ராம் பிரசாதின் உலகம்

[இவர்கள் இல்லையேல் – நாவல் -அத்தியாயம் 7]

[டோக்ரி மொழி நாவல்: மூலம்- பத்மா ஸச்தேவ்; தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி]

 காலை வேளைகளில் நான் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். ஒருநாள்,  பத்து பன்னிரண்டு வயதிருக்கக்கூடிய சிறுவன் ஒருவன்,  இலக்கேதுமின்றி,  எங்கள் பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன். யார் நீ,  எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டதற்கு,  அவன் சரியாக பதிலளிக்கவில்லை. என் வீட்டில்,  எனக்கு கூடமாட உதவியாக இருக்க வருகிறாயா என்று கேட்டேன். அவனது வெகுளித்தனமான கண்களில் நம்பிக்கையின் ஒரு கீற்று மின்னி மறைந்தது. நான் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். என் மகளின்,  சிறியதாகிப் போன நிக்கரையும் சட்டையையும் கொடுத்து,  குளித்துவிட்டு வரச் சொன்னேன். பிறகு சாப்பாடு கொடுத்தேன். பாவம் எத்தனை நாட்களுக்கு முன்பு சாப்பிட்டானோ?

அவன் பெயர் ராம் பிரசாத். சுருக்கமாக ராம் என்று அழைத்தால்,  அவனுக்குப் பிடிக்காது. சில நாட்களிலேயே அவன் எங்கள் வீட்டில் எல்லோரிடமும் நன்றாகப் பழகிக்கொண்டு விட்டான். வீட்டுக்கு வெளியே போக மட்டும் பெரிதும் தயங்கினான். ஏன் என்று கேட்டதற்கு,  நான் இதற்கு முன்பு வேலை செய்த டீக்கடைக்காரன் என்னை பார்த்தால்,  என் தோலை உரித்து இழுத்துக் கொண்டு போய் விடுவான் என்றான். நீ அவனுடைய கடையிலிருந்து பணம் ஏதேனும் திருடி விட்டாயா என்று நான் கேட்டதற்கு,  அவன் கோபத்துடன்,  ‘இல்லை.  மாறாக அந்த டீக்கடைக்காரன் தான் நான் சேமித்து வைத்திருந்த  சம்பளப் பணத்தை பிடுங்கிக் கொண்டு,  என்னை அடித்து விரட்டி விட்டான்’ என்றான். வீட்டுக்கு போகும்போது கொண்டு போகலாம் என வைத்திருந்த அத்தனை பணத்தையும் பிடுங்கிக் கொண்டு விட்டான் என அழுகிற குரலில் சொன்னான். இனி உங்கள் வீட்டில் வேலை செய்ததற்காக நீங்கள் தரப்போகும் சம்பளத்தைத் தான் நான் ஊருக்குப் போகும்போது கொண்டு செல்ல வேண்டும் என வெள்ளந்தியாக கூறினான்.

 “எங்கள் வீட்டில் ஆறு எருமை மாடுகள்,  இரண்டு பசு மாடுகள் மற்றும் ஒன்பது ஆட்டுக்குட்டிகள் உண்டு. நான்தான் அவற்றை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வேன். வீட்டில் எந்த பொருளுக்கும் பஞ்சமில்லை.ரொட்டியோடு கூட வேகவைத்த பருப்பு,  காய்கறிகள்,  ஊறுகாய் உருளைக்கிழங்கு மற்றும் தயிர் கட்டாயம் இருக்கும். ஒருநாள்,  பசி எடுத்ததால்,  நான் ஒரு பசு மாட்டின் பாலைக் குடித்துவிட்டேன். அப்பாவுக்கு தெரிய வந்ததும், என்னை மிகவும் மோசமாக அடித்து விட்டார்  ஒரு நோயாளிக் குழந்தைக்காக அந்த பசுவின் பாலை தினமும் விற்பார்கள் என்று பிறகு தெரியவந்தது. நான் கோபத்தில் இரண்டு நாட்கள் வீட்டில் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். மூன்றாம் நாள் காலை,  வீட்டிலிருந்து கொஞ்சம் பணமும்,  ஒரு பையில் துணிகளையும் எடுத்துக்கொண்டு பஸ் ஏறி  தில்லி வந்து விட்டேன். வண்டி ஓட்டுநர் என் மீது பரிதாபப்பட்டு,  என்னை தனக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர அனுமதித்தார். வழி முழுவதும் தூங்கிக் கொண்டே வந்தேன். தில்லியில் இறங்கி,  பஸ் நிறுத்தத்தில் இருந்த குழாயில் தண்ணீர் குடிக்கும் போது,  அம்மாவின் நினைவு வந்தது. மிகவும் அழுதேன்.  அந்த ஓட்டுநர் தான் என்னை டீக்கடைக்காரரனிடம்  வேலைக்கு சேர்த்துவிட்டார். நடு நடுவே எப்போதாவது வந்து பார்ப்பார். அன்பாகப் பேசுவார்” என்றான். 

