என் தலைக்கான கொன்றை

தமிழாக்கம்: எம். ஏ. சுசீலா

தூங்கி வழியும் அந்தச் சிறிய ஊரின் புதிய கல்லறைத்தோட்டத்தில் ஒவ்வொரு மே மாதமும் அசாதாரணமான ஒரு விஷயம் நிகழ்ந்து வந்தது.  அலங்காரமும் எளிமையுமான கற்சின்னங்கள் தாங்கிய கல்லறைகள் கொண்ட பரந்த பழைய கல்லறைத் தோட்டத்தின் தெற்கு மூலையைத் தாண்டி, அதற்கு அப்பால் – எளிமையான இந்திய சரக்கொன்றைமரம் ஒன்று மஞ்சள் வண்ண அழகான பூக்களைக் கொத்துக் கொத்தாகப் பூத்துச் சொரிந்து கொண்டிருந்தது.  சில வருடங்களுக்கு முன்பு அது முதன் முதலாக நிகழ்ந்தபோது கான்கிரீட் கல்லறைகளுக்கு விஜயம் செய்ய வந்தவர்கள் அதைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.  பிறகு இயற்கையாக நிகழும் ஒரு தற்செயல் நிகழ்வு என்று அதை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.  ஆனால் ஆண்டுக்கு ஆண்டு அந்த மரம் உயரமாகிக் கொண்டே சென்றது; பூக்களையும் மிகுதியாகச் சொரிந்தபடி குறிப்பிடத்தகுந்த – மகத்தான ஒரு அதிசயமாகவே அது ஆயிற்று.  தன் இருப்பைப் பறித்துக் கொண்ட மரணத்தை வென்றபடி தான் நிலையாக இருப்பதான ஒரு பொய்த் தோற்றத்தை உண்டாக்க மனிதர்கள் முயன்று கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஓரிடத்தில், பூத்துச் சொரியும் அந்தக் கொன்றை மரம், இடத்துக்குப் பொருந்தாத மகத்தான அதிசயம் போல் நின்றது.

இறந்த மனிதர்களின் வாரிசுகள், கற்கட்டிடங்களின் மூலம் அவர்களின் இருப்பைத் தக்க வைக்க முயற்சித்தபடி அளவிலும் தோற்றத்திலும் மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பிக் கொண்டுதான் வருகிறார்கள்.  ஆனால் மனிதர்கள் செயற்கையாகப் புனைந்து உருவாக்கிய உறுதியான கற்பாறைகளையும், கிரானைட் கல்லறைகளையும் விஞ்சும் தன்மையை இயல்பாகவே கொண்டிருப்பது இயற்கை. மணலாலும், சிமெண்டாலும் மூடப்படாத ஒவ்வொரு அங்குல பூமியிலிருந்தும் களைகளும், முட்செடிகளும் பிடிவாதமாக முளைவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  அதனால் ஒவ்வொரு ஈஸ்டர் வாரத்திலும் இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறைத் தோட்டத்துக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களின் நினைவுச் சின்னங்களாக உள்ள கல்லறைகளை சுத்தப்படுத்தி, அங்கே தாமாக முளைத்திருக்கும் செடி கொடிகளை அப்புறப்படுத்துவார்கள். இறந்தவர்களிடம் அன்பு கொண்டவர்கள், நினைவுச் சின்னங்களின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களில் படிந்திருக்கும் தூசுகளையும் பறவை எச்சம் போன்றவற்றையும், சுத்தமாகத் துடைப்பார்கள்.  தற்செயலாக அங்கே வர நேரும் அந்நியர்கள், ஒரு பொழுதுபோக்கைப் போல அந்தப் பெயர்களைப் படிப்பார்கள்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அற்புதமான மஞ்சள் நிறத்தில் பூக்கும் கொன்றை மட்டும் கீழே தாழ்ந்து தொங்கும் தன் கிளைகளுக்கு அடியில் உறங்குவது யார் என்பதை வெளிப்படுத்திவிடாமலே இருக்கும்.  மனிதன் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் எந்த ஒன்றையும் இந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் வெளிக்காட்டுவதில்லை.  எந்த வகையான எழுத்தும் பொறிக்கப்படாத இயற்கை மட்டுமே அங்கே ஆட்சி நடத்தும்.  மாறிவரும் பருவங்களுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடியது இயற்கை மட்டும்தான்.  ஏழை, பணக்காரன் வயதானவன் – இளைஞன், பிரிவுக்காக வருத்தப்பட வைத்தவன், வைக்காதவன் என்று பலவிதமாகப் பரவிக்கிடக்கும் உயிரற்றவர்களின் எண்ணற்ற சமாதிகளின் ஓரமாய் நிற்கும் கொன்றை மரத்தில் பூக்களைச் சொரிய வைத்து அழகுபடுத்தியும், மலர்களின்றி மொட்டையாக்கியபடியும் பருவ காலங்கள் ஒரு பிள்ளை விளையாட்டை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

பழைய கல்லறைத் தோட்டத்திலிருக்கும் நினைவுச் சின்னங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்கள், இறந்தவர்களின் வாரிசுகளாலும், உறவினர்களாலும் விரும்பியோ விரும்பாமலோ ஒரு கடமைபோல எழுதப்பட்டிருப்பதற்கு மௌன சாட்சிகளாக இருக்கும்.  ஆனால் அதற்கு மாறாகக் கொன்றை மரமோ உயிரோடு, உயிர்ப்போடு இருக்கும்.  மாறி மாறி வரும் பருவங்களில் மாறாமல் இருக்கும்.  மே மாதத்தில் அற்புதமாகப் பூத்துச் சொரிந்து கொண்டிருக்கும்.  கோடைகால இறுதியில் மஞ்சள் வண்ணப் பூங்கொத்துக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெல்லிய தண்டுகள் பழுப்புநிறக் காய்களாக ஆகும்.  குளிர்காலத்தில் இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு மொட்டை மரமாக, ஒல்லியாக ஆகிவிடும்.  வசந்த காலம் வரும்போது இளம் பச்சைத் துளிர் விட்டு மே மாதத்தில் தன் மஞ்சள் மலர்ப் பூவளையங்களை மீண்டும் சூடிக்கொள்ளத் தொடங்கிவிடும்.  சலவைக் கல்லாலும், கருங்கல்லாலும் செதுக்கப்பட்டிருக்கும் ஆடம்பரப் பகட்டோடு கூடிய பிற நினைவுச் சின்னங்களையெல்லாம் அது அப்போது விஞ்சிவிடும்.

ஆனால் கதை இதோடு முடிந்துவிடவில்லை.  அதை ஆரம்பத்திலிருந்து சொல்லியாக வேண்டும்.  தன் தோட்டத்தில் சில கொன்றை மரங்கள் வேண்டுமென்று ஆசைப்பட்ட லெண்டினா என்ற  பெண்ணோடு எல்லாம் தொடங்கியது.  அவற்றின் மஞ்சள் நிறப் பூக்களை அவள் எப்போதுமே வியந்து பார்ப்பாள்; அவற்றிலுள்ள பெண்மை அவ்வாறு வெளிப்படுவதாக அவள் நினைத்துக்கொள்வாள்.  ஆரஞ்சும் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறமும் இணைந்தபடி பளபளப்பாய்ப் பகட்டாய்ப் பூக்கும் குல்மோகர் போல இவை பூப்பதில்லை.  தரையை நோக்கிக் கொத்துக் கொத்தாய்த் தலை கவிழ்ந்திருப்பது போலிருக்கும் சரக் கொன்றைப் பூக்களை அவளுக்குப் பிடித்திருந்ததன் காரணம் அது எளிமையான பணிவின் அடையாளம்  போல அவளுக்குத் தோன்றியதுதான்.  அதனால் தன் தோட்டத்தில் இரண்டு மரங்களை நடுவதற்கு அவள் முடிவு செய்தாள்.  அவை பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஓரங்களில் மட்டும் நட்டுவைத்தால் மற்ற செடிகளின் செழிப்பான வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்குமென்று நினைத்தாள்.  மரக்கன்று விற்பனை செய்யும் இடத்திலிருந்து கன்றுகளை வாங்கி காம்பவுண்ட் சுவரின் ஓரமாக நட்டுவைத்தாள்.  அவற்றை வளர்க்கும் முறைகளை கவனமாகப் பின்பற்றியபடி இரண்டு ஆண்டுகளுக்குள் அவை பூத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தாள்; அவற்றை விற்பனை செய்தவன் அவளிடம் அப்படித்தான் சொல்லி இருந்தான்.

முதல் வருடத்தில் அவள் வீட்டின் புதுத் தோட்டக்காரர், சுற்றி வளர்ந்திருந்த களைகளைப் பிடுங்கி எறியும்போது இளம் கொன்றைக் கன்றுகளையும் அவற்றோடு களைந்து எறிந்துவிட்டார்.  அவரைக் கடுமையாகக் கண்டித்த பிறகு இன்னும் சில மரக்கன்றுகளை வாங்கிக் கொண்டு வந்தாள் லெண்டினா.  இந்த தடவை, தோட்டத்தின் மூன்று மூலைகளில் அவற்றில் மூன்றை நட்டாள்.  அவற்றில் ஒன்றாவது தழைக்கக் கூடும் என்பது அவளது நம்பிக்கை.  ஆனால் அது நடக்கவில்லை.  ஒரு நாள் நாய்கள் பலமாகக் குரைக்கும் ஓசையையும், அவள் வீட்டு மதில் சுவரை ஒட்டி மாடுகள் கத்துவதையும் அவள் கேட்டாள்.  அது என்னவென்று பார்க்க வெளியே வந்தபோது அக்கம் பக்கத்திலுள்ள நாய்கள் தெருவில் அலைந்துகொண்டிருந்த பசுக்களைத் துரத்தியதால் இலேசாகத் திறந்து கிடந்த அவள் வீட்டுக் கதவின் வழியே தோட்டத்தின் உள்ளே நுழைந்த பசுக்கள், அங்கே இருந்த செடிகளை விருப்பம் போலக் கொறிக்கத் தொடங்கிவிட்டதையும், அவள் பொக்கிஷம்  போல் வளர்த்த கொன்றை மரக்கன்றுகளும் பறிபோய் விட்டதையும் கண்டாள்.  கொன்றைமரக் கன்றுகளை நட்டது முதல் தோட்டத்தில் நடக்கும் இத்தகைய விபத்து போன்ற நிகழ்ச்சிகள் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தன.  ஆனாலும் அவள் தன் முயற்சியை விட்டு விடவில்லை.  அவளுக்கு விருப்பமான பூக்களைப் பூக்கும் அந்த மரத்தின் கன்றுகளை மூன்றாவது வருடத்திலும் அவள் நட்டு வைத்தாள்.  முதல் சில மாதங்களில் அதிசயமாக அவை பிழைத்துக் கொண்டு வளரவும் தொடங்கிவிட்டன.

