கரவுப் பழி

வானம் நீல நிறத்திலிருந்து   கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற  ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள்.   ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற பசுக்களின் நஞ்சுக் கொடிகளிலிருந்து நாசியைத் தொட்டுச் செல்லும் துர்மணம் இன்று இயல்பை விட  கடுமையாக இருந்தது. சாலாட்சியும் காவேரியும் முன்னால் செல்ல அவர்களை ஒட்டி பின்னால் ராசாத்தி சென்றாள். மனிதர்களும் ஆடு மாடுகளும் நடந்து நடந்து  மென்மையாக மாறிய மணலில் நடக்கும்போது உள்பாதங்களில் எப்போதும் தோன்றும் மெல்லிய சிலிர்ப்பை தற்போது அடையாமல் தங்களுக்குள் ஆழ்ந்தவர்களாக நடந்தார்கள்.  

        தொலைவில், வேலங் கண்மாயின் நீர் தரையில் காயப்போட்ட சேலைபோல லேசாக நெளிந்து கரையில் மோதிக்  கொண்டிருந்தது.  புதுப்பட்டி செல்லும் கண்மாயை கடந்து செல்லும் பாதையிலிருந்து விலகி மேற்கில் பிரிந்த ஒற்றையடிப் பாதையில் திரும்பினார்கள். நிமிர்ந்து பார்த்தபோது வேணியம்மை கோவிலிருந்த அடர்ந்த புதர் பசுங் குன்றுபோல கண்ணில் பட்டது. அடுத்த ஊரான கரையாபட்டிக்கு செல்லும்போது மெல்லிய குறுகுறுப்புடன் புதரைக் கடப்பார்கள். ஆனால், இப்போது, சத்தியம் செய்வதற்காக அம்மையை நோக்கி செல்லும்போது, அவர்களின்  மனம் அகல் தீபம் காற்றிலென ஒரு கணம் நடுக்குற்று சீரானது. சாலாட்சியின் மனம் இங்கு வரவேண்டிய இக்கட்டிற்கான தொடக்கத்தை எண்ணியது. 


         நேற்று மாலை ஐந்து மணியைப்போல ராமய்யாக் கோனார் வீட்டில் நின்ற தனது சூல் கொண்ட கிடாரியைப்  பிடித்தபடி தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் சாலாட்சி. நேமத்தாம்பட்டியிலிருந்து ஆறு மாதங்களுக்கு முன் வாங்கி வந்த செவலைக் கிடாரி இப்போது சூல் கொண்டுள்ளது. ஒரு கிடாரியை மட்டும் மேய்க்க தனி ஆள் செல்ல வேண்டாமென்று காலையில் ராமய்யாக் கோனார் வீட்டில் கொண்டுபோய் விடுவாள். அவர் தன்னிடம் இருக்கும் பல மாடுகளோடு இதனையும் ஓட்டிச் சென்று மேய்த்து வருவார். மாலையில் சென்று தன் வீட்டிற்கு பிடித்துவருவாள்.  

       இன்று இவளைப் பார்த்தவுடன் தாயை அழைப்பதான தொனியில்  குரலையெழுப்பிய  கிடாரியை அவிழ்க்கும்போது, பழுப்பு நிறமாக மாறிய வேட்டியை மட்டும் உடுத்தியபடி திண்ணையில் அமர்ந்து வரக்காப்பி குடித்துக் கொண்டிருந்த ராமய்யாக் கோனார் “நானும் எத்தனையோ கிடாரிகளையும் பசுக்களையும் பாத்திருக்கேன். ஆனா இந்தக் கிடாரி மாதிரி எதையும் பாத்ததில்லத்தா” என்று சாலாட்சியிடம் கூறினார். எத்தனை பால் மாடுகள் இருந்தபோதும் பால் கலந்த காப்பி குடிக்கமாட்டார். கேட்டால் “இப்போதானே சொந்தமா மாடுக  வச்சிருக்கேன். முன்னாடில்லாம் அடுத்தவங்க மாட்ட மேச்சுக்கிட்டுதானே இருந்தேன். எத்தன மாடுகள மேச்சாலும் எவ்வளவு பாலக் கறந்து கொடுத்தாலும் நீராகாரமும் வடிச்ச கஞ்சியும்தான் கொடுப்பாங்க. எப்பவாச்சும் வரக்காப்பி கொடுப்பாங்க. அப்பலேர்ந்து வரக்காப்பி மேல ஒரு பிரியம். ஆனா, நாமளா எதையும் கேக்க முடியாது. எனக்குன்னு சொந்த மாடு வந்த பின்னாடிதான் காலையில சாயந்தரம் ரெண்டு வேளையும் எனக்குப் பிடிச்ச வரக்காப்பியக் குடிக்கிறேன்” என்பார். 

   “என்ணண்ணே பண்ணிச்சு” என்று சாலாட்சி கேட்டாள். 

     “எல்லாப் பசுவுமே நிமிந்து அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பாக்கிறது… வாய்ப்புக் கெடச்சா சட்டுனு வயலுக்குள்ள இருக்கிற பயிர்ல வாய வக்கிறதுன்னு திரியும். இல்லன்னா ஏக்கமா பாக்கவாவது செய்யும்” என்று நிறுத்தியபோதும் சாலாட்சி எந்த உணர்வும் வெளித்தெரியாத பார்வையுடன் நோக்கினாள். 

  “ஆனா ஒன் செவலக் கிடாரி இது எதுவுமே செய்யறதில்ல. நேரா போறது, புல்ல மட்டும் மேய்றதுன்னுதான் திரியிது. எதையும் நிமிந்து கூட பாக்கறதில்ல. அப்படி அதப் பாக்கறப்ப ஒன் ஞாபகம் வந்துச்சு. ஒன்ன மாதிரியேதான் இருக்குன்னு தோணிச்சு. யாரோட வம்புக்கும் போகாம எவரைப் பத்தியும் மத்தவங்ககிட்ட பேசாம… தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருக்கிறல்ல… அதே மாதிரி” என்று வாஞ்சையுடன் சிரித்தார். 

“சாதாரணமா  புள்ளங்கதான் அப்படி இருக்கும். ஆனா கிடாரியும் அப்படி இருக்கிறது ஆச்சர்யமா இருக்குதாத்தா” என்று அவர் முடித்தபோது தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைப் போன்ற மெல்லிய புன்னகையுடன் “காலையில வர்றேன்னே” என்று கூறியபடி அம்முவை பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். 

