மழையில் நனையும் அலைகள்

மெரினா கடற்கரையில் பெய்து கொண்டிருந்த பெருமழையில் நனைந்தபடி கடல் நோக்கி சென்றுகொண்டிருந்தேன். காலை முதலே கருத்துக்கிடந்த வானம் நண்பகலில் மெல்லிய ஒளியை மட்டும் நிலத்திற்கு அனுமதித்திருந்தது.  

மணல் பரப்பில் மழைத்துளிகள் தங்கள் அடையாளத்தை பதிக்கும் முன் மறைந்து போய்விட்டன. துளிகள் விழுந்த இடம் மணல் தெறித்து பூவட்டம் போலிருந்தது. அலைகளின் ஒலி மழையில் மங்கிவிட்டது. பேரருவியும் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டிருந்தது. ஒரு கணம் கடல் மேல் நோக்கி மேகங்களுக்கு செல்வதாயிருந்தது. கடற்புறா ஒன்று கரையை ஒட்டி பறந்து அமர்ந்து எழுந்து பறக்க முடியாமல் அருகிலிருந்த கவிழ்ந்த கட்டுமரத்தினடியில் போய் நின்று நனைந்த சிறகுகளை அடித்து “என்ன” என்பது போல தலை திருப்பி பார்த்தது. 

அலைகளின் வெண்மை நிறம் மாறி பழுப்பு நிறம் கொண்டு ஆவேசமாக காட்டு மிருகமென உறுமின. மின்னல் கால்கள் முளைத்த மேகங்கள் மெல்ல நகர்ந்து வலப்பக்கமாக சென்றன. அலைகள் என் இடுப்பு வரை நனைக்க குளிரில் உடல் நடுங்கியது. எதிர் பார்க்காத கணத்தில் பாறைகள் விண்ணிலிருந்த் இறங்குவது போல இடியிடிக்கவும் பின்னாலிருந்து ஒரு குரல் “பயமா இல்லையா” என்றது. உடலில் இருக்கும் 206 எலும்புகளையும் எண்ணிவிடும் அளவிருந்த அவனுடலில் தலை ஒட்டவைத்த காகித உருண்டை போலிருந்தது. சட்டையும் வேஷ்டியும் நனைந்து உடலும் ஒட்டிப்போயிருந்தது. அமைதியான , நிம்மதியான கண்களுடனிருந்தது அவன் முகம்.

நான் பயமில்லை என தலையாட்டி கைகளை உதறி சிரித்தேன். அவனும் சிரித்தான். கரையேறி மழைத்துளிகளை அருந்தியவாறு நிமிர்ந்து படுத்ததும் அவனும் அருகில் அமர்ந்தான். 

“மழ நல்லாருக்குல்ல. மனசுக்கு நிம்மதியா” என்றான்

“ஆமா நல்ல மழ” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டேன். 

“எனக்கு ரொம்ப நாளா யாருமே இல்ல. தனியாத்தான் இருக்கேன். இங்கதான் பட்டினம்பாக்கம் ஹௌசிங் போர்ட்ல். நானும் மழைல கடலுக்கு வருவேன். உங்கள இதோட ரெண்டு தடவ பாத்துட்டேன். தள்ளி நிண்ணு பாப்பேன் அப்புடியே போயிருவேன்” என்று மழை வழியும் முகத்தை துடைத்து சிரித்தான். 