லெண்டினா மிகவும் உற்சாகமடைந்தாள் அவள் மிகவும் ரசித்த கம்பீரமான மஞ்சள் பூங்கொத்துக்களை விரைவில் பார்க்கத் தவித்தபடி இருந்தாள்  ஆனால் அவள் கனவு நனவாவதற்கு முன்பு இன்னொரு ஆபத்து நேரிட்டுவிட்டது.  தோழியைப்பார்ப்பதற்காக அவள் வெளியே சென்றிருந்தபோது சுகாதாரத்துறைப் பணியாள் ஒருவன், தோட்டத்தின் ஓரங்களிலெல்லாம் மிகக் கடுமையான டி.டி.டி.பூச்சி கொல்லி மருந்தைத் தெளித்துவிட்டுச் சென்றிருந்தான்.  துரதிருஷ்டவசமாக அன்று இரவு முழுவதும் பெய்த மழையில் தோட்டம் முழுவதும் வெள்ளக்காடாகி இருந்தது.  நன்கு வளர்ந்திருந்த மரங்களைத் தவிர – கொன்றை உட்பட எல்லாமே பட்டுப் போய் உதிர்ந்து போய்விட்டன.  லெண்டினா பெரிதும் மனமுடைந்து போனாள்; வினோதமான அந்த மலர்களின் எழிலைத் தன் தோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சி, ஒருபோதும் ஜெயிக்கப் போவதில்லையோ என்று கூட எண்ண ஆரம்பித்திருந்தாள் அவள். ஆனாலும் நெடுஞ்சாலைகளிலும், வேறு தோட்டங்களிலும் இந்த மலர்கள் பூத்திருப்பதை எப்போது கண்டாலும் தன் வீட்டுக்கு நெருக்கமாக அவை இருக்க வேண்டும் என்ற ஆழ்மன ஏக்கம் அவளை ஆட்கொள்ளத் தொடங்கிவிடும்.  அவளது கணவரும் குழந்தைகளும் கொன்றைப்பூ மேலுள்ள அதீத விருப்பம் அவளது மனநலனையே  பாதித்து வருவதாக முடிவு கட்டியதோடு, குடும்பத்தார் ஒன்று கூடிப்பேசும் தருணங்களிலும் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருந்தனர்.  தன் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை அவள் புரிந்து கொள்ளவில்லை; மாறாக அவர்கள் அழகுணர்ச்சி இல்லாதவர்கள் போலவும், சுற்றியுள்ள அழகை ரசிக்காமல் இருப்பது போலவும் எண்ணி அவள் மனதுக்குள் காயப்பட்டாள்.  ஆனால் என்றாவது ஒரு நாள் தன் தோட்டத்தில் முழுமையான வளர்ச்சியோடு கூடிய ஒரு கொன்றை மரம் இருக்குமென்ற நம்பிக்கையை அவள் ஒரு போதும் கைவிடவே இல்லை.

அதற்குப் பிறகு ஒருபோதும் ஒருவரிடமும் கொன்றையின் பெயரைக் கூட அவள் சொல்லவில்லை.  அத்தனை ஆசையோடு ரசித்து, தன் தோட்டத்தில் வளர்க்க ஆசைப்பட்ட அந்த மரத்தை மீண்டும் நடுவதற்கும் அவள் எந்த முயற்சியும் செய்யவில்லை.  அந்தத் தருணத்தில் அவளது கணவருக்கு விநோதமான ஏதோ ஒரு நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கின; நோய் இன்னதென்று கண்டு பிடிப்பதற்கு முன்பே ஒரு நாள் அமைதியாகத் தூக்கத்திலேயே இறந்துபோனார் அவர்.  சமூகத்தில் அவர் ஒரு பிரபலமான நபரென்பதால் இறுதிச் சடங்குகள் நீளமாக, விரிவாக நடந்தன.  அவரைப் புதைப்பதற்கான அந்த நாளில் – அவரது உடல் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு ஆயத்தமான அந்தக் கணத்தில் லெண்டினா ஆச்சரியமான ஒரு காரியத்தைச் செய்தாள்; அது, அவளையுமே கூட ஆச்சரியப்பட்ட வைத்தது.  கணவரின் இறுதி ஊர்வலத்தில் தானும் கலந்துகொள்ளப் போவதான அவளது அறிவிப்புதான் அது.  பொதுவாகக் கல்லறையில் நடக்கும் இறுதிக் கிரியைகளில் ஆண்கள்தான் கலந்து கொள்வது வழக்கம்; புதிதாக உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றித் தற்காலிகமாக ஒரு வேலி அமைப்பதையும் அவர்கள் அங்கேயே இருந்து மேற்பார்வை செய்துவிட்டு வருவார்கள்.  ஆனால் அமரர் ஊர்தியைத் தொடர்ந்து தன் மகன்களும், சகோதரர்களும் கூட்டமாக வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பார்த்த லெண்டினாவுக்கு அவர்களோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டுமென்ற திடீர் மன எழுச்சி ஏற்பட்டுவிட்டது.  அவளது வார்த்தைக்கு மௌனமே பதிலாக இருந்தது; அப்படிப்பட்ட ஒரு கணத்தில் அவளை மறுத்துப் பேசிக் கொண்டிருக்க எவரும் தயாராக இல்லை. ஒருவாறு கூட்டம் கிளம்பியது; காட்டில் இறுதிப் பிரார்த்தனைகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்க, வித்தியாசமான பல அடையாளக் கற்கள் தாங்கிய விதவிதமான கல்லறைகளுக்கு நடுவே நின்றபடி ,மரணத்தை வெல்ல மனிதர்கள் மேற்கொள்ளும் அற்பமான முயற்சிகள் பற்றிச் சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் லெண்டினா.  இப்படிப்பட்ட விதவிதமான கல்லறைகளை எழுப்புவதால் மட்டும் இறந்தவர்களை உயிரோடு கொண்டு வந்துவிட முடியுமா என்ன என்று அவள் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

தனக்குரிய இறுதித் தருணம் வரும்போது இந்த வகையில் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் முயற்சிகள் எதுவும் வேண்டாம் என்று அவள் முடிவு செய்தாள் அந்த எண்ணம் திடீரென்று அவளுக்குள் ஓர் உண்மையை உணர்த்தியது;  அந்த அனுபவச் சிலிர்ப்பை அவள் உணர்ந்தாள்.  கல்லறைக்கு மேல் வழக்கமாக வைக்கப்படும் அலங்காரமான முட்டாள்தனமான எந்த வித அடையாளக் கல்லும் இல்லாமல் தன் சமாதியின் மீது ஏன் ஒரு சரக்கொன்றை மரம் இருக்கக் கூடாது? தனக்கு நெருக்கமாக ஒரு கொன்றை மரம் இருக்க வேண்டும் என்ற அவளது வாழ்நாள் விருப்பமும் கூட அந்த வகையில் பூர்த்தியாகிவிடும்.  அதை எண்ணிப் பார்த்தபோது அது சோகமயமான நிகழ்ச்சி என்பதையும் மீறி ஒரு புன்னகை அவளிடம் எட்டிப்பார்த்து விட்டது.  அதை ஓர் உறவினர் பார்த்துவிட்டார் என்று தெரிந்ததும்,  இழப்பின் துயரத்தோடு அதற்குப் பொருத்தமாகத் தன் முக பாவனையை வேகமாக மாற்றிக் கொண்டாள் அவள்.  ஆனால் அவளுக்குள் ஏற்பட்டிருந்த ஒரு வகையான பரவசமான மனக்கிளர்ச்சியை நெடுநேரம் ஆவளால் மறைத்துக் கொள்ளமுடியவில்லை.  அதனால் தன் கார் ஓட்டுநர் எங்கே என்று சுற்றுமுற்றும் தேடிப் பார்த்து விட்டு சைகையால் அவனைப் பின்தொடரச் சொல்லியபடி  வீட்டுக்குத்திரும்பிச் சென்றாள்.

அன்று இரவு முழுவதும் உணர்ச்சி மிகுதியால் அவளால் தூங்கவே முடியவில்லை.  ஏதோ ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டதைப் போலிருந்தது.  ஆனால் அவள் அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறாள் என்பதுதான் கேள்வி.  தன் உறவுக்காரர்களையோ, குழந்தைகளையோ இந்த விஷயத்தில் நம்ப முடியாதென்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.  அந்த ‘மஞ்சள் நிற அதிசயங்’களின் மீது அவள் உள்ளத்திலிருக்கும் ஆழமான ஏக்கத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய தகுதியான ஒரு நபரை அவள் கண்டு பிடித்தாக வேண்டும்.  தன்னிடம் வேலைபார்ப்பவர்களில் யாரை நம்பமுடியும் என்று அவள் யோசித்துப் பார்த்தாள்.  சமையற்காரர், தோட்டக்காரர் ஆகிய இருவருக்குமே தங்களுக்கென்று ஒரு குடும்பம் இருந்தது.  குடும்பத்துக்குள் தனிப்பட்ட ஒரு புனிதம் போல ஒரு போதும் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது. ‘சட்’டென்று தன் காரோட்டியின் நினைவு அவளுக்கு வந்தது.  அவளுக்கே ஞாபகம் இல்லாத அளவுக்கு – வெகு காலமாக, பல ஆண்டுகளாக அந்த டிரைவர் அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வருகிறான்.  மனைவியை இழந்தவன் அவன். அவன் மீது நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள் அவள்.  மறுநாள் அவனோடு கல்லறைத்தோட்டம் வரை காரில் சென்று, தன்னுடைய புதைகுழியின் மீது அடையாளக் கல்லாக எது இருக்க வேண்டும் என்ற தன் ஆசையை அவனிடம் வெளிப்படுத்த வேண்டுமென்று அவள் நினைத்துக் கொண்டாள்.  ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கட்டாயமாக உண்டு.  அவளது வாழ்நாளுக்குள் அந்த மரம் பூப்பதை அவள் பார்த்துவிட வேண்டும்.  டிரைவரின் பெயர் மாபு என்று இருந்தாலும் எல்லோரும் அவனை பாபு என்றுதான் கூப்பிட்டு வந்தார்கள்.  மாபு என்று முதலில் உச்சரிக்க வராததால் லெண்டினாவின் பேரன் அவனை பாபு என்று சொல்லப் போக அதுவே வழக்கமாகிவிட்டது.  அந்தப் பெயரும் அப்படியே நிலைத்துப் போனது.  வீட்டிலிருந்த பெரியவர்கள் தன்னை பாபு என்று அழைத்தாலும் கூட நல்லியல்பு கொண்டவனாகிய மாபு அதற்கு எதிர்ப்பு காட்டுவதில்லை.

மறுநாள் காலை பாபுவைக் கூப்பிட்டு அனுப்பிய லெண்டினா, கல்லறைத் தோட்டத்துக்குச் செல்லும் சாலைக்குப் போகச் சொன்னாள்.  அது அத்தனை விநோதமாக எவருக்கும் படப்போவதில்லை.  கணவனை இழந்த விதவையான அவள், தன் கணவனின் சமாதிக்குச் செல்வதாகத்தான் வெளிப்பார்வைக்குத் தோன்றும் ஆனால் லெண்டினாவின் நோக்கமே வேறு. கல்லறைத் தோட்டத்தில் காலியாகக் கிடக்கும் இடங்கள் எவையெவை என்று பார்த்துத் தன்னைப் புதைப்பதற்கு ஏற்ற ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க நினைத்தாள் அவள்.  அந்த இடத்துக்கு நீண்ட காலம் எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது; அதனால் மற்றவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது.  கல்லறைத் தோட்டத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும், தன் கணவரின் புதைகுழியை நோக்கி விரைவதற்கு பதிலாக ஏதோ தொலைந்த புதையலைத் தேடுவது போல அந்தப்பகுதியின் எல்லைப் பகுதிகளை நோக்கிச் சென்றாள் லெண்டினா. நீண்ட நேரம் அங்கும் இங்கும் நடந்தபின் கல்லறைத் தோட்டத்தின் தெற்கு மூலையில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்த அவள், தான் தேடியது கிடைத்து விட்டதைப் போலத் தலையை ஆட்டிக்கொண்டாள்.  பாபுவுக்குக் குழப்பமாக இருந்தது.  சின்ன எஜமான்கள் பேசிக் கொள்வது போல அம்மாவுக்கு மூளை பிசகிப் போய்விட்டதோ என்று கூட நினைக்கத் தோன்றியது அவனுக்கு.  தன் அருகே வரச் சொல்லி அவள் சைகை காட்டியபோது அவன் தயக்கத்துடனேயே சென்றான்.  அவனை வேகமாக நடக்கச் சொல்லிக் கையசைத்து விட்டுத் தான் நின்று கொண்டிருந்த இடத்தை சுட்டிக் காட்டியபடி,

‘‘இதுதான் என்னோட இடம்.  எனக்கான கடைசி  நேரம் வரும்போது இந்த இடத்திலே புதைக்கப்படணுங்கிறதுதான் என் விருப்பம்’’ என்று உரக்கச் சொன்னாள்.

