”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”

This entry is part 3 of 10 in the series கி.ரா. - அ.ரா.

21

புதுவைப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியனைத் தடாலடியான நிர்வாகி என்றுதான் சொல்லவேண்டும். அவர் நினைத்ததைச் செய்துவிடுவார். அப்பல்கலைக்கழகத்திற்குத் தேசிய அளவிலும் உலக அளவிலும் இடங்களை உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு வெவ்வேறு துறைகளில் அதற்கான நபர்களை அழைத்துவந்தார். பன்னாட்டு உறவுகளும் அரசியலும் என்ற துறையில் உலக அளவில் அறியப்பட்ட ஒருவரை வருகைதரு பேராசிரியராக ஆக்கினார். அவர் திரு ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த மூன்றாம் உலக நாடுகளின் கூட்டறிக்கையை – பெல்கிரேட் முன்வைப்பு – உருவாக்கியவர். உயிரியல் துறைக்குச் சலீம் அலியின் பெயரைச் சூட்டி, அவரது சீடர் ஒருவரைக் கொண்டுவந்தார். விளையாட்டுத்துறையின் முதன்மையராக இந்திய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை நியமனம் செய்தார். 

வெளியே அறியப்பட்ட முகங்களைப் பல்கலைக்கழகத்தில் நிரப்புவதின் வழியாக உலகவரைபடத்தில் பல்கலைக்கழகம் இடம்பெறும் என்ற நோக்கத்தை நிறைவேற்றினார். தமிழ்த்துறைக்குப் பேரா.க.ப. அறவாணன் தேர்வு செய்யப்பட்டதின் பின்னணியில் கூட அவரது அயல்நாட்டுப் பணி அனுபவங்கள் இருந்தன. அவரோடு டெல்லிப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் நிலையில் இருந்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை அழைத்துவந்தார். ஆனால் அவர் தமிழ்த்துறையில் பணியாற்ற இயலாது; அவர்கள் அனைவரும் மரபான தமிழாசிரியர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னபோது அவருக்காக ஆரம்பிக்கப்பட்டதே நிகழ்கலைப்பள்ளி. 

தமிழ்த்துறையோடு ஒத்துப்போக முடியுமா என்றெல்லாம் சிந்திக்காமலேயே ஆளுமைகளை அழைத்து வந்து அமர்த்திவிடுவார். அப்படியாகச் சிறப்புநிலைப் பேராசிரியராக அழைக்கப்பட்டவர் கி.ரா. அவருக்கு முன்பு க.நா.சு. இவ்விருவரின் இலக்கியச் செயல்பாடுகள், இலக்கியம் பற்றிய கருத்துகளோடு தமிழ்த்துறைக்கு இணக்கம் இருந்ததில்லை. ஓராண்டு இருந்த க.நா.சு. இந்திய இலக்கியம், இலக்கியத்திறனாய்வு எனச் சில சொற்பொழிவுகளை நிகழ்த்திவிட்டு வெளியேறி விட்டார். கி.ரா.வோ நிதானமாக வந்து மூன்று மாதங்கள் வரை துறையாசிரியர்களோடும் ஆய்வாளர்களோடும் உரையாடி, இங்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு, தனது சமகால இலக்கிய அடையாளத்தை முன்னிறுத்தாமல் நாட்டார் கதைத்தொகுப்பு என்ற இன்னொரு பக்கம் நகர்ந்தார். அப்படியொரு திட்டத்தைத் தந்தவுடன் துறை அவருக்கு ஆய்வு உதவியாளராக சிலம்பு நா.செல்வராஜை அனுப்பியது. தேடுவது, தொகுப்பது, வகைப்படுத்துவது, பதிப்புப்பணி என எல்லாவற்றிலும் திட்டமிட்டுச் செயல்படும் நா. செல்வராஜ், கி.ரா. வுக்குக் கிடைத்த நல்ல உதவியாளர்.