      அம்முவென பெயரிட்டது இவள் மகள் சுந்தரிதான். மகன்  சீனியும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டவுடன் இவளும் இசைந்தாள். அம்முவின் முதுகிலிருந்த சுழியின் மேல் கையை வைத்து வாஞ்சையுடன் தடவியபடி “ரொம்பச் சமத்தா இருக்கியாமே உண்மையாவா. இல்ல அவரு ஒன்னோட போக்கிரித்தனத்த சரியா கவனிக்கலயா” என்று நெகிழ்வுடன் பேசிக் கொண்டு வந்தபோது “என்னத்தா கிடாரிய கொஞ்சிக்கிட்டு போற” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். சின்னய்யா எதிரில் வந்து கொண்டிருந்தார். இந்த ஊரின் மைனர் என்று சொல்லத்தக்க வகையில் இவரைப் பற்றிய செய்திகள் காதில் விழும். அவற்றை சாலாட்சி பொருட்படுத்தமாட்டாள். இவளிடம் தங்கை உறவு என்ற மரியாதையுடனேயே நடந்து கொண்டார். “சும்மா பேசிக்கிட்டு போறன்னே” என்று கூறியபடி கடந்தாள். 

      ஒழுங்கையின் இடது புறம் வேலிக்குள் தெரிந்த கூரை வீட்டின் வெளியே  அமர்ந்து,  பாலாம்மா வெற்றிலை மென்று கொண்டிருக்க, அவள் மகள்  சுப்பம்மா வீட்டைப் பெருக்கும் சத்தம் கேட்டு யதேச்சையாக  திரும்பிப் பார்த்தவளின் பார்வையை சுப்பம்மாவின் பாந்தமான முகம் ஈர்த்து நிறுத்தியது. கையில் கயிறு இழுபட்டதும் விழியை விலக்கி மீண்டும் அம்முவுடன் பேசியபடி வந்தாள். சிறிது தூரம் நடந்த பிறகு எதிரே வந்த காவேரி “சாலாச்சி… இந்தப் பக்கம் சின்னய்யாவப் பாத்தியா” என்று கேட்டாள்.

      “சுப்பம்மா வீட்டுப் பக்கம்தான் போனாரு” என்று கூறிவிட்டு வீட்டைச் சுற்றி அமைந்திருந்த சுற்று வேலியில் வழியாக அமைக்கப்பட்ட  கொன்றைக் குச்சிகளாலான  படலை திறந்துகொண்டு தன் வீட்டிற்குள் சென்றாள். 

      திண்ணையில் அமர்ந்து எதையோ மறுத்தும் எதிர்த்தும் பேசிக் கொண்டிருந்த பிள்ளைகள் “அம்மூ” என்று அழைத்தபடி ஓடி வந்தார்கள். கயிறை மகளிடம் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்த சாலாட்சிக்கு யோசிக்க நேரமில்லாத அளவிற்கு வேலைகள் இருந்தன. மூன்று பேருக்கும் காப்பி போட்டு, சேர்ந்து  குடித்தபின், சோற்றிற்கு உலை வைத்துவிட்டு சந்தையில் வாங்கி வந்த கெண்டை மீனை ஆய்ந்து குழம்பு வைத்தாள். அதில் பாதியை, நகரத்தில் வேலை செய்து சனி ஞாயிறுகளில் மட்டும் ஊருக்கு வரும் கணவனுக்காக குழம்பும் மீனுமாக வேறொரு மண் சட்டிக்கு மாற்றி, வெள்ளைத் துணியால் சட்டியின் வாயைக் கட்டி உறியில் வைத்தாள். இந்த வேலைகளை இவள் செய்துகொண்டிருக்கும் போது சுந்தரி வீட்டையும் வாசலையும் பெருக்கினாள். சுந்தரியிடம் சேட்டைகள் செய்தும் ஏறுக்கு மாறாக பேசி சிரித்தபடியும் திரிந்த மகன் சீனி, கை கால்கள் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து விளக்கேற்றினான். யாரைப் பற்றியும் புகார்களின்றி விளையாடும் தன் பிள்ளைகள் தன்னைப் போலவே இருப்பதைக் கண்டு ஒரு கணம் நெக்குருகியவளுக்கு அம்முவைப் பற்றி கோனார் கூறியது நினைவுக்கு வந்தது. இதெல்லாம், தன் தாயின் குணத்தின் நீட்சிதான் என்பதை எண்ணியவளின் விழிகளின் ஓரம் ஈரம் கசிந்தது. மனதில், எண்ணங்கள் அறுபடாத சங்கிலியென ஒன்றைத் தொட்டு ஒன்று என்று சென்று கொண்டிருக்கும் போதே வேலைகளையும் முடித்தாள். 

        காலையில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதோடு சேர்த்து அன்றாடம் செய்யும் வேலைகளையும் முடித்துவிட்டு மேலக்கொல்லைக்கு சென்றாள். பள்ளி செல்லும் பிள்ளைகள் போல துருதுருவென நிற்கும்  வேர்க்கடலை செடிகளோடு அவர்களை முறைத்து நிற்கும் காவாலிப் பயல்களைப்போல கோரைப் புற்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. “பசபசன்னு வளந்திருக்குற ஒன்னப் புடுங்குறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா பாவம் பாத்தா வேர்கடலச் செடிய அமுக்கீருவிங்களே …” என்று பேசியபடியே புற்களை தனியாகப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.

      பொழுது உச்சியை அடைந்தபோது ஊர் அம்பலத்தின் மகன் வந்து “அத்த, ஒங்கள பஞ்சாயத்துக்கு வரச் சொன்னாங்க” என்று  கூறினான். இவன் சாலாட்சியின் மகளுடன் ஐந்தாம் வகுப்பு பயில்பவன்தான். பஞ்சாயத்து கூடுவது பள்ளிக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலின் முன் உள்ள ஆலமரத்தடிதான். எனவே, ஆசிரியரிடம் சொல்லிவிட்டு,  அனுப்பியிருப்பார்கள். என்ன விவரம் என்று புரியாமல் திகைத்து “எதுக்குப்பா என்னக் கூப்பிட்டாங்க” என்று கேட்டாள். 

