பூவண்ண சந்திரசேகர்
1
நானும் என் ஆறும் மரமும்
தலைகீழாக கவிழ்க்கப்பட்ட
பிளாஸ்டிக் கேத்தலிலிருந்து
குமட்டல் சப்தமாய் குதிக்கும்
எப்போதோ எறிந்த கல்
கரை ஒதுங்குகிறது
உடம்பெல்லாம் அமர்த்திய
இலைகளை உலுப்பி
ஈரமாக்குகிறது
துளிர்த்த காலத்தே
கரையோர நாவல் மரம்
நெட்டித் தள்ளிய
ஒற்றைக் கல்லும்
கரை ஒதுங்கிக் கிடக்கிற ஒன்றை
மாற்றொன்றில் பொறுதி
குடமளவு நெருப்பாய் வார்த்தெடுத்தேன்
வெளிச்சம் அறைந்த முதுகில்
இன்று உடனிருக்க
அம்மையாய் விழுந்தன விண்மீன்கள்
இந்த ராவின் சாமத்தில்
பழுத்த கண்களும்
பனியின் தீ நாவும்
கிட்ட நெருங்காது
இனி நாங்கள்
ஒற்றைப் படுக்கையில்
உறங்க முடியும்
2
இவன் முத்தமிட்டதேயில்லை
இதுவரை
எவரையும் எதனையும் கூட
இக்காலத்தில் இவனிடம்
ஆயிரமோ அதற்கதிகமாயோ
காதலிகள் இருக்கிறார்கள்
ஓரிதழேனும் இவனிதழ் வருடியதாவெனில்
இல்லை
நெடுநாள் பிரிவின் பிற்பாடும் அணைத்தானேயன்றி
அவனுக்கு ஆசையாய்
ஒரு முத்தமிடவில்லை
பின்னெதற்கந்த இதழ்கள்
என்கிறான் அவன்
சுமை தான்
என்கிறார்கள் காதலிகள்
அவை சாபமிடப் பிறந்தவை
சாவின் சுவடிகளை
வாசிக்கப் பிறந்தவை
வாரித் தின்னவும்
ஒழுங்கு காட்டவும்
மற்றும்
முத்தமிடுதலல்லாது
மற்றல்லாவற்றிற்குமாய்
ஜனித்தவை அவை
ஆமிராபாலன்
நிகழ்வெளி
பூக்கள் உதிரா சமவெளியில்
வெயில் மேயும் கோடையில்
யாருக்கும் தெரியாமல்
சருகை மென்று
பதுங்கி வாழும்
பழுப்பு நிற ஓடு கொண்ட ஆமையைப் பார்த்து
அதிசயிக்கும் காய்ந்த மரங்கள்
அதன் அருகில்
துளிர்த்திருக்கும் சிறு புற்கள்
இரண்டிற்கும் இடையில்
யாருக்காகவோ காத்திருக்கும்
காலடித் தடம் ஒன்று