அந்த முச்சந்தியிலுள்ள கடைச் சுவரில்
மோனா லிஸா தொங்குவாளே கவனித்திருப்பீர்கள்
அவள் அங்கே தொங்கிய நாளிலிருந்து
நானும் அக்கடைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்
இப்போ அங்கே வருபவர்களுக்கு
என்ன நடந்ததோ தெரியவில்லை
எல்லாரும்
என்னைப் பார்த்தல்லவா முறுவலிக்கிறார்கள்.
✽
முன் வீட்டிலொரு குழந்தை
என் வீட்டிலொரு குழந்தை
இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது
சிரிப்பு ஒரு மொழியென்று
எண்பது வயது இடைவெளியை
அச்சிரிப்பு என்னமாய் பாலம் கட்டிவிட்டது.
✽
பிச்சைக்காரர் சிரித்துவிட்டுப் போனார்
இது என்ன பத்திரிகையில் வரப்போகிறதா
டிவீயில் காட்டப் போகிறார்களா
பிச்சைக்காரர் கட்டி அணைத்தாலும்
இதுதானே நடக்கப்போகிறது.
✽
ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?
✽
என் வீட்டு மதிலுக்கு மேலாக மல்லிகைப் பூக்களை
இன்று காலை ஒருவர் பறித்துக்கொண்டிருந்தார்
நான் வாசலுக்குப் போய்ப் பார்த்தேன்
என்னைக் கண்டதும் மடியிலிருந்த பூக்களைக் காட்டி
பூ கோயிலுக்கு என்றார்
ஆனால் அது எனக்கு
பூ அம்மாவுக்கு என்று சொன்னதுபோல் கேட்டது
✽
இதுவரை ஒரு கோடிமுறை
சிரித்தவன் போலிருந்தது அவன் முகம்
✽
கடவுள்கள் தூங்கிக்கொண்டிருந்தவொரு நாளில்
அந்த நாடு கொல்லப்பட்டது
அதன் ஆத்மா அந்தரித்துச் சஞ்சரித்த வான்வெளி
பீரங்கிகள் எழுப்பிய புகை மூட்டத்தால்
இரும ஆரம்பித்தது
குருதி வெள்ளம் அடிவானத்தை நிரப்பியது
ஆத்மாவின் அந்தரிப்பு அலறலாய் எழுந்தது
எவருக்கும் அது கேட்கவில்லை
இறுதியில் அது ஓய்ந்து அடங்கியபோது
கடவுள்கள் விழித்தெழுந்தனர்
நாம் விழிப்பாக இருந்திருந்தால்
அந்த நாடு கொல்லப்பட்டதை
அனுமதித்திருக்கமாட்டோமென ஆர்ப்பரித்தனர்
ஆத்மாவையாவது உயிர்த்திருக்க வைத்திருக்கலாம்
அதைக் கொன்றது பீரங்கிகளல்ல
பாராதிருந்த கடவுள்களுமல்ல
இப்போது உயிர்பிழைத்து வாழ்கின்ற நாம்
✽