அபியும் அம்மாவும்

புது தில்லி -110005

03/12/2021

அன்புள்ள அம்மாவுக்கு,   

நமஸ்காரம். கடந்த மூன்று நாள்களாக மனச் சஞ்சலத்துக்கும், உடல் உபாதைகளுக்கும்  உன்னை ஆளாக்கி விட்டுத் தில்லிக்குக் கிளம்பிச் சென்றவளின்  வெட்டி நமஸ்காரம் எதற்கு என்று நீ தூக்கி எறிவதற்கு முன்பு, உன் பாதங்களை என் கைகளால் பற்றி அவற்றின் மேல் என் கண்களைப் பொத்தி ஒரு நிமிடம் உன் மன்னிப்பைக் கேட்கிறேன். இது நான் செய்துவிட்ட செயலுக்காக என்னையே மறுத்துக் கொள்ளும் முயற்சியாக  அல்ல. உன்னிடம் முன் கூட்டியே எல்லாவற்றையும் சொல்லி உன் ஒப்புதலைப் பெறமுடியாமல் போய் விட்ட அந்த க்ஷணங்களின் அழுத்தத்தை உன்னிடம் தெரிவிக்கும் முன்பு வரும் வார்த்தையாக  இந்த மன்னிப்புக் கோரல். 

பிறந்ததிலிருந்து நீயும் அப்பாவும் என்னைக் கொண்டாடிய தருணங்களை எவ்வளவு முறை உங்களின் வாய் வார்த்தைகளாக அலுக்காமல் நீங்கள் சொல்லி அலுக்காமல் நானும் கேட்டிருக்கிறேன்! சென்னையில் பிறந்த எனக்கு இடது கால் பாதத்தில் ஒருவித வளைவைக் கண்டு நீயும் உன் பிறந்தகத்தில் இருந்த என் தாத்தா, பாட்டி, அத்தை, மாமாக்களும் அடித்துப் புரண்டு டாக்டர் பாலாவிடம் போனது, அவர் ஒரே ஒரு நாள் அவரது கிளினிக்கில் வைத்துப் பார்த்துக் கொண்டது, பிறகு  ஒரு வாரம் எந்த மாதிரியான பயிற்சிகளைக் குழந்தையின் காலுக்குக் கொடுக்க வேண்டியது என்று சொன்னது, ஆனால் குழந்தைக்குப் பெயர் வைக்கும் புண்யாவா ஜனத்தன்று வந்து விட்டுப் போன என் அப்பா என்னைப் பார்க்க  பெங்களூரிலிருந்து வந்த  போது காலில் இருந்த மெல்லிய துணிக்கட்டைப் பார்த்து விட்டு   எதற்காக இந்த விஷயங்களை இது நாள் வரையிலும் மறைத்து வைத்தீர்கள் என்று மகாக் கோபமடைந்து உடனே பெங்களூருக்குக் கிளம்பியது, அவரை ஸ்டேஷனில் போய் என் தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமாக்கள் எல்லோரும் ஒரு கும்பலாய்ச் சூழ்ந்து கொண்டு கெஞ்சியது,  அந்தக் கம்பார்ட்மெண்டில் இருந்த ஒரு தாத்தாவும்  பாட்டியும் இந்தக் கலவரத்தைக் காணப் பொறுக்காமல் மத்தியஸ்தம் செய்து  உங்களை அங்கேயிருந்து கிளப்பி விட்டது…

இங்கேயிருந்து ஆரம்பித்தது. நீங்கள் இருவரும் என்னைக் கண்ணில் வைத்துப் பொத்திப் பொத்தி இருபத்தைந்து வருஷ காலம் வளர்த்தீர்கள். நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற உன் பிடிவாதம் —  மவுண்ட் கார்மலில் என்  வகுப்பு மாணவிகள் (அப்பா பாஷையில் குட்டிகள்) மனப்பாடமிட்டுப் பாடும் இங்கிலீஷ் பாட்டுக்களை நான் பாடினால் குழந்தைதானே அவ இஷ்டப்படி இருக்கட்டுமே என்று அப்பா உன் பிடிவாதத்தை மடக்கிப் போடுவதைக் கண்டு அப்பாவும் பொண்ணும் 

எக்கேடு கெட்டு ஒழியுங்கள் என்று நீ விருட்டென்று சமையல் உள்ளில் புகுந்து கொள்வாய். 