22

சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் கொண்டாடப்படும் உலக அரங்கநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று நானும் அப்போது துறைத்தலைவராயிருந்த கரு. அழ.குணசேகரனும் சென்று கி.ரா.வை அழைத்தோம். அப்போது முதல் துணைவேந்தர் இல்லை. அடுத்த துணைவேந்தர் பேரா.ஆ.ஞானம் வந்திருந்த ஆண்டு. அவரும் வருகிறார்; நீங்களும் வரவேண்டும் என்றோம். தேதியைக் கேட்டுக்கொண்டு வந்து அழைத்துச் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் வருவது இயலாது; ஒரு ஆட்டோ போதும் என்றார். சரியென்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது நிறுத்தி “ நேரம் சொல்லவில்லையே?” என்றார். மாலை 6.30. என்றபோது சிரித்துக் கொண்டே, அப்போ என்னையெ விட்டுடுங்க சாமிகளா.. என்றார். பகல்லெ நிகழ்ச்சின்னா எப்படியோ தட்டுத்தடுமாறி வந்து பார்த்துட்டு வந்திடலாம். ராத்திரி கதையெல்லாம் நமக்கில்ல. அதெல்லாம் முடிஞ்சு போச்சு” என்று சொல்லித் திரும்பவும் எங்களை உட்கார வைத்துவிட்டார்.

உட்காரவைத்தவர், நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான் என்று சொல்லி முடித்தார்.

இரவில் வரமுடியாது என்ற சொன்னதால் அவர் இல்லாமல் உலகநாடகவிழாவைத் தொடங்க விருப்பம் இல்லை. அதனால் குணசேகரன் நீங்கள் காலையில் 11 மணிக்கு வாங்க; உங்களுக்காக அப்போதே தொடக்கவிழாவை வைத்துவிடலாம். துணைவேந்தர் இரவில் சிறப்பு விருந்தினராக வரட்டும் என்று ஒத்துக்கொள்ள வைத்தார். அப்படியே அந்த விழாவிற்கு வந்தார் கி.ரா. 

நிகழ்கலைப்பள்ளி மாணவர்களின் ஒத்திகைகளின் பரபரப்புப் பின்னணியில் தொடங்கிவைத்தார். கரு. அழ. குணசேகரனின் குரல் “ஆக்காட்டி.. ஆக்காட்டி.. எங்கெங்கே முட்டையிட்டே” என்று ஆகாயத்தில் தேடிப்போனது. இப்போது கி.ரா.வும் இல்லை. கி.ரா.வை அப்படி நேசித்த நண்பர் குணசேகரனும் இல்லை. இன்மைகளின் பாரம் அழுத்துகிற காலமாக நமது காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

23

பாண்டிச்சேரி கம்பன் கலை அரங்கில் ஒரு கூட்டம். கூட்டம் முடிந்து வெளியேறும்போது பார்த்தால் கோமல் சுவாமிநாதன் நின்றிருந்தார். பக்கத்தில் கி.ரா. கூட்டம் ஆரம்பித்தபிறகு அவர்கள் வந்திருக்க வேண்டும். அப்போது கோமல் சுபமங்களாவின் ஆசிரியர். அவரோடு அவரது துணை ஆசிரியர்களும் புகைப்படக்காரர் ஒருவரும் வந்திருந்தார்கள். 

சுபமங்களாவில் ஒவ்வொரு இதழிலும் ஒரு எழுத்தாளரை நேர்காணல் செய்து விரிவாக வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம். கி.ரா.வை நேர்காணல் செய்ய வந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. கடைசியில் கோமலைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு பேர் நின்றிருந்தோம். நிறப்பரிகை ரவிக்குமார், பிஎஸ் என் எல் மதியழகன், எங்கள் கூட்டுக்குரல் நாடகக் குழுவைச் சேர்ந்த அருணன், கோமதி, பெருமாள், விஷ்ணுதாசன் ஆகியோரும் இருந்தார்கள்.

பாண்டிச்சேரியைச் சைக்கிளில் சுற்றிவரும் நாங்கள் – எங்கே சுற்றினாலும் வீட்டுக்குப் போய் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் . கி.ரா, வும் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவரே. கோமலோடு பேசிக்கொண்டிருந்த நிலையில் எப்படி ஒன்றும் சொல்லாமல் கிளம்புவது என்று நினைத்துக் கொண்டு நின்றோம். “வாங்க சாப்பிடலாம்; ராம் இண்டர்நேசனல் பக்கத்திலெதான் இருக்கு” என்று சொன்னபோது. “ பாண்டிச்சேரி ரோட்டுக்கடைப் புரோட்டோவும், போத்திக் குழம்பும் சாப்பிடணும்யா” என்றார். 

