மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும்

முதலில் மரபணு திருத்தம் என்பதுதான் சரி, மரபணு மாற்றம் எப்பொழுதும் பொருந்துவது இல்லை, ஏன்? மரபணு எங்கேயிருக்கிறது?, மரபணுக்களில் எத்தனை அடிப்படை வகைகள் உள்ளது? அனைத்து மரபணுக்களும் மரபு பண்பினை அடுத்த தலைமுறைக்கு செல்லும் (கடத்தும்) மரபணுக்கலல்ல, என்கிற அடிப்படை தகவல்களுடன் ஆரம்பிக்கலாம். 

மரபணு (Genomic DNA)

பெரும்பாலான உயிருள்ள செல்களினுள் (cells) இருக்கின்ற டீஆக்சி ரைபோநியூக்ளியைக் அமிலங்களே [(DNA) (சில வைரஸ்கள் ரைபோநியூக்ளியைக் அமிலங்களையும் (RNA), ப்ரியான் எனப்படும் நுண்ணுயிரிகள் இரட்டிப்பாகும் தன்மையுடைய புரதங்களையும் கூட மரபணுக்களாக(!) வைத்துக்கொள்ளுகின்றன)] மரபணுக்களாக (Genomic DNA) செயல்படுகின்றன. இந்த மரபணுக்களின் அமைப்பும் அவற்றின் தன்மையும் (எவ்வளவு பெரிய அல்லது சிறிய புரதங்களை, எத்தகைய வரிசையில் போன்ற குணாதிசயங்கள்) ஒவ்வோர் உயிருக்கும் மிக மிகத் தனித்தன்மையுடைவை. இத்தனித்தன்மை மட்டுமே வைரஸ்களையும், வாத்துகளையும், மனிதனையும், மாங்காயையும் பிரிக்கின்றது. 

மரபணுக்களின் அமைப்பு

மீத்தேனை உருவாக்கும் திறனுடைய (மெதானஜெனிக்- methanogenic) ஒரு பாக்டீரியம் உதாரணமாக 99 மரபணுக்களை, 123456……99 என்று வரிசைக்கிரமம் மாறாமல் வைத்திருக்கும் எனக் கொண்டால், அதே மீத்தேனை ஆற்றலாக மாற்றி வளர்க்கும் திறனுடைய மற்றொரு பாக்டீரியத்தின் (மெதைலொ ட்ரொஃப்ஸ்-methylotrophs) மரபணு 321456879…..99 என்று சிறு மாறுதலுடன் அமைந்திருக்கலாம். இந்த மரபணுக்கள் செல்களினுள் எந்த இடத்தில் அமைந்துள்ளன என்பதை பொருத்தும்கூட அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள நிலை நிர்ணயிக்கப்படுகிறது. தியேட்டரில் Box பகுதிக்கான நுழைவுச்சீட்டுடன் தனி அறையில் அமர்ந்து படம் பார்ப்பது ஏதோ ஒரு விதத்தில் மேம்பாடு என்பது போல, பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள அமீபா, பூச்சிகள், தவளைகள், மனிதன், தாவரங்களில் – தாலோஃபைட்டா, டெர்ரிடோ ஃபைட்டா, ஜிம்னோஸ்பெர்ம், பூக்கும் தாவரங்கள் இவை அனைத்திலும் மரபணுக்கள் க்ரோமோசோம்களில் வைக்கப்பெற்று அந்த க்ரோமோசோம்கள் செல்லின் மற்ற பகுதிகளிலிருந்து ஒரு ந்யூக்ளியொலை சவ்வினால் (Nucleoli membrane) பிரிக்கப் பெற்றுள்ளன, அப்பகுதி நியுக்லியஸ் (Nucleus). 

க்ரோமோசோம்

M. jannaschill (1,700), E.coli (4,700), S. cerevisiae (13,500) A. thaliana (100,000), Trillium (100,000,000), D. melanogaster (165,000), H. sapiens (3,000,000) எண்களெல்லாம் அவை கொண்டுள்ள மரபணுக்களின் சுமாரான எண்ணிக்கையினை (KB – kilo base) குறிப்பவை. பணம் அதிகமானவுடன் பாதுகாப்பாக வைப்பது போன்று, எண்ணிக்கை (No of Nucleotides) அதிகமாக அதிகமாக, அவை தனியே இல்லாமல் குரோமோசோம்களினுள் (அவை நியுக்ளியசினுள்) வைக்கப்படுகின்றன. உயிர் இரட்டிப்பாகும்போது சில அமைப்புச் செயலாளர்களான(!) குறிப்பிடத்தகுந்த சில புரதங்களின் மூலம் (eg. DNA polymerase) மரபணுக்களின் அமைப்பு மாறாமல் பிரதியெடுத்தல் நடைபெறுகிறது. அதன் அமைப்பும் எண்ணிக்கையும் பரிணாமத்தால் வந்தது/வரும் என்பது விஞ்ஞானபூர்வமான விளக்கம். DNA-யும், அதன் தயாரிப்பான புரதங்களும், இத்தயாரிப்பை வழிநடத்தும் mRNA (messangerRNA) போன்ற அனைத்து macro molecule-களும் அமைவதற்கு எந்தக் காரணங்களும் வேண்டியதில்லை. அவற்றின் அடிப்படைக் கட்டுமானமான எலக்ட்ரான்களின் (electronic configuration of structure) பண்புதான் அவை அப்படி அமையக் காரணம். ஒரு மனிதனோ, பாக்டீரியமோ எல்லாமே ஒரு மாலெக்யூலர் கட்டமைப்புதான். நான் தண்ணியடிக்கிறதோ, டாவடிக்கிறதோ, பதிவரசியலோ, பாழும் கிணற்றில் விழுவதோ என்னுடைய எலக்ட்ரான்களைச் சார்ந்தது, அதற்கெல்லாம் எந்தக் காரணமும் கிடையாது. மனிதன் தோன்றியதற்கே ஒரு பெரிய காரணம் இல்லை என்றுரைத்து இந்திய தத்துவ மரபுகளைக்கூட வம்பிழுக்கலாம். 

ப்ளாஸ்மிட் (நுண்கிருமிகளில் உள்ள மரபுக்குணம் எடுத்துச்செல்லும் அமைப்புக்கள் – Plasmid DNA)

மரபணு திருத்தத்தினைச் சரியாகப் புரிந்துகொள்ள, முக்கியத்துவம் வாய்ந்த பாக்டீரியம்களின் மற்றொரு மரபணுவினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சில பாக்டீரியம்களில் (வழக்கம் போல் சில விதிவிலக்குகள்) மட்டும் கூடுதலாக செல்லினுள் இருக்கிற, அளவில் சிறிய மரபணுவான ப்ளாஸ்மிட்கள் (Plasmids) என்பன. இந்த பிளாஸ்மிடுகளின் உதவியால்தான் இன்றைக்குத் தூணிலும் துரும்பிலும் (Ubiquitous nature), இன்னும் சொன்னால் Nuclear Radio reactor மற்றும் இரண்டரை கிலோ மீட்டர் ஆழமுள்ள பூமி, அழுத்தம் அதிகமான ஆழ்கடல் என்று நீக்கமற (2 & 3) பற்பல இடங்களிலும் சில பாக்டீரியம்களால் வாழ முடிகிறது. 