‘என் அம்மா தினமும் பேருந்து நிலையத்திற்கு வந்து அழுவதாகவும் நான் தில்லியில் பத்திரமாக இருப்பதாக அம்மாவிடம் கூறியதாகவும் அந்த ஓட்டுநர் தெரிவித்தார். ஒருமுறை,  அம்மா அவர் கையில் ஒரு டப்பா நெய்யும் லட்டுகளும் எனக்காக கொடுத்து அனுப்பினாள். என்றாவது ஒருநாள்,  அந்த ஓட்டுநர் நான் இங்கு இருப்பதைத் தெரிந்து கொண்டு என்னை தேடி வருவார். நான் அவரோடு ஊருக்கு போவேன். அப்போது அம்மாவுக்கு போர்த்திக்கொள்ள ஷாலும்,  அப்பாவுக்கு  கோட்டும் வாங்கிக் கொண்டு போவேன்,’ என்றான். நான் தில்லி வரும்போது,   கண்ணாடி போத்தலில் நிரப்பி இருந்த சிவப்பு  நிற சர்பத்தை ஓட்டுநர் எனக்கும் குடிக்கக் கொடுத்தார். மிகவும் சுவையாக இருந்தது. நான் கிராமத்துக்கு திரும்பிப் போகும்போது,  முழு போத்தலையும் வாங்கிக் குடிப்பேன் என்று மகிழ்ச்சியாகக் கூறினான்.

 எனக்கு ராம்பிரசாதின் மீது மிகவும் வாஞ்சை ஏற்பட்டது. அவனும் தன் வீட்டைப் போலவே நினைத்து மிகுந்த கவனத்துடன் வேலை செய்தான். 

ஒரு நாள்,  என்னிடம் வந்து,  ‘உங்களிடம் தான் இவ்வளவு புடவைகள் இருக்கிறதே,  நான் ஊருக்கு போகும் போது என் அம்மாவுக்கு ஒரு புடவையும்,   அக்காவுக்கு ஒரு  சல்வார் கமீஸு தருவீர்களா’ என்று கேட்டான். நான் ‘அதற்கென்ன,  உன் அப்பாவுக்கு ஒரு கோட்  கூட வாங்கித் தருகிறேன்’ என்றேன்.

ஒரு நாள் மதியம்,  இரண்டு மூன்று நண்பர்கள் என்னைக் காண வீட்டுக்கு வந்தார்கள். நான் ராம்பிரசாதின் அறையின் மணியை அழுத்தினேன். பதிலேதும் இல்லை. வீடு முழுவதும் தேடியும் அவனைக் காணமுடியவில்லை. பிறகு நானே நண்பர்களுக்கு தேநீரும் சிற்றுண்டியும் தயாரித்துக் கொடுத்தேன். சற்று நேரம் கழித்து,  ராம்பிரசாத் தூக்க கலக்கத்தில் கண்களை கசக்கியவாறு வந்தான். ‘ டேய் கிறுக்கா,  வீட்டில் விருந்தினர் வந்திருப்பது கூடத் தெரியாமல் எங்கே போய்த்தொலைந்தாய்’ என்று கேட்டேன்.

