
வடசென்னை திரைப்படம் ரிலீஸாகி மூன்று வருடம் கழிந்தப் பின்பு அதனுடைய திரைக்கதையின் சாராம்சத்தை அறிந்துக்கொள்ள முனையும் கட்டுரை இது.
வடசென்னை தன்னை இரண்டு விதமாக புனைந்துக்கொண்டுள்ளது. ஒன்று அந்நிலத்தின் கதையாக, இன்னொன்று சாபம்-புனைவின் விதியாக. அந்த நிலம் தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னுள்ளிருந்தே மனிதர்களை தெரிவு செய்து அனுப்புகிறது. நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுபவர்கள் அப்புறப்படுத்துபவர்கள் என்கின்ற இருநிலை மனிதர்களையும் அந்நிலமே கொண்டுள்ளது. அந்த நிலையை அந்தந்த மனிதர்கள் வந்தடையும் சூழலையும் எப்படி என்கின்ற புனைவின் விதியையும் இப்படம் விவரிக்கின்றது.
நிலத்தில் நின்று பேசக்கூடியவர்கள் ஆச்சர்யமாக பொழப்பு என ஏதும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ராஜன் பொருட்களை கொள்ளையடித்து வியாபாரிகளிடம் விற்பதாகவும் பிற்பாடு ஊருக்காக பேசும் போது கடத்தல் தொழிலை நிறுத்திவிட்டு சும்மா இருப்பவனாகவும் இருக்க அன்புவும் பல் வேறு சூழலால் கேரம் விளையாட்டுக்காரனாக முடியாமல் சிங்கார வேலன் மன்றத்தில் பிறருக்கு கற்றுத்தருபவனாக சும்மா இருப்பவனாக இருக்கிறான். அன்பு அந்த ஊரை விட்டு வெளியே செல்ல இருந்தவனை ஆசிரியரின் புனைவு இருக்க வைத்துக்கொண்டது. விசுவாசமா நிலமா என்கின்ற அறச்சிக்கலை அன்பு சந்திக்க அவன் தன் மண்ணிற்காக நிற்கிறான். ஏனோ ஊரைவிட்டு போகாதிருப்பவர்களே ஊருக்காக பேசுகிறார்கள்.
இரண்டாவதாக இப்படத்தின் புனைவின் விதி சாபம் எனச் சொல்லலாம். இப்படத்தின் கதைசொல்லி முழு கதையையும் முன்பே தெரிந்தவன். அனைத்தையும் அறிந்தவன். அவனுக்கு அன்புவின் வாழ்வு எப்படி திசை திரும்பும் அவன் ராஜனின் அடியொத்து வாழப்போகும் வாழ்வு அதற்கான புனைவின் சாத்தியங்களை அனைத்தையும் முன்பே அறிந்தவன். கதைசொல்லி அதை சொல்லிக்கொண்டுமிருக்கிறான். அன்பு ஜெயிலுக்கு வருவதற்கு பத்மாவை காதலித்ததும் ஒரு காரணம் என காதலிக்கும் போதே சொல்வது, சிவாவுக்கும் அன்புவுக்குமான உறவை முதல் காட்சியிலயே சொல்வது என கதைசொல்லி எதிர்காலத்தையும் முன்கூட்டியே சொல்லிவிடுகிறான். இப்படி முன்கூட்டியே சொல்லும் போது இதை யாரும் தடுக்க முடியாது இது நடந்தே தீரும் என்கின்ற காவியத்தன்மை தென்படுகிறது. திரைக்கதை பார்வைக்கு நான்-லீனியராக தென்பட்டாலும் இது நேர்க்கோட்டுக்கதையே. ராஜனை கொலை செய்வதில் இருந்து கதை தொடங்குகிறது. ராஜன் இருக்கும் வரையில் விசுவாசத்துடன் நிலத்தின் பக்கம் நின்றவர்கள் காலப் போக்கில் வெறும் லாப நோக்கத்திற்காக விசுவாசம் அற்றவர்களாக சுயநலமிக்கவர்களாக நிலத்தை அபகரிப்பவர்களாக உருமாறும் கதை சொல்லபப்டுகிறது. இவர்களின் வாழ்க்கையின் இடையே அன்புவின் வாழ்க்கை இடைச் சொருகலாக அமைகிறது. அவர்களின் உறவுமுறையும் அன்புவின் தனிப்பட்ட வாழ்வும் எப்படி ஒன்றோடு ஒன்று முட்டி முரணியக்கமாக முன்னகர்கிறது என்பதை காட்டுகிறது. உணர்வாக படம் நேர்கோட்டிலே செல்கிறது. இப்படத்தின் வடிவம் புனைவாகவும் உள்ளடக்கம் இயல்புவாதமாகவும் அமைந்துள்ளது இதனுடைய பலவீனமே.
