உருவன்று அருவன்று

பேய் அரசு செய்தால் … பாகம்-7

புதுமைகளைத் தேடுதல் மனித இயல்புதான். வழக்கமான பாதைகளைப் பற்றிய அறிவு ஆபத்துகளைக் குறைக்கும்; ஆனால், சலிப்பும், இயந்திரத்தன்மையும் வந்துவிடும். அதற்காக வேரைப் பிரிந்து காற்றிலே மிதந்து கொண்டே வாழ முடியுமா என்ற கேள்வியும் சிந்திக்கத் தக்கதே.

உண்மைகளை போலியாக்கலாம், போலிகளை உண்மைகளை விட மேம்பட்ட உண்மைகளாக்கலாம். இலக்கக் குறியீடுகள் கொண்டு, கலை படைப்புக்களை, அதன் அசல்தன்மையின் உறுதி மொழியாக வெளியிடும் இலக்கக் கலைச் சேவை (Digital Art), பெரும் மதிப்பு பெற்று முன்னேறி வருகிறது. அது ‘கலப்படம் செய்யவொண்ணா’ இலச்சினை ( NFT – Non fungible Tokens) எனப்படுகிறது- இலக்க வழி முறை பாதுகாப்பினுள், கலை உலாவுகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தென்படுகிறது. உலகப் புகழ் பெற்ற திரைக் கலைஞர்களான அமிதாப் பச்சன், கமலஹாசன் ஆகியோரின் ‘கலப்படமற்ற குறியீடுகள்’ (படத் தொகுப்புகள், காணொலிகள், அவரவரைப் பற்றிய சிந்தனைகள், போன்றவை) சந்தைப்படுத்தப்படுகின்றன. தொடரேட்டுப் பதிவேடுகளில்(Block Chain Ledgers) இவை பதியப்பட்டு ‘அசல்’ என்று உறுதி அளிக்கின்றன. உலகப் புகழ் பெற்ற ஓவியங்களின் நகல்கள், அசலைப் போலவே தோற்றமளித்து, அதை வரைந்தவரின் கலைத்தன்மையைப் போற்றும் விதமாக பல கோடி பணம் கொடுத்து வாங்கப்படுகின்றன; சில நேரங்களில் அவை போலியாக அமைந்தும் விடுகின்றன. மிகச் சமீபத்தில் டாவின்ஸியின் ஓவியம் என்ற ஒன்றை பல கோடிகள் கொடுத்து வாங்கிய கலாரசிகர் ஒருவர், அதை உண்மையில் வரைந்தது டாவின்ஸியிடம் பயில வந்த ஒரு பிரபலமாகாத இளம் மாணவர் என்று அறிந்ததும் கோடிகளை இழந்தார் (Salvator Mundi). இலக்கக் குறியீடுகள் இத்தகைய ஏமாற்றங்களைத் தவிர்க்கும் என அதன் ஆதரவாளர்கள் உற்சாகமடைகிறார்கள்.

கலைஞருக்கும், இரசிகனுக்கும் இடையே எந்த ஒரு மூன்றாம் அமைப்பும் நுழையாது. ஏல முறைப்படி இத்தகைய ‘இலக்கக் கலைகள்’ தங்களுக்குண்டான மதிப்பினையும், சந்தையையும் பெறுகின்றன. 

நேரலை நிகழ்ச்சிகளின் தாரகை, வீடடங்கு காலத்தில் வண்ண வண்ண கைப்பைகளை பளுவாக உபயோகித்து உடல் நலம் கற்பித்த ஆசிரியை, ஹில்டன் ஓட்டல்களின் உரிமையாளரின் பேத்தி, போன்ற பல தொப்பிகள் அணிந்துள்ள பாரிஸ் ஹில்டன் (Paris Hilton) இந்த இலக்கக் குறியீட்டு ஒவியங்களின் சந்தை முகமாக உருவெடுப்பார் என்று யார் எதிர்பார்த்திருக்கக்கூடும்?

Paris Hilton worked with the artist Blake Kathryn to create a digital tribute to her chihuahua Tinkerbell. Photograph: Paris Hilton/Blake Kathryn

ஜானதன் யோ (Jonathan Yeo) பல இடங்களில் வெளியான பாரிஸ் ஹில்டனின் கிளுகிளு’ ’உருவப் படங்களை இணைத்து ஒரு தொகுப்பைக் கொண்டு வரவும், 2018-ல் டேமியன் ஹெர்ஸ்ட்(Damien Hirst) அதை வாங்கிய வரலாறு இருக்கிறது. ஆயினும், ஹில்டன், என் எஃப் டியின் (NFT) முகமாக உருவெடுத்துள்ளார். கற்பனைக்கு எட்டாத அளவில் இலக்க நாணயங்கள் புழங்கும் வெளியான இது, வணிகத்தையும், கலையையும் வேறு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. மயாமி மாநகரில் நடைபெற்ற ‘பிட்காயின் மாநாட்டில்’ (Bitcoin Conference) அவர் உபயோகித்தது வைரங்கள் பொதியப்பட்ட தலையணி. அந்த கூட்டத்தின் தொடக்க விருந்தில் கலந்து கொள்ள மிக முக்கிய மனிதர்களுக்கான பதிவுத் தொகையே $25000 வரை இருந்தது என்பதிலிருந்து நாம் அந்த உலகின் ஆழ அகலங்களை வியக்கலாம். 