இதுவரை என் வாழ்வில் இரண்டு முறை மட்டுமே மழையில் கடலில் தனிப்பட்ட காரணத்திற்காக குளித்திருக்கிறேன். அதும் பத்து வருட இடைவெளிகளில். இது மூன்றாவது முறை. “நான் சின்ன வயசுல அங்க இருந்துருகேன். வேற யாரையோ பாத்திருப்பீங்க சார். நான் மெரினாக்கு வந்தே பத்து வருசமாவது இருக்கும்” 

“ஆமா , நான் உங்கள பாத்து செரியா பத்து வருசம் மூணு மாசம் ஆகுது” என்று விரல்களை மடித்து கணக்கு பார்த்து சொன்னான். “நான் நெறைய தடவ மழையோட கடல்ல குளிச்சிருக்கேன். இன்னிக்குத்தான் உங்கள்ட்ட பேச முடிஞ்சது. இல்லன்னா பாத்துட்டு முன்னாடி மாதிரி அப்புடியே போயிருப்பேன்” என்று மீண்டும் சிரித்தான். 

பெரிய இடியொன்று எங்கள் பின்னால் இறங்கியது. மழை நீர் மணல் பரப்பில் பாதையமைத்து ஓடையாகி எங்களருகில் ஓடி கடலில் கலந்தது. 

“யார் நீங்க?” எனும் போது என் குரலில் பயமிருந்தது. நான் செய்யும் சில்லறைத்தனமான சர்வதேச தொழிலுக்கு எதிரிகள் ஏற்கனவே நிறைய பேர் முளைத்திருந்தனர்.

“உங்களுக்கு தெரிஞ்ச ஆழுதான். ரொம்ப நெருங்குன ஆளுன்னு கூட வச்சிக்கோங்க”

“என்ன எதுக்கு ஃபாலோ பண்றீங்க?”

“உங்கள எனக்கு முன்னாடியே தெரியும் சார். சின்ன பிள்ளையா ஜட்டி கூட போடாம அலைஞ்சதெல்லாம்” என்று கையால் ஓர் உயரத்தை காட்டி புன்னகைத்தான்.

“புல் ஷிட் , யாருய்யா நீ. வெளையாடாத.” என்று எழுந்து கத்தினேன். தொப்பை டீ-சர்டினுள் குலுங்கியது. சொட்டைத்தலை வழி வழிந்த மழை நீரை துடைத்துவிட்டேன்.

“நீங்க சந்தோசமா இருக்கதெல்லாம் பாக்க நான் வருவேன். அதான் இப்பொவும் வந்தேன். இங்க மட்டும்தான் என்னால வரவும் , உங்கள பாக்கவும் முடியும்” அவன் முகம் சிரித்தவண்ணமே இருந்தது

“நான் சந்தோசமா இருக்கேண்ணு யாருய்யா சொன்னது. இடியட் , இடியட். தள்ளிப்போ. நான் தனியா இருக்கணும்” என்று எழுந்தமர்ந்தேன். 

“அப்பொ நீங்க சந்தோசமா இல்லையா? சொல்லுங்க சார்” அவன் குரல் வலுவிழந்து பதறியது.

“உனக்கிட்ட எதுக்கு நான் சொல்லணும். தள்ளிப்போ மொதல்ல” என்று கத்தி கைகளை உதறி அவனை அங்கிருந்து விரட்ட முயன்றேன். மழையில்லாத சமயமானால் அங்கிருக்கும் மக்கள் என்னை பைத்தியமென்றே நினைத்திருப்பார்கள்

சற்று தள்ளிப்போய் அமர்ந்து கடலை வெறித்த வண்ணம் அவன் அந்த சிறிய உடல் நடுங்க அழ ஆரம்பித்தான். மணலில் சப்பென அமர்ந்து நானும் அழுதேன். எங்கள் அழுகையை மழை பாதுகாத்தது. 

என் தோளைத்தொட்டு அழுத்தி என்னை சமாதானப்படுத்த முயன்றான். “அழாதீங்க” 

“என்ன பண்ண சொல்றீங்க. எல்லாம் என் தலைல நான் பொறந்ததுல இருந்து இருக்கு. தாங்க முடியாத கனம். சொமக்கவும் முடியல இறக்கி வைக்கவும் முடியல. எல்லாரும் நான் சந்தோசமா இருக்கதா நெனைக்குறாங்க. குடும்பத்துல யாரும் அது பத்தி பேசுனது கூட இல்ல” என்றதும் பேச்சை குறைக்கும் நோக்கில் ஓடிய மழை நீரையள்ளி முகத்தில் விட்டுக்கொண்டேன். 