கம்பன் கலையரங்கத்தின் இடது மூலையில் தொடங்கும் அண்ணாசாலையின் வலதுபக்கம் – அண்ணா திடல் ஓரத்தில் மூன்று பக்கமும் இரவுச் சாப்பாட்டுக்கடைகள் வரிசை கட்டும். புரோட்டா, இட்லி, ஊத்தப்பம் கிடைக்கும். இவற்றிற்குத் தரப்படும் சால்னாக்கள் விதம்விதமானவை. வெத்துச்சால்னா, வெஜ் சால்னா, மட்டன் சால்னா, சிக்கன் சால்னா, என்பனவற்றைத் தாண்டி குடல் குழம்பு ஒன்று தருவார்கள். அதற்கு போத்திச் சால்னா என்று பெயர். அதேபோல் இறால் சால்னாவும் தருவார்கள். 

கோமலின் ரோட்டுக்கடை ஆர்வம் அங்கிருந்த பலருக்கும் ஆச்சர்யம். இத்தனை பேர் சாப்பிட்டால் யார் பணம் தருவது என்ற தயக்கம் இருந்தது. பிஎஸ் என் எல்லில் வேலை பார்க்கும் நண்பர் மதியழகன் தான் தைரியம் ஊட்டினார். சாப்பிடட்டும் பணம் இல்லையின்னா சொல்லிக்கிடலாம். நாளைக்கு வந்து கொடுத்திடலாம். மதியழகன் கவிதைகள் எழுதுவார். ஆனால் மற்றவர்களோடு விவாதிக்கக் கொஞ்சம் யோசிப்பார். புதிய கோடாங்கியில் வந்த அவர் கவிதைகள் வித்தியாசமாவை. அவை பின்னர் தொகுக்கப்பட்டு 2012 இல் ‘ வியூகம் கொள்ளும் காய்கள்’ என்ற தொகுப்பாகக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. 

மதியழகன் தந்த தைரியத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்தோம். கோமல் போத்திக்குழம்பை விரும்பிச் சாப்பிட்டார். கி.ரா. பக்கத்தில் நின்ற ஸ்கூட்டரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கோமலை அவர் தங்கியிருந்த விடுதிக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்பினோம். சில நாட்கள் கழித்துக் கி.ரா.வைச் சந்தித்தபோது ‘ பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல’ என்று கேட்டார். கோமலின் எதார்த்தமான இணைக்கத்தையும் உணவு விருப்பத்தையும் தான் அப்படிக் குறிப்பிட்டார்.

24

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்பே சிறுகதைகளை நாடகமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத்தூக்கிகள்’ சிறுகதையை நாடகமாக்கிப் பலதடவை மேடையேற்றியிருந்தேன். திருவண்ணாமலை, சென்னை பரிக்‌ஷா குழுவினர் கூட அந்தப் பிரதியை மேடையேற்றினார்கள். அதைப்போலவே புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’ கதையையும் நாடகமாக்கி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். மதுரை நிஜநாடக இயக்கத்தின் கலைவிழாவில் மேடையேற்றுவதற்காகக் கூட்டுக்குரல் நாடக க்குழு மூலம் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களது ஒத்திகைகள் பெரும்பாலும் பாண்டிச்சேரியின் மிஷன் தெருவில் உள்ள கல்வே கல்லூரியின் மைதானத்தில் அல்லது திறந்திருக்கும் வகுப்பறை ஒன்றில் நடக்கும். 

புதுமைப்பித்தன் கதையை நாடகமாக்கியிருந்த தகவலைக் கி.ரா.விடம் சொல்லியிருந்தேன். கல்வே கல்லூரிப் பக்கம் வந்தால் ஒத்திகையைப் பார்த்து கருத்துச் சொல்லுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். ஒருநாள் வருகிறேன் என்று சொல்லியிருந்தார். அம்மாவோடு வந்து பார்த்துவிட்டுக் கடற்கரைப் போகும் திட்டம். அதன்படி வந்து பார்த்துவிட்டுக் கடற்கரைக்கு மாலை நேரக் காற்று வாங்கப்போய்விட்டார். கருத்து எதுவும் சொல்லவில்லை. ‘ வீட்டிற்கு வாங்கோ, பேசலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார். 