பெற்றோர் ஆசிரியர் மாதக் கூட்டத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த ஆசிரியைகள் உன்னிடம் “படிப்பிலே ரொம்பக்  கெட்டிக்காரி. ஜி.கே.லே டாப் ரேங்க். எக்ஸ்ட்ரா கரிகுலர் வேலைகளில் ஸ்டார். ஆனால் வகுப்பில் ஓயாமல் பேசுவதை மட்டும் நிறுத்துவதில்லை” என்று நீ மனம் மகிழ்ந்து கேட்டுக் கொண்டு இருக்கும் போது கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்து உனக்கும் எனக்கும் இடையில் அன்றைக்கும் அதற்கு மறுநாளும் குருக்ஷேத்திரப் போரை மூட்டி விட்டுப் போய்விடுவார்கள்.  ‘பொண் கொழந்தைகள்னா பேசறதுதான் அழகு. இவ டீச்சர்லே பாதிப் பேர் கல்யாணமாகாதவா. அவாளுக்குக் குழந்தையைப் பத்தி என்ன தெரியும்?’ என்று அப்பா வக்காலத்து வாங்குவார். நீ உடனே “அடுத்த மாச மீட்டிங்கிலே  போய் இதையே  சொல்லுங்கோ பார்ப்போம்” என்று அப்பாவைப் பார்த்துச் சீறுவாய். இதைப் பார்த்து நான் சிரித்தால் “உருப்படாத கழுதை!” என்று என்னைப் பார்த்துத் திட்டித் தீர்ப்பாய்….

ஆனால் உன் சீற்றத்திற்கும், பொருமலுக்கும் அடியில்  ‘நான் சரியாக வளர வேண்டும்’ என்ற கவலையையும், ‘வெட்டிண்டு வான்னா கட்டிண்டு வர சமத்து; அப்படியே பாட்டியை உரிச்சு வச்சிருக்கு’ என்று சந்தடி சாக்கில் உன் அம்மாவின் பெருமையையும் என்னுள் பொதித்து வைத்திருந்தாய் என்பதை  நான் ஸ்கூல் விட்டதற்கு அப்புறமாவது தெரிந்து கொண்டேனா? இல்லை. 

நான் பெரியவளானதும் தாவணி, பிறகு ஸாரி கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு காலில் நின்றாய். ஆனால் ‘ஆம்பளைப் பசங்க மாதிரி பேன்ட்டையும் டீ ஷர்ட்டையும் போட்டுக்கொண்டு உன் மானத்தை வாங்கினேன்’. ஒரு தடவை பம்பாயிலிருந்து வந்த பானு சித்தி என் டிரஸ்சைப் பார்த்து ‘ரொம்ப க்யூட்டா இருக்கால்ல!’ன்னு சொன்னப்போ உன் மூஞ்சியிலே தெரிந்ச மந்தகாசத்தைப் பார்த்து எது என்னோட அம்மா என்று நான் திகைத்த கணம் நிஜம். ஆனால் அம்மா! உண்மையில் நீ யார்?

ஒரு பையனோ பெண்ணோ (முக்கியமாகப் பெண்) நம் சொசைட்டியின்  இறுக்கத்தில் அவனது, அவளது பெற்றோர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். என் குழந்தை என்ற பாசம் கண்ணை மறைத்து விடுவதால் பிரத்யட்சம் காண்பிக்கும் தோற்றத்தைப் பெற்றோர்கள் காணத் தவறி விடுகிறார்கள். இவ்வளவு சொல்லும் நானே நாளை இதே நிலைமையில் இருக்க மாட்டேன் என்பது என்ன நிச்சயம்?