“அது எனக்கு தெரியாதே. இங்க இருப்பீங்கன்னு சொல்லி கூட்டிட்டு வரச் சொன்னாங்க” 

“சரி போ… வர்றேன்” என்று கூறியதும்  இரு சக்கர வாகனத்தை உதைத்து இயக்குவதுபோல ஒலி எழுப்பி வலது கையால் முறுக்குவது போன்ற பாவனையுடன் வாயில் ட்ரூ.. ட்ரூ… என ஒலியெழுப்பியபடி  ஓடினான். பிள்ளைகள் இவ்வாறு வண்டியில் செல்லும்போது “என்னையும் ஏத்திக்கிட்டுப் போ ராசா” என்று  எப்போதும் கூறும் சாலாட்சி இப்போது,  பெரும் குழப்பமும் அச்சமும் உள்ளத்தை உலப்ப  ஊரை நோக்கி வேகமாக நடந்தாள்.

           பரந்து கிளை விரித்திருந்த ஆலமரத்தின் அடியில் மரத்தை ஒட்டி சிறிது இடைவெளி விட்டு சுற்றிக் கட்டப்பட்ட திண்ணையில் பத்து பேர் அமர்ந்திருந்தார்கள். அம்பலம் நடுவில் தனித்து அமர்ந்திருக்க மற்றவர்கள் சற்று தள்ளி இருந்தார்கள். அவர்களுள் தன் கணவனின் மூத்த அண்ணன் தவசிப்பிள்ளையும் இருப்பதைக் கண்டதும் சற்று ஆசுவாசம் அடைந்தாள் சாலாட்சி. 

        கீழே ஊர்க்காரர்கள் பலர் இடது பக்கமாக நிற்க அவர்களுக்கு முன்பாக பாலாம்மா நின்றாள். வலது பக்கம் காவேரியும் ராசாத்தியும் நின்றார்கள். இவள் வருவதைக் கண்டு அனைவரும் இவளையே நோக்கியதும்  இரும்புக் குண்டு பிணைக்கப்பட்டதென இவளின் கால்கள்  துவள, மிகுந்த  பிரயத்தனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துச் சென்று நடுவில் நின்றாள். வேறு யாரையும் நிமிர்ந்து பாராமல் அம்பலத்தை மட்டும் பார்த்து கை கூப்பினாள்.

“பஞ்சாயத்துக்கு வரச் சொன்னீங்கன்னு சொன்னாங்க…” என்று மெதுவாகக் கூறி குறுகி நின்றாள். 

  “ஒன் மேல பிராது வந்திருக்கும்மா. அவங்களோட நில்லும்மா… என்னன்னு விசாரிச்சிடுவோம்” என்று காவேரியும் ராசாத்தியும் நின்ற இடத்தைச் சுட்டினார். இவளும் நகர்ந்து அவர்களோடு நின்றாள்.

     என்ன நடக்கிறது எதற்காக தன்னை அழைத்தார்கள் எனப் புரியாத அவள் உள்ளத்தின் தவிப்பில் உடல் முழுவதும் விதிர்த்தது. தலையை நிமிர்த்தாமலேயே விழிகளை சுழற்றி இரு புறமும் நோக்கினாள். ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்து நிகழவுள்ளதைக் காண்பதற்கான எதிர்பார்ப்பு இருந்ததேயன்றி புரியாமை தென்படவில்லை. என்ன விபரம் என்று தெரியாதது தனக்கு மட்டுமே என்று சாலாட்சிக்கு புரிந்தது.

     “சாலாட்சி வந்தாச்சில்ல. பாலாம்மா ஒன் பிராதை பஞ்சாயத்துக்கு சொல்லும்மா”

   “ஐயா, நானும் எம் பொண்ணு சுப்பம்மாவும் எங்ககிட்ட இருக்கிற மூணு முந்திரி நெலத்துலதான் எதையோ வெவசாயம் பண்ணி கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கோம். எங்க குடும்பத்து தூணாயிருந்தவரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாம்பு கொத்தி சாகலைன்னா இம்மாதிரி நெலம வந்திருக்குமா…” என்று கூறியபடி முந்தானையால் மூக்கைச் சிந்தினாள்.

  “அதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இப்ப நடந்த விசயத்தச் சொல்லும்மா” 

  “எந்த விடலப் பசங்கக் கிட்டயும் மொகம் பாத்து பேசாதவ எம்பொண்ணு. அவ மேல இப்படி ஒரு பழியப் போட்டு கொல்லப் பாத்துட்டாளுகளே இவளுக நல்லா இருப்பாளுகளா…” என்று வலது புறத்தில் நின்ற காவேரி, ராசாத்தியுடன் சாலாட்சியையும் சினத்துடன் நோக்கினாள் பாலாம்மா. 

       சாலாட்சி,  தான் எப்போது சுப்பம்மா மீது பழி போட்டோம் என்று திகைக்க, காவேரியும் ராசாத்தியும் அவள் கூறுவதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல இறுமாப்புடன் நின்றார்கள்.

     “அவங்க எப்படி இருக்கப் போறாங்கன்னு அப்பறம் பாக்கலாம். நீ நடந்ததச் சொல்லி முடி” அம்பலத்தின் குரல் அழுத்தமாக ஒலித்தது. 

    மரத்தின் மேலிருந்து குருவிகளின் ஒலி கேட்டது. அவ்வப்போது கொறிக்கப்பட்ட ஆலம்பழங்களும் கீழே விழுந்து கூட்டத்தினரை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

     “நேத்து சாயங்காலம் ஆறு மணியப்போல எம்பொண்ணு நல்ல தண்ணி எடுக்கலாம்னு ஊரணிக்கி போனா. அங்க அவளப் பாத்த இந்த ராசாத்தி “என்னடி தொணக்கி வாட்டசாட்டமான ஆள புடுச்சிட்டீங்க போல”ன்னு கேட்டிருக்கா. எம்பொண்ணு எதுவும் புரியாம இதுககிட்டயெல்லாம் வாயக் கொடுக்கக் கூடாதுன்னு வீட்டுக்கு வந்திட்டா. எங்கிட்டயும் எதுவும் சொல்லல. சொல்லீர்ந்தா அப்பவே வாய்களக் கிழிச்சிருப்பேன்…” 

   “இவங்களால வாய் கிழிஞ்ச பத்து பேரு தைக்க ஆளில்லாம பட்டணத்து ஆஸ்பத்திரில கெடக்காங்க” கூட்டத்திலிருந்து கேலியான  குரலொன்று கேட்டது. 

அத்தக் குரலை கவனிக்காததுபோல “பாலாம்மா சொல்ல வேண்டியத மட்டும் சொல்லும்மா” என்றார் திண்ணையில் அமர்ந்திருந்த ஒருவர். 