படத்தின் முதல் காட்சியிலே கதைசொல்லி சொல்லிவிடுகிறான் ‘இந்த சாவோட அவங்களுக்கு இருந்த எல்லா பிரச்சனையும் முடிஞ்சதா அவங்க நினைச்சாங்க ஆனா இதுதான் தொடக்கம்னு அவங்களுக்கு தெரியல, இந்த சாவு அவங்கள விரட்டிக்கிடே இருக்கபோவுது.’ உண்மையில் மொத்த படத்தின் சூத்திரமே இந்த வரிகள் தான். கொலை செய்தவர்கள் குற்ற உணர்வோ அல்லது அகச் சிக்கலையோ அடையவில்லை மாறாக கதாசிரியன் புனைவின் வழியாக சாபத்தை விதைக்கிறான். இந்த சாவே இக்கதை சொல்ல தூண்டுகிறது, இந்த சாவே இக்கதையை கொண்டுசெல்கிறது. இந்த சாபம் புனைவின் விதிப்படி இயங்கும் ஒன்று. அதனால் தான் குணாவையும் வேலுவையும் ஜாமின் எடுக்க ஒரு வருடத்துக்கும் மேலாக தாமதமானது. அந்த சாவு அவர்களின் ஜாமினை தடுத்து அவர்களுக்குள் பகையை வளர்த்தது. இது புனைவின் அம்சமே. புனைவு என்பது இணை உலகம். இந்த உலகம் இயங்கும் பொருட்டே அது ஆசிரியனால் விதைக்கப்படுகிறது. அவர்களுக்குள் பிரிவினை வந்தே தீரவேண்டும், ஒரு பெருங் கொலையில் இருந்து அவர்கள் அவ்வளவு எளிதாக வெளியேறுவதை இப்புனைவு விரும்பவில்லை. குணாவின் சாவை அன்பு மனிதாபிமான அடிப்படையில் காப்பது, சாமியார் பெண் அன்புவின் வரவை கணித்து சொல்வது என சாவின் சாபம் புனைவாக பாடர்வதை நாம் பார்க்கிறோம். இதை ஏன் புனைவின் சாபமாக சொல்கிறேன் என்றால் இங்கு சாபம் நம் தொன்மையான சொல்லாடலாக பயன்படுத்தவில்லை. அது ஆழம் செல்லவில்லை. ராஜன் சாகும் போது கூட சாபம் விடவில்லை, மாறாக பரிவுணர்வே இருந்தது. குணாவும் வேலுவும் ராஜனைக் குத்தும் போது கூட விசுவாசிகளே. செந்திலும் ஜாவா பழனியும் அவிசுவாசிகளாகி இருந்தனர். அந்தக் கொலையே ராஜன் அனுமதித்ததே. அவர்களின் மனதில் தன்னை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை அறிந்த கணமே ராஜன் இறந்துவிட்டான். ஆக இங்கு நாடக பாணியாலான சாபம் அறங்கேறவில்லை. இந்தக் சம்பவம் புனைவாக்கும் பொருட்டு ஆசிரியன் புனைவின் வழியாக சாபமிடுகிறான். அதனாலேயே கதாபாத்திரங்கள் அனைவரும் அனேகமாக சந்திராவைத் தவிர(அவளது வாழ்வின் பொருளே ராஜன் தான்) ராஜனை மறந்திருந்தாலும் அவர்களின் வாழ்வில் ராஜனின் சாவு முழுக்க கலந்திருப்பாதாக அமைகிறது. குணாவும் செந்திலும் சமாதானம் ஆகும்பொருட்டு எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் சமாதானமாக முடியவில்லை. உண்மையில் அவர்கள் இருவரும் சமாதானமாக வாழவே விரும்புகிறார்கள் அதன் வெளிப்பாடே வேலுவின் ‘என்ன இருந்தாலும் செந்தில் நம்ம கேஸீக்காரண்டா’ என்கின்ற வசனம், ஆனால் அந்த சாவு அவர்களை புனைவாகவும் சந்திராவின் மூலமாகவும் பிரித்துவைக்கிறது. உண்மையில் ஒரு பெருங் கொலையின் நீட்சியாக அதை செய்தவர்கள் பிரிந்தே ஆக வேண்டும் அது பிரஞ்ச விதிதானே. இன்னொரு சாபமும் படத்தில் உள்ளது. ராஜனால் கடத்தப்பட்டு கப்பலில் ஜட்டியுடன் பிணைக்கைதியாக அழைத்துப் போகும் போலீஸ் அதிகாரியும் ‘உங்க ஒவ்வொருத்தர் சாவிலும் என்ன மாதிரி ஒரு காக்கி சட்டைகாரன் சம்பந்தப்பட்டிருப்பாண்டா’ எனச் சொல்வது. செந்தில் குத்து வாங்குவதற்கு அந்த நேர்மையான ஜெயிலரும் ஒரு காரணம் தானே.

