிகளோடு அழைக்கிறது என்பதையும் சொல்லிவிடுங்கள் என்றார். அவரைச் சந்திப்பதற்கு முன்னால் கி.ரா.வீட்டிற்குப் போனேன். பிரபஞ்சனை அழைக்கப்போகிறோம் என்ற தகவலைச் சொன்னேன். ‘ நல்ல காரியம் இது. பாண்டிச்சேரியில் இருக்கும் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மரியாதெ செய்யுது; புதுச்சேரிக்காரங்களெ கண்டுக்கிறது இல்லென்னு ஒரு வருத்தம் இங்கெ நிறையப்பேருக்கு இருக்கு. அதே இது மாத்தும். அத்தோட அவரும் பொறுத்தமானவர்’ என்று சொல்லிவிட்டு அவர் எப்போதாவது தான் புதுச்சேரிக்கு வருவாராம். சென்னையில் தான் அதிகம் இருப்பார் என்று கேள்விப்பட்டேன் என்றார். 

 ‘பிரபஞ்சனைப் பார்க்கணும்னு முகவரியெல்லாம் வாங்கி வச்சிருக்கேன்; ஆனா அவரெ பார்க்கிற வாய்ப்பு இன்னும் வரல’ என்று சொல்லிவிட்டு, அவர் முகவரிகள் எழுதி வைத்திருக்கும் நாட்காட்டி ஒன்றை எடுத்து வந்தார். அதில் பிரபஞ்சனின் முகவரி இருந்தது. இந்த முகவரி எங்கெ இருக்குன்னு தெரியுமா? என்று கேட்டார். பெரிய மணிக்கூண்டுக்குப் பக்கத்திலெ இன்னொரு நண்பர் இருப்பார் ; நான் அங்கெ போயிடுவேன். அவர் என்னைப் பிரபஞ்சன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவார் என்று சொன்னேன். பெரிய மணிக்கூண்டிலிருந்து ரயில்வே ஸ்டேசன் போகும் சாலையில் இருப்பதாக அவர் சொன்னார்” என்று சொல்லிவிட்டு பிரபஞ்சனின் முகவரியைக் குறித்துக்கொண்டேன்.

எழுதி முடித்து நிமிர்ந்தபோது, “இந்த ஊர்லெ ஒரு இட த்துக்கு வழி சொல்லும்போது மணிக்கூண்டுகளெச் சொல்லி இட து பக்கம் அல்லது வலது பக்கம் என்று சொல்கிறார்கள் கவனிச்சீங்களா? என்று கேட்டார். இந்த மணிக்கூண்டுகள் பெரும்பாலும் பிரெஞ்சுக்காரன் வைத்த கூண்டுகள்னு நெனக்கிறேன். எல்லா மணிக்கூண்டும் நல்ல உயராமா இருக்கு. ஊருக்கே நேரங்காட்டுற மாதிரி பெரிய கடிகாரங்கள். அதில்லாமெ எல்லா மணிக்கூண்டும் மஞ்சள் வண்ணத்திலெ தான் இருக்கு. கடல் கரையோரத்திலெ இருக்கிற பிரெஞ்சுப் பகுதியும் அதே மஞ்சள்லெ உயரம் உயரமான ஜன்னல்களோட இருக்குல்ல. பிரெஞ்சு அடையாளத்தெ இங்கெ இருக்கிறவங்க பத்திரமா வச்சிருக்காங்க” என்றார். 

அவர் சொன்னதை நானும் கவனிச்சிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, பாண்டிச்சேரி நகரத்தெ விட்டு வெளியிலிருந்து வர்றவங்க மணிக்கூண்டுக்குப் பதிலா கந்தன் தியேட்டர், அஜெந்தா தியேட்டர்,முருகா தியேட்டர், ராமன் தியேட்டர், ஜீவா, ஜெயராம்,  என்று சினிமா  தியேட்டர்களைத்தான் அடையாளம் சொல்லி பாதை காட்டுகிறார். கொஞ்சம் சேரிப் பகுதியின்னா கள்ளுக்கடைகளின் எண்களைச் சொல்லுகிறார்கள் என்றேன். கடலோரங்களில் இருக்கும் மீனவர்களுக்குப் பெரும்பாலும் கள்ளுக்கடை, சாராயக்கடைகள் தான் அடையாளம் சொல்லும் இடமாக இருக்கு என்று சொன்னேன். “ நான் இன்னும் அப்படியான மனுசங்களெச் சந்திக்கலையே” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