“காலையில புல்லறுக்கப் போன எம்பொண்ணுக்கிட்ட அவ வயசுப் பொண்ணுக மூணு பேரு  சின்னய்யாவுக்கும் இவளுக்கும் தொடுப்பு இருக்குன்னு ராசாத்தி ராவெல்லாம் சொல்லி திரிஞ்சான்னு சொல்லியிருக்குதுக. அவ அழுதுகிட்டே வீட்டுக் ஓடியாந்தா. என்னடீ என்னாச்சுன்னு பதைச்ச மனசோட அவகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கப்பவே சின்னய்யா பொஞ்சாதி என் வீட்டுக்கு முன்னாடி நின்னு புழுதிய வாரி தூத்துனா. எம்பொண்ண அப்படியே விட்டுட்டு அவகிட்ட போயி “ஏம்மா இப்படிப் பண்ற. நாங்க என்ன பண்ணினோம்னு” கேட்டேன்…” 

      பாலாம்மாவையே பார்த்துக் கொண்டிருந்த சாலாட்சியின் உள்ளத் துடிப்பு இமைகளின் விரிப்பில் ஒளிர்ந்தது.

    எல்லோருடைய பார்வையும் பாலாம்மா மேலேயே இருந்தன. சற்று மூச்சு வாங்கிக் கொண்டவள் “அவ சொன்னா…  ஒங்க வீட்டுக்கு ஆண் தொண வேணும்னா… அதுக்காக எங் குடிய அழிக்கனுமான்னு”.  சொன்னவ எங்கிட்ட பதிலெதையும் எதிர்பார்க்காம வாய்க்கு வந்ததையெல்லாம் திட்டிட்டு மறுபடியும் மண்ண வாரித் தூத்திட்டு போயிட்டா. வீட்டுக்குள்ள போனா என்னாச மக வேகமா சாமி ரூமுக்குள்ள போனா. கையில ஏதோ டப்பா தெரிஞ்சது. என் நெஞ்சுக் குலையே நடுங்கிப் போச்சு. பதட்டத்துல காலு பின்ன தரையில விழுந்திட்டேன். சத்தங் கேட்டு அக்கம் பக்கத்திலேர்ந்து வந்தவங்க போயி பிடிக்கறதுக்கு முன்னாடி அவ கையில வச்சிருந்த பூச்சி மருந்த குடிச்சிட்டா…”

  “அய்யோ….” என்ற ஒலி சாலாட்சியின் வாயிலிருந்து அவளையறியாமலேயே பீறிட்டது. உடல் துடிக்க, மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பாலாம்மாவின் கைகளைப் பிடித்தாள். 

“இப்ப எப்படிக்கா இருக்கா” என்று கேட்டபோது வாய் கமறியது. 

     கண்ணீர் வழிந்துகொண்டிருந்த சாலாட்சியின் முகத்தைப் பார்க்காமல், அவள் கைகளை வெறுப்புடன் உதறினாள். அப்போது அம்பலம் “சாலாட்சி, சத்த வெளகி நில்லும்மா. அவ சொல்லட்டும்” என்று அதட்டவும் சாலாட்சி தவிப்புடனேயே விலகினாள்.

    பாலாம்மா முறையீட்டைத் தொடர்ந்தாள்.  “வண்டியக் கட்டிக்கிட்டு புதுப்பட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு போனோம். அவள வாந்தியெடுக்க வச்சு ஊசி போட்டாங்க. இன்னும் கண்ணு முழிக்கல” 

    சுப்பம்மாள் உயிருக்கு பாதகமில்லை என்று தெரிந்ததில் சாலாட்சியின் தவிப்பு சற்று குறைந்தது. 

       கன்னத்தில் வழிந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டு “அவ சேக்காளி மல்லிதான் விவரத்தையெல்லாம் சொன்னா. தீயில விழுந்த மாதிரி மனசு பதறித் துடிச்சது. ஒண்ணுமறியாப் பொண்ணால இத எப்படித் தாங்க முடியும். எம் பொண்ணுமேல விழுந்த பழியப் போக்கனும்னு எங்க ஆச்சிகிட்ட சாகக் கெடக்குற எம் பொண்ணப் பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன்.  ராசாத்திகிட்ட போயி “நீ பாத்தியா… ஏன் இப்படியொரு பழியப் போட்டேன்னு” கேட்டேன். அவ சொன்னா “காவேரிதான் சொன்னான்னு”. அங்கேயிருந்து காவேரி வீட்டுக்குப் போயி அவகிட்ட கேட்டா அவ சொல்றா “சாலாட்சிதான் சொன்னான்னு”. என்னால முடியலையா. பசும்பாலு மாதிரி கள்ளமில்லா எம் பொண்ணுமேல பழியப் போட்டு சாகற நெலமையில  படுக்க வச்சவங்கள மொட்டையடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதமேல ஏத்தனும்யா. அப்பதான் அறியாப் புள்ளங்க மேல பழியப் போட நெனக்கிறவங்க அஞ்சுவாங்க.  இல்லேன்னா எம்மனசு ஆறாதுங்க. பஞ்சாயத்துதான் தர்மத்தோட தீர்ப்பு சொல்லனும்” என்று கைகளைக் கூப்பியபடி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாள்.

“விசாரிக்கத் தானம்மா நாங்க இருக்கம். எந்திரிம்மா…” என்று அம்பலம் கூறவும் பாலாம்மா எழுந்தாள். 

   அம்பலம், ராசாத்தி பக்கம் திரும்பி “ஏம்மா ராசாத்தி… அந்தப் பொண்ணப் பத்தி இம்மாதிரி ஊரெல்லாம் சொல்லிருக்கியே ஏன்… எதை வச்சு இதச் சொன்ன” 

       “ஐயா… நான் எல்லாரோட வீட்டுக் கதவயும் தட்டிச் சொல்லலங்க. நாஞ் செஞ்ச தப்பு என்னன்னா ஊரணில நாலு பேரு நிக்கிற நெனப்பில்லாம சட்டுன்னு சொன்னதுதான். ஏதோவொரு உந்துதல்ல அப்பிடிச் சொல்லிட்டேன். கேட்டுக்கிட்டு இருந்தவங்க கொல்லிக் கட்டயால குடிசய கொளுத்தற மாதிரி ஊரெல்லாம் பரப்பிட்டாங்க. இதுல எங்குத்தம்னு ஏதுமில்லங்க” என்று ராசாத்தி நிமிர்ந்து கூறினாள். 

