கிஞ்சுகம்

தண்டகத்தின் நீர், நிலம், அனல், வளி, வெளி என அனைத்தும் சமநிலை குலைந்துகொண்டிருந்தன. அது ஆழத்தில் ஈரத்தைப் பதுக்கி உயிர்கள் வாழும் வறல்நிலக்காடு. சருகுகள் செறிந்த நிலத்தை சுழல்காற்று எழுப்பியது. சருகுகள் விசைகொண்டு எழுந்து பறந்து அலைந்து சுற்றின. அன்று கானக இருளில் ஆதவன் தீட்டிய பொன்னொளியில் மயங்கிய பறவைகள் தம் மணிக்கண்களை படபடத்துக்கொண்டு சிறகினடியிலிருந்த குஞ்சுகளை அணைத்து சிறகுகளை செறித்துக்கொண்டன. மண்ணில் விழும் ஔியிலிருந்து எழுந்து பறக்கும் காற்றுவரை வழக்கத்திற்கு மாறாக முறுக்கிக்கொண்டிருந்தன. 

அவனை ஒருபுறம் அறுத்து வீசியதைப்போல வலதுபுற உடல் துடித்துக்கொண்டிருந்தது. அன்று இளம்காலை பொழுதில் அயோத்தி அரண்மனையிலிருந்து வெளியேறி பின்னிரவில் கங்கையை கடந்த பொழுதில் எங்கிருந்தோ வந்து அவனை பற்றிக்கொண்ட துடிப்பு அது… சீதையை கானகத்தில் தொலைத்துவிடக்கூடாது.

எங்காவது தொலைந்து விடுவாள் என்ற பதற்றத்திற்கு மாற்றாக அந்தகணத்திலிருந்து ராமனின் கரங்கள் அனிச்சையாக சீதையை நோக்கி நீளத்தொடங்கின. அவள் கரங்களை பற்றிகொண்டே வானம் பார்த்தான். நிலத்தில் நடந்தான். மண்ணில் அமர்ந்து அமைந்தான். அவன் ஊழ்கம் நிலைக்கும் அச்சு அவள் பிடி. அவன் எழுந்து பறக்கும் அந்தரத்தில் அவன் சிறகு நிலைக்கும் ஈர்ப்பு அவள். அவள் கரம் அவன் உறக்கம் படர்ந்து படியும் நினைவின் வெளி.

“சீதா…”

அவன் அழைப்பு பஞ்சவடிக் குடிலிற்கு வெளியே எழுந்து தண்டக வனமெங்கும் ஒலித்து நிறைந்தது. 

 கிளிமொழியெனக் காற்று சீதா… சீதா என்று மிழற்றி அதிர்ந்தது.  தண்டகத்தின் அனல் வெயிலும், வெயில் மின்னும் முரட்டுஇலைகளும் படபடத்து அசைந்தன. நிலத்தின், காற்றின் சூடு ஏறிக்கொண்டே செல்லும் ஏறுபொழுது அது. 

அவன் சரளை கற்களின் வெளியில் கால்வைத்து நடந்தான். தன்கிளைகளை இழந்து நுனியில் மட்டும் கிளைத்திருந்த அந்த அரசமரம் காற்றுக்கு தலைகொடுத்திருந்தது. சிறுநீலப்பறவை ஒன்று தன் சிறகழிய அதன் சொற்பக் கிளைகளைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது.

அன்றைய காலைப்பொழுதில் சூரியன் உருக்கும் பொன்ஔியில் மான்கூட்டம் ஒன்று மின்னிஓடியது. சீதை சிற்றோடையில் குளித்துக் கரையேறும் போது முதலில் கண்களில், முகத்தில் பட்டுத்தெறித்தது அதன் ஔி. அவள் முதலில் ஆதவனின் கீற்றென்று நினைத்து புன்னகைத்தாள். காட்டின் மொத்தஔியையும் வாழையிழை சருகில் ஏற்றியது போன்ற நிறம் கொண்டிருந்த அந்த ஔிமான் பின்தங்கி விழிவிரித்து நின்றது. அது யுகாந்திரங்கள் கடந்து அவள் மடி நிறைத்து கிடந்து அமுதுண்டு அவளை நோக்கி புன்னகைத்த விழிகள் என்று மயங்கிய அவள் உள்ளத்திற்கு ஆம் என்று சிலிர்த்தது அவள்  உடல். பற்றியிருந்த அவன் கரங்களை விடுவித்தாள் சீதா. முன்சென்றாள். மருளும் விழிகளை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தவளை எட்டிபற்றிய ராமனின் கரங்களை உதறி உருளும் அதன் விழிகளை நோக்கி நீட்டினாள்.

