திறனாய்வு: ஆர்ட் கார்டென்; (தமிழில்: கடலூர் வாசு)
தொலைந்து போன அமெரிக்க பொருளாதார சமத்துவ பாரம்பரியம், 1600-1870 (The Lost Tradition of Economic Equality in America 1600-1870) By – Daniel R. Mandell

இந்நூல், போர்க்கால, காலனீய ஆதிக்க காலத்தில் அமெரிக்காவின் தலையீட்டை விளக்கும் வரலாற்று இலக்கிய நூல் வரிசையில் ஒன்றாகும். விலை, வருமானம், உடைமை இவைகளின் மேலான கட்டுப்பாடுகள் அமெரிக்க ஜனாதிபதி, F.D.R. அவர்களின் “புதிய ஒப்பந்தம்” (New Deal)என்றழைக்கப்படும் கால கட்டத்தில் கொண்டுவரப்பட்டது அல்ல. மாறாக, மாண்டேல் இந்நூலில் விளக்குவது போல், ஆதிகாலத்திலிருந்தே இருந்து வருவதாகும். Jonathan T. Hughes என்பவர் கூறியது போல், தலையீடு என்பது ஒரு அரசாங்க பழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இந்நூலும், “உயரிய சமநோக்கு”(Noble Egalitarian Intention) எனும் வழக்கமான உள்நோக்கத்துடன் திட்டங்களை மதிப்பிடும் குற்றத்தையே செய்துள்ளது. எனினும், மாண்டேல் அவர்களின் தொலைந்த பாரம்பரியத்தைப் பற்றிய தேடல்,” முதலாளித்துவத்தின் புதிய வரலாறு’ என்ற தலைப்பின் கீழ் வளர்ந்து வரும் இலக்கிய நூல் வரிசையில் சேர்க்கப்படவேண்டிய ஒன்று.; அமெரிக்காவின் செல்வ வளம், மற்ற நாடுகளை சுரண்டியதும், 20ம் நூற்றாண்டு மரபுவழி தாராளவாதத்தின் (Classical Liberalism)சூழ்ச்சிகளும்தான் காரணம் எனக் குற்றம் சாட்டும் நூல்வரிசையில் சேராது.
விலைக் கட்டுப்பாட்டை தங்கள் பாடத் திட்டத்தில் இணைக்க விரும்பும் பொருளாதார ஆசிரியர்களுக்கு, அமெரிக்க பரிசோதனை (American Experiment)யின் ஆரம்பகாலம் உதாரணங்களும் எடுத்துக்காட்டுகளும் நிரம்பிய ஒன்றாகும். மாண்டேல், அவர் எடுத்துக் கொண்டுள்ள காலத்தை அலசும்போது வழக்கமான ஊகவணிகர்களை (Speculators) கண்டனம் செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக, இப்புத்தகத்தின் 107ம் பக்கத்தில், எல்ஹானன் வின்செஸ்டர் (Elhanan Winchester) எனும் நியூ இங்கிலாந்து சமய போதகர் தனது “The Plain Political Catechism” என்ற புத்தகத்தின் மூலம் பள்ளிமாணவர்களிடம் ‘பொது நிலங்கள் அங்கு குடியேறியவர்களுக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். நிலவர்த்தகங்களுக்கும் ஊகவணிகர்களுக்கும் விற்கக் கூடாது’ என போதித்ததை பதிப்பித்துள்ளார். இந்த இலக்கிய வரிசையில் உள்ள பல நூல்களை போலவே இவரது புத்தகமும் எவ்வாறு இடத்திற்கேற்ற விலை பிற சமுதாய பிரச்சினைகளை தீர்க்க உதவும் போன்ற கருத்துகளுடன் மல்லாடவில்லை. மேலும், நிலத்தை அதிக விலை கொடுப்பவருக்கு விற்பது வின்செஸ்டர் போன்றவர்கள் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கலாம் என்பது போன்ற கருத்திலும் ஆர்வம் காட்டவில்லை.
இந்த புத்தகத்தை கையில் எடுத்தவுடன் விமரிசகர் கோடிட்ட ஒரு உதாரணத்தை பார்க்கலாம். “சிறுமக்கூலி (Minimum Wage)யும் மற்ற நடவடிக்கைகளும் வேலையில் இருப்பவர்களுக்கு ஆதரவானது” என்ற கூற்று எவ்வாறு அத்தகைய ஆதரவு வேலையில்லாதவர்களை பாதிக்கிறது என்பதை விளக்கவில்லை. (பக்கம் 3, விவாதம் பக்கம் 56-57). மில்டன் ஃப்ரீட்மான்(Milton friedman) கூறிய “பணவீக்கம் எப்போதுமே பண நிகழ்வுதான்,” அதாவது, அதிக அளவு பணம் குறைந்த அளவிலுள்ள சரக்குகளின் பின் ஓடுவதுதான் என்பதை நன்றாக புரிந்துகொண்டிருந்தால், ஜனரஞ்சகர்கள்(Populists) ஒழுங்குமுறை என்ற பெயரில் செய்யும் அடாவடித்தனத்தை ஒருவேளை குறைத்துக் கொண்டிருப்பார்களோ?