Plasmids (நுண்கிருமிகளில் உள்ள மரபுக்குணம் எடுத்துச்செல்லும் அமைப்புக்கள்) மூன்று வகைப்படும். (1) Anitbiotic-க்கு எதிராக வாழக் கூடிய R-plasmids (Resistance-plasmid) (2) இந்த எதிர் பண்பினை, அது இல்லாத இன்னொரு பாக்டீரியத்துக்குக் கொடுக்க F-plasmid (Fertility) (3) கடைசியாக Col-plasmid (இது பற்றி இன்னொரு இடத்தில் பார்க்கலாம்). 

இந்த பிளாஸ்மிட்கள்தான் சில நேரங்களில் பாக்டீரியம்கள் பெட்ரோலில் கூட வளர உதவுகின்றன. Steroids போன்ற விஷத்தன்மை உடையவற்றிலிருந்துகூட ஆற்றலை உருவாக்கி கொண்டு பேக்டீரியம் வளர உதவி செய்கின்றன. Plasmids DNA எவ்வாறு தோன்றியது, ஏன் இவற்றின் பிரதியெடுப்பு, அடுத்த தலைமுறைக்கு கடத்தல் போன்ற பண்புகள் தனியாக நிர்வகிக்கப்படுகின்றன (independent from Genomic DNA) என்பதற்கு இதுவரையில் வரையறுக்கப்பட்ட காரணங்கள் கண்டறியப்படவில்லை. 

பாக்டீரீயங்களின் சூழ்நிலை, வளரும் சூழல் என்பது நிமிடத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருப்பது. அந்த மாற்றத்துக்கு ஏற்றாற்போல் தகவமைத்து பரிணாம வளர்ச்சி (adaptive evolution) அடைவதில் இந்த plasmid-கள் பெரும் பங்கு வகிக்கின்றன. (இந்த இடத்தில், கட்சிகளின் கூட்டணி மாற்றப் பரிணாம வளர்ச்சி கூட, அறிவியல்பூர்வமானதுதான் என்று யோசனை செய்கிற மக்கள் – தொடந்து படிப்பது உங்கள் மனநலனுக்குக் கேடானது). 

Plasmid DNA-விலோ அல்லது மரபணு (genomic DNA)-விலோ ஏற்படுகின்ற திடீர் மாற்றம் (mutation) மூலம், சூழ்நிலையில் குளுக்கோஸ் இல்லையென்றால் சுக்ரோஸ் சர்க்கரை வைத்துகொண்டு வாழ்கின்றன. (ஒல்ட்மங்க் இல்லாமல், 5000 குடிக்கிறதுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை.) இந்த plasmid தவிர்த்து மரபணுத் தீவுகள் (Genomic islands), ட்ரான்ஸ்போஸான்கள் (Transposons) என்று மேலும் சில (Extra genetic elements) மரபணுக்கள் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். 

திடீர் (சிறு) மாற்றத்தின் மூலம் தகவமைப்பு எப்படிச் சாத்தியம்? கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியத்தின் அடிப்படை உடற்கூறு செயலியலானது ( BMR – அதாவது ‘பேஸல் மெடபாலிக் ரேட்’ – Basal metabolic rate), அதனுடைய உடலின் அளவு மற்றும் பருமன் சார்ந்து (Surface to volume ratio), ஒரு யானையின் BMR-ஐவிட அதிகம். நமது ஊரின் வெப்பநிலை திடீரென்று 60°C ஐத் தொடும் பட்சத்தில் யானைகளால் வாழமுடியாது. ஆனால் பாக்டீரியம்கள் ஒரு சிறிய மாற்றத்தினை தம் மரபணுக்களில் ஏற்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பிக்கும். இவ்வாறு மரபணுவில் இயற்கையாகவே(?) ஏற்படும் சிறு மாற்றம் (spontaneous mutation) ஆய்வகத்தில் பல வழிமுறைகளில் செயற்கையாக(?) ஏற்படுத்தப்பட்டு அதன் விளைவு/கள் ஆராயப்படும். 

குளூக்கோஸை கொண்டு உயிர் வாழ மரபணு அமைப்பு அதனுள் எப்படி இருக்க வேண்டும், சுக்ரோஸுடன் சுபிட்சமடைய எத்தகைய மாற்றம் தேவைப்படுகிறது, அதனால் எந்த புரத(ம்)ங்கள் மாற்றப்படும் என்பதெல்லாம் அடிப்படை ஆராய்ச்சி. 

நாம் கவனம் கொள்ளவேண்டியது இத்தகைய மாற்றம் அவற்றின் சூழ்நிலையிலேயே இயற்கையாகவே நடைபெறுகிறது என்பதுதான். ஆய்வகத்தில் நாம் சுக்ரோஸ் கொடுப்பது எவை எவை ஏற்கெனவே மாறியுள்ளன என்பதனைத் தேர்ந்தெடுப்பதற்காகத்தான் (Selection pressure). நாம் சுக்ரோஸ் கொடுப்பதால் அவை மாறவில்லை. மற்றும் இந்த தகவமைப்புக்கு மொத்த மரபணுக்களும் மாற்றப்படவில்லை (replacing genome), சில மரபணுக்கள் மட்டுமே திருத்தப்படுகின்றன. அத்திருத்தம் ஜீனோமிக் DNAவிலோ அல்லது பிளாஸ்மிட் DNA-விலோ நிகழ்த்தப்படலாம் (Genetic modification). பாக்டீரியாவில் எந்த மரபணு திருத்தப்படுகிறது? Genomic DNA or plasmid DNA? தாவரங்களில் எது? விலங்குகளில் எது? இயற்கையாக மரபணு மாற்றம் நடைபெறுகிறதா? அல்லது BT-cotton-ல் மட்டும் நடைபெற்றதா? 

இவற்றைப் பார்க்கலாம். 

பாக்டீரீயாவில் மரபணு திருத்தங்கள் (Genetic modification in bacteria) 

மரபணு மாற்றம் என்றவுடன் பெரும்பாலும் Genomic DNA-வில் செய்யப்படும் மாற்றம்தான் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. எல்லா நேரங்களிலும் அப்படியன்று (except commercial vectors). 