இன்னும் அவன் கரங்களில் அவள் தண்ணென, சிறு ரேகைகளின் மென்உராய்வு என எஞ்சியிருந்தாள். ராமன் கரங்களால் காற்றை ஓங்கி வீசி நடந்தான். கருங்கற்கள் உருளும் ஓசை கேட்டு பாறை இடுக்குகளில் ஓணான்கள் தலைத்தூக்கிப்பார்த்தன. தொலைவில் மெல்ல உறுமல்கள் கேட்கத்தொடங்கின.

குழைந்த காற்றால் ராமன் நின்ற இடத்திலிருந்த கோவைக்கொடி படபடத்தது. அதன் இலைகள் சுற்றியிருந்த புங்கைமரத்தின் பட்டைகளில் ஒடுங்கி படிந்தன. எருக்கம் செடிகளின் கருநீல மொட்டு நுனிகள் பட்டென்று வெடித்து திறந்தன.

மண்ணுடன் இணைந்த புழுபூச்சியினங்களும், விண்ணுடன் இணைந்த பறவைகள் இனங்களும் நிலத்தின், காற்றின் அதிர்வை உணர்ந்து பதைத்தன. சிறகின்மை ஒடுங்கியது. மண்ணுயிர்கள் மண்ணில் மேலும் படிந்து ஊடுருவின. சிறகுகள் அலைந்து பறந்து பறந்து பரிதவித்து அலைகழிந்தன.

ஆரண்யவாழ்வில் அவளின் அந்தரங்கத்தோழி, அருகாமைத் தோழிகள், அறைத்தோழிகள், வாயில் தோழிகள், மாளிகைத்தோழிகள், அரண்மனைத் தோழிகள், பல்லக்குத் தோழிகள் என அத்தனை தோழிகளாகவும், அத்தனை கரங்களாகவும் பல்கிப்பெருகி நின்ற அண்ணலின் கரங்கள் அத்தனையும் காற்றின் அனலை ஊதிப்பெருக்கின.

சருகுகளைப் பற்றிப் பெருகக் காத்திருக்கும் காற்றின் கனல்.  எங்கோ ஆழத்தில் எப்போதும் மண்ணுக்குள் ஊற்றென இருப்பது. நிலத்தை ஊடுருவி வேரிலிருந்து விருட்சங்களின் கிளைகளில், மலர்களில், தளிர்களில், கனிகளில் நிலைத்து அதன் தண்மைகளில் உள்ளூரப் படிந்திருந்தது. அது ஒவ்வொரு விருட்சத்திலிருந்தும் காற்றின் இழையென நீந்தி, காட்டின் சூடென, இந்நிலத்தின் துடிப்பென ஆழத்தில் தாளம் தப்பாது லயித்திருந்த ஓர்மையிலிருந்து பிசகத்தொடங்கியது.

“சீதா…”

ராமனின்குரல் அலைஅலையென பரவி அதிர்ந்து பெருகியது.  அழைத்தழைத்து ஓய்ந்து இடையில் கைவைத்து,கோதண்டத்தை மண்ணில் ஊன்றிப் பிடித்தபடி வானம் பார்த்தான். கருக்கொள்ள முடியாத மேகங்கள் திரண்டும் கலைந்தும் சுழன்றன.