முந்தா நாள் நான் என் திருமணத்தைப் பற்றிப் பேசியதும்  இடி விழுந்த மரம் போல உன் முகம் கருகிய க்ஷணம் என் நெஞ்சில் அப்படியே பதிந்திருக்கிறது. அன்று நமக்குள் நடந்த பேச்சுக்களும்!

“ஏய் அபி வேண்டாண்டி.”

“என்ன வேண்டாம்?”

“தெரியாத மாதிரி கேட்டுண்டு. வேண்டாம். ப்ளீஸ்.”

“ஏன் வேண்டாம்? அதாவது சொல்லு.”

“ஏண்டி, ஒரு பொண்ணு அம்மா கிட்டே பேசற மாதிரியா பேசறே?”

“இதோ பாரும்மா. எனக்கு உன் கிட்டே ரொம்ப மரியாதை இருக்கு. ஆனா அதுக்காக நீ சொல்றதையெல்லாம் நான் கேக்கணும்னு நீ நினைக்கிறது உனக்கே தப்பாப் படலையா?”

“ஏண்டி இப்பிடி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே? பொண்ணு

பொண்ணுன்னு உசிரையே வச்சு நீ கேக்கற தெல்லாம் வாங்கிக் குடுத்து, வேணுங்கிறதையெல்லாம் பண்ணிக் குடுத்து வளர்த்த அந்த மனுஷனை

யாவது நினைச்சுப் பாக்கக்  கூடாதா நீ? நான்தான் ஒண்ணுக்கும் லாயக்கில்லாத முண்டம்னு நீ வச்சுண்டுட்டே.”

“ஏம்மா இப்பிடி அனாவசியமா வார்தையை விட்டு உன்னையும் கஷ்டப்படுத்திண்டு என்னையும் கஷ்டப்படுத்தறே? ஏன் நான் நினைக்கிறதை செய்யக் கூடாதுன்னு நீ ஒரு காரணம் சொல்லு, அதை விட்டுட்டு…”

“அவன்  உன்னளவுக்குப் படிச்சவன் கூட இல்லையேடி !” 

“அவ்வளவுதானே? எவ்வளவு பேர் தன்னை விடக் கம்மியா படிச்சவாளைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கா? ஒண்ணுமில்லே, பானு சித்தியோட பையன் கார்த்திக் வெறும் பி.ஏ.தானே? அவனோட பொண்டாட்டி டாக்டர் இல்லையா?”

“என் தங்கை கிட்டே  பணம்னா பணம் அப்படி கொட்டிக் கிடக்கிறது. அந்தப் பொண்ணு ஓடி வந்து கல்யாணம் பண்ணிண்டா. அதுவும் நீ இப்ப பண்ணப் போறதும் ஒண்ணாயிடுமா?”

“இப்ப நீ என்னம்மா சொல்றே? மணி நம்ப அளவுக்குப் பணக்காரன் இல்லேன்னா? நீயே சொல்லேம்மா, நீயும் அப்பாவும் கல்யாணம் பண்ணிண்டு குடித்தனம் போட்டப்போ இந்த மாதிரி நாலு பெட்ரூம் பங்களாலேயா குடித்தனம் போனேள்? நீயே சொல்லியிருக்கே, டெல்லிலே பர்ஸாத்திலே ஒரு ரூமையே ஹால், பெட்ரூம், சமையலறைன்னு வச்சுண்டு ரூமுக்கு வெளிலே  ஒரு குட்டி டாய்லட்டையே பாத்ரூமாவும் யூஸ் பண்ணிண்டு நாலு வருஷம் கஷ்டப்பட்டேன்னு.”

