சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்

This entry is part 2 of 3 in the series தீர யோசித்தல்

“ஆய்ந்தறிந்து பேசுதல்” என்ற பாட்காஸ்ட்டை நடத்துபவரும், செயல்முறை ஆய்வறிவுக்கான லாபநோக்கில்லாத மையம் ஒன்றை பெர்க்லியில் நிறுவத் துணை நின்றவருமான கேலெஃப், இந்தக் கருது பொருளைப் பற்றி எழுதிய புத்தகத்தில் ‘ஆய்தறிதல்” என்ற சொல்லை மிக அரிதாகவே பயன்படுத்துகிறார். மாறாக அவர், “சாரணர் மனோபாவம்” ஒன்றை விவரிக்கிறார். அது நமக்கு எப்போது தவறு செய்கிறோம் என்று அறியவும், எங்கே நாம் தவறவிடுகிற இடங்கள் உள்ளன என்று தேடவும், நம் முன் அனுமானங்களைச் சோதித்து நம் பாதையை மாற்றவும் உதவும் என்கிறார். (“போர்வீர மனோபாவம்” என்பது இதற்கு மாறாக, என்ன விலை கொடுத்தேனும் நம் நிலைபாடுகளைப் பாதுகாக்க நம்மை ஊக்குவிக்கிறது.) கேலெஃப் ஆய்ந்தறிதலை மேலும் கருக்காகச் சரியான நிலைகளை அறிய உதவும் ஒரு செயல்முறை என்று பார்க்கிறார். அறிதுறை மேலும் பரிணாம உளவியலாளரான ஸ்டீவன் பிங்கர், அதையே கருவி நோக்கோடு பார்க்கிறார், “அறிவுத் திரட்டலை சில குறிக்கோள்களை அடையப் பயன்படுத்தும் திறமை,” என்பது அவர் விளக்கம். இந்த வரையறுப்பின்படி, ஆய்வறிவுள்ள நபராக நாம் இருக்க, நாம் விஷயங்களை அறிந்திருக்க வேண்டும், நாம் சிலவற்றை விரும்ப வேண்டும், நாம் வேண்டுவதை அடைய நமக்குத் தெரிந்தவற்றை நாம் பயன்படுத்த வேண்டும். நோக்கங்கள் இதில் முக்கியமானவை: ஒரு நபர் ஒரு செயல்திட்டத்தை அகஸ்மாத்தாகக் கண்டுபிடித்ததால் ஒரு பிரச்சனையைத் தீர்த்தார் என்றால் அது ஆய்தறிதலாகாது என்பது பிங்கரின் வாதம். 

உள்நோக்கி யோசித்தல் என்பது ஆய்ந்தறிதலுக்குத் திறவுகோல். அலசி அறியும் ஒருவர் பயில வேண்டியது என்ன என்று ஸ்டீஃபன் ஃப்ளெமிங் என்ற நரம்பியலாளர் தன் “நோ தைஸெல்ஃப்: த ஸைன்ஸ் ஆஃப் ஸெல்ஃப் அவேர்னெஸ்” (பேஸிக் புக்ஸ் பிரசுரம்) விளக்குகிறார். மீ-அறிநிலை என்று அதை அவர் அழைக்கிறார். அது, ‘நம் சிந்தனையைப் பற்றி நாமே யோசிக்கும் திறன்’ என்ற பொருள் கொண்டது. அது  “நொய்மையானதும், எழிலுள்ளதும், வெளிப்படையாகச் சொன்னால் மனித புத்தியின் அசாதாரணமான குணாம்சமும் ஆகும்.” மீ-அறிநிலை என்பது வாழ்வின் துவக்க நிலையில், நம் விழைவுகளுடன் நம் உடலசைவுகளைப் பொருந்தச் செய்ய நாம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, வெளிப்படுகிறது. ( காலை உணவு வைத்திருந்த மேஜையிலிருந்து தன்னுடைய கோப்பையைத் தட்டி விட்ட என் சிறு பையன் “நான் ஏன் அதைச் செய்தேன்?” என்று என்னிடம் சமீபத்தில் கேட்டான்.) பிற்பாடு, கால்ஃப் விளையாட்டுக்காரர் ஒருவருக்கு, தன் முதல் வீசி அடித்தலுக்கும், இரண்டாவதுக்கும் இடையே உள்ள சிறு வேறுபாடுகளைக் கவனிக்கவும், பிறகு அவளுடைய மூன்றாவது வீச்சை நுணுக்கமாக மாற்றி அமைக்கவும் அது உதவுகிறது. நம் புத்தியின் செயல்களைத் தொடர்ந்து போகவும் அது நமக்கு உதவ முடியும். வெற்றிகரமான ஒரு மாணவன், தான் எதை எல்லாம் இன்னும் படிக்க வேண்டும், எவற்றைப் போதுமான அளவு படித்தாகி விட்டது என்பதை மீ-அறிநிலையைக் கொண்டு தெரிந்து கொள்கிறான்: சாரமாகச் சொன்னால், அவனுடைய மூளையின் சில பகுதிகள் இதர பகுதிகளைக் கண்காணிக்கின்றன. 