அவன் கண்முன்னே அவனே வந்து நின்றான். அவளின் கணவனை அயோத்தியில் அவள் மாளிகையில் விட்டுவிட்டு வந்திருந்திருந்தான். பூங்கொடிகள் ஏறி சுற்றி வளைத்திருக்கும் முன்மண்டபத்தில் சீதைக்காக காத்திருக்கும் சீதாராமன் முதலில் கண்முன் வந்து நின்றான். புன்னகைக்கும் இதழுடன் ஒருகண்ணில் துளியினும் சிறுதுளி நீர்தேக்கி, “சீதை எங்கிருக்கிறாள்?” என்றான்.

அடுத்ததாக அரண்மனைக்கு வெளியே சரயு  நதிக்கரையில்  நின்று அலைமோதும், தத்தளிக்கும், ஆத்திரம் கொள்ளும் காதலன் ஜானகிராமன் புருங்களை உயர்த்தியடி, “எங்கே சீதை?” என்றான்.

உணர்வுகளை உறிஞ்சி ஆழத்தில் நிலைத்திருக்கும் மகுடம் சூடா ராஜாராமன் மந்தனஅறையில் சிலையென அமர்ந்து புருவத்தை உயர்த்தி, “சீதை உடனில்லையா,” என்றான்.

தண்டகத்தின் காற்றின் சுழலில் பலவாக உருமாறி ஒரே கேள்வியை கேட்டு அவனே அவனிடம் மாயம் காட்டினான்.

பதில் கூறமுடியாத ராமன் மீண்டும் மீண்டும் புதிர் பாதையில் நடப்பவன் என தண்டக வனத்தினை சுற்றிச் சுற்றி வந்தான்.  கையிலிருந்து சிந்திய நீரென அவள் விழுந்த இடம் தெரியாது அலைந்து திரிந்தான். கண்டடையாத அவளைப்போலவே பொழுதும், எண்ணமும் நீண்டு நீண்டு ஔிந்து நின்றன.

பட்டென வெடித்தது அவனருகில் நின்ற சிறுவேம்பின் முதல் கிளை. அந்த மீச்சிறு ஒலியில் அதிர்ந்தது வனம். அடுத்து அடுத்து என்று தொடத்தொட நீளும் கரம் அது. 

ராமனின் ஒவ்வொரு அழைப்பிற்கும் லட்சுமணன் விதிர்த்தான். லட்சுமணனின் காதுகளில் அயோத்தியின் சொற்கள் மாறி மாறி ஒலிக்கத் தொடங்கின.

வசிஷ்டர் அயோத்தி அரண்மனையின் பின்புற மண்டபத்தில் தன்ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட வெண்தாடியை வருடியபடி நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை.  காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

இளையவரான வாமதேவர் தன் குறுஉடல் பதற அரண்மனையின் வடபுறம் இருந்த முன்னோர்களின் ஆலயத்தின் நீண்டு அகன்ற கல்படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் லட்சுமணனிடம் பேசும் விழைவிருந்தது. எதிரே வணங்கி நின்ற லட்சுமணனை கண்டதும் சிறுபொழுது பார்த்தபடியே நின்றார்.

“நேரம் கடந்து கொண்டிருக்கிறது குருவே…”

“ஆம்…நான் கூற நினைப்பது ஒன்றே ஒன்றுதான். இன்று அரியணை துறக்கும் பேரரசன் திரும்பி வந்தாக வேண்டும். இத்தனை ஆண்டுகள் வனம் செல்பவர் மீள்வதில்லை. ரகுராமருக்கு அளிக்கப்படும் மீள்செல்வம் சீதை. என்றும் அரசனாகவே உணரும் பொருட்டு உடனளிக்கப்பட்ட செல்வம். காப்பது நமது கடன் இளவரசே,” என்கிறார்.

தாய் கௌசல்யா சிவந்த கண்களுடன்,  “மகனே… கடல்களை அறியாத சிறுமீனை தன் சிறு தேக்கத்தில் ஏந்தப்போகும் குவிந்த உள்ளங்கை அவன்…அவனின் உள்ளங்கைக்கு கீழே குவியும் மற்றொரு கரம் நீ என்றே இங்கு உயிர் தரித்திருப்பேன்,” என்று லட்சுமணனின் தோள்களில் சாய்கிறாள்.