    “ரகசியம்னு சொல்லி ஒரு விசயத்தச் சொன்னா அவங்களால மனசில வச்சிக்கிட முடியுமா. அது ஒரு திணவு மாதிரியில்ல அரிச்செடுக்கும். நாலு பேருக்கிட்டையாவது சொல்லலைனா கண்ண மூடி படுக்கமுடியுமா. சரி அத ஊரணி சொன்னியே நீ நேர்ல பாத்தியா” 

    “நான் நேர்ல பாக்கலங்க. இந்தக் காவேரிதான் சொன்னா. அதத்தான் நாஞ்சொன்னேன். கூடுதலா எதுவுஞ் சொல்லலீங்க” 

      நடந்தவற்றிற்கும் தனக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை, தான் ஒரு அம்புதான். எய்தவளைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்பதான தோரணை அவள் முகத்தில் தொணித்தது. 

“இவளோட தம்பி குப்பம்மாகிட்ட ஏதோ வம்பு பண்ணியிருக்கான். அவ சோட்டால அடிப்பேன்டானு சொல்லிட்டா. அதுக்கு தொக்கா இப்ப பழிவாங்கிட்டாள்ல” என்று மேடையிலிருந்து மெலிதாக  ஒலித்தது, யாருடையதோ மனக்குரல் அறியாமல் வெளிப்பட்டதென. அக்குரலை  கேட்ட ராசாத்தி வேறு யாரேனும் ஏதாவது கூறுகிறார்களா எனக் கேட்பதற்கு செவியைக் கூர்ந்தபோது அம்பலம் கேட்டார்   “காவேரி என்ன சொன்னா”.

“நாளைக்கு நெல்லரவைக்குப் போகனும். வண்டி கொண்டார முடியுமான்னு சின்னய்யாவக் கேக்கலாம்னு போனேன். எதிர்ல வந்த காவேரி என்ன விசயம்க்கா இந்தப் பக்கம்னு கேட்டா. அவகிட்ட இந்த விசயத்தச் சொன்னேன். அப்பதான் அவ சொன்னா… சின்னய்யா சுப்பம்மா வீட்டுக்குள்ள போயிருக்கிறார்னு. வேனும்னா அவகிட்டயே கேளுங்க” 

    “ஏம்மா காவேரி… ராசாத்தி சொன்ன மாதிரிதான் நீ  சொன்னியா” 

      “கீழ வயல்ல புழுதியடிக்கனும். இன்னோரு ஏர் வேணும்னு என் வீட்ல சொன்னாக. அதுக்காக, சின்னய்யாவ வரமுடியுமான்னு கேக்கறதுக்காக போனேன். அவங்க வீட்டு முக்குல திரும்பறப்ப அவரோட ஆத்தாதான் கை காட்டுச்சு மேற்கால போயிருக்காகன்னு. மேற்கால போகலாம்னு நடக்கறப்ப எதிர்ல சாலாட்சி தன் கிடாரியக் பிடிச்சுக்கிட்டு வந்தா. அவகிட்ட கேட்டேன் அவதான் சொன்னா… சின்னய்யா சுப்பம்மா வீட்டுக்குள்ள போனார்னு” 

   “இவளுக்கே காது பாதிதான் கேக்கும். மீதிய மூஞ்சிய உத்துப் பாத்து உத்தேசமா கண்டு பிடிப்பா. இவ சொன்னத வச்சுக்கிட்டு ராசாத்தி பரப்பி விட்டுட்டாளா…” அதே மனக்குரல் மறுபடியும் வெளிவந்தது. இதையும் காதில் வாங்கிய பாவனை ராசாத்தியின் முகத்தில் தெரிந்தது.

“சும்மா இருங்கப்பா” என்று அதட்டிய அம்பலம் “ஏம்மா சாலாட்சி… நீ இதச் சொன்னியா. சின்னய்யா சுப்பம்மா வீட்டுக்குள்ள போனதப் பாத்தியா” என்று கேட்டார். 

    எப்படியொரு சூட்டிகையான பொண்ணு. நாள் பூரா பார்த்துக் கொண்டேயிருக்கலாம்னு தோன்ற மாதிரி நறுவிசா வேல பாக்கறவளாச்சே… பேச்சு நறுக்கு தெரிச்சாப்ல இருக்குமே. மொகத்துல அப்டியொரு குளும இருக்குமே.. அவளுக்கா இந்த நெலம. ஆஸபத்ரியில கெடக்குறாளாமே. இதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டனே… என்ன பண்ணப் போறேன், இந்தப் பழியிலேர்ந்து வெளிய வரமுடியுமா.. என்று எழுந்து கொண்டிருந்த எண்ணங்களுள் மூழ்கியிருந்த சாலாட்சியின் தோளைத் தொட்டு காவேரி மெல்ல அசைத்தாள். ஒருகணம் எதுவும் புரியாமல் சாலாட்சி  விழித்தாள்.

  “ஏம்மா சாலாட்சி… சின்னய்யா சுப்பம்மா வீட்டுக்குள்ள போனதப் பாத்தியா’

  அம்பலம் மீண்டும் கேட்டார்.

       ஒட்டிக் கொண்ட உதடுகளை பிரயத்தனத்துடன் பிரித்து “ஐயா.. நான் என் கிடாரிய ராமையா அண்ணன் வீட்லேர்ந்து பிடிச்சுக்கிட்டு வந்தேன். அப்போ சின்னய்யாண்ணன் சுப்பம்மா வீட்டக் கடந்து மேற்கால போனாங்க. கொஞ்ச தூரம் வந்த பின்னாடி எதிர்ல வந்த காவேரி சின்னய்யாவப் பாத்தியான்னு கேட்டா. நாஞ் சொன்னேன் சுப்பம்மா வீட்டுப் பக்கம் போறாங்கன்னு. வேறெதுவும் நாஞ் சொல்லங்கய்யா. ஆனா அது இவ்வளவு பெரிய பழிய உண்டாக்கும்னு எனக்குத் தெரியாதுங்க”. 

   “சுப்பம்மா வீட்டுப்பக்கம் போறாருன்னு எந்த அர்த்தத்துல சொன்ன” 

“சுப்பம்மா வீட்டத் தாண்டி மேற்கால போறாருங்கிற அர்த்தத்துலதான் சொன்னேன்” 

பாலாம்மா ரௌத்திரத்துடன் “”சொன்னதையும் சொல்லிட்டு எப்படி மழுப்பறா. இவ நல்லா இருப்பாளா இவ குடும்பம் வெளங்குமா” என்று அடிக்குரலில் கழுத்து நரம்புகள் துடிக்கக் கத்தினாள்.

“அட சத்தம் போடாம இரும்மா. அதான் விசாரிக்கிறம்ல” என்று   திண்ணையில் இருந்தவர்களிடமிருந்து குரல் எழுந்தது. 

