தமிழில்: சஞ்ஜெயன் சண்முகநாதன்

அவனுக்கு முன்பாகவே நான் விழித்துவிடடேன். இமைகளை சிமிட்டி அரை வெளிச்சத்திற்கு கண்களை உடனடியாக பழக்கப்படுத்தி கொண்டேன். தலையை மெதுவாக உயர்த்தி என் பக்கத்தில் அசைவற்று கிடைக்கும் அந்த பெருத்த வெள்ளை உடலை நோடடம் விடடேன். நான் செய்யும் அளவு உடற்பயிசியை அவனும் செய்தால் இந்த எக்ஸ்ட்ரா டயர் தொப்பை வந்திருக்காது என்று கொஞ்சம் இரக்கம் இல்லாமலே நினைத்துகொண்டேன்.
கட்டிலின் அருகில் இருக்கும் அலாரம் ஒலிக்கும்வரை அவன் முழித்துக்கொள்ளமாடடான் என்று எனக்கு தெரியும். திரும்ப தூங்கிவிடலாமா இல்லை அவன் எழும்பும்முன் காலை உணவை முடித்துவிடலாமா என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். இறுதியில் அப்படியே கிடந்தபடி அவனை குழப்பாமல் பகல் கனவுகாணலாம் என்று முடிவெடுத்தேன். அவன் எழும்பும்போது நான் தூங்குவது போல் நடித்தால் எனக்கும் சேர்த்து அவனே காலை உணவை தயார்செய்துவிடுவான். அவன் வேலைக்கு சென்ற பின் அன்றைய நாளில் என்னென்ன செய்யலாம் என்று ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்தேன். வேலை முடிந்து வரும் போது அவனை வரவேற்க நான் தயாராக இருந்தால் போதும் மற்றும்படி அன்றைய நாளை நான் எப்படி கழித்தேன் என்பது பற்றி அவன் அலட்டிக்கொள்வதில்லை. அதே போல் அவனது இந்த மெல்லிய குறட்டை சத்தத்தை நானும் பொருட்படுத்துவதில்லை. அவன் மேல் நான் எல்லை இல்லாத அன்பு வைத்திருந்தேன், ஆனால் அதை வார்த்தைகளாக கோர்த்து சொல்லத்தான் என்னால் முடிவதில்லை. உண்மையை சொன்னால் நான் மிகவும் மதிக்கும் முதலாவது ஆண் என்றால் அது அவன் தான். அவனது ஷேவ் செய்யாத முகத்தை பார்த்தபோது, முன்பொரு நாளில் அந்த பப்பில் என்னை கவர்ந்தது அவனது அழகு அல்ல என்பதை நினைத்துகொண்டேன்.
ரோஜர் மெவ்கிங் வீதியின் வளைவில் அமைந்துள்ள “கட் அண்ட் விசில்” பப்பில் தான் எனக்கு அறிமுகமானான். எட்டு மணி அளவில் வந்து ஒரு பைண்ட் பியரை ஆர்டர் செய்து எடுத்துக்கொண்டு டார் போர்ட்டுக்கு மறுபுறம் அந்த அறையின் மூலையிலுள்ள சிறிய மேசையில் அமர்ந்துகொள்வான். அந்த மேசையில் தனி ஆளாக இருந்து டார்ட் விளையாட்டை கவனித்துகொண்டிருப்பான். அவன் டார்ட் விளையாடி நான் கண்டதில்லை. அது அவனுக்கு டார்ட் ஆட்டத்தில் ஆர்வம் இல்லாததாலா அல்லது விளையாட சென்றால் தன் இருக்கை போய்விடும் என்ற பயத்தினாலா என்று பாருக்கு பின்னாலிருந்த எனது இடத்திலிருந்து அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