பாபுவுக்கு அதைக் கேட்டு வியப்பாக இருந்தது.

‘‘ஆனா…. மேடம்.. உங்க இடத்தை ஏற்கனவே எஜமானருக்குப் பக்கத்திலே குறிச்சு வச்சுட்டாங்களே’’ என்று அவளை மறுத்துச் சொன்னான் அவன்.

‘‘நான்சென்ஸ்! எந்தப் பையன் முதல்லே போறானோ அவன் அந்த இடத்தை எடுத்துக்கட்டும்.  என் இடம் இதுதான்.  ‘டவுன் கமிட்டி’க்குப் போய்ப் பார்த்துப் பேசி இதைப் பத்தின எழுத்து வழிப் பத்திரம் வாங்கற வேலையை நீதான் செய்யப்போறே.  ஆனா…. இதை மட்டும் மனசிலே வச்சுக்கோ.  உங்க வீட்டிலே யாருக்கும் இதைப் பத்தி எதுவும் தெரியக்கூடாது’’

பாபுவின் மருமகன், அந்த அலுவலகத்தில் ஒரு சாதாரண அலுவலராக வேலை பார்ப்பது அவளுக்குத் தெரியும்.

‘‘இதோ பாரு! உன் மருமகன்கிட்டே சொல்லி அதுக்கு ஏற்பாடு பண்ணு.  எவ்வளவு செலவானாலும் அதை நான் கொடுக்கிறேன்.  இப்ப நீ என்கிட்டே சத்தியம் செய்துதரப்போற மாதிரி இந்த ரகசியத்தைக் காப்பாத்தணும்னு அவன் கிட்டேயும் உறுதி மொழி வாங்கிக்கோ.  என்ன… என்னோட ரகசியத்தைக் காப்பாத்துவேதானே?

அவள் கண்ணில் தெறித்த கனலையும், அதிலிருந்த உண்மையின் ஆழத்தையும் கண்ட பாபு,

‘‘கட்டாயமா மேடம்! நான் உங்களோட ரகசியத்தை பத்திரமா காப்பாத்துவேன்.  என் மருமகனையும் அப்படியே செய்யச் சொல்றேன் என்று பதிலளித்தான்.

‘‘தன்னோட மனைவி கிட்டே கூட அவன் சொல்லக்கூடாது’’ என்றாள் லெண்டினா.

‘‘சரிமேடம்’’ என்று அதை ஆமோதித்தான் பாபு.

சட்டென்று ஏற்பட்ட இந்தக் கணநேரத்தீர்மானத்துக்குப் பின், அவனை நோக்கித் தன் கைகளை நீட்டினாள் அவள்.  அவன் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள,  தோட்டத்துக்கு வெளியே கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்து பின்பு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.  வயதான அந்தப்பெண்மணி களைப்பாகக் காணப்பட்டதால் நேரே படுக்கச் சென்றுவிட்டாள்.  அதை யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை.  நடந்து முடிந்திருந்த இறுதிச் சடங்குகள் அங்கிருந்த எல்லாரையுமே அசதிக்கு ஆளாக்கி இருந்தன.  அந்த வீட்டிலிருந்த மிகவும் வயது குறைவான பெண்ணும் கூட சீக்கிரம் தூங்கப் போகலாமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஆனால் படுக்கையில் படுத்திருந்தபடி நல்ல முழு விழிப்போடு இருந்த லெண்டினாவோ, தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தைப் பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.  புதைகுழிக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு கொன்றை மரத்தை நடவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.  அந்த இடத்தைக் கையகப்படுத்துவது முதல், எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக் கொள்வதுவரை உள்ள எல்லாக் கஷ்டங்களும் விரும்பிய பலன் அளிக்க வேண்டுமென்றால் அது, தான் உயிரோடு இருக்கும்போதே உறுதிப்படுத்தப்பட்டாக வேண்டும்.  அவளது இறுதி மூச்சு பிரிவதற்கு முன் அந்த மரம் பூப்பதை அவள் பார்த்துவிட வேண்டும் இந்தக் காரியத்தைச் செய்வதற்கும் கூட விசுவாசமான பாபுவின் துணைதான் அவளுக்கு தேவையாக இருந்தது.  ஆனால் துரதிருஷ்டவசமாக அப்போது குளிர்காலசமயமாக இருந்ததால் அடுத்த வசந்த காலம் வரை அவர்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

அந்த இடைவேளைக்குள், கல்லறைத் தோட்டத்திலுள்ள அந்த இடத்தை அவளுக்காக ஒதுக்கி வைப்பதுபற்றிய ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையைத் தன் மருமகனோடு தொடங்கியிருந்தான் பாபு.  எடுத்த எடுப்பில் அதைக் கேட்டதும் அந்த இளைஞன் குழம்பித்தான் போனான்.  தன் மாமனார் இப்படிப்பட்ட வெறுப்பூட்டும் துயரமான விஷயத்தை ஏன் பேசுகிறார்? குணமாக்கமுடியாத ஏதோ ஒரு நோயால் அவதிப்பட்டுக் கொண்டு சொந்தக் குடும்பத்திடமிருந்தே அதை மறைத்து வைத்திருக்கிறாரோ அவர்? ஆனால் அந்த இளைஞன், தான் நினைத்ததையெல்லாம் வெளியே சொல்லிவிடாமல் தன் மனதுக்குள் மட்டுமே வைத்துக் கொண்டான்.  கல்லறைத் தோட்டத்தின் முன் வரிசை இடங்களைத்தான் நிறையப்பேர் விரும்புகிறார்கள் என்பதையும், நகரத்தில் பிரபலமாக இருக்கும் மனிதர்களுக்கிடையே அது தொடர்பான தகராறுகள் கூட ஏற்படுவதுண்டு என்பதையும் மருமகன் வழியாக பாபு அறிந்து கொண்டான்.  ஆனால் பாபு முன்வைத்த கோரிக்கை, அவனது மருமகனைப் பெரிதும் ஆச்சரியமடைய வைத்தது; காரணம் அவன் சொன்ன இடம், கல்லறைத் தோட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அதிகம் கண்டுகொள்ளப்படாத இடம்.  அந்த இடத்தை ஒதுக்குவதில் எந்தச் சிக்கலும் இருக்காதென்று தனக்குத் தோன்றுவதாக மாமனாரிடம் உறுதியளித்தான் அவன்.  ஆனால் முறையான ஒரு விண்ணப்பம் இருந்தால்தான் கமிட்டியால் பொருத்தமான நடவடிக்கையை எடுக்க முடியும்.

பாபு, தன் எஜமானியிடம் இது பற்றித் தெரிவித்ததும், லெண்டினா மீண்டும் ஒருவகையில் குழப்பத்திற்கு ஆட்பட்டாள்.  அந்த விண்ணப்பத்தில் அவளே கையெழுத்திடுவதா அல்லது விண்ணப்பதாரர் பெயர் இரகசியமாக இருப்பதற்காக வேறு ஏதாவது தந்திரமான திட்டம் தீட்ட வேண்டி இருக்குமா? இரண்டாவதுதான் சிறந்ததாக இருக்குமென்று தோன்றினாலும் அதை அவள் எப்படிச் செய்து முடிப்பது? மனதுக்குள் பல வகையாக யோசித்துப் பார்த்த போது, நீண்ட நாட்களுக்கு முன் தனக்கும், கணவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடல் அவளுக்கு நினைவு வந்தது. அவர்கள், நிலவிற்பனை சார்ந்த பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த  அந்த நேரத்தில்,      .

‘‘நிலத்திலே போட்ட பணத்திலே இருந்து லாபம் வரணும்னு நீ நெனச்சா, பளிச்சுனு வெளியே அதிகம் தெரியாம இருக்கிற இடங்களை வாங்கிப்போடணும்.  அப்பதான் நீ அதுகளை வாங்கும்போது யார் கவனத்திலேயும் அது படாது.  ஊர் பெரிசாகும்போது உன்கிட்டே இருக்கிற சொத்தோட மதிப்பு பலமடங்கு கூட ஆகியிருக்கும்”

என்று அவள் கணவர் சொல்லியிருந்தார்.

அந்த உரையாடலிலிருந்து கிடைத்த ஒரு விஷயத்தை இப்போது நினைத்துப் பார்த்த அவள் – ஏற்கனவே நெரிசலாக இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் ஒரு இடத்தை ஒதுக்கும் முதல் யோசனையைக் கைவிட்டுவிட்டு மறு நாள் அங்கே மீண்டும் போனாள்.  இம்முறை தோட்டத்தின் சுவரைச் சுற்றி பாபுவையும் தன்னோடு நடந்து வருமாறு கூப்பிட்டாள் அவள்; பிற்காலத்தில் தோட்டம் எந்தத் திசையில் விரிவுபடுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை ஆராயுமாறும் அவனிடம் கேட்டுக்கொண்டாள்.  சட்டென்று விஷயத்தைப் பிடித்துக் கொண்ட அவன், அவளைச் சிறிது ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்ட பிறகு  தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியை வேகமாகப்போய்ப் பார்த்துவிட்டு ஒரு முடிவோடு திரும்பி வந்தான்.  காரில் ஏறிக்கொள்ள அவளுக்கு உதவி செய்து, இருவரும் வசதியாக உட்கார்ந்தபிறகு 

‘‘மேடம்! தெற்குப் பக்க எல்லையை ஒட்டியிருக்கிற இடம்தான் மிகவும் நன்றாக இருக்கிறது; ஆனாலும் உங்கள் தேவைக்கு ஒரு கையளவு நிலம் போதுமென்ற நிலையில் நீங்கள் இப்படிச் செய்வது ஏனென்று எனக்கு முழுசாய்ப் புரியலை’’ என்றான்.

கண்கள் பளபளக்க அவனைப் பார்த்தவள்,

‘‘பொறுமையா இரு பாபு! உன்னோட கேள்விக்குக் காலம் பதில் சொல்லும்’’ என்றாள்.  புதிரான அந்த பதிலோடு அவள் நிறுத்திக் கொண்டுவிட அவர்கள் இருவரும் அமைதியாக வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர்.