இலக்கக் குறியீடுகளைக் கொண்டு நாம் இலக்க ஓவியங்களை வாங்க முடியும். அவற்றை உங்கள் கணினியில் அல்லது திறன்பேசியில் வைத்துக் கொள்ளலாம். பெவர்லி குன்றிலிருக்கும் (Beverly Hills) அவரது மாளிகையில், ப்ளேக் கேத்ரீன் (Blake Kathryn) என்ற இலக்கக் கலைஞருடன் இணைந்து அவர் உருவாக்கியுள்ள திரைகளில் நீங்கள் NFTகளைக் காணலாம். அவரது செல்ல வளர்ப்புப் பிராணியான டிங்கர்பெல் என்ற சுவாவா வகை நாயும் (Tinkerbell- இப்போது உயிருடன் இல்லை) சுழல்தாங்கி அமைப்பில் சுழன்று உங்கள் கவனத்தைக் கவர்கிறது. மேகங்களிடையே மிதக்கும் கனவுக் கன்னியென ஒளிரும் சிஜிஐ பார்பியாகத்(CGI Barbie) தோன்றும் தனது உருவப்படத்தினை அவர் ‘இலக்க அரசியின் சின்னம்’(Iconic Crypto Queen) என்று சொல்கிறார். ஏப்ரலில் அதை $1மில்லியனுக்கும் மேலான தொகைக்கு விற்றிருக்கிறார்.

எதீரியம்(Ethereum) குழுமத்தினருடன் நட்பு கொண்டு அவர் 2016-லிலிருந்தே இலக்க நாணயங்களில் முதலீடு செய்து வந்துள்ளார். அந்தக் குழுமத்தின் இலக்க நாணயம் ‘ஈத்தர்’(Ether). அதிக அளவிலான NFT வணிகம் இதில் தான் நடை பெறுகிறது. ஹில்டனிடம் 150க்கும் மேற்பட்ட NFTக்கள் உள்ளன. சிடுசிடுக்கும் கலைக் காவலர்களின் கரங்களை மீறி கலைக் காதலர்களிடம் கலையைக் கொண்டு செல்லும் ஒரு அற்புத வழியாக NFT இருக்கிறது என்று சொல்லும் ஆதரவாளர்கள், 19-ம் நூற்றாண்டில், இம்ப்ரசனிசத்தை (Impressionism) அலட்சியப்படுத்திய ப்ரெஞ்ச் கலை ஆர்வலர்கள் போல, இன்று இலக்கக் கலையை, அதன் மேன்மையும், தேவையும் அறியாதவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பின்னணியில் ஹில்டனின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளப் பார்க்கலாம். ஆடம்பரமான ஒப்பனைகளுடன், அதி ஜொலிப்புள்ள நகைகளுடன், பணம் சம்பாதிப்பதில் அதிகத் தீவிரத்துடன் இயங்கும் இவரைப் போன்ற ஒருவரை மரபான கலைக் கூடங்கள் ஏற்பதில் தடைகள் உண்டல்லவா?

எனினும், செல்வம், கலையைத் தன் ஏகபோக உரிமையாகக் கொள்ளும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. ‘கவலை ஏதுமில்லை, இரசிக்குது மேட்டுக்குடி’ என்று ஒரு திரைப் பாடலில் வரும். மேட்டுக்குடிக்கு கவலை இல்லை என்பதே சிரிப்பிற்குரியதுதான். சரிந்து விடக் கூடாது என்ற கவலையே பெருங்கவலை அல்லவா? NFT என்பது, போலந்து நாட்டுக் கலை விமர்சகர் வால்டெமர் யானுஷ்சாக் (Waldemar Januszczak), கலைஞர் டேவிட் ஹாக்னி (David Hockney) ஆகியோரைப் பொருத்த வரை ஒழுக்கமற்ற, சூழலைப் பற்றி அக்கறையற்ற, கலைப்படைப்பு எனக் கருதத் தகாத ஓவியங்களை, சந்தைப் படுத்தும் பணப்பிசாசுகளின் கூடாரமாகும்.