அன்றாட வாழ்வில், மீ- அறிதலுக்கு இருக்கும் மிகப்பெரும் தடை என்பது, “நம் திறனின் லாகவத்தைப் பற்றி நமக்கிருக்கும் கற்பனை”என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். நாம் ஏற்கனவே அறிந்த செயல்களைச் செய்கையில், நம் செயல்பாட்டை நாம் அத்தனை நுணுகி நோக்குவதில்லை; இதுதான் நாம் வண்டிகளை ஓட்டுகையிலோ, துணிகளை மடிக்கையிலோ, நாம் ஏற்கனவே பலமுறை யோசித்தவற்றை மறுபடி யோசிக்கையிலோ நடக்கிறது. ஒரு பரீட்சைக்குப் படிக்கையில் நமது குறிப்புகளை மறுபார்வையிடுவது என்பது, ஒரு மோசமான கருத்து என்று ஃப்ளெமிங் எழுதுகிறார், ஏனெனில் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு பாதையில் வண்டி ஓட்டுவதை ஒத்த, புத்தியில் நடக்கும் செயல் அது. “மாறாக – நம்மை நாமே சோதித்துக் கொள்வது என்பது – அதாவது, முந்தைய பரீட்சைக் கேள்விகளுக்குப் பதில் எழுத நாம் முயல்வதும், நமக்குத் தெரிந்தவற்றை நாம் எழுதிப் பார்ப்பதும்- அப்படி குறிப்புகளை மறுபார்வையிடுவதை விட மேலான தாக்கமுள்ள செயல்கள்  என்று பல சோதனைகள் மறுபடி மறுபடி நிறுவி இருக்கின்றன,” என்று அவர் எழுதுகிறார். இதில் தந்திரம் என்னவென்றால், நாம் சரளமாகச் செய்யக்கூடிய நிலையை அடைந்து விட்டோம் என்ற மயக்கத்தை உடைப்பதுதான், மாறாக, “நம் அறியாமையைப் பற்றி நன்கு அறிவதை” முயன்று பெறுவதுதான். 