உண்மையில் இந்தப் படம் எதை சொல்கிறது? எதற்காக இந்தக் கதை சொல்லப்படுகிறது? பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை பிரித்துப் பார்க்க முடியாதபடி பின்னிபிணைந்திருப்பது, ஒருத்தரின் நடத்தை அனைவரையும் எதேதோ வகையில் பாதிப்பது என சிலந்திவலைபோல கதைப் பின்னப்பட்டிருக்கிறது. அந்தப் பின்னலை கலைத்துப் பார்த்தால் நிலத்தை அபகரிப்பவர்கள் யார் அதை எதிர்த்து நிற்பவர்கள் யார் அவர்களின் வாழ்க்கை எப்படி ஒரே நிலத்தில் அடித்து வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறது. குணா மற்றும் அனைவரும் நிலத்துகாக்க ராஜனுடன் இணைந்து நிற்பதிலிருந்து அவர்கள் நிலத்தை அபகரிப்பவர்களாக உருவெடுக்கும் கால மாற்றத்தை இடையே ஒரு கொலை அதன் சாபம் அதன் விரட்டல் அன்புவின் வாழ்க்கை தடம் அவன் கையில் வந்து சேருகின்ற பொறுப்பு என கதைசெல்கிறது.
ராஜனை கொலை செய்தப்பிறகு குணாவும் செந்திலும் ஊருக்குள் வருவதில்லை. அவர்கள் சுயநலமிக்க லாப வாழ்க்கையை வாழ்கிறார்கள். கட்சி மாறுகிறார்கள், எதிரியாக பாவித்தாலும் சமாதானமாக வாழ விரும்புகிறார்கள், அவர்களிடம் இருந்த விசுவாசம் அற்றுப் போயிருக்கிறது. குணா தான் செந்திலைக் குத்தினான் எனத் தெரிந்தப் பின்பும் செந்திலின் மனைவி மாரி சமாதானத்திற்கு ஒத்துக்கொள்கிறாள். ஏனென்றால் பணம். தொழிலுக்காக, மாறாக கொலையின் காரணியான குணாவை விட்டு விட்டு கருவியான அன்புவை பலிக்கொடுக்க கேட்கிறாள். குணாவும் சிந்திக்கிறான். குணாவுக்கு அன்புவைக் காட்டிகொடுப்பதில் அறச்சிக்கல் இருக்குமா இல்லையா எனத் தெரியவில்லை ஆனால் விதி வசமாக அடுத்த காட்சியிலே அன்பு குணாவை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது. குணா குறையில்லாமல் அன்புவை செந்திலிடம் காட்டிகொடுத்து விடுகிறான்.