ஒருநாள் கழித்து அவர் வீட்டிற்கு போனபோது புதுமைப்பித்தன் கதையில் இல்லாத பகுதியையெல்லாம் சேர்த்த மாதிரி இருக்கே. அத்தோட அவரோட கதையிலெ ‘ ஒரு தேவாரப்பாட்டு இருக்கு; ஆனா ஒங்க நாடகத்திலெ நாட்டுப்புறப்பாட்டெல்லாம் இருக்கு’ என்று சொல்லிவிட்டு, நாடகம் முடியும்போது புதுமைப்பித்தன் கதையில் விவாதிக்கும் விவாதம் இருக்கு. பொதுவா ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்குப் போகும்போது அதன் பகுதிகளை விடவேண்டியது இருக்கும். ஆனால் புதுசா சேர்த்தா, எழுதினவன் கதை காணாமல் போயிடுமில்ல’  என்று கேட்டார். இன்னொரு வடிவத்திற்கு மாற்றும்போது விடுறமாதிரி கூடுதலாச் சேர்க்கிறதும் தவிர்க்க முடியாதுன்னு சொன்னேன்.  “ஒரு கதை ஒருவரின் வாசிப்புக்கானது; நாடகம், சினிமால்லாம் கூட்டமா ஒக்காந்து பார்க்கிற பார்வையாளர்களுக்கானது; அதனாலெ அதிலெ சேர்க்க வேண்டிய கூறுகளெச் சேக்கவும் வேணும். அந்த அடிப்படையிலெ தான் புதுமைப்பித்தன் கதையில கதைசொல்லியெ தூக்கிட்டு, ஒரு குழுவெ வச்சு நாடகத்தின் நிகழ்வுகளெச் சொல்ல வச்சிருக்கேன். அந்தக் குழு பாட்டு மூலமா பார்வையாளர்களுக்கு நாடக நிகழ்வுகளெ முன்வைக்குது” என்று விளக்கினேன்.

 “நீங்க இப்படி சொல்றீங்க; ஆனா என்னோட நாற்காலி கதையெ கோமல் சுவாமிநாதன் நாடகமா ஆக்கினாரு. கோமல் குழுவில இருந்த வாத்தியார் ராமனெல்லாம் அதில நடிச்சாரு. அந்த நாடகப்பிரதியெ எனக்கு அனுப்பியிருந்தாரு. மேடையேத்திறதுக்கு அனுமதி வேணும்னு கேட்டாரு. நானும் படிச்சுப் பார்த்துட்டு பேஷாப் போடுங்கோன்னு சொல்லிட்டேன். சென்னையில ஒரு எழுத்தாளர் மாநாட்டில தான் போட்டாரு. நான் போய்ப்பாக்கல” என்று சொல்லிவிட்டு சுந்தர ராமசாமியோட கதையெ நாடகமாக்கினீங்களே ; அவர் பாக்க வந்தாரான்னு கேட்டார். முதல் மேடையேற்றத்துக்கு மதுரைக்கு வருவதாகச் சொன்னார். ஆனால் அந்த நாளுக்கு முன்னால் ‘ பல்வலி, அதனாலெ வர இயலாது; நாடகமாப் போடலாம்னு எழுதி ஒரு கார்டு போட்டிருந்தார்’ என்றேன். அதன் பிறகு நாவல், சிறுகதைகளைச் சினிமாவாக்குவது பற்றி பேச்சு திசைமாறி முடிந்தது. 

 “நீங்க என்னோட சிறுகதைகள்ல ஏதாவது ஒன்னெ நாடகமாக்கலாமே” என்றார். அப்படி நேரடியாகச் சொல்வார் என்று நினைக்கவில்லை. அவரது சிறுகதைகள் பலவும் நடப்பியல் கதைகள். ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளை விவரிப்பதின் வழியாக முடியும் வடிவம் கொண்டவை. அதற்குள் பாத்திரமுரண்கள் குறைவு. கதை எழுப்பும் நிகழ்வுகளோடு வெளியே இருக்கும் சமூகத்திற்கு முரண் உண்டு. கருத்தியல் முரண்கள் இருக்கும். அதே நேரத்தில் கதை சொல்வதற்கு ஒரு எடுத்துரைப்பாளரை உருவாக்கி அவரது கதைகளை நாடகமாக்க முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். பணத்தின் நகர்வை மையப்படுத்திய தாவைப் பார்த்து கதையை அப்படி முயன்று பார்த்தேன். கதவையும் வேட்டியையும் இணைத்து ஈரங்க நாடகமாக்கவும் முயன்றேன். அந்த முயற்சிகள்  இன்னும் மேடையேறாமலேயே கிடக்கின்றன. நிகழ்கலைப்பள்ளியை விட்டு வராமல் இருந்திருந்தால் அவை மேடையேற்றப்பட்டிருக்கலாம்.