மீ- அறிதல் என்பது ஒரு செயல்திறன் என்று ஃப்ளெமிங் எழுதுகிறார். சிலர் இதில் மற்றவர்களை விடத் திறமை கூடியவர்களாக இருப்பார்கள். “ ‘நம் புத்திகளின் மீ-அறிதிறனை’ சரியாக அளவு குறித்து வைத்தால், நம் செயல் திறமையை நாம் மேம்படுத்தவியலும், அதன் வழியே கூடுதலாக தீர யோசிப்பவர்களாக முடியும்,” என்று கேலெஃப் நம்புகிறார். தன் ‘அளவு குறித்தல் பயிற்சி’ என்ற புத்தகத்தில் அவர் வாசகர்களுக்கு ’இது மெய்யா-பொய்யா’ என்று கேட்கும் கூற்றுகளின் தொகுப்பு ஒன்றை அளிக்கிறார். ( “பாலூட்டிகளும், டைனொசார்களும் சமகாலத்தில் வாழ்ந்தனர்”;  “வைடமின் ‘சி’ குறைபாட்டால் ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது” போன்றன இந்தக் கூற்றுகள்); ஒவ்வொரு கூற்றின் ஏற்புத் தன்மையைப் பற்றி நாம் தீர்மானிக்கும்போது, நம் தீர்மானத்தை நாம் எத்தனை தூரம் நம்புகிறோம் என்பதையும் சொல்ல வேண்டும்- ஐம்பத்தைந்து, அறுபத்தைந்து, எழுபத்தைந்து, எண்பத்தைந்து அல்லது தொண்ணூற்றி ஐந்து சதவீதம் நம்புவதில் எது நம் தேர்வு? கருக்காக அளவு குறிக்கத் தெரிந்த ஒரு நபர், அவரது விடைகளில் எழுபத்தி ஐந்து சதவீதம் நம்பிக்கை தெரிவித்திருந்தவற்றில் எழுபத்தி ஐந்து சதவீதம் சரியான விடையைக் கொடுத்திருப்பார். நானும், நிறைய பயிற்சிக்குப் பிறகு, “கச்சிதமான அளவு குறிப்பதை” எட்டி இருந்தேன்: நான் இன்னமும் சில பதில்களைத் தவறாகவே தீர்மானித்தேன், ஆனால் அவற்றில் நான் எத்தனை தூரம் தவறாக இருப்பேன் என்பதை நான் சரியாகத் தீர்மானம் செய்திருந்தேன். 

அளவு குறிப்பதில் நிறைய முறைகள் இருக்கின்றன.  “நிகர் பணய” முறை, என ஒன்றைக் குறிக்கும் காலெஃப், தீர்மானங்களை அடையும் முறைகளில் நிபுணரான டக்ளஸ் ஹப்பர்ட் என்பார் அதை வரையறுத்தார் என்கிறார்.  பத்தாயிரம் டாலர்களை வெல்ல உங்களுக்கு முன் இரண்டு வழிகள் வைக்கப்படுகின்றன என்று கற்பனை செய்யுங்கள்: நீங்கள் ஒரு கூற்று மெய் என்று பணயம் வைக்கலாம் (உதாரணமாக, தானியங்கிச் செல்லும் கார்கள் ஒரு வருடத்துக்குள் சாலைகளில் ஓடத் தொடங்கும் என்ற கூற்று) அல்லது கண்ணை மூடிக் கொண்டு ஒரு பெட்டியினுள்ளே கையை விட்டு, அதில் இருக்கும் நான்கு பந்துகளில் இருந்து, குறியிடப்பட்ட ஒரு பந்தை எடுக்கலாம். நீங்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வீர்களா, இல்லை பெட்டிக்குள் கை விடுவீர்களா? (நான் அந்தப் பெட்டிக்குள் கைவிடுவதில் உள்ள வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பேன்.) இப்போது அந்தப் பெட்டியில் இருபத்தி நான்கு பந்துகள் இருப்பதாக வைப்போம், உங்களுடைய தேர்வு மாறுமா? அந்தப் பெட்டியில் இருக்கும் பந்துகளின் எண்ணிக்கையைப் பலவிதமாக மாற்றிக் கற்பனை செய்து பார்த்தால், அந்தக் கூற்றை எவ்வளவு தூரம் நீங்கள் நம்புகிறீர்கள் என்பது உங்களுக்குப் புலப்படலாம். காலெஃபிற்கு, தாமே இயங்கும் கார்கள் கூடிய சீக்கிரம் கிட்டும் என்ற கூற்றின் மீதுள்ள அவருடைய நம்பிக்கைக்குச் சமமான ‘பெட்டி’யில் ஒன்பது பந்துகள் இருக்கும். இது அவருக்கு அந்த எதிர்பார்ப்பின் மீது பதினோரு சதவீதம் நம்பிக்கை உள்ளது என்று சுட்டும். இத்தகைய உத்திகள் நம் அறிவுச் சேமிப்பு நாம் நினைப்பதை விட நுண்மையான புள்ளிகள் கொண்டது என்பதைத் தெளிவு செய்யும்; நாம் மேலும் நெருங்கி நோக்க வேண்டும், அவ்வளவுதான். ஆனாலும், இப்படி நோக்குவதில் நிஜத்தில் இல்லாத விவரம் ஒன்றை இருப்பதாக நாம் காணுவதும் நடக்கலாம். 