3 நாட்களில் வளர்ச்சியடைந்து, வைட்டமின் B12 தரும் ஒரு பாக்டீரியத்தின் (A) மரபணுக்களின் சிறு பகுதி (GAAATCAACTTAA – இது போல) மற்றொரு பாக்டீரியத்தின் (B) plasmid DNA-வுடன் ஒட்டப்பட்டு (now this plasmid DNA of B becomes recombinant DNA, and B known as genetically modified), இந்த B-யின் plasmid DNA, 8 மணி நேரத்தில் அதே அளவு B12 தரும் வல்லமையுடைய C – என்ற மற்றொரு பாக்டீரியத்தினுள் செலுத்தப்பட்டு அதன் மரபணு பகுதியாகவோ அல்லது plasmid DNA-வாகவோ திருத்தப்படுகிறது. மற்றொரு உதாரணம். 30% ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியத்தின் (அ) genomic DNA 12345,,,99 என்று அமைந்திருக்குமானால், அதன் plasmid DNA atctttgcgaaa என்று அமைந்திருக்கும். இந்த அமைப்பினை atatttgcgaaa என்று திருத்தி (editing) மீண்டும் அதனை அந்த (அ) செல்லினுள் செலுத்தும்போது அதன் ஆல்கஹால் தயாரிக்கும் பண்பானது 40%-ஆக அதிகரிக்கும் (ஏன் அதிகரிக்கிறது என்பதையும் சேர்த்து எழுதினால் ஒரு PhD வாங்கலாம்). இந்த முறையில்தான் 1980-லிருந்து ஆல்கஹால் தயாரிக்கப்படுகின்றது. இந்த recombinant strain தருகின்ற ஆல்கஹாலினால் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால் அதனைக் குடித்துவிட்டு ஏறுக்கு மாறாகக் ‘கருத்துகளை கக்குவது’ பிரச்சனைக்குரியதாக அறியப்படுகிறது. 

சில பாக்டீரீயம்களில் (உதாரணம்: Antibiotic தருகின்ற Streptomycetes. Sp) Genomic DNA கூட அதிக உற்பத்திக்காக ஆங்காங்கே மாற்றப்பட்டுள்ளன. மீண்டும் புரிந்து கொள்ளவேண்டியது, எந்த ஒரு பாக்டீரீயத்தின் முழு மரபணுக்களையும் (Genomic DNA) மாற்ற இயலாது. அவ்வாறு மாற்ற முயன்றாலும் அந்த பாக்டீரியத்தின் எதிர்ப்புத்தன்மை காரணமாக (due to restriction endonucleases), செலுத்தப்படும் மரபணுக்கள் சென்று சேராது. ஆனால் சில மரபணுக்களை மட்டும் திருத்தமுடியும். இந்த மாற்றங்கள் ஏதோ திடீரென்று ஆய்வகத்தில் மட்டுமே உருவாக்கப்படுபவை அல்ல. 

இரு வெவ்வேறான பேரினத்தினை (Genus) சார்ந்த பாக்டீரியம்கள் (Pseudomonas Sp & E.coli) அவற்றின் சூழ்நிலையில் வளரும்போது அவற்றுக்கிடையே மரபணுக்கள் பரிமாற்றம் (through transposable elements) நடந்து கொண்டேதான் இருக்கும் (Horizontal gene transfer – transformation, conjugation & transduction). அ-விலிருந்து ஆ-க்கும், அங்கேயிருந்து உ-என்ற மற்றொரு பாக்டீரீயத்துக்கும், அங்கேயிருந்து மீண்டும் அ-வுக்கும் தொடர்ந்து நடைபெறும். ஆய்வகத்தில் அதற்கேற்றாற்போல் சூழல் (conditional existence) உருவாக்கப்பட்டு மரபணு திருத்தம் செய்யப்பட்ட பாக்டீரியம் அதன் மாற்றத்தினை இழந்துவிடா வண்ணம் கையாளப்படுகிறது, அவ்வளவுதான். 

எதற்காக இவ்வாறு மரபணுவை மாற்றவேண்டும்? (or) மாறுதலுக்குட்பட்ட மரபணுவை ஆராயவேண்டும்? குறைபாடுகளோ, மாறுதலோதான் அந்தக் குறிப்பிட்ட மரபணு(களின்)வின் வேலை எதுவென்று அடையாளம் காட்ட உதவும். காது கேட்கவில்லை என்றால்தான் அதன் வேலை என்னவென்று தெரியவரும். காதலில் தோற்றவருக்குத்தான் இழந்த காதலின் அருமை புரிகிற மாதிரி. 

ஒரு மரபணு குறைபாடு/மாறுபாடுதான் அதன் வேலை அந்த பாக்டீரியத்தில் என்னவென்று காட்டும். அந்த வேலைதானா என்று சரிபார்ப்பதற்காக அதே மரபணு வேறு ஒரு பாக்டீரியத்துக்கு மாற்றப்பட்டு அதே வேலை அங்கும் நடைபெறுகிறதா எனப் பரிசோதிக்கப்படும். சென்று சேர்ந்தது சரியான மரபணுவின் பகுதிதான் என்று நிரூபிக்கப்படும். 

ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறதென்று என்னால் நிரூபிக்கமுடியும். என்னிடம் அதே புத்தகம் இல்லை என்று மற்றொருவரால் எப்படி நிரூபிக்கமுடியும்? வேறு ஓர் இடத்தில் அது இருக்கிறதென்று நிரூபித்தால் போதும் (9). அதுபோல வேறு ஓர் இடத்தில் இந்த மரபணுவின் இருப்பும் அதன் விளைவு(களு)ம் நிருபிக்கப்படும். 

GM plants 

இதுபோலவே சில பாக்டீரியங்களின் உதவியுடன், தாவரங்களிலும் அதன் மரபணுக்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. உதாரணம்: பூஞ்சணம் (Fungus) என்ற நுண்ணுயிரி, ஒரு தாவரத்தின் இலையின் செல்லுலோஸினை உண்டு தாவரத்தினை அழிப்பதாகக் கொள்வோம். Fungus-ன் செல்சுவர் கைட்டின் என்ற மூலக்கூறால் ஆனது. இந்த கைட்டினைச் செறிக்கும் ஒரு நொதி (Enzyme) ஒரு பாக்டீரியத்தின் சிறு பகுதியான மரபணுவில் (மொத்த மரபணுக்களில் அல்ல) இருக்கும் பட்சத்தில், அத்தகைய சிறு பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மற்றொரு பாக்டீரியத்தின் உதவியோடு (Agrobacterium mediated transformation) அத்தாவரத்தின் மரபணுக்களோடு சேர்க்கப்படும். இப்போது ஒட்டு மரபணுவால் ஆன அத்தாவரம் (Transgenic plant), Fungus-ஆல் தாக்கப்படும்போது, அதனை எதிர்த்துத் தானே அழிக்கும் புதுச்சக்தியைப் பெறும். இங்கு முக்கியமானது, பரிணாம வளர்ச்சி அடைந்த தாவரங்களில் மரபணுக்களை தையல்கலைஞர் போன்று வெட்டி ஒட்டமுடியாது. மரபணு அமைந்துள்ள குரோமோசோம்களில் ஏதாவது ஒன்றில் இத்தகைய மாற்றம் நடைபெறும். அல்லது சில நேரங்களில் சில குரோமோசோம் மொத்தமும் திருத்தப்பட்டு செல்லினுள் அனுப்பப்படும் (Nuclear transplantation). 

இது இயற்கைகு எதிரானதா? 

