ஒற்றன் – அசோகமித்திரன்

This entry is part 4 of 48 in the series நூறு நூல்கள்

“மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சத்தியமானது!” இது அசோகமித்திரன் நாவல் அறிமுகத்தில் வியக்கும் வரிகள். தமிழில் எழுதுபவர்கள் அனைவரும் பெருமிதமாக சொல்லும் ஒரு சொற்றொடர் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”. தேய்வழக்காகி, அர்த்தமில்லாததாக ஆன ஒரு சொல்லை நவீனத் தமிழிலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர் உபயோகிக்கும்போது பொருள் இருக்கும் என்று நம்பலாம்.

“ஒற்றன்” நாவலா? சிறுகதைகள் தொகுப்பா? உண்மை சம்பவங்களா? எப்படி வேண்டுமானாலும் இதை வகைப்படுத்தலாம். சரடாக வருவது எழுத்தாளர். அவர் பார்வையில் பதிந்த நிகழ்வுகள்.

எல்லா தமிழ் எழுத்தாளர்களையும் ஒரு இடத்தில் அடைத்து வைத்தால் என்னாகும் என்று யோசித்திருக்கிறேன். அசோகமித்திரன் (இனிமேல் அமி) பல தேசத்து எழுத்தாளர்களை ஒரு முகாமில் கொண்டு வைத்து, அவருக்குக் கிடைக்கும் அனுபவங்களைத் தொகுப்பாக்கியிருக்கிறார். அறிமுகமில்லாத தேசம், முதன்முறையாக சந்திக்கும் சர்வதேச எழுத்தாளர்கள், ஆரம்பத் தயக்கங்கள், அது உடைபட்டு சிலருடன் நெருக்கமாவது, ஷூ, தட்டச்சு இயந்திரம், கடிகாரப் பேனா போன்றவைத் தரும் தொல்லைகள் போன்றவற்றின் புனைவுத் தொகுப்பே இந்த நாவல்.

இத்தனையும் மீறி நாவலில் அமி சந்திக்கும் நபர்கள் அவரை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள். கொரிய எழுத்தாளர் பூண்டை உபயோகித்துவிட்டு நாயகனோடு சண்டைப் போட்டாலும், அவர் தாயார் இறந்ததும், கண்ணீர் விடுவது அவர் தோளில்தான். காதலில் தோல்வியுற்ற பெண்ணிடம் பரிவு காட்டியதும், அவள் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டு, தன் வாழ்க்கைத் தோல்விகளை சொல்லிக் கதறுவதும் எழுத்தாளரிடம். ஜப்பானியப் எழுத்தாளரிடம் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்ற கோபத்தில் எத்தியோப்பிய எழுத்தாளன் தாக்குவது அமி-யைத்தான் (அசோகமித்திரனைத் தாக்க நிறைய துணிச்சல் வேண்டும். உடல் பலத்திற்காக அல்ல. திருப்பித் தாக்குவது என்பது தெரியாத ஒருவரைத் தாக்க). அவரும் விரோதம் இல்லாமல் அடித்தவன் எழுதிய “ஒற்றன்” நாவலைப் படிக்க ஆசைப்படுகிறார். தட்டச்சு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக அக்கணமே கே-மார்ட்டிற்கு இழுத்துச்செல்லப்படுவது, இவரே. பிராவோ வழியே சிலேவுக்கும், பெருவுக்கும் உள்ள பகை, பிராவோ மனைவி என்று நினைத்த பெண்ணைப் பற்றி அவனிடம் பேசி அவனுக்கு தர்மசங்கடத்தைத் தந்தாலும் அவன் அமி-யை வெறுப்பதில்லை. பதிலாக அவன் எழுதிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவரையே நாடுகிறான். எந்தத் தமிழ் எழுத்தாளரை காதலனாக நினைத்து ஒருவன் கொலை செய்ய வீடு தேடி வருவான்? எழுத்தாளருக்கு நடக்கிறது.

அசோகமித்திரனின் “கூறாமல் கூறும்” கதை சொல்லலை நாவல் எங்கும் பார்க்கமுடியும். மேலாளர் ஜான் ஆரம்பத்தில் மேம்போக்காக பழகினாலும், அமி தன் எழுத்தாளர் நிலையிலிருந்து விலகி ஜானோடு வேலை செய்தவுடன் அவனின் பார்வை மாறுவது மிக நுட்பமாக எழுதப்பட்ட இடம் (வழக்கம் போலவே சாதாரண வாக்கியங்களில் எழுதி படிப்பவனை ஏமாற்றும் கலை). இலாரியா தன் வாழ்க்கையில் சந்தித்த அனைவரும் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சுமத்த, ஏன் அப்படி நடக்கிறது என்பதை அமி-யிடம் அவள் கொள்ளும் நெருக்கத்தை அவர் சுட்டிக் காட்டும் இடம். நாவலில் இது ஒர் அற்புதமான காட்சி. வணிகக் கதைகள் கூழாக்கிய கதைத் தருணம் எழுத்தாளர்களின் எழுத்தாளரிடம் எப்படி உருப்பெறுகிறது என்பதன் உதாரணம்.

இத்தனை தொடர்புகளும் அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு தொடர்கிறதா?

அசோகமித்திரன் வார்த்தைகளில் “நன்கு பழகிப்போன முகங்கள்; எவ்வளவோ உற்சாகமும், நம்பிக்கையும், பகிர்ந்து கொள்ளுதலும் நினைவூட்டும் முகங்கள்; எனக்கு இனிமேல் பார்க்கக் கிடைக்காத முகங்கள். நான் இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாமல் போகும். என்றென்றுமாக.”.

அவ்வளவுதான்.

ஒற்றன் (1985 நர்மதா பதிப்பகம், முதல் பதிப்பு)
காலச்சுவடு பதிப்பகம் (2005 இரண்டாம் பதிப்பு)

கலையும் கட்டங்களும் – WriteRoom (bukpet.com)
Series Navigation<< அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்நிறமாலை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.