   “ஏம்மா காவேரி… சாலாட்சி அத்தப் பக்கமா போனான்னு சொன்னத ஏன் மாத்திச் சொன்ன” 

“அவ எங்க மாத்திச் சொன்னா. காதுல விழுந்ததோட, இவளோட நெனப்பயும் சேத்துச் சொன்னா” பக்கத்தில் எழுந்த குரலை “யேய் சும்மா இருங்கப்பா” என்று அடக்கியபடி காவேரியை நோக்கினார். காவேரி எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து நின்றாள். 

   ராசாத்தி, காவேரியை தொட்டு அம்பலத்தை சுட்டிக் காட்டினாள். “ஏம்மா காவேரி ஒன்னத்தாம்மா கேக்குறேன். சாலாட்சி சொன்னத ஏன் மாத்திச் சொன்ன” என்று அழுத்தமாகக் கேட்டார். 

   “மாத்தியெல்லாம் சொல்லலங்க. அவ சொன்னதத்தான் சொன்னேன்” 

   அப்போது பள்ளி மணியடித்து வெளியே  பிள்ளைகளெல்லாம் வந்தார்கள். சாலாட்சியின் பிள்ளைகள் தங்கள் தாய் பஞ்சாயத்தின் நடுவில் கண்ணீருடன் நிற்பதைக் கண்டதும் பதறிய கைகளை ஒருவருக்கொருவர் பற்றிக் கொண்டார்கள். என்னவென்று புரியாது தவித்த  விழிகளில் நீர் வழிந்தது.  தான் தவறு செய்யாவிட்டாலும் குற்றவாளிபோல் பஞ்சாயத்தில் நிற்பதை பிள்ளைகள் பார்க்கிறார்களே என்று உடல் கூசி நின்றாள் சாலாட்சி. அதைக் கவனித்த அம்பலம் “பிள்ளைகளெல்லாம் வீட்டுக்குப் போங்க” என்று சத்தமாகக் கூறினார். அருகில் இருந்தவர்களும் போங்க… போங்க… எனப் பிள்ளைகளிடம் கூறவும், வேடிக்கை பார்க்க விடாமல் துரத்துகிறார்களே என்ற வெறுப்புடன் தயங்கியபடியே சென்ற பிள்ளைகளுடன் சாலாட்சியயின் பிள்ளைகளும் அம்மாவை திரும்பித் திரும்பி  பார்த்தபடியே சென்றார்கள். 

“ஏம்மா ராசாத்தி… காவேரி அப்படி சொல்லியிருந்தாலும் இத ஏம்மா ஊரணியில பல பேருக்கு மத்தியில சொன்ன”  என்று அம்பலம் ராசாத்தியிடம் கேட்டார்.

“என்னங்க இது. அவம் போனது தப்பில்ல. அவ சொன்னது தப்பில்ல. அத திருப்பிச் சொன்னதுதான் தப்பா. குத்தஞ் செஞ்சவங்கள கேக்காம சொன்னவள குத்தஞ் சொல்றீங்க”  

“சின்னய்யா எங்கப்பா” கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். சின்னய்யாவின் மனைவி வெளியே வந்து “நேத்து சாயந்திரம் காரக்குடியில இருக்குற அவங்க அக்கா வீட்டுக்குப் போனாருங்க. நாளைக்கு காலயிலதாங்க வருவாரு” என்று கூறினாள்.

“அவந்தாம் காரக்குடிக்குப் போயிருக்கானே. நீ ஏன் பாலாம்மா வீட்ல போயி மண்ண வாரி தூத்தப்போன” 

“இந்தப் பேச்சு காதுல விழுந்தவுடனே மனசு கொதிச்சிடுச்சுங்க. ஆத்தரம் கண்ண மறச்சிடுச்சு” 

  “பாலாம்மாவுக்கு என்ன பதில் சொல்றது. பாதிக்கப்பட்டவ கேக்கறால்ல. நியாயம்னு ஒன்னு வேணும்ல” 

 “ஐயா, என் காதுக்கு சேதி வந்துச்சு. நான் அந்த மாதிரி பண்ணிட்டேன். விசயம் உண்மையோ இல்லையோ ஆனா ராசாத்தி சொன்னது உண்மைதானே… எம் மேல ஏதும் தப்பில்லைங்க” 

  “என்னம்மா ராசாத்தி நீ என்னம்மா சொல்ற” 

   “காவேரி சொன்னத அவளே ஒத்துக்கிட்டா. அவ சொன்னத நாஞ்சொன்னேன். எந்தப் பழிக்கும் நான் ஆளில்லங்க” 

  அம்பலம் காவேரியை நோக்கினார். அதைக் கண்டவுடன் “சாலாட்சி சொன்னதத்தான் நாஞ்சொன்னேன். புதுசா யார் மேலயும் பழிபோட வேண்டிய அவசியம் எனக்கில்லைங்க”  

“நாஞ் சொன்னது அந்தப் பக்கம் போனாருன்னுதான். ஆனா அது தென்னங்குருத்து மாதிரி பதவிசா இருந்த பொண்ணுக்கு பழிச் சேக்கும்னோ, அவள உயிருக்குப் போராடுற நெலமைக்குத் தள்ளும்னோ எனக்குத் தெரியாதுங்க. இதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேங்க ” என்று சாலாட்சி சொல்லி முடித்தாள்.

“ஒரு தாயி பரிதவிப்போட வந்து தன் பொண்ணுமேல போடப்பட்ட பழிக்கு நியாயம் கேக்குறா. நீங்க ஒவ்வொருத்தரும் ஒன்னொன்னு சொல்றீங்க. பஞ்சாயத்து முடிவ பெரியவுங்க நாலு பேர்கிட்ட கலந்துட்டு சொல்றேன்” என்று கூறிய அம்பலம் திண்ணையில் இருந்தவர்களிடம் மெல்லிய குரலில் பேசினார். 

     பிராது கொடுத்த பாலாம்மாவும் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தங்களுக்குள் ஆழ்ந்திருந்தனர். கூட்டத்தில் நின்றவர்கள் என்ன மாதிரியான தண்டனை கொடுக்கப்படும் என்பது பற்றி கருத்துகளை கூறிக் கொண்டிருந்தார்கள். “எல்லோருக்கும் மாப்பு கொடுத்திடுவாங்க” என்று ஒருவரும் “சுப்பம்மாவிடம் மூவரும் மன்னிப்பு கேக்கனும்னு சொல்லுவாங்க” என்று மற்றொருவரும் யூகம் சொல்ல, “”இனிமே இது மாதிரி செய்யமாட்டோம்னு பஞ்சாயத்தை கும்பிடனும்னு தானே எப்பவும் சொல்வாங்க” என இன்னொருவர் இருவரையும் மறுத்தார். 