மீண்டும் தன் படுக்கையறைக்குச் சென்று முடங்கிக் கொண்ட லெண்டினா, கல்லறைத் தோட்டத்தை ஒட்டியிருக்கும் அந்த இடத்தைக் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கவலைப்படத் தொடங்கியிருந்தாள்.  அந்தக். காரியத்தைச் செய்து முடிக்க அவளுக்கு நம்பகமான ஒரே ஒரு ஆள் பாபுதான்; அவனிடம்  அந்தப் பொறுப்பை ஒப்படைக்க அவள் முடிவு செய்தாள்.  ஆனால் அதைப்பற்றி அவனிடம் பேசுவதற்கு முன்பே அதிருஷ்டவசமாக அவள் வாழ்வில்  குறுக்கிட்ட விதி வேறொரு மனிதனின் மூலம் அவளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.  பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அந்த மனிதன், இறந்துபோன அவள் கணவரது நண்பன் மகன்.  அந்த நண்பருமேகூட இறந்துவிட்டார்.  அவரது மகனான கேலாங் அவள் கணவர் இறந்த போது வேறெங்கோ சென்றிருந்திருந்ததால் இப்போது அதைப் பற்றிக் கேள்விப்பட்டு இரங்கல் தெரிவிப்பதற்காக வந்திருந்தார்.  கேலாங்கின் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வகையான சலிப்பும் விரக்தியும் தென்படுவதை கவனித்து விட்ட லெண்டினா அதற்கான காரணத்தைக் கேட்டு அவனைக் குடைந்தெடுத்தாள்.  பொறுக்க முடியாமல அவனும் அதை வெளியே கொட்டி விட்டான்.  தன் தந்தை மாநிலத்துக்கு வெளியே பல மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்ததால் – அவரது நீண்ட நாள் உடல் நலக்குறைவால் தனக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல் பற்றிக் கொட்டித் தீர்த்தான் அவன்.

‘‘எங்களோட இடத்தை மட்டும் விக்க முடிஞ்சா நல்லது தான்! ஆனா துரதிருஷ்டவசமாக, கல்லறைத் தோட்டமே இப்ப பெரிசாயிட்டதாலே அதை ஒட்டியிருக்கிற எங்களோட நிலத்தை விக்கிறது பத்தி நான் பேசப்போனா ஜனங்க சிரிக்க மட்டும்தான் செய்வாங்க.  அதையும் இன்னொரு கல்லறைத் தோட்டமாக்கிட்டு வாடகை வாங்கிக்கோன்னு என்னைக் கிண்டல் கூட செய்வாங்க! ஆண்ட்டி! எங்க நிலைமை என்ன ஆகப்போகுதுன்னே தெரியலை’’ என்றபடி பெருமூச்சுவிட்டான் அவன்.  பாவப்பட்ட அந்த மனிதன் கிட்டத்தட்ட கண்ணீர்விடும் நிலையில் இருந்தபோது அவனுக்காகப் பரிதாபப்படாமல், அவன் கொட்டித் தீர்த்த விஷயத்தில் பரவசமடைந்திருந்தாள் லெண்டினா.

நீண்டநேரம் அவள் அப்படி அசாதாரண மௌனம் அனுசரிப்பது ஏன் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது அவன் பக்கம் திரும்பிய லெண்டினா, அந்த நிலத்தைக் குறித்த தகவல்களை அவனிடம் கேட்டாள்.  அது தன் மீதுள்ள கரிசனமும் அக்கறையும் மட்டும்தான் என்றுதான் கேலாங் நினைத்தான்  ஆனால் தொடர்ந்து வந்த அடுத்த கேள்வி, அவனைத் தூக்கி வாரிப்போடச் செய்துவிட்டது.

‘‘அந்த நிலத்தை எனக்கு விக்கிறியா?’’என்று உணர்ச்சிகரமாக அவனிடம் கேட்டாள் அவள்.  அவனால் அதற்கு உடனடியாக பதில் தர முடியவில்லை.  தன்னிடம் அவள் அனுதாபம் காட்டுகிறாள் என்பதற்காக மோசமான அந்த இடத்தை அவளுக்கு விற்பனை செய்வது சரியாக இருக்குமா என்று அவன் தனக்குள்ளேளே விவாதித்துக் கொண்டிருந்தான்.  அவளது இரக்கத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது அநியாயமானது என்று அவனுக்குத் தோன்றியது.  அவனது மனதை மிகச்சரியாகப் படித்துவிட்ட அந்த வயதான பெண்மணி,

‘‘நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும்.  ஆனா உன்மேலே இருக்கிற அக்கறையாலே மட்டும் நான் இதைச் செய்யலை.  எனக்கும் ஒரு சுயநல நோக்கம் இருக்கு.  கொஞ்சகாலமாவே என்னைப்   புதைக்கறத்துக்கு ஏத்தமாதிரி பொருத்தமான ஒரு இடத்தை நான் தேடிக்கிட்டிருந்தேன்.  சரி… நீ எந்த பதிலும் சொல்றதுக்கு முன்னாடி நான் இதையும் சொல்லிடறேன், கேட்டுக்கோ.  அந்தப் பெரிய தோட்டத்திலே இருக்கிற முட்டாள்தனமான கல் சின்னங்களுக்கு நடுவிலே புதைக்கப்படறதை நான் விரும்பலை.  என்னோட சமாதிக்குமேலே அழகான மரங்களைத் தவிர வேற எதுவுமே இருக்கக்கூடாது.  அப்படி ஒரு இடம்தான் எனக்கு வேணும்.  சரி… இப்ப சொல்லு… அந்த இடத்தை எனக்கு விக்கிறியா?’’

என்று மென்மையான குரலில் பேசியபடி அவனிடம் கேட்டாள்.

லெண்டினா, உண்மையிலேயே இதை வாங்குவதில் தீவிரம் காட்டுவதை உணர்ந்து கொண்ட கேலாங் மெல்லிய குரலில் ‘‘சரி’’ என்றான்.  ஆனால் அந்தப் பெண்மணி அதோடு விட்டுவிடுவதாக இல்லை.  தான் முதலில் பேசிய அதே தீவிரமான தொனியில் பேச்சைத் தொடர்ந்தாள்.

‘‘இதைக் கேட்டுக்கோ! ஒரு ‘கண்டிஷ’னோட மட்டும்தான் அந்த இடத்தை வாங்கிப்பேன்.  இந்த வியாபாரத்தைப் பத்தி நீ யார் கிட்டேயுமே – உன் மனைவி கிட்டே கூட மூச்சுவிடக்கூடாது.  அந்த நிபந்தனைக்கு சம்மதிச்சா உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு நாளைக்கு பத்திரங்களோட வந்திடு! காரியத்தை முடிச்சு உறுதிப்படுத்திடலாம்.

எதிர்பாராமல் நேர்ந்த இந்தத் திருப்பத்தை – தனக்கு அடித்த அதிருஷ்டத்தைக் கண்டு திக்குமுக்காடிப்போயிருந்த கேலாங் தான் நினைத்திருந்த தொகைக்குக் கூடுதலாகவே ஒரு தொகையைக் குறிப்பிட்டான்.

‘‘நல்லது நாளைக்குக் காலையிலே பதினோரு மணிக்குத் தயாரா வந்திடு’’ என்று அவளது பதில் அவனது அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கிவிட்டது.

அவள் சொன்னவைகளைக் கேட்டுக்கொண்டபின், முறையாகக் கூட விடைபெற்றுக் கொள்ளத் தோன்றாமல் ஏதோ ஒரு மயக்க நிலையில் இருப்பவனைப் போல வீட்டை விட்டு வெளியேறினான் அவன்.  நிகழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் நிஜமாகவேதான் நடந்து கொண்டிருக்கிறதா என்ற வியப்பு அவனை இன்னும் ஆட்கொண்டிருந்தது.  கொஞ்சம் பேரம் பேசி இருந்தால் விலை குறைந்திருக்கக்கூடும் என்பதை லெண்டினாவும் அறிந்திருந்தாள்.  ஆனாலும் வானுலகிலிருந்து வரும் கொடைகளை எந்த வகையான முணுமுணுப்பும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்திருந்ததால் மறுநாள் நடந்து முடிய வேண்டிய பரிவர்த்தனைக்கான பணத்தை ஆயத்தமாக்கும் வேலையைத் தொடங்கினாள்.  மீண்டும் பாபுவின் துணையே அவளுக்குத் தேவைப்பட்டது.  இந்த ஒப்பந்தத்தில் சாட்சி அவனாகத்தான் இருந்தாக வேண்டும்.  ‘டவுன் கமிட்டி’யோடு நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகளை அவளுக்கு நினைவூட்டியபடி. அவற்றை சட்டென்று நிறுத்திக் கொள்வது பற்றித் தன் மருமகனுக்கு விளக்கம் தரவேண்டியிருக்கமென்று சொல்ல முற்பட்டான்பாபு .  

அதற்குப் புன்னகையோடு,

‘‘வயசாகிப் போனதனாலே ஒண்ணும் புரியாம யாரோ போட்ட குளறுபடியான திட்டம் அதுன்னு அவன் நினைச்சுக்கட்டும்’’

என்று பதில் தந்தாள் அவள்.

லெண்டினாவின் ஆலோசனைப்படி ஒப்பந்தப் பத்திரத்தில் உறவினர் ஒருவர் போட்டிருந்த சாட்சிக் கைநாட்டுடன் மறுநாள் வந்தான் கேலாங்.  எந்த ஒரு சிக்கலுமில்லாமல் வேலை முடிந்துவிட, பழைய கல்லறைத் தோட்டத்தின் தெற்குப் பார்த்த சுவரை ஒட்டிய நிலப்பகுதியின் பெருமைமிக்க உடமைக்காரியாக ஆகிவிட்டாள் லெண்டினா.  நிலத்தைச் சுற்றிலும் அதன் எல்லையைக் குறிப்பதற்காகத் தற்காலிக வேலி போட ஆட்களை அழைத்து வருமாறு பாபுவிடம் சொன்னாள்.  கிட்டத்தட்ட வேலி போடும் பணி முடிவடையும் தருணத்திலேதான் தங்கள் அம்மாவின் பைத்தியக்காரத்தனமான திட்டத்தைப் பற்றி அவளது மகன்கள் அறிந்து கொண்டார்கள்.  அவர்கள் கோபத்தோடு அவளை எதிர்த்தார்கள்; அவள் போட்டதிட்டத்தைப் பற்றித் தங்களோடு கலந்தாலோசிக்காமல் விட்டு விட்டதற்காக அவளிடம் சிடுசிடுத்தார்கள்.  தங்களை இப்படி வெளியாட்கள் போல அவள் நடத்தும் பட்சத்தில் அந்த வீட்டை விட்டே கூட வெளியேறிவிடப் போவதாக அவளைப் பயமுறுத்தினார்கள்.  அவளது திட்டங்களில் தங்களுக்கு இருக்க வேண்டிய நியாயமான இடத்தைப் போயும் போயும் ஒரு ‘டிரைவர்’ பறித்துக் கொண்டு விட்டதாக அவர்கள் வருத்தத்தோடு இருந்தார்கள்.  ஆனால் அப்போதும் கூடப் புதிய கல்லறைத் தோட்டத்தைப்பற்றிய அவளது முழுமையான திட்டம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  தானும் பாபுவுமாகவே எளிதாக, சீராக முடிக்கக் கூடிய செயல்களை அவர்கள் மீது சுமத்துவதற்குத் தான் விரும்பாததே காரணம் என்ற சொல்லி அவள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றாள்.  லெண்டினாவின் பையன்கள் அமைதியடைந்துவிட்டாலும், மூத்த மருமகள் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள எண்ணியபடி லெண்டினா மீது குற்றம் சாட்டத் தொடங்கினாள்.  ஒரு வேலையாள் மீது இத்தனை நம்பிக்கை வைத்தது, தங்களை அவமானப்படுத்தும் செயல் என்றாள்.  நியாயம் இல்லாத இந்தக் குற்றச்சாட்டால் புண்பட்ட லெண்டினா, தன் கணவரின் இறுதிச்சடங்கின்போது காதில் விழுந்ததும், தான் ரகசியமாக வைத்திருக்க எண்ணியதுமான விஷயம் ஒன்றை இப்போது ‘சட்’டென்று கொட்டித் தீர்த்துவிட்டாள்.