ஆனால், ‘கலப்படமான ஒன்று’ (fungible token) என்று சொல்வது எதை? NFT என்பது இலக்க நுகர்வோர்களுக்கு வரமா, சாபமா? இன்னொன்றும் கவனிக்க வேண்டும்- கலை என்பது யாருக்காக? அது பணம் குவிக்கும் வழியா, அக உணர்வின் அழகியலா? பல பிரபலங்கள் (ஸ்னூப் டாக்-Snoop Dogg லின்ட்ஸே லோகன்-Lindsay Lohan ஜான் க்ளீஸ்- John Cleese) இலக்க ஓவியங்களை, அறிமுகப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். 2021-ம் ஆண்டின் முற்பகுதியில் NFT விற்பனை $2 பில்லியனைத் தாண்டியது. இதனால் கவரப்பட்ட ‘கிறிஸ்டி’ (Christie), ‘சதபி’(Sotheby) ஆகிய பெயர் பெற்ற நிறுவனங்கள் NFT யை சந்தைப்படுத்தினார்கள். ஆயினும், அவர்களுக்கு வரவு அதிகரிக்கவில்லை- அவர்களின் வணிக மாதிரியில், கலைக் கூடங்கள், ஏல நிறுவனங்கள் ஈட்டிய முந்தைய அளவிலான இலாபம் இப்போது கிட்டவில்லை. கலைப்படைப்பாளர்களும், கலைப் பொருள் வாங்குவோரும் நேரடியாகவே இந்த வர்த்தகத்தில் ஈடுபட முடிவதுதான் காரணம்,

ஏலமிடுபவர் ஒருவரை வரைந்து அதைச் படச் சட்டகங்களில் பொதிந்து, ‘முட்டாள்கள்’ எனத் தலைப்பிட்டு ‘இந்தக் கசடையும் வாங்கும் அறிவிலிகளாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்கள். இது பேங்க்ஸி (Banksy) வரைந்த ஒன்று. ‘இஞ்செக்டிவ் புரோடொகால்’ (Injective Protocol) என்ற இணைய இலக்கக் குழுமம் இந்த ஓவியத்தை $95000 கொடுத்து மார்ச் மாதத்தில் வாங்கினார்கள். அதை இலக்க ஓவியமாக பின்னர் மாற்றி, $3,80,000 க்கு விற்று விட்டு வரையப்பட்ட மூலத்தை எரித்தார்கள். இது, சந்தைப் படுத்தும் உபாயம், கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கை, விவாதங்களைத் தூண்டி இலாபத்தையும் சம்பாதித்த ஒன்று. ஆனால் அது குறிப்பிட்டது ஆணித்தரமானது- வரைந்த ஓவியங்களைப் பின்தள்ளி இலக்கக் கலை படைப்பின் காலம் மலர்கிறது, அதன் மேன்மையினால் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இந்நிகழ்வின் செய்தி.

சுருக்கமாக சொல்லப் போனால் NFT என்பது உரிமையாளரின் இலக்கச் சான்றிதழ்; அதில் இலக்கப் பொருளாக உள்ள ஜெபெக் படக்கோப்புகள்,(jpeg images) காணொலிகள், பாடல்கள் இணைந்து விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலும் இணைய இலக்க நாணயங்களிலேயே வர்த்தகம் இதில் நடைபெறுகிறது. கலை வர்த்தகத்தில் இது ஒரு திருப்பு முனை. தன் ‘க்ரிப்டோ அரசி’யை விற்ற பிறகும் கூட ஹில்டனால் அதைத் தன் மாளிகையில் காட்சிப் படுத்த முடிகிறது என்பது NFT டியின் கவர்ச்சி. எளிமையான ‘கூகுள் தேடல்’ மூலம் விரும்புபவர்கள் குறிப்பிட்ட NFT தொடர்பான கோப்புகளை தங்கள் திறன்பேசி அல்லது கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; ஆனால், உரிமையாளர் தான் விற்க முடியும். ஒவ்வொரு NFTயும் தனித்தன்மை வாய்ந்தது. இலக்க நாணயங்களின் போக்குவரத்திற்காக 2018-ல் உருவாக்கப்பட்ட தொடரேட்டின் தகவல்தளத்தின் மூலம் அனைத்துப் பரிமாற்றங்களும் நடைபெறுகிறது.

இடைத் தரகர்கள் இல்லாத வணிகம் என்று இதைச் சொல்லலாம். கலையரங்கங்கள், கலை ஏலங்கள், அதற்கான கட்டமைப்புகள், அவரவர் செயல்களுக்கேற்ற தரகுகள் போன்றவை பல கலைக்கூடங்களின் வணிக முறையாக இருந்தது. ஆனால், NFTயில் கலைஞருக்கும், இரசிகருக்கும் இடையே இவையேதும் தேவையில்லை. இதற்கென அமைக்கப்பட்டுள்ள நிகழ்நிலை ஏல தளத்தின் மூலம் வாங்குவதும், விற்பதும் சுலபமாகிறது. மேலும் சமகால கலை உலக விற்பனையில் ‘வாங்குபவரைப்’ பற்றிய பரிசோதனைகள் உண்டு- இது, அவர் ஊகத்தின் அடிப்படையில் விலைகளை ஏற்றி உடனடியாக அதிக இலாபத்தில் விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. NFTயில் இத்தகைய சோதனைகளில்லை. மிகப் புகழ் பெற்ற கலையரங்கங்களில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் ஓவியங்களின் விலை மர்மமாக இருக்கையில், NFTயில் அவை பொதுவில் காணக்கிடைக்கின்றன. மேலும் NFT மறுவிற்பனை செய்யப்படும்போது அதை உருவாக்கியவருக்கு ‘ராயல்டி’ (உரிமைத் தொகை) கிடைக்கிறது- பெரும்பான்மையான கலைஞர்கள் இன்றைய கலைவிற்பனை முறையில், மறுவிற்பனையில் தங்களுக்குச் சேர வேண்டிய ‘ராயல்டி’ கிடைப்பதில்லை என்ற மன வருத்தத்தில் இருக்கையில் என் எஃப் டி ஒரு ஆறுதலாக அல்லவோ உருவாகியிருக்கிறது? (இந்தியாவில் முதல் விற்பனைக்கான உரிமைத் தொகையே வருவதில்லை எனப் பலர் ஏங்குகின்றனர்!)