திடீரென்று ஒரு இளவேனிற்கால இரவில், பொன்னிற தலைமுடியுடன் ஜின் மார்டினி அருந்தியபடி மடலின் என்ற ஒரு பெண் அவனருகில் வந்து உட்கார்ந்ததும், எல்லாம் மாறியது. அந்த மாற்றம் நல்லதுக்கே என்று தான் ரோஜரும் அப்போது நினைத்திருப்பான். அவளை நான் அதற்கு முன் அங்கு கண்டதில்லை. ஆனால் பப்பில் அரசல்புரசலாக என் காதில் விழுந்த தகவல்களின் படி இந்த உறவு நீண்ட நாட்கள் நிலைக்காது என்று தெரிந்தது. அதன்படி சரியாக இருபதாவது நாள் அவர்கள் இருவரும் வாக்குவாதப்படும் சத்தம் கேட்டு, தலைகள் அவர்கள் பக்கம் திரும்ப வந்த வேகத்திலேயே மடலின் அங்கிருந்து அகன்று சென்றாள். ஒவ்வொரு நாளாக கணக்கு வைத்திருந்ததால் சரியாக இருபது நாட்கள் என்பது எனக்கு தெரிந்தது. ரோஜரின் கண்கள் மட்டும் அவளை பின்தொடர்ந்தனவே அன்றி அவன் அவளின் பின் செல்லவில்லை. அவளது வெளியேற்றம் தான் எனது நுழைவுக்கான அறிகுறி என்று நினைத்தப்படி ஓடி, கிட்டத்தட்ட பாய்ந்தே சென்று அவனருகில் உட்கார்ந்தேன். அவன் பேசாமல் அமைதியாக இருந்தான். ஆனால் அவன் என் மீது வீசிய ஒற்றை பார்வையில் மறுப்பேதும் இருக்கவில்லை. நான் மற்றவர்களை நோட்டம் விட்டேன். டார்ட் ஆடுபவர்கள் எங்களை கவனித்ததாக தெரியவில்லை. பார் பக்கமாக திரும்பி முதலாளியை பார்த்தேன் அவரும் ஆர்டர் எடுப்பதில் பிசியாக இருந்தார். அதற்குள் மடலின் வேறு ஒருவருடன் ஷாம்பெயின் அருந்திகொண்டிருப்பதை கண்டேன். அடுத்த இருபது நாட்களுக்கு அவள் வழியமைத்துகொண்டாள் என்று எண்ணிகொண்டேன்.
நான் நிமிர்ந்து ரோஜரை பார்த்தேன். எனது பெயர் கூட அவனுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. நான் அவனை பெயர் சொல்லி அழைத்ததில்லையென்றாலும் அவன் பெயர் எனக்கு தெரிந்திருந்தது கண் இமைகளை கொஞ்சம் மிகையாக அவனை பார்த்து சிமிட்டினேன். அவன் மெல்ல புன்னகைத்தான். கையை நீட்டி என் கன்னத்தை வருடினான். அவன் கை நான் எதிர்பாராத அளவு மிருதுவாக இருந்தது. இரண்டு பேருமே எதுவும் பேசவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. நீண்ட நேரம் அமைதியாக இருந்தோம், அவ்வப்போது அவன் பியரினை அருந்தியபடியும் நான் கால்களை மாற்றிமாற்றி அமைத்தபடியும். முதலாளி கடையை மூடும் நேரமாகிவிட்டதாக அறிவித்ததும் அவன் மீதி பியரை குடித்து முடித்து எழும்பினான். நானும் அவனுடன் ஒன்றாகவே வெளியேறினேன். பாரில் இருந்த யாரும் எதுவும் சொல்லவில்லை. ரோஜரும் எந்த மறுப்பும் தெரிவிக்காதது எனக்கு வியப்பாகஇருந்தது. அவனது வீடு வரை நானும் கூடவே சென்றேன். அவனது வீடு எனக்கு முன்பே தெரிந்திருந்தது. டாப்சன் வீதி பஸ் தரிப்பிடித்தில் அவன் காலையில் வரிசையில் நிற்பதை சில தடவைகள் கண்டிருக்கிறேன். உண்மையை சொன்னால் ஒரு நாள் அருகிலிருந்த சுவரில் ஏறி நின்று அவன் முகத்தை நன்றாக கவனித்தும் இருக்கிறேன். அவன் முகம் மிகவும் சாதாரணமானது, பார்த்தவுடன் மறந்துவிட கூடியது. ஆனாலும் நான் பார்த்த ஆண்களிலேயே அவனை போன்ற கனிவான பார்வையும், அன்பான சிரிப்பும் வேறு எவருக்கும் இருந்ததில்லை. எனக்கு இருந்த ஒரே பயம் இப்படி ஒருத்தி இருக்கிறேன் என்பதே அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. எப்போதும் எதையாவது யோசித்தபடியே இருப்பான்.