இறுதிச் சடங்குக்குரிய செலவை யார் ஏற்றுக்கொள்வது என்று அப்போது அவளது இரண்டு மருமகள்களுக்குமிடையே ஒரு விவாதம் மூண்டது.

‘‘நாங்க மட்டும்தான் செலவழிக்கணும்கிறது நியாயமில்லை.  நீயும் உன்னோட வீட்டுக்காரரும் பாதி கொடுத்தாகணும்’’ எனறாள் மூத்தவள்.

‘‘இதிலே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? உனக்கு அப்படித் தோணினா என் வீட்டுக்காரர் கிட்டே சொல்லிக்கோ.  ஆனா, தேவையில்லாத இந்த ஆடம்பரத்துக்கு நான் ஒரு ரூபாய் கூடக் கொடுக்கமாட்டேன்’’ என்று பதிலளித்தாள் இளையவள். இளைய மருமகள் தனக்கென்று சொந்தமாகப் பணம் வைத்திருப்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்; அதுவே மற்றவர்களை விட அவளை ஒரு படி உயர்த்தி வைத்திருந்தது.

‘‘அந்தக் கிழவருக்குப் பிரம்மாண்டமா கல்லறை கட்டறதிலே பணத்தை வீணாக்கப் போறோம்னு நினைச்சா,  அதை மறுபடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு.  இந்தக் குடும்பத்திலே இப்படிப்பட்ட பாசாங்குகள்தான் இருக்கு’’ என்று மேலும்தொடர்ந்தாள்.

லெண்டினா, மேலே நடந்த பேச்சுவார்த்தையைத் தன் மனதுக்குள் மட்டுமே வைத்துக்கொண்டிருந்தாள்; அதை ஒரு போதும், ஒருவருக்கும் வெளிப்படுத்தப்போவதில்லை என்ற உறுதியோடும் கூட இருந்தாள்.  ஆனால் வேறு யாரையுமே நேரடியாக அவள் சம்பந்தப்படுத்தியிராத ஒரு விஷயத்தில் அவளது குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டுப் பேசியது அவளைத்தூண்டிவிட்டுவிட்டது; அவள் அதைச் சொல்லிவிட முடிவு செய்தாள்.

‘‘இப்படி ஒரு அற்ப விஷயத்துக்குப் போய் நீங்க எல்லாரும் தேவையில்லாம ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க? சொல்லப்போனா நான் வேற யாரோட பணத்துக்கும் செலவு வைக்கவே இல்லையே? இன்னொண்ணும் கேட்டுக்கங்க.  எனக்குக் கல்லறை ஏதும் கட்டறதைப் பற்றி நீங்க கவலைப்படவே வேண்டாம்.  எனக்கு அப்படி எதுவும் தேவையில்லை’’ என்று அவர்கள் இருவரையும் பார்த்துச் சொன்னாள்  அந்த மருமகள்கள் இரண்டு பேரும் திகைத்துப் போய்விட்டனர்.  தங்களுக்குள் அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தபோது அறைக்குள் தாங்கள் மட்டும் தனியாக இருந்ததாகத்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர்.  திறமையாகவும், தந்திரமாகவும் அதை லெண்டினா கையாண்ட விதம், எழுந்த எதிர்ப்புக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.  தங்கள் மனைவிகளை அம்மா ‘கவனி’த்துக் கொண்டு விட்டதைக் கணவர்கள் அறிந்தபோது உள்ளுர மகிழ்ச்சியடைந்தபடி ‘‘அம்மான்னா அம்மாதான்… நல்லா பாடம் கத்துக்கிட்டீங்க நீங்க’’ என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

கல்லறைத்தோட்டத்தை ஒட்டியுள்ள துண்டு நிலத்தை லெண்டினா வாங்கியிருக்கும் செய்தி, சீக்கிரமே எல்லோருக்கும் தெரிய வந்துவிட்டது.  டவுன்கமிட்டியைச் சேர்ந்த அங்கத்தினர்கள் சீக்கிரத்திலேயே தன்னைப் பார்க்க வந்துவிடக் கூடும் என்பதையும், நிலத்தின் சொந்தக்காரர் குறித்த பிரச்சினை எழக்கூடும் என்பதையும் லெண்டினா அறிந்து வைத்திருந்தாள்; அப்படிப்பட்ட இடங்களெல்லாம் கமிட்டியிடமிருந்து உரிய அனுமதி பெற்று சர்ச்சின் பொறுப்பிலோ அல்லது வேறு மதநிறுவனங்களின் பொறுப்பிலோ இருப்பதுதான் வழக்கம்.  அவர்கள் அடுத்து செய்யப்போவது என்னவாக இருக்கும் என்பதை அனுமானித்தபடி மாவட்ட நீதிமன்றத்தில் அப்போதுதான் வழக்கறிஞராகப் பணி தொடங்கியிருந்த தன் மருமகனின் உதவியோடு சட்டபூர்வமான ஓர் ஆவணத்தைத் தயார் செய்துவைத்தாள் அவள்.  அந்த ஆவணத்தில், தனக்குச் சொந்தமான அந்த இடத்தைச் சர்ச்சுக்குத் தரப்போவதில்லையென்றும் தான் குறிப்பிடும் நிபந்தனைகளை ஏற்று நிலம் பராமரிக்கப்படும் என்று எழுத்து பூர்வமான ஒப்புதல் கடிதம் அளித்தால் டவுன் கமிட்டிக்கு அதை தானமாக வழங்கத் தான் முன்வருவதாகவும் அவள் தெரிவித்திருந்தாள்.

  1. புதிய நிலப்பகுதி, புதிய கல்லறைத் தோட்டமாக்கப்பட வேண்டும்.  சமாதிகளின் மீது கற்சின்னங்களை எழுப்பாமல் பூக்களைச் சொரியும் மரங்களை மட்டுமே நடுவதாக ஒத்துக் கொள்பவர்களே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. நிலத்தை தானமாக வழங்குபவரான லெண்டினா, தனக்குரிய துண்டுப்பகுதியைத் தேர்ந்தெடுக்கும் முதல் நபராக இருப்பார்.
  3. துண்டு போடப்படும் நிலப் பகுதிகளுக்கு எண்கள் தரப்பட்டு, எண்களுக்கு நேரே பெயர்கள் எழுதப்பட்டு கமிட்டி ரெஜிஸ்டரில் வைக்கப்படவேண்டும்.
  4. கல்லறைத்தோட்டம் பற்றிய நிபந்தனைகள் பரவலாகப் பலரின் கவனத்துக்கும் கொண்டு வரப்படுவதோடு அவை உறுதியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் டவுன் கமிட்டி உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எதிர்பார்த்தது போலவே டவுன் கமிட்டி மெம்பர்கள் ஒருநாள் அவளைத் தேடி வந்தார்கள்.  மிகப்பெரிய வரவேற்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், சமூகத்தில் அவர்கள் பெற்றிருக்கும் உயர்ந்த ஸ்தானத்துக்குப் பொருத்தமான வகையில் உபசரிப்பு அளிக்கப்பட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டார்கள்.  லெண்டினா அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, அதிகாரபூர்வமான அவர்களது வருகைக்கான காரணத்தை வினவினாள்.  முதலில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்த சேர்மன், குடும்பத்தலைவரை இழந்து வருந்தும் அந்தக் குடும்பத்துக்குக் கமிட்டியினர் அனைவர் சார்பிலும் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.  அதற்கு ஏற்ற முறையில் பதிலளித்த லெண்டினா, அவர்களது மதிப்புமிக்க வருகை எது குறித்தது என்று கேட்டாள்.  தன் சகாக்களை ஒரு முறை பார்த்த பிறகு, புனிதமான அந்த நிலத்தின் உடைமை பற்றியும், நகர நிர்வாகிகள் அது குறித்து என்ன சொல்கிறார்கள் என்பது பற்றியும் முன்கூட்டியே ஒத்திகை பார்த்து வைத்திருந்த தன் பேச்சை நிகழ்த்த ஆரம்பித்தார் சேர்மன்.  அவர் பேச்சில் மென்மையாக – ஆனால் உறுதியாகக் குறுக்கிட்டபடி.

‘‘நன்றி சேர்மன்! இந்த விஷயத்தைப் பொறுத்தவரை உங்கள் பொறுப்பு எப்படிப்பட்டது எனக்கு நல்லாவே தெரியும்.  அதை உறுதியா சொல்றேன்.  அதனாலே உங்க பார்வைக்கு ஒரு சட்டப் பத்திரத்தை நானே முன்கூட்டி தயார் செய்து வச்சிட்டேன்.  அதுக்கு நீங்க ஒத்துழைப்பு தரணும்.  மத்த மெம்பர்களோட கலந்து பேசி, நான் எழுதியிருக்கிற நிந்தனைகள் உங்களுக்குப் பொருத்தமானதா இருக்கான்னு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ சொல்லுங்க’’என்றாள்  லெண்டினா.

சேர்மன் ஒரு நிமிடம் அவளைக் கடுமையாகப் பார்த்தாலும் எதுவும் பேசாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.   ஆனாலும் தன் பேச்சின் நடுவே அவள் இடை புகுந்து தடுத்துவிட்டதில் அவர் அதிருப்தியும் கோபமும் அடைந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.  வந்திருந்தவர்களில் மூத்தவரான ஒரு உறுப்பினரின் பக்கம் திரும்பியபடி

‘‘நீங்க என்ன சொல்றீங்க ப்ரதர்? இங்கே வச்சு இதைப்பத்திப் பேசுவோமா? இல்லேன்னா ஆஃபீஸூக்குக் கொண்டு போயிடுவோமா?” 

            உறுப்பினர்களில் இன்னொருவர் அந்த ஆவணத்தைப் படித்துவிட்டு சேர்மனை விட அதிகாரமான தொனியுடன்,

‘‘இங்கே வச்சே செய்திடலாம்; அதிலே கொடுத்திருக்கிற நிபந்தனைகள் ரொம்ப எளிமையாத்தான் இருக்கு.  அதை ஏத்துக்கறதிலே எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தெரியலை.  மேலும் அதனாலே நமக்குப் பெரிய அளவிலே ஒரு இடம் கிடைக்குது.  அப்படி ஒண்ணு தேவைன்னுதான் நாமளும் ரொம்ப நாளாவே நினைச்சிருந்தோம்.  இந்தப் பெண்மணி அன்போட நமக்கு உதவி செய்ய முன்வந்ததுக்கு அவங்களை நாம் பாராட்டியாகணும்’’ என்றார்.  லெண்டினாவின் ஆவணத்தை அழுத்தம் திருத்தமாக ஆமோதித்து முக்கியமான ஒரு உறுப்பினர் இவ்வாறு பேசிவிட்ட பிறகு அதிலுள்ளவைகளைப் பற்றி விவாதிக்கப் பிறகு ஏதும் இல்லை.  சில நாட்களுக்குப் பிறகு செய்யப்பட்ட இன்னொரு பத்திரப் பதிவுக்குப் பின் – முதலில் முன்வைக்கப்பட்ட வழக்கத்துக்கு மாறான பல நிபந்தனைகளோடு  அந்தப் புதிய கல்லறைத் தோட்டம் டவுன் கமிட்டியின் கைக்கு வந்து சேர்ந்தது.