அனைத்தும் வெளிப்படையாக உள்ள ஒரு  கலைக்கான வணிக அமைப்பு என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? இங்கேதான் ‘தமாஷ்’ வருகிறது. எந்த ஒரு இலக்கப் பொருளையும் ‘கலை’ என்ற பெயரில் சந்தைப்படுத்தும் அபாயம் உண்மைக் கலையையே நசுக்கிவிடுமல்லவா?

Beeple’s Everydays: The First 5000 Days, sold for $69.3m at Christie’s in March 2021.

மார்ச் மாதம் கிரிஸ்டி நடத்திய ஒரு ஏலத்தில் 40 வயதான மைக் விங்கெல்மேனின் (Mike Winkelmann- பீபிள் என்று அழைக்கப்படுபவர்) முந்தைய ஒவியங்களின் படத் தொகுப்பு $69.3 மில்லயனுக்கு விற்பனை ஆனது[1]. பின்னர் கேட் மாஸ் (Kate Moss) தன் இலக்கவரைபடத்தை $17000க்கு விற்றார். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்ஸி (Jack Dorsy) முதல் சிறுகுருவிச் செய்தியை $2.9 மில்லியனுக்கு விற்றார். ப்ரூக்ளின் பட இயக்குனர் ஒருவர் தன் பிதற்றல்களை, கேட்கும் கோப்பாக $85க்கு விற்றார். (கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?) போரிஸ் ஜான்சன் (Boris Johnson) சொன்னது அரசின் தவறான செயல்பாடுகளின் சாட்சியம் என்றும், அதை NFTயாக வெளியிடுவேனென்றும் டாமினிக் கம்மிங்க்ஸ் (Dominic Cummings) மிரட்டியிருக்கிறார்! 

சந்தை என்னவோ அனாவசியமாகப் பெருத்து வருகிறது. விக்னேஷ் சுந்தரேசன் (தொடரேட்டுத் தொழில் முனைபவர்- பீபிளின் NFTஐ $69 மில்லியன் கொடுத்து வாங்கியவர்) போன்றவர்கள் இதன் உச்சத்தில் இருக்கிறார்கள். தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் விருப்பமுள்ளவர்கள் சிற்றளவில் இதில் ஒரு சில NFTகளை வாங்குகிறார்கள். இந்நிலையில் குமிழ் உடைந்தது; மே மாதம் NFTயின் தினசரி விற்பனை 60% சரிந்தது. இலக்கக் கலையின் பெருமையும் அது சுற்றுச் சூழலை பெருமளவில் பாதிப்பதால் வீழ்ந்தது. (ஐஸ்லேன்டில் உபயோகிக்கப்படும் மின்சக்தி அளவில் எதீரியமும் மின்சக்தியை உட்கொள்கிறது.)

இருப்பினும், உருவாய் உள்ள ஒன்றை அருவ உருவாக மாற்றி, வணிகக் கலையரங்கங்களுக்கு சவால் விடுக்கும், NFTகள் நல்ல எதிர்காலத்தைக் கண்டடையும் என்று அதன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். “$100க்கும் மேலான பல்வேறு கலைப் படைப்புகள் இருக்கின்றன; சிந்திக்கையில் கித்தான்களும், வண்ணங்களும் தான்” என்று ஹில்டன் சொல்கிறார்.

Kevin McCoy’s Quantum, the first NFT ever minted.

கேவின் மெக்கோய் (Kevin Mccoy) என்பவர் 2014லில் முதல் NFTஐ உருவாக்கியிருந்த போதிலும், இணையத்தின் எழில் தேவதையான ‘பூனைகள்’ NFTயாக உலா வரத் தொடங்கிய 2017 முதல் இவைகள் கவனத்தைக் கவர்ந்தன. இந்த ‘கிரிப்டோபூனைகள்’ இலட்சக்கணக்கில் விலை போயின. 2020-ல் இலக்க நாணய சந்தையின் அபரிமித வளர்ச்சி, நாம் பெருந்தொற்றால் வீடடங்கிய காலம், திரைகளைப் பார்த்துக் கொண்டே நாம் சோம்பி பொழுதைக் கழித்தது போன்றவை என் எஃப் டி சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. சிறிய அளவில் இதில் முன்னரே ஈடுபட்டிருந்த சில படைப்பாளர்களின் களம் வளர்ந்தது.