விலையின் பணி, பணவீக்கத்திற்கான காரணம், விலைக் கட்டுப்பாட்டின் விளைவுகள், போன்றவற்றை தவறாக புரிந்துகொண்டுள்ள சமநோக்கு சம்பிரதாயத்தைப் பற்றிய இப்புத்தகத்தின் பகுதிகள் முக்கியமானதும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள ஒரு வரலாறு ஆகும். ஆனால் அதை வரலாறாக நிறுத்திக் கொள்ளாமல், கொள்கைகளை முன் நடத்திச் செல்ல உபயோகிக்கலாம் என்ற கருத்து அபாயகரமானது. டியர்ட்ரா மக்லாஸ்கி (Deirdre McCloskey) கூறியது போல் “பொருளியல் என்பது ‘உலகே மாயம்’ என்ற கண்ணோட்டத்திற்கு பிறகு வந்த சமூகவியல்” ஆகும். அவ்வாறிருந்தும், 18ம் நூற்றாண்டு இறுதியில், கிட்டத்தட்ட அனைவருமே பொருளாதார சித்தாந்தத்தையும் வரலாற்றையும் தட்டை உலக வடிவமாகவே தங்கள் அறிவில் பதித்திருந்தனர். பணவீக்கத்தை போக்க அவர்கள் விலைக் கட்டுப்பாடு என்றளிக்கும் மருந்துச் சீடடு, தற்கால மருத்துவர்கள் பாதரசம் அல்லது அட்டை ஒட்டுண்ணியை மருந்தாக எழுதிக் கொடுத்து அதை நோயாளிகளும் கண்மூடித்தனமாக உபயோகித்தால் ஏற்படும் விளைவுகளுக்கு சமானமானதாகும்..
மாண்டேல், சமநோக்கு சம்பிரதாயத்தைப் பற்றி திறமையாகவும் தெளிவாகவும் ஆவணப்படுத்தியுள்ளார். ஆனால், அவரும் மற்றவர்களும் சமநோக்கினரின் இலக்குகளில் அளவுமீறிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். பலதரப்பட்ட கொள்கைகளும் முயற்சிகளும் மக்களின் அபிலாஷைகளையும் தூண்டுவிசைகளையும் (Incentives) மாற்றியமைப்பதால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளைப் பற்றி வரலாற்று ஆசியர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அபிகெய்ல் ஆடம்ஸ் (Abhigail Adams) தனது கணவர் ஜான் ஆடம்ஸிற்கு (John Adams) எழுதிய கடிதத்தில், “வியாபாரிகளும் ஏகபோக உரிமையாளர்களும் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர் என்ற பெரிய கூப்பாடு கிளம்பியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளதை மாண்டேல் இங்கு எடுத்துரைக்கிறார். பின், மாண்டேல் கீழ்வருமாறு எழுதியுள்ளார்;
“அபிகெய்ல், ஜானுக்கு மேலும் எழுதுகிறார், இதன் விளைவாக 500 பாஸ்டன் நகரத்தினர் விலைவாசியை ஏற்றியது மட்டுமல்லாமல் பணத்தை வாங்க மறுத்த 6 சேலம் வணிகர்களை வண்டியில் இழுத்து சென்றனர்; அக்கும்பல், இந்த துஷ்டர்களை ராக்ஸ்பரி நகரில் தள்ளிய பின் அவர்கள் திரும்பிவந்தால் மரணம் அவர்களுக்காக காத்திருக்கும் என பயமுறுத்தியுள்ளனர்.”
மேலேயுள்ள வரிகள் விநோதமாயுள்ளது. இந்த வணிகர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள். பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் சேலம் சூனியக்கார வழக்கைப் பற்றி வரலாற்று வகுப்பிலும் ஆங்கில வகுப்பிலும் பயில்கின்றனர். இந்த வரிகளை படிப்பவர்கள் வரலாற்றுக் கூற்றிலிருந்து நோக்கினால், பாஸ்டன் நகரத்தார், சேலம் வணிகர்களையும் பொருளாதார பில்லிசூனியக்காரார்களாக பார்த்தார்கள் என்று எடுத்துக்கொள்ள இயலும். வணிகர்களை கொலை செய்வதாக பயமுறுத்துவதும், தானிய வணிகரான ஆண்ட்ரூ பெல்ச்சர் (Andrew Belcher) என்பவர் தனது தானியத்தை அதிக விலைக்கு மேற்கு இந்திய நாடுகளுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளார் என்பதால் அவரது தானியங்களை கொள்ளையடிப்பதும் , சர்க்கரையை, “நியாய விலை”க்குதான் விற்கவேண்டும் என வணிகர்களை வற்புறுத்துவதும் முறையானது என்பதை யாராவது ஒருவரால் நியாயப்படுத்த முடியுமா? ஒரு முறை, தானியமும் சர்க்கரையும் கேட்ட விலைக்கு கிடைக்கலாம். ஆனால் அடுத்த முறை, கலவரக் கும்பல் தங்கள் தானியங்களை கொள்ளையடிக்கும் என பயந்தால் அவ்விடத்தில் வணிகம் செய்ய வருவார்களா? மாண்டேல், வணிகர்கள் கேட்ட விலை அநியாயமானது; மக்கள் சொன்ன விலைதான் நியாயமானது என்கிறார். எதன் அடிப்படையில் சொல்கிறார்?