“அப்பொ எதுக்கு இங்க வந்தீங்க. சந்தோசமா இருக்கும் போதுதான இங்க வருவீங்க” என்றது வேகமான அவன் குரல்.

“நான் சாகுறத்துக்கு இங்க வருவேன். என்னால முடியல. அதோட எல்லாம் முடிஞ்சிரும் , ஆனா என்னால முடியல. உனக்குள்ள ஒரு நோய் இருந்து அத யாருக்கும் சொல்ல முடியலண்ண எப்புடி இருக்கும் அது மாதிரிதான் இதும். வேலை குடும்பம் எல்லாம் இருக்கு , ஆனா என் தலைல. எப்புடி குடும்பம் ஓடுதுண்ணு யாருக்கும் தெரியாது. தெரியிறதும் எனக்கு பிடிக்கல. இந்த சிக்கல்ல இருந்து வெளில வரவும் தெரியல. சாகவும் முடியல. இன்னைக்காவது சாகலாம்னு வந்தா , நீ வந்து நிக்கிற. தள்ளிப்போ தள்ளிப்போ”

“கடனா ?”

“ஆமா , கடன். எனக்கு வியாபாரம் செய்யவே தெரியாது. இவங்க எல்லாரும் சேந்து என்ன ஏமாத்தி வியாபாரம் பண்ண வைக்குறாங்க. என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா?”

“செத்தா எல்லாம் முடிஞ்சிருமா”

“கண்டிப்பா , எங்க அப்பா இந்த கடல்ல செத்துப்போனாரு. நானும் அவருக்கூட போயிரலாம்னு பாக்குறேன்” தொண்டை உடைந்துவிடும் அளவிற்கு கத்தினேன். மீண்டும் கடலும் மழையும் என்னை பாதுகாத்தன. 

“அவருக்கு தெரிஞ்சிருக்கு , இந்த சொம இறங்காதுண்ணு. என்ன கரைல விட்டுட்டு அப்புடியே போயிட்டாரு. இந்த அலை அவர சுருட்டி மடக்கி கொண்டு போச்சு. உடம்பு கூட வரல திரும்ப” எழுந்து கடலை நோக்கி ஓடினேன். அவன் என்னைப்பிடித்து இழுத்து கோவமாக “என்ன ஏமாத்திட்ட , என்ன ஏமாத்திட்ட. இங்க வரும் போதுலாம் சிரிச்ச முகத்தோட சந்தோசமாத்தான இருந்த. ஏன் ? எதுக்கு என்ன ஏமாத்துன ?” என்று கழுத்தைப்பிடித்து தள்ளிவிட்டன். ஈர மணல் கடினமாயிருந்தது. ஈர மணலை எடுத்து நாலாபுறமும் வீசியெறிந்தான். 

மூச்சிறைக்க அமர்ந்து “ஏமாத்திட்ட , ஏமாந்துட்டேன்” என்று முழங்காலில் கையூன்றி முகத்தை மூடிக்கொண்டு அமைதியாக அழுதான். நான் அவனருகில் செல்லவில்லை. பயமாக இருந்தது.

நான் “நீங்க எதுக்கு அழுறீங்க” என்றதும் அவன் வேகமாக எழுந்து என்னருகில் வந்து “நாந்தான் அழணும் ,வேற யாரு அழுவா” என்று என்னை கட்டிக்கொண்டான். அவன் ஸ்பரிசம் எனக்கு பரிட்சயமாதாயிருந்தது. நானும் கட்டிக்கொண்டேன். நானறிந்த உடலாயிருந்தது. அதன் மணத்தின் நினைவுகள் என் அடி மனதிலிருந்து மேற்பரப்பிற்கு வந்து துணுக்குற வைத்தது. 