அன்பு கேரம் பிளேயராக வாழ்க்கையை அமைத்துகொள்ள முனைகிறான். ஆனால் அந்நிலத்துகே உரிய பல திசைதிரும்புதல்கள். விரலில் அடிபட்டு ஆட்டம் ஆடமுடியாமல் போவது, காதலிக்காக ரிஸ்க் எடுப்பது, கொலை நடந்துவிடுவது, குணாவுக்கு கடன்படுவது, செந்திலைக் கொலை செய்வதன் மூலம் குணாவின் தீவிர விசுவாசியாகுவது என காலம் அவனை நிலத்தை விட்டு அகல முடியாதவனாக பிடித்து வைக்கிறது. ஆனால் காலம் இவர்கள் இருவரையுமே எதிர் எதிர் நிற்க வைக்கிறது. அப்பொழுதும் அன்பு குணாவின் விசுவாசியே. ‘ஊருக்காகத் தான்னா பேசுனேன் மத்தபடி உன் மேல மரியாதை இல்லாம எல்லாம் இல்ல’, ‘ஏன் உயிரு உன்துன்னு சொல்லியிருக்கேன் என்ன விட்ரு நான் பேசாம போயிறேன்’ என அன்பு குணாவிடம் தான் பட்ட நன்றிக்கடனை மறவாதவானாகவே இருக்கிறான். குணா கெட்டவன் அன்பு நல்லவன் அதனால் அன்பு நிலத்துக்காக சுயம்புவாகப் போராடுகிறான் என்கின்ற ஒற்றைப்படையான கதையம்சமாக இதைத் தடுப்பதே குணாவுடானான அன்புவின் உறவே. அன்பு குணாவுக்காக தன் உயிரையும் கொடுக்க வேண்டிய விசுவாச பந்தமிருக்க நிலத்துக்காகவும் எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது. குணாவுக்கு அறச்சிக்கலே இல்லை மாறாக அன்புவுக்குத்தான். அதனால் தான் இறுதியாக குணா ஊரைவிட்டு இன்னும் வெளியேறுபவனாகவும் அன்பு ராஜனின் வீட்டு சாவியை வாங்குபவனாகவும் உருவெடுக்கிறார்கள். இந்த முரணே கதையை பன்மைத்தன்மையான புனைவின் வெளியாக உருவாக்குகிறது. அது மனிதர்களின் நிலையை பேசுகிறது. எதிர்த்து நிற்பதோ ஆதரித்து நிற்பதோ நமக்கே தெரியாமல் நாம் எந்த சார்ப்பில் நிற்கிறோம் என்பதையே நடக்கும் வரை முழுதாக அவதனிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதுவே இப்படத்தின் கிளாஸிக்.
குணா ஊரை காலிசெய்யச் சொல்லுபவனாக அன்பு ஊருக்காக பேசுவபனாக உருமாறுவதை அந்த கணம் வரை எப்படி நமக்கு தெரியாதோ அதைபோலவே அவர்களுக்கும் தெரியாது. இருவருக்குமே இது திடுக்கிடல் தான். ‘வேற எவனா இருந்தா பரவைல்லை நம்ம பைய்யனே நம்மல எதுத்து பேசுறது தப்பாயிருக்கு’ என வேலு குணாவிடம் கூறுவது. அன்புவும் நிலத்தை காக்கவே செய்கிறான் குணாவை எதிர்க்கவில்லை (மாறாக கதைசொல்லி அன்பு ராஜனின் சாவுக்காக பழி வாங்க வந்துவிட்டதாக அறைக்கூவல் விடுகிறான்). மெல்ல மெல்ல அவர்களை அப்படி புனைவு எதிர் எதிர் நிறுத்துகிறது. ஜவா பழனி செந்தில் இருவரையும் குத்தி அன்புவை குணாவின் விசுவாசியாக பந்தம் உருவாக்கிய பிறகு குணாவை எதிர்க்க வேண்டி நிர்ப்பந்தம் உருவாவதை திரைக்கதை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறது. எந்த அம்சமும் அழுத்தி உணர்த்தும் படி கூறப்படவேயில்லை, ஆனாலும் மாற்றம் மட்டுமே தேக்கமின்றி நடந்துள்ளது, இது கிளாஸிக் எழுத்துக்கான தன்மையே. எங்குமே எதிர் துருவமே தென்படவில்லை. காரணம் திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியும் அனைத்து கதாப்பாத்திரங்களும் (சந்திராவைத் தவிர) தங்களுக்குள் சமாதானம் ஆகும் பொருட்டே முனைப்புடன் செயல்படுகிறார்கள். அன்பு, குணா, செந்தில், தம்பி என படம் முழுக்க அனைத்து காட்சியும் சமாதனத்துக்கு முன்னும் பின்னுமாகவே படமாக்கப்படுள்ளது. சொல்லப்போனால் அவர்களின் வாழ்வின் சம்பாத்தியம் உணவு நன்கொடை என எதையுமே திரைக்கதை கையாளவில்லை, மாறாக எது நடந்தாலும் சாமாதனாம் ஆகி சரி செய்துக்கொள்வதையே முனைப்புடன் இருக்கிறார்கள். செந்தில் ஜெயிலுக்குப் போவதேக் கூட ஒரு வகையில் சமாதானம் தானே (தன் மேல் இருக்கும் கேஸ் முடிக்கும் பொருட்டாக இருந்தாலும்). அதனால் எதிர் துருவமாக யாரும் தனித்து தென்படவில்லை.