30

ஒரு இடத்தை அதன் பூர்வகத்தோடும் மனிதர்களின் நிகழ்கால இருப்போடும்  சேர்த்துவைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் கி.ரா. அவரோட புனைகதைகளில்  இந்தக்கூறு தூக்கலாவே இருக்கும்.   ‘என்னோட கதைகள் இட த்தெ எழுதிக்காட்டுதா? இடத்திலெ இருக்கிறெ மனுசங்களெ எழுதிக்காட்டுதான்னு உறுதியாச் சொல்ல முடியாது’ என்று ஒருமுறை சொன்னார். பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு அந்த ஊரைப் பற்றிப் பலரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தைப் பின்னர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் காட்டினார். 

பிரபஞ்சனின் வீடு புதுச்சேரி ரயில்வே ஸ்டேசன் பக்கம் இருக்கு என்று சொன்னபோது, ‘அது ஸ்வெல்தாக்களோட ஏரியா’ன்னு சொல்றாங்களே? என்றார். சொல்லிவிட்டு. ‘ பிரபஞ்சனோட அப்பா காங்கிரஸ்காரர்; கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டத்தில தன்னோட தென்னந்தோப்பெ அப்படியே வெட்டிச் சாய்ச்ச தீவிரவாதியின்னு கேள்விப்பட்டிருக்கேன்; அதனாலெ அவரு ஸ்வொல்தாவா இருக்க வாய்ப்பில்லை.  ஆனா அவங்கெ சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க  ..  ’ என்றார் கி.ரா.  

பாண்டிச்சேரியின் பழைய நகர எல்லைக்குள் மூன்றுவகையான வீடுகள் உண்டு. கடற்கரைச்சாலை தென் -வடல் சாலை. ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குத் தென்வடலாகப் போகும் அந்தப் பெரிய சாலைக்கிணையாக நான்கு சாலைகள் தென்வடலாகவே போகும். பெரும்பாலும் பிரெஞ்சுப்பெயர்களைக் கொண்ட அந்தச் சாலைகளில் இருக்கும் கட்டடங்கள் பிரெஞ்சுப் பாணிக்கட்டடங்கள். உயரம் கூடிய விதானங்களும் சாளரங்களும் மென்மஞ்சளும் வெண்மையுமான வண்ணங்களும் அதன் அடையாளங்கள். பிரான்சில் இருக்கும் உணர்வைத் தரக்கூடிய கட்டடங்களோடு சாலைகளும் மனிதர்களும்… அந்தப் பகுதிக்குள் கூடுதல் சத்தமும் இரைச்சலும் இருக்கும் ஒரே பகுதி பாரதியார் பூங்காவும் அதனைச் சுற்றி இருக்கும் சட்டசபை, கவர்னர் மாளிகை, வணிக அவை, காந்தி திடல் பகுதிகள் தான். மற்ற பகுதிகளில் பிரெஞ்சு கல்விநிலையங்கள், தூதரக அலுவலகங்கள், பிரெஞ்சுக்கார்கள் இப்போதும் வந்து தங்கிச்செல்லும் வில்லாக்கள் என அமைதி தவழும் இடங்கள்.  வெள்ளைநகரம் என அழைக்கப்படும் அந்தப் பகுதியைப் பிரிப்பதுபோல ஒரு கால்வாய் ஒன்று தென்வடலாக ஓடும்.  

கால்வாய்க்கு மேற்கே இருக்கும் சாலைகள் பூர்வீகப் பாண்டிச்சேரிக்காரர்கள் வாழும் தெருக்களைக் கொண்டது. எல்லாச்சாலைகளும் கடற்கரையை நோக்கிச் செல்லும் விதமாக கிழக்கு மேற்காக நீளும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சாலையும் ஒருவழிப்பாதையாக அமைக்கப்பட்ட நகரம். நகரத்திற்குள் பேருந்து,லாரி போன்ற கனரக வாகனங்கள் நுழைந்துவிட முடியாது. சந்தைக்கும் கடைகளுக்கும் தேவையான காய்கறிகள், மீன்கள், சரக்குகளை இறக்கும் கனரக வாகனங்கள் இரவுநேரத்தில் வந்து இறக்கிவிட்டுச் செல்லும் விதமாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் உண்டு. கிழமேலாக இருக்கும் சாலைகளுக்கு இணையாக ரயிலடியில் தொடங்கி ஒரு சதுரத்தில் சின்னச்சின்னத் தெருக்களில் இரட்டைக்குடியுரிமை கொண்ட ஸ்வொல்தாக்களின் வீடுகள் உண்டு. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இன்னும் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றவர்கள். அவர்களின் முன்னோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி அங்கேயே தங்கியிருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தங்களைப் பிரெஞ்சுக் குடிகளாக க்கருதிக்கொள்வதில் பெருமைகொள்பவர்கள். அந்த குடும்பத்தில் பெண்ணெடுத்துத் திருமணம் செய்துகொள்ளும் ஒருவர் இப்போதும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்று பிரான்ஸுக்குப் போய்விடலாம். அந்த வசதியைப் பெற்றவர்களேயே ஸ்வொல்தாக்கள் என்று அழைப்பார்கள்.