இல்லை. இத்தகைய ஆய்வக மாற்றம், இங்கு நடைபெறாவிடினும், எல்லா நேரங்களிலும் இயற்கையாகவே நடைபெறும் இயக்கம்தான் (When a plant virus infects and injects its RNA into the plant genome). அத்தகைய நிகழ்தகவினை அதிகரிப்பதே ஆராய்ச்சியாளர்களின் வேலை (5). மரபணு திருத்தம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை (S. tuberosum) உண்பதால் திருத்தப்பட்ட தாவரத்தின் மரபணுவும், சாப்பிடும் மனிதனின் மரபணுவும் சேரப்போவதில்லை. அப்படியே கிழங்கை விட்டுவிட்டு அத்தாவரத்தின் இலையினைச் சாப்பிட்டாலும் (by chance கடித்தாலும்) மரபணுக்களின் சேர்க்கை என்பதேயில்லை. உடலானது உருளைக்கிழங்கினை செரித்து ஆற்றலை பெற்றுவிடும் (மனித மரபணுக்களால் உருவாக்கப்பட்ட புரதங்களால் – அது வேறு பேட்டை). 

உருளைக்கிழங்கின் மரபணு உருளைகிழங்காக/உருளைக்கிழங்குக்காகச் செயலாற்றுவதே குறிப்பிட்ட நிலைகளில்தான் (obligatory conditional existence). இது அந்நிலையிலிருக்க, உருளைக்கிழங்கு திடீரென நச்சாக மாற வாய்பேயில்லை. ஆனால் காலையில் உருளைக்கிழங்கு சாம்பார், இடையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், மதியம் வறுவல், மாலை உருளைக்கிழங்கு சமோசா, டின்னர் ஆலு சப்பாத்தி என்று சாப்பிட்டு உட்கார்ந்தபடியே வேலை செய்பவரேயானால் அது வேறுமாதிரியான் நச்சுதான். 

GM in animals

தாவரங்களைப் போன்றே, விலங்குகளிலும் நாம் மாற்ற விரும்பும் ஏதாவது சில மரபணுக்கள் அல்லது ஒரு மரபணு மட்டும் (ORF; Knock out) நீக்கப்பெற்று அதன் விளைவுகள் அறியப்பெற்று, அத்தகைய மரபணுவின் செயல்பாடுகள் கண்டறியப்படுகின்றன. ஏன் மரபணுக்களை மாற்றி அவற்றைக் கொடுமைப்படுத்தவேண்டும் என்கிற, ‘புன்கணீர் பூசல் தரும்’ மேனகா காந்தி வகையறாக்கள், ஏதாவதொரு மரபணு குறைபாடு/மாறுபாடு தொடர்பான நோயால் அவதியுற்று இறக்கும் மனிதன், உணவு/வைட்டமின் பற்றாக்குறையால் அவதியுறும் குழந்தைகள்மேலும் கொஞ்சம் அன்பு கொள்ள ‘நோய்நாடி நோய்முதல் நாடி’, ’உற்றான் அளவும் பிணியளவும்’ போன்ற குறள்களையும் படிக்கலாம். Cardiac hypertrophy என்கிற மரபணு சார்ந்த ஓர் இதய நோய் எவ்வாறு ஏற்படுகிறது என்று அறிய, கண்டிப்பாக எலியின் சில மரபணுக்களை knock out செய்ய வேண்டியிருக்கும். அப்போதுதான் அந்த மரபணு ஏற்படுத்தும் புரதங்கள் யாவை, அவை எங்கு என்னென்ன வேலைகளைச் செய்கின்றன, அதே புரதங்களின் கூட்டமைப்பினை ஒரு பாக்டீரீயத்தின் மூலம் மட்டுமே தயாரிக்கமுடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். இவர்கள் யாரும், பாக்டீரிய வதையைத் தடுப்போம் என்று கிளம்பவில்லை என்பது பெரிய ஆறுதல்தான். இது செயற்கையா? இயற்கையா? 

எந்தவொரு மரபணு திருத்தமும் செயற்கையன்று. [என்றுதான் கருதப்பட்டது, மனித மரபணு திருத்தம்/மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடங்க ஆரம்பிக்கும் வரை.] அதாவது, அளவில் சிறிய மரபணுவினை கையாள எளிதான பேக்டீரியம்களில் மாற்றி, தொழிநுட்பங்களை புரிந்து கொண்ட விஞ்ஞானிகள், அடுத்து தாவர/விலங்கினகளின் கரு & மனித கரு, மரபு சார்ந்த நோய்களை புரிந்துகொள்ள/சரிசெய்ய; என்று விரிவடையும் பொழுது, நீதி, அறம் சார்ந்த செயற்கை உயிரியலாக (synthetic biology) பரிணமித்து, அதனைச் சார்ந்த அறிவியல்/அரசியல் முறைப்படுத்துதல் தேவையாகின்றது.

பரிணாமத்தின் ஒரு விளைவாக, தானாகவே மரபணு பரிமாற்றம் இரு வேறுவேறான பாக்டீரியங்களிடையே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம்: பாக்டீரியங்களில் அடையாளம் காணப்பெற்றுள்ள பெரும்பாலான புரதங்கள், அவற்றின் அமினோ அமிலக் கட்டமைப்புகள், தாவரங்களிலும் விலங்குகளிலும் ஒத்துள்ள நிலை. ஒரு வைரஸ் தாவரத்தினைத் தாக்கும்போதோ, அல்லது விலங்குகளைத் தாக்கும் வைரஸின் பரவலின்போதோ இத்தகைய மாற்றங்கள் ஏற்படும். ஆனால் ஒரு மனிதனின் இனப்பெருக்கத்தின்போது வெளிப்பட்டு கடத்தப்படும் நாட்கள் அதிகமாகையால், ஏதாவதொரு மனித செல்லின் (cell lines) மூலம் அதே மாதிரியான நிகழ்வு ஆய்வகத்தில் நிகழ்த்தப்பெற்று, அத்தகைய மரபணுவின் விளைவு ஆராயப்படுகின்றது. 

மனிதன் போன்ற பரிணாம வளர்ச்சி அடைந்த (?) primates-ம், அவற்றின் செல்களும் சில நேரங்களில் வைரஸ்களின் மரபணுக்களை ஏற்றுக்கொள்கின்றன. பட்டுப்புழு மற்றும் மலேரியா தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு, ரத்த அணுக்களில் சில வைரஸ் அல்லது Plasmodium. Sp-ன் மரபணுப் பகுதிகள் Transfection என்ற சோதனை மூலம் அனுப்பப்படுகின்றன. சில குறிப்பிட்ட மரபணுப் பகுதிகளை அதன் அமினோ அமில வேதியியல் சார்ந்து host விலங்குகளின் செல்கள் அனுமதிக்கின்றன, எவ்வளவு மரபணுக்களை அவ்வாறு அனுமதிக்கின்றன? அந்த அளவைத் தாண்டமுடியுமா? அளவுக்கு அதிகமான மரபணுக்களை அனுப்பி அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது இயற்கைக்கு எதிரானதாகாதா? மனிதனும் இப்பூலகத்தின் ஒரு பகுதிதான், மனிதனின் இச்செயல்பாடுகளால் மட்டும்தான் இத்தகைய பரிணாம வளர்ச்சி வேகமடையும் என்பதுகூட இயற்கையின் ஏற்பாடாக இருக்கலாம். எங்கேயோ இருந்து ஒருவன் (?) தூங்கும்போது காணும் கனவுதான் இவ்வுலக நிகழ்வுகள், அவன் விழித்துக்கொண்டால் கனவு சுபம் (9) அல்லது அவன் ஒரு பெரிய மைக்ரோஸ்கோப் மூலமாக அனைத்தையும் பார்ப்பதாகக் கொண்டால் மனிதனின் மரபணு திருத்த ஆராய்ச்சிகள் ஒரு சின்ன விஷயம். அதுவும் ஒரு (சக!) நிகழ்வு, இயற்கையின் ஒரு சிறு பகுதி. இங்கு எதுவும் செயற்கையன்று, நீ எங்கிருந்து எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது! 