இதெல்லாம் நடந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகின்றது. ரோஜரின் பால் எனக்கிருக்கும் விசுவாசத்தை காட்ட அதன் பின் நான் அந்த பப் பக்கமே சென்றதில்லை. அவனும் மடலினை மறந்துவிட்டான் என்றே நினைக்கிறேன். ஒரு தடவை கூட என்னிடம் அவளை பற்றி பேசியதில்லை. அதே போல் எனது முந்தைய உறவுகள் பற்றியும் அவன் எதுவுமே கேட்டதில்லை. கேட்டிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். அவனை சந்திக்கமுன் என் வாழ்வில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடி அவனுக்கு சொல்லிவிடவே நான் விரும்புகிறேன்.
எனது குடும்பத்தில் நானே இளையவள். என் அப்பா யார் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு நாள் இரவு நான் வீடு திரும்பியபோது எனது அம்மா வேறு யாருடனோ ஓடிவிட்டதாக கேள்விப்பட்டேன். அம்மா திரும்பிவருவார் என எதிர்ப்பார்க்கவேண்டாம் என அக்கா சொன்னாள். அவள் சொன்னது போலவே அதன் பின் என் அம்மாவை நான் கண்டதே இல்லை. ஒரு அநாதையாக இங்கும் அங்கும் திரிந்தேன். நிரந்தர இருப்பிடம் இல்லாமல் சடடத்தின் பிடியில் அகப்படாமால் இருப்பது கஷ்டமாக இருந்தது. அப்பொழுது தான் டெரிக்குடன் தொடர்பு ஏற்பட்டது. டெரிக், அது அவனது உண்மையான பெயரா என்று கூட தெரியவில்லை. அவனது வசீகரமான தோற்றம் எந்த பெண்ணையும் மயக்கிவிடும். மூன்று வருடங்கள் கப்பலில் இருந்துவிட்டு வருவதாக சொன்னான். அவனுடன் கூடிஇருக்கும் போது அவன் சொல்வதை எல்லாம் நம்பிவிடும் மனநிலையில் நான் இருந்தேன். எனக்கு இருக்க ஒரு இடமும், கொஞ்ச உணவும், எனது என்று சொல்லிக்கொள்ள ஒரு குடும்பமும் இருந்தால் போதும் என்று அடிக்கடி அவனிடம் சொல்வேன். எனது அந்த மூன்று ஆசைகளில் மூன்றாவதை மட்டும் நிறைவேற்றி, எனக்கு இரட்டை பெண் குழந்தைகளை கொடுத்துவிட்டு அவன் மறுபடியும் கப்பலுக்கு ஓடிவிட்டான். நான் என் பிள்ளைகளை நல்ல முறையில்தான் வளர்க்க முற்பட்டேன். ஆனால் சட்டம் என்னிடமிருந்து அவர்களை பறித்துக்கொண்டது. அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர்கள் இருவரும் டெரிக்கின் வசீகரமான முகஅமைப்புடன் பிறந்தவர்கள் ஆதலால் எப்படியும் நல்ல இடங்களில் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஹ்ம்ம் இந்த விடயம் பற்றி கூட ரோஜருக்கு தெரியப்போவதில்லை என்று நினைக்கும்போது எனது குற்ற உணர்ச்சி இன்னும் அதிகமாகிறது.