25

”பாண்டிச்சேரிக்கு வந்தபிறகு சிறுகதை எழுதிறதே மறந்துட்டுய்ய்யா.. ரொம்பநாள் கழிச்சு ஒரு கதை இந்தியாடுடேயிலெ வருது. படிச்சுட்டு சொல்லுங்கோ “ என்றார் கி.ரா. அப்படி வந்த கதையின் பெயர் ”காய்ச்சமரம்” இந்தியாடுடே வெளியிட்ட பொங்கல் அல்லது தீபாவளி மலராக இருக்கவேண்டும். ’காய்ச்சமரம் கல்லடிபடும்’ என்ற சொலவடையின் முன் சொல்லைத் தலைப்பாக்கி எழுதிய அந்தக் கதை வந்த இந்தியாடுடேயை வாங்கிப் படித்துவிட்டு அவரைச் சந்தித்தேன். 

கிராமத்துப் பெருந்தனக் குடும்பம் ஒன்றின் பாகப்பிரிவினைக்குப் பின், மகன்களிடம் பெற்றோர் படும்பாட்டையும், இனி இவர்களிடம் இருக்கக்கூடாது; எங்கேயாவது போய்த் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கிளம்பிய தம்பதிகள், தற்கொலை முடிவைக் கைவிட்டு ஒரு கோயில்வாசலில் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தியதைக் கண்டுபிடித்த ஊர்க்காரரின் மனவேதனையாக அந்தக் கதையைச் சொல்லியிருந்தார். 

அந்தக் கதை வருவதற்கு முன்னால் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி சி.கே.தாமஸ் என்ற மலையாள இயக்குநரை அழைத்து விருந்து இயக்குராக ஒரு நாடகம் செய்யச் சொன்னது. அவர் சேக்ஸ்பியரில் ஒன்றைச் செய்யலாம் என்று சொன்னார். மேக்பெத், ஜூலியர் சீஸர் என யோசித்துக் கடைசியில் ‘கிங் லியர்’ தேர்வுபெற்றது. ஏற்கெனவே இருக்கும் மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தலாமா? புத்தாக்கமா ஒத்திகையின்போது பிரதியாக்கத்தையும் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளலாமா? என்று யோசித்தபோது, நிகழ்கலைப்பள்ளி இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி, ”ஒத்திகையைத் தொடங்குங்கள்; நாடகப்பிரதியைத் தழுவலாகத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டார். ஆரம்பக்கட்ட ஒத்திகைகள் வசனங்கள் இல்லாமல் காட்சி அமைப்புகளாக ஆரம்பித்தன. பள்ளியில் படித்த மாணவர்கள் போதாத நிலையில் நான் லியரின் நண்பரைப் போன்ற பக்கத்து நாட்டு க்ளோஸ்செஸ்டர் பிரபு பாத்திரத்தை ஏற்றிருந்தேன். கண் தெரியாத தந்தையை ஏமாற்றும் பிள்ளைகள் அவருக்குண்டு. இன்னொரு ஆசிரியர் வ. ஆறுமுகம் லியரின் மருமகன்களில் மூத்தவராக நடித்தார். மனுஜோஸ் என்னும் சிறந்த நடிப்பு மாணவன் லியராக நடித்தான். ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் நாடக்த்துறையில் விருப்பப்பாடம் படிக்க வந்த மாணவிகளும் நடித்தார்கள். 20 -க்கும் மேற்பட்ட பாத்திரங்கள்.

ஒருவாரத்திற்குப் பின் இ.பா. கிங் லியரை, ”இறுதியாட்டம்” என்னும் தழுவலாகத் தந்தார். சேக்ஸ்பியரின் எல்லாப் பெயர்களும் மாறியிருந்தன. ஒரு மாத ஒத்திகைக்குப் பின் நாடகம் மேடையேற்றம் கண்டது. இந்த கிங் லியர் கதையை அப்படியே மாற்றி பெண் பிள்ளைகளுக்குப் பதிலாக ஆண்கள் என்று போட்டால் அதுதான் கி.ரா.வின் காய்ச்சமரம். இங்கிலாந்து உள்பட்ட ஐரோப்பாவில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு. இந்தியாவில் எப்போதும் ஆண்களுக்கே சொத்துரிமை.