யானையை பூனையாக்கலாமா? வேப்பமரம் சந்தன மரமாகுமா? 

சாத்தியமே இல்லை. பத்ரியின் பதிவில் [இறுதியில் குறிப்பில் பார்க்க] சொல்லியபடி ஒரு கருவின் (யானை) மொத்த நியுக்ளியஸும் நீக்கப்பெற்று, மற்றொரு விலங்கின் நியுக்ளியஸ் (பூனையின்) திணிக்கப்பெற்று, அது ஒரு பெண் யானையின் (Surrogate mother) கருப்பையில் வைக்கப்பெறுமானால் அது பூனைக்குட்டியையோ அல்லது யானைக்கும் பூனைக்கும் இடையில் (பூயா?) எதையுமோ ஈன்றெடுக்காது. யானை, யானையாகவே மரபணு செயல்படுவதே obligatory conditional existence (ஒரு 4 PhD-யாவது ஆகும், இந்த conditions-களைக் கண்டறிவதற்கு). பூனை ஜீனோம் (Genome) பூனையைத்தான் கொடுக்கும், அதனால்தான் அது பூனை. யானைக்கும், பூனைக்குமான வித்தியாசங்களுக்கு காரணம், ஒரே மாதிரியான வேதியியலை அடிப்படையாக கொண்ட டீஆக்ஸி ரைபோ நியுக்ளியைக் அமிலங்களேயானாலும், காரணமானவன் எல்லாம் வல்லவனாயிருந்தால்? காரணமும் நீ, காரணியும் நீ! ஒரு பாக்டீரிய (E.coli) பேரினம் (Genus) அதன் மொத்த மரபணுக்களும் (DNA) வேறொரு பாக்டீரியத்தின் (Salmonella) DNA-க்களால் மாற்றியமைக்கப்படுமானால், கண்டிப்பாக அந்த மாற்றப்படும் மரபணுக்கள் அதன் குணங்களையும் (Properties) சேர்ந்தே இழந்துவிடும். அளவில் சிறிய பாக்டீரிய மரபணுக்களுக்கே இத்தகைய நிலை கடினம் என்னும்போது நியுக்ளியஸினுள் மரபணுக்களை கொண்டுள்ள வேப்பமரம், மாற்றம் மூலம் சந்தன மரமாக ஆகவே முடியாது. வேப்பமரம் சிறிய அளவில் சந்தனமரத்தின் மரபணுக்களை ஏற்றுக்கொள்வதை வைத்து மொத்த மரபணுக்களையும் மாற்ற முடியாது. மாற்றினாலும் அது சந்தனமரத்தின் தன்மையினை கொடுக்காது. ஏன்? இங்குதான் சூழலும் அதனை ஒத்து/சார்ந்து வெளிப்படும் மரபணுக்களின் குணாதிசயங்களும் இரண்டுக்கும் இடையேயான நெருக்கமான தொடர்புகளும் கடவுள்தானோ என்று எண்ணவைக்கின்றன. ஒரு மரபணுவின் (Eg. ATGCCTTTACCGGGGGG) குணாதிசய வெளிப்பாடு அந்த மரபணு அமைந்துள்ள Genome-ன் மற்றொரு பகுதியில் உள்ள இந்த மாதிரியான ஒரு GGGGSCTAAAA மரபணுக் கட்டமைப்புகள் உருவாக்கும் புரதங்களால் (Either activators or repressors) கட்டுப்படுத்தப்படும். இந்தப் புரதங்கள் உருவாவதையோ அல்லது உருவாகாமல் தடுப்பதையோ சில நேரங்களில் சூழ்நிலையும் சில நேரங்களில் மற்றொரு மரபணுவும் செய்கின்றன. ஒரு மரபணு குணாதிசயங்களின் வெளிப்பாடு அந்த மரபணுவாலேயே நெறிப்படுத்தப்படுகின்றது (Gene regulation). எளிதான உதாரணம், நமது ஊரில் நாடாளுமன்றம் சட்டத்தினையும், சட்டம் ஜனாதிபதியையும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தினையும் கட்டுப்படுத்துவது போல். 

இன்னும் கொஞ்சம் எளிதாகச் சொன்னால் ‘ஒளிவேட்கை கண்ணாகியது (10). 

சூழலால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நெறிமுறைப்படுத்தப்படும் மரபணுக்கள், சில பாக்டீரியத்தில் உள்ள அளவில் சிறிய ஜீனோம்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன (1), ‘ஒளிவேட்கை கண்ணாகியது’ (10) என்பதனை விலங்குகளில் சோதனைகள் மூலம் நிரூபித்தால் நோபல் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனாலும் ஹாலிவுட் படத்தில் காண்பதுபோல் ஏதாவது மிருகமோ அல்லது விஷங்களை பரப்பும் மரமோ மரபணு திருத்தத்தால் தோன்றுவதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது? 

எவ்வளவு வாய்ப்புகள்? 

‘பூயா’ பிறப்பதற்கான வாய்ப்பு இந்திய நாடாளுமன்றம் (குரோமோசோம்) அதன் உறுப்பினர்களோடும், (அதனுள்ள மரபணு) சட்டப் புத்தங்களோடும் (Repressors) பெயர்த்தெடுக்கப்பட்டு லண்டனில் அமைக்கப்பட்டவுடனே (host), அப்புத்தகங்கள் சொல்லும் சட்டங்களும், அவ்(நம்)வுறுப்பினர்களின் அவை நடத்தையும் (gene expressions) அந்நாட்டுக்குப் பொருந்துவதற்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அவ்வளவுதான். அல்லது ஒரு கணிணியை எதிர்பாராமல் பார்க்கும் ஒரு குரங்கு, தட்டச்சும்போது அது கம்பராமாயணமாக மாறுவதற்கு எவ்வளவு நிகழ்தகவோ அவ்வளவு (9). ஒரு விநாயகர் (transgenic God) மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. மரபணுக்களுக்கு அதன் தன்மையினைக் கொடுப்பது எது என்பதற்கான விடை (விநாயகர்!) ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளில் கிடைக்கும்.

மனமாற்றம் அவசியமா மரபணு மாற்றத்துக்கு? 