நமக்கு என்ன தெரியும் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வது என்பது, தீர யோசிப்பதில் முதல் நிலைக் கற்றல் போல. இன்னும் மேல்நிலைப் பாடத்தில் நம் அறிவுத் திரட்டில் என்ன மாறுதல்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம். நம்மில் அனேகர், புதுத்தகவலை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் எதையும் நேரடியாகத் தெரிந்து கொள்வதில் நிற்கிறோம். தீர யோசிப்பவர்களும் அதைச் செய்கிறார்கள், ஆனால் தன்னை விழிப்போடு அறிந்து கொண்டபடி செய்கிறார்கள். தம் புத்தியில் உள்ள ‘வரைபடங்களை’ அவதானிப்போடு மாற்றி வரைந்து கொள்கிறார்கள். இந்த முயற்சிக்கு எது சவால் என்றால், புதுப் பரப்புகளைப் பற்றிய தகவல்கள் பற்பல இடங்களிலிருந்து மிதந்து வருகின்றன; புது உண்மைகளும், கருத்துகளும் எல்லாம் ஒரே வகை முக்கியத்துவம் கொண்டவை அல்ல. சமீபத்துப் பத்தாண்டுகளில் தீர யோசிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளரும், ஒரு பாதிரியுமான தாமஸ் பேய்ஸ் என்பாரின் சிந்தனையைப் பின்பற்றத் தொடங்கி உள்ளார்கள். பேயெஸிய தர்க்கம் என்று அழைக்கப்படுவது, இப்போதைய வழமையாக, மோஸ்தராக ஆகி விட்டது- இது ஒரு குறிப்பிட்ட வகைச் சிந்தனை உத்தி, அதற்கான தனிவகைக் கலைச் சொற்கள் கூட உருவாகியுள்ளன. 

பேய்ஸியத் தர்க்க முறையை விளக்கப் பல வழிகள் உண்டு- மருத்துவர்கள் அதை ஒரு வழியில் கற்கிறார்கள், புள்ளியியலாளர்கள் வேறு வழியில் கற்கிறார்கள்- ஆனால் அடிப்படைக் கருத்து ஒன்றுதான். புதுத் தகவல் கிட்டுகையில், பழைய தகவல்களை ஒட்டு மொத்தமாக மாற்றி விட நாம் விரும்புவதில்லை. மாறாக நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைத் தேவைப்பட்ட அளவுக்கு மாற்றி அமைக்கவே நாம் விரும்புகிறோம். என்ன அளவு மாற்றி அமைக்கிறோம் என்பது, நம்மிடம் ஏற்கனவே உள்ள அறிவுச் சேமிப்பின் மீதும், புதுத் தகவலின் மதிப்பு பற்றியும் நமக்கு உள்ள நம்பிக்கையின் எடையைப் பொறுத்தது.  பேய்ஸியச் சிந்தனை, எதுவும் என்ன அளவு உண்மை என்பது பற்றிய‘முந்தைய” நிகழ்தகவு (ப்ராபப்லிடி) என்று அவர்கள் அழைப்பதிலிருந்து துவங்குகிறது, அதற்குப் பிறகு மாற்றுவது அவசியமா, அப்படி என்றால் அதை என்ன அளவு மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆராய்வது நடக்கிறது. 