சட்டபூர்வமாக முறைப்படி செய்ய வேண்டியிருந்த சம்பிரதாயங்களெல்லாம் முடிந்த பின், இந்த தடவை தன் மகன்கள், மருமகள்கள் என்று எல்லோர் முன்னிலையிலும் வைத்து

‘‘எல்லாம் சரிதான்… இனிமேல் எனக்குரிய துண்டுப் பகுதி எதுன்னு நான் தேர்ந்தெடுத்துக்கலாமில்லையா?” என்று அப்போதுதான் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தவளைப் போல அவள் கேட்டாள்.  யாருக்கும் எந்த பாதகமும் இல்லாதது போல புத்திகூர்மையான அந்த வேண்டுகோளை அவள் முன் வைத்ததைக் கண்டு அறையிலிருந்த எல்லோரும் அப்படியே அசந்து போய்விட்டார்கள்.  எந்த இடத்தில் அவள் புதைக்கப்படப் போகிறாளோ  அந்த இடத்தை ஒரு மிட்டாயைக் கேட்பதைப் போலக் கேட்கிறாள் அவள்.  மனதுக்கு ஒவ்வாத அப்படிப்பட்ட வருத்தமான ஒரு விஷயத்தைக் கேள்விப்பட நேர்நததில் அந்தச் சூழலே சற்று இறுகிப்போனது போலிருந்தது.

‘‘அந்த இடத்திலே ஒரு மரக்கன்று வைக்கணும்னு ஆசைப்படறேன் நான்’’  என்று தொடர்ந்து சொல்லியதன் மூலம் அந்த உறுத்தலைக் களைந்தாள் அவள்.  அதற்கு யாரும் எந்த பதிலும் கூறவில்லை.  வந்திருந்த உறுப்பினர்கள் அங்கிருந்து கிளம்பியபோது,

‘‘சொல்லப்போனா, அந்த அம்மாதானே இடத்தையே தானம் கொடுத்தவங்க.  முதல் வாய்ப்பை அவங்களுக்குக் கொடுக்கிறதுதான் சரி’’ என்று மெல்லிய குரலில் சேர்மன் சொன்னது காதில் விழுந்தது.

லெண்டினாவும், பாபுவும் புதிய இடத்துக்கு அடிக்கடி போய் வந்தபடி இருந்தார்கள்.  ஒரு நாள் தோட்டக்காரரோடு, கொன்றை மரக்கன்றுகளையும் எடுத்துக்கொண்டு சென்ற பாபு, ஏற்கனவே ஆயத்தமாக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட இடத்தில் அவற்றை நட்டுவைத்தான்.  கல்லறைத் தோட்டத்துக்குச் செல்வதை இப்போது லெண்டினா நிறுத்திக் கொண்டுவிட்டாள். தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளும், நெடுநாள் மனதிலிருந்த கனவு நனவாகிக் கொண்டிருப்பதும் அவளைக் களைப்பாக்கத் தொடங்கியி ருந்தன.  ஒவ்வொரு மே மாதத்திலும் பூக்கும் கொன்றை மரத்தடியில் மட்டும்தான் புதைக்கப்படவேண்டும் என்று அவள்தான் எப்படி ஆசைப்பட்டாள்? அதே போல அப்படி ஒரு துண்டு நிலம் தன் வசப்பட்டுவிட்ட அந்த விதம் அவளுக்கு இன்னும் கூட ஒரு மர்மம் போலவே தோன்றியது.

ஆ கொன்றை மரம்!!  இம்முறை அவள் கணக்குப்போட்டது போல அந்தக் கன்றுகள் துளிர்த்துத் தழைத்து விடுமா? உண்மையாகவே அவை நன்றாகப் பூத்துவிடுமா? மலர்கள் நிறைந்த மரங்களைக் கண்ணால் பார்க்கும் வரை அவள் உயிரோடு இருந்து விடுவாளா?  எல்லா இடங்களிலும் சரக்கொன்றை பூத்துச் சொரிந்த இன்னொரு மே மாதமும், சத்தம் காட்டாமல் வந்து சென்றது.  பலவீனமான அந்தப் பெண்மணிக்கு ஒரு சிறிய ஆறுதல், அவளுடைய மரக்கன்றுகள் அந்த இடத்தில் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான்.  அவளுக்கு எப்போதும் விசுவாசமான நண்பனான பாபு – இப்போது அவனைப் பற்றி அவள் நினைப்பது அப்படித்தான் – அவளுக்குப் பொக்கிஷம் போன்ற அந்தச் செடிகளைப் பற்றிய செய்திகளோடு வேறு பல விஷயங்களையும் அவளிடம் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தான்.

எப்பொழுதாவது ஒரு முறை அந்தக் கன்றுகளைக் காண வேண்டுமென்று பாபுவிடம் அவள் சொல்வாள்.

‘‘சீக்கிரமே பார்த்திடலாம் மேடம்.  ஆனா இன்னிக்கு வேண்டாம்’’ என்பான் அவன்.  அந்திம காலத்தை நோக்கி அவளது ஆயுள் அவளை மிரட்டத் தொடங்கியிருந்தது.  சில நேரங்களில் அவள் வெறும் காளோடு, சால்வை கூடப் போர்த்திக் கொள்ளாமல் தோட்டத்தில் உலவுவதைக் குடும்பத்தார் பார்க்க நேரும்.  அந்தக் குளிர்காலத்தின்போது கடுமையான சளியால் பாதிக்கப்பட்ட அவள் தீவிரமாக நோய்வாய்ப்பட்டாள்.  இயல்பில் சற்று இலகுவான, வேடிக்கையாகப் பேசும் மனிதரான அவளது மருத்துவரும் கூட அவளுடைய அறைக்குப் போய்ப் பரிசோதனை செய்துவிட்டுத் திரும்பும்போது பதட்டமான சில அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியிருந்தார்.  அந்த நெருக்கடியான நேரத்தில் பாபு மட்டுமே அமைதியாகவும், சமநிலையோடும் இருந்து வந்தான்.  உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படும் குறுகிய நேரங்களில் அவளது அறைக்கதவருகே காவல் காத்துக் கொண்டிருக்கும் பாபு, அவர்கள் அதிக நேரம் அங்கே இல்லாமல் பார்த்துக்கொள்வான்.  உரக்கப் பேசுபவர்கள், எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பவர்கள் முதலிய உறவினர்கள் வரும் சமயங்களில் லெண்டினா தூங்குவதைப் போல பாவனை செய்து கொள்வாள்; அவர்களை மிக விரைவாக வெளியேற்ற பாபுவுக்கு அது சரியான காரணமாகிவிடும்.  பகல்பொழுதுகளில் பாபு சிறிது நேரம் எங்கோ சென்று மறைந்துவிடுவான்; திரும்பி வரும்போது நேராக லெண்டினாவின் அறைக்குத்தான் செல்வான்.  பூனையைப் போல சத்தம் காட்டாமல் அந்த அறைக்குள் அவன் காலடி எடுத்து வைத்ததும், அவள் கண்களும் கதவுப் பக்கமாகத் திரும்பும்.  அவர்களது பார்வைகள் சந்தித்ததும் அவன் மெள்ளத் தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறிவிடுவான்.  அவன் அந்த மரங்களை அப்போது போய்ப் பார்த்து வந்திருக்கிறான் என்பதற்கும், அவை நல்ல நிலையிலேதான் இருக்கின்றன என்பதற்குமான சங்கேதம் அது.  அவளுக்குத் தரப்படும் உணவும், மருந்துகளும் வேலை செய்யவில்லையென்றாலும் உயிர் வாழவேண்டுமென்ற விருப்பத்தை அதுவே அவளிடம் தக்க வைத்துக் கொண்டிருந்தது.

வீட்டிலுள்ள எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில், கொடுமையான அந்தக் குளிர்காலத்தைத்  தாக்குப் பிடித்துவிட்ட லெண்டினா, நல்ல வெளிச்சமான ஒரு பிப்ரவரி மாத காலை நேரத்தில் அவசரமாக மணியை அழுத்தினாள்.  பணிப்பெண் உடனே அறைக்குள் சென்றபோது லெண்டினா தன் ‘கவு’னையும், வீட்டில் அணியும் செருப்புக்களையும் தேடிக் கொண்டிருந்ததைக் கண்டாள்.  தேநீரை  அறைக்கு எடுத்து வரவா என்று கேட்டபோது, அதை வரவேற்பறைக்குக் கொண்டுவருமாறு பணித்தாள் லெண்டினா.  குளிர் காய்வதற்கான ‘கணப்பு’க் கருகே அமர்ந்து கொண்ட அவள், தன்னிடம் கொண்டுவரப்பட்ட சூடான தேநீரை மிடறு மிடறாக – ஏதோ அப்போதுதான் முதல் முறையாக அதை ருசிப்பதைப்போலச் சுவைத்தாள்.  அன்று முதல் வீட்டுக்குள் முன்போல நடமாடவும், வீட்டு நடவடிக்கைகளை எப்போதும் போல மேற்பார்வை செய்யவும் தொடங்கிவிட்டாள் அவள்.

தன்னைப் பார்க்க வந்த மருமகள்களிடம் இனிமையாக, பரிவோடு நடந்து கொண்டாள்; சில சமயங்களில்  மோதிரம், காதுத்தோடு, நெக்லஸ் என்று சில நகைகளைக் கூட அவர்களுக்குத் தந்தாள்.  அம்மாவிடம் அரும்பியிருக்கும் புதிய உற்சாகத்தைக் கண்ட அவளது மகன்களும் தங்கள் தொழில் தொடர்பாகவும், குடும்ப விஷயங்கள் சம்பந்தமாகவும் அவளிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்திருந்தனர்.  அவர்களது தந்தை உயிரோடு இருந்தவரை, அப்படி ஒன்று நடந்ததே இல்லை.  தங்கள் தாயின் மனநிலை எத்தனை சீராகவும், புத்தி கூர்மையோடும் இருக்கிறது என்பதை அவர்கள் வியப்போடு கண்டு மகிழ்ந்தார்கள்.  சில சமயங்களில் அவள் சொல்வது எப்படித் தங்கள் தந்தை சொல்வதைப் போலவே விசித்திரமாக இருக்கிறது என்பதையும் அவர்கள் கவனித்தார்கள்.  அவர்களுக்குள் இத்தனை நாளாக நிலவி வந்த இறுக்கம் குறைவதை வெளிப்படையாகப் பார்க்கமுடிந்தது.  லெண்டினா மட்டுமல்லாமல்  அந்தக் குடும்பம் முழுவதுமே – தேறிவருவதைப் போல் தோன்றியது.  உடல் நலம் சார்ந்ததை விடவும் மேலான….ஆரோக்கியமான ஒன்று அது.