இப்படத்தில் கதாப்பத்திரங்களின் தன்னிலை உருவாக்கம் என ஏதுமில்லை. கதை ஆரமபிக்கும் முன்பே அவர்கள் இளம் பிராயத்து தடுமாற்றங்களைக் கடந்தவர்களாக பக்குவப்பட்டர்வகளாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும், எது நடந்தாலும் அதிலிருந்து வெளியேறவோ அடுத்து செய்யவேண்டியதையோ நன்கு அறிந்தவர்கள். அதனால் மனதளவில் சிக்கலில்லாதவர்கள். சிக்காலில்லாததால் அனைத்தும் இயல்புதானே தொனியில் வாழ்க்கை அமைந்துள்ளது. தங்களுக்குள் அடித்துகொள்வது பிறகு சமாதானமாகுவது என இயல்பாக காட்டப்பட்டுள்ளது (செந்தில் ராதாரவியிடம் சமாதனத்துக்கு போவது, மாரி தம்பியிடம் கூறி குணாவிடம் தூதுவிடுவது). அன்புவும் அதைப் போலவே எங்கு யாரை எப்படி அனுகவேண்டும் என தெரிந்தபடியே இருக்கிறான். ஆக இத்திரைக்கதை ஏற்கனவே கட்டிஎழுப்பிக்கொண்ட இணை உலகத்தை நமக்கு காட்டிய வண்ணம் இருக்கிறது. அவ்வுலகம் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது. இளந்தலைமுறை விசுவாசத்தால் கட்டுண்டிருக்க மூத்த தலைமுறை லாப வாழ்க்கை வாழ்கிறது.
இப்படத்தின் மிக முக்கியமான கல்யாண மண்டபக் காட்சி. தம்பியின் தலைமையில் குணாவும் செந்திலும் படம் முழுக்க சமாதானம் ஆகும் பொருட்டு சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் எதிர் எதிர் அமர்ந்து வாதம் செய்துக்கொள்கிறார்கள். ஆனால் கால கதியில் அவர்கள் எதிர் எதிர் அமர்ந்து தங்களின் முகத்தை பார்த்துக்கொள்ளும் எல்லையை தாண்டிவிட்டதை உணர்த்தும் வண்ணம் பக்கவாட்டில் அமர்ந்து சமாதானம் பேசுவதாக அக்காட்சி அமைக்கப்படிருப்பது தமிழ் சினிமாவிலேயே மிக நேர்த்தியான காட்சி. தம்பியும் அவர்கள் இரண்டு கோஷ்டியின் பின்புறமாகத் தான் நின்றுகொண்டு பஞ்சாயத்து பேசுவார்.
ராஜனின் கதாப்பாத்திரம் உட்சபட்ச அனுபவசாலியாக நடந்துக் கொள்வது (சுவாரஸ்யமாக இருந்தாலும்) அந்த ஊரோடு ஒட்டாமல் தனித்தே அந்தரத்தில் தொங்குகிறது. அனைத்து பின்விளைவுகளையும் முன் அறிந்து ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுத்துப் பேசுவது தனிபிரதியாகவே விளங்குகிறது. ராஜன் எங்கோ அனைத்தையும் மீறி இயங்கிக்கொண்டிருக்கிறான். இப்படத்தின் பலவீனம் அழுத்தமான காட்சிகள் என ஏதும் அற்றது. பெண் பார்ப்பது (ராஜன், அன்பு), ஜாவா பழனி காட்சிகள், அன்புவின் காதல் காட்சிகள், கேரம் காட்சிகள் மிக மிக எளிமையான காட்சிகளால் நிரம்பப்பட்டுள்ளது. இயல்புவாதமான கதைகூறல் முறையில் அழுத்தமான காட்சிகள் மிக அவசியம். எந்த உறவும் உணரப்படவே இல்லை. உறவுக் காட்சிகள் என ஏதும் இல்லாதது குறையே. டிராமா என்பதே மனிதர்கள் கொள்ளும் உறவும் விலகலும் தானே. ‘நான் உன் தம்பி மாதிரின்னா என்னப் போய் நீ ஏன்னா கொல்ற என சங்கர் சொல்வது’, ‘எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சதும் நீதான் இப்போ இதையும் நீதான் பண்ணி வெச்சிருக்க என மாரி சொல்வது’, ‘ராஜன் பொண்டாட்டிடா என சந்திரா சொல்வது’, ‘ராஜன் போலீசை எப்படி அடிச்சான், எப்படி ஊரைக் காப்பாத்தினான் என இன்னும் அந்த ஊருக்குள்ள கதையா சொல்லப்பட்டிருக்கு’ போன்ற எந்த உறவுகளும் உணர்வுகளும் உருவாகவில்லை. வெரும் வசனக்களாக எஞ்சி நிற்கிறது.
