மதியம் – குளம்
குளமென ஆடுகிறது
மதியம்.
வெயில் குழந்தை
ஆழ்ந்து தூங்குகிறது அதனுள்.
குழந்தையை அணைத்தபடி
உறங்குமவள் முகத்தில்
அன்னையின் கனிவு.
அகம் விழித்துறங்கும்
அவள் கனவில்
அந்தியின் அசைவு
பிள்ளை விழித்துமுனகும்
வண்ணக் குழைவு.
ஆயிரம் மென்முலைகளென
அவள் பொங்குகிறாள்.
ஒரு முலை நுனியை
கொத்திப் போகிறது
சிறு பறவை.
**
மதியம் – பறவை
இந்த என் மதியம்
ஒரு அமைதியான பறவை.
அதன் பாடலின் ஆழம்
குரலுக்கு எட்டவில்லை.
அது கண்மூடி அமர்ந்திருந்தது.
பின், நீட்டி தன்
ஒற்றைச் சிறகை மட்டும்
விரித்தது.
நிறங்கள் குழைந்து மயங்கும்
அதன் கீழ்
அலகால் குடைந்து
பாடலை ஒரு நடனமாக்கியது.
அதிலிருந்து உதிர்ந்த இறகு
இரவின்மேல் வீழ்ந்தது.
**
மதியம் – ராதை
மாலைக்கான காத்திருப்பே
மதியத்தின் அழகு.
ராதையெனக்
காத்திருக்கும் அது
ஓர் திசை நோக்கி.
அந்தியின் வருகை
தூரத்தில் தெரியவும்
இவள்
எப்போதங்கே ஓடிச் சேர்ந்தாள்?
அதோ,
வண்ணங்களென அவனைத்
தொட்டுத்தொட்டு கலைப்பது
மதியமேதான்.
தொலைவில் நிறம்மாற்றி
இதழ்விரிக்கும் மதியமே
இங்கு இத்தனை நேரம்
காத்துக் கிடந்தது
மாலை தானே?
–