லெண்டினாவின் உடல்நிலை தேறிய அதே ஆண்டில், புதிய கல்லறைத் தோட்டத்திலும் ஒன்று நடந்திருந்தது.  அதைப் பார்த்தவன் பாபு மட்டும்தான்; ஆனால் தன் மனதுக்குள்ளேயே அதை வைத்திருந்தான் அவன்.  லெண்டினாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கொன்றை மரங்களில் ஒன்று வாடிப்போய்ப் பட்டுப் போய்விட்டது.  இன்னொன்று பிழைத்துக் கொண்டது; தழைக்கவும் செய்தது.  அதிசயத்தில் அதிசயமாக ஒரு சில மஞ்சள் பூக்களோடு கூடிய மெல்லிய சிறிய கிளையும் அதிலிருந்து வளர்ந்தது.  சாலையிலிருந்து பார்த்தால் இது கண்ணுக்குத் தென்படாது; காரணம் இன்னும் கூட மரம் குட்டையாகத்தான் இருந்தது; பூக்களும் மிகமிகக் குறைவாகத்தான் இருந்தன.  ஆனால் அந்த இடத்துக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்த பாபு ஒரு மே மாத காலை வேளையில் வெட்கத்தோடு உள்ளடங்கிப் பூத்திருக்கும் அவற்றைக் கண்டு பிடித்து விட்டான்.  உடனே லெண்டினாவிடம் போய் அதைச் சொல்ல வேண்டும் என்ற தூண்டுதல் அவனுள் எழுந்தாலும், அதிகமாக உணர்ச்சிவசப்படுவது அவளுக்கு ஆபத்தாகப் போய்விடும் என்பதால் சொல்ல வேண்டாமென்று தீர்மானித்துக் கொண்டான்.  மேலும் நம்பியதைப்போல அந்த மரக்கன்று வளராமல் போய்விட்டால் அந்த ஏமாற்றம் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு பலவீனமாக இருந்த அவனது எஜமானியைப் பெரிதும் பாதித்துவிடலாம்.  அவன் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் பயத்தோடும் இருந்தான்.  தன் எஜமானியின் நீண்ட நாள் விருப்பமான கொன்றை பூப்பது நிறைவேறியதில் மகிழ்ச்சி.  அதே சமயம் அடுத்த மே மாதம் பூத்திருக்கும் கொன்றையில் கண்பதித்ததுமே இந்த உலகை விட்டுத் தான் நீங்கிப் போவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவள் முடிவு கட்டிக் கொண்டுவிடுவாள் என்பதையும் அவன் தன் உள்ளுணர்வால் அறிந்திருந்தான்.  தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது போன்ற பயங்கரமான விஷயங்களில் நிச்சயம் அவள் ஈடுபடமாட்டாளென்றாலும், எல்லாவற்றிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டபடி நிறைவான பெருமூச்சோடு வாழ்க்கையின் முன்பு அமைதியாக மண்டியிட்டு விடுவாள்.

ஆனால் எதிர்காலத்தைப் பற்றிய இத்தனை பயங்கள் இருந்தாலும் இயற்கையின் சக்தியைத் தடை செய்ய முடியாது என்பதும் பாபுவுக்குத் தெரியும்.  மே மாதம் ஒரு சிறிய அதிசயம்போல அந்த சரக்கொன்றை மரத்தை – முதன்முறையாக- கட்டாயம் பூக்க வைத்தான் போகிறது.  அடுத்த ஆண்டுக்குள் மரம் பெரிதாக வளர்ந்துவிடும்.  பூக்களும் கொத்துக் கொத்தாய் நிறையப் பூக்கும்.  புதிய கல்லறைத் தோட்டத்துக்குச் செல்லும் தனிமையான சாலை வழியே செல்லும் எல்லோருக்கும் அது கண்ணில் படும்.  தன் எஜமானியிடம் இதை அவன் சொல்லியே ஆகவேண்டும்.  ஆனால், எப்போது? பல நாள் இரவுகளில் அது பற்றி யோசித்துப் பார்த அவன், அடுத்த பருவகாலத்தில் அது பூக்கும்போது சொல்வதுதான் நல்லது என்று இறுதியில முடிவு செய்து கொண்டான்.  அந்த நல்ல செய்தியைத் தன் மூலம் கேட்கத் தன் எஜமானி அதுவரை உயிருடன் இருப்பாளென்றும் நம்பினான்.  இப்போது பாபுவைத் தன் நண்பனாக லெண்டினா நினைக்கத் தொடங்கியிருந்தது போல பாபுவும் அவளோடான தன் உறவைப் பற்றி வேறு வகையாக யோசித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

லெண்டினாவின் கணவர் உயிரோடு இருந்தவரை – அவள் அவனை அன்போடும் கண்ணியத்தோடும் நடத்திவந்திருந்தாலும் எஜமான்- பணியாளர் என்ற உறவுக்குப் பொருத்தமான ஒரு மெல்லிய இடைவெளியையே பேணி வந்தாள்.  ஆனால் அவனைச் சார்ந்திருப்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டதன் மூலம் படிப்படியாக அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியைத் தகர்த்துவிட்டாள் அவள்.  முதலில் ‘விசுவாசமான வேலை’யை மட்டும் அவனிடம் வாங்கிக் கொண்டாள்.  பிறகு அடுத்த நிலையில் நுட்பமான ஒரு நண்பனாக… , இறுதியில் தன் முழு நம்பிக்கைக்கும் உரியவனாக.  வெளிப்பார்வைக்கு அவரவர் அந்தஸ்துக்கேற்ற படிநிலைகள், நடைமுறை ஒழுங்குகள் மாறாமல் அப்படியேதான் இருந்தன.  ஆனால் வயதான அந்த டிரைவர் மீது லெண்டினா எவ்வளவு நம்பிக்கை வைத்துத் தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்கிறாள் என்பதை சீக்கிரமே எல்லோரும் வெளிப்படையாகப் புரிந்து கொண்டார்கள்.  இதில் வியப்பென்ன என்றால் அவளது மகன்களும், அவர்களது மனைவிகளும் கூட அதை ஏற்றுக்கொண்டுவிட்டதுதான்.  ஒரு வகையில் வயதாகி பலவீனமடைந்திருக்கும் தங்கள் தாய்க்கு ஆற்றவேண்டிய கடினமான கடமையிலிருந்து அது அவர்களை விடுவித்திருந்தது.  உறுதியான மன உரம் கொண்ட ஒரு பெண்மணியும், அவளது விசுவாசத்துக்குரிய பணியாளும் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட, வழக்கத்துக்கு மாறான – ஆனால் பொதுவான மனிதகுல பந்தத்தில் இவ்வாறு பிணைக்கப்பட்டு விட்டிருந்தார்கள்.

புத்தாண்டு பிறப்பதற்குள் முதுமையின் தளர்ச்சிக்குரிய அறிகுறிகள் லெண்டினாவிடம் தோன்றத் தொடங்கிவிட்டன.  குளிர்காலத்தின் எல்லா மாதங்களிலும் அவள் குடும்பத்தார் அவளைக் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.  அவளை ஒருபோதும் அவர்கள் தனியே விடவில்லை.  மார்ச் மாதம் தொடங்கிக் கோடைகாலம் ஆரம்பித்த உடன் காரில் வெளியே செல்ல விரும்பினாள் அவள்.  முதலில் அவளது விருப்பத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை காரில் வெளியே கூட்டிக் கொண்டு போகாவிட்டால் சாப்பிடப்போவதில்லை என்று அவள் பிடிவாதம் பிடித்த பிறகே அவளது வேண்டுகோளைக் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர்.  அதற்கென்று ஒழுங்கான ஒரு நடைமுறையும் வகுக்கப்பட்டது.  பருவ நிலை நன்றாக இருந்தால் வாரம் இரண்டு முறை பணிப்பெண்ணின் துணையோடு லெண்டினா காரில் வெளியே சென்று வரலாம்.  இந்த ஏற்பாட்டுக்கு லெண்டினா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  இப்படி வெளியில் சென்று திரும்பும் போதெல்லாம் மிகவும் சந்தோஷமான ஒரு நபராகத் திரும்பி வருவாள் அவள்.  நன்றாக சாப்பிடவும் ஆரம்பித்தாள்.  வெளிறிப்போன அவள் முகம், சற்று வண்ணம் பெறவும் ஆரம்பித்திருந்தது.  ஆனால் இந்தப் பயணங்களின் போதெல்லாம் அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மிகவும் அமைதியாக மட்டும் உட்கார்ந்திருப்பாள்.  தாங்கள் நகரத்தில் பார்த்த புதிய விஷயத்தைப் பற்றியோ, வித்தியாசமான ஏதாவது ஒன்றைப் பற்றியோ பாபுவோ, பணிப்பெண்ணோ பேச்செடுத்தாலும் அவள் அதற்கு எந்த வகையான பதிலும் சொல்லமாட்டாள்.  வீடு திரும்பிய பிறகு நேரே தன் அறைக்குச் சென்றுவிடுவாள்; இரவு உணவுக்கான நேரம் வரும் வரை அங்கேயே இருப்பாள்.

அடுத்த மே மாதம், விரைவில் தொடங்க இருந்தது; லெண்டினாவிடம் வெளிப்படையான ஒரு மாற்றம் தெரிவதை எல்லோருமே கவனித்தனர்.  அவள் இன்னும் அதிகமாக, அடிக்கடி வெளியில் போக ஆசைப்பட்டாள்.  ஆனால் டாக்டர் அதற்குத் தடை விதித்துவிட்டதால் வாரம் இரண்டுமுறை என்ற வழக்கமே தொடர்ந்து கொண்டிருந்தது.  அவள் அனுபவித்து வரும் வேதனையைக் கண்ட பாபு ஒரு நாள் அவளது அறைக்கதவருகே நின்றபடி அவளிடம் பேச அனுமதி கேட்டான்.  மரக்கன்றுகளைத் தான் மிகக் கவனமாகக் கண்காணித்து வருவதாகவும் இந்த ஆண்டின் பருவகாலத்தின்போது அவை பூத்துவிடுமென்று நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவளுக்கு உறுதியளித்தான்  போனவருடம் என்ன நடந்ததென்பதை அவன் இன்னும் அவளிடம் சொல்லியிருக்கவில்லை.  அவள் வீட்டில் இருக்க நேரும் நாட்களில் மரக்கன்றுகள் பற்றிய விவரத்தைத் தானே வந்து அவளிடம் சொல்லி விடுவதாகவும் அவன் அவளுக்கு வாக்களித்தான்.  ஆனால் இப்போதெல்லாம் வெளியே செல்ல நேரும் தருணங்களில் புதிய கல்லறைத் தோட்டத்தை ஒட்டியபடி காரில் செல்லவும், பூக்கும் அடையாளம் அந்தக் கொன்றை மரங்களில் தெரிகிறதா என்று பார்க்கவும் அவளே ஆசைப்பட்டாள்.  நகரத்திலிருந்த மற்ற மரங்கள் மஞ்சள் மலர்களை மாலையாகத் தொங்கவிட்டபடி அற்புதமாகப் பூத்திருப்பதும் அவள் கண்ணில் படாமல் இல்லை.  அவளது ஏமாற்றம் மிகவும் கூடுதலாகியது; ஒரு சில தடவை சென்று வந்த பிறகு அவள் வெளியே செல்லவே மறுத்துவிட்டாள்.

