மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு

மலையாள மூலம்: எம். முகுந்தன் ஆங்கில மொழி பெயர்ப்பு: கீதா கிருஷ்ணமூர்த்தி

தமிழாக்கம்: தி.இரா. மீனா

     உதய்யின் தோள்களிலிருந்து கிளம்பிய வியர்வை வழிந்து அவனது நெஞ்சை நனைத்தது. ஈரப்பதம் முடியைக் காலோடு ஒட்ட வைத்தது. அணிந்திருந்த குறைந்த அளவிலான ஆடை உடலை ஈரத்தால் மினுமினுக்கச் செய்தது. கோதுமை வயலின் மணம்— ஆம்  கோதுமை வயலின் மணம் – அவனது மூச்சில் வெளிப்பட்டது.

       வெள்ளை நிறக் கோடு போடப்பட்டிருந்த பந்தயப் பாதையில் அவன் ஓடத் தொடங்கிய போது, அவன் பாதங்கள் வேகத்தை ஆட்கொண்டவை போலிருந்ததாக பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. 

அரங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் கைகள் உயர்ந்து கரவொலியை ஏற்படுத்தின. அது வெற்றியின் அடையாளமாக அவனுக்குத் தெரிந்தது.

      ஆனால்…

      இனி நான் உனக்கு ஒரு  நாளும் கைதட்ட மாட்டேன், அவள் சொன்னாள். வெள்ளியாலும், தந்தத்தாலுமான வளையல்கள் கைகளை வட்டமடித்திருக்க, அவள் கைகள் இன்னும் அவள் மடியிலிலேயே இருந்தன. இல்லை, உன் வெற்றிகளில்  இனி ஒரு போதும் என்னால் மகிழ்ச்சியாகப் பங்கு பெற முடியாது .

      உன் பேராசிரியரின் அறை முன்னால் நீ நிற்கிறாய். பல தடவைகள் புகழ்ப் பாட்டு பாடிய உன் கண்கள், வருத்தத்தில் புதைந்து கிடக்கின்றன.

      வா பெண்ணே, உட்கார், வாயில் சுருட்டோடு சொன்னார்.

      நிறம் மங்கியிருந்த அந்த மூங்கில் நாற்காலியில் அவள் உட்கார்ந்தாள். நீல நிறப்பின்னணியில் தெரிந்த நன்கு மழிக்கப்பட்டிருந்த அவருடைய முகம், கனமான மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை வெறித்தாள். அவருக்குப் பின்னால் உடைந்த கண்ணாடிகளோடு ஓர் அலமாரி, புத்தகங்களால் நிரம்பியிருந்தது. புத்தகங்கள் மற்றும் புகையிலையின் கனமான நெடி அறையை  ஆக்கிரமித்திருந்தது.

         உன்னிடம் முக்கியமாக ஒன்றைச் சொல்வதற்காகத்தான் நான் உன்னை அழைத்தேன். அவர் முன்னால் வளைந்து அவளைப் பார்த்தார்.

         உன் ஆய்வேடு ..

         அவள்  தலையைக் குனிந்து கொண்டாள். அவர் சுருட்டை வாயிலிருந்து எடுத்து, புகையிலைக் கறைப்பட்ட கிண்ணத்தில் வைத்தார். அதன் கனமான புகை மேஜையைச் சூழ்ந்தது. மேலே மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தது.

        நீ இந்த வருடம் உன் ஆய்வேட்டில் எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை.

        அவர் அதைத்தான் சொல்வாரென்று அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

        கடந்த ஆண்டு ஜனவரியிலேயே நீ முடித்திருக்க வேண்டும். நீ அப்படித்தான் என்னிடம் சொன்னாய். இல்லையா?

        ஆமாம், சார்.

        தன் முன்னால் மிக மரியாதையாக உட்கார்ந்திருந்த அவளை மிகக் கூர்மையாக அவர் கவனித்தார்.

நீ  இந்த ஆண்டிலாவது உன் ஆய்வேட்டை முடித்து விட வேண்டும், இல்லையெனில் உன்னால் முடிக்க முடியாமலே போய் விடலாம்…

      அவள் விரல்கள் மேஜையின் சுவடுகளை அளைந்தன. அவள் நகங்கள் அழுக்காக இருந்தன. நகப்பசை உரிந்திருந்தது. அவள் ரவிக்கையின் வலதுபுறப் பகுதி லேசாகக் கிழிந்திருந்தது.

        என்ன ஆயிற்று உனக்கு ? நீ பெரிய குழப்பத்தில் இருக்கிறாய்.

        சார், நான்  போகவேண்டும்.

        அவள் எழுந்து அறையை விட்டு வெளியேறி , நீண்ட காரிடாரில் நடக்கத் தொடங்கினாள். அவர் தன் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

        விளையாட்டரங்கின் படிக்கட்டுகள் குளிர்கால உடையணிந்திருந்த மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன . டி.வி.கேமராக்கள் பந்தயப் பாதைக்கு வெளியே இருந்தன. அவனுடைய திடமான தோள்களில் சூரிய ஒளி உருகி வழிந்தது.

        அவள் காரிடார் வழியே நடந்தாள். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டிருந்த அக்கட்டிடம், வளைவுகளும், வட்டமான பிரிவுகளும் உடையது. அவள் ஆராய்ச்சியைத் தொடங்கிய நாட்களில் அது வெண்மையானதாக இருந்தது. அவள் ஒரு விடுமுறைக்குப் போய் விட்டுத் திரும்பிய போது, அது காவி வண்ணம் உடையதாகி விட்டது. பல்கலைக் கழகத்தின் பெயரைத் தாங்கிய  பலகை முதிர்ந்து போன, உதிரும் இலைகளைக் கொண்ட ஒரு வேப்ப மரத்தில் சுற்றப்பட்டிருந்தது.. அவள் அதனடியில் நடந்து மரங்கள் வரிசையாக இருந்த பகுதிக்குள் நுழைந்தாள். உதிர்ந்த இலைகள்  குவியல்களாகக் கிடந்தன. குளிர்காலம் நெருங்க, விரைவில் மரங்கள் வெறுமையாகி நிற்கும்.

       வலதுபுறத்தில் சுவற்றிற்கு அப்பால், ஒரு  பந்து எழும்பி விழுந்தது. பெரும் குரல்களும்,கை தட்டல்களும் விட்டுவிட்டு எழுந்த வண்ணம் இருந்தன. அவர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பந்து, சுவற்றைக் கடந்து, அவள் புடவையைத்  தொட்டுவிட்டு, சாலையில் உருண்டது.

         மிஸ் ,தயவுசெய்து, அந்தப் பந்தை… சுவற்றின் மேல் பகுதியில் பதட்டமான ஒரு முகம் தெரிந்தது.

         தயவுசெய்து..

         அவள் அதைக் கேட்காதவள் போல பாவனை செய்து கொண்டு, வெறுப்போடு அந்தப் பந்தைப் பார்த்தாள். வியர்வைக் கைகளால் பயன்படுத்தப்பட்டு அதிலிருந்த எழுத்துக்கள் மறைந்து போயிருந்தன.

சுவற்றின் மறுபுறத்திலிருந்த இளைஞன் பொறுமையின்றி  ஏதோ சொன்னான். அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், அவள் மேலே நடந்தாள். ஓட்டத்தில் நல்ல பயிற்சியுடைய அந்த இளைஞன் ஓ ர்அளவைக் கணித்து, சுவற்றைத் தாண்டி வந்து பந்தை எடுத்தான்.அவன் சிவப்பு டிராயரும், நீல நிற முண்டா பனியனும் அணிந்திருந்தான். அவனுடைய சிறிய கண்கள் பெரும் எதிர்ப்பைக் காட்டுவதாக இருந்தன.

எந்த முன்னறிவுப்புமின்றி, அவள் பந்தை அவன் கையிலிருந்து பறித்து,அதைப் பள்ளத்திற்குள் எறிந்தாள்.

         நான் உன்னை வெறுக்கிறேன்..

         அந்த இளைஞன், ஒரு முழு வழிப்போக்கன், வியப்போடு அவளை உற்றுப் பார்த்தான். சுவற்றுக்கு அப்பாலிருந்து, மற்ற விளையாட்டு வீரர்களின் முகங்கள் ஒவ்வொன்றாகத் தெரியத்தொடங்கின.

         நான் உங்கள் எல்லோரையும் வெறுக்கிறேன்…

         நீலநிற பனியனிலிருந்த அந்த இளைஞன் இன்னமும் அவளை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

         மற்ற விளையாட்டு வீரர்களும் குதித்து ,சுவரைத் தாண்டிஅவளருகே வந்தார்கள்.அவர்கள் அனைவரும் வண்ண டிரவுசர்கள் அணிந்திருந்தனர். அவர்கள் அருகே வந்த போது, புடைத்திருக்கும் தசைகளிலிருந்து வியர்வை மற்றும் மண்வாசனை…அவர்கள் அவளைச் சூழந்தனர்.

        உங்களுக்கு என்ன வேண்டும் ?

        ஏன் பந்தை பள்ளத்திற்குள்  தூக்கியெறிந்தீர்கள்?

        ஏனெனில் எனக்கு எறிய வேண்டும் போலிருந்தது.

        அவள் அவர்களைக் கடந்து நடந்தாள். அவர்கள் பின்தொடர்ந்தனர்.  சிவப்பு கைக்குட்டையை முண்டாசாகக் கட்டியிருந்த ஓர் இளைஞன் அவள் முன்னே வந்து வழிமறித்தான்.

        நீங்கள் உதய்யின் சிநேகிதி இல்லையா ?

        அவள் கண்கள் கோபத்தால் சிவந்தன.

        உதய் காமன்வெல்த் நிகழ்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். உண்மையா?

       போய் அவரையே கேளுங்கள்.

       அவர் நானூறு  மீட்டர் தடையோட்டம் விளையாடப் போகிறாரா?

       காமன்வெல்த் நிகழ்வு முடிந்த பிறகு, அவர் ஓட்டத்தை நிறுத்திவிட்டு பாட்டியாலாவில் ஆசிரியராகச் சேர்ந்து விடுவார் என்றுகேள்விப்பட்டோம். அது உண்மையா ?

      பத்திரிக்கையாளர்களைப் போல அவளை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். மூன்றாவது கேள்வியின் போது அவள் கண்களில் நீர் வழிந்தது. அதைத்தான் அவள் நம்புகிறாள், பிரார்த்திக்கவும் செய்கிறாள். போதும், உதய் ,போதும்…

     விளையாட்டு வீரர்கள் அவள் முன்னால் நின்றனர், வழியைமறைத்தனர், விளையாட்டு தொடங்குவதற்கு முன்னால் ஓர் உயர்ந்த விருந்தினரின் அறிமுகத்திற்காகக் காத்திருப்பது போல அவர்கள் நின்றனர்.

      எனக்கு வழி விடுங்கள்.

      அவர்கள் அசையவில்லை.

      நான் போலீசைக் கூப்பிடுவேன்.

      நாங்கள் உதய்யின் ரசிகர்கள். ஏன் உங்களுக்கு எங்கள் மேல் அவ்வளவு கோபம்?

      அவர்களிடையே ஒரு சிறிய இடைவெளியைக் கண்டுபிடித்தவளாக அதற்குள் புகுந்து வெளியேறினாள்.  சில நிமிடங்கள் கழித்துத் திரும்பிப் பார்த்த போது, அவர்கள் சுவரைத் தாண்டி மறைந்து கொண்டிருந்தனர். பள்ளத்திலிருந்து எடுத்த பந்தை ஒருவன் கையில் வைத்திருந்தான்.

      உனக்கு என்ன ஆனது, பார்வதி, அவள் தனக்குள் கேட்டுக் கொண்டாள். ஏன் அவர்களிடம் கோபித்துக் கொண்டாய்? அவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். பந்து எழுந்து சுவரருகே விழுந்தது. மாறி, மாறி கை தட்டும் சப்தம் கேட்டது.விளையாட்டு தொடர்ந்தது. அவர்களுக்கு நான் யார் ?என் சோகத்தை யார் புரிந்து கொள்வார்கள் ?

      அவள் விடுதியை அடைந்தாள். அது பச்சை கண்ணாடி ஜன்னல்களைக் கொண்ட பழைய கட்டிடம். சுவர் மற்றும் தரைகளின் சிமிண்ட் உரிந்திருந்தது. குளியலறை ஈர நாற்றமெடுத்தது. பழைய மின்விசிறிகள் நாராசமாய் ஒலித்தன. அவள் அறைத் தோழி அங்கில்லை. மிசோராமிலிருந்து வந்தவள். சிறிய கண்களும், ஆப்பிள் வண்ணமும் கொண்டவள். அவளுடைய மேசையும், படுக்கையும் சுத்தமாக இருந்தன.

அவளுடைய சொந்தப் படுக்கையும், மேசையும்…அவளுடைய படுக்கை விரிப்பு அழுக்காக இருந்தது. மேசைத்துணியில் மை கறை பரவியிருந்தது. புத்தகங்களும், உடைகளும் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. காலணியில் ஒன்று மேசைக்கு அடியிலும், இன்னொன்று கப்போர்டின் கீழும் கிடந்தது.

        சிதறிக் கிடக்கிற உன் அறை, சிதறிக் கிடக்கும் உன் மனதைக் பிரதிபலிக்கும்.

       உதய்யின் உறுதியான கண்டனக் குரல். அவள் அமைதியாக உட்கார்ந்தாள்.

       அவன் அவளுடைய அறைக்கு வந்து பல நாட்களாகி விட்டன. மிசோரம் பெண் தன் நண்பனுடன் வெளியே போயிருந்தாள்.

       எங்கே போகிறாய், அவள் எழுந்த போது அவன் கேட்டான்.

       நான் கதவைச் சாத்தட்டுமா?

       அவள் விழியோரம் ஒளிர்ந்தது.

       வேண்டாம். எனக்கு நேரமில்லை. அவன் எழுந்தான்.

       சாயம் போன பாண்ட்டும், டீ ர்ட்டும் அணிந்திருந்தான். அவன் தோள் இரும்புக் கம்பியைப் போல உறுதியாக இருந்தது. அறையை விட்டுவெளியேறி, நீண்ட வராந்தாவில் யந்திர கதியில் நடந்தான். நீ பெருமூச்சு விட்டு, குனிந்த தலையோடு உன் அழுக்கான படுக்கையில் உட்கார்ந்திருந்தாய்.

       உன் முந்தானை உன் தோளை மறைத்திருக்க விடியற் காலையில், நடைப் பயிற்சியாக நீ மைதானம் வரை போவாய்.

       தெருக்கள் காலியாகவே இருக்கும், நீ பார்ப்பவர்கள்  என்பதுதொலைவிலுள்ள கிராமங்களிலிருந்து சைக்கிள்களில் பெரிய அலுமினியம் கேன்களில் பாலைக் கொண்டு வரும் மனிதர்களாகத்தான் இருக்கும். அவர்கள் கடந்து போகும் போது பால் மண்ணில் சிந்தும். அவளறிந்தபால்காரர்கள் கை காட்டி அவளுக்கு வணக்கம் சொல்வார்கள். பின்பு, சிறிது நேரத்தில் சாலையின் இரு மருங்கிலும் உள்ள பனியால் ஈரப்பட்டிருக்கும் மரக்கிளைகள் அசைய, பால்காரர்கள் போன வழியில் பறவைகள் பறக்கும். நாவல் பழங்களிலிருந்து அவைகள் கொத்திய விதைகள் மரங்களினடியில் சிதறிக் கிடக்கும்.

         மைதானத்தைச் சுற்றியுள்ள சுவர், பல இடங்களில் உடைந்து நொறுங்கிக் கிடந்தது. பகல் நேரங்களில், மாடுகள் பெரிய துளைகள் வழியாக மைதானத்திற்குள் நுழைந்து விடும். சிறிது தொலைவில் முகாமிட்டிருக்கும் நரிக் குறவர்கள் அலங்காரமான விளக்குகளைத் தயாரிப்பார்கள். அவர்களின் குழந்தைகள் சுவரில் உள்ள இடைவெளி வழியாக வந்து விளையாடி அல்லது புல்லில் புரண்டு கொண்டிருப்பார்கள்.

       நீ ஒரு பெண்தான் காலையில் வெகு சீக்கிரத்தில் நடைப் பயிற்சிசெய்து கொண்டிருப்பாய். யாரும் நடக்காத பாலைவனம் போலான இடங்கள் மற்றும் தெருக்கள்  உன்னால் கவர்ச்சி அடையத் தொடங்கும்.

விடியற்காலைப் பொழுதுகள் எவ்வளவு பரிசுத்தமானவை, உயிரோட்டம் கொண்டவை என்பதை நீ உணரத் தொடங்கியிருப்பாய்…

       அவர்கள் இருவரும் கல்லூரி வளாகக் காண்டீனில் உட்கார்ந்திருந்தனர். ஒரு கையில் ஆவி பறக்கும் தேநீர் கிளாசையும்,  இன்னொன்றில் தந்த வளையல் அணிந்த கரத்தையும் பிடித்திருந்த உதய் சொன்னான் : சத்தார்பூர் தேவி கோயிலில் என் அப்பா பூசாரி.பூசாரிகள் நன்றாக சம்பாதிப்பவர்களாகவும்,செல்வம் கொழிப்பவர்களாகவும் இருப்பதை நீ இன்றைய நாட்களில் பார்க்கலாம். இது காசி, மற்றும் அலகாபாத்தில் மட்டுமில்லை, எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஆனால் என் அப்பா அப்படிப்பட்டவரில்லை. பெரிய நகரங்களிலிருந்து வரும் தொழில் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உண்டியலில் போடும் பணத்தை ஒவ்வொரு காசாக எண்ணி, சரிபார்த்து கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விடுவார். நிர்வாகிகள் அந்தப் பணத்தில்விளைச்சல் நிலங்களும், பெரிய பங்களாக்களும் வாங்கிச்  செல்வந்தர் ஆனார்கள். பணத்தைக் கண்டு எரிச்சலடையும் என் அப்பா வறுமையான பூசாரியாகவே இருந்து விட்டார். தான் இறக்கும் கடைசி நாள்வரைஅவர் பூஜை செய்தார். தலையில் நிரம்பி வழியும் எண்ணெயும், கரை வேட்டியும் ,அழுக்கான பூநூலும் அணிந்திருப்பார். என் அப்பாவிற்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

         அதனால்தான் நீ ஓட்டத்தை விரும்பி்னாயா உதய் ?

         குழந்தையாக இருந்த நாளிலிருந்தே அவனுக்குள் ஒரு போட்டி குணமிருந்தது. எல்லா விளையாட்டுக்களிலும் பங்கேற்றவன்.

         என் அப்பா ஒரு சிமிண்ட் தொழிற்சாலை உரிமையாளர். அவள் சொன்னாள். அந்தத்  தொழிற்சாலையைச் சுற்றி ஒரு சின்ன ஊர் உருவானது. சிமிண்ட் தூசியால் காற்றே கனமாகிப் போயிருந்தது.

தொழிற்சாலை ஊழியர்கள் அந்த ஊரில்தான் வசித்து வந்தனர். சிமிண்ட் தூசியைச் சுவாசித்து, அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இளமையிலே இறந்து போனார்கள். தூசி  அலர்ஜி காரணமாக என் அப்பா ஒரு தடவை கூடத்  தொழிற்சாலைக்குப் போனதில்லை. அந்தப் பக்கத்தில் போனால் கூட இரவே மூச்சுத் திணறல் வந்து, தூங்க முடியாமல் தவிப்பார். ஆனால் கண்ணால் பார்த்தேயிராத அந்தத் தொழிற்சாலையால் அவருக்குக் கிடைத்த லாபம் நிலையாக வளர்ந்தது. அவர் ஒரு கோடீஸ்வரராகவே இறந்தார்.

        அவள் மேலே நடந்த போது, மரங்கள் மிக அடர்த்தியாகத்தெரிந்தன. பழைய ஆசிரியர்களின் வீடுகள் அங்கிருந்தன. வெள்ளை அடிக்கப்படாததால், சுவர்களின் மேல் பகுதியில் சாம்பல் படர்ந்திருந்தது. சாலையின் ஓரப் பகுதியில் தார் சில்லாக சிதறிக் கிடந்தது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பயணம் செய்வதற்கு தடைப்படுத்தப்பட்டிருந்த சைக்கிள் ரிக் ஷாக்கள் இப்பகுதியில் கண்ணில் பட்டன.வெப்பம் தகிக்கும் போது ரிக் ஷா ஓட்டுபவர்கள் தம் வண்டிகளை மர நிழலில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டனர். அவள் திரும்பி நடந்து நூற்றாண்டுப் பழமையான பெரிய மரத்திற்கு அருகில் வந்தாள். மரக் கிளையின் துவாரமான பகுதியில் ஒற்றைத் திரியுடன் கூடிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குங்குமப் பொட்டலம் , ஊதுபத்தி ஆகியவை தேவிக்காக மரத்தில் கட்டப்பட்டிருந்தன.

        கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் பழகிக் கொண்டிருக்கிறோம்.இருப்பினும் தேவி…

        முதன் முதலில் அவள் அவனைப் பார்த்த போது அவனிடமிருந்துகடுக்காய் எண்ணெய் வாசனை வந்தது. அவன் சத்தார்பூர் பூசாரியின் குடிசை முன்னால் நின்று, உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டு உடற் பயிற்சிகள் செய்வான். அவனைப் பார்ப்பதற்காகவே அவள் தினமும் விடியற்காலையில் பன்னிரண்டு கிலோ மீட்டர் வண்டியோட்டிக் கொண்டு வருவாள்.

        இப்போது அவன் உடல் ஆலிவ் எண்ணெய் மணத்தோடு இருக்கிறது. விலையைப் பொருட்படுத்தாமல் அவள் இத்தாலியிலிருந்துஅவனுக்காக எண்ணெய் தருவித்தாள். அவளால் அந்தக் கடுக்காய்   எண்ணெயின் வாசனையைப் பொறுக்க முடியாது. உதய், தங்கத்திலிருந்து

எண்ணெய் எடுக்க முடியுமா? ஒரு வேளை எடுக்க முடிந்தால், நான் அதை உனக்குப் பெற்றுத் தருவேன், நீ உடற்பயிற்சி செய்யும்போது அதை உடலில் தடவிக் கொள்ளலாம்.

         தேவி, உன் தந்தை பணக்காரர்.

         உதய்..

        அவன் விரல்கள் அவளுடைய கூந்தலை அளைந்தன. அவை இரும்பைப் போல உறுதியாக இருந்தன. 

        எப்போது நாம்….

        தன் கன்னம் அவன் நெஞ்சில் பட சாய்ந்து கொண்டாள். உடற்பயிற்சியால் உறுதியான ஒரு நெஞ்சு.

       நாம் இனிமேலும் காத்திருக்க வேண்டாம், உதய்…

       இல்லை, அவன் சொன்னான். நான் தயாராக இல்லை. அடுத்த தேசியப் பந்தயத்தில் நான் இரண்டு தங்க மெடல்கள் வாங்க வேண்டும்என்பதில் உறுதியாக இருக்கிறேன். தொடர்ந்து நான் பயிற்சி செய்து

 கொண்டிருக்க வேண்டும்.

        அவன் பலப் பல பந்தயங்களில் பங்கேற்க விரும்பினான். சத்தார்பூர் ஏழைப் பூசாரியின் மகன் தங்க மெடல்கள் தன் கழுத்தைச் சுற்றியிருக்க, தொலைக்காட்சி கேமராக்களின் முன்பு நிற்க விரும்பினான்..

        பார்வதி, ஏன் அழுகிறாய் ?

  அவன் சிரித்தான்.

        இருள் சூழ்ந்திருக்கும் இடத்திலிருந்த அந்த தேவியை நீ வணங்கினாய். மரத்தின் கீழ்க் கிளையில் கட்டப்பட்டிருந்த கோயில் மணியை மூன்று முறை அடித்து விட்டு  நீ போய்விட்டாய்.

       டிசம்பர் மாத பனி இரவுகள் எவ்வளவு அழுத்தமானவை! வைகறைகளில் அந்த ஊர் பனியால் மூடப்பட்டிருக்கும். பகல் பொழுதுகுறைந்திருக்கும்.

        நாங்கள் முப்பத்தி இரண்டு பேர். எல்லோரும் மாநில விளையாட்டு வீரர்கள்தான், ஒன்றாகச் சேர்ந்து போகிறோம்.

        நானும் வருகிறேன்.

        இல்லை, நீ வரமுடியாது.

        நீ பங்கு பெறுகிற நிகழ்வுகளில் உன் பங்காளியாக என்னால் இருக்க முடியாது, ஆனால் உன் வாழ்க்கை விளையாட்டில் என்னை துணைவியாக  நினைத்துப் பாரேன்.

       இல்லை, நீ வரக்கூடாது.

       நீ என் பக்கத்திலிருந்தால், நான் தனிமையை உணர மாட்டேன்… என்று அவன் சொல்வான் என்று நினைத்தாள்.

       படுக்கை அருகே நின்று கொண்டு தன் உடைகளைப் பெட்டியில் வைத்தாள்.

      ரயிலின் ஆள் அரவமற்ற முதல் வகுப்புப் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு, கடந்து கொண்டிருந்த உறை பனி நிலத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்…

     இல்லை, நீ வரக்கூடாது…

     ஆனால் எப்ப்படியோ அவள் போய் விட்டாள். அங்குள்ள பனியில் அவள் உதடுகள் பிளந்தன.

      பலவித வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட பேனர்கள் கொண்ட விளையாட்டு அரங்கத்தின் முன்பு அவள் தனியாக  நின்றாள். ஒரு பச்சை நிற பஸ் வந்து  நிற்க, அதிலிருந்து ஒரு குழுவாக இளைஞர்கள்

இறங்கி, ஆரவாரம் செய்து கொண்டே அரங்கத்திற்குள் போனார்கள். பஸ்சின் நிறம் போலவே அவர்களின் கோட்டும் பச்சை நிறமுடையதாக இருந்தது. அவர்களின் பாக்கெட் பகுதியில் ஒரு சிங்கத்தின் முகமும்,

அதன் கீழே இரண்டு உடைவாளும் பின்னப்பட்டிருந்தன அவர்களின் பின்னால் ஒரு லாரி வர, அதிலிருந்து ஒட்டக் கத்தரித்த முடியுடைய இளைஞர்கள் இறங்கினர். அவர்கள் சிப்பாய்கள். அவர்களும் அரங்கத்திற்குள் போனார்கள்.

       தான் நின்ற இடத்திலிருந்து நகர்ந்து, கருமையாக மாறிப் போயிருந்த பனை மரத்தின் அடியில் போய் நின்றாள்.

      அரங்கத்திலிருந்து பாண்ட் முழக்கம் எழுந்தது.

      மத்திய வரிசையில் நின்றிருந்த உதய் நீல நிறச் சட்டை அணிந்து, தலைமுடி கண்களில் வந்து விழாதபடி கைக்குட்டையால் தலைமுடியைக் கட்டியிருந்தான். முட்டிக் கால் வளைந்திருக்க, முன்னால் வளைந்து

ஓடுவதற்குத் தயாராக நின்றான். அரங்கம் சப்தத்தில் மூழ்கி இருந்தது. துப்பாக்கி ஒலி எழ, கூட்டம் ஆரவாரித்தது.

        தங்க மெடல்கள் அவன் கழுத்தைச் சுற்றியிருக்கும் காட்சியை நாளைய செய்தித்தாள்கள் வெளியிடும். அவர்கள் இருவரும் முயங்கியபோது கூட ஏற்படாத வெற்றி ஒளி, அவன் உதடுகளில் வெளிப்படையாய்த்

தெரியும்.

       தேவி…

       பெண்ணே ,இந்த நாட்களில் விளையாட்டு வீரர்கள் உலகையே ஆள்கிறார்கள் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டு்ம்…

      அடுத்த தடவை அவர்கள் சந்திப்பின் போது அவன் மேல் சாய்ந்து கொண்டு அவன் நெஞ்சிலுள்ள ஆலிவ் எண்ணெயின் மணத்திற்குள் தன்னை கரைத்துக் கொள்ளும் போது அவன் அவளைப் பிடித்து உலுக்கிவிட்டுச் சொல்வான்: காமன் வெல்த் நிகழ்வுக்கு மூன்று மாதங்களே இருக்கின்றன. எனக்குக்  கடுமையான வேலைகள் நிறைய இருக்கின்றன.

      கூட்டத்திலிருந்து பெரிய கைதட்டல் ஒலிகளும், ஆரவாரமும் எழுந்தன. மதியக் காற்றில் அரங்கத்தின் பல வண்ண பேனர்கள் உயரமாகப் பறந்தன.

     எந்த விளையாட்டும் நீ விளையாடாத போது, விளையாட்டு வீரர்களின் உலகில் உனக்கு எங்கே இடமிருக்கிறது? நீ சந்தோஷத்திற்காகப் பிறந்தவள் இல்லை, பெண்ணே.

      வறண்ட வெளியில் ,பனையின் நிழலில் உதடுகள் பனியால் வெடித்திருக்க, அவள் தனியாக நின்றாள்.

      தேவி, நான் போகிறேன். மரத்தின் துவாரத்தில் உள்ள விளக்கின் திரி தன்னையே எரித்துக் கொண்டது…


நன்றி : Dakshina, A literary Digest of South Indian Languages 1986–1988

பிரெஞ்சு காலனியத்திலிருந்த மய்யழிக் கரையோர நகரமான மாகேயை தன் பிறப்பிடமாகக் கொண்ட எம்.முகுந்தன் மய்யழிக் கதைக்காரர் என்றழைக்கப்படுகிறார். தெய்வத்தின்டே விக்ரிதிகள், ஆகாசதினு சுவட்டில், டெல்லி , ஒரு தலித் யுவதியுடே கதான கதா உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்களும்,  நதியும் தோணியும் ,வீடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளும் இவர் பங்களிப்பாக அமைகின்றன. சாகித்ய அகாதெமி, வயலார் விருது, எழுத்தச்சன் புரஸ்காரம் உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்.

One Reply to “மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.