1.
கன்றுக்குட்டி மேயும்
குப்பைத் தொட்டியில்
நெகிழிப் பை சுற்றிய பூக்கோசு

2.
கறிக்கடையின் கூண்டுக்குள் வாழும்
நாட்டுக் கோழிகளின் தானியங்களைக்
கொத்தப் பார்க்கிறது ஒரு சிட்டுக்குருவி
3.
இந்த வாகன நெரிசலில்
மேம்பாலத்திலிருந்து இறங்குகிறது
அத்தி நிற அந்திச் சூரியன்
4.
ஒரிகமி ஆர்கிட்
ஜன்னலுக்கு அந்தப் பக்கம்
மழையின் நறுமணம்
5.
பூச்சிகளின் ரீங்காரம்
ஊடாடும் நிலா
வலுவாகும் அந்தி
6.
அதிகாலை ஜன்னல்
இன்னும் இருக்கும் பனியின் முற்றுகை
ஒரு பழைய வருடம் முடிகிறது
7.
அதிகாலை ரயிலுக்குக் காத்திருக்கும்
பயணியர் முகங்கள் மேல்
மலர்ந்த இன்றைய சூரியன்
8.
அந்திச் சுவரில் ஓர் ஆதிச்சித்திரம்
அழியுந்தோறும் இருளின்
சைகை முழுமை பெறுகிறது
9.
சோப்புக்கட்டியில் சிக்கிய
ஓரம் வெளுத்த
ஒற்றை மயிரிழை
10.
பவழமல்லிகளின் நறுமணம்
இந்த அந்திக் காற்றில் தவழ்கிறது
திடுக்கிடப் பறக்கும் வௌவால்
***