கடைசியில் மாதக்கடைசியில் ஒரு நாள் – தினசரி வழக்கப்படி கல்லறைத் தோட்டத்துக்குச் சென்ற பாபு, தாங்கள் இத்தனை காலமாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அற்புதம் நிகழ்ந்திருப்பதைக் கண்டான்.  சிறிய கொன்றை மரம் ஒன்று இளம் மஞ்சள்நிறத்தில் பூத்துக் குலுங்கியிருந்தது.  சந்தோஷக் கிளர்ச்சியுடன் ஆனந்தக்கூச்சலிட்ட அந்த டிரைவர், மகிழ்ச்சியான அந்தச் செய்தியைத் தன் எஜமானியிடம் தெரிவிப்பதற்காக அம்பு போல் விரைந்தான்.  அவளிடம் அந்தச் செய்தியை எப்படிச் சொல்லத் தொடங்குவது என்று வழிநெடுக ஒத்திகை பார்த்துக் கொண்டே போனான் அவன்.  எஜமானியம்மாள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிடாமல் இருக்க வேண்டுமானால் அவன் விஷயத்தை அமைதியாகத்தான் சொல்ல வேண்டும் என்று தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டான்.  வீட்டை அடைந்து, அவளது அறையை மெதுவாக நெருங்கி கதவை மென்மையாகத் தட்டியபோது ‘‘உள்ளே வா பாபு, நான் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று உள்ளேயிருந்து வந்த சுருக்கமான அந்த ஆணை அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  உள்ளே நுழைந்து  பேசத்தொடங்கியவனைச் சட்டென்று கத்தரிப்பதுபோல

‘‘நீ என்ன சொல்லப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும்! என் நாடி நரம்புகளிளே அதை நான் உணர்ந்துவிட்டேன்’’ என்றாள் அவள். ஏதோ மிகப்பெரிய விசேஷ நிகழ்ச்சிக்குப் போவது போல நன்றாக உடுத்திக் கொண்டிருந்தாள் லெண்டினா அருகில் அவளது பணிப்பெண்ணும் ஆயத்தமாக இருந்தாள்.  தன் கைத்தடி எங்கே என்று சற்றுத் தடுமாறிய அந்த முதியவள்

‘‘வாருங்கள் போகலாம், இப்படி எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?’’ என்று பொறுமையின்றிக் கத்தினாள்.

திகைத்துப் போயிருந்த டிரைவரும், இலேசாகக் குழம்பிப் போயிருந்த பணிப் பெண்ணும் முதியவளைத் தொடர்ந்தாரகள்.  அவளது நடையில் திடீரென்று வேகம் கூடினாற் போலிருந்தது.  வழக்கமாக அவர்கள் வெளியே கிளம்புவதைப் போலத்தான்  அன்றும் சென்றார்கள் என்றாலும் இன்று நேர்ந்திருக்கும் இந்தப் புதுமையின் உட்பொருளை லெண்டினாவும் பாபுவும் மட்டுமே அறிந்திருந்தார்கள்.  குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சேர்ந்ததும் லெண்டினா, துயரமான ஒரு மனநிலைக்கு ஆட்பட்டவள் போலத் தோன்றினாள்;  பாபுவும் அவ்வாறே, அத்தனை சிறிய மரத்தில் அவ்வளவு நிறைய பூங்கொத்துக்களைக் கண்ட பணிப்பெண் மட்டுமே வியப்பில் கூச்சலிட்டாள்.  வெகுநேரம் அந்தப் பூக்களையே உற்று நோக்கியபடி ஆழமாகப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த லெண்டினா, தன்னைப் பூங்கா வரை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.  நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த பூங்கா, மிக உயரமான ஓர் இடம்.  அங்கிருந்து நகரம் முழுவதையுமே பார்க்க முடியும்.  அது பொழுதுபோக்குவதற்குரிய இடமாக இருந்ததால் வாரக் கடைசியில் அங்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  அவர்கள் உச்சிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.  அது வாரத்தின் வேலைநாள் என்பதால் சுற்றுமுற்றும் அதிகம் பேர் இல்லை.  அமைதியான ஒரு மூலையைத் தேர்ந்து கொண்ட லெண்டினாவும், அவளது பணிப்பெண்ணும் ஓய்வெடுக்க வேண்டி அமர்ந்தனர்.  பிஸ்கட்டும் ஃபிளாஸ்கில் தேநீரும் எடுத்துவந்திருந்தாள்  பணிப்பெண்.  மூன்று பேருமாய் அவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.  அரை மணிநேரத்துக்குப் பிறகு காரில் வீட்டுக்குத் திரும்பினர்.  அறைக்குள் நுழைவதற்கு முன் பாபுவையும் பணிப்பெண்ணையும் திரும்பிப் பார்த்து அவர்களோடு கைகுலுக்கிய லெண்டினா,

‘‘உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்! கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’’ என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

அந்த வாரம் முழுவதும் பெரும்பாலான நேரம் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் லெண்டினா.  தொடர்ந்து வெளியே போவதில் ஆர்வம் காட்டாமல் அதை நிராகரித்துவிட்ட அவள், தன் அறையைச் சுத்தம் செய்வதிலேயே தன்னை முழுவதுமாய் ஆழ்த்திக் கொண்டாள்.  பணிப்பெண்ணின் உதவியும் கூட வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.  தனக்குத்தானே அவள் விதித்துக் கொண்ட அந்தத் தனிமைக் காலத்தில் ஐந்தாவது நாளன்று பணிப்பெண்ணை அழைத்துத் தான் குளிக்கவும், தனக்கு மிகவும் விருப்பமான உடையை உடுத்திக்கொள்ளவும் உதவுமாறு கேட்டுக்கொண்டாள்.  அது முடிந்ததும் தனக்குரிய எளிய இரவு உணவைச் சீக்கிரமே எடுத்து வருமாறு சொன்னாள்.  லெண்டினா சொன்னது போலவே எல்லாம் செய்து முடித்த பணிப்பெண், தன் இருப்பிடத்துக்குச் செல்லும் முன் அன்று சற்று சீக்கிரமாகவே இரவு வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றாள்.

மறுநாள், காலைத் தேநீரோடு அவள் லெண்டினாவின் அறைக் கதவைத் தட்டியபோது உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லை.  மறுமுறை தட்டியபோதும் மௌனமே அவளை வரவேற்றது.  அறைக்குள் சென்ற அவள், லெண்டினா படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டதும் ஆழ்ந்து உறங்குவதாகவே நினைத்துக் கொண்டாள்.  தேநீர்த் தட்டைப் பக்கத்து மேஜை மீது வைத்துவிட்டு

‘‘மேடம்! டீ எடுத்துவந்திருக்கிறேன்” என்று மென்மையாகச் சொன்னவள் வழக்கம்போலத் திரைச்சீலைகளையும் விலக்கினாள்.  படுக்கைக்கருகே வந்த பிறகு உடல் ஒரு மாதிரி விறைத்துப் போயிருப்பதையும் அந்த முதிய பெண்மணியின் முகம் வழக்கத்துக்கு மாறாகச் சோகை பிடித்தது போலிருந்ததையும் கவனித்தாள்.  உடனே கலவரமடைந்து போய் அறைக்கு வெளியே சென்று மகன்கள், மருமகள்கள் வேலைக்காரர்கள் என எல்லோரையும் அவசரமாகக் கூப்பிட்டாள்.  பாபுவைத் தவிர மற்ற அனைவரும் விரைந்து வர, அவன் மட்டும் ஒரு தூணின் அருகே நின்றபடி குழந்தையைப் போல அழுது கொண்டிருந்தான்.  வந்தவர்கள் அறைக்குள் நுழைந்தார்கள்.  மூத்த மகன், அம்மாவுக்கு மூச்சு வருகிறதா என்று குனிந்து பார்த்தான்.  பிறகு பெருமூச்சு விட்டுக்கொண்டே நிமிர்ந்தவன் தலையை அசைத்தான்.  டாக்டர் வந்து பார்த்துவிட்டு வீட்டின் எஜமானியாகிய லெண்டினா, தூக்கத்திலேயே காலமாகி விட்டதை உறுதிப்படுத்தினார்.

ஒரு எளிய கொன்றை மரம் வருடம் ஒரு முறை தன் தலை மீது பூக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நெஞ்சார்ந்த விருப்பத்தை மட்டுமே கொண்டிருந்த ஒரு சராசரிப் பெண்ணின் நாடகத்தனமில்லாத வாழ்க்கை அவ்வாறு முடிந்து போயிற்று.

ஒவ்வொரு மே மாதத்திலும் தூங்குமூஞ்சித்தனமாக அந்தச் சிறிய நகரத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில், அவளது சமாதிக்கு மேல் நட்டு வைத்த சரக்கொன்றை மரம் இளம் மஞ்சள் பூங்கொத்துக்களைப்  பூத்துச் சொரியும்போதும் வித்தியாசமான அந்த விருப்பம் நிறைவேறிக் கொண்டே இருந்தது.  விசாலமான அந்தக் கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி உங்கள் பார்வையைச் செலுத்தினால் அங்கே கல்லால் செதுக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லையென்பதை அறிந்துகொள்ள முடியும்.  அதற்கு மாறாக வெவ்வேறு பருவ காலங்களில் வெவ்வேறு விதமாகப் பூக்கும் பூச்செடிகளே அந்த இடம் முழுவதும் வேர்விட்டுத் தழைத்திருந்தன.. செம்பருத்தி, கார்டினியா, பாட்டில் பிரஷ், சமேலியா, ஓலியான், பல வகையான குரோட்டன்ஸ்கள் ஆகிய பூச்செடிகளோடு ஒன்றிரண்டு இடங்களில் ஜகரந்தா மரங்களும் கூடப் பிறவற்றோடு போட்டி போட்டு வளர்ந்து கொண்டிருந்தன.  ஒரே ஒரு வாழை மரமும், சில அசோக மரங்களும் மிகவும் தள்ளி ஓரமாக இருந்தன.  அவைகளுமே நன்றாகச் செழித்துக் கொண்டுதான் இருந்தன.  நீங்கள் மிகவும் கவனமாகப் பார்த்தால் அந்த முழு இடத்திலும் ஒரே ஒரு கொன்றை மரம் மட்டும் பிற செடி, கொடி மரங்களையெல்லாம் விட உயரமாக வளர்ந்திருப்பதையும், ஒவ்வொரு பருவ காலத்திலும் பூத்துச் சொரிவதையும் கண்டு வியப்படைவீர்கள்.  மரணத்தை வென்று தாங்கள் நிலையாக இருப்பதாக பொய்ப் பாசாங்கு காட்ட எண்ணும் மனித முயற்சிகளிலிருந்து விடுபட்ட அப்படி ஒரு சூழலில்!!

ஆம், ஒவ்வொரு மே மாதத்திலும் வித்தியாசமாய், விநோதமாய்!

***

முந்தைய ஆக்கங்கள்:

எழுத்தாளர் அறிமுகம்:

3 Replies to “என் தலைக்கான கொன்றை”

  1. சிரமம் பாராது இந்த நெடுங்கதையை நேர்த்தியாக தமிழாக்கம் செய்த உங்களுக்கு என் பாராட்டுகள். இது டெம்சுலா ஆவ் வின் மிகச் சிறந்த கதை எனக் கொண்டாடப் படுகிறது.

  2. சிறப்பான சிறுகதை எளிய மனிதர்களின் எளிய விருப்பங்கள் எப்போதும் நிறைவேறும் என்பதை தீர்க்கமாக கூறும் சிறுகதை..

    மொழிபெயர்ப்பு சிறப்பு..

    நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.