“உன்னை லாயருக்குப் படிக்க வச்சதுக்கு நன்னாப் பண்ணிக் காட்டறே” என்றாய் நீ. உன் முகத்தில் களைப்பும் எரிச்சலும் தென்பட்டன. ஒரு மணி நேரமாகக் கெஞ்சியும், மிரட்டியும் நான் உன் பேச்சைக் கேட்க மறுப்பது உனக்கு ஆயாசத்தைத் தந்தது.  நம் குடும்பத்தை விடச்  செல்வாக்கில், படிப்பில், சமூக அந்தஸ்தில் குறைந்த ஒருவனை நான் ஒற்றைக் காலில் நின்று கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறேனே என்னும் ஆயாசம். ‘எவ்வளவு கெட்டிக்காரி?’ என்ற மற்றவர் புகழ்ச்சியும் படிப்பில் என்று மட்டுமில்லை, மற்ற கலைகளிலும்  – சங்கீதம், பெயின்டிங், பேச்சுத் திறமை – என்று வெற்றிக் கொடியுடன்  நான்  வீட்டுக்கு வரும் தருணங்

களில் மற்றவர்களின் கண்களில் உனக்கான அந்தஸ்து மேலேறுவதுமாக உனக்கு மிகவும் பிடித்த கணங்கள்! ஒவ்வொருவராலும் கெட்டிக்காரி 

என்று புகழப்பட்ட பெண்தான் இப்போது எனக்குத் தலைக் குனிவை ஏற்படுத்துவதில் மும்முரமாயிருக்கிறாள் என்று சொன்னாய்.

“இப்ப உங்கப்பா வந்தா நான் எப்படி இதைச் சொல்லப் போறேன்னு எனக்குக் கதி கலங்கறது” என்றாய் கலவரம் தொனிக்கும் குரலில்.

“நீ எதுக்குச் சொல்லணும்? நானே சொல்லிடறேன்.”

“என்னது?”

“ஆமா. கொஞ்ச நாழி முன்னாலே உன்கிட்ட எப்படிச் சொன்னேனோ அதே மாதிரி அவர் கிட்டேயும் சொல்றேன்” என்றேன் நான்.

என் குரலில் தென்பட்ட திடம் உன்னைக் கலக்கியதை உன் முகம் காட்டியது.

நீ என்னிடம் “வேறொருத்தரை மாதிரி அவர் உன் மேல பாயமாட்டாரேடி?  

இப்படிப் பாத்துப் பாத்து வளர்த்த பொண்ணரசி  நெஞ்சில முட்டிட்

டாளேன்னு கலங்கிப் போயிடுவார். அன்னிக்கே அடிச்சிண்டேன், வேலைக்காரியோட பிள்ளையை எதுக்கு நம்மாத்துக் குழந்தையைப் போல வளர்க்கணும்னு. கேக்கலையே. ‘நன்னாப் படிக்கிறான். கெட்டிக்காரனா இருக்கான். ஒரு பையனுக்கு நல்ல வழி காமிச்சோம்னு நமக்கும் ஒரு திருப்தி இருக்கட்டுமே’ன்னார். ஸ்கூல் பீஸ் கட்டினார். சட்டை  சொக்காய் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். ‘உன்னை மாதிரிதானே அவனும் சின்னவன்’னு நானும் உனக்குப் பண்ணிப் போடறதையெல்லாம் அவனுக்கும் கொடுத்தேன். எல்லாம் சாப்பிட்டு விட்டு இப்பிடி நெஞ்சில கொண்டு வந்து கத்தியை சொருகுவான்னு கண்டேனா?” என்றாய்.

நீ புலம்புவதை என்னால் தடுக்க முடியாது.என்று மௌனமாக உட்கார்ந்

திருந்தேன். நான்  பேச வாயைத் திறந்தாலே மேலும் சண்டை வரும். 

அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. வாரிச் சுருட்டிக் கொண்டு நீ எழுந்து வாசலுக்குப் போனாய். அப்பா

உன்னைப் பார்த்துப் புன்னகை செய்தபடி வீட்டிற்குள் வந்தார். ஹாலில் ஊஞ்சலில்  உட்கார்ந்திருந்த என்னைப்  பார்த்து “ஹாய் டார்லிங்? என்ன ஆச்சரியமா இருக்கு? இப்ப மணி ஆறுதானே ஆறது. இன்னிக்கிசுத்தறதுக்கு 

ஃபிரெண்ட்ஸ் யாரும் கிடைக்கலையா?” என்று கேட்டபடி என்னை நோக்கி வந்தார். அப்பா  வந்ததும் அவருக்குக் காப்பி கொண்டு வர எழுந்து சென்ற நீ திரும்பி வந்த போது மாற்றுடை தரித்து அப்பா எனக்கு  எதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்தார்.. நீயும் அவருக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய்.  

 “அப்பா, நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றேன் நான்.

“ஏதோ பிராப்ளம்னு நான் உள்ள வரப்ப உங்க அம்மா மூஞ்சியைப் பாத்ததும் அதுக்கு அடுத்தாப்ல நீ வழக்கத்துக்கு விரோதமா ஆத்தில இருக்கறதும் சொல்லிடுத்து. டெல் மீ” என்றார் அப்பா..

நான் சுற்றி வளைக்கவில்லை. 

“அப்பா, நான் மணியைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றேன் அவரை உற்றுப் பார்த்தபடி.

அவர் கண்ணாடியைக் கழற்றி வேஷ்டியில் துடைத்து விட்டு மறுபடியும் அணிந்து கொண்டார். நீ  எதிர்பார்த்தபடி அவர் அதிர்ச்சி எதுவும் அடையாது இருந்ததைப் பார்த்து உனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“யார் நம்ம மீனாட்சியோட பிள்ளையா?” என்றார்.

“ஆமா. அந்த வேலைக்காரக் கழுதையோட பிள்ளைதான்” என்றாய் நீ கொதிப்புடன். “இருபது வருஷமா இந்த வீட்டு உப்பைத் தின்னுட்டு நன்றி கெட்டத்தனமா நடந்துக்கற நாய்தான்.”  

“அம்மா மீனாட்சிக்கு இதைப்பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாதும்மா. உனக்காவது இன்னிக்கித் தெரிஞ்சது. மணி இன்னும் அவனோட அம்மா கிட்டே இதைப் பத்தி இதுவரைக்கும் வாயைத் திறக்கலை.”

“ஆமா. நாதஸ்வரம் வாசிச்சு மோளம் கொட்டி ஊர் பூரா கூப்பிட்டுச் சொல்லணும் பாரு” என்றாய் நீ ஆங்காரத்துடன்.

“வேதா, நீ சித்த பேசாம இருக்கியா?” என்றார் அப்பா உன்னைப் பார்த்து.

“என்னை அடக்கப் பாருங்கோ. புலியைப் பிடின்னா பூனையைப் பிடிச்சிண்டு வர்ற மாதிரி.”

எனக்கு நீ சொல்வதைக் கேட்டு சிரிப்பு வந்து விட்டது. அப்பாவும் புன்னகை பூத்தார். உன்னாலும் உன் முகத்து செம்மையை அடக்க

முடியவில்லை.

அப்பா என்னிடம் “அபி, உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னை. ஆனால் நீ மத்த விஷயங்களைப் பத்தி யோசிச்சியா? 

“மத்த விஷயங்கள்னா? ஜாதியைப் பத்தியா?

அப்பா என்னைப்  பாத்து “அவ்வளவு முட்டாளாகவா நான் உனக்குத் தெரிகிறேன்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர் குரலின் அமைதியும் ஆழமும் என்னை ஒரு வினாடி தாக்கி விட்டது,

என்னைச் சமாளித்துக் கொண்டு “ஸாரிப்பா” என்றேன். தொடர்ந்து “மணிக்கு  மேலே படிக்கிற உத்தேசம் இருக்கு.”    

‘ஆமா. அஞ்சு கழுதை வயசாகப் போறது, இனிமேதான் படிச்சிக் கிழிக்கப் போறான்” என்றாய் நீ.

“அம்மா!” என்று ஆயாசத்துடன் உன்னைப் பார்த்தேன். அப்பாவும் உன்னைப் பார்த்தது உனக்குப் பிடிக்கவில்லை. 

சில வினாடிகள் கழிந்தன. நாம்  மூவரும் மூன்று தீவுகளைப் போல அமர்ந்திருந்தோம். ஹாலில் கனத்த மௌனம் நிலவியிருந்தது.

“அபி, நீ இன்னிக்கி சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டே. லீவு முடிஞ்சு நீ நாளைக்கி டெல்லிக்குத் திரும்பிப் போறே.  இந்த விஷயத்தைப் பத்தி உடனே எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வெயிட் பண்ணலாம் கொஞ்ச நாளைக்கு. யோசிக்கலாம். பேசலாம். பேசி முடிவு செய்யலாம். சரியா?” என்று அப்பா சொன்னார்.

நீ குறுக்கே விழுந்து ” நாளைக்குப் பேசினாலும் பத்து நாள் கழிச்சுப் பேசினாலும் பத்து மாசம் கழிச்சுப் பேசினாலும் நான் சொல்லணும்ங்கிறதை சொல்லிட்டேன். அவ்வளவுதான்” என்று படபடப்புடன்  அந்த இடத்தை விட்டுக் கிளம்பி உன் அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டாய். உன் கோபத்தை அல்ல உன் துக்கத்தை மறைக்க நீ அப்படிப் போனாய் என்று எனக்குத் தோன்றியது.

அன்றிரவு நான் தூங்கவில்லை. வாழ்க்கையில் நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் உன் கையைப் பிடித்துக்கொண்டு செய்தது  தானே அம்மா என்று அப்போது என் மனம் விம்மியது.  என் சொல்லும் செயலும் கூரான கத்தியைப் போல உன்னை உன் மனதைக் கீறிக் கிழித்துப் போட்டிருக்கும் என்று வலியுடன் உணர்ந்தேன். ரத்தம் கசியும் மனதின் மேல் நின்று கூத்தாடும் ஒரு பிம்பம் என் மனதில் தோன்றி மறைந்தது.

எழுந்து உடனே உன் அறைக்குள் நுழைந்து உன் மடியில் சாய்ந்து கொண்டு இதையெல்லாம் சொல்லி அழ வேண்டும் என்றிருந்தது. ஆனால் நீ என் முகத்தில் விழிக்க மறுப்பாய் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது.

நான் என்ன செய்யப் போகிறேன்? சினிமாவில் வரும் காட்சியென பெற்றோரை உதறி விட்டுப் போகிறவளாகவா? இல்லை, நீ ஒப்புக் கொள்ளாதவரை நானும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லிவிடப் போகிறேனா? அல்லது மணியிடம் போய் நாம் இருவரும் நம் பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் வரை காத்திருப்போம் என்று கூறப் போகிறேனா? நேற்று விமானத்தில் வரும் போதும், இன்று அலுவலக இடைவேளைகளின் போதும் இப்போதும் என்னைக் குத்திப் பிடுங்கும் மென்மை தவிர்த்த முட்கள்.

நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை. 

இப்போது இந்தக் கடிதத்தை எழுதும் அவசியம் என்ன என்று உனக்குத் தோன்றலாம். இதில் சுவாரஸ்யமான திருப்பங்களோ எதிர்பாராத முடிவுகளோ இல்லை என்பதுதான் இதன் பலம் அம்மா. என் மனதில் பட்டதை உன்னிடம் சொல்லி என்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் ஒரு எக்சர்சைஸாக இந்தக் கடிதம் ஆகி விட்டது.

என்றும் உன்னுடைய 

அபி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.