மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்

This entry is part 6 of 23 in the series புவிச் சூடேற்றம்

(பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள்)

இதுவரை, புவி சூடேற்றம் பற்றிய பல விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில், ஏன், விஞ்ஞானிகள், புவி சூடேற்றம் துரிதமாகதற்குக் காரணம், மனிதனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் என்று சொல்லி வருகிறார்கள் என்று பார்ப்போம்.

குற்றச்சாட்டு 1: 1951 முதல் இன்று வரையிலான, புவி சூடேற்றத்திற்கான காரணம் (95% முதல் 100%, வரை சாத்தியக்கூறு) மனித நடவடிக்கைகள்

சாட்சிகள்:

  1. சூரிய ஒளியில் உள்ள மாற்றங்கள், எரிமலைகள் மற்றும் காட்டுத்தீ போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டால், கடந்த 50 ஆண்டுகளில், பூமி குளிர்ந்திருக்க வேண்டும். மாறாக, சூடேறி வருகிறது. இயற்கைக் காரணங்களால் குளிராத பூமி, சூடேறுவதற்கு முக்கிய காரணம் – செயற்கை – அதாவது, மனிதன், தன் தேவைக்காக அபரிமிதமாக எரிக்கும் தொல்லெச்சப் பொருட்கள் – இதில், போக்குவரத்து, மற்றும் தயாரிப்புத் தொழில்கள் இரண்டும், பெரும் காரணங்கள்
  2. மேலும், இதைத் திட்டவட்டமாக நிரூபிக்க, 1850 முதல் நம்மிடம் இருக்கும் பல்வேறு வெப்பப் பதிவுகளைக் கொண்டு ஆராய்ந்ததில் தெரிய வந்த்து இதுதான்:
    1. பூமியின் சராசரி வெப்ப உயர்வு ஒரு புறம் 
    2. மற்றொரு புறம், காற்றுத்துகள் (aerosols) 
    3. எரிமலைகள்
    4. மனித பயனுக்கு அதிகமாகியுள்ள நிலம் 
    5. ஓஸோன் 
    6. சூரிய ஒளி மாற்றங்கள் 

இவற்றை வைத்துப் பார்த்ததில், இவற்றால் நிகழும் வெப்ப உயர்வு, நாம் பதிவு செய்துள்ள வெப்ப உயர்வை விடக் குறைவு. இந்த இடைவெளிக்குக் காரணம், கரியமில வாயுவைக் காற்றில் அபரிமிதமாகக் கலக்கும் மனித நடவடிக்கைகள்

குற்றச்சாட்டு 1: விஞ்ஞானிகள், சூரியனிலிருந்து வரும் வெப்பம், மற்றும் பூமி விண்வெளிக்கு வெளியேற்றும் வெப்பம், எரிமலைகள், மற்றும், இயற்கை சூடேற்றம் போன்ற விஷயங்களை, கடந்த 60 ஆண்டு காலமாக, மாதிரியுறு கொண்டு அளந்து வந்துள்ளார்கள். இன்று வெளியேறும் வெப்பம், இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்தால், புவி சூடேற்ற அதிகரிப்பு இயற்கையால் அல்ல; மனித நடவடிக்கைகளால் தான்.

சாட்சி: மேலே உள்ள படம், இதைத் தெளிவாக விளக்குகிறது.

குற்றச்சாட்டு 2: 1850 முதல், 2018 வரையிலான காலத்தை எடுத்துக் கொண்டால், பூமியின் சராசரி வெப்பம், 1 டிகிரி அதிகரித்து விட்டது. 1850 –ல் பூமியின் சராசரி வெப்பம், மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பனியுறை யுகத்தில் கூட, வெறும், ஐந்து டிகிரிதான் கூடுதலாக இருந்தது. இதற்குக் காரணம், மனிதனின் தணியா பொருள் மற்றும் சக்தி தாகம்.