ஆம், புரிதல் அதனைத் தரும். ஏதோ BT-பருத்தியும், Terminator ஜீன்களை கொண்டுள்ள விதைகளிலும் மட்டும்தான் மரபணு மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எங்கும் மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் கிடையாது என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு ஆய்வகத்திலிருந்தும் மரபணு ஆராய்ச்சியில் உபயோக்கிப்படும் பாக்டீரீயங்கள் சுற்றுப்புறச் சூழலை நோக்கி தினமும் அனுப்பபடுகின்றன. ஆய்வக உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பொழுதுகளில் இது அவர்களுக்குத் தெரியாமலே நடைபெறும். ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவற்றில் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பெற்ற பாக்டீரியாக்களின் எதிர்பாராத வெளியேற்றம் (inadvertent release) என்பது கடுமையான விதிமுறைகளால் குறைக்கப்படுகிறது, ஆனால் தடுக்கப் படமுடியாதது. 

மரபணு மாற்றம் தாங்கிக் கொள்ளக் கூடியதுதானா? மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் மனிதனால் தாங்கிக் கொள்ளக் கூடியவையாகத்தான் இருக்கும். உதாரணம்: பீர்க்கங்காய், கொத்தவரங்காய், பாகற்காய் (tropical vegetables) போன்ற நமது காய்கறிகளின்றி, முழுவதுமாக இஙக்லீஷ் காய்கறிகள் மட்டுமே நாம் எடுத்துகொள்ளும் சூழல் வந்த/வந்தாலும் நம் உடலின் உடற்கூறு செயலியலானது அதற்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. மனிதன் யார் இதை சொல்ல? மற்றும் செய்ய? இப்புவியில் வாழும் primates-களில், அனைத்தையும்விடக் கூடுதலாகச் சில பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மனித மிருகம் (6 & 7), இந்த மாதிரியான செயல்களை/ஆராய்ச்சிகளைத் தன்னிச்சையாகச் செய்கிறது. தவிர எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று யாரிடம் அனுமதி வாங்குவது? யாரிடம் கேட்பது? அது சில பெண்கள், யாரிடமோ ‘பெண் சுதந்திரம் கொடுங்க’ என்று கேட்பது மாதிரி ஆகிவிடும். யார் வந்து அனுமதி கொடுப்பார்கள்? (MCP என்று கொதித்தெழும் பெண் தெய்வங்கள் பொறுத்தருள்க.) 

துரைமார்கள் எதிர்க்கிறார்கள், நானும் எதிர்க்கிறேன், ஆதரித்தால் பொதுக்குழுவில் கேட்டுவிட்டு அப்பால யோசிக்கலாம் என்பவர்களுக்கு அதிலுள்ள ஆபத்து புரியமாட்டேன் என்கிறது. 

காரண காரியங்களை அலசி ஆராய்ந்து, சில பின்நவீனத்துவ பித்து தலைக்கேறின விஞ்ஞானிகள் கடவுளையெல்லாம் கிழித்துத் தொங்கவிட்டு விளக்கும்போது துரைமார்கள் திடீரென்று அருள் வந்தமாதிரி எல்லா அனுமதியையும் அள்ளி விட்டுவிடுவார்கள். 

கடந்த வாரம் மனித ஸ்டெம்செல் (stem cell) ஆராய்ச்சிகளுக்கு அனுமதி கொடுத்தமாதிரி (4). அதனால் அடிப்படையினைத் தெரிந்துகொள்வது, போத்தீஸ் இல்லை என்றால் சென்னை சில்க்ஸ் போகலாம் என்று மாறுவதுபோல மனம் மாறுவதற்கு உதவியாக இருக்கும். 

இதன் பிறகும் மரபணு திருத்தம்/மாற்றம் என்றவுடனே மீசை துடித்தால் உடனடியாக தமிழில் வலைப்பதிவு எழுத ஆரம்பிக்கலாம் அல்லது மீசையினை எடுத்துவிடலாம். 

அடுத்த 50 வருடங்களில் மரபணு மாற்றப்பெற்ற உணவுப் பொருட்களும், உயிர் காக்கும் மருந்துகளும் தவிர்க்க முடியாதவை (indispensable). அப்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்ற சாக்கு போக்கிலிருந்து சிலரை காப்பாற்ற வேண்டி தரையினை மணலின்றி சுத்தமாக பேணுவதே இதன் நோக்கம், யாருடைய மீசையுமன்று நோக்கம். நன்றி. 

உசாத்துணை

1. Journal of Biological Chemistry, June 20 (2008) 283 17380 – 90 

2. Microbes in their natural environment, Whittenbury R & Wimpenny T (1983) Cambridge University Press 

3. Nature Reviews Microbiology 6 (2008) 579 – 591 

4. Nature 29 Jan (2009) 516 

5. Nature 22 Jan (2009) 485 – 89 

6. New scientist 24 May (2008) 28 – 34 

7. New scientist 11 Oct (2008) 46 – 47 

8. Principles of cell and molecular biology, Kleinsmith & Kish 2nd edition (1995) Harper Collins college publishers 

9. சுஜாதா 

10. http://jeyamohan.in/?p=724 

பிற்சேர்க்கை

இக்கட்டுரை 2008-ல் எழுதப்பெற்றது. 2008-ஜனவரியில் பத்ரியின் கீழ்கண்ட பதிவிற்கு, ஒரு சிறு விளக்கம் கூடுதலாக எழுதப்போக, 

http://thoughtsintamil.blogspot.com/2008/01/blog-post_30.html

அது ஒரு தீவிர கட்டுரையாக நீண்டுவிட்டது. சுமார் ஒரு மாதகாலம் அருண் நரசிம்மனின் (https://mech.iitm.ac.in/meiitm/personnal/dr-arunn-narasimhan/) ariviyal.info-பக்கத்தில் இருந்தது. பின்பு காணாமல் ஆகியது. ஆனாலும், உள்ளடக்கத்தில் தற்பொழுது மாற்றம் எதுவும் தேவைப்படவில்லை. 

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள துறை சார்ந்த மாற்றங்களை பதியவேண்டியது அவசியமாயிருப்பதால், இப்பிற்சேர்கை அவசியமாகின்றது. 

2008-ல் இக்கட்டுரை எழுதும் பொழுது, சிலபத்திகளில், எந்தவொரு மரபணு தொடர்பான ஆராய்ச்சி விவாதங்களிலும், புதுமையான ஆராய்ச்சி திட்ட விவரங்களையும், அத்துறை சார்ந்த நிபுனர்கள் மட்டும் கண்டு, விவாதித்து, அனுமதியளித்தால் போதும் என்ற ஒரு தொனி இருந்தது. அவ்வாறு, ஆராய்ச்சியாளர்களை கட்டற்ற கட்டுப்பாடின்றி விடும்பொழுது, வைரஸ்களை மரபணு மாற்றத்திற்குட்படுத்தி, உலகத்தினை படுத்துவார்கள், என்று நம்பலாம்.