நீங்கள் கேள்விப்பட்டிராத ட்ரெவர் ஜோன்ஸ் (Trevor Jones) அத்தகையோரில் ஒருவர். 51 வயதாகும், எடின்பர்க்கில் வசிக்கும் அவர் NFTயில் ஒரு வெற்றியாளர். தன்னுடைய செலவினங்களுக்குக் கடன் வாங்கி சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர், NFT மூலம் ஒரே நாளில் $4 மில்லியன் சம்பாதித்திருக்கிறார். பிறரது புகழ் பெற்ற படைப்புகளில், இலக்கத் தொழில் நுட்பத்தையும், வண்ணங்களையும் இணைத்து அவற்றிற்கு இலக்கவர்ணம் பூசுவதில் அவர் கைதேர்ந்தவர்.

2012-ல் தன் கித்தான் ஓவியங்களில் ஊடுறுவும் குறியீடுகளை மான்ட்ரியனை ஒத்த வண்ணங்களால் வரைந்து அவர் காட்சிப்படுத்தியதில், நிகழ்நிலை கலை அரங்கத்திற்கு அது கலைரசிகர்களை அழைத்துச் சென்றது. மேலும் தத்தமது படைப்புகளை எவரும் அதில் பகிர முடியும் என்பதும் அதன் மாட்சிமைக்கு வழிகோலியது. அன்று கலைவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை வரவேற்கவில்ல என்ற போதிலும், இந்தமுறையை விரும்புவர்களும் இருந்தார்கள். 2019-ல் இயங்குபடம் (Animation) செய்பவர்களுடன் இணைந்து தன் படைப்புகளை சிறிய காணொலிகளாக்கி அவற்றை NFTகளாக விற்றார். பெர்னினியின்(Bernini) பரோக் (காலத்தின்) முக்கியப் படைப்பான புனித தெரசாவின் பரவசத்தை ‘பிட்காயின் தேவதை’ என்ற பெயரில் NFTயாகச் செய்து அதை $3 மில்லியனுக்கும் மேலான தொகைக்கு 2020-ல், ‘நிஃப்டி கேட்வே’ (Nifty Gateway) என்ற, NFT ஏலங்களுக்கான நிகழ்நிலை வலைத்தளம் மூலம் விற்றார். NFTகளுக்கான ஏல வலைத்தளங்கள் பல உள்ளன; அவற்றில் NFTக்கள் பெருகியும் வருகின்றன. ஜோன்ஸினுடைய அனைத்துப் பண பரிவர்த்தனைகளும் இலக்க நாணயங்களில் தான். பெர்னினியின் சலவைக்கல் சிற்பத்தில் தேவதை, ஒரு கன்யாஸ்திரீயின் மார்பில் சிறு ஈட்டியால் குத்துவதில் அந்தப் பெண் தெய்வீகப் பரவசத்தை அடைகிறாள்; ஜோன்ஸின் ஓவியத்தில், அவள் பிட்காயின் மழை பொழிகிறாள். 2020ல் இவர் வரைந்த ‘பிட்காயின் புல்’-(Bitcoin Bull) பிக்காஸோ வரைந்த ஒரு ஓவியத் தூண்டுதலில் எழுந்த ஒரு எருது- பிட்காயின் இலச்சினைகளும், சிறுகுருவிப் பறவைகளும் அதை அலங்கரிக்க, முக்கிய ‘க்ரிப்டோ’ சேகரிப்பாளரான பாப்லோ ரொட்ரீகஸ் ப்ரயலே (Pablo Rodriguez-Fraile) அதை $55,555.55 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

ஜோன்ஸின் வாழ்க்கை ‘தரையில் படுத்திருந்தவன் காலையில், கட்டில் மெத்தையிலிருந்து கண் விழித்தது போல’ ஒன்று. அவர் மேற்கு கனடாவில் வாழ்ந்த முரடான இடம், அவருக்கு 25 வயதாகையில் அவர் நண்பர் ஒருவர் குடிச்சண்டையில் கொல்லப்பட்டது, பின்னர் அவர் எடின்பர்க் வந்தது, அங்கே முதலில் பணியாளாகவும், பின்னர் நிர்வாகியாகவும் ஹார்ட் ராக் கேஃபேயில் (Hard Rock Café) பணி புரிந்தது, தன் பெண் நண்பரைப் பிரிந்தது, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள், தன் 30வது வயதில் லீத் கலைப் பள்ளியில் (Leith School of Art) கலஞருக்கான அடிப்படை வகுப்பில் பயின்று பின்னர் எடின்பர்க் பல்கலையில் பட்டப்படிப்பு பெற்றது, கால மாறுதல்களைக் கவனத்தில் கொண்டு தொழில் நுட்பத்துடன் கை கோர்த்தது அனைத்துமே நிகழ்வுகளால் அமைக்கப்பட்ட வாழ்வினைச் சுட்டுகிறது. அடிப்படையாக உள்ள ஒன்று என்னவென்றால், மன உளைச்சலிலிருந்து மீள அவர் தன்னை ஒரு கலைஞராக உணர்ந்ததுதான். 