சாட்சிகள்

  1. பூமியைச் சுற்றி வரும் செயற்கை கோள்கள், கடந்த 50 ஆண்டுகளாக, மனித நடவடிக்கைகளை உயரத்திலிருந்து கண்காணித்து வருகின்றன. 300 கி.மீ உயரிலிருந்து இவை பதிவு செய்யும் விஷயங்கள் மறுக்க முடியாதது. மறையும் காடுகள், மறையும் பனிப்பாறைகள், வரண்ட நிப்ப்பரப்பு, வெள்ளம் என்று எதையும், இவை விட்டு வைக்கவில்லை
  2. முதலில் பலூன்கள் மூலம் அளக்கப்பட்டாலும், வளரும் தொழில்நுட்பம் கொண்டு, துல்லியமாக, காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் அளந்து விடுகின்றன
  3. இவற்றைத் தவிர, க்ரீன்லாண்ட், அண்டார்டிகா போன்ற பனியுறைப் பகுதிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பனியில் உறைந்துள்ள காற்றில் (பல்லாயிரம் ஆண்டுகள் பழைய காற்று), எவ்வளவு கரியமில வாயு உள்ளது என்றும் அளந்து விடலாம். அத்துடன், சில ஆயரம் ஆண்டு கால மரங்களின் அடிமர வளையங்கள், மற்றும், பவழப்பாறைகள், நாம் கடந்து வந்த பாதையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன
  4. இவற்றை ஆராய்ந்ததில், இயற்கை, தானாக கூட்டும் வெப்பத்தை விட, 10 மடங்கிறகு மேலாக, கடந்த 150 ஆண்டுகளில் மனித நடவடிக்கைகள், கரியமில வாயுவை, காற்று மண்டலத்தில் சேர்த்த வண்ணம் உள்ளன. இதனால், பூமியின் சராசரி வெப்பம் கடந்த 150 ஆண்டுகளில், 1 டிகிரி அதிகரித்துள்ளது. 11,000 வருடங்களில், நம் பூமியின் சராசரி வெப்பம் ஐந்து டிகிரி தான் உயர்ந்துள்ளது. சமீபத்தில் (2021 நவம்பர்) முடிந்த க்ளாஸ்கோ மாநாட்டில், சிலபல இழுபறிகளுக்குப் பின், உலக நாடுகள் சராசரி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவதாகச் சொல்லியுள்ளன

குற்றச்சாட்டு 3: பூமியின் கடல்களில், மேல்மட்டத்திலிருந்து, 700 மீட்டர் (2,300 அடிஆழம் வரை உள்ள நீரின் வெப்பநிலை, 1969 முதல், இன்றுவரை, .4 டிகிரி ஃபேரன்ஹீட் உயர்ந்துள்ளது. கடல்நீர், காற்று மண்டலத்தை விட 1,000 மடங்கு அதிக வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை படைத்ததுஅதையும் மீறி, .4 டிகிரி வெப்பநிலை உயர்வுக்குக் காரணம், மனிதனின் கட்டுக்கடங்காத சக்தி தாகம் மற்றும் நடவடிக்கைகள். இதனால் உருவாகும் கரியமில வாயுவே, இந்த வெப்ப உயர்வுக்குக் காரணம்.

சாட்சிகள்

  1. பூமியின் 70% பரப்பளவு, கடல். சராசரி கடலின் ஆழம், 4.32 கி.மீ. உலகின் 97% தண்ணீர் கடலில் உள்ளது. கடலின் பல இடங்களில், உலகின் மிக உயர்ந்த மலையை விட ஆழம் அதிகம்
  2. காற்று மண்டலத்தின் அதிக வெப்பத்தைக், கடல் உள்வாங்கிக் கொள்கிறது. பூமி சூடாக சூடாக, கடல், இந்த அதிகபட்ச வெப்பத்தை மேலும் உள்வாங்குகிறது. இதைப் புரிந்து கொள்ள இங்கு ஒரு அழகான விளக்க விடியோ: https://www.youtube.com/watch?v=WNpzc3SLkxs


  3. கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்
  4.  கடலில் உள்ள (coral) பவழம், பல நிறங்களில் உருவாகும் பாசியுடன் (colorful algae) பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்து வருகின்றது. கடல் பாசி, உணவைத் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. இந்தப் பாசி, மிகவும் சன்னமான வெப்ப மண்டலக் கடல் பகுதிகளில், காணப்படும். ஆனால், கடல் அதிக சூடானதும், கடல் பாசியால் இயங்க முடிவதில்லை. இதனால், அதைச் சார்ந்த பவழங்களும் இறக்கின்றன. உலகின் பவளப் படலங்கள் பலவற்றிலும், பவளம் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் அளந்து, வெளியிட்டுள்ளார்கள்
  5. இதில் மனிதனுக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழலாம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, இந்த உலகில் வாழும் பல உயிரினங்களும், ஏதோ ஒரு வகையில், இன்னொரு உயிரினத்தைச் சார்ந்துள்ளது. கடலில் நிகழும் மாற்றங்கள், நிலத்தில் வாழும் மனித இனத்தையும் நிச்சயமாக பாதிக்கும். இதன் அதிகபட்ச தாக்கம், நிலம் என்பதையே ஒரு கேள்விக் குறியாகி விடும். கடல் வாழ் உயிரினங்கள், மனித உணவில், மிகவும் முக்கிய ஒரு அங்கம். நாம் சகட்டு மேனிக்கு, அரசியல் விளையாட்டுக்களால், மேலும் கரியமில வாயுவைக் காற்றில் கலந்து கொண்டே வந்தால், இங்கு சொன்ன அதிகபட்ச தாக்கம் சாத்தியமாகும்