இந்தியாவிலும், கடந்த10 வருடங்களில் பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பெற்று, எத்தகைய சிறிய/பெரிய மரபணு தொடர்பான ஆராய்ச்சி நிலைய ஆய்வகமானாலும், கழிவுகளை முறையாக கிருமிநீக்கம் (ஆட்டோகிளேவ்) செய்து மட்டுமே வெளியேற்றவேண்டும், என்று கண்காணிப்புள்ளது. 

மேலும், 2012- ல் பேக்டீயம்களில் கண்டறியப்பட்டு நிருபிக்கப்பட்டு, 2013-ல் விலங்குகளில் நிருபிக்கப்பட்ட CRISPR [Clustered Regularly Interspaced Short Palindromic Repeats]- என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு மரபணு திருத்தல் (சுனாமி) தொழில்நுட்பத்திற்கு பிறகு, மரபணு திருத்துதல் என்பது ஒரு எளிமையான (அத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு மட்டும்☺) முறையாக மாறியுள்ளது. எத்தகைய பெரிய மரபணுவாக இருந்தாலும், குறிப்பிட்ட திசுக்களிலோ/உறுப்பிலோ மட்டும் அதன் பண்பு வெளிப்படும் என்றாலும், அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வெளிப்படும் (Expression) மரபணுவாக இருந்தாலும் கூட, CRISPR-மூலமாக திருத்தமுடியும் என்று பலவாறு நிருபிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவான மரபணு சார்ந்த நோய்களுக்கு பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. அடுத்த பத்து வருடங்களில் இத்தொழில்நுட்பம் சார்ந்த மருந்துகள் நிறைய மரபணு சார்ந்த மனித நோய்களுக்கும் மருந்தாக வரும். 

ஆனாலும், இத்தொழில்நுட்பத்தினை கொண்டு வழக்கம்போல் மனித (கரு) மரபணு திருத்தங்கள் மற்றும் சில தாவரங்களில் ஏற்படுத்தப்படும் திருத்தங்களுக்கு உலகளாவிய சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன. 

அதேநேரத்தில், CRISPR மூலமாகவோ அல்லது வேறுவிதமான மரபணுக்களை (மருந்தாக) உபயோகிக்கும் மிகச்சமீபத்திய தொழில்நுட்பங்கள் (gene delivery with/without vectors, DNA delivery, RNA delivery [mRNA மற்றும் noncoding small RNA]) மனிதனில் [மரபணு குறைபாடுகளால், திடீர்மாற்றத்தால் உருவாகும் மரபியல் சார்ந்த/சாராத] நோய்களை தீர்ப்பதற்கு, மரபணு திருத்த ஆராய்ச்சிகள் உதவுகின்றன. அத்தகைய மரபணு மாறுபாட்டு நோய்களை (மற்ற வகையான) மரபணுவினைக் கொண்டே சரிசெய்ய முடியும். கருவிலிருக்கும் குழந்தையின் மரபணு தொடர்பான குறைபாட்டினைக் கண்டறிந்து, பெற்றோர்களுக்கும் தகுந்த ஆலோசனைகளைக் கொடுக்கமுடியும். அக்குடும்பத்தில், அடுத்த குழந்தையானது (பெற்றோர்கள் விரும்பும் பட்சத்தில்) அதே போல் மரபணுக் குறைபாட்டு நோயுடன் பிறப்பது உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மூலம் தடுக்கப்படும். 

100க்கும் மேற்பட்ட, அத்தகைய மரபணு-சார்ந்த சிகிச்சை முறைகளும் (gene therapy), பலதரப்பட்ட மரபணு குறைபாட்டு நோய்களுக்கு (தற்பொழுது மருந்தேயில்லாத) – தீர்வாக அமெரிக்காவில் முன்கூட்டிய ஆராய்ச்சி முடிந்து, அடுத்தகட்ட ஆராய்ச்சிகளுக்காக காத்திருக்கின்றன. 

இத்தகைய மரபணு மருந்துகளை (gene therapy) உருவாக்குவாக்குவதற்கு கீழ்க்கண்ட குழுக்களும், இவையனைத்தையும் தெரிந்து, ஒருங்கிணைக்க ஒரு திட்ட இயக்குநரும் (அவருக்கு, துறை சார்ந்த நடப்பும், எதிர்காலமும், தன்முனைப்பும், அடிப்படை சமூக அறிவும்; இது எதுவுமே இல்லையென்றால் துறை சார்ந்த நிபுணர்களை கேட்டறியத் தெரிந்த குணமும் இருக்கவேண்டும்.) அதற்கான தொடர்ந்த நிதியும் தேவை. 

S.NOபணிகள்யார் பொறுப்பு
1மரபணு குறைபாட்டினையும் அதன் விளைவுகளையும் நோயாளியில் கண்டறிவதுஆராய்ச்சியாளர்கள் & ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள மருத்துவர்கள்
2அத்தகைய மருத்துவ விளைவுகளை (Clinical manifestations of the disease/disorder) நோயாளியிடம், அல்லது நோயில் உறுதி செய்து, கண்காணிப்பதுசிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் & ஆராய்ச்சியாளர்களும்
3புதிய மரபணு மருந்தினை உருவாகுவது (நோயின் தன்மையினையும், பாதிக்கப்பெற்றுள்ள மரபணுவினையும் பொருத்து மிகைச் சவாலானது), செல் கல்சரிலும், ஆய்வக விலங்குகளிலும் சோதனை செய்து, விளைவுகளை சந்தேகத்திற்கிடமின்றி பல விதமான சோதனைகள் மூலம் நிறுவுவது, அதனை நோயாளியின் உடம்பிற்குள் தேவைப்படும் உறுப்பிற்கு சரியாக செலுத்தும் முறைகளை உருவாக்குவது, (அது தொடர்பான நெறிமுறைகளின் அனுமதிகளை பெறுவது),  மருந்தின் செயல்பாட்டு முறையினை மிகச்சரியாக நிருபிப்பது, அம்மருந்தின் பாதுகாப்பினை கணடறிந்து நிறுவுவது, அது தொடர்பான கட்டுரைகளை, ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடுவது, QA QC ensurance protocol development, SOP-யினை உருவாக்குவதுபெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும், ஈடுபாடுள்ள  மருத்துவர்களும் 
4நெறிமுறை ஆணையத்திடம் மனிதர்களில் சோதனை செய்ய அனுமதிவாங்குவது உ.ம். CDSCO, இந்தியா (மேலே சொல்லப்பெற்றுள்ள அனைத்து தரவுகளையும் அறிவியல்பூர்வமாக சமர்பித்து, லாபியினை உருவாக்கி (தேவைப்பட்டால்), மற்றும் (project மதிப்பீட்டினை பொருத்தது) ஆராய்ச்சியாளர்கள் & மருத்துவர்கள்
5SOP policing & GMP compliance scale up for Clinical trial and QA QC ensuranceஆராய்ச்சியாளர்கள் மட்டும்
6Clinical studies எனப்படும் பாதிக்கப்படாத மனிதர்களில்/நோயாளிகளில் சோதனைகளை (மூன்று கட்டமாக, with a reputed CRO) முடிப்பது (இதற்கான வழிகாட்டுதல்கள் மாறிக்கொண்டேயிருக்கும்)ஆராய்ச்சியாளர்கள் & மருத்துவர்கள்
7SOP development & obtaining manufacturing licenceScale up (GMP & GLP, Accreditation (உ.ம். USFDA) for the manufacturing unit)R&D ஆராய்ச்சியாளர்கள் &  உற்பத்தி குழு
8Follow up analysis மற்றும் அது தொடர்பான கட்டுரைகளை, ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடுவதுஆராய்ச்சியாளர்கள் & மருத்துவர்கள்