இதிலும் மற்ற விவரங்களிலும் இப்புத்தகம், பிற வரலாற்று பகுப்பாய்வுகளை போலவே அதன் மையக் கருத்தை வலிமைப்படுத்துவதற்காக எழுதப்பட்டுள்ளது.. இன்றுவரை, சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டம் மட்டுமே என கார்ல் மார்க்ஸ் எழுதிவைத்துள்ளார். அது ஒரு தவறான கருத்து. அதைத் தவிர்த்து, பொருளாதார வல்லுநர், ஜேம்ஸ் ப்யூகானன் (James Buchanan), 1964ல் பொருளாதாரர்களுக்கு அறிவுறுத்தியது போல், வரலாற்று ஆசிரியர்களும் சலுகைகள், பரிமாற்று நிறுவனங்கள் பற்றிய வரலாற்று விசாரணைகளையும் இணைத்து எழுதினால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
மாண்டேல் தாராளவாதமும் அதன் எதிர்மறை வாதங்களும் பரவும் முறைகளை நன்கு விளங்குமாறு எழுதியுள்ளார். 77ம் பக்கத்தில், மாநில அரசாங்கங்களும் தேசிய அரசாங்கமும் தாராளவாத பொருளாதார கருத்தியல்களை ஏற்றுக்கொண்டு பொதுநிதி, நியாய விலை போன்ற சொல்லாட்சியை (Rhetoric) 1780களில் அப்புறப்படுத்தியது எனக் கூறுகிறார். இது நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது இக்கருத்தியலை அக்கால புத்தகங்களை அளவுப் பகுத்தாய்வு(Quantitative Analysis) செய்வதன் மூலம்தான் சொல்ல முடியும். 113ம் பக்கம், எவ்வாறு மாற்றுக் கருத்துக்கள் 1830ல் மக்களிடையே ஊன்றியது என விளக்குகிறது.
“1830களில், அமெரிக்க ஆசிரியர்கள் எழுதிய பாடப் புத்தகங்கள் பேரலைகள் போல் கிளம்புவதற்கு வட மாநிலங்கள் ஏற்படுத்திய பொதுப் பள்ளிகளும், சீரிய அச்சுத் தொழில் நுட்பமும் , பகிர்வு வலையமைப்புகளும்(Distribution Network) தான் காரணம். இவையனைத்துமே, நடைமுறைக்கு தேவையான விவரங்கள், அமெரிக்க வரலாறு, அயல் நாட்டுக் கலாச்சாரம் , மற்றும், தொழிலக சந்தைப் பொருளாதாரத்தில் (Industrial Market Economy) நடுவர்க்க மக்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான இயல்பு ஆகியவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில்தான் கவனமாக இருந்தன”.
இவ்விவாதம் தொடர்ந்து 19ம் நூற்றாண்டில் தாராளவாதம் சந்தித்த மேடுபள்ளங்களையும், தேசிய சீர்திருத்த சங்கம் (National Reform Association) அமெரிக்காவில் தனிநபர்களிடையே பொதுநலக் கோட்பாடுகளை புதுப்பித்தலிலும் பிரபலப்படுத்துவதிலும் மேற்கொண்ட முயற்சிகளையும் அலசுகிறது. இதே சமயத்தில்தான், கூட்டுறவு பொதுநலக் கோட்பாட்டு இயக்கமும் சர்வதேச அளவில் வெளிக்கிளம்பியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இப்புத்தகத்த்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் நிறைய உள்ளன. புத்தக விமரிசகர், வரலாற்று நிபுணராக இல்லாவிட்டாலும் இத்தகைய வரலாற்று இலக்கியங்களில் விட்டுப்போன ஓரிரண்டு பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்தவர். ஆசிரியர் கூறும் “அளவுகடந்த தாராளவாதம்” (Hyperliberalism) எனும் கோட்பாட்டில் அக்கால அமெரிக்கர்களின் ஈர்ப்பை எடுத்துக் கூறுவதில் , இப்புத்தகம் திருத்தியமைக்கப்பட்ட இலக்கிய வரிசைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பாகும். இத்தகைய கைவினைத்திறன் மிக்க வரலாற்று இலக்கியமும் பொருளாதாரர்களின் முறையியல் தனித்துவமும்(Methodological Individualism) ஒன்றுகூடினால் கிடைக்கும் முடிவுகள், இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தாராளவாதத்த்தில் அளவுமீறி ஆசைவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் சிந்தனையும் போக்கும் சரியானதுதான் என விளங்க வைக்கும்.
(Art Carden is a Senior Fellow at The American Institute of Economic Research. He is also an Associate Professor at the Samford University in Birmingham, Alabama and a Research Fellow at The Independence Institute).
***