குற்றச்சாட்டு 4: வட துருவக் கரடிகள், 2100 –ஆம் ஆண்டில், மறைந்து விடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதைப் போன்று, பல்வேறு விலங்குகள் மறையக் காரணம், அவற்றிற்கு உணவு இல்லாமல் (உருகும் பனிப்பாறைகள் குறைந்து கொண்டே வருவது, வர துருவக் கரடிகளின் உணவுப் பஞ்சத்திற்குக் காரணம்), அந்த இனமே மறைந்து விடும் ஆபத்து உள்ளது. இதற்கும் காரணம், தொல்லெச்ச எரிபொருளை தயாரிப்பு மற்றும் போக்குவரத்திற்கு அதிகபட்சமாகப் பயன்படுத்தி, பூமியைச் சூடேற்றுவதில் மனிதனின் முன்னேற்ற தாகம்

சாட்சிகள்

  1. கனடாவின் சர்ச்சில் என்ற இடம், மானிடோபா என்ற மாநிலத்தில் உள்ளது. இங்கு துருவக் கரடிகள், கோடைக்காலத்தில், கடலில் பனிப்பாறைகள் உருகியதால், நிலத்திற்கு வந்து இரை தேடும். சர்ச்சிலில், கோடை காலம் என்பது, பொதுவாக, 15 டிகிரி செல்சியஸைத் தாண்டாது.
     
  1. ஆகஸ்ட் 2020 –ல் , சர்ச்சிலின் நிலை இதோ:



                                                                                                                                                                                               

24 டிகிரி வெய்யில் என்பது, அங்குள்ளவர்கள் நினைத்து கூடப் பார்க்காதது. ஆர்க்டிக் கடலின் வெப்பத்திற்கு, இதை விட பெரிய சாட்சி தேவையில்லை. எல்லா கடல்களைப் போல, ஆர்க்டிக் கடலையும் கப்பலில் கடக்க முடியும். இந்தக் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் கரடிகள், கடல்நாய்கள் என்று பல உயிரினங்கள் மடிந்து வருகின்றன. 

  1. கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், ஆகஸ்ட் 2020 –ல், தன் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். 2100 –ல், துருவக் கரடிகளே இருக்காது என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவு. கரடிகள், கடல் நாய்களை, வசந்த காலம் முடிந்தவுடன், அதிகமாக வேட்டையாடும். குளிர்காலம் நெருங்குகையில், இதன் உணவு, குறைந்துவிடும். முக்கியமாக, கடலில் பனிப்பாறைகள் உறைந்திருந்தாலே, கடல் நாய்கள், அதற்கு உணவாக கிடைக்கும். வெப்பத்தினால், இதற்குக் கிடைக்கும் உணவு, குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆராய்ச்சியாளர், துருவக் கரடிகளுக்கு தேவையான கலோரிகள், அது, கிடைக்கும் மாதங்கள், மற்றும் ஆர்டிக் கடலின் வெப்ப நிலை, எல்லாவற்றையும் கணக்கிட்டு, இந்த முடிவிற்கு வந்துள்ளார்
  2. கடலில் வாழும் சிறு உயிர்கள், பெரும் கரடிகள் என்று அனைத்து உயிரனங்களும், தான் தூண்டாத புவி சூடேற்றத்தால், மடிந்து கொண்டு வருகின்றன. இதற்கு முழுப் பொறுப்பும், மனித நடவடிக்கைகள் தான் 

நிலத்தில் நாம் ஈடுபடும் நடவடிக்கைகள், இயற்கையின், பல செய்முறைகளை பாதிக்கிறது என்று அறியாமல், மனித குலம், அதில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக, தொல்லெச்ச எரிபொருளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், போக்குவரத்து தொழில்நுட்பங்கள், இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், இன்று காரணம் தெரிந்தும், அதில் தொடர்ந்து ஈடுபடுவது வேதனைக்குரியது. பூமி இருக்கும், மனிதன் இருப்பானா என்பதே கேள்வி. மேலும் , சில குற்றச்சாட்டுக்களை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.