மார்பகப் புற்று நோய் உள்ளதாக அறிகிற ஒரு நோயாளியை உதாரணமாக எடுப்போம்- பிங்கரும், இதர ஆய்ந்தறிவோரும் சகஜமாகப் பயன்படுத்துகிற ஓர் உதாரணம் இது. சொல்லப்படும் உண்மைகள் எளியவை. ஜனத் தொகையில் பெண்களிடையே மார்பகப் புற்று நோய் தோற்றம் என்பது- அதாவது ‘ஆதார மதிப்பு’ என்பது- ஒரு சதவீதம்தான். புற்று நோய் இருக்கிறது என்றால், அதற்கான சோதனை அதை தொண்ணூறு சதவீத நேரம் சரியாகக் கண்டு பிடித்து விடும்: அதாவது புற்று நோய் இல்லாத போது, இருப்பதாகத் தவறாகக் கண்டு பிடிப்பதை அந்தச் சோதனை 9% தடவைகள் செய்யும். இப்போது ஒரு பெண்ணுக்கு அந்த நோய் இருப்பதாக சோதனை சொல்கிறது என்று வைப்போம். அவருக்கு அந்தப் புற்று நோய் இருக்கிறது என்பதற்கான வாய்ப்பு எத்தனை என்று நாம் கருதுவோம்?

நிஜ வாழ்வில் மருத்துவர்களாக இருப்பவர்கள் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று பிங்கர் கவனித்து நமக்குத் தெரிவிக்கிறார். அனேகர் அந்தப் பெண்ணுக்குப் புற்று நோய் இருப்பதற்கு 90% வாய்ப்பு உள்ளதாகச் சொன்னார்களாம். ஆனால் நிஜத்தில் அவருக்கு அந்த நோய் இருக்க வாய்ப்பு என்பது சுமாராக 9% தான். மருத்துவர்கள் தவறான விடை தரக் காரணம், அவர்கள் புதுத் தகவலுக்கு (சோதனை முடிவுகளுக்கு) அதிக எடை கொடுத்து, அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த தகவலுக்கு– அதாவது மார்பகப் புற்று நோய் என்பது ஒப்பீட்டில் எழுவதற்கு மிகக் குறைவான வாய்ப்புதான் உள்ளது என்பதற்கு- அத்தனை எடை கொடுக்காமல் விட்டதுதான்.  இதை உள்ளூகமாக அறிய, நம்மிடம் உள்ள உண்மைகளின் அமைப்பு ஒழுங்கைக் கலைத்துப் பொருத்துவது அவசியம். அப்போதுதான் புதுத் தகவல் முக்கியமான பீடத்தைப் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும். ஒரு துவக்கமாக, நாம் ஆயிரம் பெண்களைச் சோதித்ததாக நினைத்துக் கொள்ள வேண்டும்: அவர்களில் பத்து பேருக்கு இந்தப் புற்று நோய் இருக்கலாம். ஒன்பது பேருக்கு அது இருப்பதாகச் சோதனை தெரிவிக்கும் (பாஸிடிவ் ரிஸல்ட்). மீதம் உள்ள தொள்ளாயிரத்துத் தொண்ணூறு பெண்களில், எண்பத்து ஒன்பது பேருக்குப் புற்று நோய் இருப்பதாகச் சோதனை தவறாகச் சொல்லும். இப்போது நாம் நோய் இருப்பதாக முடிவு ((பாஸிடிவ் ரிஸல்ட் என்று) தெரிவிக்கப்பட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி யோசிக்கலாம். அவர் இப்படி ஒரு முடிவைச் சரியாகத்தான் பெற்றார் என்பதைக் கணக்கிட, நிஜத்தில் நோய் இருந்து, நோய் இருப்பதாக (பாஸிடிவ் ரிசல்ட்) பெற்ற மொத்த முடிவுகளின் எண்ணிக்கையை (இந்த எண்ணிக்கை ஒன்பது), மொத்தம் நோய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட முடிவுகளின் எண்ணிக்கையால் (இது தொண்ணூற்று எட்டு), வகுக்க வேண்டும். இது சுமார் ஒன்பது சதவீதம் என்று தெரிய வரும். 