NFTவலைத் தளங்களில் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பல முயற்சிகள்- அப்பங்கள் நாய்களாகின்றன, இலான் மஸ்கைக் கலாய்க்கும் மனப்பிறழ்வுப் படங்கள், நிர்வாணமாக உலா வரும் கவர்ச்சிகள். தேவை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாங்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுவதுதானே விளம்பரத்தின் நோக்கம்! கலை விமர்சகர் டீன் கிஸ்ஸெஸ்,(Dean Kissick) ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த NFTஉலகை ‘இளைஞர்களின் பரவசம்’ என்று சொல்கிறார். கவனக் கலைப்பு(!) செய்யும் நிஃப்டி கேட்வே, ஆர்வலர்கள், பொழுதுபோக்கிற்காக இதில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் தளம் அமைத்துக்  கொடுக்கிறது. அவரவருக்கும் தங்கள் கைவினைகள், திறன்கள் பற்றிய பெருமிதங்களைக் காட்டும் வாய்ப்பு இதிலிருக்கையில், செடிகள் இருக்கும் தொட்டிகளைத் தொங்கும் கயிற்றோடு பிணைத்து முடிச்சிட வருவார்களா என்ன?

ஜோன்ஸ் போன்றவர்களுக்கு, கொட்டும் பணத்தினை எண்ணவே நேரம் போதவில்லை; வழமையான கலை உலக வர்த்தகமோ சரிவை கடந்த வருடம் சந்தித்தது. கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்பவர்களால், இந்தத் தீநுண்மி காலத்தில் நிகழ் நிலையில் வாடிக்கையாளர்களைக் கவரமுடியவில்லை. இதன் விளைவாக உலகக் கலைப் பொருள் வர்த்தகம் 22% குறைந்தது. ஆனால், க்ரிப்டோ வர்த்தகம் ஏறுமுகம் கண்டது. கிரிஸ்டி, ந்யூயார்க்கில், உள்ள சிறந்த விற்பன்னர் நோவா டேவிஸ் (Noah Davis) “இன்றைய கலை உலகிற்கு எதிராகத் தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது; காட்சியரங்கம் தேவையற்ற கலை இது” என்று சொல்கிறார்.

Eardley, one of the QR code painting that helped make Trevor Jones the UK’s most successful NFT artist. Photograph: courtesy of Trevor Jones

புகழ்வாய்ந்த ஏலக் குழுமத்தின் மூலம் ‘பீபிளின்’ NFTஐ $69 மில்லியனுக்கு விற்பனை செய்ய உதவியவர் டேவிஸ்தான். தன்னுடைய செயலின் தாக்கம் முக்கியமானது என்றும், கிரிஸ்டியின் பார்வையாளர்களுக்கும், உலகிற்கும் NFTஐ அறிமுகம் செய்தவர் தானென்றும் அவர் சொல்கிறார். மார்ச்சில் இரு வாரங்கள் நீடித்த நிகழ்நிலை ஏலத்தில் அது விற்பனையானது. பலர் இலக்க முறையில் ஏலம் கேட்டதினால் $100-ல் தொடங்கிய ஏலம், ஒரு மணி நேரத்தில் $1 மில்லியனாக ஆனது. “இதைப் போன்ற ஒன்று கவனத்தைக் கவர்வது. பலர் பங்கேற்கும் ஏலத்தில் உடனடியாக நிகழ்நிலையில் இறுதி முடிவினை அடையமுடியாது. சிறிது சிறிதாக அதிகரித்து வரும்.”

NFTயின் செல்வாக்கினைத் தொடர்ந்து கிரிஸ்டியும் அதில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஒன்பது படத்துணுக்குகள் கொண்ட, பிரபலமான, முதல் NFT என்று கருதப்படும் ‘க்ரிப்டோபங்க்ஸ்’ (Kryptopunks) கேலிச் சித்திரத்தை மேயில் $16.9 மில்லியனுக்கு விற்றிருக்கிறது. நவீனக் கலைச் சந்தையையும், க்ரிப்டோவையும் இணக்கும் முயற்சியில் கிரிஸ்டி ஈடுபட்டுள்ளது. இவ்வருட வசந்தத்தில் யேண்டி வார்ஹால் (Andy Warhol) அவருடைய அமிகா கணினியில் 1980-ல் வரைந்து ஃபிளாப்பி தகடுகளில் சேமிக்கப்பட்டிருந்த பூ, பழம், கேம்ப்பெல் சூப் போன்றவைகளை இலக்கக் கலையாக மாற்றி $1 மில்லியனுக்கும் மேலாக விற்றிருக்கிறது.

வணிகக் கலையரங்கங்கள், தங்கள் வழமைகளை அசைக்கும் இந்தத் தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் மனத்தடைகள் கொண்டுள்ளன. ஆயினும், திரை மறைவில் ஜோன்ஸை அணுகும் முயற்சிகளையும் செய்கிறார்கள். “ஒரு வணிகக் காட்சியரங்கம் எனக்கென்ன செய்யும்? முன்னர் நானும் காட்சிப்படுத்தினேன். ஒரு வருடம் வண்ணச் சித்திரங்களைத் தீட்டி, அவற்றிற்கு சட்டகமிட்டு, அதை அரங்கத்திற்கு எடுத்துச் சென்று, என் படைப்புகள் விற்பனை ஆனாலும், ஆகாவிட்டாலும் அவர்களுக்கு 45-55% தரகு கொடுத்து.. இத்தனைக்குப் பிறகும் அவர்கள் ஒரு மாதம், ஒன்றரை மாதம், இரு மாதங்களுக்குப் பிறகு எனக்குச் சேரவேண்டியதைத் தருவார்கள்.(அப்போதாவது தந்து விடுகிறார்களே,  ஹூம்… எங்களுக்கெல்லாம்- பெருமூச்சில் இந்தியன்) ஆனால், இப்போதோ, நான் விற்ற மூன்றாம் நிமிடம் என் இலக்கக் கணக்கில் பணம் வந்து விடுகிறது” என்று சொல்கிறார் அவர்.