மழையின் வேகம் தணிய ஆரம்பித்ததும் அலை கால்களை தழுவ அருகருகே அமைதியின்றி நின்றிருந்தோம். அலைகளின் சத்தம் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டே வருவதாக மனமயக்கை உருவாக்கியது. 

நான் என்ன கேட்பதென்று தெரியாமல் நிற்கவும் அவர் என்னைப்பிடித்து தள்ளிவிட்டு “சந்தோசமா இருந்தேன் இவ்வளவு நாளும். உன்னால எல்லாம் போச்சு. செத்துங்கூட எங்கள சந்தோசமா இருக்க விடமாட்டீங்களா ?”

நான் புரியாமல் “என்ன…என்ன” என்றதும் அவர் முகம் உப்பி நீலம் பாரித்து பழுத்த கண்களுடன் அழுகிய நிலைக்கு மாறியது. கைகால்கள் பெருத்து வெடித்துவிடும் போலிருந்தது. நிர்வாணமான உடலின் விச்சம் குமட்டவும் அங்கேயே வாந்தியெடுத்து விக்கினேன். 

“உங்கள நல்லபடியா வச்சிக்க முடியாமத்தான நான் செத்து போனேன். ஒன்ன இங்க பாக்கும்போதெல்லாம்  நீ , நம்ம குடும்பம் நல்லாருக்குன்னு நெனச்சு நிம்மதியா இருந்தேன். இன்னும் ஒரு வருச காலம் களிஞ்சா , இந்த ஒலகத்துலருந்து போயிரலாம். நிம்மதியான இன்னொரு ஒலகம் இருந்துச்சி. ஆனா இனி போக முடியாது. நீயும் நிம்மதியா இல்ல. இனி நெஞ்சு இதுலையே கெடந்து எரிய வேண்டியதுதான். நான் செத்துருக்கக்கூடாது…இது எனக்கு வேண்டாம்…என்ன போக விடு…உன்னோட கஷ்டத்தெல்லாம் சொல்லமலே இருந்திருந்தா நானாவது நிம்மதியா போயிருப்பேன்” என்ற போது அவர் குரல் அடிபட்ட குரலில் ஒலித்தது.

அப்பாவின் உருவம் புகைப்படத்தில் பார்த்த பலசாலியாக உருவமாகவே ஞாபகம் இருக்கிறது. இந்த ஒல்லியான உருவம் என் நினைவில் 

இல்லை. ஏனோ அம்மா , அக்காவை நினைத்துக்கொண்டேன்.

*

அன்று அப்பா அவனை கடற்கரையில் நடத்திக்கூட்டி வந்த போது அவர்கள்  பின்னால் விரிந்து கிடந்த மணற்பரப்பில் ஒற்றை வழித்தடமென இருவரின் கால் தடங்களும் நீண்டு சாலைவரை சென்றது. அங்கிருந்து அவர்கள் வீட்டை பார்க்க முடியும். அவர் சமீமகாலமாக பேச்சு குறைந்து ஊமையாக ஆகிவிட்டாரா ? என அம்மாவிடம் இருளில் படுக்கையில் முகம் பார்த்து கிடக்கும் போது கேட்டதற்கு அவள் பதில் சொல்லாமல் திரும்பி படுத்துக்கொண்டாள். அப்போது அவள் முகத்திலிருந்த பாவனையை அவன் வெறுத்து அருவருத்தான்.

மழைக்கான அறிகுறிகள் வானில் திரண்டு வந்தன. அலைகள் தழுவ முயன்று தோற்றுப்போகும் இடமாக பார்த்து ஈரம் தோய்ந்த மணலில் இருவரும் முழங்கால் மடக்கி அமர்ந்தனர். அப்பாவின் கைகளை கட்டிக்கொண்டு அவருடன் ஒட்டி அமர்ந்தது குளிருக்கு இதமாக இருந்தது. 

காற்று அமைதியாக ஆனால் உயிர்த்தன்மையுடன் வீசியது. அமைதியாக களித்த நேரம் அதிகமாக அவன் நெளிந்தான். 

அப்பா “நான் இல்லாட்டா என்ன செய்வீங்க” என்றார். அவர் முகம் பட்டினியால் வெளுத்ததை போலிருந்தது. 

“அம்மா , அக்கா இருக்காங்கல்ல” என்றவன் சிரித்தது அப்பாவிற்கு நிம்மதியைக்கொடுத்ததா என அவனால் புரிந்துகொள்ளமுடியாமல் “நான் அழுவேன்” என்றான்.

“அம்மா , அக்கா என்னப்பத்தி என்ன சொல்றாங்க ?”

“அம்மாக்கு உன்ன புடிக்கல. அக்கா உன்னப்பத்தி பேசுனதேயில்லயே”

“உனக்கு உங்க அம்மாவ புடிக்குமா ?”

“புடிக்கும்” என்று பின் யோசித்து “ஆனா சிலநேரம் அவ முகம் அசிங்கமா இருக்கும். அப்பொ மட்டும் புடிக்காது” என்றான்.

“என்ன புடிக்குமா ?” என்ற கேள்விக்கு அவன் அவர் கைகளை இறுக்க அணைத்து படபடக்கும் சட்டைக்குள் முகம் புதைத்து ஓரக்கண்ணால் அவரை பார்த்து சிரித்தான்.

அப்பா சிரிக்கவில்லை. அலைகளின் வரிசையை அது தொடங்கும் இடத்தை வெறித்து பார்த்தபடியிருந்தார்.

அவர் எழுந்ததும் காற்றின் வேகம் அதிகரித்தது. மூர்க்கம் கொண்ட மேகங்கள் கத்தி சத்தமிட்டன. சுடர் வடிவ மழைத்துளிகள் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தன. அலைகள் மழையைத்தாங்க முடியாமல் துடித்தன. அப்பா அவன் கைகளை விடுத்து அவன் முன் மண்டியிட்டு அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து “அப்பா சந்தோசப்பட்டா நீயும் சந்தோசப்படுவியா ?” என்று புன்னகைத்தார். மேல் உதட்டின் ஓரமாக அந்த புன்னகை நீங்காமல் தங்கி நின்றதும் அவன் குதித்து சிரித்தான். அவர் அவன் தோளில் கைவைத்து உச்சியில் முத்தமிட்டார். 

“நீயே வீட்டுக்கு போயிருவியா ?” என்றதற்கு அவன் தலையாட்டி அங்கிருந்து ஓடிவிட்டான்.

தன்னை உண்ணும் அலைகள் ஒவ்வொன்றாய் எண்ணியபடி அப்பா அதனுள் நடந்தார். பெருத்த மூச்சொன்றை இழுத்துக்கொண்டு கடைசியாக எண்ணிய அலைக்குள் மூழ்கிப்போன போது மழை நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. தூரமாய் என்னவோ மிதப்பது மட்டும் அவனுக்கு கரையிலிருந்து தெரிந்தது.

*

அருகில் சென்று அந்த வீங்கி அழுகிய உடலை தொட்டு சமாதானப்படுத்த முயன்றேன் ஆனால் முடியவில்லை. அது அலறி சீறியது. வானம் பிழந்து மழை மீண்டும் வலுக்க ஆரம்பித்தது. அந்த உருவம் மெல்ல நகர்ந்து அங்கிருந்து விலகி அலைகளில் மிதந்து தூரமாய் சென்றது. பின்னர் நான் கண்டது மழை நனையும் அலைகளை மட்டுமே. அதன் பிறகு அந்த அழுகிய உடலின் வீச்சம் என் நாசியில் நிரந்தரமாக தங்கிவிட்டது.

(நவம்பர் 2021)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.