சுமித்திரை, “மகனே உன்னை நிறுத்தி வைக்க எனக்கு வகையில்லை. பெண் என்று பிறந்தவுடனே அவளுக்கான கண்ணியின் முதல் இழையும் திரிக்கப்படுகிறது…அதன் முதல்முடிச்சால் ஏமாற்றப்படுவது காவலிருக்கும் கண்கள் தான்,”  என்று அவன் கைகளை இறுகப்பற்றி நெஞ்சில் வைத்துக்கொண்டாள்.

ஆலோசனைக் கூடத்தில் அமைச்சர் திருஷ்ட்டி நின்றிருந்தார், “இளவரசே…விண்ணிலிருந்து இறங்கிய அறம் இம்மண்ணின் சுழலில் நிலைகொள்ள, பற்றும் கோதண்டத்தின்  மறு கரத்து மலர் அவர்…அந்த இரு கையின் குறையாத விசை நீங்கள்…”என்று வணங்கினார்.

நான்கு இளவரசிகளுடனும் மிதிலையிலிருந்து உடன்வந்து அயோத்தியிலிருக்கும் தாதி கன்னிகை வெளிமுற்றத்தின் மறைபகுதியின் எப்போதிருந்தே காத்திருப்பதாக சுமந்திரர் லட்சுமணனின் காதோடு கூறினார். 

நிழல்போல நின்ற அவள் தன்வெறித்த குரலால்,“இளவரசே… வனத்தில் கைகேயிராமனின் கரங்கள் பற்றும் மென்சிறு பொம்மை என்சீதை…”என்றவளை லட்சுமணன் வெட்டும் விழிகளுடன் நிமிர்ந்தான்.

 “ஆம் இளவரசே…கைகேயிராமன் தான். இனி இளவரசர் ஏங்கி நினைக்கப்போவது தன் இளையஅன்னை தான். ஏன் ஏன் என அவர் தன்மனதிடம் கேட்கப் போவது அவர் சொன்ன சொற்களைத்தான். இது, அது, எது என  விரியும் சத்ரியனின் எண்ணிறந்த கரங்கள் அணைத்த ஒற்றை வில் சீதை…சத்ரியருக்கு வில்லைப் பற்றி மற்றவர் சொல்வதற்கில்லை,”என்றாள்.

அவள் சொற்களின்படியே இன்று பேரரசனின் அத்தனை தேவியருக்குமான கரங்கள் கொண்டு சீதையை அணைத்த கரங்களில் கோதண்டம் அத்தனை அதிர்வுகளுமாக விம்மியது.

லட்சுமணன் சருகுப்பொதியில் கால்வைத்து அனிச்சையாக உதறிக்கொண்டு நடந்தான். உள்ளிருந்து நெளிந்து பதுங்கியது நாகப்பாம்பு. பற்றிப்படர்ந்து எழுந்து அசைந்து ஆடிக்கிளைத்தது அனல்.ராமனின் பின்னே சிவந்து கன்றது காடு. குறுக்கிட்ட ஓடையில் கால்வைத்தான்.  சூடு பரவிய நீரில் மீன்கள் தவித்து அலைந்தன. 

அன்னாந்து வானத்தை நோக்கி  ‘சீதா…’ என்றான். அலைஅலை எனப் பரவிய அவன் குரலால் அம்பு தீண்டியதென கண்முன் நீண்ட நிலத்தின் பறவைகள் பதறிசிதறின. இலக்கிழந்த சிறகுகள் காற்றில் தவித்து பறந்தன. இதுவரை ஒருபோதும் உலகம் கண்டிராத ராமனை தண்டகம் கண்டு விதிர்த்து நின்றது. அவன் நடையின் வேகத்தில் காற்றைத் துளைத்துச் சென்றான்.