டெரிக் என்னைவிட்டு சென்றபின் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனிமையில் இருந்தேன். பின்னர் தான் “கட் அண்ட் விசில்” பப்பில் பகுதி நேர வேலை தேடிக்கொண்டேன். அந்த பப்பின் முதலாளி ஒரு முரடன். எனக்குரிய வேலையை சரியாக செய்யவில்லை என்றால் உணவு, தண்ணி கூட தரமாட்டான். மடலினை சந்திக்கும்வரை ரோஜர் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தடவை தான் வருவான். அதன் பின் ஒவ்வொரு இரவும் வரதொடங்கினான். அவன் முதல் முறை பியர் ஆர்டர் குடுக்கும்போதே இவன் எனக்கு பொருத்தமானவன் என்று எனக்குள் தோன்றியது. அவ்வளவு மென்மையாக நடந்தான். அந்த ஆரம்ப நாட்களில் பப்பில் வேலை செய்யும் பெண்கள் அவனுடன் சல்லாபமாக பேசமுயன்றாலும் அவன் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவனுக்கு பெண்களை தான் பிடிக்குமா இல்லை ஆண்களையா என்றே குழப்பமாக இருந்தது. அவன் மடலினுடன் சேர்ந்தபின் தான் அது உறுதி ஆகியது. ஒரு வேளை ஆணா, பெண்ணா என்று சொல்லமுடியாத என் முகம் தான் அவனுக்கு என்னை பிடிக்கவைத்ததோ என்னவோ. இருந்தாலும் அந்த பப்பிலேயே ஒரு நிரந்தர உறவுமுறை வேண்டும் என்று நினைத்தது நான் ஒருத்தி தான் என்பதுவும் காரணமாக இருக்கலாம்.
அந்த முதல் நாள் இரவு அவனது வீட்டில் தங்க எனக்கு அனுமதியளித்தான். நான் கட்டிலின் ஒரு பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டேன். ரோஜர் குளியலறைக்குள் சென்று உடை மாற்றிகொண்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அன்றிலிருந்து அவன் என்னை எப்போதும் வெளியே போக சொன்னதுமில்லை, அடித்து துரத்தியதும் இல்லை. குரலை உயர்த்தி என்னை திட்டியது கூட இல்லை. எங்களுடையது ஒரு மிகவும் எளிமையான உறவுமுறை.
ட்ரிங். ட்ரிங். ட்ரிங். பாழாய் போன அந்த அலாரம் ஒலிக்கதொடங்கியது. இனி ரோஜர் எழுந்துகொள்ளும் வரை அது ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு முறை நான் ரோஜரை தாண்டி அந்த கொடூரமான சத்தத்தை நிறுத்திவிட முயன்றேன் ஆனால் அது கீழே விழுந்ததில் ரோஜர் எரிச்சலடைந்த விட்டான். அதன் பின் நான் ஒன்றும் செய்வதில்லை. ஒரு வழியாக அவனது நீண்ட கை போர்வைக்குள் இருந்து வெளியே வந்து அலாரத்தின் மேல் விழுந்ததும் சத்தம் அடங்கியது. நான் எப்போதும் ஆழ்ந்து உறங்குவதில்லை. மிக சிறிய அசைவு கூட என்னை எழுப்பிவிடும். அவன் என்னை கேட்டுக்கொண்டால் தினமும் அவனை இதைவிட மிருதுவான முறையில் என்னால் எழுப்பிவிட முடியும். எந்த கருவியை விடவும் எனது முறைகள் நம்பகமானது. பாதி கண்ணை விழித்தபடி ரோஜர் என்னை மென்மையாக அணைத்து என் முதுகை வருடி புன்னகைத்தான். பின் கொட்டாவிட்டபடி ஒவ்வொரு நாளும் சொல்வது போல “ஹ்ம்ம் வேலைக்கு நேரமாகிவிட்ட்து” என்றான்.