காய்ச்சமரம் கதையை வாசித்துவிட்டு லியரை ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். உலகத்தில் பிள்ளைகளைக் கடைசிவரை அடக்கிவைத்திருக்கும் பெற்றோரைப் பழிவாங்கும் பிள்ளைகள் என்ற உரிப்பொருள் பரவலான ஒன்றுதான். எல்லா மொழிகளிலும் இப்படியான ஒரு கதையல்ல; ஓராயிரம் கதைகள் இருக்கும் என்றார் கி.ரா. நேரடி அனுபவங்களைக் கதையாக்கும் கலைஞனைச் சேக்ஸ்பியர் படித்துத் தழுவல் செய்துவிட்டான் எனச் சொன்னால், சொல்பவனைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவான் என்றும் சொன்னார். 

கி.ரா. வைப்பொறுத்தவரைக் கதைகள் காய்த்துத் தொங்குப் பெருமரம் என்பதைப் பாண்டிச்சேரியில் இருந்த ஏழாண்டுகளில் நேரடியாக அறிந்து கொண்டேன். அவர் பேச்சு ஒவ்வொன்றும் கதையாகவே இருக்கும்.

Series Navigation<< கி.ரா – நினைவுக் குறிப்புகள்“பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுக்காரங்களுக்கு மட்டும் மரியாதெ செய்யுது?” >>

3 Replies to “”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல””

  1. கோமல் சுவாமிநாதன் எனது மதிப்பிற்குரிய நாடகக்காரர். அவரது ஆசிரியப்பொறுப்பில் வந்த சுபமங்களாவில் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறேன். அவர் ஏற்பாடு செய்த நாடகவிழாக்களில் இயக்குநராகவும், நாடகவிமரிசகராகவும் பங்கேற்றுள்ளேன். நாங்கள் நடத்திய நாடகம் சார்ந்த நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். அவரது பெருமையைக் குறைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் பிராமணராக இருந்தபோதிலும் அதன் அடையாளமான சைவ உணவை மட்டுமே உண்பேன் என்ற பிடிவாதத்துடன் இருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கமே எனது குறிப்பில் உள்ளது. அவர் தன்னைத் தாராளவாத இடதுசாரியாகவே அனைவரிடமும் பழகினார். அதையே தான் கி.ரா.வின் கூற்றும் வெளிப்படுத்துகிறது. இதற்குப் பதிலாக அவரைப் பிராமணியத்தின் உணவு அடையாளத்தைக் கடைப்பிடித்தவராகவும், இறுக்கமான சனாதன தர்மத்தோடு வாழ்ந்தவராகவும் மதிப்பிற்குரிய கோமலைக் காட்ட நினைக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். அவர்களின் விருப்பத்தை நான் குறைசொல்ல விரும்பவில்லை. இப்போதைய தேவையாக இருக்கலாம்.
   *****
   புதுச்சேரி அண்ணா திடல் அருகில் இருந்த சாதாரண மக்களின் உணவுக்கடையில் நான் நேரில் அவர் அருகில் அமர்ந்து உணவு உண்டேன். அத்துடன் திரு. கோமலோடு அன்று உணவுண்ட நண்பர்கள் 10 பேருக்கும் மேலான நண்பர்கள் புதுவையில் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். இது நடந்த நிகழ்வு. அவர்களின் தொலைபேசி எண்களை வாங்கித் தருகிறேன். குறிப்பாக அன்றைய உணவுக்கான பணத்தைத் தந்த நண்பர் மதியழகன் கோமலோடு தொடர்பில் இருந்தவர். தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நீங்கள் பேசிக்கொள்ளலாம். .
   *******
   “ பிராமணர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் இருக்கில்ல” என்னும் அந்தத் தலைப்பு ஒருவிதமான கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறது. நான் அந்தத் தலைப்பைத் தரவில்லை.ஆசிரியர் குழுவினர் அந்தத் தலைப்பை தந்திருக்கிறார்கள்.
   அ.ராமசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.