 வெம்மையில் ஊறித் திளைக்கும் விரியன்கள் இதுவரை அவைகள் அறியாத வெம்மையை உணர்ந்து கல்லிடுக்குகளில் சுருண்டன. காடு இடைவெளி விட்ட செந்நிலத்தில் காற்று மையம் கொண்டு சுற்றி மேலெழுந்தது. அதில் உதிர்ந்த பறவையின் சிறகுகளும் மேலெழுந்து பறந்தன. ஒரு பறவை நிலத்திலிருந்து எழுந்து பறக்க இயலாது தவித்து சுழல்வதைப்போல அந்த இறகுகள் காற்றின் விசையில் தவித்தலைந்தன.

“ஒரே பட்சியின் இறகுகள் அண்ணா…இது நம் தாதை ஜடாயுவின் சிறகு உதிர்த்த சிறகுகள் அண்ணா…”

“அண்மையில் தான் இருக்க வேண்டும். வெகுதொலைவு பறந்திருக்க இயலாது…”

“போர்க்களம் போல இருக்கிறது…”

விரைந்து நடந்தார்கள்.

மரத்தடில் சரிந்தமர்ந்து களத்தை நிரப்பிய பேருருவப்பறவையின் உடல் வலியால் அசைந்து கொண்டிருந்தது.

“தாதை…”என்று ஏககாலத்தில் கூவி ஓடினார்கள்.

ஒற்றைச் சிறகு நிலத்தில் படர்ந்திருக்க மற்றொரு சிறகு அரியப்பட்டு குருதி வழிந்து நிலத்தில் குழைந்து கொண்டிருந்தது. அந்த சிறகில் வழியும் உயிர் மெல்ல மெல்லக் காற்றிலேறிக் கொண்டிருந்தது. 

விழிமணியில் மட்டும் உயிர் மெல்ல அசைந்துகொண்டிருந்தது.

“ராமா….லட்சுமணா…”என்ற குரல் மிக மெல்ல எழுந்தது.

“நீங்கள் நடந்த வழியெங்கும் அரக்கர்கள் போர் புரிகிறார்களா செல்வங்களே…என் கண்கள் காடு தீய்ந்து கருகுவதை உணர்கிறது. உயிர்கள் பதறுவதை உணர்கிறேன்…”

சிறிது நிறுத்தி பின்…

“என் புலன்கள் தவறுவதால் அங்ஙனம் தெரிகிறதா…லட்சுமணா நீ ஒருமுறை நிதானித்து திரும்பிப்பார்….”

அவர்கள் நின்ற உயர்ந்த பாறையிலிருந்து லட்சுமணன் கைகளைக் குவித்து மனதை நிலைப்படுத்தி காட்டை நோக்கினான். தாங்கள் நடந்த வழியெங்கும் மீண்டும் மனதால் நடந்தான். இத்தனை துல்லியமாக காட்டுத்தீயை நினைவில் உணர்ந்தும் வழியெங்கும் அதை மனம் உள்ளவாங்காததைக் குறித்த வியப்புடன், “நாங்கள் வந்த வழியெங்கும் காடு எரிந்துகொண்டிருக்கிறது தாதையே, ”என்றான்.

“நினைத்தேன்…ராமா உங்களிருவரின் உணர்வுகள் எச்சரிக்கையை கைவிட்டிருக்கின்றன…அதன் மூலம் சுற்றியிருக்கும் அழிவுகளையும் உணரவில்லை…தன் சோகத்திற்காகச் சூழலைக் கைவிடுவது அரசருக்கு இயல்பல்ல…நீ என்றைக்கானாலும் அரசன்தான்…”

“…”

“சீதையை தென்திசை வேந்தன் கவர்ந்து சென்றான். தடுக்க முயன்ற என் சிறகு அறுபட நிலத்தில் வீழ்ந்து உங்களுக்காக காத்திருக்கிறது உயிர்…”

ஜடாயுவின் உயிர் மேலும் மங்குவது தெரிந்ததும் ராமன் தன் மடியில் அவரின் தலையை வைத்தான். லட்சுமணன் நீர் எடுக்க எழுந்தான்.