வணிக மாதிரிகளின் வித்தியாசத்தையும் தாண்டிய ஆழமான ஒன்று இவ்விரு கலை உலகங்களிடையே இருக்கிறது. கலை விமர்சகரான வால்டெமர் இனெச்சஸ் சொல்கிறார்: “ரெம்ப்ராண்டின் முன்னையும், முதுகையும் சில க்ரிப்டோ கோடீஸ்வரர்களால் தான் சொல்லவே முடியும்.” ந்யூயார்க் டைம்ஸ் பேட்டியில் கலைப் பொருட்கள் சேகரிப்பாளரான பிட்ரோ பர்போஸா (Pedro Barbosa) “NFTயில் எந்தவித சவால்களும் கிடையாது. அதன்பின்னே இருக்கும் கருத்தே வழித்தோன்றிய ஒன்றுதான்; முன்னரே ஜோசப் ஆல்பர்ட்ஸ்,(Josef Alberts) லேட்லோ மஹோலி நாகே, (Laszlo Moholy-Nagy) மார்செல் டி ஷாம் (Marcel Duchamp) ஆகியோர் செய்ததுதான்.” “வஞ்சக மோசடியாளர்கள் – பொருட்படுத்தத் தகாதவைகள்” என்று சாடும் டேவிட் ஹாக்னி, இதை ஆரத் தழுவி இலக்கத் தொழில் நுட்பத்தில் சம்பாதிப்பவர்தான். அவர் 2009லிருந்தே ஐஃபோன், ஐ பேட் சித்திரங்களை இலக்கத்தில் சமைத்துப் பரிமாறி கோடிகளைப் பார்த்து வருகிறார்!

க்ரிப்டோவை அதிகமாக நேசிப்பவர்கள், அதற்கு உண்மையாக இருப்பவர்கள், ஹில்டனைப் போல, தங்களுக்கு எதிர்கருத்து கொண்டுள்ளவர்களை “மரபுக் கலை உலகம்” என்ற அடைமொழியில் குறிப்பிடுகிறார்கள்.

Jones’s Bitcoin Angel, inspired by Bernini, sold for the equivalent of more than $3m in 2020. Photograph: courtesy of Trevor Jones

NFT கலைஞர்களில் ஜோன்ஸ் வித்தியாசமானவர். சில தருணங்களில், வாய்ப்புகள் கிடைக்கையில் NFTயையும், அது எதைச் சார்ந்து உருவெடுத்திருக்கிறதோ அதன் மூலத்தையும் விற்றுவிடுகிறார். இந்த இரட்டை விற்பனையைக் கவனத்துடன் செய்ய வேண்டும். NFTயின் விலை, அதன் வரை ஓவியத்தின் விலையைவிட அதிகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் க்ரிப்டோ கும்பலின் கோபத்திற்கு இலக்காக நேரிடும். தன்னுடைய ‘பிட்காயின் புல்லை’ ரெட்ஜியசிற்கு விற்ற அவர், இரண்டாம் ஏலக்காரருக்கு அதன் முதல் வரை ஓவியத்தை $555.55 குறைவாக விற்றார்.

பெரும் பணம் செய்வதிலும், தலைப்புச் செய்திகளாக வலம் வருவதிலும் சூரர்களான சிலர் இந்த NFTசந்தையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். டேமியன் ஹெர்ஸ்ட் இந்த ஜூலையில் ‘கரன்ஸி’ என்ற ஒரு செயல் திட்டத்தை அறிவித்தார். தனித்துவமான காட்சித் தொடர்புடைய வண்ணங்கள்-10000 NFTகள்- ஒவ்வொன்றும் $2000 விலையில். இதில் ஒரு தந்திரம் செய்தார்-வரை ஓவியமோ, அல்லது NFTயோ இரண்டில் ஒன்று கலை ஆர்வலர் இரு மாதங்களில் தீர்மானிக்க வேண்டும். அதன்படி ஒன்று எரிக்கப்பட்டு மற்ற ஒன்று மட்டும் இருக்கும், இது எதிர்காலத்தில் எதன் மதிப்பு (வரை ஓவியமா, NFTயா) கூடும் என்ற சூதில், வாங்குபவரைத் தள்ளும்.