சந்திரா குணாவின் இல்லற வாழ்க்கையை காட்டியிருக்கலாம், ஏன் சங்கர் சிவா திருமணம் செய்துக்கொள்ள வில்லை, அன்பு உண்மையில் வாழ்க்கையில் என்ன ஆனான். அன்பு தான் நினைத்த கேரம் ஆட்டக்காரராக முடியவில்லை அவனும் பெண்டாட்டி சம்பாத்தியத்தில் தான் வாழ்கிறான், நிலத்துகாக போராடினாலும் அவனுடைய வாழ்க்கையின் இந்தக் கோணம் காட்டியிருக்கலாம், இது தான் என்று இல்லை இப்படி ஏதேனும் அழுத்தமான காட்சிகள். சாபம் என்கின்ற கருத்தாக்கமும் மெல்லிய இழையாக மட்டுமே உபயோகப்பட்டுள்ளது ஏனென்றால் இது இயல்புவாத திரைக்கதை. இதில் யதார்த்தத்தை மீறிய மீ-இயலுக்கு இடமில்லை. அதையும் கட்டிவைத்தாகி விட்டது. ஒன்று புனைவின் விதியான சாபத்தை விரித்திருக்கலாம், அல்லது அவ்வுலகத்தின் அடிநாதமான விசுவாசம், பொருண்மையான நிலம் இவற்றை ஆராய்ந்திருக்காலம். அழுத்தமான சந்தர்ப்பங்களை அல்லது எதையாவது கட்டி எழுப்ப வேண்டும் அல்லது எதையாவது முழுதாக அழிக்க வேண்டும் அல்லது அறச்சிக்கல் அல்லது குறியீடு வெவ்வெறு பொருள் கொள்வதை கதையில் நிகழ வேண்டும். இத்திரைக்கதை தன்னுடய இணை உலகத்தை வெளிப்படுத்துவதிலேயே திருப்தியுருகிறது. இதன் மிகப் பெரிய காரணம் ஜெயில் காட்சிகள். புற உலகத்தில் அவர்கள் வாழ்வின் எந்த அம்சத்தையும் காட்டாமல் ஜெயிலுக்குள் மொத்தமாக தகவல்களைக் அடுக்கிக்கொண்டு போவதில் என்ன பயன். ஜெயில் எப்படி இயங்கினால் என்ன. அதில் எவ்வளவு தான் அன்புவின் வாழ்க்கை பின்னப்பட்டாலும் அது ஒற்றைத்தன்மையே. வெளியே அவர்கள் ஒன்றனெ கலந்திருக்கும் பன்மையான உலகத்திற்கு (அப்படித்தான் காட்சிபடுத்தப்படுகிறது) சற்றும் சம்பந்தம் இல்லாத தனித்தனியே வாழும் ஒற்றைபடையான உலகமாக ஜெயில் காட்சிப்படுத்தப்படுகிறது (ஆச்சர்யமாக விருமாண்டியிலும் அதே சிக்கல்).
ஜெயில் காட்சிகளைத் தவிர்த்து புற உலகத்தில் இன்னும் அழுத்தமான காட்சிகளை கொண்டிருந்தால் பன்முக பார்வைக்கு இடமளிக்கும் திரைக்கதையாக அமைந்திருக்கும். இப்போதைக்கு ஒவ்வொரு காட்சியிலும் பல உணர்வுகளின் அடுக்கின் அமைப்பால் இது தமிழ் திரைக்கதைகளில் முக்கிய பெரிய முயற்சியே.