“தேவையில்லை மகனே…இனி இந்த நீரால் நிறையப்போவதில்லை என் உயிர்….என்அருகில் அமர்க. உன் இருப்பே இப்போது எனக்கான தாகம் தீர்க்கும்…”

லட்சுமணன் அறுந்த சிறகை நோக்கியபடி அமர்ந்தான்.

“தந்தையின் இறுதிச் சொல் என உங்களுக்கு உரைக்க சில சொற்கள் உண்டு….”

“தாதையின் இறுதிச் சொல் பெறாத பிள்ளைகள் நாங்கள்…அச்சொல்லாய் உங்கள் சொல் என்றும் இருக்கும்.”

“நிறைந்தேன். கேளுங்கள் மைந்தர்களே…தீயால் காட்டின் மரமும், செடிகொடிகளும், சிற்றுயிரும், பட்சிகளின் குழவிகளும், கருதேக்கிய முட்டைகளும், கானுயிர்களும், முளைக்கப்போகும் விதைகளும், விதைகளுக்குள் உயிரென திரளாத ஒன்றும் விதிர்த்து நிற்கின்றன. ஒருமுறை உற்றுப்பாருங்கள் மைந்தர்களே…இதனுள் எத்தனை ராமன் எத்தனை சீதை எத்தனை ஊர்மிளை எத்தனை லட்சுமணன்கள்..தங்கள் குடிக்காக கண்ணீருடன் நிற்பதை…சினம் பெருந்தீயாகி தன்னையே எரிக்கும் …அதை தீபமாக்கப் பயின்றவர்கள் மீண்டும் தீயாக்கி விரயம் செய்யலாகாது …”

ஜடாயுவிற்கு மூச்சு வாங்கியது. ராமன் வயோதிக இறகுகளுக்குள் மென்மார்பை தடவினான்.

“அன்பிற்கான காயம் என்னுடயது…வலி என்னுடயது…ஆனால் ஒரு அரசனுக்கப்படியில்லை. காட்டிலிருந்தாலும் இது உன்காடு. இங்கு என்ன நடக்கிறது என்பதை உணராமல் கூடஇருந்தது பிழை செல்வமே,”

“ஆம்…தந்தையே,”

“தென் திசை தேடிச்செல். என் மகள் உனக்காகக் காத்திருப்பாள். நீ பேரரசனாவதை இப்போதே காண்கிறேன்….அரசனாகும் மகனுக்கு நான் அளிக்கும் இச்சொல் உன்னுடன் இருப்பதாக…”

உயிர் மெல்ல பறந்து மறைய உடல் ராமனின் மடியில் சரிந்தது. கிஞ்சுக மரங்கள் தன் கிளைகள் நிறைத்து மலர்ந்திருந்தன. அதன் செக்கச்சிவந்த மலர்களின் வளைந்த கூர் முனைகளைக் காற்று அசைக்க அவை வெளியைக் கொத்தி நின்றன. காடுமுழுவதும் நிரைக்கட்டி நின்று சிவந்தநிறத்தில் ஏந்தியிருந்த தீ ராமனின் கைகளில் இருந்து பரவி ஜடாயுவின் உடலெங்கும் பரவி எரியத்தொடங்கியது.

ராமன் ஈரவிழிகளுடன் அந்தப்புறம் காட்டை நோக்கினான். அவன் உடல் நடுக்கம் கொண்டது. அவன் மனதின் ஈரம் சென்று கருகியிருந்த ஒவ்வொரு மரமாக இலையாக தளிராக விதையாக தொட்டு தொட்டு சென்றது. கார்மேகவண்ணன் பார்வைப்பட்ட இடமெங்கும் ஈரம் படர்ந்து கொண்டிருந்தது. ஈரம் கொண்ட கிஞ்சுகமலர்கள் மேலும் சிவந்து துலங்கின. அவன் செல்லும் வழியெங்கும் அவனுக்கு வழிவிட ஈரம் அப்பொழுதிருந்து காத்திருக்கத்தொடங்கியது. அது பெருமழைக்கான துவக்கம்.

(நவம்பர் 2021)

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.