கி.ரா.வருவதற்கு முன்பே நான் புதுச்சேரிக்குப் போயிருந்தாலும் இந்த விவரங்களையெல்லாம் அவர் வாயிலாகவே நான் அறிந்தேன். அவரைச் சந்திக்க வருபவர்களிடம் கேட்டுக்கொண்ட தகவல்களைப் பார்த்துத் தெரிந்துகொண்ட ஆர்வத்தில் அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் என்னை அழைத்துக் கொண்டு அவ்வப்போது போவார்.  

தொடக்கத்தில் நானும் கி.ரா.வும் தங்கியிருந்த முத்தியால் பேட்டை கடலோரம் இருக்கும் பகுதி.   நேராகக்கடல் நோக்கி நடந்தால் வைத்திக்குப்பம் என்ற மீனவர் குடியிருப்புகள் வழியாகக் கடலுக்குப் போகலாம். ஆனால் அங்கே நடக்க முடியாது. நல்ல காற்றும் கிடைக்காது.  கடல்கரையைத் திறந்தவெளிக்கழிப்பறையாகப் பயன்படுத்துவார்கள் மீனவர்கள் . அத்தோடு புதுச்சேரி டிஸ்ட்லரிஸின் சாராயக்கழிவும் கடலில் கலந்து நாற்றம் மூக்கைத் துளைக்கும். அதனைத் தாண்டி மக்கள் நடப்பதற்காகப் பெரும்பெரும் கற்களைக் கொட்டித் தடுப்புகளை உண்டாக்கிக் கடலைத் தடுத்திருப்பார்கள். 

புதுவைத் தலைமைச்செயலகம் தொடங்கி பிரெஞ்சுக் குவர்னர் ட்யூப்ளே சிலை இருக்கும் சிறிய பூங்கா வரை ஒருகிலோ மீட்டர் நீளத்திற்குத் தளக்கற்கள் பதித்திருக்கும். இடையில் ஆஜானுபாகுவாக மகாத்மா சிலையாக நிற்பார். முத்தியால் பேட்டையிலிருந்து கடற்கரைக்கு நடந்தே போய்விடுவோம். நான் தினசரி காலை வேக நடைக்காகப் போவேன். சில நாட்கள் கி.ரா.வும் வருவார்.அவர் வந்தால் வேகநடை கிடையாது. மென்னடைதான். நடை பாதை தொடங்கும் தலைமைச்செயலகப்பகுதியில் இருக்கும் பூங்காவில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். புதுச்சேரிக்கு வரும் ஐரோப்பியர்கள் கடற்கரைக்கு வருவதும் காலையில் தான்.   அலைவந்து மோதும் பாறைகளின் மீது அமர்ந்து யோகா செய்யும் ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் காலையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.யோக நிலையிலிருப்பவர்களில் பெரும்பாலோர் தவம்செய்ய வந்த சந்நியாசிகள் போலத் தான் இருப்பார்கள். கடலுக்குள்ளிருந்து சூரியன் செக்கச்சிவந்த பந்தாய் மிதந்து வருவதற்கு முன்பே வந்து அமர்ந்துவிடுவார்கள். 

கடற்கரைச் சாலையிலிருந்து மேற்கு நோக்கிப் போகும் ஒரு சாலையில் மூன்று நிமிடம் நடந்தால் அரவிந்தர் ஆசிரமம் போய்விடலாம். அதற்கு நேரே இருக்கும் வீதியில் தான் மணக்குள விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பகுதியில் தானே பாரதியும் வ.வே.சு. அய்யரும் சுற்றித்திரிந்திருப்பார்கள் என்று ஆரம்பித்துக் கடந்த காலத்திற்குள் அழைத்துப் போய்த் திரும்பக்கொண்டுவருவார் கி.ரா.

Series Navigation<< ”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.