     திண்ணையிலிருந்த எல்லோரிடமும் பேசிய பிறகு கடைசியாக மீண்டும் ஒருமுறை தவசிப் பிள்ளையிடம் விவாதித்தார். லேசாக கனைத்து கூட்டத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பிய அம்பலம் பேச ஆரம்பித்தார்.


     மூவரும் கோயிலை நெருங்கினார்கள். கோயிலென்றால் பெரிய கட்டடமெல்லாம் இல்லை. அடிபருத்து ஓங்கி வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் அடியில் அரையாள் அளவிற்கு கட்டப்பட்ட சுவர் மேல் பக்கம் கூம்பாக முடிந்திருந்தது. சுவரினை ஒட்டி அம்மையின் சிலையை அமைத்திருந்தார்கள். அம்மை வெயிலில் காயாமலும் மழையில் நனையாதும் இருக்க, சுவரிலிருந்து முன்பக்கமாக சிமெண்ட் ஓடு பொருத்தப்பட்டிருந்தது. வேம்பை ஒட்டி இருபுறமும் இரண்டு பனை மரங்கள் ஓலைகள் வெட்டப்படாமல் ஓலைகளால் ஆன சிறு பசுங்குன்றுபோல காணப்பட்டது. இடையில் கோவிலை வைத்து சுற்றிலும் முள்ளாகவே வளரும்  காராஞ்செடியும்  சூராஞ்செடியும்  பத்தையாகப் படர்ந்திருந்தது ஒரு அமானுஷ்ய தன்மையை அளித்தது. 

      மூவருமே இப்போதுதான் முதல் முறையாக அருகில் வருகிறார்கள். கோவிலுக்கான கிளை பாதையில் திரும்பாமல் நேராக பக்கத்து ஊருக்குச் செல்லும்போது யாரோ தங்களைப் பார்ப்பதாக ஒரு குறுகுறுப்பு தோன்றி உடல் விதிர்க்கும்போது புதருக்குள் யாரேனும் இருக்கக் கூடும் என்று எண்ணியபடியே கடப்பார்கள். நின்ற கோலத்தில் இருந்த அம்மை நாக்கை வெளியே நீட்டி விழிகளை உறுத்துப் பார்த்தாள். தலையை ஒட்டி  தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த விழிகளை ஒரு கணம் நோக்கியவுடன் மின்னலைக் கண்டதுபோல் திடுக்கிட்டு உடலை உலுக்கிக் கொண்ட சாலாட்சி திரும்பி பார்த்தபோது மற்றவர்களும் அதேபோல் திகைத்திருப்பதைக் கண்டாள். அம்பலம் தீர்ப்பாகக் கூறியது நினைவுக்கு வந்தது.


      “இருக்கறதிலேயே பெரும் பாவம்னு நான் நெனக்கிறது தப்பு பண்ணாத பொண்ணு மேல யாரோடயோ தவறான உறவு வச்சிருக்கான்னு பழி போடறதுதான். மத்த எல்லாப் பழிகளையும் இல்லைன்னு நிரூபிச்சிட்டு வெளிய வந்துற முடியும். ஆனா இந்த விசயத்தக் கேட்ட ஒவ்வொருத்தரும், பழி சுமத்தப்பட்ட ரெண்டுபேரையும் அந்தமாதிரி இருக்கிற மாதிரி  கற்பனை பண்ணி ஒரு கணமாச்சும் மனசுக்குள்ள பாத்திடுவாங்க. அந்தக் காட்சிய பாத்தபிறகு  பழி சுமத்தப்பட்டவங்கள பாக்கற பார்வையே மாறிடும். இந்த மாறுன பார்வ, தப்பா பழி சுமத்தப்பட்டவங்க  மனச தீயில பட்ட பாலித்தீன் உறை மாதிரி எப்பவுமே சரி பண்ண முடியாத மாதிரி அப்படியே உருக்கிடும். அப்பறம் எப்படித்தான் இல்லைன்னு நிரூபிச்சாலும் சுருங்கின மனச நேராக்கவே முடியாது” என்று கூறியவர் பித்தளைச் சொம்பில் இருந்த நீரை தூக்கி ஊற்றி சத்தம் வருமாறு குடித்தார். வாயைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.

 “ஒங்களுக்கெல்லாம் நம்ம வேணியம்மையப் பத்தி தெரியும். தன் மேல தவறா பழி சுமத்துனதால தீயில பாஞ்சு உயிரவிட்டாங்க. அந்தப் பழிய சுமத்துன அத்தன பேரையும் உருத் தெரியாம, வாரிசே இல்லாம அழிச்சாங்க. அவங்களுக்கு செல வச்சு வருசத்துக்கு ஒருக்கா கோழிய பழி கொடுத்து வணங்குறோம். இப்பவுஞ் சொல்றேன் ஒங்கள்ள யார்கிட்ட தப்புன்னு எங்களால உறுதியா கணிக்க முடியல. அதனால தீர்ப்பு சொல்ற பொறுப்ப தெய்வத்துக்கிட்ட விடப்போறோம்.  உங்க மனசறிய தப்புப் பண்ணியிருந்திங்கன்னா ஒத்துகிட்டு பாலாம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிடுங்க. இல்லேன்னா தீர்ப்பு சொன்னப்பறம் வருத்தப்படக் கூடாது” என்று நிறுத்தி மூன்று பேரையும் பார்த்தார்.

   மூன்று பேரும் எதுவும் பேசாமல் வெற்றுப் பார்வையுடன் நின்றார்கள். அந்தக் குரல் ஒலிக்கவில்லையே என ராசாத்திக்குத் தோன்றிய கணம், கூட்டத்திற்குள் இருந்து ஒலித்தது… “பின்னாடி வர்ற பாதிப்புக்காக இப்ப இருக்குற கவுரவத்தை விட்டுக் கொடுக்க  முடியுமா”

    மூவரையும் தீர்க்கமாகப் பார்த்த அம்பலம் “சரி தீர்ப்பச் சொல்றேன். மூணு பேரும் வேணியம்மை கோயிலுக்குப் போயி வெளக்கேத்தி நாங்க மனசறிய தப்பா எதுவும் சொல்லலைன்னு சத்தியம் பண்ணிட்டு வரணும். நீங்க பண்ற சத்தியம் மத்த ரெண்டு பேருக்கும் கேக்கனும். இதுக்கு பின்னால உங்களுக்கோ, உங்க பரம்பரைக்கோ ஏதாவது பாதிப்பு வந்தா அதுக்கு நீங்கதான் முழுப் பொறுப்பு. இந்த பஞ்சாயத்துக்கு எந்தப் பொறுப்புமில்ல” என்று கூறிவிட்டு பெருமாள் சன்னதிக்குச் சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிவிட்டு வந்தார். “சரி… நீங்க மூணு பேரும் இருட்டறதுக்குள்ள போயிட்டு வாங்க. அதோட ஆஸ்பத்திரில இருக்கிற சுப்பம்மாக்கு ஒன்னுப் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குங்க. அது உங்களுக்காக வேண்டிக்கிறதுதான்” என்றார்.