பேய்ஸியச் சிந்தனை முறை என்பது புள்ளியியலுக்கு ஓர் அணுகல், ஆனால் நாம் அதை எல்லா விதமான புதுத் தகவல்களின் அர்த்தத்தை அறியப் பயன்படுத்தலாம். 26 செப்டம்பர் 1983 அன்று அதிகாலையில், சோவியத் யூனியனின் முன்கூட்டி எச்சரிக்கை செய்யவிருக்கும் அமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து கண்டம் தாண்டித் தாக்கும் ஏவுகணைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. ஸ்டானிஸ்டாவ் பெட்ராஃப், நாற்பத்தி நான்கு வயதானவர், அன்று கண்காணிப்பு வேலையில் இருந்தவர்,  அந்த எச்சரிக்கையைப் பார்த்தார். அதைத் தன் மேலாளர்களுக்கு உடனே தெரிவிக்க அவர் கடமைப்பட்டிருந்தவர், அவர்களோ உடனே பதில் தாக்குதலாக அணு ஆயுதங்களை ஏவி இருக்கக் கூடும். பெட்ராஃப் அனேகமாக பேய்ஸின் பெயரைக் கேட்டிருக்க மாட்டார், இருந்தாலும் அவர் பேய்ஸியச் சிந்தனை முறையைப் பயன்படுத்தினார்.  புதுத் தகவல் மட்டுமே தன்னுடைய மறுவினையைத் தீர்மானிக்க அவர் அனுமதிக்கவில்லை. எந்த இரவிலும் இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் வாய்ப்பு, அதன் நிகழ்தகவு,  மிகக் குறைவு என்று அவர் தர்க்கித்தார், அந்த வாய்ப்பு என்பது அங்கிருந்த கருவிகள் தவறாக இயங்குவதற்கான வாய்ப்புக்கு , நிகழ்தகவுக்கு, ஈடானது என்று அவர் முடிவு செய்தார். அதே நேரம் அந்த எச்சரிக்கையின் தரத்தைச் சீர் தூக்குகையில் அது சில விதங்களில் நம்பகமற்றதாக இருப்பதைக் கவனித்தார். (மொத்தம் ஐந்தே ஏவுகணைகள்தாம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன – முதல் தாக்குதல் என்பது அனைத்தையும் அழிக்கும் தாக்குதலாகத்தான் இருக்கும் இல்லையா? ) அவர் அந்த எச்சரிக்கையை மேலாளர்களுக்குத் தெரிவிக்காமல் இருக்கத் தீர்மானித்தார், உலகைக் காப்பாற்றினார். 

(தொடரும்)

ஜாஷுவா ராத்மான்

(தமிழாக்கம்: மைத்ரேயன்)

[ இக்கட்டுரை நியூயார்க்கர் வாரப் பத்திரிகையின் ஆகஸ்ட் 23, 2021 தேதியிட்ட இதழில் பிரசுரமாகியது.]


[i] இதை மூல ஆசிரியர் ரேஷனாலிடி 101 என்று சொல்கிறார். அமெரிக்கக் கல்லூரிகளில் புது முக மாணவர்கள் எடுக்கும் துறை அறிமுகப் பாடங்கள் பொதுவாக 101 என்று இலக்கமிட்ட வகுப்புகளில் நடத்தப்படும்.

Series Navigation<< தீர யோசித்தல்தீர யோசித்தல் – இறுதிப் பாகம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.