அதற்கு அவன்,  ’நீங்கள் மணி அடித்தது,  என்னைத்  தேடியது எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். நான் தான் இருக்கட்டும் என்று உறங்கி விட்டேன். நீங்களும் எப்போதாவது கையை காலை அசைத்து வேலை செய்ய வேண்டாமா? அது உங்கள் ஆரோக்கியத்துக்கு  நல்லது  என்றுதான் மௌனமாக இருந்தேன்’ என்றான். நான் டீக்கடையில் வேலை செய்யும் போதும் இப்படி பகலில் தூங்குவது வழக்கம்.  வேண்டுமானால்,  அந்த டீக்கடைக்காரனைப் போல, நீங்களும் என்னை அடித்து விடுங்கள். நான் கட்டாயம் மூன்றிலிருந்து ஐந்து மணிவரை ஓய்வெடுப்பேன். அது என் உரிமை’ என்றான். எனக்கு கோபம் தலைக்கேறியது.அப்படி யார் சொன்னது உன்னிடம் என்று கேட்டேன்.

“இருபதாம் நம்பர் பங்களாவில் வேலை செய்கிற லோபோ,   ‘தினமும் நமக்கு இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைக்க வேண்டும்’என்று சொல்லி இருக்கிறான். அப்படி நீங்கள் ஓய்வு தராவிட்டால்,  உங்களை சிறையில் கூட அடைத்துவிட முடியும் தெரியுமா” என்றான். எனக்கு சிரிப்பு வந்தது. 

“நீ என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவாயா” என்றேன். ”ஏன்,  நான் இங்கு வேலையிலிருந்து  திடீரென நின்று  விட்டால்,  நீங்கள் கூடத்தான்,  நான் உங்களுடைய மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டேன் என்று போலீஸிடம் புகார் அளிக்க முடியும் இல்லையா? எனக்கு   லோபோ எல்லாம் சொல்லித் தந்திருக்கிறான்” என்றான்.

 இந்தமுறை,  விருந்தினர்களும் என்னுடன்  சேர்ந்து சிரித்தனர். 

சூழ்நிலை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்புவதை உணர்ந்த ராம்பிரசாத்,  என் இருப்பையே முழுவதுமாகப்  புறக்கணித்து,   விருந்தினர்களிடம்,  ‘இன்னொரு கோப்பை தேநீர் குடிக்கிறீர்களா,  நான் மேம் ஸாபை விட நன்றாக தேநீர் தயாரிப்பேன்’ என்றான்.  ராம் பிரசாத் குழந்தை மாதிரி. மாதிரி என்ன,  குழந்தையே தான்.

ஒருநாள், அவன் இங்கிருக்கும் விவரம் தெரிந்து,  கிராமத்திலிருந்து அவனுடைய சித்தப்பா அவனை திரும்ப அழைத்துச் செல்ல வந்தார். நான் அவனது சம்பளத்தை தனியாக வைத்திருந்தேன். அது குளிர்காலம். உள்ளே அணிந்திருந்த கம்பளி ஆடைக்கு உட்புறம் சிறிய பையை தைத்து அதற்குள் பணத்தை வைத்து பத்திரப்படுத்தினேன். உன்னிடம் பணம் இருக்கிறது என்று யாரிடமும் சொல்லாதே என்று பலமுறை எச்சரித்தேன். வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் தனியாகக் கொடுத்து,  சாப்பிட உணவு வகைகளையும் கட்டித் தந்தேன். என்னுடைய முகவரி எழுதப்பட்ட நான்கைந்து தபால்  அட்டைகளையும்  தந்து,  அவ்வப்போது கடிதம் எழுதும்படி கூறினேன். அவன் விருப்பப்படியே,  அவனது தாயாருக்கும் சகோதரிக்கும் துணிகளும்,  தகப்பனாருக்கு குளிர்காலத்தில் அணிகிற கோட் ஒன்றையும் தந்தேன். நடுவில் லோபோ ஓரிருமுறை ராம் பிரசாதைக் குறித்து விசாரிக்க வந்தான். இன்றும்,  ராம்பிரசாதின் நினைவு வரும் போதெல்லாம் அவன் ஒழுங்காக ஊர் போய் சேர்ந்திருப்பானா என்ற கவலையே என்னுள் எழும்.

(தொடரும்)

Series Navigation<< சமேலி, சுந்தரி, சீனாமீண்டும் சீனா >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.