      காவேரி கொண்டு வந்திருந்த அகல் விளக்கை வைத்து திரியிட்டு எண்ணெய் ஊற்ற, சாலாட்சி காற்றை மறைத்து நின்றபடி விளக்கேற்றினாள். 

      காவேரி அம்மையை நோக்கி வணங்கியபடி “சாலாட்சி சொன்னது…      சின்னய்யா சுப்பம்மா வீட்டுக்குள்ள போனாருன்னுதான் எனக்கு கேட்டுச்சு. அதத்தான் நான் சொன்னேன். எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லம்மா. இது சத்தியம்” என்று கூறி தரையில் அடித்தாள். 

   “காவேரி சொன்னதத்தான் நான் சொன்னேன். வேற எதையும் நான் சொல்லல. இது சத்தியம்” என்று கூறிய ராசாத்தி கையை தரையில் வைத்து எடுத்தாள். 

      சாலாட்சி மனம் நடுங்கிக் கொண்டிருத்தது. இவங்க ரெண்டு பேரும் எவ்ளோ தைரியமா சத்தியம் பண்றாங்க. இவங்க மேல தப்பில்லைங்கிற எண்ணமா இல்ல இந்த வேணியம்மை மேல பயமில்லையா. அம்மை மேல பயமில்லாம இல்ல, தான தப்புப் பண்ணலங்கற தைரியந்தான். அவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணலேன்னா .. அப்ப நாந்தான் தப்பு பண்ணீருக்கனா. என்னாலதான் சுப்பம்மா சாவக் கெடக்குறாளா… 

 சாலாட்சியின் மனம் விம்மலில் பொங்கியது. உதடுகள் துடித்தன. கால்களின் நடுக்கத்தால் உடலே நடுங்கியது. இவளை நோக்கிய  ராசாத்தி “சாலாட்சி…  சத்தியத்தப் பண்ணு. வேகமா இருட்டிக்கிட்டு வருது. அப்புறம் பூச்சி பட்டைங்க வர ஆரம்பிச்சுரும்” என்று கூறினாள். 

   நான் அறிஞ்சு சொல்லாமயிருக்கலாம். இவ்ளோ பெரிய பழி உண்டாக ஊத்துக் கண்ணா ஆயிட்டேனே. இப்ப சத்யம் பண்ணா வேணியம்மா எங்குடும்பத்துக்கு எதாவது பாதிப்ப உண்டாக்குவாலோ… மனம் தீபத்தின் முனையென அலைக்கழிந்தது. அம்பலம் தீர்ப்பைக் கூறிக் கொண்டிருந்தபோது பார்வையில் பட்ட தன் மூத்தார் தவசிப்பிள்ளையின் முகம் தற்போது நினைவுக்கு வந்தது. அவரின் முகம் எந்தச் சலனமுமின்றி அமைதியாகவும் உறுதியாகவும் இருந்ததை அருகிலெனக் கண்டாள். அவரிடம் பேசிய பிறகுதானே தீர்ப்பு கூறப்பட்டது. அப்படியென்றால் இந்த சத்தியம் செய்வதில் எனக்கு பாதிப்பு வராது என்றுதானே அர்த்தம். என் மூத்தாருக்குத் தெரியாத நியாயமா… மனது லேசாகத் தெளிந்தது.

    விளக்கின் முன் கால்களை முட்டிபோட்டு அமர்ந்து வலக்கையை மண் தரையில் வைத்தாள். சுடர் மெலிதாக நலுங்கியது. “நான் சொன்னதுல எந்த உள்நோக்கமோ பழி போடனுங்கிற எண்ணமோயில்ல. ஆனா நடந்ததுக்கு நான்தான் காரணம்னு நீ நெனச்சா என்னய ஏதாவது பண்ணு. எங்குடும்பத்தை காப்பாத்தும்மா” திக்கித் திக்கி கூறி முடித்தபோது கைகளில் விழுந்த கண்ணீர் உருண்டு தரையில் பரவியது. நிமிர்ந்து அம்மையின் விழிகளை நோக்கினாள். அது அண்மையிலென தெரிந்தது. அதன் தீட்சண்யத்தில் மிளிர்வதென்ன என்று மனதிற்குள் துலாவியபடியே  எழுந்தபோது பதட்டம் மெல்லக் குறைவதை ஆச்சர்யத்துடன் உணர்ந்தாள்.

      மூவரும் திரும்பிப் பாராமல் ஊரை நோக்கி நடந்தார்கள். ஊருணிக்கு அருகில் வரும்போது,  புதுப்பட்டியிலிருந்து வரும் பாதையில் பாலாம்மாவின் உறவினன் கணேசன் சைக்கிளில் வேகமாக வந்தான். காவேரிதான் அவனிடம் “என்னப்பா… வேகமா வர்ற. என்ன விசயம்” என்று கேட்டாள். 

     “அக்கா, பாலாம்மா பொண்ணு சுப்பம்மாவோட சீவன் போயிடுச்சு. அதச் சொல்லத்தான் அவசரமா போறேன்” என்றபடி கடந்தான். 

“அய்யோ” என்று குரலெழுப்பியபடி காவேரியின் தோளைப் பிடித்த

சாலாட்சியை நோக்கினாள் ராசாத்தி. பெரும் துக்கத்தில் சாலாட்சியின் முகம் இப்போது வெளிற தொடங்கியபோதும், கோவிலுக்கு வரும்போது அவளிடம் இருந்த உள் நடுக்கம் இப்போது இல்லாததை தன் உள்ளுணர்வால் அறிந்த கணத்தில் தன் உள்ளத்தின் ஆழத்தில் உண்டான மெல்லிய நடுக்கத்தை ராசாத்தி உணர்ந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.