இந்தியா போன்ற நாடுகள் இத்தகைய ஆராய்ச்சியில் மிக மிகப் பின்தங்கியுள்ளதற்கு பலகாரணங்களை நாம் ஊகிக்கிலாம், 

  1. மலையளவு சவாலான, சுமாராக 5 முதல் 7 ஆண்டுகளுக்கான (திட்டத்திற்கான நிதியின் அளவினை பொறுத்து காலத்தினை குறைக்கமுடியும்) தொடர்ந்த உழைப்பினை கோரும் ஆராய்ச்சி – எதையும் கொடுக்காமல் போய்விடுமோ என்ற பிரமாண்டமான பயம் கலந்த ஆராய்ச்சியாளர்கள். 
  2. மேல் கட்டத்தில் விளக்கப்பெற்றுள்ள (பணம்விழுங்கி) ஆராய்ச்சிகள் ஏதாவதொரு மரபணு சார்ந்த நோய்க்கு மட்டுமே. வேறு மரபணு நோய்க்கு, புதியதாகத் தொடங்கவேண்டும். ஆனால் ஒரு ஒருங்கிணைக்கப் பெற்ற ஆய்வகத்தில் செய்ய தொடங்கலாம், அவ்வாறுதான் தனியார் மருந்து நிறுவனங்கள் செயல்படும் (உ.ம். நோவார்டிஸ், Basal).
  3. இத்தகைய ஆராய்ச்சிக்கு(ம்) ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமென்று அரசாங்கத்திற்கு ஆய்வாளர்கள் முழுமையாக நிருபிக்கத் தவறுவது
  4. இது எவ்வாறெல்லாம் மக்களுக்கும் ☺ பயன்படும், மற்றும் நமக்கு உறுதியாக தேவையென்று, நிதியளிக்கும் அமைச்சங்களுக்கு, அதிகாரிகளுக்கும் நிருபிக்க முடியாமல் போவது
  5. இத்தகைய அதிக ஆபத்துள்ள ஆராய்ச்சிகளை முன்மொழியும் குழு, உறுதியான ஆராய்ச்சி விளைவுகளை (final outcome) சரியாக அடையாளப்படுத்தி, ஆபத்து பகுப்பாய்வு செய்து நிதி ஒதுக்கீட்டினை பெறத் தவறுவது  அல்லது புலியினை வேட்டையாட புறப்பட்டு, பூனையினை கவ்வி கொண்டுவரவேண்டிய அளவிலான நிதியில் திருப்தியடைவது
  6. திட்டத்தினை முன்மொழியும் ஆராய்ச்சி குழுவிற்கு ஊடககவனத்துடன் கிடைக்கும் மிகப்பிரமாண்டமான (முதல்) வெற்றி எதுவும் இல்லாமை (உ.ம். சந்திரனுக்கு ராக்கெட், கொரானாவிற்கான DNA தடுப்பூசி, மற்றும் mRNA தடுப்பூசி)
  7. இத்தகைய ஆராய்ச்சித் திட்டங்களின் நீண்டகால நன்மைகளையும், பயன்களையும் புரிந்துகொள்ளும் திறனற்ற, முடிவெடுக்கும் அதிகாரமுள்ள, துறைசார்ந்த அறிவுக்குறைபாடுள்ள காதுகள். இக்காதுகளுக்கு துறை சார்ந்த அறிவு/தகவல்கள் தெரிந்திருப்பதென்பது டிசம்பர்/ஜனவரி மாதத்து மல்லிகைப் பூ மாதிரி, சில நேரம் மணக்கும், பலநேரம் மணக்காது.
  8. இவ்வாராய்ச்சி எவ்வாறு இந்தியாவை மேன்மை அடையச்செய்யும் – அதற்கு ”அவர்களின்” ‘கருணையான, தாழ்மையான, மேன்மைதாங்கிய, ஈடு இணையற்ற, எல்லாம் வல்ல ஒப்புதல்”, – தேவையான நீண்டகால அளவிலான நிதியினை, கருணையும் அருளும் கலந்து கூர்ந்து நோக்கும் படி குறைந்தது நான்கு நினைவூட்டல் கடிதங்கள், IAS-அல்லாதோருக்கும் சில விசயங்கள் தெரிய வாய்ப்புண்டு என்று நடைமுறை அறிந்த அரசு IAS செயலர்கள் மற்றும் இறையருள். இவ்வளவும் கூடிவந்தால் எல்லாம் சுபம்.

இத்தகைய சவால்களை சமாளிப்பது, மருத்துவமனையுடன் கூடிய மரபணு பகுப்பாய்வு மையம், சில-பல வெற்றிகளை கண்ட தனியார் நிறுவனத்திற்கு சாத்தியமானவொன்று. உ.ம். பயோகான் பெங்களுரு, அவ்வாறு புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சையினை நோக்கமாகக் கொண்டு, சமீபத்தில் ஒரு தனி நிறுவனம் ஒன்றினை நிறுவியுள்ளது.

இத்தகைய ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி, மிகச்சரியாக, (அல்லது சரிக்கு பக்கத்தில் நின்று) கண்காணிக்கும் நாடுகள், நிருபிக்கப்படாத மரபணுக்களையோ அல்லது ஆடம்பர ஆராய்ச்சிகளை மட்டுமே நோக்கமாக கொண்ட (அல்லது) விளைவுகள் தெளிவாகத் தெரியாத மரபணு திருத்த/மாற்ற ஆராய்ச்சிகளை மனிதக்கருவில் மற்றும் மனிதர்களில் மேற்கொள்வதற்கு தடை செய்துள்ளது. 

ஆனாலும், சில அத்தியாவசியமான தருணங்களில், சில காரணங்களைப் பொறுத்து, தற்போழுது மருந்துகளேயில்லாத சில மரபணு மாறுபாட்டு நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு மட்டும் முறையான கண்காணிப்பு திட்டங்களோடு அனுமதி வழங்கப்படும். உதாரணமாக கடந்த 2017-ல் இங்கிலாந்து நாடாளுமன்றம், மைட்டோகாண்ட்ரியாவிலுள்ள மரபணுவினை (மைட்டோகாண்ட்ரியாவென்பது எப்பொழுதும் தாயிடமிருந்து மட்டுமே கருவிற்கு வரும். தாய் ஏதாவதொரு மைட்டோகாண்ட்ரியாவிலுள்ள மரபணுக் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது, அது குழந்தைக்கும் வரும்) மாற்றி ஆராய்ச்சி செய்து குழந்தையினைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது. 

***

One Reply to “மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.