எந்த மாற்றமும் இல்லாமல் தினமும் ஒரே மாதிரி நடக்கும் இந்த காலை நேர காட்சிகள் வேறு சில பெண்களுக்கு வேண்டுமானால் சலிப்பை ஏற்படுத்தலாம். அனால் எனக்கு அப்படி அல்ல. நான் தேடிக்கொண்ட பாதுகாப்பான புதிய வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே நான் இதை கருதுகின்றேன். ரோஜர் வழமை போல இடதுகால் செருப்பை வலதுகாலிலும், வலதுகால் செருப்பை இடதுகாலிலும் மாட்டிக்கொண்டு குளியலறை பக்கம் நகர்ந்தான். வழமை போல சரியாக பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வந்தான், குளிக்க முன் இருந்ததை விட பெரிதான மாற்றம் ஒன்றும் எனக்கு தெரியவில்லை. எப்பொழுதும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என நினைக்கும் என்னுடன் அவன் வாழப்பழகிகொண்டது போல அவனது இந்த விசித்திரமான பழக்கவழக்கங்களுடன் நானும் வாழப்பழகிவிட்டேன்.
“என்ன இன்னுமா தூக்கம்” என்று பொய்யான கண்டிப்புடன் கேட்டான். நான் அவனை சட்டை செய்யாதது போல அவனது உடல் கட்டிலில் விட்டுச்சென்ற சூடான இடத்தில சுருண்டு படுத்தேன். “ஹ்ம்ம் இன்றைக்கும் நானே தான் உனக்கு காலை உணவு செய்யவேண்டுமா” என்று சிரித்தவாறே படியிறங்கி சென்றான். நான் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. கீழே சென்றதும் அவன் என்னென்ன செய்வான் என்பதுவும் எனக்கு தெரியும். இன்னும் சிறிது நேரத்தில் வாசற்கதவை திறந்து பத்திரிகையையும், ஏதும் கடிதங்கள் இருப்பின் அவற்றையும், எமக்கென்று விநியோகிக்கப்படட ஒரு போத்தல் பாலையும் எடுத்துக்கொள்வான். பின்பு பான்ரிக்கு சென்று எனக்கு மிகவும் பிடித்த காலை உணவை எடுத்து ஒரு கோப்பையினுள் நிரப்புவான். தனக்கு இரண்டு கோப்பிகளுக்கு போதுமான பாலை விட்டுவிட்டு மீதம் அனைத்தையும் அந்த கோப்பையினுள் ஊற்றுவான். பின்னர் கேத்தல் கொதிக்கும் சத்தம் கேட்கும், சில நொடிகளில் பாலை ஊற்றும் சத்தம் கேட்கும். இறுதியாக கதிரை இழுக்கப்படும் சத்தம் வரும். அது தான் எனக்குரிய சிக்னல்.
நான் மெல்ல சோம்பல் முறித்துகொண்டேன். கால் நகங்களை சரி செய்யவேண்டும் என்று தெரிந்தது. ஒழுங்காக குளிக்கவும் வேண்டும். அவன் போன பின்பு செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் கீழே கதிரை இழுபடும் சத்தம் கேட்டது. மகிழ்ச்சியுடன் கட்டிலிலிருந்து குதித்திறங்கி சில நொடிகளில் சமயலறையில் இருந்தேன். என்னை கண்டதும் அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. உணவருந்துவதை நிறுத்திவிட்டு “ஆஹா நீயும் வந்துவிடடாயா” என்றான். நான் மெதுவாக அவனருகில் சென்று ஆவலுடுன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அவன் குனிந்து எனது உணவு கோப்பையை எனை நோக்கி தள்ளிவிட்டான். நான் வாலை ஆட்டியபடி மகிழ்ச்சியுடன் பாலை நக்கி குடிக்க தொடங்கினேன். கோபமாக இருக்கும் போது மட்டும் தான் நாங்கள் வாலை ஆட்டுவோம் என்பது ஒரு கட்டுக்கதை என்று உங்களுக்கு தெரியுமா?
…
ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய “Just Good Friends” எனும் ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம்.
முந்தைய ஆக்கம்: