வீ. வைகை சுரேஷ் கவிதைகள்

1
ஓசோனில் சப்தமின்றி ஓட்டையிடும்
குளோரோ ஃப்ளோரோகார்பனை உமிழும் குளிரூட்டும் மகிழுந்தில் இருந்து
இறங்கிய இருவருமே
குளிர் கண்ணாடி அணிந்திருந்தனர்.
குளிரூட்டபட்ட அந்த வணிக வளாகத்தில்
எதிரெதிரே அமர்ந்தனர்.
ஆளுக்கொன்றாய் உயர் ரக
குளிர் பானத்தை
சிரித்து கதைகள் பேசியபடி
மிடறுகளாய் விழுங்கத் தொடங்கினர்
எங்கோ ஒரு மூதாட்டியின் தாகம் தீர்க்கவிருந்த மண் கைலயத்து நீரை…
இன்னும் பத்து அடி அடித்தால்
குடம் நிறைந்து விடுமென
அடிகுழாயினை அடிக்கும்
சிறுமியின் தாகத்தை…
எங்கோ செவக்காட்டு வரப்பை
உயர்த்திக் கட்ட வியர்வை வழிந்தோட
தோலுக்கு மேலோடும் செங்குருதி தானுமுண்டோ என உழைக்கும்
விவசாயி ஒருவனின் குறுங் கனவை….
எங்கோ காற்றின் ஆக்சிஜஸனை
செறிவூட்டி தனது உயிரூட்ட தாகத்துடன்கருகிக் கொண்டிருந்த
பயிரொன்றின் கடைசி பச்சையத்தை….
ஆறும் நீருமாய் வாழ்ந்து
கருவாடென காய்ந்து போன
மீன்களின் உயிர் நீரை….
வாழ்ந்து வந்த ஆற்றங்கரை
வறண்டு போனதால் வாழ்விடம் தேடி
இடம் பெயர்ந்தலையும் பறவைகளின் கண்ணீரை….
தாகத்துடன் அலைந்த காகம் ஒன்று
மண் கலையத்தின்
அடியில் கிடந்த தண்ணீர் மேலே வரும்வரை சிறு கற்களை போட்டு
தனது தாகம் தீர்க்கவிருந்த தண்ணீரை ….
நெகிழி போத்தல்
சிறு குளிர்பானத்தில் மறைந்து கிடந்த பெரும் மறைநீரையும்
கடைசி மிடறென விழுங்கி சுவைத்தனர்.
நதியொன்றின் மரணத்தை.
இப்போது எந்த சலனமுமின்றி
சிரிப்புடன் வெளியேறுமவர்களின்
பற்களின் ஈறுகளில்
படிந்திருந்தது
குடித்த குளிர்பானத்தின் நிறம்….
அது…
சாகடிக்கப்பட்ட நதியொன்றின்
குருதிக் கறையென
படிந்திருந்தது.!

2

நாள் நட்சத்திரம் நேரம் கிழமை திசை
தேதி கிழமை திசை வாஸ்த்து என சகலமும் பார்த்து கட்டிய வீடு அது
அனைத்தும் முடிந்து சுற்றம் சூழ
கூடி பால் காய்ச்சி குடித் தனமும்
வந்தாயிற்கு,
வீட்டின் கூடத்தின் நடுவே அழகிய
மீன்களுடன் கூடி தொட்டியை
ஆசையுடன் பிள்ளைகள் வாங்கி வைக்க, மீன்களை யார் கூடத்தில் வைத்ததென அப்பாவின் கூக்குரலை கேட்டு பிள்ளைகள் படுக்கையறைக்கு மீன் தொட்டியை
இடம் மாற்றி வைத்து அப்பாவிடம்
வாஸ்த்து மீன் என பெயரிட்டனர்.
தொட்டிக்குள் நீந்தும் மீன்களுக்கு
நாள் நட்சத்திரம் நேரம் கிழமை திசை
தேதி கிழமை திசை வாஸ்த்து என எதுவும் தெரியாது, அந்த மீன்களுக்கு
“வாஸ்த்து மீன் ” என்ற பெயர் கூட தெரியாது இந்த நொடி வரை.!

3

ஏதும் செய்ய தோன்றாதவனாய்
வீடே கதியென வீற்றிருந்தேன்
அலமாரியில் அடுக்கப்பட்டு
இதுவரை நான் புரட்டிப் பார்க்காத
புத்தகங்கள் என்னையே
வெறித்தபடி இருந்தன
வீட்டிற்கு வெளியே இருந்த
வெள்ளைச் சேவலொன்று
விடிந்த பிறகும் கூவிக் கொண்டே இருந்தது
எங்கிருந்தோ வந்த கரப்பான் பூச்சியொன்று
என் அறையினுள் அங்குமிங்குமென
உலாவத் தொடங்கியது
வெறுமையாய் இருந்த மூளை
இப்போது கொஞ்சம் யோசிக்கத்
தொடங்கியிருந்தது
இவ்வுலகின் மிக பழமையான
உயிரினமாம்
நாகசாகியில் போட்ட அணுகுண்டையே
என்னவென்று கேட்ட உயிரினமாம்
யோசனைகளினூடே எப்போதோ யாரோ
கூறக் கேட்ட தகவல் ஊர்ந்தது
கரப்பான்பூச்சிகளின் இருப்பிடம்
ஆகச் சிறந்த அசிங்கமான இடமென்ற தகவல்.
இப்போது கரப்பான் பூச்சியின்
பரபரப்பு என்னைப் பற்றிக் கொணடது
ஆத்திரமாய் வந்தது
மிதியடியை எடுத்தவன்
சிறு நேர போராட்டத்தின் இறுதியில்
கரப்பான்பூச்சியை வீழ்த்தினேன்
கால்களை பரப்பியபடியும்
மீசையால் காற்றை துளாவியபடியும்
குற்றுயுரும் குலையுருமாய் கிடந்தது
அதன் உடலில் கசிந்திருந்த வெள்ளை ரத்தம்
என்றோ படித்த விலங்கியல் பாடத்தை
நினைவுக்கு கொண்டு வந்த நொடியில்
அநியாயமாக கொலை செய்து விட்டேன்
என்று உள் மனது
கூக்குரலிடத் தொடங்கியது
கரப்பான்பூச்சியை கொன்றது நியாயமா
என்றொரு மனம் எனக்கெதிராய்
வாதிடத் தொடங்கியிருந்தது
பிரதிவாதியான நான் ஏதும்
பேசாதிருந்தேன்
நான்தான் குற்றவாளியென
உள்ளம் உறுதி செய்ய தொடங்கிய நொடியில்
உயிர் போராட்டத்தில் இருந்த
கரப்பான் பூச்சின் மீசையை பிடித்தவன்
வெளிய நின்ற வெள்ளைச் சேவலின் முன்பு
வீசியெறிந்தேன்
கணப் பொழுதில் கரப்பான்பூச்சியின்
அவஸ்ததைகளுக்கெல்லாம் முடிவு கட்டி
முழுங்கியிருந்தது சேவல்.
இப்போது பிரதிவாதியான என் முன்பு
வாதியான உள்மனது ஊமையென
நின்றிருந்தது.
போன வருசம்
கொக்குநோவு வந்து சாகக் கிடந்த
வெள்ளைச் சேவலை
குல சாமிக்கு நேர்ந்துவிட்ட பின்பு
பிழைத்துக் கொண்டதாம்
அடுத்த வாரம் குல சாமி கோயிலில்
சேவலை அறுத்து ரத்தக் குறி
காட்டிய பின்பு
சேவல் கொழம்பென கொதிக்கும் வாசம்
நாசியை நெருங்கும்
நேரத்தில் தோன்றாமலா போய்விடும்
அதுக்கொரு நியாயம்.

4

சாத்தான் ஓதிய வேதம்

ஏவாள்தான் ஆப்பிளை பறித்து
ஆதாமிடம் கொடுத்தாளாம்…
ஏவாள் செயலை ஏளனம் செய்கிறார்கள்
இன்றுவரை.
படைத்தவன் சொன்னதையே
பகுத்தறிய துணிந்தவள் ஏவாள்.
ஆடையே இல்லாத அறியாமை
அத்தனை நன்றாகவா இருக்குமென்று
ஏவாள் நினைத்திருக்கலாம்
எத்தனை நாள்தான் ஏதுமறியா
நடமாடும் பிணமாக வாழ்வதென.
உழைக்கவே தேவையில்லையென்ற
பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்பா
என எண்ணியிருக்கலாம் ஏவாள்.
உணர்வே இன்றி அது குறித்த பிரக்ஞையற்று வாழ்வதென்ன
உப்புச் சப்பில்லாத வாழ்வென
உணர்ந்திருக்கலாம் ஏவாள்.
இதையெல்லாம் மனிதன்
உணரக்கூட கூடாதென நினைப்பவரெப்படி தேவனாவார் ?!
ஆக மொத்தத்தில்…
ஆதி ஆப்பிளை உண்ண உணர்த்திய வகையில் சாத்தான் ஓதியதுதான் வேதம்..!

5

தும்பைப் பூ ஞாபகம்

முன்னொரு நாளில்
வெண்னிற பூக்களுடன்
தும்பைச் செடிகளாகவே நெறஞ்சு
கெடந்தது காடு கரை
களத்து மேடெல்லாம்.

வெள்ள நிற தும்ப பூக்களின்
பரப்பெங்கும் பறக்கும் பூக்களென
பட்டாம் பூச்சிகள் பறந்து
திரிந்தன.

மேல்ச் சட்டைய அவுத்து
பட்டாம் பூச்சிகளின் மேல்
லாவகமாய் போர்த்தி பிடித்து;
சில நிமிட ரசிப்புக்கு பின்னால
பறக்கவிட்ட நாங்களும்
பட்டாம் பூச்சிகளாய் திரிந்தோம்.

காட்டுவெளியில் வெளஞ்ச
தட்ட பயறு காயெல்லாம்
தும்பச் செடியால சுத்தி
தீயில சுட்டு திங்கையில
தும்பச் செடி உப்பெறங்கி
அவுச்சது மாதிரி அம்புட்டு
சுவையாயிருக்கும்.

வெள்ள வேட்டி சட்டைய துவக்கிறப்போ
தும்ப பூ போல வெளுக்கனும்னு
உவம சொல்லி பேசுவாக
ஊருப் பக்க ஆளுக.

தை பொங்கலுக்கு முன்னால
மாட்டுக் கொட்டடி
வீட்டு வாசல்
வயக்காடு
செவக்காடு
குப்ப மேடு
ககொலசாமினு அத்தனைக்கும்
காப்புகட்டு கட்டுறது வழக்கம்.

ஆவாரம்பூவு வேப்பங்கொல
மாவிலை பெரண்டக்கொடி
சிறுபீளை பூவோட கட்டுற
காப்புகட்டில்
தும்பச் செடியும் பிரதானம்.

கதையெல்லாம் சொல்லிகிட்டே
தும்பைச் செடி காட்ட
களத்து மேடு கூட்டி வந்தேன்
காங்கிரீட் நகரில் வசிக்கும்
என் மகளை.

களத்து மேடெங்கும்
வெள்ள வெளேரென பூத்துக்கிடந்தது
எங்கிருந்தோ இறக்குமதி செய்த
கோதுமையில் கலந்து வந்த
பார்த்தீனியம் ஹிஸ்டோ போரஸ்

ஒன்னுக்குமத்த
உலகமயம்

தட்டுக் கெட்டு போக வைக்கும்
தாராளமயம்

தவிச்ச வாயிக்கு குடிக்கிற
தண்ணிய கூட காசுக்கு விக்கிற
தனியார்மயம்

இப்படியான உலகில்
அடையளத்திற்கு ஏங்கும்
என் மண்ணின் எத்தனையோ விசயங்களை போலவே
ஒரு ஓரத்தில் சிரித்துக்
கொண்டிருந்து அதே
வெண்ணிற பூக்களுடன்
ஒரெயொரு தும்பைச் செடியொன்று.

6

கையில் உள்ள கொத்து
இளம் பருத்தி செடிகளை
வெட்டி விடாமல்
உடன் களை வெட்டும் பத்து பேருக்கு
பின் தங்கி விடாமல் கவனமாக
முன்னேறுகிறார் அம்மா..
கையில் ஏதும் கடிகாரம் இன்றி
நெற்றிக்கு மேலாக கையை குறுக்கே
வைத்து சூரியனை கண்டு
மணி கூறும் அப்பா
கையில் உள்ள மண்வெட்டியால்
நேர்த்தியாக வாய்க்காலை செதுக்கி
நரத்திற்குள் தக்க தண்ணீரை பாய்ச்சுகிறார்
தாகத்துடன் வாடி வதங்கி நிற்கும்
வெண்டை செடிகளுக்கு
ஆட்டு குட்டியை பரிவுடன் மடியில்
கிடத்தி ரத்தம் குடிக்கும் உண்ணிகளை உருவியெடுக்கிறார்
அக்கா…
பக்கத்து தோட்டத்தில் இருந்த
பசும் பயிர்களை நாவால் லாவி கடித்த மாட்டை அடித்த இடங்களில்
தடித்த தழும்புகளை தடவி பார்க்கும்
அண்ணன்…
மடிமுட்டி பால் குடித்த கன்று குட்டியின் வயிறு நெறஞ்சுருச்சானு
பார்க்கிறேன் என்ற படி
கன்றுக்குட்டியின்வயிற்றில் காது வைக்கும் குட்டி தம்பி…
இப்படியாக எழுதுகோல் ஏதுமின்றி
காகிதமும் இல்லாது கவிதைகளை
மண்ணில் நீரில் ஆட்டுக்குட்டியில் மாட்டின் கன்றுக்குட்டியின் மீது எழுதி கடக்கின்றனர்
கவிதையாகவே வாழ்வை.!

7

… சிகப்பு மஞ்சள் பச்சை…

அடுத்தவர்களின் விநாடியை
அபகரிப்பது எப்படி
அடுத்தவர் நம் விநாடியை
அபகரிப்பதில்
அதிகபட்சமாக என்ன
நேரிடும்
அடுத்தவர்களின் விநாடியை
அபகரிப்பது எத்தனை
அபத்தமான ஒன்று
அநாகரிகமான ஒன்ற
ஆபத்தான ஒன்று.

அந்த பெருநகர சாலையின்
நான்கு முனை சந்திப்பில்
பச்சை விளக்கு அணைந்து
மஞ்சள் விளக்கு ஒளிர்கையில்
இலக்கொன்றுடன் சீறி பாய்ந்து
கடந்து விட துடிக்கும்
யுவனொருவனின்
இரு சக்கர வாகனமொன்று
எதிர்ப்புறத்தில் சீற்றத்துடன்
பெரும் வாகனமொன்று
சிகப்பு விளக்கு ஒளிரப் போகும்
விநாடியை போகும் போட்டி
விநாடியில்
சாலையில் சிதறுகிறது
சிகப்பு நிற இரத்தம்.

8

சலனமின்றி வாழ்தலென்பது!

சாகடிக்கப்பட்ட சடலத்தின் மீது
சலனமின்றி வாழ்வது
சஞ்சலமின்றி உறங்குவது
சம்மனமிட்டு சாப்பிடுதல் சாத்தியமா

ஆம் அப்போது
ஆறெங்கும் மணல்வெளியாக கிடந்தது
இரு கரைகள் தொட்டு நீர்
புரண்டோடியது
ஓடுமீன் ஓட உறு மீன் வரும் வரை
ஒற்றைக் காலில் நிற்க வேண்டிய
அவசியமில்லை கொக்குகளுக்கு
நண்டுகளும் தவளைக்கம்
கரையோரம் உறவாடிக் கிடந்தன
நாணல் கூட்டம நாணும் பெண்களென காற்றிலசைந்து
கிடந்தன
ஆற்றங்கரையோர தென்னை மரங்கள்
ஆற்றோடு போகும் நீரில் அசைந்தசைந்து
அழகு பார்த்தன
இரவுப் பொழுதுகளில் நிலவு
ஆற்று நீரிலிறங்கி
தட்டுத் தடுமாறி நடை பயின்றது

ஆற்றில் மணலெடுத்து
அடுக்கு மாடிகள் கட்டுங்காலம் வந்ததும்
அடியோடு மாண்டது ஆறு மட்டுமல்ல
மேலே சொன்ன அத்தனையும்தான்;
ஆற்றைக் கொன்று அள்ளிய மணலில்
கட்டிய வீட்டில் கதவடைத்து உறக்குகிறோம்
பொலிவுறு நகர்றென்ற பெயரிலான
காங்கிரீட் கட்டிடங்கள்
கொன்றழித்த ஆற்றின்
சடலம் மட்டுமல்ல
அழித்தொளித்த மீன் நண்டு தவளை
இப்படியான இன்ன உயிர்களின்
ஆன்மாக்களை சுவடன்றி அழித்த
சுவரகள் சுடுகாடென்ற உண்மை உணர்ந்தும்
அத்தனையையும் உதறிவிட்டு
உறங்கியெழும் நமக்கு
சாத்தியம்தான்…
சடலமொன்றின் மீது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.