NFTகும் நிதிக்கும் இடையே நிலவும் பிணைப்பு கலை அறிஞர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கலை வணிகம் என்பது பணக்காரர்களின் பொழுது போக்காக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. கலைவரலாறு, பணம் படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்களைத் தான் அனேகமாகக் காட்சிப்படுத்துகிறது. கலைஞர்கள் அதைச் செய்ய பணிக்கப்படுகிறார்கள்/தூண்டப்படுகிறார்கள். டாம் வுல்ஃப் (Tom Wolfe) இதை கலைக்கும் செல்வத்திற்கும் உள்ள உறவு என்றே சொல்கிறார். செல்வந்தர்கள் ஆதரவில், அவர்களை நல்லவர்களாக, துரோகிகளாக (எதிர் கட்சிக்காக) படைக்கும் செயல் நடைபெறுகையில் வேறொன்றை எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆனால், NFTயின் வரவிற்குப்பின் கலைப் படைப்பு என்பது சொத்து என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டது. நிர்வகிக்கப்பட்ட அரங்குகளின் இடத்தை இணைய ஏலக் குழுமங்கள் கைபற்றிவிட்டன. கலையின் அழகியலில் சந்தைக் குறியீடுகள் கசிகின்றன. கருத்தைவிட, விலை, பெருமையான இடத்தைப் பெற்றுள்ளது.

‘அனைவருக்கும் கலை’ என்பது மறைந்து, NFT இலாபத்தை இலக்காக்கிப் பயணிக்கிறது. புதிய தொழில் நுட்பத்தை விளம்பரப்படுத்தும் வாகனமாக கலை கருதப்படும் அபாயமும் இருக்கிறது. “நவ நாகரீக பொருட்கள், வாசனாதி திரவியங்கள் போன்ற பலதை நான் விளம்பரப்படுத்தியிருக்கிறேன்; என் இரசிகர்களுக்கு என் ஒரு பகுதி NFTயாக போய்ச் சேர்கிறது.” என்று சொல்கிறார் ஹில்டன்.

மிக விலையுயர்ந்த ஸ்காட்ச் விஸ்கியை மெக்கேலன் (Macallan) குழுமம் ஜோன்ஸுடைய புதிய NFTயுடன் சந்தைப்படுத்துவதிலிருந்து நாம் தெளிவாகப் பரிந்து கொள்ளலாமே?

NFT, மரபு முறை கலை வர்த்தகத்தைப் பாதித்தாலும் முக்கியமான ஒரு சிந்தனைக்கு அடிகோலியிருக்கிறது. கலை எதற்காக, யாருக்காக, அதலிருந்து நாம் பெறுவது என்ன, நாம் என்ன எதிர்பார்க்கிறோம், கலைகளை அணுகும் விதம் என்ன, அதன் விற்பனை எப்படி நடைபெற வேண்டும், அதன் மதிப்பை நிர்ணயிப்பது யார், எந்த அளவுகோளில், எதுவுமே இலக்கத் தொழில் நுட்ப தயவில், கலை என்ற பெருமையைப் பெற்றுவிடலாமா… முக்கியமான ஒன்று கலைச் சேகரங்கள் சொத்துக்களாகுமா? ஒருக்கால் அப்படி இல்லாமலுமிருக்கலாம்- ஆயின் நாம் நிதிகளை அழுகுபடுத்தி, வணிகத்தை அபரிமிதமாகத் தூண்டினால்,’கலையே என் வாழ்க்கையின் நிலை மாற்றினாய்’ என்று குழலோடு ஜோன்ஸும், ஷெனாயோடு இழந்தவரும், ஷாம்பெய்னுடன் ஹில்டனும் பாட நேரிடலாம்.

க்ரிப்டோ மற்றும் NFTஐ தடை செய்யலாமா? இது இயலக்கூடிய ஒன்றல்ல. அதற்கான வரைமுறைகள் கொண்டு வரலாமா? அதை அமலாக்கம் செய்வது எளிதல்ல. என்ன செய்யலாம்?- இருதலைக் கொள்ளி எறும்புதான், பாவம், பொது மனிதர்கள்!

NFTக்கள் அறிவுச் சொத்துக்களின் பாதுகாவலன் என்ற எண்ணமும் நிலவுகிறது. புதுமையின் மோகம் நிலைப்படும் போது அது தனக்கான சந்தையை பயனுள்ள வகையில் விரித்துக் கொள்ளும் என்றும், அதன் தாக்கத்தால், வணிகக் குழுமங்கள் தொடங்கி, கதை சொல்லும் தளம் வரை அனைத்துமே புது வளர்ச்சி பெறும் என்றும் சொல்கிறார்கள்.

உலகம் போகின்ற வேகம், உண்மையும் ஒரு நாள் மாறும், நடக்கும் கதைகளைப் பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும் – கண்ணதாசன் என நினைக்கிறேன்.

Ref: ‘I went from having to borrow money to making $4m in a day’: how NFTs are shaking up the art world | Digital art | The Guardian

[1] https://www.youtube.com/watch?v=nTmF26NUZTA – Beeple explains the absurdity of NFT market

Series Navigation<< நம்பிக்கை, நாணயம், நடப்புமெடாவெர்ஸ் எனும் ‘ஹோல்டால்’ >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.